பஞ்ச ஆரண்ய தலங்கள் 01 : திருக்காவூர்.

பஞ்ச ஆரண்ய தலங்கள் 01 : திருக்காவூர்

“முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே”

எனச் சம்பந்தர் தேவாரத்தில் பாடித் தொழுத தலம் இது.

ஆரண்யம் என்றால் காவல் நிறைந்த காடு எனப் பொருள், காவல் அமைப்பு என்றும் அர்த்தமாகும். வேதாரண்யம் நைமிசாரண்யம் எனும் பெயரால் அப்படி அமைந்தவை, அப்படி இந்த ஐந்து ஆலயங்களும் முன்பு காடாக இருந்து பின் தலமாக உருவானவை.

பஞ்ச ஆரண்ய தலங்களில் முதன்மையானது திருக்காவூர், இந்த ஐந்து ஆலயங்களுமே தஞ்சாவூர் பாபநாசம் அருகே அமைந்தவை, காவேரியின் தென்பக்கம் அமைந்த ஆலயங்கள்.

இந்த இடம் அக்காலத்தில் முல்லை மலர்கள் நிரம்பிய காடாகக் கிடந்தது. யுகங்களுக்கு முன் அங்கே ரிஷிகள் பலர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தனர். இது காலம் காலமாக நடந்து கொண்டிருந்தது , யார் இங்கு முதலில் குடில் அமைத்து சிவனை வணங்கினார் என்பது கூட தெரியா அளவு பழமையான தலம் என்றாலும் இதன் வரலாறு நிருத்துவ ரிஷியிடம் இருந்து ஆரம்பிக்கின்றது.

நிருத்துவ முனிவர் இங்கு தன் மனைவி வேதிகையுடன் வசித்து வந்தார். சிவனை வழிபடுவதும் தவம் செய்வதுமாக இந்தக் கானகத்தின் குடிலில் அவர் வாழ்ந்து வந்தார், பெரிய தபசி.

அவரின் மனைவி கர்ப்பதியான நேரம் ஊர்துவ மகரிஷி என்பவர் அங்கு உணவு தேடி வந்தார். அப்போது நிருத்துவ முனி ஆசிரமத்தில் இல்லை, ஊர்த்துவர் கொஞ்சம் துர்வாசரின் சாயல் அதனால் வாசலுக்கு வந்தவர் “யார் இங்கே? நான் ஊர்த்துவர் வந்திருக்கின்றேன்” எனச் சொல்லி அழைத்தார்.

அவர் குரல்கேட்ட வேதிகைக்கு கர்ப்பம் காரணமாக எளிதில் எழமுடியவில்லை, அவள் மிகச் சிரமபட்டு எழும்பி வாசலுக்கு வருவதற்கு நேரமானது, ஆனால் முனிவரோ உள்ளே இருப்பவள் தன்னை அவமதிப்பதாகக் கருதி “என்னை அவமதித்த இந்த வீட்டில் இருப்பவரை நான் சபிக்கின்றேன், என் வயிற்று பசி போல் அவர் வயிரும் காலியாகட்டும் எனச் சாபம் கொடுத்துவிட்டு அகன்றுவிட்டார்.

அந்த சாபம் பலித்து கர்ப்பவதியான வேதிகையின் கரு கலைந்தது, அவள் சிவனை அழைத்தாள், தன் பக்தை மேல் பெரும் அன்பு கொண்ட சிவன் அன்னையுடன் அங்குத் தோன்றினார், அன்னை பார்வதி அவளைத் தேற்றி எழுப்பினாள், அஞ்ச வேண்டாம் எனச் சொல்லி கலைந்த கருவினை எடுத்து ஒரு குடத்திலிட்டு குறிப்பிட்ட நாள் வரை தன்னோடு வைத்திருந்து பத்தாம் மாதம் ஒரு ஆண்மகவினைக் குடத்தில் இருந்து எடுத்து முனிவர் தம்பதியரிடம் கொடுத்தார்கள்.

அக்குழந்தையே “நைத்துருவ ரிஷி” என்றானது. அப்படி அம்பிகையே முனிவரின் கருவினை காத்துக் கொடுத்த இடம் என்பதால் இது திருக்காவூர் என்றானது, அம்பிகை “கருகாத்த நாயகி” என அழைக்கப்படுகின்றாள், அம்பிகை கருவினைக் காத்த தலம் கருகாவூர் என்றானது, பின் காவூர் என்றாகி திருக்காவூர் என மருவிற்று.

இன்னும் இதன் சிறப்பும் அங்கே வழிபட்டோர் வரிசையும் மிக பெரிது. முல்லை கொடிக்கு மாதவி என்றொரு பெயர் உண்டு என்பதால் இது புராணக் காலத்தில் மாதவி வனம், கர்ப்பபுரி என அழைக்கப்பட்டிருக்கின்றது.

க்ருத யுகத்தில் தேவர்களாலும் , த்ரேதா யுகத்தில் முனிவர்களும், துவாபரயுகத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களாலும் இப்போது கலியுகத்தில் முனிகளும் மானுடரும் வணங்கும் ஆலயம் இது, கந்த புராணத்தில் இந்தத் தலம் பற்றி நாரதர் கூறும் காட்சி உண்டு.

பிரம்மன் தன் சாபம் தீர இந்த முல்லை வன நாதரை வழிபட்டு சாபம் நீங்கினார், அப்போது அவர் உருவாக்கிய தலம் பிரம்மதீர்த்தம் என இன்றும் உண்டு.

சுவர்னகரன் எனும் வைசியன் சாபம் காரணமாக பேயுரு கொண்டாம். கார்க்கிய முனிவர் அவரின் சாபம் தீர்க்க இங்கே அனுப்பினார், ஒரு திருவாதிரை நாளில் அவனின் சாபம் நீங்கி அவன் பேயுருவம் அகன்றதும் இங்குதான், கௌதம முனிவர் பசுவானைக் கொன்ற பாவம் சுமந்ததால் பெரும் துன்பம் அனுபவித்தார், அவரைப் போதாயனர் இங்கு வழிபடச் சொன்னார், கௌதமர் இங்கு ஒரு லிங்கம் வைத்துவழிபட்டு சாபம் நீங்கினார், அந்த லிங்கம் இன்றும் கௌதமேஸ்வரர் சந்நதி என இந்த ஆலயத்தில் உண்டு.

குசத்துவச‌ன் என்பவன் சத்திய முனிவரைப் பழித்ததால் பேயுரு பெற்றான், அவன் சபாம் தீர்ந்த தலமும் இதுதான்.

சங்குகர்னன் தன் குரு சாபத்தால் கோர உரு அடைந்தான், தான் அழகானவன் எனும் கர்வத்தில் அவன் குருவை அவமதிக்க அச்சாபம் அவனுக்கு வந்தது, அவன் இங்கு வந்து வழிபட்டு மார்கழி திருவாதிரையில் தன் சாபம் தீரப்பெற்றான்.

தட்ச சாபத்தில் பெரும் துன்பத்தில் சிக்கிய சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்து பூஜை செய்ததால் நலம் பெற்றான். அதனால் இன்றும் இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரம் அன்று நிலவொளி சுவாமி மேல் விழும். சூரிய ஒளி சுவாமி மேல் விழும் கோவில்கள் நிறைய இந்தியாவில் உண்டு என்றாலும் சந்திரன் ஒளி படும் ஆலயங்கள் குறைவு, அதில் இது முக்கியாமானது.

இப்படித் தேவர்களும் ரிஷிகளும் முனிவர்கள் பலராலும் வணங்கப்பட்ட இந்தத் தலம் பின்னாளில் ஆலயம் கண்டது. சோழ மன்னர்கள் காலத்துக்கு ஏற்றபடி அதனைப் பெரிதாக்கி வந்தார்கள்.

ஆலயத்தைப் பெரிதாக்கினார்களே தவிர அங்குச் சுயம்புவாக தோன்றிய ஆதிகால லிங்கமும், நிருத்துவர் காலம் காலமாக வழிபட்ட லிங்கமும் இப்போதும் அப்படியே உண்டு, வேதிகைக்கு அருள்பாலித்த அம்மன் “கர்ப்பரட்சாம்பிகை”, “கருகாத்த நாயகி” என அங்கு அக்காலத்தில் இருந்தே அருள்பாலிக்கிறார்.

கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாக தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடியின் வடு உண்டு.

புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தம் அதாவது உளியால் செதுக்காமல் தானே உருவானது.

இங்குள்ள பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய பல சந்நதிகள் உண்டு.

இந்த ஆலயம் சுந்தரர், சம்பந்தர் காலத்திலும் பிரசித்தியானது. தேவாரம் பாடப்பட்ட 18 ஆம் தலம் இது. சுந்தரர் பசியோடு இருந்தபோது இங்குச் சிவனே பசியாற்றினார்.

சம்பந்தரும் அப்பர்பிரானும் வந்து பாடினார்கள்.

நிருத்துவ முனிவர் காலம் மட்டுமல்ல இக்காலம் வரை அதிசயங்களைச் செய்து கொண்டிருக்கும் ஆலயம் இது, அதன் சிறப்புகள் ஏராளம்.

இன்றும் இங்கு வணங்கி செல்லும் பெண்களுக்குக் குழந்தை வரம் நிச்ச்யம், அதோடு இங்கு வணங்கினால் கருக்கலைவது இல்லை, குறை பிரசவமில்லை, கர்ப்பகால வலி அதிகமுமில்லை, பிரசவத்தின் போது மகவோ தாயோ இறப்பதுமில்லை.

அப்படி ஒரு அற்புத சக்தியுள்ள ஆலயம் இது. கர்ப்பரட்சாம்பிகையாக அன்னை இங்கு நின்று ஒவ்வொரு பெண்ணுக்கும் மகவு அருளி, அதன் வழியும் அருளி காவலாய் இருந்து காத்து வருகின்றாள்.

அவள் படைப்பின் சக்தி இந்த உலகின் படைப்பினைச் சிவனோடு நின்று செய்பவள் என்பதால் பெண்கள் மூலம் உயிர் ஜெனிக்கும் படைப்புக்கு அவளே மூல காரணமும் ஆகின்றாள், அந்த மகா சக்தி கொண்ட அன்னை வீற்றிருக்கும் தலம் இது.

முல்லை என்பது வெறுமனே மணம் கொண்ட மலர் மட்டுமல்ல, அதன் மருத்துவபலன்கள் அதிகம். அதில் செய்யப்படும் சில அக்கால மருந்துவகைகள் கருப்பைக்கு பலம் சேர்க்கும், மகப்பேறு வரம் அருளும்.

இந்துக்கள் முல்லைபூவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கும் பெண்களை அதனைச் சூடிக் கொள்ள சொன்னதற்கும் காரணம் மருத்துவரீதியாகவும் இருந்தது. அந்த மலரின் மணமும் மிகுந்த மருத்துவபயன் கொண்டது, விஞ்ஞான முடிவின்படி மணமும் நோய் உருவாகவும் நோய் உருவாகாமல் தடுக்கவும் மிக முக்கிய காரணம்.

இதனாலேதான் இந்துக்கள் எக்காலமும் மலர் தூவி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள், அந்த மலர்களில் முல்லை மலரும் முக்கியமானது. அது மன அமைதி தரும் உடலில் நல்ல பலம் தரும், மகப்பேற்றுக்கான சக்தியும் ஆற்றலும் தரும். இந்த ஆலய தத்துவம் அதனை அழுத்திச் சொல்கின்றது.

இன்னும் இன்று தாயின் உடலுக்கு வெளியே கருவளர்க்கும் முறை சாத்தியம் என இன்றைய விஞ்ஞானம் சொல்வதை அன்றே சொல்லி செய்துகாட்டிய மதம் இந்துமதம், இப்படியான விஷயங்கள் மகாபாரத்தில் உண்டு, புராணங்களில் உண்டு, ஏன் சாணக்கியன் வாழ்வில் நவநந்தர்கள் என உண்டு.

இந்த மாபெரும் விஞ்ஞான வித்தையினைத் தேவி நிருத்துவ முனிவர்க்கு காட்டிய இடம் இது. இந்துமதம் இன்றைய விஞ்ஞானம் சொல்வதெல்லாம் என்றோ செய்துகாட்டிய ஞானமதம். அது மானிடர் கண்ட இன்னும் காணாத விஞ்ஞானமெல்லாம் அன்றே போதித்தது, அந்தக் காட்சிதான் இந்த ஆலயத்தின் ஸ்தல புராணம்.

இன்றைய நவீன மருத்துவத்தை எல்லாம் தெய்வமே வந்து எங்களுக்குச் செய்துகாட்டி போதித்த மதம் என ஒவ்வொரு இந்துவும் பெருமை கொள்ளும் தலமும் இதுதான்.

இது இன்னும் ஆழமான ஞான தாத்பரியமும் போதிக்கின்றது, அது சூட்சுமமானது.

மானிட வாழ்வில் எல்லாமே கர்மா, எல்லாமே முன் ஜென்ம கர்மப்படி நடப்பது, அப்படிப் பிறப்பு, குடும்பம், வளர்ப்பு, திருமணம், மகப்பேறு என எல்லாமே கர்ம வினைப்படிதான் நடக்கும், திருமணமும் கர்மா, குழந்தை பேறும் ஒரு கர்மம்.

அந்தக் கர்மத்தால் வரும் குழந்தை பெற்றோர் மூலம் வந்தாலும் அது அவர்கள் கர்மப்பலனே, அந்தக் கர்மத்தில் சிக்கி பந்தபாசம் எனும் மாய வலைகளில் சிக்கி மானுட இனம் தடுமாறுவதையே அறியாமை என்றார்கள் ஞானியர்.

( இதனைச் சூட்சுமமாகப் பாடினார் பட்டினத்தார்.

“மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா”

கர்மவினை காரணமாக மீண்டும் மீண்டும் தாயின் கர்ப்பத்தில் பிறக்கவேண்டும் என்பதைச் சலிப்புடன் பாடி இனி எனக்குக் கர்ப்பத்தில் பிறக்கும் பிறப்பு வேண்டா என அவர் கெஞ்சியது இந்த ஞானமே. )

இந்தக் குழந்தை நம் குழந்தை எனும் அந்தப் பந்தபாசத்தில் மானுட இனம் சிக்கிக் கொள்கின்றது, நான் பெற்றேன் நான் வளர்த்த குழந்தை நான், நான், என்னுடையது எனும் மாயையில் அது சிக்கிப் பெரும் குழப்பத்தில் வீழ்கின்றது.

உடலால் ஒட்டி பிறக்கும் குழந்தை கர்மவினை, அது தாய் தந்தையரின் கர்மத்தின்படி வந்து தன் கர்மத்தை தீர்க்க உலகில் வளர்கின்றதே அன்றி, பெற்றோர் மூலமாக கர்மபலனாக வந்ததே அன்றி பெற்றோருக்காக அல்ல‌.

இந்தக் கர்ம சூட்சுமத்தைத்தான் இந்த ஆலயம் போதிக்கின்றது, கர்மத்தினைச் சுமக்கும் பலத்தை அந்த ஆலயம் தரும், முடியாத பட்சத்தில் சிவனே தன் தேவியுடன் வந்து கர்மத்தைச் சுமந்து உதவுவார் என்பது.

குறைபிரசவமான கருவினைக் குடத்தில் வைத்து அன்னை காத்துக் கொடுத்தாள் என்பது அந்தக் கர்மவினையின் பலனை அன்னை சுமந்து அவளை காத்தாள் தன்னை நம்பிய முனிவர் குலத்தை காத்து மீட்டாள் என ஞான தத்துவமாகின்றது.

ஆம், கார்த்திகை மாதம் கர்மம் செய்யும் பலனைத் தரும் மாதம், கருமை நிறம் என்பது கர்மத்துக்கானது. அதனாலே கருப்பு உடை அணிந்து சபரிமலை போன்ற தலங்களுக்குச் செல்லும் வழிபாடெல்லாம் அப்போது நடக்கும்.

கர்மம், கர்ப்பம், கர்ப்பகிரகம் என எல்லாமே இந்த அடிப்படையில் வந்தது, கர்ப்பம் தங்கும் கருவறையின் இருள்வடிவமும் கோவிலின் கர்ப்பகிரகமும் அடிப்படை தத்துவத்தால் ஒன்றே.

தாயின் கர்ப்பபை ஒரு புதிய உயிரைக் கர்மமாய் தருவது போல் கோவில் கருவறை சக்தியின் பிறப்பிடமாய் இருந்து கர்மத்தைச் செய்ய பலம் தருகின்றது என்பது இந்து வழிபாட்டின் அடிப்படை விதி.

அந்த ஞான போதனைக்கும் வடிவுக்கும் சாட்சியாய் நிற்பது இந்த ஆலயம், இந்த முல்லைவனநாதர் ஆலயம் அவ்வளவு ஞானமான தத்துவத்தைப் போதிக்கின்றது.

சந்திரன் தன் சாபத்தை இங்குத் தீர்த்தது என்பதும் சூட்சுமமான தத்துவம், ஜாதகத்தில் ஒருவனின் தாய்வழி தொடர்பை அதாவது கர்ம பலனைச் சொல்வது சந்திரன் இருக்குமிடமே, அதனால் பிறப்பினால் வரும் கர்மத்தினை இந்த ஆலயம் தீர்க்கும் என்பதைச் சூட்சுமமாகச் சொல்லி பங்குனி உத்திரத்தில் நிலவோளி அதன்மேல் படும்படி செய்து பெரும் ஞானம் போதித்தனர் இந்து ஞானியர்.

ஆம், இது பிறப்பின் கர்மபலன் எல்லாம் ஏற்று நம்மை வாழவைக்கும் ஆலயம்.

அங்கு நடந்த அற்புதங்களைக் கவனியுங்கள், நிருத்துவர் மனைவியின் கர்ப்பம் காத்துக் கொடுத்த அந்தத் தலம் எல்லாரின் கர்மம் செய்ய வழி செய்திருக்கின்றது, கோர உருவத்தை அது மாற்றியது. பேய் உருவம், புலி உருவமெல்லாம் அது மாற்றியது என்பது ஒவ்வொருவரின் கர்மப்பலனை அது மாற்றிக் கொடுத்ததைச் சொல்கின்றது.

சுந்தரரின் வயிற்றுப்பசி இங்குத் தீர்ந்தது என்பது அவரின் கர்மத்தைச் செய்ய இறைவன் பலமருளினார் என்றாகின்றது.

பிரம்மன் தன் சாபம் நீங்கிப் புதியபடைப்பைத் தொடங்கினான் என்றால் அவனின் கர்மப்பலனும் இங்கு முடிந்தது என்பதும், இங்கு வழிபடும் ஒவ்வொரு மானுடரின் தலைவிதியும் மாறும் என்பது பொருளாகின்றது.

முருகப்பெருமான் நடுவில் இருக்க சிவனும் அன்னையும் காட்சியளிக்கும் ஆலயம் சோமஸ்கந்த தத்துவத்தைச் சொல்வது அதாவது கர்மம் நீக்கி புதிய பிறப்பினை, புதிய வாழ்வினை, புதிய நம்பிக்கையினை தரும் ஆலயம் இது.

இந்தக் கார்த்திகையில் மறக்காமல் வழிபட வேண்டிய தலம் இந்த முல்லைவனநாதர் கர்ப்பரட்சாம்பிகை ஆலயம், இங்குக் குழந்தைவரம் இல்லாப் பெண்கள் சுத்தமான நெய்யில் தீபமிட்டு, சுத்தமான நெய்யினால் அன்னைக்கு அபிஷேகம் செய்து அந்த நெய்யினை உண்டால் மகப்பெறு நிச்சயம் கிடைக்கும்.

கருகொண்ட பெண்கள் அன்னையினை வணங்கினால் கரு ஒரு சிக்கலுமில்லாமல் குழந்தையாய் ஜெனிக்கும், பிரசவமும் எளிதானதாகப் பெரும் வலியற்றதாக அன்னை அருளால் நடக்கும், இதுவரை இங்கு அன்னையினை நம்பிய பெண்கள் யாரும் கைவிடப்பட்டதே இல்லை.

ஆம், கர்மத்தைச் சரியாகச் செய்ய முழுக்கப் பலன் தரும் ஆலயம் இது. முடிந்தவர்கள் கார்த்திகையில் செல்லலாம். முடியாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது செல்லலாம். உங்கள் கர்மத்தை முடிக்க எதெல்லாம் அவசியமோ அதை எல்லாம் தரும் வரமிக்க சக்திமிக்க தலம் இது.

கருத்தரிப்பு மையங்கள் நிரம்பிவிட்ட தமிழகத்தின் நிலை இப்படியான சக்திமிக்க ஆலயங்களை மறந்து போனதன்றி இதிலிருந்து திசைமாற்றப்பட்ட கொடுமையன்றி வேறல்ல‌.

குழந்தை இல்லாத் தம்பதியர் இங்குச் சென்று நாதருக்கு முல்லை மலர் இட்டு அர்ச்சனை செய்து அவர் காலடியில் வைத்த பூவினைக் கொஞ்சம் சூடி வழிபட்டு அன்னைக்கு நெய் அபிஷேகம் செய்து அந்த நெய்யினை உண்டால் நிச்சயம் குழந்தை பாக்கியமும் சுக பிரசவமும் நிச்சயம், லட்சோப லட்ச சாட்சிகள் காலம் காலமாய் உண்டு.

காத்திகை சோமவார வழிபாடு, மார்கழி திருவாதிரை வழிபாடு முக்கியம். அப்படியே பங்குனி உத்திரமன்று முழு நிலவு நாளன்று சந்திரனின் கதிர்கள் இந்த நாதன் மேல் விழுவது மெய்சிலிர்க்கும் காட்சி. அன்று இங்கு வழிபட்டால் பெரும் அருள் நிச்சயம்.

யுகங்களைத் தாண்டி பெரும் அதிசயங்களைச் செய்யும் அந்த ஆலயத்தின் கதவு, முல்லைவனநாதரின் அடையாச் சந்நிதி உங்களுக்கும் திறந்தே இருக்கின்றது, அந்தப் பொக்கிஷம் திறந்த பெட்டகமாக இருக்கின்றது, அங்கு யாரெல்லாம் சென்று கையேந்தி நிற்கின்றீர்களோ அங்கு கைநிறைய மனம் நிறைய, குழந்தை இல்லாப் பெண்கள் வயிறு குளிர எல்லா வரங்களும் பெற்றுக் கொள்வார்கள். இது சத்தியம்.

“குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே..

பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா
மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா
வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே”