பஞ்ச மயானத் தலங்கள் : திருக்கடவூர் மயானம் 05 / 06
நான்காம் மயானம் – திருக்கடவூர் திருமெய்ஞான ஆலயம்
இந்த திருக்கடவூர் மயானம் என்பது அந்த பிரசித்தியான திருகடையூர் அபிராமி ஆலயத்தை அன்மித்திருக்கும் ஆலயம்.
முன்காலத்தில் இதுதான் திருகடையூரின் அடையாளம்.
இங்குதான் அந்த பல பிரசித்தியான புராணங்கள் நடந்தன, அந்த அபிராமி அன்னை குடியிருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் இதற்குப் பிந்தையது.
முதல் தலம் இந்த மயான கோவில்.
குங்குமகலய நாயனார் இந்த ஆலயத்தில் குங்கலிய பூஜை செய்தார்
இங்குதான் சம்பந்தர், அப்பர், சுந்தரர் என எல்லோரும் வந்து பதிகம் பாடினார்கள், அவ்வகையிலே இதன் முக்கியத்துவத்தை சிறப்பை அறிந்துகொள்ளலாம்
“வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவரெம் பெருமான் அடிகளே”
என்பது சம்பந்தர் பாடல்.
“குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே”
என்பது அப்பர் சுவாமிகள் இங்கு பாடிய பாடல்.
“மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே”
என்பது சுந்தரப் பெருமான் பாடிய பாடல்.
மூன்று சைவக் குரவர்களும் ஒரு ஆலயத்துக்கு வந்து பாடுதல் என்பது சாதாரணம் அல்ல, அவ்வகையில் இந்த தலத்தின் பெருமையினை அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆலயத்தினை பற்றி பார்க்குமுன் சில முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளல் அவசியம்
இந்த தலத்தை திருகடவூர் மயானம், திருமெய்ஞானம் என்பார்கள். திருமெய்ஞானம் என்றால் இறைவனின் உண்மை பொருளை அறியும் இடம் என பொருள்
மெய்ஞானம் அடையும் இடம் என்பதே மயானம் ஆயிற்று. சுடுகாட்டில்தான் ஒருவனுக்கு மெய்ஞானம் பிறக்கும், அதனால் அந்த இடத்தை மெய்ஞானம் என்றார்கள்
மெய்ஞானமே திரிந்து மயானம் என்றாயிற்று
அவ்வகையில் ஐந்து தலங்களுமே இங்கு திருமெய்ஞான தலங்களாகவே கருதப்படும், இந்தத் தலமும் திருக்கடவூர் திருமெய்ஞானம் என்றே அழைக்கப்படும்.
இங்கு சிவன் தன் நான்காம் தொழிலான மறைதல் தொழிலை செய்கின்றார் , இந்த தலத்தின் பஞ்ச பூதவடிவம் வாயு அதாவது காற்று
இங்கு இறைவன் பிரம்மபுரீஸ்வரர், இறைவி அமலக்குய மின்னம்மை
இனி இந்த ஆலயத்தின் இருபெரும் புராணக் காட்சிகளை பார்த்துவிட்டு ஆலயச் சிறப்பினைக் காணலாம்.
முதலில் இந்த இடத்தில்தான் பிரம்மனை சிவன் எரித்துப்போட்டார் என்பது புராண செய்தி, பிரம்மனுக்கு அவ்வப்போது பெரும் கர்வம் ஏற்படுவது வழக்கம், அப்படி அவனுக்கு கர்வம் வரும்போதெல்லாம் சிவன் வந்து கர்வம் அகற்றுவதும் வழக்கம்
அப்படி ஒருமுறை பிரம்மன் பெரும் கர்வம் கொண்டிருந்தான், தானே பெரியவன் தான் இன்றி இந்த உலகமில்லை எல்லா படைப்பும் செய்யும் நானே உயர்ந்தவன்
நான் படைக்காவிட்டால் எதை பெருமாள் காப்பார்? எதை சிவன் அழிப்பார்? இருவருக்குமே வேலை கொடுப்பவன் நான் எனும்படி பெரும் கர்வம் இருந்தது
சிவனுக்கு எப்போதும் கர்வமும் அகந்தையும் ஆகாத ஒன்று, அப்படிபட்டோருக்கு ஞானம் கொடுக்க சில சிகிச்சைகளை சிவன் செய்வது வழக்கம், அந்த சிகிச்சையில்தான் அவர்கள் ஆணவம் அகலும்
அப்படி சிவன் அகந்தை கொண்ட பிரம்மனை இந்த இடத்தில் எரித்து சாம்பலாக்கினார், அவரின் சாமப்ல் குவிந்த இடம் இது,
பிரம்மன் இல்லாவிட்டால் உலகம் இயங்காது என்பதை அறிந்த தேவர்கள் சிவனிடம் வந்து மன்றாடினார்கள்
அன்பே உருவான சிவன் பிரம்மனை மீண்டும் உயிர்பித்து கொடுத்தார், சிவனின் சக்தி அறிந்த பிரம்மன் அவரை பணிந்தா, அவன் அகந்தை அகன்றது
அப்படி பிரம்மனின் அகந்தை அகற்றியதால் அவர் பிரம்மபுரீஸ்வரன் என்றானார். பிரம்மனின் கர்வம் தவிர்த்தவர் அவர்
அமலக்குய மின்னம்மை என்பது அன்னையின் பெயர், மலம் என்றால் மும்மலம் எனும் ஆணவ, கர்மம், மாயை எனும் மூன்று குற்றங்கள், மின் என்றால் ஒளி
அன்னை மூன்று மலங்களையும் அழித்து ஒளிகொடுப்பதால் அவள் அமலக்கு மின்னம்மை
இப்படி பிரம்மனின் அகந்தை எரித்த இடம் இந்த மயானம் , மெய்ஞானம் பிரம்மனுக்கு கொடுத்த இடம் இந்த கடவூர் மயானம்
புராணபடி அந்த மார்கண்டேயன் உயிர்பிழைத்த கதையும் இங்கேதான் நடந்தது, ஒரு மனிதனின் முடிவு கட்டம் வருமிடம் மயானம், அவ்வகையில் இங்கேதான் அவன் சிவலிங்கத்தை கட்டிபிடித்து போராடினான், அந்த லிங்கத்தின் சிவனேதான் எமனை மிதித்து அழித்துபோட்டு மார்கண்டேயனை காத்தார்
ஆம், மார்கண்டேயன் மறுவாழ்வு பெற்ற இடமும் இதுதான்
இனி இந்த ஆலயத்தில் சிவன் மறைத்தல் தொழிலை செய்வதையும், காற்று தத்துவத்தையும் காணலாம்
மறைத்தல் என்றால் அரூபமாய் நின்று இயக்குதல், பிரம்மனை சிவன் அரூபமாய் நின்று ஏரித்தது போல இங்கே அரூபமாய் மார்கண்டேயன் போராட்டத்தின்போதும் நின்றார்
அரூபவடிவில் அவர் நின்றிருந்ததை மார்கண்டேயனால் அறியமுடியவில்லை, அவன் சிவன் நினைவாக லிங்கத்தை வேண்டி கதறிகொண்டிருந்தானே தவிர அரூபமாய் மறைவாய் அவர் நின்றதை அறியவில்லை
எமனும் அதை அறியவில்லை, அவர் மறைந்திருந்தார்.
பின் உரிய நேரத்தில் வரவேண்டிய நேரத்தில் வந்தார், வந்தவர் எமனின் அகந்தையினை அடக்கினார், அவனை அழித்துபோட்டார் பின் அவன் அகந்தை அடங்கியதால் உயிரோடு எழுப்பிவிட்டார்
ஆம், எமனுக்கும் கர்வம் இருந்தது, எந்த உயிரும் தன்னிடம் இருந்து தப்பமுடியாது எல்லோரையும் இழுத்து செல்பவன் நான் எனும் அகந்தை இருந்தது அந்த அகந்தையில்தான் சிவலிங்கம் மேலே பாசகயிற்றை வீசினான்
அவனின் அகந்தை அழித்து அவனை விட மேலானவர் தான் என்பதை சிவன் காட்டிய தலம் இது
இத்தலம் அகங்காரத்தை ஆணவத்தை எரித்துபோட்டு புதுபிறப்பாய் பிறக்கவைத்து அப்படியே ஆயுளை நீட்டித்து கொடுக்கும் சக்திவாய்ந்தது
பிரம்மனுக்கும் மார்கண்டேயனுக்கும் அதுதான் நடந்தது
மார்கண்டேயன் வாழ்வில் அதுதான் நடந்தது, சிவன் அவனுக்கு மறுவாழ்வு கொடுத்து புதுபிறப்பாய் வாழவைத்தார்
இந்த ஸ்தலம் பஞ்சபூதத்தில் காற்று தத்துவத்தை கொண்டது, சிவன் மார்கண்டேயனுக்கு மறுவாழ்வு கொடுத்தார் என்பது மூசசு காற்றினை திரும்ப கொடுத்தார் என்பதே
ஆம், மூச்சுதான் உயிர், மூச்சு உள்ள காலம்வரைதான் வாழ்வு.
இதனால் இந்துக்கள் மூச்சு காற்றினை மூலமாக கொண்டார்கள் “காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்றார்கள்
யோக சூத்திரம் அதாவது பிரணாயாமம் செய்து மூச்சடக்கி உரிய பயிற்சிகளை செய்து உயிரில் உறையும் அதாவது மூச்சுகாற்றின் வழி இயங்கும் உடலினுள்ளே இறைவனை கண்டு கலப்பதே யோக ரகசியம்
அந்த யோகம் மூச்சு காற்றின் வலிமையினை சக்தியினை உயிர்ப்பினை சொல்கின்றது
ஒளவையின் ஞானகுறள், திருமூலரின் திருமந்திரம், சிவாக்கியார் என பெரும் பெரும் ரிஷிகள் மூலம் சிவனே அதை மக்களுக்கு தந்திருக்கின்றார்
திருமூலர் பாடுகின்றார்.
“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே”
அதாவது தானே முறைகெட்டு அலையும் மூச்சினை முறைபடுத்தி உள்ளே அடக்கி மாசில்லா (நின்மலம்) நிலையினை அடைந்தால் ரத்த ஓட்டம் சரியாகி உறுப்புகள் சிவந்தே இருக்கும், முடி கருத்தே நரைக்கா நிலையின் எட்டும், உயிர் உடலை பிரியாது என்கின்றார்
ஒளவை ஞான குறளில் சொல்கின்றாள்
“காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில் ஞான மதுவா நயந்து”
அதே ஒளவை தன் விநாயகர் அகவலில் ஒளவையார் தன் அகவலில் “காலால் எழுப்பும் கருத்தறிவித்தே” என்கின்றார், கம்பன் தன் ராமாயணத்தில் “இக் கருங் கடல் கடந்தது என் காலினால்” என அனுமன் சொன்னதை சொல்கின்றார்
இங்கு காற்று என்பது மூச்சுகாற்றின் பிரயாணாமத்தை குறிப்பது, அந்த பிரயாணமும் அணலும் கலந்த எழுச்சி (ஊக்கம்) அமிர்தம் கொடுக்கும் என சொல்லும் ஒளவையார், இந்த அமிர்ந்தம் ஞானத்தை தேன்(மது) போல் இனிமையாக கொடுக்கும் என்கின்றார்
“காலும் தலையும் அறியார் கலதிகள்
கால் அந்தச் சத்தி அருள் என்பர் காரணம்
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர்
கால் அந்த ஞானத்தைக் காட்ட வீடு ஆகு”
கால் எனும் மூச்சினை அடக்கி தலைக்கு சக்தி ஏற்றி தெரியாதவர்கள் வீணர்கள் என தன் பாடலில் சொல்கின்றார் திருமூலர்
‘மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே’
மனம் என்பது சிந்தனையின் மனம் முறையான மூச்சினால் செம்மையாகும், மனதுக்கும் மூச்சுக்கும் தொடர்பு உண்டு, மூச்சு செம்மையானால் மனம் செம்மையாகும் மனமும் மூச்சும் செம்மையானால் குண்டலினி சக்தி தானே மேல் எழும் என்பது பாடலின் பொருள்
இதனையே கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனாரின் இன்னொரு பாடல் விளக்குகின்றது
“காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங் கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;
ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்
பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்”
ஒளவையார் இன்னும் சொல்கின்றார்
“உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி விண்ணோடு மெள்ள விடு. “
சிவயோக நிலையினை அடைய மூச்சு பயிற்சி அவசியம் என சொல்லும் ஒளவையார், அந்த மூச்சு எல்லா நாடிகளிலும் காற்று நிரம்பும் அளவு அடக்கி பின் வெளியே மெல்ல விட வேண்டும், அப்படி செய்தால் பெரும் ஞானநிலையும் நீண்ட ஆயுளும் கிட்டும் என்கின்றார்
இதனையே திருமூலர் பாடலிலும் காணலாம்
“விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே”
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து ஆக அறுநூறு
இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
(இன்று விஞ்ஞானம் சொல்லும் கணக்கும் இதுதான், இதனை என்றோ உணர்ந்து சொன்னவர்கள் இந்து சித்தர்கள்)
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100, இது மிக அமைதியான மனமும் ஆத்திரபடாத காமவயபடாத மனமும் கொண்ட மனிதனின் சுவாச கணக்கு
சினம், கோபம், ஏக்கம், காமம், ஆத்திரம், அழுகை என பல வகையில் மனதின் சமநிலை பாதிக்கபடும்பொழுது மூச்சின் சமநிலையும் பாதிக்கபடும் அது ஆயுளை குறைக்கும்
மூச்சினை சமபடுத்தி அடக்கி குறைத்து மெல்ல வெளியிட ஆயுள் கூடும்
ஒரு மனிதன் நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள், இது மூச்சு அடக்கி மெல்ல வெளியிடும் பயிற்சி அதிகரிக்க அதிகரிக்க இன்னும் அதிகமாகும்
கடைசியில் ஒரு நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு, 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு என நீளும் இதெல்லாம் சித்தர்களால் மட்டும் சாத்தியம்
ஒரு கட்டத்தில் நீரிலும் சூரிய ஒளியிலும் அல்லது பிரபஞ்சத்தின் இதர சக்திகளிலே உடல் தன் சக்தி இயக்கத்தை பெறும்பொழுது உடலுக்கு மூச்சு அவசியமில்லை, அந்த சித்தர்கள் அழியா பெருவாழ்வு வாழ்வார்கள்
மூச்சுக்கும் ஆயுளுக்கும் நோய்க்கும் தொடர்பு உண்டு, ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த அளவு மூச்சு என்பது விதிக்கபட்டது, அது வீணாக வீணாக ஆயுள் குறையும், அதை உணர்ந்து அடக்கி அதனை மிக மிக சிக்கனமாக்கி ஆயுளை நீட்டி அந்த நீண்ட ஆயுளால் பெரும் ஞானம் அடைபவர்கள் சித்தர்கள்
காலன் என்றால் காலநேரத்தில் வருபவன் என்றுமட்டும் பொருள் அல்ல, கால் என்றால் காற்று அதனால் உயிர்மூச்சை உயிர்காற்றை நிறுத்த வருபவன் காலன்
அந்த காலனை சிவன் விரட்டி மார்கண்டேயரை காத்தார் என்பது அவனின் மூச்சுகாற்றினை உயிர்காற்றினை மறுபடி மார்கண்டேயனுக்கு கொடுத்து அவனை எழுப்பினார் என்பதே
மேற்கண்ட யோக பாடல்களை கண்டால் ஒன்று விளங்கும், மூச்சை சரியாக பயிற்றுவித்தால் ஒருவன் சித்தநிலை சிவநிலை அடையலாம் என்பது
மார்கண்டேயனுக்கு சிவன் அந்த மூச்சுகாற்றின் முழு சக்தியினை வழங்கினார், அவன் அந்த சிவன் கொடுத்த மூச்சினாலே 16 வயதிலே சித்த நிலையினை அடைந்தான்
அதனால் என்றும் அழியாத பெரும் வரம், நித்திய சிரஞ்சீவிகளில் ஒருவன் என்றாக இன்றும் வாழ்கின்றான்
அந்த தலம் அப்படியான மறு உருவினை கொடுக்கும், அது சிவன் மறைத்தல் தொழிலில் காற்று உருவில் அருள்பாலிக்கும் தலம்
அங்கே ஒருவன் வாழ்வு மாறும், அங்கே மூச்சு பயிற்சியினால் என்னென்ன யோக பலன்களை பெறமுடியுமோ அதையெல்லாம் வழிபட்ட உடன் பெறலாம்
அவன் மூச்சு சிவன் அருளால், சிவகடாட்ச காற்றின் அருளால் அந்த அற்புதத்தை செய்யும்
பெரும் உதாரணம் குங்குலிய கலய நாயனார், அவர் அந்த ஆலயத்தின் தாத்பரியத்தை சரியாக அறிந்திருந்தார், இதனால் காற்றின் தூபத்தில் சிவனை வணங்கும் குங்கிலிய புகை எழுப்பி வழிபடும் வழிபாட்டில் இறங்கினார்
அதுதான் அவரின் வழிபாடாயிற்று, அதுதான் அவரின் தவமாயிற்று, அதுதான் அவரை நாயனார் எனும் பெரும் நிலைக்கு உயர்த்தி கயிலாய யோகமும் கொடுத்தது
ஆம், அவர் அங்கு காற்றில் சிவன் அதிக சக்தியோடு இருப்பதை அறிந்துகொண்டவர், காற்றால் வணங்கினார் சிவனை அடைந்தார்
அந்த தலத்தில் யார் சென்று வணங்கினாலும் அவர்கள் மூச்சு சீராகும், மூச்சு சீரானால் சிந்தை சீராகும், சிந்தை சீரானால் நல்ல அறிவும் ஞானமும் தெளிவும் சரியாக வாய்க்கும்
ஆம், மூச்சுதான் எல்லாவற்றுக்கும் காரணம், மானிட உடலை அதுதான் இயக்குகின்றது, அதுதான் சக்கரங்களை துலக்குகின்றது
மூச்சினால்தான் ஒருவன் லவுகீக வாழ்வு ஞானவாழ்வு என இரண்டையுமே தொடர்ந்து வரமுடியும்
அந்த மூச்சினை, மூல சக்தியான அந்த மூச்சினை சீர்படுத்தி தரும் தலம் இது
திருகடவூரில் அன்னை அபிராமி குடியிருக்கும் தலம் இதன் அருகில்தான் இருக்கின்றது, மார்கண்டேயனுக்கு புதுமூச்சு கொடுத்து மறுவாழ்வு கொடுக்கும்போது அங்கிருக்கும் கிணற்றினை உருவாக்கி அதிலிருந்து தீர்த்தம் கொடுத்தார் சிவன்
அந்த கிணற்றின் நீர்தான் இன்றும் அபிராமி அன்னையின் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகமாகின்றது
அதாவது அந்த அபிராமி ஆலயத்தின் மூலசக்தி இங்கிருந்துதான் செல்கின்றது
நிச்சயம் இந்த திருகடவூர் மயானமும், திருகடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் எனும் அபிராமி ஆலயமும் இரட்டை ஆலயங்கள்
அமிர்தம் என்றால் ஆயுளை நீட்டிக்கும் வரம் என்பதில் சந்தேகமில்லை, அமிர்தகடேஸ்வரரை அபிராமியினை தேடி திருகடையூருக்கு பக்தர்கள் செல்வது அதனால்தான்
ஆனால் அந்த அமிர்தத்தை யார் தருவார் என்றால் திருகடவூர் மயானத்தில் இருக்கும் பிரம்மபுரீஸ்வரர்தான் , மார்கண்டேயனுக்கு அழிவில்லா வரமளித்த எமனிடமிருந்து காத்த அதே சிவனேதான் தருவார்
அந்த ஆலயத்தின் கினற்றில் இருந்துதான் அபிஷேக நீர் அபிராமி ஆலயத்துக்கு செல்கின்றது எனும் தத்துவம் அதுதான்
விதிப்படி திருகடையூர் செல்பவர்கள் இந்த தலத்தினை தரித்துவிட்டுத்தான் அபிராமி ஆலயம் செல்லவேண்டும்
ஆனால் வாழ்வு தேடி நீண்ட ஆயுள் தேடி அபிராமியிடம் செல்வோர், மயானம் என அழைக்கபடும் இந்த தலத்துக்கு செல்வதில்லை
இதற்கு காரணம் அறியாமை அல்லது சரியாக யாரும் எடுத்து சொல்லாமலே சென்றுவிட்ட பரிதாபம் , இந்துக்களுக்கு அவர்கள் தலத்தின் பெருமையினை சரியாக எடுத்துசொல்ல அமைப்போ இயக்கமோ இல்லை என்பதே
அந்த திருடவூர் மெய்ஞானம் என்பது திருகடவூர் மயானம் என மாறிபோனதே இதற்கு காரணம்
அங்கு செல்வோர் முதலில் திருகடவூர் பிரம்மபுரீஸ்வரர் இருக்கும் மயானம் எனும் மெய்ஞான ஆலயத்துக்குத்தான் செல்லவேண்டும், அங்குதான் சிவன் மூச்சுகாற்றாய், மறைந்து நிற்றல் எனும் அரூப வடிவில் நிற்கின்றார்
அங்கு அவரை வழிபட்டால் மூச்சினை சீர்படுத்துவார், மூச்சு சீரானால் எல்லாம் சீராகும்
இங்கே இன்னொரு ரகசியம் உண்டு, அது சூட்சுமமனது
பாற்கடலில் அமிர்தம் மறைந்திருந்தது, அதனை கடைந்தபோதுதான் கடைசியில் வந்து நீண்ட பெருவாழ்வை தேவர்களுக்கு கொடுத்தது
அப்படி மானுட உடலிலும் சக்தி மறைந்திருக்கின்றது, மூச்சினை சீர்படுத்தி யோகத்தில் நிலைக்கும்போது குண்டலினி எழுந்து தலையில் அமிர்ந்தமாக சுரக்கின்றது
அந்த அமிர்தம் பெற்றவர்களே ரிஷிகள், ஞானியர்கள், மகான்கள்
பாற்கடலை யாரோ என்றோ கடந்து அமிர்தம் பெற்றார்கள் அல்ல எனப்து விஷயம், ஒவ்வொருவர் உடலிலும் பாற்கடல் உண்டு அதை மூச்சினால் கடைந்து வாசுகி எனும் பாம்புபோல் சுருண்டிருக்கும் குண்டலியினை எழுப்பவேண்டும்
தியானத்தில் மூச்சினால் சக்தியினை கடையும்போது வரும் கெட்டவைகளை சிவனிடம் தள்ளிவிட்டு பின் வரும் அமிர்தத்தை எடுத்துகொள்ள வேண்டும், அந்த அமிர்தமே ஞானம் அதுதான் நிறைவு என்பது யோக ரகசியம்
அப்படி இங்கே திருகடவூர் தலத்தில் மூச்சுகாற்றாய் நிற்கும் சிவன், உடலின் சக்தியினை கடையும் சக்தியினை தருவார், பின் அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் அதன் பலனை பெறலாம்
திருகடவூர் மெய்ஞானம் எனும் மயானம் ஆலயத்தின் தத்துவமும், திருடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலய தத்துவம் இதுதான்
அந்த ஆலயங்களுக்கு அதன் சிறப்பு காரணமாக காரண பெயர் வந்ததும் இப்படித்தான்
இங்கு அன்னை வீணை இசைமீட்டி சிவனை மகிழ்ச்சிபடுத்தியதாகவும் புராண செய்தி உண்டு, வீணை வாசித்தாள் என்பது சீரான அலையில் வரும் செய்தியினை சொல்வது
பஞ்சபூத தத்துவம் எனும்போது பஞ்ச தன்மாத்திரை என சிலவற்றை சொல்வார்கள் , நிலம் என்றால் சுவை , நீர் என்றால் மணம் என்பது போல ஒலி என்பது காற்றின் குறியீடு
அன்னையின் வீணை இங்கே ஒலித்தது என்பதில்தான், மிக அழகாக இது காற்றுதலம் என்பதை சூசகமாக சொல்லி வைத்தார்கள்
அதாவது இத்தலம் சரியான அளவில் ஒருவனை இயங்கவைக்கும் அவன் வாழ்வு மங்களகரமாக இருக்கும் மகிழ்வாக இருக்கும் என்பதை குறிப்பால் சொல்வது
திருகடவூர் செல்லும் போது முதலில் இந்த திருகடவூர் மயானம் எனும் மெய்ஞான தலத்தில் இருக்கும் சிவனை வணங்குங்கள்
அங்கே உங்கள் மூச்சு சீராகும், அந்த வரத்தை அருளும் ஆலயம் அது
மூச்சு சீரானால் சிந்தை தெளியும் அப்போது கர்மம் தானாகவே கரையும், கர்மம் கரைந்துபோனபின் புதுவடிவமாக புது மனதெளிவுடன் ஞானத்துடன் புதுபிறவி எடுப்பீர்கள்
மார்கண்டேயன் எடுத்தது போல் எடுப்பீர்கள்
கவனியுங்கள், அந்த ஆலயத்தின் புராணபடி எமன், மார்கண்டேயன், பிரம்மன் என எல்லோரும் மறுபிறவி எடுத்தார்கள், சிவன் யாரையும் அங்கே கைவிடவில்லை
அவர்களின் அகந்தை அகற்ற், கர்மத்தை மாற்றி , புது மூச்சு கொடுத்து புதுவாழ்வை கொடுத்து அனுப்பினார்
அந்த பெரும் அதிசயம் உங்கள் வாழ்விலும் நடக்கும், அங்கே சென்று வணங்கும் ஒவ்வொருவருக்கும் நடக்கும் இது சத்தியம்
அதனால் அங்கே செல்லும்போது முதலில் அவரை விழுந்து பணியுங்கள், அங்கே சற்றுநேரம் அமர்திருங்கள், மனதார வேண்டிகொண்டபின் மூச்சினை கவனியுங்கள்
உங்கள் மூச்சை நீங்கள் கவனிக்க கவனிக்க உங்களில் மாற்றம் நிகழும், எல்லாம் சரியாவதை காண்பீர்கள்
மூச்சு என்பது ஒரு விட்டு விட்டு வரும் சங்கிலி, அதுதான் கர்மாவினை பல பிறப்பாக செய்ய வைக்கின்றது, மூச்சில்தான் பூர்வ ஜென்ம கர்மாவும் இணைந்து வருகின்றது
இப்பிறப்பில் அது மறைக்கபட்டிருக்கின்றது, ஒவ்வொருவருக்கும் இப்பிறப்பில் முன் ஜென்ம கர்மா மறைக்கபட்டே இருக்கின்றது
அதற்கு காரணமும் உண்டு , முன் ஜென்ம கர்மா தெரிந்தால் அது நல்வினை என்றால் ஒருவன் கர்வம் கொள்வான், கொடும்வினை என்றால் மனமுடைந்துவிடுவான்
அதனால் சில விஷயங்கள் மறைக்கபட்டிருக்கின்றன
அதைத்தான் கீதையில் கன்ணன் சொன்னான் “அர்ஜூனா நீயும் நானும் பல பிறவி எடுத்தோம்,எனக்கு எல்லாம் தெரிந்திருக்கின்றது, உனக்கு மறைக்கபட்டிருக்கின்றது, அதனால் நான் சொன்னதை மட்டும் செய்”
அதேதான் அந்த மறைத்தலை செய்பவர் சிவன், சிவனின் தொழில்களில் மறைத்தலும் ஒன்று என்பது இப்படி கர்மங்களை மறைத்து வைப்பது அப்படியே மறைந்து நின்று செயலாற்றுவது
அப்படி இங்கு உங்கள் கர்மாவினை, மறைந்திருக்கும் வினைகளை சிவன் எரித்துபோட்டு உங்களுக்கு புதுமூச்சினை வழங்குவார்
(இந்த இடம் சுவாச கோளாறு, நுரையீரல் பிரச்சினை உள்ளோர்க்கு, காற்றினால் ஏற்படும் நோய் கொண்டோருக்கு பரிகார ஸ்தலம் )
இங்கே வணங்கிவிட்டு பின் அமிர்த கடேஸ்வரர் ஆலயம் செல்லுங்கள், இங்கே கடையபட்ட மனம் அங்கே அமிர்தம் பெறும், அந்த அமிர்தத்தில் அழியா வரம் பல உங்களுக்கு கிடைக்கும்
இது தடைகள் அகலும் ஆலயம், உயிர்பயம் நோய் நொடியெல்லாம் அகற்றும் ஆலயம்
வாழ்வில் உங்களுக்கு கடன் இருக்கலாம், நோய் இருக்கலாம், இதர பெரும் சிக்கல்கள் தொல்லைகள் இருக்கலாம், இன்னும் பலவாறு குழப்பமும் வேதனையும் பெரும் கவலையும் இருக்கலாம்
எல்லாவற்றிலும் பெரும் தடையும் சோதனையும் இருந்து தொடரலாம்
எல்லா சிக்கலுக்கும் பூர்வ ஜென்மா கர்மவினை தொடர்ச்சியாய் இருக்கின்றது, இந்த திருகடவூர் மயானத்தில் அது எரிக்கபடும் போது அந்த தடைகள் எல்லாம் விலகும்
இது தடைகள் அகற்றும், நோய் அகற்றும் ஆலயம், ஆயுளை கூட்டி நிறைந்த ஞானத்தை மெய்ஞானத்தை தரும் ஆலயம்
திருகடையூர் என்பது அங்கே செல்லும் பக்தனை மூச்சினால் சிவன் கடையுமிடம், அப்படி கடைந்து அவனுக்குள் இருக்கும் ஞான அமிர்தத்தை அவனுக்கு கொடுக்குமிடம்
அதனால் இங்கே செல்லும் போது முதலில் திருகடவூர் மயானம் செல்லுங்கள், அங்கே மூச்சியினை கவனியுங்கள், மூச்சினை சிவன் சரிபடுத்த வேண்டுங்கள், எல்லாம் நலமாகும், சிவனருளில் மூச்சு சுத்தமாகும் அதனால் சிந்தையும் மனமும் தெளிவாகும்
பின் திருகடவூர் அமிர்தகடேஸ்வரர் தலம் செல்லுங்கள், அப்போதுதான் முழு பலன் கிடைக்கும், முழு யோக நிலையும், அமிர்தம் பெற்ற தன்மை போல பெரும் வரமும் மங்கா ஆயுளும் நிறைந்த ஞானமும் உங்களுக்கு கிடைக்கும் அது சத்தியம்
(இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு, இப்போது சஷ்டியப்த பூர்த்தி எனும் அறுபதம கல்யாணம் இன்னும் முதிர்பிராய சடங்குகளெல்லாம் அமிர்தகடேஸ்வரர் கோவிலில்தான் திருகடையூரில் நடக்கின்றன
உண்மையில் அவை இந்த திருகடவூர் மெய்ஞான ஆலயம் எனும் தலத்தில்தான் நடக்க வேண்டும்
இந்து சனாதான தர்மபடி ஒருவன் 60 வயதுக்கு மேல் துறவு வாழ்க்கை ஞானம் தேடிய வாழ்க்கையினை மேற்கொள்ள வேண்டும், அதனால் 60 வயதுக்கு மேல் பிள்ளைகளிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு காசிக்கோ கானக ஆஸ்ரமத்துக்கோ சென்று ஞானம் தேடி இறைவனில் கலந்து வாழ்வை முடிப்பது இந்துக்கள் வழமையாய் இருந்தது
அறம்,பொருள், இன்பம், வீடு என்பதில் 60ம் வயதுக்கு பின் வீடு எனும் ஞானநிலை நோக்கி செல்லல் வேண்டும்
அப்படிபட்ட பயணத்தை தொடக்குமிடம்தான் சஷ்டியப்த பூர்த்தி , அதாவது மெய்ஞானத்தை தேடி செல்லும் நிலை
அதை தொடங்கும்போது திருகடவூர் மெய்ஞ்ஞான தலம் எனும் மயான் சிவனிடம் வேண்டி தொடங்குதல்தான் அக்காலத்தில் மரபாய் இருந்தது
இப்போதும் அங்கு சென்று வழிபட்டு சஷ்டியப்த பூர்த்தி சம்பிரதாய சடங்கை செய்தல் அர்த்தமுள்ளது, நிச்சயம் இறையருளை பெற்று தரும் வழியுமானது, அதை ஒவ்வொருவரும் பின்பற்றுதல் நலம் )