பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

சப்த ரங்க ஆலயங்களை போலவே மார்கழியில் கூடுதலாக வழிபட வேண்டிய ஆலயங்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள்

ஐந்து தலங்களில் பகவான் கண்ணன் எப்போதும் தங்கியிருந்து அருள்வழங்குவார் என்பது அன்றே ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் அவர் கொடுத்த வாக்கு, அதாவது ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர் எக்காலமும் எந்நேரமும் அருள் வழங்கும் முக்கியமான கிருஷ்ணன் ஆலயங்கள் இவை

திருகோவிலூர், திருகண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருகண்ணபுரம் மற்றும் கபிஸ்தலம்

வரும் நாட்களில் இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரு சுற்று பார்க்கலாம், மார்கழியில் பகவான் கண்ணனை வழிபட்ட பலன் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

பஞ்ச கிருஷ்ண‌ ஷேத்திரங்கள் : 01 திருக்கோவிலூர்.

“மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்,

எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளந்தளிரில் கண் வளர்த்த ஈசன் தன்னை,

துஞ்சா நீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய

செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே”

என்பது திருமங்கை ஆழ்வார் இந்த ஆலயம் பற்றி பாடிய வரிகள்.

பஞ்ச கிருஷ்ண தலங்களில் முதன்மையான இத்தலம் தென்பெண்ணை ஆற்றின் பக்கமாய் அமைந்துள்ளது, இன்று கள்ளக்குறிச்சி பக்கம் திருக்கோவிலூர் என அழைக்கப்படும் இந்த இடத்தின் அன்றைய பெயர் கிருஷ்ண புரி.

தென் பெண்ணை ஆற்றின் அன்றைய பெயர் “கிருஷ்ண பத்ரா”

இந்த ஆலயத்தின் வரலாறு மிருகண்ட முனிவர் காலத்தில் இருந்து துவங்குகின்றது, மிருகண்ட முனிவர்தான் சிவனருளால் எமனை வென்ற மார்கண்டேயரின் தந்தையார்.

அந்த மிருகண்ட முனிவருக்கு பெரும் ஆசை ஒன்று ஏற்பட்டது. அதன்படி, அவர் பகவானின் வாமன அவதாரத்தினையும், அதன் முடிவில் பகவான் மகாபலிக்கு காட்டிய விஸ்வரூப தரிசனத்தை தானும் காண விருப்பம் கொண்டார்.

மாபெரும் தவசியான அவர் தன் தவத்தினால் பிரம்மதேவனிடம் இதுபற்றி கேட்க அவரோ கிருஷ்ண பத்ர நதியோரம் இந்த இடத்தில் தவமிருந்தால் நினைத்ததை அடையலாம் என வழிகாடினார்.

கிருத யுகத்திலே பகவான் சுயம்புவாக எழும்பிய கோவில் அங்கு இருந்தது, அங்குதான் அவரை செல்லச் சொன்னார் பிரம்மா.

மிருகண்டு முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் அப்பக்கம் வந்து ஆசிரமம் அமைத்து தங்கி பகவானின் வாமன கோலம் மற்றும் அவர் மூன்று அடிகளால் உலகளந்த கோலம் என இரண்டையும் காணத் தவம் இயற்றினார்.

வாமன அவதாரம் எல்லோரும் அறிந்த ஒன்று, மகாபலி சக்கரவர்ததி அசுர குலத்தவன் என்றாலும் பகவானின் பக்தன், அவன் எல்லா உலகங்களையும் கைப்பற்றி தனக்கு ஈடு இணை யாருமில்லை எனும் வரத்தைப் பெற பெரும் யாகம் நடத்தினான்.

அந்த யாகம் நல்லபடியாக முடிந்தால் அவன் பெரும் பலம் பெற்றுவிடுவான், பின் எல்லா உலகமும் அவனுக்கு அடிமை என அஞ்சிய தேவர்கள் விஷ்ணுவிடம் சரணடைந்தார்கள்.

பகவான் அவர்களைக் காக்க திருவுளம் கொண்டு ஒரு குள்ளனாக வாமன அந்தணனாக அவன் யாகசாலை நோக்கிச் சென்றார்.

ஒரு யாகம் நல்லபடியாக முடிய அந்தணர்களுக்கு அவர்கள் வேண்டுவன கொடுத்தல் வேண்டும் என்பது விதி.

அப்படி இந்த வாமனர் கடைசியாக வந்தார், அவர் வருவதற்குள் தானம் செய்ய வைக்கப்பட்ட‌ பொருட்கள் காலியாகியிருந்தன, வாமனர் வரும்போது மன்னன் மகாபலி அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்டான்.

அதே நேரம் மகாபலியின் குருவான சுக்கிராசாரியாருக்கு வந்தது பகவான் எனத் தெரிந்தது, அதற்குள் எனக்கு என் கால் அளக்குமளவு மூன்று அடி மண் வேண்டும் எனக் கேட்டார் வாமனர்.

தவம் செய்ய ஒரு இடம் என அவர் கேட்டார் என மன்னனும் இசைந்தான், வாமனர் தன் கமண்டல நீரால் அதை தாரைவார்த்து தரச் சொன்னார்.

ஆனால், அசுரகுரு சுக்கிராச்சாரியார் ஒரு வண்டாக மாறி அந்தக் கமண்டலத்தை அடைத்தபோதும், வந்தது பகவான் என எச்சரித்தபோதும் மகாபலி தர்ப்பைப் புல்லால் வண்டை குத்தி விரட்டி வாமனனுக்கு தான நீர் வார்த்தான்.

அவன் மூன்றடி மண் எனக் கொடுத்ததும் வாமனன் வளர்ந்தார். பகவான் தன் விஸ்வரூபத்தை காட்டி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நின்று ஒரு அடியால் மண்ணையும் ஒரு அடியால் விண்ணையும் அளந்து மூன்றாம் அடி எங்கே எனக் கேட்டார்.

மகாபலி பகவானை வணங்கி தன் ஆணவம் நீங்கிய அறிகுறியாக தன் தலையினை மூன்றாம் அடியாக வைக்கக் கொடுத்தான், பகவான் அவனை வாழ்த்தி கால் வைத்தார்.

“மகாபலி மன்னா, முன்பு சிவன்கோவிலில் அணையும் நிலையில் இருந்த திரியினை உன்னை அறியாமல் தூண்டிய எலியாக நீ இருந்தாய் அதன் புண்ணிய பலனால் இந்த நிலை எய்தினாய்.

உன் யாகம் பெரும் ஆசை கொண்டது என்றாலும் உன் பக்தி நிஜமானது, உன்னை பாதாளத்துக்கு அழுத்துமுன் என்ன வரம் வேண்டும் எனக் கேள்” என்றார்.

பகவானை கண்டபின் எனக்கு என்ன வேண்டும்? நான் இந்நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ விரும்பியவன். அதனால், ஆண்டுக்கொருமுறை வந்து அவர்களை கண்டுவிட்டு செல்ல வரம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான்.

பகவான் அப்படியே வரமருளி அவனைப் பாதாளத்துக்கு அனுப்பினார், வருடம் ஒருமுறை ஆவணித் திருவோணம் அன்று அவன் அப்படி வருவான். அதுதான் ஓணம் பண்டிகை.

இப்படி அந்த மகாபலிக்கு பகவான் அருளிய காட்சியினைத்தான் காண தவமிருந்தார் மிருகண்ட முனிவர். ஆனால், இவரும் மகாபலி வழியிலே தேவலோகம் அடைய விரும்புவதாக பகவானிடம் முறையிட்டனர் தேவர்கள்.

பகவான் முனிவரின் உள்ளம் அறிந்தவர் அதனால் அவர் தேவர்களுக்கு அவரின் மனதை காட்ட விரும்பினார்.

முனிவர் கடும் தவத்தில் இருக்கும் நேரம் அவர் ஆசிரமத்துக்கு ஒரு அந்தணர் வேடத்தில் சென்று யாசகம் கேட்டார். ஆனால், அவருக்கு இட மித்திரையிடம் ஏதுமில்லை, முனிவரோ தவத்தில் இருந்தார்.

தன் கடமை தவறாத மித்திரை “நான் உத்தமி என்றால் பகவான் நாராயணன் இந்த பாத்திரம் அன்னத்தால் நிரம்ப அருள் செய்யட்டும்” என வேண்டினாள்.

அவள் வேண்டியபடியே அன்னம் நிறைந்தது, அதனை அந்தணர்க்கு அவள் படைக்கமுயன்ற போது தன் விஸ்வரூபதரிசனத்தை காட்டினார் பகவான்.

தவத்தில் இருந்த மிருகண்ட முனிவர் அதைக் கண்டு கண்விழித்து வீழ்ந்து வணங்கினார், அவர் கண்ணுக்கு வாமனனாக முதலிலும் உலகளந்த பெருமாள் என இரு கோலத்திலும் தெரிந்தார்.

எப்படி மகாபலியினை அடக்க மண்ணுக்கும் விண்ணுக்கும் நின்றாரோ அதே கோலத்தில் நின்று “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்றார்.

மிருகண்ட முனிவர் சொன்னார் “எனக்கென எதுவும் வேண்டாம், இந்த ஆலயத்தில் நீ குடிகொண்டு எப்போதும் குடியிருந்து இங்கு வரும் மக்களுக்கெல்லாம் அருள் புரியவேண்டும்”

அப்படியே ஆகட்டும் என பகவான் அருள, மிருகண்ட முனியின் பெரும் மனம் கண்டு தேவர்கள் தலைகுனிந்தனர்.

திரி என்றால் மூன்று, விக்ரம என்றால் வெற்றியாளன் (விக்டரி எனும் ஆங்கிலச்சொல் இதிலிருந்துதான் வந்தது) மூவுலகிலும் ஈடு இணையற்ற பெருமான் என்பதால் இங்குபகவான் “திரிவிக்ரம” கோலம் கொண்டிருக்கின்றார்.

இப்படி மிருகண்ட முனிவரின் பெரும் தவத்தால் அவருக்கு கொடுத்த வரத்தின்படி பகவான் குடியேறி பெரும் வரம் அருளும் ஆலயம் இந்த திருக்கோவிலூர் ஆலயம்.

பரசுராமர் இங்கு தவமிருந்தார்.

பகவான் இப்படி தேர்ந்து கொண்ட தலம்தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஏற்படவும் காரணமாயிற்று.

முதல் ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்து ஆழ்வார், பேயாழ்வார் என மூவரும் தனி தனியாகச் சுற்றி கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் மூவரும் தனி தனியாகப் பகவானை திருக்கோவிலூரில் சேவித்துவிட்டு அவரவர் பாதைக்கு திரும்பும் போது பெரும் மழை கொட்டிற்று.

பொய்கை ஆழ்வார் அருகிருந்த மிருகண்ட முனிவரின் குடிலுக்கு விரைந்தார், முனிவர் அவருக்கு ஒரு அறையினைக் காட்டி இங்கே ஒருவர் படுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி சிறிய அறையில் இடம் கொடுத்தார்.

சற்று நேரத்தில் பூதத்து ஆழ்வார் வந்தார், அதே அறையில் இருவர் அமரலாம் என இருவர் அமர்ந்து கொண்டார்கள்.

அடுத்து பேயாழ்வார் வந்தார், அந்த சிறிய அறையில் மூவர் நிற்கலாம் என நின்று கொண்டார்கள்.

அந்நேரம் அந்த இருளில் யாரோ நான்காம் நபர் ஒருவர் நெருக்குவதாக மூவரும் உணர்ந்தார்கள். ஆனால், புதிதாக யாரும் வந்ததாகத் தெரியவில்லை, அதனால் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளானார்கள்.

விளக்கேற்றினால்தான் நான்காம் நபரை காணமுடியும். ஆனால், விளக்கேற்ற வழியில்லை என்பதால் பாடினார்கள்.

முதலில் பொய்கை ஆழ்வார் பாடினார்.

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீக்குகவே என்று”

மிக நுணுக்கமான பொருளைக் கொண்ட பாடல் இது.

“மனதை விளக்காகவும், கடலை நெய்யாகவும், கதிரவனைத் திரியாகவும் கொண்டு ஒரு விளக்கை ஏற்றி நிற்கின்றேன் பகவானே. இந்தப் பெரிய இருளின் இக்கட்டில் இருந்து என்னை மீட்டெடுப்பாய்” என்பது பொருள்.

அடுத்து பூதத்தாழ்வார் பாடினார்,

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்”

அன்பைத் தகளியாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், என் சிந்தனையினைத் திரியாகவும் கொண்டு தமிழ் கவிஞனாகிய நான் ஞான விளக்கை ஏற்றுகின்றேன் எனப் பாடினார்.

இந்த இருவரும் உளமுருக இப்படி பாடியதைக் கேட்டு, ஒருவர் உலகையே விளக்காகவும், இன்னொருவர் அன்பையே விளக்காகவும் பாடியதைக் கேட்டு பகவான் அங்கே எழுந்தருளினார்.

பகவானை தரிசித்த ஆனந்தத்தில் பேயாழ்வார் பாடினார்.

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று”

இப்படி அந்தக் குடிசையில் மூவரையும் ஒருசேர சந்திக்க வைத்து, அவர்களைப் பாட வைத்து, தன்னைக் காட்டி அருள்பாலித்தார் பகவான்.

இந்த இடத்தில் வெறும் மூன்று பாடல்கள் மட்டும் பாடப் படவில்லை, அதன் பின் உள்ளம் உருகி ஆளுக்கு நூறு பாடல்கள் பாடினார்கள்.

பகவானைத் தரிசித்த பரவசத்தில் பாடினார்கள். அதுதான் “இயற்பா” எனத் தொகுக்கப்பட்டு, இன்று முதல் மூன்று திருவந்தாதிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாடல் இதுதான்.

இந்த முதல் மூன்று பாடல்களும் சாதாரணமாகக் கடந்து செல்பவை அல்ல, இவை மூன்றும் இருபெரும் ஞான போதனையினைச் சொல்பவை.

முதல் பாடலில், பொய்கை ஆழ்வார் உலகை விளக்காக்கி, கடலை நெய்யாக்கி, சூரியனை திரியாக்கி பாடுவது புற இருளை அகற்றுவது.

இரண்டாம் பாடலில், பூதத்தாழ்வார் பாடுவது அன்பை விளக்காக்கி, மனதை நெய்யாக்கி, சிந்தையினைத் திரியாக்கி எரியவைப்பது என்பது அக இருளை போக்குவது.

இந்த இரு விஷயங்களும் நடந்தால் இரு விளக்கையும் ஏற்றினால் பகவான் தெரிவார், கடவுளைக் காணலாம் என்பது மூன்றாம் ஆழ்வார் பாடியது.

ஆம். புற இருள், அக இருள் இரண்டும் நீங்கினால் பகவானை அடையலாம் என போதித்த பாடல்கள் அவை.

இன்னொரு ஆழமான மறைபொருளும் உண்டு. அதுதான் இங்கே ஆணிவேரும் அற்புதமுமான பொருளுமாய் அமைந்தது.

முதல் பாடல், உலகையும் விண்ணையும் சொல்வது. அதாவது படைப்பினைச் சொல்வது. அவ்வகையில் அது பிரம்மனைக் குறிப்பது.

இரண்டாம் பாடல், மனதையும் அன்பையும் ஆர்வத்தையும் குறிப்பது. இது சிவபெருமானைக் குறிப்பது.

மூன்றாம் பாடல், பகவான் விஷ்ணுவினைக் குறிப்பது.

மும்மூர்த்திகளும் ஒன்றே, ஒரே ஞானப் பேரோளியில் இருக்கும் சக்திகள் இந்த மும்மூர்த்திகளே, மூவரும் ஒன்றே, அங்கு பேதம் ஏதுமில்லை என மிக நுணுக்கமாகப் பாடுகின்றார்கள் இந்த முதல் மூத்த ஆழ்வார்கள்.

இந்தத் திருவந்தாதி எனும் இயற்பா மிக மிக உருக்கமானது.

அந்தாதி வகையில் பாடப்பட்ட பாடல் இது, பின்னாளைய எல்லா அந்தாதிகளுக்கும் இதுதான் தொடக்கம்.

இப்படி நாலாயிர திவ்ய பிரபந்தமே இந்த ஆலயத்தில் இருந்துதான் தொடங்கிற்று, அப்படியான மகா முக்கியமான ஆலயம் இது.

பகவான் கிருஷ்ணன் எக்காலமும் குடியிருக்கும் இந்த ஆலயம் ஒவ்வொருவரும் தரிசித்து அருள் பெற்று செல்லவேண்டிய மகா முக்கியமான ஆலயம்.

கிருஷ்ணன் கோவில் என அழைக்கப்பட்ட ஆலயமே பின்னர் திருக்கோவிலூர் என மாறிற்று, 108 ஆம் திவ்ய தேசத்தில் 42வது கோவில் இது.

இக்கோவில் 11 நிலை கோபுரங்களைக் கொண்டது. இதன் இராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. மூலவர் உலகளந்த பெருமாள் மரத்தால் ஆன திருமேனியுடன் ஒரு காலை தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவர்தான் ஆதியில் உருவான சுயம்பு .

பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோவில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்தத் தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

மூலவரின் பின்புறம் வாமன ரூபமும் அமைந்துள்ளது.

லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மர், வரதராஜன், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், விஸ்வசேனா, மணவாளமாமுனி, இராமானுஜர் ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.

முதல் பிரகாரத்தில் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ராகவா, ராமர், வீர ஆஞ்சநேயர், ஆண்டாள், சுக்கிராச்சாரியார் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

ஸ்ரீசக்ர தீர்த்தம் கோவிலின் வெளிப்புறம் அமைந்துள்ளது. ஸ்ரீசக்ர தீர்த்தம் தவிர ஆகாச கங்கை, வராக தீர்த்தம், கலவ தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்கள் இக்கோவிலில் உள்ளன.

வேறு எங்கும் இல்லாத வகையில் இக்கோவில் பெருமாள் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் தாங்கி உள்ளார்.

மூலஸ்தானத்தில் மகாலட்சுமி, பிரஹலாதன், மாபலி ஆகியோர் பெருமாளுக்கு வலது புறத்திலும், சுக்கிராச்சாரியார், மிருகண்ட முனிவர், முதல் மூன்று ஆழ்வார்களான பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பொய்கை ஆழ்வார் ஆகியோர் இடது புறத்திலும் காட்சி தருகின்றனர்.

சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் துர்க்கை சந்நிதி, மிக அரிதாக பெருமாள் சந்நிதி அருகே அமைந்துள்ளது. சாளகிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நிதியில் அருள் தருகிறார்.

ஆம். இந்தத் தலத்தில் விஷ்ணு துர்க்கையும் சுயம்புவாக அருள் பாலிக்கிறாள். இந்த விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும்.

திருமங்கையாழ்வார், இத்தலத்தில் விஷ்ணு துர்க்கையையும் (மாயை) சேர்த்து “விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்” எனப் பாடுகின்றார்.

கண்ணன் அவதரிக்கும் போது அவனுக்கு முன்னதாக காளி அவதாரம் செய்து கம்சனை எச்சரித்த அந்த புராணத் தத்துவபடி இங்கு துர்க்கை எழுந்திருக்கின்றாள்.

சோழர்கள் பாண்டியர்கள் இந்த ஆலயத்தினை பெரிதாக கட்டினார்கள், முற்கால சோழன் வீரராஜேந்திர சோழன் காலத்திலேயே இது உயர்தர கல்லால் கட்டப்பட்டது.

பின்னாளில் நரசிம்ம வர்மன் எல்லா சந்நிதியினையும் அப்படி மாற்றினான், இராஜ‌ராஜ சோழன், இராஜேந்திர சோழன், விக்ரமபாண்டியன், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் என எல்லோரும் திருப்பணி செய்த ஆலயம் இது.

இங்கே பகவான் இடது கையில் சக்கரமும், வலது கையில் சங்கும் வைத்து நிற்பது வேறு எங்கும் காணாத நிலை. அதற்கு அர்த்தமும் உண்டு.

பகவான் வலது கையில் சக்கரம் வைத்திருப்பது இயல்பு, அதன் பொருள் எதிரிகளை அழிக்க அவர் தயாரான நிலையில் இருக்கின்றார் எனப் பொருள்.

ஆனால், இங்கே மகாபலியினை ஒடுக்கி மூவுலகுக்கும் தனக்கு ஈடு இல்லை எனக் காட்டிய நிலையில் நிற்பதால், எதிரிகள் இல்லாததால் சக்கரம் அங்கே அவசியமில்லை அதனை இடது கைக்கு மாற்றிக் கொள்கின்றார்.

சங்கு என்பது அபயம் தருவதன் அடையாளம் என்பதால் எல்லா உயிர்க்கும் தானே அடைக்கலம் என்பதை அங்கே சொல்கின்றார் பகவான்.

இந்த ஆலயம் எல்லா நலன்களையும் தரும் குறிப்பாக குழந்தை இல்லா குறையினைத் தீர்க்கும், நீங்கள் வழிபட்டு வந்தபின் உங்களை அடுத்த படிநிலைக்கு உயர்த்தும்.

ஆம். இப்போது இருக்கும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எழ தடைகள் இருந்தால் முன்னேற இடர்கள் இருந்தால் சரியான வழியில் அதனை முறித்து உங்களை உயர்த்தும் ஆலயம் இது.

வாழ்வின் எல்லா ஆபத்துக்களையும் கடந்து உங்களை வாழவைக்கும் ஆலயம் இது, உங்கள் கர்மாவினை உணர்ந்து அதற்கேற்ப உங்களை நல்வழியில் அழைத்துச் செல்லும் அற்புதமான தலம் இது.

இந்தக் கோவில் ஆழ்ந்த தத்துவத்தைச் சொல்கின்றது.

மகாபலி மேல் பகவான் கால் வைத்தார் என்பது என்றோ ஒரு தனி அசுரன் தலைமேல் பகவான் கால் வைத்தார் என்பது அல்ல‌

அவன் பூமியில் எல்லா உயிர்க்கும் ஒரே பிரதிநிதியாய் இருந்தான் எனும் வகையில் அது எல்லா உயிரும் பகவானின் காலை தங்கள் தலைமேல் தாங்கிய நிகழ்வு.

அந்தப் பகவான் அந்த மகாபலியின் அகங்காரம் மட்டும் அகற்றவில்லை, பூமியின் ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு எல்லை உண்டு, எல்லாமே பகவானின் காலுக்கு கீழ் என்பதை சொன்னார்.

மூவுலகை அவர் அளந்தார் என்பது மூவகை ஆசைளை ஒழித்து, மும்மலங்களை ஒழித்து, ஒவ்வொருவருக்கும் ஞானம், பக்தி, வைராக்கியம் எனும் முக்குணங்களை தந்து அந்த முக்குணங்களின் கலவையால் ஒவ்வொருவரும் பகவானை அடைவதை சொல்லும் தத்துவம் இது.

இங்கு பகவான் வாமன வடிவிலும் விஸ்வரூப வடிவிலும் தரிசனம் தருகின்றார், சாளகிராம கல்லில் கிருஷ்ணனாகவும் அருள் பாலிக்கின்றார்.

அங்கே பகவானை வழிபடும் போது நம்மிடம் இருக்கக் கூடாத குணங்களான அகம்பாவம், பேராசை, ஆணவம் என எல்லாமும் அகற்றி ஞானமும், பக்தியும், வைராக்கியமுமாகத் தருவார் அந்த உலகளந்த பெருமாள்.

இந்த ஆலயத்தில் வழிபட்டுத்தான் மிருகண்ட முனிவருக்கு மார்கண்டேயன் எனும் மிகக் கீர்த்தியான மகன் கிடைத்தான், அவ்வகையில் இங்கு வழிபட்டால் நல்ல புத்திர பாக்கியம் கிடைக்கும்.

பகவானும் துர்க்கையும் அக்கா தம்பியாக அருள்வழங்கும் இவ்வாலயம் குடும்பத்தில் பிணைப்பினைத் தரும்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடக் காரணமான இந்த ஆலயம் உங்களுக்கும் பெரும் பாக்கியமெல்லாம் தரும்.

அங்குச் சென்று வணங்குங்கள், தலையினைப் பணிந்து பகவான் உங்களைத் தன் பாதத்தால் தொட்டு ஆசீர்வதிக்கும்படி தலையால் வணங்குங்கள்.

பகவான் முன் குனிந்த தலை வேறேங்கும் குனியாதவாறு கம்பீரமாக நீங்கள் வாழ எல்லா வளமும் அருளும் பலமும் தெளிவும் ஞானமும் அந்த உலகளந்த பெருமான் உங்களுக்கு தருவார்.

நின்ற கோலத்தில் நிற்கும் பெருமாள் வடிவில் இந்த ஆலயத்தின் பெருமாள்தான் மிக பெரிதானவர், அவர் அளவு பெரிய பெருமாள் வேறு எந்த ஆலயத்திலுமில்லை, அப்படி சிறப்பு கொண்ட தலம் இது.

உலகையே அளந்த அந்த பரம்பொருள், உங்கள் உள்ளத்தை அளந்து அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை கண்டிப்பாக தருவார். இது சத்தியம்.

பஞ்ச கிருஷ்ண ஆலயங்கள் 02 : திருகண்ணபுரம்

நாகபட்டினம் மாவட்டம் திருபுகலூர் அருகே அமைந்துள்ளது இந்த திருகண்ணபுரம், இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 17ம் தலம் என கொண்டாடபடுகின்றது

“காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்

வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்

ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்

கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே!”

என ஆண்டாள் நாச்சியார் பாடிய தலம் இது, ஆண்டாளை அடுத்து நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களா சாசனம் செய்துள்ளனர். திருமங்கை ஆழ்வார் வாழ்வில் மிக முக்கியமான சம்பவங்கள் இங்குதான் நடந்தன‌

108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது

இந்த தலத்தின் வரலாறு உபரிசிரவஸ் எனும் மன்னன் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, அப்போது இந்த இடத்தில் முனிவர்கள் பலர் தவமிருந்தார்கள், நெடுங்கால தவத்தினால் அவர்கள் உடல் மெலிந்து உய்ரவளரும் நெல் போல காட்சியளித்தார்கள்

அவர்கள் காலத்தால் மூத்தவர்கள் , நெடுங்கால அவர்களின் தவம் அவர்களை நெற்பயிர்போல மெலிந்த தேகமாக காட்டியது, காலத்தை கடந்து தவம் செய்தவர்களை பற்றி அறிந்தவருமில்லை, அப்பக்கம் வந்த உபர்சிரவஸ் மன்னன் அவர்களை நெற்பயிர்கள் என எண்ணி அறுக்க உத்தரவிட்டான்

அந்த அளவு உயர்ந்து வளர்ந்த நெல்லாக விரிந்த சடையோடும் ஒடுங்கிய உடலோடும் அவர்கள் தவமியற்றினார்கள் மன்னனின் ஆட்கள் அவர்களை நெருங்கும் போது ஒரு சிறுவன் வந்தான்

சிறுவனுக்கும் மன்னனின் ஆட்களுக்கும் சண்டை மூண்டது, அந்த சிறுவன் எளிதில் வென்றான். ஆச்சரியமான மன்னன் உபரிசிரவஸ் தானே களத்தில் வந்து சிறுவனுடன் சண்டையிட்டான் அவனாலும் சிறுவனை வெல்லமுடியவில்லை

உபஸ்சிரவஸ் மன்னன் சாதாரமானவன் அல்ல, அவன் அப்பால ரங்கநாதர் ஆலயத்தில் பெருமாளுக்கே அப்பத்தை குடத்தில் கொடுத்து சாபம் நீங்கி வரம் வாங்கியவன், அந்த வரத்தின்படி அவன் அஷ்டாட்சர மந்திரத்தை சொன்னால் அது பலிக்கும்

அஷ்டாட்சர மந்திரம் என்பது பள்ளி கொண்ட திருகோலத்தில் பகவானை ”ஓம் நமோ நாராயணாய” என வணங்கும் மந்திரம், “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்பது 12 அட்சரம் இது நின்ற கோலத்தில் நின்று வரமருளும் பகவானை துதிக்கும் மந்திரம்

அப்பால ரங்கத்தில் எட்டு அட்சரத்தினை வரமாக பெற்ற அந்த மன்னன், அதை இந்த சிறுவனுக்கு எதிராக பிரயோகித்தான், ஆனால் அந்த மந்திரம் அவன் காலிலே சரணடைந்தது

அப்போதுதான் மன்னனுக்கு தெரிந்தது வந்த சிறுவன் சாதாரணம் அல்ல என்பது, உடனே அவனை பணிந்தான், சிறுவன் வடிவில் வந்த பெருமாள் நீலமேக பெருமாளாக அவனுக்கு நின்ற கோலத்தில் காட்சி தந்தார்

அந்த காட்சியின் வடிவாக இந்த ஆலயத்தை அந்த மன்னனே ஸ்தாபித்தான். அதிலிருந்து இந்த ஆலயத்தின் வரலாறு தொடங்குகின்றது

(ரிஷிகள் முற்றிய தவத்தில் நெற்பயிர் வடிவத்தில் தவமியற்றினர் அவர்களை மன்னன் நெல்லாக கருதி அறுக்க சென்றான் என்றும், தவமுனிவர்களை தானே அட்சாட்சரம் பெற்றவன் எனும் அகந்தையில் அவன் வம்பு செய்ததாகவும் அங்கே பகவான் வந்து தன்னை காட்டி அவன் கர்வம் அடைக்கியதாகவும் இரு செய்திகள் உண்டு

எது எப்படியாயினும் இங்கு உபரிசிரவஸ் மன்னனுக்கு பகவான் காட்சியளித்து அவன் அகந்தை நீக்கி இங்கு ஆலயம் கொண்டது வரலாறு)

அப்படி உருவான இந்த ஆலயம் யுகங்களை கடந்து வந்தது, இந்த பெருமாள் சவுரிராஜ பெருமாளாக மாறியது பக்தன் ஒருவனுக்கு பகவான் அருள் செய்து உயிர்காத்த சம்பவத்தில் இருந்து

அப்போது அங்கு ரங்கபட்டர் என்றொரு வாலிபன் அர்ச்சகராக இருந்தான், பெருமாளின் அதிசிறந்த பக்தன் அவன், அவரை தவிர பெருமாளின் வழிபாடு தவிர அவனுக்கு ஏதும் தெரியாது , சுத்த பிரம்மசரியமும் பகவான் மேல் அபார பக்தியுமாக வாழ்ந்த அவன் அழகான தேஜசுடன் ஜொலித்தான், பல பெண்களுக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் அவன் எங்கும் விழவில்லை

அவனின் அபார பக்தியினை சோதிக்க விரும்பிய பகவான சரியான காலத்தை எதிர்நோக்கியிருந்தார்

அந்த ஆலயத்தில் ஒரு தாசி இருந்தாள், அவளும் நல்ல அழகி, ஒருமுறை கூட்டத்தில் முன்னால் இருந்த அவளை கண்டதும் தன்னை அறியமால் மனதால் அவளிடம் வீழ்ந்தான் ரங்கபட்டர்

அவளுக்கும் அவனை மிகவும் பிடித்து போனது

அவள் கலைகளில் தேர்ந்தவள் என்பதால் மதுகுடித்த வண்டாக அவள் வீட்டிலே வீழ்ந்து கிடந்தான் ரங்கபட்டர், ஏதோ பெயருக்கு பூஜைகள் செய்தான், சம்பிரதாயங்களை செய்தான் மற்றபடி அவளே கதி என கிடந்தான்

ஆலயத்தின் எல்லா விஷயங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்காணிப்பவர்கள் மன்னர்கள், அப்படி அக்கால சோழமன்னன் இந்த ஆலயத்துக்கு பெரும் நிலமும் வருமானமும் கிடைக்க வழி செய்திருந்தான்

அவன் எல்லா ஆலயம் போலவே இந்த ஆலயத்தை பற்றி அவன் விசாரிக்க பல உளவாளிகளை நியமித்திருந்தான்

அவனுக்கு வந்த செய்திகள் எதுவும் சரியாக இல்லை, ரங்கபட்டர் முன்பு போல் அல்ல அவர் ஆலய பணிகளை பெரிதாக செய்வதில்லை சதா காலமும் அந்த தாசிவீட்டிலே முடங்கி கிடக்கின்றார், கோவில் சொத்துக்கள் வருமானத்தை அவளுக்கே செலவழித்து அவள் காலடியில் கிடக்கின்றார் என செய்திகள் வந்தன‌

மன்னன் இதுபற்றி விசாரிக்க தானே கிலம்பினான் இது ரங்கபட்டருக்கு தெரியாது

தனக்கு எல்லா வகை மகிழ்வும் தருபவளுக்காக எதையும் செய்யும் மயக்கத்தில் இருந்த ரங்க‌பட்டர் அன்று பகவானுக்கு சூடிய மாலையினை அவள் தலையிலும் சூடி அழகு பார்த்தான்

அப்போது மன்னன் ஊரின் முகப்பில் வந்திருப்பதாக செய்தி வந்தது, அப்படி மன்னன் வரும்போது பகவானுக்கு சூட்டிய மாலையுடன் அவனை வரவேற்றல் மரபு

கோவிலை பூட்டிய நேரமது, வேறு மாலையும் அங்கு சூட்டபடவில்லை , இருந்த ஒரே மாலையும் இவள் தலைக்கு வைத்தாயிற்று, என்ன செய்யலாம் என யோசித்தவன் அவசரத்தில் அவள் தலையில் இருந்த மாலையினை எடுத்து மன்னனை வரவேற்க விரைந்தான்

மன்னன் தான் வந்த நோக்கத்தை மனதில் வைத்துகொண்டு இவனை நோக்கி புன்னகைத்தான் , அவசரமாக தான் கொண்டுவந்த மாலையினை மன்னனுக்கு கொடுத்தான் ரங்கபட்டர்

மன்னன் அதை வாங்கி பார்த்தான் அதில் நீண்ட முடி இருந்தது, அது அந்த தாசியின் முடி

ஒரு மன்னன் எதையும் ஆராயாமல் தீர்ப்பிட கூடாது என்பதால் பொங்கிய கோபத்தை அடக்கி “பகவானுக்கு சூட்டிய மாலையில் எப்படி முடிவந்தது?” என கேட்டான்

அப்போதைக்கு தப்பிக்க நினைத்த ரங்கபட்டன் “இங்கு பெருமாளுக்கு முடி உண்டு” என சொல்லிவிட்டான், மன்னன் அத்தோடு சென்றுவிடுவான் என்பது அவன் எண்ணம்

ஆனால் முழுக்க இவனை பற்றி தகவல் தெரிந்து வந்தவன் அல்லவா மன்னன்?, அவன் சொன்னான் “நாளை நான் சன்னதிக்கு வருவேன், பகவானுக்கு முடி உண்டா இல்லையா என்பதை நேரிலே காண்பேன், பட்டர் சொன்னது பொய் என்றால் அவன் தலை இருக்காது” என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்

தன் போக்கில் சென்ற சிங்கத்தை சீண்டிபார்த்த ஆபத்தில் இருந்தான் பட்டர், அவன் அன்று இரவு முழுக்க உறங்கவில்லை, பகவான் சன்னதியிலே பழியாய் கிடந்து உருகினான்

அந்த நாள் ஒரு அமாவாசை நாளாக இருந்தது

“பகவானே, சிறுவயதில் இருந்தே உன்னை தவிர எனக்கு யாரை தெரியும், ஏதோ கொஞ்சகாலம் புத்தி தடுமாறி அவளிடம் வீழ்ந்து கிடந்தேன், அதற்காக அவளால் எனக்கு தண்டனையா? என் உயிரே போய்விடுமா?

என்னை மன்னிக்க மாட்டாயா? என் உயிரை காக்க மாட்டாயா?” என கதறினான்

அவனை பொறுத்தவரை மறுநாள் மன்னன் வருவான் அங்கே பகவானுக்கு முடி இருக்காது அதனால் அவன் மரணம் உறுதி என கலங்கினான்

நெடுநேரம் அழுதவன் கடைசியில் “எவள் கூந்தலில் நான் சிக்கி உன்னை மறந்தேனோ அந்த சாபத்துக்காய் அவள் கூந்தலினாலே எனக்கு மரணம் வந்தால் வரட்டும், எல்லாம் என் பாவம்” என சொல்லி அழுது அப்படியே மயங்கி கிடந்தான்

மறுநாள் காலை கண்விழித்தவன் இன்றோடு தொலைந்தோம் என நினைந்து கொண்டான், அவன் இனி தப்பி ஓடவும் முடியாது

அதற்குள் மன்னன் வந்துவிட்டான், திகைத்த பட்டரை நோக்கி தயாராகி வந்து சன்னதியில் பகவானை காட்ட சொன்னான்

வேறுவழியின்றி ஆச்சாரபடி தயாராகி நடுங்கும் கரத்துடன் சன்னதியினை திறந்து பகவானை காட்டிய பட்டர் அந்த பெருமாள் தலையில் முடி இருப்பதை கண்டு நம்பமுடியா ஆச்சரியம் அடைந்தான்

“இதோ பாருங்கள்” என சொல்லி மன்னனுக்கு முடிகொண்ட பெருமாளை காட்டிவிட்டு வீழ்ந்து வணங்கினான் பட்டர்

ஆனால் மன்னன் விடுவானா? ஒரு மன்னன் எல்லாவற்றையும் சந்தேகிக்க வேண்டும் அல்லவா?

“எங்கே ஒரு முடியினை பிடுஙகி காட்டும், யாரேனும் ஒட்டவைத்திருந்தால் அது பெரும் தண்டனைகுரியது” என சீறினான்

பட்டருக்கு இம்முறை பெரிதும் வியர்த்தது, கையும் காலும் நடுங்கிற்று

காரணம் ஒரு முடி மாலையில் இருந்ததற்கே இவ்வளவு சோதனை, இப்போது பகவான் தலையில் இருப்பது போலிமுடி என்றால் தண்டனை இன்னும் கொடூரம் என்பதால் திகைத்தான்

மன்னன் உறுமினான், பட்டர் பகவானை வேண்டியபடியே ஒரு முடியினை இழுத்தார், பகவான் தலையில் இருந்து ரத்தம் கொட்டிற்று

மன்னன் அப்படியே அதிர்ந்தான், தான் சந்தேகபட்டது தவறு என சொல்லி வீழ்ந்து வணங்கினான் அவனோடு அவன் சேனையும் ஆட்களும் வணங்கினார்கள்

பட்டர் சொன்னது சரி என்றும், தனக்கு வந்த தகவல்களே பொய் என்றும் உரக்க சொன்ன மன்னன், பெருமாளே சாட்சி சொன்னதால் இவர் இனி “சவுரி ராஜ பெருமாள்” என அறிவிக்க செய்தான்

தன் பக்தனை காக்க, அதுவும் வழி தவறி சென்ற பக்தனை இப்படி தன்வழிக்கு இழுத்து பகவான் பெரும் அற்புதம் செய்தார், அதன் பின் அந்த ரங்கபட்டர் பகவான் காலடியிலே பெரும்பணி செய்து வைகுண்டம் ஏகினார்

இப்படி பக்தன் உயிர்காக்க தன் தலையில் சவுரி எனும் முடியினை தாங்கியவர் “சவுரி ராஜ பெருமாள்” என்றானார்

அந்த முடி இப்போதும் பகவான் தலையில் உண்டு

இந்த தலம் கருடனோடும் சம்பந்தபட்டது, தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். தேவர்களை வென்று அமிர்தம் பெற்ற கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து அருகில் இருந்த கடலில் வீழ்ந்தார். பின் தவறை உணர்ந்து வருந்திய கருடனை பகவான் தன் வாகனமாக ஏற்றும் கொண்டார்

இன்றும் மாசி பவுர்ணமியில் அருகிருக்கும் கடற்கரையில் பகவான் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை “மாப்பிள்ளை!’ என்று கோஷமிட்டு வரவேற்கும் காட்சி உண்டு

வீகடாஷன் எனும் அசுரனை வதைக்க பகவான் சக்கரம் எறிந்த தலம் இது, அதனாலே அவரின் கரம் இப்போதும் சக்கரம் வீசிய நிலையில் காணப்படும்

ராமாயணத்திலும் இந்த தலம் உண்டு, ரமான் பிரிவால் வாடிய விபீஷ்ணன் இங்குதான் ராமபிரானை பெருமாளாக கண்டு வணங்கினான், ராமனே விஷ்ணு அவதாரம் என தெளிந்த அவன் இருவர் தரிசனமும் பெற்ற இடம் இது

இதனால் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சந்நிதி உள்ளது

இந்த ஆலயத்தின் மாபெரும் சாட்சி முனையதரையன், இவர் அப்பக்கம் இருந்த அரசனின் பிரதிநிதி இந்த ஆலயம் மேல் பெரும் பக்தி கொண்டவர்

இவர் அரசனுக்கு செல்லவேண்டிய வரிபணமெல்லாம் பகவானுக்கு இந்த சவுரிராஜ பெருமாளுக்கு செலவுசெய்தார், ஆனால் அவர் பணம் கையாடல் செய்தார் என மன்னன் இவரை சிறையில் இட்டான்

முனையதரையன் பகவானை நோக்கி வேண்ட பகவானும் மன்னன் கனவில் சென்று சாட்சி சொல்லி முனையத்தரையன் விடுவிக்கபட்டார்

அப்படி இரவில் வீடு வந்தவர்க்கு மனைவி பொங்கல் செய்து கொடுத்தார், அப்போதும் பகவானுக்கு என்ன படைத்தார்களோ என கவலையுற்ற அவர் கொஞ்சம் பொங்கலை பகவானுக்கு என எடுத்து வைத்து மீதியினை உண்டார்

மறுநாள் சன்னதியினை திறக்கும் போது பகவானின் வாயில் பொங்கல் இருந்தது, அது எப்படி என விசாரிக்க அங்கு வந்த முனைத்ரையர் உண்மையினை சொல்லி வீழ்ந்தார்

மன்னரிடம் சாட்சி சொன்ன பகவான், இங்கே பொங்கல் உண்டு தன் பக்தனை காத்து நின்றார்

அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை “முனையதரையன் பொங்கல்’ என்றே சொல்கின்றனர்.

இது புராணத்தில் ஆலய வரலாற்றில் மட்டுமல்ல, சோழநாட்டு வரலாற்றிலும் உண்டு, சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது.

“புனையும் குழலாள் பரிந்தளித்த

பொங்கல் அமுதும் பொறிக்கறியும்

அனைய சவுரிராசருக்கே

ஆம் என்று அழுத்தும் ஆதரவின்

முனையதரையன் பொங்கல் என்று

முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி

வளையும் பெருமை எப்போதும்

வழங்கும் சோழ மண்டலமே”

இன்றும் திருப்பதியில் லட்டு, காஞ்சிபுரத்தில் இட்லி, அப்பால ரங்கத்தில் அப்பம் என்பது போல இங்கு பொங்கல்தான் பிரசித்தியான பிரசாதம், அதுவும் முனையத்தரன் பொங்கல் என அந்த பக்தன் பெயராலே வழங்கபடுகின்றது

இந்த ஆலயம் காளமேக புலவருடனும் தொடர்புடையது, அம்பாள் உபாசகரான புலவர் தன்னை பாடவில்லை என நினைத்த பெருமான் அவரை ஆட்கொண்டு பாடவைத்தார்

பெருமாள் பக்தி இல்லாத புலவர் ஒருநாள் மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி, பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தது

“கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்

உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே

உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்

என் பிறப்போ எண்ணத் தொலையாது”

என்பது அப்பாடல், காளமேக புலவர் பெருமாளுக்கு பாடிய ஒரே பாடல் அதுவும் இந்த தலத்தின் பாடலே

இங்கு உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். இது மாலிக்காபூர் காலத்தில் அந்த ஆப்கானிய கும்பல் செய்த சேதாரம் என்றும், இன்னொரு பக்கம் அந்நியரை அழிக்க வேண்டி அரையர்களே கையில் இருந்த சிங்கியினை வீசி எறிந்த வடு என்றும் இரு கோணம் உண்டு

இந்த ஆலயமும் அந்நிய படையெடுப்பில் பெரிதும் பாதிக்கபட்டது, திருவரங்கம் போல பாதிக்கபட்டது

7 அடுக்குகளைக் கொண்டது சவுரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவறை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றா

இங்கு ஷேத்திரம் காடு, நதி, கடல் (சற்று தொலைவில்), நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது.

இங்கு பகவான் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.

( வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது)

உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம்.

இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்கின்றன‌

இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்யபடும். தோஷத்தால் பாதிக்கப் பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது.

இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பதுஅபூர்வம். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை.

திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்” எனவும் அழைக்கபடும்

பெரியாழ்வார் இந்த ஆலய கண்ணனை நினைந்து பாடிய பாடலெல்லாம் பிரசித்தி, இன்னும் திருமங்கை ஆழ்வார் 100 பாடல்களை பாடியுள்ளார்

இந்த ஆலயம் கேட்ட வரத்தை தரும், எல்லா விதமான காவலையும் தரும்

இதன் தலவரலாறே தவம் செய்த ரிஷிகளை பகவான் காக்க வந்த சம்பவத்தை சொல்கின்றது, அப்படியே தன்னை நம்பிய ரங்கபட்டரை, முனைத்தரையனை பகவான் அற்புதமாக காத்த வரலாற்றை சொல்கின்றது

கருடனை அவர் வாகனமாக பெற்றதும், விபீஷ்னனுக்கு அருள் பாலித்ததும் இங்குதான்

ஆம், இந்த பகவான் இங்கு தன்னை யார் அண்டினாலும், யார் தானே அடைக்கலம் என முழுக்க பணிந்தாலும் ஓடிவந்து காப்பார்

மனம் உருக முழு நம்பிக்கையோடு முழ் சரணகதியோடு அவரை நம்பி வணங்கினால் உங்கள் துயரமெல்லாம் தீரும்

எந்த பெரும் ஆபத்தில் நீங்கள் இருந்தாலும், அது செய்த குற்றமோ செய்யாத குற்றமோ எந்த பழியோ அவமானமோ சாவு பயமோ எதுவாக இருந்தாலும் இந்த பகவானை அண்டி நில்லுக்கள்

நிச்சயம் எல்லா வகையான் பெரும் ஆபத்துக்கள், நடக்கவே நடகாது என உங்களை கைவிட்ட காட்சிகள், சூரியன் மேற்கில் உதித்தாலும் நடக்காத அற்புதமெல்லாம் நீங்கள் இந்த கண்ணன் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையின்பால் இங்கு நிச்சயம் நடக்கும்

இந்த ஆலயத்தில் வழிபடும் போது இந்த பக்தர்கள்,இங்கு நடந்த எல்லா அதிசயங்களையும் நினைந்து அந்த பக்தர்களில் ஆபத்தில் நின்ற பக்தரளில் ஒருவராக நில்லுங்கள்

“ஓம் நமோ நாராயணா” எனும் அஷ்டாட்சர மந்திரத்தை சொல்லி வணங்குங்கள், அந்த ஒரே ஒரு மந்திரத்தை ஓதி அந்த கண்ணனை முழு சிந்தையோடு பாதம் பற்றி வணங்குங்கள்

அந்த மகாபக்தன் முத்தனையன் தந்த பொங்கலை உண்டு சாட்சி சொன்ன‌ கண்ணன், அந்த ரங்கபட்டருக்கு சாட்சி சொன்ன கண்ணன், கருடனை தன்னோடு அணைத்த கண்ணன் , விபீஷணனுக்கு தான் யாரென சொன்ன கண்ணன், இந்திரனுக்கு சாபம் தீர்த்த கண்ணன், காளமேக புலவரையும் அணைத்து பாடவைத்த கண்ணன் உங்களுக்கும் பெரும் அற்புதம் செய்வார்

இந்த கண்ணனுக்குத்தான் பெரியாழ்வார் பாடினார்

“இல்லையலல் எனக்கேல் இனியென்குறை

அல்லி மாத ரமரும் திரு மார்பினன்

கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம்

சொல்ல நாளும் துயர் பாடு சாரவே”

அதையே மூதறிஞர் ராஜாஜி நமக்கு சற்று மாற்றிபாடி தந்தார்

“குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா”

ஆம், திருகண்ணபுரம் சென்று அந்த பகவானை பணிவோர்க்கு எக்காலமும் ஒரு குறையுமில்லை அது சத்தியம்

பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் 03 : திருக்கண்ணங்குடி.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே அமைந்திருக்கும் இந்தத் தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் முக்கியமானது, 108 திவ்ய தேசங்களில் இது பதினெட்டாம் ஸ்தலம்

“வங்கமா முன்னீர் வரி நிறப் பெரிய

வாளரவி னனை மேவிச்

சங்கமா ரங்கைத் தடமலருந்திச்

சாம மாமேனி என் தலைவன்

அங்கமாறைந்து வேள்வி நால் வேத

மருங்கலை பயின்றெரி மூன்றும்

செங்கையால் வளர்க்கும் துளக்கமில்

மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே”

எனத் திருமங்கை ஆழ்வார் பாடிய தலம் இது, மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த இந்த ஆலயம் ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் ஆகிய ஐந்தையும் உடையது.

இந்த ஆலயத்தின் வரலாறு வசிஷ்ட முனிவரிடமிருந்து தொடங்குகின்றது, காலத்தால் மூத்த அம்முனிவர் யுகம் தாண்டி வாழ்ந்தவர், அவர் கண்ணன் மேலும் தீராப் பக்தி கொண்டிருந்தார்.

தன் ஆசிரமத்தில் வெண்ணையால் ஒரு கண்ணன் சிலை செய்து மனதார கண்ணனை வழிபாட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் சிறுகுழந்தை வடிவில் வந்த கண்ணன், அந்த வெண்ணெய் சிலையினைப் பிய்த்து உண்ணத் தொடங்கினான், அதைக் கண்ட வசிஷ்டர் “என்ன செய்கின்றாய்” எனக் கேட்டபடி ஓடிவந்தார்.

பாலகன் சிரித்தான், இன்னும் கொஞ்சம் என்பது போல் வெண்ணெய் எடுத்து உண்டான், அவரைக்கண்டு அஞ்சவுமில்லை, பதறவுமில்லை.

வசிஷ்டர் அந்தப் பாலகன் அருகில் வந்து கைநீட்டும் போது லாவகமாகப் போக்கு காட்டினான், பின் தள்ளிச் சென்று சிரித்தான், அவர் பிடிக்க வந்தால் ஓடினான்.

இந்த விளையாட்டு குடிசைக்குள் இருந்து வெளியே வந்தது, அவன் மரத்தின் பின்னால் ஒளிந்தான், வசிஷ்டர் தேடினார், அவர் கண்முன் வந்து சிரித்தபடி அவன் ஓடினான்.

இந்த ஓட்டம் முனிவர்கள் பலர் தவம் செய்யும் இடம் வரை தொடர்ந்தது, முனிவர்கள் தங்கள் தவத்திலே வருவது கண்ணன் என உணர்ந்தார்கள், தங்கள் தவத்தின் பலனாய் கண்ணன் தங்களிடம் வருவதை அறிந்தார்கள்.

உணர்ந்தவர்கள் பாலகன் தங்களை நோக்கி வரும்போதே கைகளை உயர்த்தி “கண்ணா” என்றபடி வீழ்ந்து வணங்கினார்கள், வசிஷ்டரும் அவர்களோடு சேர்ந்து வணங்கினார்.

தன் பக்தர்களுக்கு என்ன வரம் வேண்டும் என அவர் கேட்க, வசிஷ்டர் முந்திக் கொண்டு இந்த இடத்திலே நீ குடிகொண்டு எல்லா மக்களுக்கும் அருள் பாலிக்க வேண்டும், இந்த இடம் உன்னுடைய அருள்தலமாக மாறவேண்டும் என கேட்டுவிட அந்நொடி முதல் இந்த ஆலயம் உருவானது.

ஆம். தான் இந்தத் தலத்தில் குடியேற வேண்டும் என பகவானே வசிஷ்டர் வழியாக நாடகமாடி வந்து அமர்ந்த தலம் இது.

இந்தத் தலத்தின் மகா முக்கிய சாட்சி திருமங்கையாழ்வார், அவர் நாகப்பட்டினம் புத்த விகாரையின் தங்கத்தை கொண்டுவரும் போது இந்த ஆலயம் பக்கம்தான் ஒரு நிலத்தில் பதுக்கி வைத்தார்.

இரவில் அப்படி பதுக்கிவிட்டு அருகிருந்த புளியமரத்திடம் “மரமே, நீதான் பகவானுக்குரிய தங்கத்தை காக்க வேண்டும், உறங்கக்கூடாது” எனச் சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் உறங்கினார்.

அதிகாலையில் நிலத்துகுரியவன் உழுவதற்கு வரும் போது அம்மரம் தன் கிளைகளை வேகமாக அசைத்து ஆடி அவரை எழுப்பிற்று, இலைகளும் புளியும் தன் மேல் விழ தூக்கம் கலைந்த ஆழ்வார் “உறங்கா புளி” என அதற்கு பெயரிட்டு நிலத்துக்காரன் உழ தொடங்கும் முன் ஓடிச் சென்றார்.

காரணம், உழுதால் அவர் புதைத்த தங்கம் வெளிபட்டுவிடும்.

இதனால் அதை தடுக்க நிலம் என்னுடையது என்றார். எங்கிருந்தோ வந்தவன் நிலம் தன்னுடையது எனச் சொல்வதை கேட்டு குடியானவன் அதிர்ந்தான். ஆழ்வார் எல்லாப் போர்கலையும் கற்ற அரசர் என்பதால் அவரை எதிர்த்துவிரட்ட முடியாதவன் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டினான்.

ஆழ்வாரோ நிலம் தன்னுடையது என்றார், அப்படியானால் ஆவணத்தைக் காட்டு என்றார்கள் மன்றத்தார், ஆவணம் திருவரங்கத்தில் உண்டு சில நாட்களில் தருகின்றேன் என்றார் ஊர்சபை ஏற்றுக்கொண்டது.

பின் யாருக்கும் தெரியாமல் அந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ஆழ்வார், அந்த சபையில் அந்த வழக்கு தீரவே இல்லை, அவர் திருவரங்கத்தில் இருந்து ஆவணம் கொண்டு வருவார் என காத்தே இருந்தார்கள் வழக்கு தீராமலே இருந்தது.

இதனால் தீரா வழக்கு என்றாயிற்று.

ஆழ்வார் அங்கே தங்கியிருந்தபோது தாகத்தால் கிணற்றடியில் பெண்களிடம் நீர் கேட்டார், அவர்கள் இவர் தங்கள் ஊரில் வம்பு செய்தவர் எனச் சொல்லி மறுத்தார்கள், இந்த கிணறு இனி ஊறாது எனச் சபித்தார். அக்கிணறு பாழும் கிணறாயிற்று.

பின் மிகுந்த பசியால் அவர் காய்ந்து, மகிழ மரத்தின் அடியில் தவித்தபோது பகவானே வந்து அவருக்கு உணவளித்தார். வந்தவர் மறைந்தபோது அவர் பகவான் என உணர்ந்த ஆழ்வார் என்னோடு இந்த மரமும் பகவானை தரிசித்தது எனச் சொல்லி அதனை “காயா மகிழமரம்” என வாழ்த்தினார். அதாவது அது ‘காய்ந்து போகாது’ எனப் பொருள்.

இந்த நான்கும் அங்கும் இன்றும் பிரசித்தி.

“உறங்கா புளி”. “தீரா வழக்கு” “ஊறா கிணறு”, “காயா மகிழ்” என்பது இந்த தலத்தின் பழமொழி

இந்தப் புளியமரம் இருந்த இடம் மேடாக இப்போதும் உண்டு, அந்த ஊரில் எந்த வழக்கு பேசினாலும் தீர்வே வராது, அந்தக் கிணறு இப்போதும் நீரில்லா கிணறாக கிடக்கின்றது, அந்த மகிழமரத்தின் எச்சம் அடையாளமிட்டு காக்கப்படுகின்றது.

இப்படியான சிறப்புக்களை கொண்ட ஆலயம் அது, அதனாலே திருமங்கை ஆழ்வார் அந்த ஆலயத்தை வெகுவாக புகழ்ந்து பாடினார்.

இந்த ஆலயத்தில்தான் எந்த விஷ்ணு கோவிலிலும் இல்லாத ஒரு விசித்திரம் அல்லது அற்புதம் இந்தக் கோவிலில் நிகழும். அது வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளுக்கு திருநீறு இடுவது.

இந்த நிகழ்வுக்குப் பின்னால் உருக்கமான ஒரு பக்தி வரலாறு உண்டு.

உறையூர்சோழன் எனும் மன்னன் அதி தீவிர சைவன், வைஷ்ணவம் அவனுக்கு உவப்பானது அல்ல, அப்படியான மன்னன் ஒரு வைகுண்ட ஏகாதசி அன்று இந்த திருக்கணங்குடிக்கு வந்தான், அன்று சுவாமி ஊர்வலம் வந்தது.

மன்னன் வந்தது மக்களுக்குத் தெரியாது, அவனுக்குப் பிடிக்காததை செய்தால் தங்களை தொலைத்துவிடுவானே என அஞ்சியவர்கள் பகவானிடமே சரணடைந்தார்கள்.

(உறையூர்சோழனே கூரத்தாழ்வார் கண்களைத் தோண்டியவன்)

மன்னன் சுவாமி வரும் வீதியில் எதிரே வந்தான், ஆச்சாரப்படி சுவாமியினை திருப்பிச் செல்லுதல் கூடாது, என்ன நடந்தாலும் பகவானே பொறுப்பு என அவர்களும் முன் வந்தார்கள்.

மன்னன் சுவாமியினைக் கண்டான், திடீரென வணங்கினான்.

மக்கள் எல்லோரும் அரண்டே போனார்கள், இந்த மன்னன் தீவிர சைவன் அல்லவா? வைஷ்ணவரை கண்டாலே ஆகாதவன் அல்லவா? இராமானுஜரைக் கூட தீவிரமாகத் தேடும் இவன் பெருமாளை வணங்குவது எப்படி எனக் குழம்பினார்கள்.

பின் திரும்பிப் பார்த்தால் பெருமாள் நெற்றியில் விபூதி இருந்தது, மூன்று பட்டையாக இருந்தது.

மன்னனுக்கு அரியும் சிவனும் ஒன்று என அந்தக் கண்ணனே விளக்கிய தலம் இது, மன்னன் அதுகண்டு பணிந்து சென்றான், அந்த மக்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை.

அம்மக்களும் சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்ந்தார்கள்.

இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் வைகுண்ட ஏகாதசி அன்று முக்கால் நாழிகை பகவானுக்கு விபூதி தீட்டப்படும், அவர் அக்கோலத்திலே காட்சியளிப்பார் இது வேறு எங்கும் காணமுடியா அதிசயம்.

பிரம்மதேவர், கௌதமர், மன்னர் உபரிசரவசு, பிருகு முனிவர், மாடரர் எனப் பலர் வந்து பணிந்து வரம்பெற்ற தலம் இது.

திருக்கண்ணங்குடி கோயில் பரந்த வளாகத்தில் ஐந்து நிலை இராஜ கோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கொண்டு அமைந்துள்ளது.

இக்கோயிலில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் லோகநாத பெருமாள், சியாமளமேனி பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

சியாமளை என்றால் கரும்பச்சை எனப் பொருள், அவர் அந்த நிறத்தில் காட்சியளிப்பதால் சியாமளமேனி பெருமாள் என்றானார்.

உற்சவர் தாமோதர பெருமாள் இடது கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு குழந்தைக் கண்ணனாக அருள்பாலிக்கிறார்.

தாயார் மூலவர் மற்றும் உற்சவர் முகமும் ஒரே போல் இருப்பது தனிச்சிறப்பு, இதனை வேறேங்கும் காண முடியாது, எல்லாமும் ஒரே சக்தியே எனச் சொல்லும் தத்துவம் இது.

வெண்ணெய் உண்ட கிருஷ்ணராகப் பெருமாள் காட்சி தரும் தலம் இந்த ஆலயம்.

எல்லாத் தலங்களிலும் கைகளை குவித்து வணங்கும் நிலையில் அருள்பாலிக்கும் கருடாழ்வார், இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு வைகுண்டத்தில் இருப்பது போல் அருள்பாலிக்கிறார்.

சிரவண புஷ்கரிணி என்ற இத்தல தீர்த்தத்தின் பெயரைக் கேட்டாலே அனைத்துப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.

இந்தத் தலம் கண்ணன் எக்காலமும் குடியிருக்கும் தலம், அதனை வசிஷ்டர், திருமங்கையாழ்வார் எனச் சில பக்தர்கள் மூலம் பகவான் அடையாளம் காட்டினார்.

அந்தக் கண்ணனை மனதார நம்பி பணிவோர்க்கு எல்லா வரமும் அருளும் காவலும் கிடைக்கும்.

திருநீறு இடும் பெருமாளைக் கொண்ட இந்தத் தலம் சைவ வைஷ்ணவ பேதங்களை முழுக்க உடைத்து அரியும் சிவனும ஒன்று என ஆழ்வார்கள் பாடியதை அப்படியே மெய்பித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த ஆலயம் எல்லா வரங்களையும் தரும், குறைகளையும் தீர்க்கும் என்றாலும் பிள்ளை இல்லா குறைக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலம்.

பிள்ளை வரம் வேண்டி பக்தர்கள் நிற்பதும், அந்தக் குழந்தைச் செல்வம் பெற்றபின் அவர்கள் பகவானுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் இங்கு சாதாரண நிகழ்வுகள்.

பிள்ளை வரம் தரும் அற்புத ஆலயம் இது.

மார்கழி இங்கு விசேஷம் அதுவும் வைகுண்ட ஏகாதசியன்று இந்த ஆலயத்தில் பெரும் விழா கொண்டாடப்படும், அன்று வழிபட்டால் பலன் பெரிதாக உண்டு.

இந்த ஆலயம் அற்புதமானத் தத்துவத்தை சொல்கின்றது.

வெண்ணெய் என்பது தயிரைக் கடைந்தால் வரும் நிலை, அப்படி தன்னில் இறைவனைத் தேடி தன்னைக் கடைந்து அந்தப் பக்தியில் பகவானைப் பணியவேண்டும் எனப் போதிக்கும் ஆலயம் இது.

தன்னை பக்தியால் கடைந்து, மனதை சலித்து சலித்து கடைந்து வரும் மேலான நிலைதான் உன்னத பக்தி, அந்த முழு பக்தியுடன் பகவானை தரிக்க வேண்டும், எல்லா வகை நிலையினையும் கடந்த உணர்வுகளைக் கடந்த நிலையில் அவரிடம் சரணடைந்து நிற்க வேண்டும்.

மனம் வெண்ணெய் போல் உருகி நிற்க வேண்டும் என்பது தாத்பரியம்.

அப்படியான முழு பக்தியோடு, குழந்தையினை தேடும் தாயின் மனதோடு அந்தப் பரிதவிப்போடு அந்தக் கண்ணன் முன் நின்றால் அந்தக் கண்ணன் புன்னகைத்தபடி உங்களோடு ஒட்டிக் கொண்டு ஓராயிரம் வரம் தருவான்.

அவன் குடியிருக்கும் திருக்கண்ணங்குடி ஆலயம் ஆயிரம் ஆயிரம் வரங்களும் குடிகொண்ட ஆலயம், அந்தக் கண்ணனுக்கு பிரியமான வெண்ணெயினைக் கொடுத்து, மனதையே வெண்ணையாக உருக்கிக் கொடுத்து மன்றாடுங்கள், எல்லா நலனையும் அருளையும் அந்த மாயகண்ணன் சிரித்தபடியே உங்களுக்குத் தருவான். இது சத்தியம்.

(இந்த திருக்கணங்குடி ஆலயம் பஞ்ச நாராயண தலங்களிலும் ஒன்று, இந்த ஆலயம் உள்பட இன்னும் நான்கு ஆலயங்கள் சேர்ந்து பஞ்ச நாராயண தலம் என அறியபடும்

வைகுண்ட ஏகாதசி அன்று இந்த பஞ்சநாராயண பெருமாள் ஆலயங்களை தரிசிப்பது பெரும் பாக்கியம், பெரும் பலனை பெற்றுதரும் புண்ணியம். அந்த ஆலயங்களை அடுத்து காணலாம்

வைகுண்ட ஏகாதசிக்கு அந்த ஐந்து ஆலயங்களும் செல்லமுடிந்தவர்கள் செல்லட்டும், பகவானின் பெரும் அருள் அவர்களுக்கு பூரணமாக கிடைக்கட்டும்)

பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் 04 : திருக்கண்ணமங்கை பெருமாள் ஆலயம்

திருவாரூர் அருகே அமைந்திருக்கும் இந்த திருக்கணமங்கை பெருமாள் ஆலயம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் முக்கியமானது, 108 திவ்ய தேசங்களில் 16ம் தலமாகும்

“பண்ணினைப் பண்ணில் நின்றதுஓர் பான்மையைப் பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற

விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை

மண்ணினை மலையை அலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள்

கண்ணினைக் கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே”

என திருமங்கை ஆழ்வார் பாடிய அற்புத தலம் அது

இந்த தலத்தின் மூலம் யுகங்களை தாண்டி நிற்பது

பத்ம புராணம் 5-வது காண்டத்தில் 81 முதல் 87 வரையிலான 7 அத்தியாயங்களில் இத்தலம் பற்றி கூறப்படுகின்றது.

கந்தபுராணம் இந்த தலத்தினை பற்றி சொல்கின்றது, பிரமாண்ட புராணத்திலும் இந்த தலம் பற்றி சொல்லபட்டிருக்கின்றது

அதாவது தேவர்கள் சக்திபெறுவதற்காக பாற்கடலை கடைந்தபோது காமதேனு முதல் பல வந்தன, அப்படியே அன்னை மகாலட்சுமியும் வந்தாள், அவளை எல்லோரும் வரவேற்று காத்திருக்க அவளோ தன்னை கொஞ்சமும் கவனிக்காத பெருமாளை நோக்கி சென்றாள்

அவர் அப்போதும் முகத்தை திருப்பி கொண்டார்

எல்லோரும் தனக்காய் காத்திருக்க தான் தேடிவந்த திருமாலோ தன்னை புறக்கணிப்பதாக வருந்திய மகாலட்சுமி அவரை அடைய பெரும் தவத்தை இயற்றினாள்

அவள் தவமிருந்த இடம் இது, அவளின் தீரா தவத்தால் மனமிரங்கிய பெருமாள், முப்பது முக்கோடி தேவர்கள் புடை சூழ வந்து அவளை மணம் செய்து கொண்டார்

அதிலிருந்து இந்த தலத்தின் பெயர் “திருகண்ணமங்கை” என்றாயிற்று. அந்த ஆலயத்தில் எந்த பக்தன் எந்த வரம் கேட்டாலும் எளிதில் தருபவரும், பக்தர்கள் அணுக எளிதானவருமான பெருமாள் “பக்தவக்சலம்” என்றானார்

பாற்கடலைவிட்டு வெளியே வந்து திருமகளை மணம் முடித்ததால் பெருமாளுக்கு இங்கு ‘பெரும் புறக்கடல் பெருமாள்’ என்ற பெயருமாயிற்று. இத்தலத்திலேயே திருமணம் நடந்ததால் ‘கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

இந்த ஆலயத்தின் தீர்த்தம் முக்கியமானது, திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது வானத்தை அளந்த காலை, நான்முகன் தனது கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதில் இருந்து ஒரு துளி தீர்த்தம் இத்தலத்தில் விழுந்து,

அதுவே தர்ஷண (தரிசன) புஷ்கரிணி ஆயிற்று. இந்த தீர்த்தத்தை தெளித்தே மகாலட்சுமிக்கு தேவர்கள் அபிஷேகம் செய்தார்கள்,

(கங்கை, யமுனை, நர்மதை, கெளமுதி, கோதாவரி, கிருஷ்ணவேணி, துங்கபத்ரை, சரஸ்வதி, அஸிக்நி, சதக்நி, ஷீரிணி, வேதவதி, ச‌ரயு, காவேரி, தாமிரபரணி, மஹாநதி, வாராஹி, சிந்து ஆகிய 18 தீர்த்தங்களும் தர்சன புஷ்கரணியில் வந்து சேர்ந்திருக்கின்றன)

அதனால் அன்னை அபிஷேக வல்லி என்றானாள், சந்திரபகவானின் சாபம் இந்த புஷ்கரணியினை கண்டதும் உடனே நீங்கிற்று

ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,”ச‌ப்த புண்ய க்ஷேத்ரம்’,”ச‌ப்தாம்ருத க்ஷேத்ரம்’ என்ற பெயர் பெற்றது.

இந்த ஆலயம் பகவானின் அருளுக்கு சாட்சி சொல்லும் ஆலயம், பகவானுடன் திருமணத்துக்கு வந்த தேவர்கள் இன்றும் தேனீக்களாக அங்கு அமர்ந்து அனுதினமும் தெய்வ திருகல்யணத்தினை பார்க்கும்படி தேன்கூடு எக்காலமும் உண்டு

அதிசயம் என்னவென்றால் பொதுவாக தேனிக்கள் சில வாரங்களில் பழைய கூட்டினை விட்டு புது கட்ட சென்றுவிடும், ஆனால் இங்கு தேனீக்கள் ஒரே கூட்டில் பல வருடமாக வாழும், அப்படி அக்கூடு பழுதடைந்தாலும் ஆலயத்தினுள்ளே கூடு கட்டி அமருமே தவிர வெளிசெல்லாது

இது தேவர்களா இல்லை மகா புண்ணிய ஆத்துமாக்களா என விவாதம் உண்டென்றாலும் தேனீக்கள் அங்கு கூடிகட்டி காலம் காலமாக இருப்பது அதிசயம்,, பகவானை தேடிவரும் ஆத்ம வடிவங்கள் அவை என்பதில் வேறு முடிவு இல்லை

இப்படிபட்ட இந்த ஆலயத்தை தேவர்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் வழிபட்டுள்ளார்கள், மணவாள மாமுனிகள், நாதமுனி என பலரும் வழிபட்ட தலம் இது

திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங்களில் இத்தலத்தைப் பாடியுள்ளார். இத்தலம் தமிழகத்தில் உள்ள பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று.

இந்த தலத்தில்தான் தன் பக்தன் ஒருவனை பகவான் அதி அற்புதமாக தன்னோடு சேர்த்த காட்சி நடந்தது, திருமங்கை ஆண்டான் எனும் பக்தன் உலகறிய் பகவானோடு சேர்ந்த சம்பவம் அது

இந்த ஊரில் பிறந்தவர் கிருஷ்ணலஷ்மிநாதன் , இவர் நாதமுனிகளின் மருமகன் அதாவது சகோதரியின் மகன். நாதமுனிகள் மேல் கொண்ட அன்பால் அவருக்கு நேரடி சீடராய் இருந்தார்

அவர் அந்த ஊரில் முக்கிஸ்தராகவும் ஆலயத்தில் பூஜை செய்பவராகவும் இருந்தார், மிக்க மதிப்பினை ஊரில் பெற்றவர் சாஸ்திரம் அனைத்தும் கற்றவர், மிக புனிதமான துளசிபூஜையினை அவர்தான் நாதமுனிகள் கட்டளைபடி செய்தார்

மதிப்பு மிக்கவர் என்பதால் பல்லாக்கில் அவர் வருவதே வழமை

அப்படி ஒரு நாள் ஆலயம் அவர் வரும்போது ஒரு மோதல் காட்சியினை கண்டார், அதாவது இரு வேடுவர்கள் தங்கள் நா(ய்)களோடு அப்பக்கம் வந்தனர், ஆலயத்தை கண்டதும் உள்ளே தரிசிக்க செல்லும் போது செருப்பையும் நா(ய்)யினையும் வெளிவே விட்டு சென்றனர்

அப்போது ஒரு வேடனின் செருப்பை இன்னொரு வேடனின் நா(ய்) கடித்து பாழ்படுத்தி விளையாட தொடங்கியது

கோவிலில் இருந்து வந்த வேடன் அதை கவனித்து தன் செருப்பை கடித்த நா(யி)னை அடித்தான், தன் நா(ய்) அடிபடுவதை கண்டவ இன்னொருவன் அதை தடுத்து அவன் நா(யி)னை அடித்தான்

சண்டை அக்கணம் இரு வேடர்களுக்குமாக மாறி போனது, தன் நா(யி)னை தொட்டவனை விடமாட்டேன் என் இரு வேடர்களும் வெட்டி செத்தனர்

பல்லக்கில் இருந்து இதனை கண்ட கிருஷ்ணலஷ்மிநாதன் இறங்கி வந்தார், வந்தவர் அந்த செருப்பை பார்த்தார், நா(ய்)களை பார்த்தார், செத்து கிடப்போரை கண்டார்

கோவிலை கண்டார், அவருக்குள் ஒரு பெரிய சிந்தனை வந்தது, அது ஒரு தீர்மானமாக வெடித்தது

“ஒரு அறப செருப்பினை கடித்த தன் நா(யி)னை காக்க மானுடனுக்கே இவ்வளவு வேகம் வந்தான், தான் வளர்க்கும், தன்னை நம்பிய ஜீவனை அடித்ததகே மானுடனுக்கு இவ்வளவு ஆத்திரம் என்றால் என்ன பொருள்?

அதன்மேல் அவன் வைத்த அன்பு

மானுடன் ஒரு நா(ய்) மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கின்றான் என்றால் பகவான் தன் மக்கள் மேல் எவ்வளவு அன்பு வைத்திருப்பார்?

பகவானே இனி நான் உனக்கு நா(யா)வேன், நீ என்னை காத்து உன்னோடு சேர்த்துகொள்” என அந்த இடத்தில் பகவானால் ஆட்கொள்ளபட்டார்

நாலு காலில் நடந்தார், அந்த கோவிலின் மகிழமர அடியில் தங்கினார், யாருடனும் எதுவும் பேசமாட்டார், பூஜைகள் வழிபாடுகளை அப்படியே கவனிப்பார், பிரசாதம் உண்டுவிட்டு அந்த மரத்தடியில் படுத்துகொள்வார்

கோவணம் மட்டும் அணிந்து நான்கு காலில் நடந்து கோவிலில் நா(யா)க இருந்த அவர், கோவிலின் புல் பூண்டுகளை அகற்றுவது சுத்தம் செய்வது என எல்லா பராமரிப்பையும் செய்தார்

ஒரு முழு கிருஷ்ணசித்தனாக அவர் பித்துநிலையில் இருந்தார்

மக்களோ ஆளாளுக்கு பேசிகொண்டார்கள், இவர் எப்போதும் இப்படி இல்லை. திடீர் என்று தான் இப்படி ஆகிவிட்டது” என்றார்கள்

நன்றாக வாழ்ந்தவர் திடீர் என்று இப்படி ஆகிவிட்டார் என்றார்கள், சிலர் அவர்களாக நீதிபதிகளாகி சொன்னார்கள்

“இவர் செய்த பாவ கர்மத்தாலே இப்படி இருக்கிறார்”

”பாவ கர்மத்தை யாராலும் கடக்க முடியாது.. ஈஸ்வரனாலும் ஒன்றும் செய்ய முடியாது”

“நல்ல பக்திமான்.. இப்படி மனக்கோளாறு ஏற்பட்டுவிட்டதே” என ஆளாளுக்கு பேசி கொண்டார்கள்

தன் பக்தன் எப்படிபட்டவன் என்பதை உலகுக்கு சொல்ல திருவுளம் கொண்டார் பகவான்,அதன்படி அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லார் கனவிலும் சென்று மறுநாள் கோவில் சன்னதிக்கு வர சொன்னார்

அது ஆனி திருவோண நட்சத்திர நாளாக இருந்தது

“என் பக்தனே சன்னதிக்கு வா” என மகிழமரத்தடியில் கிடந்த கிருஷ்ணலஷ்மிநாதனுக்கும் அழைப்பு வந்தது, அவரும் நான்கு கால்களில் தேய்ந்த முட்டுடனும் பிய்ந்த உள்ளங்கையுடனும் என்று நின்றார்

நாதனையே பார்த்து கொண்டிருந்தார், மக்களெல்லாம் தங்கள் கண்ட கனவினை நினைந்து குழம்பி நின்றார்கள்

சட்டென ஒரு மின்னல் பெரும் பிரகாசமாய் வெட்டியது சில நொடிகள் நிலைத்த அது மறைந்தபோது முன்னால் நின்ற கிருஷ்ணலஷ்மிநாதனை காணவில்லை

ஆம், அவர் இறைவனோடு கலந்திருந்தார், ஆண்டாள் திருவரங்கத்தில் கரைந்தது போல் அவர் இந்த கோவிலில் கரைந்திருந்தார்

அவர் பெயர் அன்றிலிருந்து திருமங்கை ஆண்டான் என்றாயிற்று, ஆண்டாளை போல அவருக்கும் அவ்வாலயத்தில் உருக்கமான வரலாறு உண்டு

இன்றும் ஆனிமாதம் திருவோண நட்சத்திரததில் அவர் சன்னதியில் பெரிய வழிபாடு உண்டு

இப்படி தன் அருளை காட்டும் ஏகபட்ட சம்பவங்கள் உதாரணங்களை கொண்ட மிக அருள்வாய்ந்த ஆலயம் திருக்கண்ணமங்கை ஆலயம்

இந்த பக்தவத்சலப் பெருமாள் கோயில் 4 பிரகாரங்களைக் கொண்டது. முதல் கோபுரமான மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால், பலிபீடமும் கொடிமரமும் உண்டு

இடது புறம் ஆழ்வார்கள் சன்னதி. வலது புறம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதி என சன்னதிகள் உண்டு

இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் உள்ளது.

அதை கடந்தால் முதல் பிரகாரம் , அது. செண்பக பிரகாரம் என அழைக்கப்படும் இந்த வெளிச்சுற்றில் நந்தவனமானது, கோயிலுக்கு அழகான மாலை போல அமைந்துள்ளது.

இப்பிரகாரத்தின் வடபுறத்தில் திருக்கண்ணமங்கையாண்டான் சன்னதியும் அவர் தங்கியிருந்த த‌லவிருட்சமாகிய மகிழமரமும் உண்டு

பலிபீடத்தின் மேல்புறத்தில் இரண்டாவது ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்துக்கு உட்புறம் கருடாழ்வார் சன்னதி பெருமாளை நோக்கி உள்ளது.

இங்கு கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் தரித்தபடி காட்சியளிக்கிறார். கருடாழ்வாரை வணங்கி, தென்புற பிரகாரத்துக்குச் சென்றால், தென்கிழக்குப் பகுதியில் விசாலமான திருமடைப்பள்ளியையும், மடைப்பள்ளி நாச்சியாரையும் காணலாம்.

அதையடுத்து திருவந்திக்காப்பு மண்டபம் உள்ளது. இதன் மேல்புறத்தின் இரண்டு பக்கங்களிலும் கருடன் சிலை காணப்படுகிறது. இம்மண்டபத்தில் பஞ்சவர்ண புறப்பாடுகளில் அந்திக்காப்பு பூஜை நடைபெறும்.

தாயார் சன்னதியானது, கர்ப்பகிருஹம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகிய அமைப்புகளைக் கொண்டது. கர்ப்பகிருஹத்தில் அபிஷேகவல்லித்தாயார், வீற்றிருந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.

அர்த்த மண்டபத்தில் தெற்கு வடக்கு சுவர்களில் செவ்வக வடிவில் உள்ள சாளரத்தில் தேன்கூடு உண்டு , தேவர்கள் தேனிக்களாக மாறி இங்கு தங்கியிருக்கின்றனர் என்பதால் எக்காலமும் தேன்கூடு உண்டு

இரண்டாம் சுற்றின் வடக்கு பிரகாரத்தில் மேற்குப் பகுதியில் ஆண்டாள் சன்னதி அமைந்துள்ளது.

பிரகாரத்தின் தென்புறம் நடுப்பகுதியில் சொர்க்கவாசல் கோபுரத்துடன் காணப்படுகிறது. இதன் வழியாகவே வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் எழுந்தருள்வார். இவ்வாசலின் கிழக்குப் பகுதியில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, திருமாலின் இரண்டு பாதங்கள் உள்ளன.

இதனையடுத்த பிரகாரத்தின் வடபுறத்தில் தேசிகர் சன்னதி, நவநீதகிருஷ்ணன் சன்னதி, கோதண்டராமர் சன்னதி, யாகசாலை ஆகியவை வரிசையாக தெற்கு நோக்கி அமைந்துள்ளன. தேசிகர் சன்னதிக்கு எதிரில் உள் சுற்றுச்சுவரில் லட்சுமி, நரசிம்மர் யாழ் மீட்டும் நங்கையின் உருவங்கள் உள்ளன.

தாயார் சந்நதிக்குப் பின்னால் வசந்த மண்டபம் உண்டு ஆண்டாள், ஹயக்ரீவர், நிகமாந்த தேசிகர், கோதண்ட ராமசாமி சந்நதிகள் உண்டு

நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் தரித்தவாறு காட்சியளிக்கும் கருடாழ்வார், பக்தர்களின் வேண்டுகோளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதால், கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார்

வருணனுனும் மார்க்கண்டேயரும் இருந்த கோலத்தில் கூப்பிய கையுடன் எதிரெதிராக கருவறைக்குள் அமர்ந்துள்ளனர். இப்பெருமாள் பிராட்டியின் திருமணக் கோலத்தைக் காண வந்த தேவர்களின் சிற்பங்கள் கருவறையின் நான்கு புறச்சுவர்களிலும் உள்ளனர்.

கருவறைச் சுற்றில், கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர், வாமனர், பரசுராமர், ஹிரண்ய சம்ஹாரம், பலராமன், ஸ்ரீ ராமன், பத்தராவிப் பெருமாள், ஸ்ரீ வேணுகோபாலன், பிரம்மா, பரமபதநாதன், கஜேந்திர வரதன், குபேரன், சரஸ்வதி, லக்ஷ்மி பூவராகன் என பல தேவர்கள் வடிவங்கள் உண்டு

இந்த காட்சிகளை கடந்துதான் உள்ளே பக்தவத்சல பெருமாளாக பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றார் பெருமாள், பெருமாள் ஆலயங்களில் மிக பெருய பெருமாள்களில் இவரும் இன்று

(பக்தர்களுக்காக ஆவி போல் வேகமாக வந்து அருள்பாலிப்பதால் பக்தர் ஆவி – பத்தராவி என்ற பெயர்ரும் இர்வருக்கு உண்டு)

இந்த ஆலயம் பிரமாண்டமானது, அந்த பெருமாளும் பிரமாண்டமாக நின்று அருள்புரிகின்றார்

இந்த ஆலயத்தில் பகவான் மகாலட்சுமி திருமணத்தை பிரம்மன் முன்னின்று நடத்தி வைத்ததாகவும் அதற்காகவே பிரத்யேகமாக நான்கு வேதங்களைத் தூண்களாகக் கொண்டு ஒரு மண்டபத்தை உருவாக்கினார் அந்த மண்டபம் இன்றும் உண்டு

அப்படி பெருமாள் ஸ்ரீ தேவி திருமணம் நடந்த இந்த மண்டபத்தில் மேல்விதானத்தின் நடுவே 12 ராசிகள் கொண்ட ராசிச்சக்கரம் காணக்கிடைப்பது அபூர்வமானது.

சோழ மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என ஏகபட்டோர் திருப்பணி செய்த ஆலயம் என்பதால் அதுபற்றிய கல்வெட்டும் உண்டு

இந்த ஆலயத்தில் ஒருநாள் தங்கினால் முக்தி என்பது ஐதீகம்

ஆம், வைகுண்ட ஏகாதசியில் இந்த ஆலயத்தை தரிசித்து விழித்திருந்து விரதம் முடித்தால் மோட்சம் நிச்சயம் என்பதால் இந்த வைகுண்ட ஏகாதசியில் இந்த ஆலயத்தினை தரிசித்தல் கூடுதல் பலனை தரும்

இந்த ஆலயம் பிரிந்தோரை சேர்த்து வைக்கும், திருமண தடையினை நீக்கிதரும், மகாலட்சுமி வாசம் செய்வதால் எல்லா வகை பொருளாசியும் அருளாசியும் எட்டு லட்சுமியின் அருளும் நிரம்ப கிடைக்கும்

மகா முக்கியமாக இறைவனோடு ஒரு பெரும் இணைப்பை பிணைப்பை தரும் ஆலயம் அந்து திருக்கண்ணமங்கை ஆண்டானை போல அவர் மேல் அன்பும் பற்றும் கொண்டவர்க்கு அவ்வாலயம் பகவானுடன் பெரும் பந்தம், பிரிக்கமுடியா பந்தம் தரும்

இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள், பகவானையும் அன்னையினையும் விழுந்து வணங்குங்கள் எழும்போது புதிய மனிதராக எழுவீர்கள்

அப்படியே அங்கிருக்கும் சன்னதிகள், அந்த திருகண்ணமங்கை ஆண்டான் சன்னதி உள்ளிட்ட எல்லா ச்ன்னதியும் வணங்கி நில்லுங்கள், மறக்காமல் அந்த தேன் கூட்டை வணங்குங்கள் தேவர்கள் அருளுடன் பெருமாள் தாயார் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வே தேன்போல் இனிக்கும், காலத்துக்கும் நிலைத்திருப்பீர்கள், மோட்ச பாக்கியமும் உங்களுக்கு வாய்க்கும் இது சத்தியம்

பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் 05 : கபிஸ்தலம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பக்கமுள்ள இந்த கபிஸ்தல ஆலயம் 108 திவ்ய தேசத்தில் 9ம் இடத்தில் உள்ளது, பிரத்தியான இந்த ஆலயம் எத்தனையோ மகான்களாலும் அவதாரங்களாலும் வழிபடபடது

“கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ

மாற்றமும் சாரா வைகயறிந்தேன்-

ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும்

மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு”

என திருமழிசை ஆழ்வாரால் பாடபட்ட தலம் இது

இங்குள்ள பெருமாள் கஜேந்திர வரதர், தாயார் ரமாமணி வல்லி எனும் பொற்றாமரையாள்

இந்த தலத்தின் வரலாறு அனுமனுடனும் அவர் காண விரும்பிய கஜேந்திர மோட்ச காட்சியில் இருந்தும் தொடங்குகின்றது

அனுமனுக்கு கஜேந்திர மோட்ச காட்சியினை இங்கே பகவான் அருளினர், கபி என்றால் மந்தி என பொருள்,அந்த அனுமன் காட்சி பெற்ற தலமாதலால் இது கபிஸ்தலம் என்றானது

கஜேந்திர மோட்சம் எல்லோரும் அறிந்த ஒன்று, இந்திராஜும்னன் எனும் மன்னன் மாபெரும் விஷ்ணுபக்தனாக விளங்கினான், அவன் பூஜையில் அமர்ந்துவிட்டால் எதற்கும் அசையமாட்டான், அப்படி அவன் ஆழ்ந்த பூஜையில் விஷ்ணுபக்தியில் திளைத்திருந்தபோது அங்கு வந்த துர்வாசரை அவன் கண்டுகொள்ளவில்லை

இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர் அவனை யானையாக போகும்படி சபித்தார், அவன் தன் தவறை உணர்ந்து பரிகாரம் கேட்டபோது விஷ்ணுவால் அவனுக்கு சாபம் விலகுமென வாக்கு தந்தார் முனிவர்

அப்படியே கூஹூ எனும் அரக்கன் இருந்தான், அந்த அரக்கனுக்கு ஒரு கொடிய வழக்கம் இருந்தது, நீருக்குள் இருக்கும் அவன் நீராட வருபவர்களை இழுத்து கொல்லும் கொடியவனாக இருந்தான்

ஒருமுறை அவன் அகத்திய முனிவர் நீராட வந்தபோது அவர் பாதம் பற்றி இழுக்க் அகத்திய முனி அவன் முதலையாய் போகும்படி சாபம் கொடுத்தார்

அப்படி சாபத்தால் அவன் முதலையாக இருந்தபோது அந்த குளத்துக்கு யானை நீராட வந்தது, மன்னனாக இருந்து யானையாக மாறிய அந்த யானை அது

குளத்தில் நீராடி தாமரை பறித்து விஷ்ணுவினை வழிபடுவது யானையின் வழமை, முன் ஜென்ம தொடர்ச்சி அது, அப்படி குளத்தில் நீராட வந்தது

அந்த யானையினை முதலை இழுத்து நீருக்குள் இழுத்தது , யானை எவ்வளவு போராடியும் அதனால் மீளமுடியவில்லை

கடைசியில் “ஆதி மூலமே” என பரம்பொருளை அது அழைத்தபோது கருடனில் வந்த பகவான் தன் சகக்ரத்தை வீசி அந்த முதலையினை கொன்று யானை வடிவில் இருந்த மன்னன் சாபம் நீக்கி அவனுக்கு மோட்சம் அருளினார்

முன்பு நடந்த அந்த சம்பவத்தை அனுமன் தரிசித்த இடம் இது, அதனால் இத்தலத்து மூலவர் கஜேந்திர வரதன் என்று அழைக்கப்படுகிறா

5 அடுக்கு ராஜ கோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த புஜங்க சயன கோலத்தில் கஜேந்திர வரதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

தாயாருக்கு தனி சன்னதி உண்டு

பரராச முனிவரும் அனுமனும் வழிபட்ட இடம் என்பதால் அவர்களுக்கு தனி தனி சன்னதிகள் உண்டு

கஜேந்திர மோட்ச காட்சி சிற்பமாக வடிக்கபட்டுள்ளது

கஜேந்திர மோட்சம் நடந்த ஆடி மாத பவுர்ணமி இங்கு பெரும் விஷேஷமாக கொண்டாடபடும்

கஜேந்திர மோட்ச காட்சி என்பது ராகு கேது சிக்கல்களை சூசகமாக சொல்லும் ஒரு காட்சி, ஜாதக ரீதியாக ராகு ஒன்றை கொடுத்தால் கேது தடுக்கும், கேது கொடுத்தால் ராகு தடுக்கும்

இது பூட்டும் சாவியும் போன்றது, ஒன்று சிக்கலை கொடுத்தால் ஒன்று தீர்வை கொடுக்கும், ஒன்று இப்பக்கம் இழுத்தால் இன்னொன்று அப்பக்கம் இழுக்கும்

லவுகீக விஷயங்களில் இழுப்பவர் ராகு, ஆன்மீக விஷயங்களில் இழுப்பவர் கேது

விநாயகருக்கு யானை வடிவம் கொடுத்த இந்துமதம் அவரையே கேதுவுக்கு அதிபதி என சொல்லி வணங்க சொல்லிற்று, இந்த கஜேந்திர மோட்ச காட்சியும் அதே சாயல்தான்

லவுகீக மாயைகள் ஒரு ஆத்மாவினை பூலோக வாழ்வுக்குள் இழுக்கின்றன, மறுபடி மறுபடி பிறக்கும் நிலைக்கு இழுக்க பார்க்கின்றன‌

ஆனால் அந்த ஆத்மா பரமாத்மாவோடு கலக்க துடிக்கின்றது ஆனால் லவுகீக மாயைகள் விடுவதாக இல்லை

இப்படி தத்தளிக்கும் ஆன்மா இறைவனை அழைத்தால் அவர் வந்து காத்து தன்னோடு சேர்த்துகொள்வார் என்பதே இந்த காட்சியின் தாத்பரியம்

அனுமன் அங்கு பெற்ற ஞான அனுபவம் அதுதான், அதனாலே பகவான் ஆஞ்சநேயருக்கு அனைத்து வல்லமைகளையும் அளித்து, அவருக்கு ஞானத்தில் தலைசிறந்த சிரஞ்சீவி பட்டம் அருளியுள்ளார், அது இந்த காட்சிக்கு பின்பே கிடைத்தது

ஆம் இது ராகு கேது பரிகார தலம், உங்களை எதெல்லாம் பிடித்து வைக்குமோ அதெல்லாம் அகற்றி, எங்கெல்லாம் நீங்கள் சிக்கி கிடக்கின்றீர்களோ அதில் இருந்தெல்லாம் பெரும் விடுதலை தரும் தலம்

நல்ல அறிவை ஞானத்தை தரும் ஆலயம்

அப்படியே சாபம் நீக்கி தரும் ஆலயம், என்ன சாபம் இருந்தாலும் இந்த தலத்தில் அது தீரும்

வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாமல் சென்று வணங்கி சாபம் தீர்த்து, எல்லா வகை இழுபறியும் தீர்த்து வாழ்விவினை ஞானத்தோடு வளம்மாக்கி கொண்டால் நல்லது

அனுமனை நினைந்து இந்த கஜேந்திர வரதரை வணங்கினால் எல்லா காவலும் அறிவும் ஞானமும் அவர் தருவார், எல்லா வகை இழுபறியும் முடிந்து அவர் வெற்றியினை தருவார் இது சத்தியம்

அங்கு செல்பவர்கள் பாக்கியசாலிகள்

இந்த கபிஸ்தலத்தில்தான் ஒரு பெரும் அரசியல் குடும்பம் உருவானது ஆனால் இந்த ஆலயத்தினை அவர்கள் பெரிதாக பராமரித்த்தாக எந்த வரலாறுமில்லை, அவர்கள் நினைத்திருந்தால் மாபெரும் தலமாக இதனை பராமரித்து தந்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை

அவர்களின் அரசியல் வீழ்ச்சிக்கு அது மிகபெரிய காரணமாக இருக்கலாம்