பஞ்ச ஆரண்ய தலங்கள் – முன்னுரை.
பஞ்ச ஆரண்ய தலங்கள்.
ஆரண்யம் என்றால் நல்ல விஷயங்களைத் தரும் காவலான வனம் எனப் பொருள். பஞ்ச ஆரண்யம் என்றால் ஐவகை காவல்களை, அருளை, நலங்களை அருளும் ஆலயம் எனப் பொருள், தஞ்சைஅருகே அப்படி ஐந்து சிவாலயங்கள் அருகருகே உண்டு. ஒரே நாளில் இவற்றைத் தரிசிக்கலாம்.
இவற்றை ஒரே நாளில் எந்த வரிசையில் தரிசிக்க வேண்டுமென போதித்து தரிசனம் செய்து பாடியவர் சம்பந்த பெருமான், அவரின் தேவாரத்தில் இந்த ஆலயங்கள் இடம்பிடித்துள்ளன.
காவேரியின் தென்கரையில் அமைந்துள்ள இந்தச் சிறப்பான ஆலயத்தை அதிகாலை, காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டு முறையில் வழிபட எல்லாச் சிக்கலும், எல்லாக் கர்மமும் பாவமும் தீர்ந்து மறுபிறப்பற்ற நிலையினையும் அடையலாம்.
ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின் போதும் பஞ்ச ஆரண்ய தலங்களைத் தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.
திருகருக்காவூர் , அவளிவநல்லூர் , அரதைபெரும்பாழி, ஆலங்குடி மற்றும் திருக்கொள்ளம்புதூர் எனத் தஞ்சை அருகே உள்ள இந்த ஆலயங்களைக் கார்த்திகைமாதம் தரிசித்தல் சிறப்பு.
இவை ஐந்தும் ஈசனின் ஐந்து தொழிலைச் சொல்லும் ஐந்து தத்துவ நிலையினைச் சொல்லும், ஐந்துவகையில் பகவான் இங்குச் செயலாற்றும் சூட்சுமத்தைச் சொல்லும்.
இந்த ஐந்து ஆலயங்களுக்குப் பின்னால் பெரிய வரலாறு உண்டு, புராணக் கதைகள் உண்டு. அவற்றின் மூலம் விளக்கப்படும் சூட்சுமமான போதனைகளும் விஞ்ஞான சிந்தனைகளும் உண்டு.
ஒவ்வொரு ஆலயமும் ஒரு ஆரண்யம் என்பதும் அந்த ஆரண்யத்தின் தாவரம் என்பதும் மகத்தான தத்துவங்களை மருத்துவங்களை இன்னும் பல சிறப்புக்களைக் கொண்டவை.
இந்த ஐந்து ஆலயங்களையும் இக்கார்த்திகை மாதம் அவ்வப்போது பார்க்கலாம், அந்த ஈசன் எல்லோருக்கும் இக்கார்த்திகையில் தன் பெரும் ஞான வரத்தை பொழிந்து காத்து வழிநடத்தி வரட்டும்.