பஞ்ச ஆரண்ய தலங்கள் 05 : திருக்கொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம்.
பஞ்ச ஆரண்ய தலங்கள் 05 : திருக்கொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம்.
பஞ்ச ஆரண்ய தலங்களில் கடைசி ஆலயம் ஐந்தாம் ஆலயமான திருகொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம். இது தஞ்சாவூர் பாபநாசம் பக்கம் கொடராச்சேரி அருகில் முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்தத தலம் சிவனின் ஐந்து தொழில் தாத்பரியத்தில் ஐந்தாம் தொழிலான அருளல் தொழிலைக் குறிக்கும் ஆலயம். அதாவது, முக்தியினை அருளும் ஆலயம். காசி முக்தி அளிக்கும் தலம் அப்படியே தமிழகத்தில் திருவெண்காடு, திருவையாறு , திருவிடை மருதூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், ஸ்ரீவஞ்சியம் ஆகிய ஆறு தலங்களும் காசிக்கு இணையானவை. இந்த வரிசையில் அவிநாசி, தென்காசி எனச் சில ஆலயங்கள் உண்டு. அதில் ஒன்று இந்தத் திருக்கொள்ளம்புதூர்.
இது வில்வமரங்கள் நிறைந்த காடாக இருந்த இடம், அங்கே சிவன் சுயம்புவாகத் தோன்றினார், அதனால் அவர் வில்வனேஸ்வரர், அன்னை சௌந்தரநாயகி எனும் அழகு நாச்சியார்.
வில்வத்துக்குக் கூவிளம் என்றொரு பெயர் உண்டு என்பதால் இது திருக்கூவிளம்புதூர் என்றானது, பின் மருவி திருகொள்ளம்புதூர் என்றாயிற்று.
இது தேவாரம் பாடப்பெற்ற 113 ஆம் தலம் எனும் பெருமையுடன் காவேரியின் கிளையாற்றில் கம்பீரமாக நின்று அருள்பாலிக்கும் தலம்.
இந்த ஆலயம் யுகங்களைத் தாண்டி தொன்மையானது. முன்பொரு யுகத்தில் சாபம் பெற்ற தேவலோக வாசி பன்றியுரு கொண்டு படாதபாடுபட்டான். அவன் தான் இங்குள்ள அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி இந்தச் சிவனை வணங்கப்பெற்றதால் சாபம் தீரப்பெற்று தேவலோகம் ஏகினான்.
வேடன் ஒருவன் சிவராத்தியன்று வழிபட்டதால் அவனும் முக்தி அடைந்தான்.
ஆம், இந்த ஆலயம் முக்தி தரும் ஆலயம். இங்கு மரணிக்கும் ஆன்மாவுக்கு காசிபோல் சிவனும் அன்னையும் பஞ்சாட்சரம் ஓதி முக்தி அருள்வார்கள், இங்கு நீராடி சிவனைப் பணிந்தால் காசிக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும். தவறாமல் கிடைக்கும்.
இந்த ஆலயத்தில் அர்ஜூனன் வழிபட்டான், அதனால் காண்டீப தீர்த்தம் இங்கு விசேஷம். இன்னும் விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகுமுனிவர், காஸ்யபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் ஆகியோர் வழிபட்ட இடம் இது.
இந்த ஆலயத்தின் மிகப்பெரிய சாட்சி திருஞான சம்பந்தர், அந்தச் சம்பந்தர் இப்பக்கம் ஐப்பசிமாத அமாவசை அன்று அர்த்தஜாம பூஜை காண வந்தார். பொதுவாக அமாவாசை அர்த்தசாம பூஜை விசேஷம், அதுவும் ஐப்பசி அமாவாசை இரவு பூஜை மகா விஷேசம்.
அப்படிச் சம்பந்தர் வரும்போது முள்ளியாறு எனும் காவேரியின் துணையாற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, ஓடக்காரன் இல்லை. மாறாக, ஒரு ஓடம் மட்டும் கரையில் கட்டப்பட்டிருந்தது. சம்பந்தருக்கும் அவரோடு வந்தவர்களுக்கும் எப்படி அப்பக்கம் செல்வது எனத் தெரியவில்லை, ஆற்றின் அகலமும் வேகமும் மிக மிக பெரிதாய் இருந்தது.
அந்த நள்ளிரவில் எப்படியும் அர்த்தசாம பூஜை பார்த்துவிட வேண்டும் என முடிவில் இருந்த சம்பந்தருக்கு ஓடம் புறப்படுவது போல் தெரியவில்லை. காரணம். ஆறு பெருக்கெடுத்தோடுகின்றது. ஓடத்தைச் செலுத்துவோருமில்லை. அப்படி அவர்கள் வந்தாலும் அந்தக் காரிருள் அதுவும் மேகம் மூடிய ஐப்பசி மாத இரவில் வெள்ளத்தில் படகை செலுத்துவதும் முடியாக் காரியம்.
இதற்குச் சாதாரணமானவர்கள் என்றால் அஞ்சுவார்கள். சம்பந்தர் எனும் மகான அஞ்சுவாரா? அவரைப் பொறுத்தவரை நீர் என்பது சிவனின் ஒரு அம்சம் அவ்வளவே, அதனால் கொஞ்சமும் கலங்காமல் படகில் ஏறி அமர்ந்து பதிகம் பாடினார்.
“கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே”
என அவர் பத்துப்பாடல் வரும் நீண்ட பதிகத்தைப் பாடினார், பாடி முடித்ததும் படகு தானே வானில் மிதக்கும் மேகம் போல் மெல்ல மெல்ல அந்த நீரில் நகர ஆரம்பித்தது, சம்பந்தர் சிவனை வேண்ட படகு மெல்ல அக்கரையினை அடைந்தது, ஒரு சேதமுமின்றி மிகுந்த ஆச்சரியமாய் அடைந்தது.
அப்போது விடியற்காலமானது, அர்த்தஜாம பூஜைக்கு வரவேண்டிய சம்பந்தர் வராததால் எல்லோரும் என்னாயிற்றோ என அவருக்காக காத்திருந்தார்கள். அதன் பின் விடியற்காலத்தில் உஷாத் கால பூஜைதான் சம்பந்தர் வழிபட நடந்தது.
இதனைக் குறிக்கும் வகையில் இன்று தீபாவளிக்கு அடுத்த நாள் அங்கு அர்த்தஜாம பூஜை கிடையாது. மாறாக, உஷாத் கால பூஜை எனும் விடியற்காலை பூஜைதான் உண்டு, அன்று சம்பந்தர் கால அதிசயத்தைச் சொல்லும்படி ஓடத்திருவிழா நடக்கிறது.
அன்று திருஞான சம்பந்தரின் திருமேனியைப் படகில் வைத்து ஓதுவார்கள் தேவாரம் ஓதியபடி முள்ளி ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குப் படகில் வருவார்கள். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரைசேரும். அங்கே ரிஷபாரூடராய் வில்வவனநாதர் அழகு நாச்சியாருடன் எழுந்தருளி ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்வார், அன்று மட்டும் அர்த்தஜாம பூஜைக்குப் பதிலாக அதிகாலை பூஜை நடைபெறும். ஆண்டுதோறும் இந்த விழா உண்டு.
இது என்றோ சம்பந்தர் காலத்தில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் பெரும் புகழ் படைத்த இடம். இலங்கையில் பிறந்து ராமகிருஷ்ணா மடத்தினால் உருவான சுவாமி விபுலானந்தா தன் “யாழ்நூல்” எனும் பிரசித்தியான நூலை சமர்பித்து அதன்படி தானே அமைத்த யாழ் இசையினை இங்குதான் அரங்கேற்றம் செய்தார்.
ஆம், விபுலானந்தர் யாழின் பெருமைகளை ஆராய்ந்து அதை நூலாகவும் எழுதினார் “யாழ் நூல்” என அதற்குப் பெயர், அவர் அந்நூல்படி சில வீணைகளையும் செய்து திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947-ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அதனைஅரங்கேற்றினார்.
சிறப்புமிக்க அவ்விழா இரு நாட்கள் அவ்விழா நடந்தது.
முதல் நாள் விழாவில் அறிஞர் பெருமக்கள் இசையறிந்த வித்வான்கள் அவரைத் தெற்குக் கோபுர வாயிலின் வழியாகத் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். விபுலானந்தர் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கிச் சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய ‘நாச்சியார் நான்மணிமாலை’ வித்துவான் ஔவை துரைசாமி அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது.
பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா முடிந்தது.
இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், ‘குமரன்’ ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், மற்றும் பலர் உரையாற்றினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது.
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சமய விழாக்களில் ஒன்றான அந்த விழா, இந்துக்களின் தனிப்பெரும் இசைகருவியான யாழை இச்சமூகம் மீளத் தயாரித்து இசைத்து அரங்கேற்றிய விழா இங்குதான் நடந்தது, அதை நல்லபடியாக முடித்த சில வாரங்களில் விபுலானந்தர் முக்தி அடைந்தார்.
ஆம், அவருக்கு இந்த வில்வரனேஸ்வரர் முக்தி வரம் அருளித் தன்னோடு சேர்த்துக் கொண்டார், இது கண்கண்ட இந்த நூற்றாண்டு கண்ட பெரும் சாட்சி.
இங்கு வாசலின் மேற்பக்கம் ரிஷபாரூடர், விநாயகர், சுப்ரமணியர் சுதைத் திருமேனிகள் வண்ணத்தில் உண்டு, அங்கே துவார விநாயகர் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் வலப்புறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி உண்டு.
அடுத்து ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம் உண்டு. அதன் வாயிலின் இருபுறமும் விநாயகர் மற்றும் தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உண்டு. கோபுரத்துள் நுழைந்ததும் வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செல்லும் சிற்பம் அழகுற அமைந்துள்ளது.
பிராகாரத்தில் வலம் வரும்போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, பழைய சோழமன்னன்-அவன் மனைவி (இது கரிகால் சோழனாக இருக்கலாம் என்பது ஆய்வு) ஆகியோரைத் தரிசிக்கலாம்.
அடுத்து ஆறுமுகசுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவகிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உண்டு.
அப்படியே வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்துள் சென்றால் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள் அம்பாள்.
அப்படியே இன்னும் நகர்ந்தால் துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். வலப்புறம் திருமுறைக்கோயில் பக்கத்தில் நடராஜசபை. இம்மண்டபத்தில் விநாயகர், பிட்சாடனர், சந்திரசேகரர் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
நேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சண்டேஸ்வரருக்குத் தனிச்சந்நதி உள்ளது. இத்திருக்கோயிலில் நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.
மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. அவை சோழமன்னர்கள் செய்த எல்லாத் திருப்பணிகளையும் சாட்சியாய்ச் சொல்கின்றன, அப்படியே ‘அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்புதூர்’ என்று இதன் அடையாளம் உறுதியாய்ச் சொல்லப்படுகின்றது.
இந்தத் தலம் எல்லாக் கர்ம வினைகளையும் போக்கி முக்தி அருளும், சம்பந்தர் இங்குச் சிவனருளில் ஓடத்தால் ஆற்றைக் கடந்தார் என்பது பிறப்பினைக் கடப்பதற்கு, கர்மத்தைக் கடப்பதற்கு உதாரணமாகின்றது.
ஆம், இங்கு வழிபட்டால் கர்ம வினைகளைக் கடந்து முக்தி அடையும் பாக்கியம் கிடைக்கும்.
இங்கு வழிபட்டால் இசை அறிவு பெருகும், இசையில் ஆர்வம் உள்ளோர் இசைக் கருவிகளில் ஆர்வமுள்ளோர் இங்குள்ள சம்பந்தர் சன்னதிமுன் வழிபட்டால் தங்களுக்குரிய இசைகருவியுடன் பாடினால் பெரும் இசைஞானமும் அறிவும் வாய்க்கும். திறமை மேலோங்கும்.
இந்தத தலத்தில் விளக்கேற்றி வணங்கினால் கர்ம வினை எல்லாம் அழிந்து முக்திபேறு வாய்க்கும். காசிக்குச் சென்ற அத்தனை பலனும் இங்கு ஒருசேர கிடைக்கும்.
மிக அருகருகே இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் திருக்கருகாவூரில் விடியற்காலையில்,
அவளிவநல்லூரில் காலையில். ஹரித்துவாரமங்கலத்தில் உச்சிக்காலப் பொழுதில். ஆலங்குடியில் மாலையில், திருக்கொள்ளம்புதூரில் அர்த்தஜாமத்தில் வணங்கினால் சிவனின் ஐந்து தொழில்களின் பலனும் ஒருசேர கிடைக்கபபெற்று முழுக் காவலும் ஞானமும் அருளும் பெறலாம். தஞ்சாவூர் பக்கம் செல்லும் போது ஒரே நாளில் தரிக்கக கூடிய இந்த ஐந்து தலங்களைத் தரிசிக்க மறவாதீர்கள். அதுவும் கார்த்திகையில் வழிபட்டால் முழு பலன் உண்டு.