பஞ்ச மயானத் தலங்கள் : கச்சி மயானம் 02 / 06
முதல் மயானத் தலம் – காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காஞ்சிபுரத்தின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்த்ருக்கும் ஒரு மகா முக்கிய சன்னதிதான் முதல் மயானத் தலம்.
இது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் கொடிமரத்திற்கு வலப்புறம் மேற்கு நோக்கி தனி சந்நிதியாக அமைந்துள்ளது. இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக, கச்சி மயானேசுவரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேசுவரர் எனும் மற்றொரு பெயருமுண்டு
இந்த தலத்துக்கும் ஒரு புராணம் உண்டு, அதை பார்க்குமுன் இந்த பஞ்ச மயான தலங்களின் தாத்பரியத்தை புரிந்து கொண்டால் இந்த ஆலயத்தின் சிறப்பை அதன் அருளை, போதனையினை புரிந்துகொள்ளுதல் எளிதாகும்
சைவ ஆகம நூல்கள் சிவனே ஐந்து தொழில்களை செய்வதாக சொல்கின்றன, அதனை சிவனின் முகத்தோடு பொருத்தி சொல்கின்றன அதன்படி சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை
இவை முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியவற்றைச் செய்கின்றன
இனி சிவனின் வடிவகங்களான ஐந்து சக்திகளை காணலாம், பஞ்சபூதங்களின் வடிவம் சிவம் என்பது மரபு, அவ்வகையில் வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களாகும்
இந்த பஞ்சபூதங்களுக்கும் சிவனின் தொழிலுக்குமான தொடர்பை சொல்வதுதான் இந்த மயான தலங்களின் சிறப்பு
அதாவது இந்து தொழில் என்பது ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாறும் விஷயம், ஒரு இயக்கத்தை நடத்தும் விஷயம்
இந்த இயக்கத்தைத்தான் ஒன்றில் இருந்து இன்னொன்றை உருவாக்கும் அந்த பஞ்ச மயான தலங்கள் தத்துவத்தோடு போதிக்கின்றன, ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு உலக இயக்கத்தை மாற்றுவதுபோல ஆத்மாவினை ஆத்ம கர்மாவினை மாற்றி அடுத்த படிநிலைக்கு அதனை கொண்டு செல்லும் தலங்கள் இந்த பஞ்ச மயான தலங்கள்
ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாறுவது, மயானம் என்றால் அதுதான் உடல் வடிவம் அழிந்து அந்த ஆத்மா அடுத்த வடிவம் எடுக்கும் இடம் மயானம், அப்படி கர்மரீதியாக அடுத்ததடுத்த படிநிலைக்கு ஆத்மா மாறுவது இந்த மயான தலத்தின் சிறப்புக்கள்
சிவனின் ஐந்தொழிலுக்கும் பஞ்சபூதத்துக்குமான தொடர்பு என்ன?
இந்த உலகம் வெளியில் அதாவது எல்லையும் , முடிவும் தொடக்கமற்ற இந்த வெளி எனும் ஆகாயத்தில் இருந்து காற்று தோன்றும்
காற்றில் இருந்து அக்னி உருவாகும், அக்னியும் காற்றும் வெளியும் சேர்ந்து நீர் உருவாகும், நீரில் இருந்து நிலம் உருவாகும் , நிலத்தில் உயிர்களெல்லாம் உருவாகும்
பின் அழியும்போது நிலம் நீரால் அழியும், நீரானது அக்னியின் வெப்பத்தால் இல்லாது போகும் , அக்னி காற்றில் கரையும், காற்று ஆகாயத்தில் இல்லாமல் போகும்
இதுதான் இந்த உலகம் தோன்றி மறையும் சுழற்சி, விஞ்ஞானமும் இதைத்தான் சொல்கின்றது
இதை என்றோ சொன்ன இந்துமதம் இந்த ஐந்து பூதங்களை சிவன் என்றது, அந்த ஐந்து தொழில்கள் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மறைதல் என்பதை சொல்லிற்று
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
என திருவாசகம் சொல்லும் பாடலின் தத்துவம் இதுதான்
மயானத்து தத்துவம் இதைத்தான் சொல்கின்றது, அதை ஆழமாக கவனித்தால் தெரியும்
உடல் பஞ்ச பூதத்தால் ஆனது, அதை அக்னி எரிக்கின்றது, காற்று உதவுகின்றது சாம்பல் மிஞ்சுகின்றது அது நீரில் கரைகின்றது , கடைசியில் ஒன்றுமில்லாமல் போகின்றது
மீண்டும் அந்த ஆத்மா வரும்போது தாய்வயிற்றில் உடலெடுத்து வருகின்றது
இதனாலே இந்த மயான சுழற்சியும் சிவனின் ஆட்டம் அவரின் செயல் என்றார்கள், எப்படி இந்த பிரபஞ்சம் உருவாகி வந்து அழிகின்றதோ அப்படி மானிட உடலும் அண்டத்தில் உள்ளது எனும் வகையில் பிண்டத்திலும் உண்டு என்பதை சொன்னார்கள்
இதுதான் மயானத்தில் சிவன் மாயாண்டியாக இருக்கும் சூட்சும தாத்பரியம்
அப்படி இந்த பஞ்ச பூத தலங்களின் முதல் தலம் இந்த காஞ்சி எனும் கச்சி மயானம்
காஞ்சி ஏமாபரேஸ்வரர் ஆலயம் பிரசித்தியானது பழமையானது என்றாலும் அதைவிட பழமையானது இந்த கச்சி மயான ஆலயம்
“அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பிள்ளை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே”
என பட்டிதனத்தார் பிறப்பின் கொடுமை பற்றி பாடியெதெல்லாம் , எப்போது கர்மம் தீர்ந்து பிறவா நிலை வாய்க்கும் என் பாடியதெல்லாம் இந்த சிவனை பற்றித்தான்
இந்த ஆலயம் பண்டாசுரன் கதையில் இருந்து தொடங்குகின்றது
அப்படி ஒரு அசுரன் இருந்தான், இவனுக்கு உடல் கிடையாது மாறாக எண்ணங்களால் ஆட்டிவைப்பான், அப்படி அவன் பிரம்மன், திருமால் உடலில் புகுந்து அவர்கள் உடலை பலவீனபடுத்தி சிந்தையினை குழப்பினான்
இதனால் படைக்கும் தொழில் இல்லை, அதனை காக்கும் தொழிலும் சிக்கலானது இன்னும் தேவர்கள் எல்லோரும் குழம்பினர்
எல்லா தேவர்கள் உடலும் இந்த இரு முக்கிய மூர்த்திகளின் உடலுக்குள்ளும் இருந்து பண்டாசுரன் அவர்களை பலவீனபடுத்தி இயக்கத்தை முற்றிலும் குழப்பி வைத்திருந்தான்
சிவபெருமான் இந்த பண்டாசுரனை ஒழிக்க திருவுளம் கொண்டார், அதன்படி இந்த மயானத்தில் பெரும் யாக குண்டம் அமைத்து நெய்யினால் நிரப்பி அவரே அக்னி பிழம்பாக வந்து யாகம் இயற்றினார்
சிவதத்துவங்கள் எனும் ஐந்து தொழிலை தர்ப்பையாகவும், முக்குணங்களான ரஜோ, தமஸ், சத்வ குணத்தை பீடமுமாக கொண்டு அந்த யாகத்தை செய்தார்
அப்போது தேவர்களை அந்த யாகத்தில் தேவர்களை இட்டார் அப்போது பண்டாசுரன் தனித்து வந்தான் அவனை அழித்துபோட்ட சிவன், தேவர்களை மீள வரசெய்தார்
இதுதான் அந்த ஆலயத்தின் தலபுராணம், தேவர்கள் வலுவிழந்த நிலையில் மயானம் சென்று மீண்டு நல் உரு கொண்டு மீண்டெழுந்து வந்த சம்பவத்தை சொல்லும் புராணம்
இந்த தத்துவத்தை கொஞ்ச்ம கவனமாக பார்த்தால் பல விஷயங்கள் புரியும்
தேவர்களை ஒரு அசுரன் உள்ளே புகுந்து பலவீனபடுத்துகின்றான், அவனை ஐந்தொழில்களை தர்ப்பையாக கொண்டு முக்குணங்களை பீடமாக கொண்டு யாகம் செய்து அவர்களை உருமாற்றி அதிலிருந்து அசுரனை பிரித்து அழிக்கின்றார்
இங்கே முக்குணங்கள் என்பது ரஜோ, தமஸ், சத்வ குணத்தை குறிப்பது. இந்த குணங்கள் தான் ஒருவனை ஆட்டிவைக்கின்ற்ன
தாம்ஸ குணத்தையும் ரஜோ குணத்தையும் சத்வ குணத்தால் வென்று பின் அந்த சத்வகுணத்தையும் அடக்கி ஒன்றுமில்லாமல் போவதே இறையில் கலக்கும் யோக நிலை முழு ஞான நிலை என்பது கீதையில் கண்ணன் சொலவது
மாயையினை அகற்றுதல் என அதற்கு பெயர், இங்கே சிவன் அந்த முக்குணங்களை பீடமாக கொண்டு , தன் ஐந்து குணங்களை தர்ப்பையாக கொண்டு யாகம் செய்தார் என்பது தன் இடையறா ஐந்த் தொழிலால் நீக்கி பண்டாசுரனை அகற்றி அழித்து தேவர்களை மீட்டெடுத்தார் என்பது
இன்னுமோர் தாத்பரியத்தை இந்த ஆலயம் சொல்கின்றது, அது தேவர்களை மீளபடைத்தல் என்பது
மயானம் என்பது தகணம் செய்யபடுமிடம் அல்லவா? அப்படி இங்கு பண்டாசுரனால் பாதிக்கபட்டோர் தகணம் செய்யப்பட்டு மீள் உருவம் பெற்று மறுபடி அசுர குணமில்லாமல் அவன் பாதிப்பு இல்லாமல் சரியாக் கடமையினை செய்தார்கள் என்பது
அவர்களின் அசுர குணம் அங்கே எரிந்துவிட்டது, அவர்கள் புது படைப்பாக வெளிவந்தார்கள்
ஆம், இது படைப்பு தொழிலை சொல்லும் ஆலயம், சிவனின் ஐந்து தொழில்களில் முதல் தொழிலான படைப்பின் தொழிலுக்கான அலயம்
இந்த ஆலயம் நில தத்துவத்தை பஞ்ச பூத தத்துவத்தில் சொல்கின்றது
நிலமே எல்லாவற்றுக்கும் ஆதாரம் நிலத்தில் இருந்துதான் எல்லாம் உருவாகின்றன, நிலம்தான் படைப்பினை கொடுக்கும், நிலம்தான் படைப்பின் ஆதாரம்
மற்றவையெல்லாம் படைப்பின் காரணமும் இயக்கமுமாகும் ஆனால் படைப்பினை தாங்கி நிற்பதும் உயிர்கள் வாழ்வதும் படைப்புகள் உருவாவதும் நிலத்தில்தான்
இது படைப்பு தொழிலுக்கான மயானம், ஒரு மோசமான அல்லது செயலற்ற ந்லையில் இருப்போரை இன்னொரு செயல்மிக்க வடிவத்துக்கு மாற்றும் மயானம்
ஒருவரிடம் உள்ள அகாத குணம் அல்லது செயலிழக்க வைக்குமோ எது ஒருவனை அவன் கர்மாவினை செய்யவிடாமல் மயக்கி வைக்குமோ அதை தகணம் செய்து எரித்துபோட்டு அவனை புது மனிதனாக உருவாக்கி அனுப்பும் ஆலயம்
சுருக்கமாக சொன்னால் வினைகளை அறுத்துபோடும் ஆலயம், கட்டுக்களை எரித்துபோடும் சன்னதி இது
இந்த பண்டாசுர்ன கதை மானுடர்க்கு அழகான நீதியினை போதித்து நம்பிக்கையும் தருகின்றது
பண்டாசுரன் என்றால் பாண்டம் + அசுரன் என பிரிந்துவரும், பாண்டம் என்றால் உடல்
மானிட கர்மம் அல்லது ஆத்மாவின் கர்மம் அந்த உடல் மூலமே கழியம், மானுட உடல் என்பது கர்மம் கழிக்கும் கருவி
அந்த உடலில் சில வேண்டாத குணம், பலவீனம் , மாயை, வழக்கம் என வந்து ஒட்டிகொண்டால் அது அவனை கர்மத்தை செய்யவிடாது எதற்கு படைக்கபட்டானோ அதை செய்யவிடாது
அது லவுகீக உலகில் மது,மாது,போதை, சோம்பேறிதனம், பேராசை, நிறைவின்மை என ஏதோ ஒரு பலவீனமாக இருக்கலாம், இல்லை நோய் நொடியாக இருக்கலாம் ஏதோ ஒன்று அவனை பலவீனபடுத்தி கர்மத்தை செய்யவிடாமல் குழப்பி கட்டி வைத்திருக்கலாம்
அப்படியாக பாதிக்கபட்டவர்கள் மீளமுடியா பலவீனத்தில் இருப்பவர்கள் இந்த ஆலயம் வந்து பணிந்தால் அவர்களிடமுள்ள அந்த கெட்ட பலவீனமான தன்மை , அந்த மோசமான வழக்கம் இந்த தலத்தில் எரிந்துபோகும்
அவர்கள் புது மனித்னாக படைக்கபட்டு வெளிவருவார்கள், இந்த சன்னதியில் வணங்குவோர் இரண்டாம் பிறப்பெடுப்பர் என்பது நம்பிக்கை
உங்கள் பழைய வாழ்வை தகணம் செய்து, மீறமுடியா மாய குணங்களை எரித்து உங்கள் கர்மத்தை சரியாக செய்ய, பிறப்பின் நோக்கத்தை சரியாக செய்ய வழிகாட்டும் தலம் இது
ஒவ்வொரு மானுடனுக்கும் ஒரு பலவீனம் உண்டு, லவுகீக மொழியில் அதை பலவீனம் என சொன்னாலும் அதன் உண்மையான பொருள் மாயை
இல்லாத ஒன்றை இருப்பதாக கருதி அதிலே சிக்கி கிடப்பதுதான் பலவீனம்
அது மது,மாது, போதை, பணம், சுகம், உணவு, புகழ் என எதுவாகவும் இருக்கலாம் அதில் மனம் சிக்கி அடிமையாகிவிட்டால் அவன் தன் கர்மத்தை செய்யமுடியாது, பிறப்பின் நோக்கத்தை அடையமுடியாது
அப்படியான மாயையில் சிக்கி செயல்யற்று பலனற்று தெளிவில்லாமல் உடல்ரீதியாக மன்ரீதியாக குழம்பி கிடந்தால் இந்த ஆலயம் அவர்கள் வாழ்வை மாற்றும்
இந்த கச்சி மயான சிவன் அவர்களின் மாயையினை எரித்து தருவார், அவர்களை அப்படியே பதுபடைப்பாக் படைத்து தருவார், பலவீனமற்ற மாய மயக்கங்கள் அற்ற கர்மாவினை சரியாக செய்யு வலுவான இயல்பை தருவார்
மானிட பலவீனங்களை எரித்து அவர்களை புது மனிதனாக ஆக்குவது இந்த கச்சி மயானம்
பட்டினத்தார் இதற்கு பெரிய உதாரணம் பட்டினத்தார், அவர் இந்த தலத்து சிவனின் சக்தியினை இந்த மயான் சிவன் மாயையினை அகற்றி ஞானத்தை தந்து கர்மத்தைமட்டும் செய்யவைப்பார் என்பதை உணர்ந்தவர் அதனால் தன் ஞானபடல்களையெல்லாம் இந்த சிவனை நோக்கி பாடினார்
“காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.
பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.
வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
துக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.
ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே”
அதாவது பெண், பொருள் மயக்கம், வாதம், சண்டை , சச்சரவு, பேராசை இன்னும் பலவகையான விஷயமெல்லாம் மாயை, அந்த மாய பலவீனத்தை களைந்து அருள்தருவாய் ஏகம்பனே என இந்த மயான சிவனை நோக்கி அவர் பாடுகின்றார்
பலவீன மாயையினை எரித்து போட சொல்லி பாடுகின்றார், அவரின் பாடல்கள் வெறும் பாடல்கள் அல்ல இந்த உலகின் மாய மயக்கங்களை இந்த தலத்து சிவன் எரித்து தருவார் அதனாலே அவர் மயானஈஸ்வரர் என சுட்டிகாட்டி பாடுகின்றார்
இந்த தலத்தில் அப்பர்சுவாமிகளின் பாடலும் உண்டு
““மைப்படிந்த கண்ணாளும் தானும்கச்சி மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன் ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே””
அதாவது கச்சி மயானத்தில் இருக்கும் சிவன் அவன் இப்படி இருப்பான் என்று உதாரணம் கூற முடியாது
ஒரு உருவம் உடையவன் அல்ல, ஒரு ஊர் காரன் அல்ல
உவமை இல்லாதவன், நிறம் இல்லாதவன், அவன் இப்படியானவன் இப்படி இருப்பான் என வரைந்துகாட்ட முடியாதவன் அவன் சிந்தனனைக்கு அப்பாற்பட்டவன் என்கின்றார் அப்பர்
அதாவது ஒரு மனிதனுக்கு ஊர்பெயர், குலபெயர், அடையாளம் எல்லாம் உண்டு. ஒரு ஆத்மா அந்த உடலில் வரும்போது அந்த அடையாளத்தை பெறும்
அப்படி சிவனும் காசிநாதன் , ஆரூரான் என இருக்கும் இடத்தை பொறுத்து பெயர்பெற்று நிற்பார்
ஆனால் இந்த சிவன் மயான சிவன் அதாவது ஆத்ம தனி தத்துவம், உடலை இழந்துவிடால் ஆத்மாவுக்கு எந்த அடையாளமும் இல்லை அது வெளியில் கலந்த ஒன்று எல்லாம் கடந்த நிலைக்கு சென்றுவிடுவது போல இந்த் சிவன் எல்லாம் கடந்த நிலையில் இன்னொரு வடிவில் மயான வடிவில் எந்த வகையிலும் சொல்லமுடியா வகையில் நிற்கின்றார் என்பது பொருள்
அங்கே சிவன் எல்லாம் கடந்த நிலையில் ஆத்ம வடிவில் , மயானத்தில் உருவற்ற் நிற்பதுபோல் நிற்கின்றார் அந்த சிவன் மயான கோலத்தில் நிற்கின்றார், அந்த மயானத்தில் மாய பலவீனமெல்லாம் அகலும் மானிட வாழ்வின் சிக்கல் ஆத்ம மயக்கம் எல்லாம் எரிந்துபோகும்
அங்கே சென்று வணங்கும் மக்கள் புது படைப்பாக வருவார்கள், சிவனின் படைத்தல் தொழில் அங்கே மானிடரை புதிதாக் படைக்கவும் நடகின்றது, இரண்டாம் பிறப்பு கொடுக்கின்றது என பாடுகின்றார் அப்பர்சுவாமிகள்
அந்த ஆலயம் சிவனின் படைப்பு தொழிலை சொல்லும் ஆலயம் அப்படியே நில தத்துவத்தை போதிக்கும் ஆலயம்
எவ்வித குழப்பத்தில் பலவீனத்தில் கட்டுகளில் நீங்கள் இருந்தாலும், மீளமுடியாத பலவீனமான நிலையில் மாய பலவீனத்தில் உடல் மற்றும் ம்னரீதியாக குழம்பி கிடந்தாலும் இந்த ஆலயம் செல்லுங்கள் அந்த மயானேஸ்வரர் உங்கள் பலவீன மாயைகளை தகனம் செய்து உங்க்ளை புதுபிறப்பாக புதுபடைப்பாக மாற்றி கர்மம் செய்ய அனுப்பி வைப்பார் இது சத்தியம்.