பஞ்ச மயானத் தலங்கள் : நாலூர் மயானம் திருமெய்ஞானம் 06 / 06
ஐந்தாம் மயானம் – திருநாலூர் மயானம்
கும்பகோணம் குடவாசல் அருகே அமைந்திருக்கும் திருநாலூர் மயானம் எனும் திருதலம்தான் பஞ்ச மயான தலங்களின் கடைசி மயானம்
இன்று சிறிய ஆலயமாக அதிகம் அறியபடாத ஆலயமாக இருந்தாலும் அதுதான் தமிழகத்தின் தொன்மை மிக்க ஆலயம் என அறியபடுகின்றது
நாலூர் என்பது நான்கு வேதங்களும் வந்து வழிபட்ட இடம், நால்வேதியூர் என்பதே நாலூர் என மாறிவிட்டது, வேதங்கள் வந்து வழிபட்ட ஆலயம் என்பதால் அது மகா மகா தொன்மையானது
பலாச மரங்கள் நிறைந்த இடத்தில் வந்த சிவன் என்பதால் அவருக்கு பலாசவன நாதர் என்றொரு பெயர் உண்டென்றாலும் எல்லோரும் அறிந்த பெயர் ஞானபரமேஸ்வரர்
இந்த தலத்தில்தான் பிரம்மன் தன் ஆயுள் முடியும் போது சிவனிடம் அடைக்கலமாகி கரைந்து போவார் என்பதும் பின் மறுமுறை உலகை சிவன் படைக்க தொடங்கும்போது பிரம்மனை சிவன் மீண்டும் உயிர்பித்து வேதங்கள் கொண்டு படைப்பு தொழிலை செய்ய வைப்பார் என்பது புராண செய்தி
அதாவது படைப்பு முடியுமிடமும் தொடங்குமிடமும் இதுதான், உயிர்கள் ஒடுங்குமிடம் இதுதான்
இந்த தலத்தில்தான் பிரம்மன் வழிபட்டான், ஆதம்பரிஷி வழிபட்டா, வேதங்கள் வழிபட்டன இன்னும் மகான்கள் ரிஷிகள் பலர் வழிபட்டார்கள்
இந்த ஆலயம் பல விசித்திரமான விஷயங்களை கொண்டது, இந்த ஆலயத்துக்கு என தீட்டு கட்டுபாடுகள் எதுவும் கிடையாது யாரும் சென்று வழிபடலாம்
இந்த ஆலயம் விதிகளுக்கு அப்பாற்பட்டது, இங்கு ஆகமவிதிகள் இல்லை கும்பாபிஷேகம் கட்டாயம் எனும் நிலை இல்லை
எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் சிவன் அவர்போக்கில் அருள் பாலிப்பார் என்பது இங்குள்ள சிறப்பு, முக்கியமாக இங்கு வழிபடுவோர்க்கு பிறவி இல்லை
தேவாரம் அங்கே பாடபட்டது, அதில் சம்பந்தபெருமானே அதை சுட்டிகாட்டி பாடுகின்றார்
“பாலூரு மலைபாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான் தனடி நினைந்து
மாலூரும் சிந்தையர் பால் வந்தூரா மறுபிறப்பே”
என்பது சம்பந்தர் பாடிய பாடல்.
“திங்களூர் திருஆதிரையான் பட்டினம்ஊர்
நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்து அமான் இடையாறு இடைமருதே”
என்பது சுந்தரர் பாடல்.
பஞ்ச பூதத் தத்துவங்கலில் இது ஆகாய தத்துவம், சிவனுக்குரிய ஐந்து தொழிலில் இது அருளல் நடக்கும் தலம்.
இந்தத் தலத்தின் சிறப்பை காணுமுன் பிரம்மன் ஏன் சிவனில் ஒடுங்க வேண்டும், கரைந்து போகவேண்டும் என்பதை காணலாம்
இந்த உலகம் மட்டுமல்ல பிரபஞ்சமும் கால நேர எல்லை கொண்டது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின் எல்லாமே பரம்பொருளில் ஒடுங்கும் பின் மெல்ல மீண்டும் விரிந்து எல்லாம் தோன்றும்.
(விஞ்ஞானம் இதைத்தான் சொல்கின்றது, இந்த அண்டம் விரிவடைந்தே செல்வது ஒரு கட்டத்தில் சுருங்கி ஒரு புள்ளியில் குவியும், பின் அந்த புள்ளியில் இருந்து மறுபடி விரிந்து தொடங்கும்
இதயம் சுருங்கி விரிந்து துடிப்பது போல இந்த அண்டமும் சுருங்கி விரிகின்றது ஆனால் அது மாபெரும் கால அளவில் நடக்கின்றது
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பது இதுதான்
இப்படி ஒருமுறை பிரபஞ்சம் தோன்றும்போது புது பிரம்மன் வருவான் பின் காலம் முடியும் போது அவனும் சிவனிடம் கரைந்துவிடுவான், மறுபடி சிவன் அவனை தோற்றுவிப்பார் வேதங்களோடு அவன் படைப்பை தொடங்குவான்
இதற்கான கால அளவையும் சொன்னது இந்துமதம் அதுதான் மகா ஆச்சரியம், இந்துக்களின் ஞானம் அதை அன்றே செய்யவைத்தது
360 நாள் கொண்டது ஒரு மானிட ஆண்டு (சந்திரனின் சுழற்சியின் படி) என கணக்கு. அது சாந்த்ரமான ஆண்டு எனவும் சொல்லப்படும். (365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி கொண்டது சௌர மானிட ஆண்டு (சூரிய சுழற்சியின் படி) )
இப்படி ஒரு மானிட ஆண்டு தேவர்களின் ஒரு நாள். 360 மானிட (சாந்த்ரமான) ஆண்டுகள் என்பது ஒரு தேவ வருடம்.
1200 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கலியுகம். கலியின் இரு மடங்கு அதாவது,
2400 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு துவாபர யுகம்.
கலியின் மூன்று மடங்கு, அதாவது 3600 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு திரேதா யுகம்.
கலியின் நான்கு மடங்கு, அதாவது 4800 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கிருத யுகம்.
ஆக மொத்தம் 12000 தேவ வருடங்கள், அடுத்தடுத்து வரும் இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர் யுகம்.
இப்படி ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது பிரம்மனின் ஒரு பகல் பொழுது, ஆயிரம் சதுர் யுகங்களைக் கொண்டது பிரம்மனின் ஒரு இரவு.
ஆக மொத்தம் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள். இதனை கீதையும் இன்னும் பல நூல்களும் சொல்கின்றன.
அது போல நூறு வருடங்கள் பிரம்மனின் ஆயுட்காலம் அதன்பின் அவனும் கரைந்துவிடுவான் இல்லாமல் போய்விடுவான்
இந்த தலம் இதைத்தான் சொல்கின்றது,பிரம்மன் ஒன்று அழியாதவன் அல்ல அவன் ஒவ்வொரு யுகத்திலும் சிவனில் ஒடுங்கி கரைந்துவிடுகின்றான் பின் மீள புது பிறப்பாய் வருகின்றான் என்பது அது
ஆம், பிரம்மனே சிவனில் கரைந்து ஒடுங்கி மறுபிறப்பாக வரும் ஆலயம் இது
இந்த ஆலயம் ஆகாய தத்துவத்தை கொண்டது, ஆகாயம் என்றால் எல்லையற்ற அதே நேரம் ஒன்றுமற்ற வெளி எனவும் பொருள்
சிதம்பர ஆலயத்தின் அம்பல தத்துவம் அதுதான் , யோகத்தில் ரிஷிகளின் மனம் செல்லும் சூனிய நிலை அதுதான்
திருசிற்றம்பலம் என்பது அதுவேதான்
“அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்தெம் மெய்யைப் போகவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேயிரு ணீங்கிநின் றேனே”
“மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே”
“நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே”
எனத் திருமூலர் அதைத்தான் பாடினார்.
இங்கு எல்லாமே சிவனில் அந்த வெளியில் கலந்துவிடும், எல்லா படைப்பும் அந்த ஒன்றுமற்ற வெளியில் கரைந்துபோகும் பின் அதிலிருந்து தோன்றும்.
இதைத்தான் இந்த ஆலயம் போதிக்கின்றது, ஒருவகையில் இது நுணுக்கமான ஒன்றை போதிக்கின்றது
ஒவ்வொருவர் வாழ்விலும் உரிய கர்மத்தை கழிக்க நேரமும் ஆயுளும் கொடுக்கபடுகின்றது, ஆயுளும் வாழும் காலமும் கர்மம் கழிக்கவே நிர்மானிக்கபடுகின்றன.
அந்த காலநேரத்தை தன்னுள் வாங்கி கர்மம் கழிக்கும் தலம் இது, அதனால்தான் இங்கு வந்து வணங்குவோர்க்கு பிறப்பே இல்லை.
இது கர்மத்தை தன்னில் ஏற்கும் ஆலயம், கரைத்துவிடும் ஆலயம்
இங்கு எல்லாமே அந்த வெளியில் அந்த ஆகாயத்தில் கலந்துவிடுகின்றது என்பது நிஜம், இங்கு மறைந்துபோகும் ஒவ்வொன்றும் அந்த வெளியில்தான் கரைகின்றது
மயானத்தில் உடல் வெந்து கரைந்துபோகும் கோலமும் அதுதான், மானிட உடல் என்றல்ல, இந்த உலகம் இந்த பிரபஞ்சம் என எல்லாமே அந்த வெளியில் கலந்துவிடுகின்றன
அந்த வெளிதான் மூலமானது,அதுதான் நிரந்தமானது
அந்த வெளியில் இருந்துதான் காற்று வரும், காற்றில் அக்னி வரும் பின் இந்த கலவையால் நீர் வரும், பின் நிலம் வரும் அந்த நிலத்தில் இருந்து உயிர்கள் வரும்
இதுதான் அழியும்போதும் நடக்கும்
எல்லாம் அப்படியே கரையும், நிலம் நீரில் கரையும் நீரை அக்னி எடுக்கும் , அக்னி காற்றில் கரையும், காற்று ஆகாயத்தில் கரைந்துபோம்
இந்த நிலையினை சொல்லும் ஆலயம் அதாவது கடைசி நிலை இதுதான் இதை அண்டியோர்க்கு பிறப்பே இல்லை என போதிக்கும் ஆலயம் இது
பிறப்பு என்பது கர்மம் கழிக்க வருவது, கர்மமே இல்லை எனும்போது அந்த கர்மமெல்லாம் அந்த வெளி எனும் ஆலாயத்திலே கரைந்துவிடும்போது அங்கே பிறப்புக்கு வழியில்லை
இந்த ஆலயம் இந்த தத்துவத்தை போதிக்கின்றது, பிறப்பற்ற நிலையினை கர்மம் கடந்த நிலையினை சிவன் அருள்கின்றார் என்பது
சித்தர்கள் ரிஷிகள் யோகிகளெல்லாம் மனதால் இந்த வெளியில் இந்த பிரபஞ்சத்தில் கலந்தவர்கள் அதனாலே எல்லாம் கடந்த நிலை முக்காலம் அறிந்த நிலை என எல்லா சக்தியும் அவர்களுக்கு கைகூடுகின்றது
அந்த நிலைதான் முக்தி நிலை, மனதால் சிந்தையால் அந்த பிரபஞ்ச பெருவெளியில் அவர்கள் கலந்துவிடுவார்கள் அதுதான் சமாதி நிலை
கர்மம் முடித்த கர்மம் எரித்த அனுபூதி நிலை
அந்த நிலையினை இந்த ஆலயம் கொடுத்துவிடும் , அண்டிவரும் பக்தர்களுக்கு கொடுத்துவிடும் அவர்கள் முழு ஞானநிலை அடைவார்கள் என்பதுதான் இந்த ஆலயத்தின் தாத்பரியம்
அதனாலே இந்த தலம் திருமெய்ஞனாம் என்றானது, அந்த சிவன் ஆதிபரமேஸ்வரர் என்றானார்
இந்த வெளிதான் இந்த ஆகாயம்தான் ஆத்மாவின் தத்துவமாகவும் கருதபடுகின்றது, ஆத்மா இந்த வெளியின் தன்மை கொண்டது, உணர்வும் மனமும் கொண்ட ஆத்மா இந்த தத்துவமே
அதனாலே பரம்பொருள் எனும் மூலத்தை பரமாத்மா என்றும் ஆத்மாவினை ஜீவாத்மா என்றும் அழைக்கும் மரபு உருவானது
அந்த வெளி ஆதி அந்தமில்லாதது அது கால நேரத்தை கடந்தது இந்த பிரபஞ்சம் அதிலிருந்துதான் தொடங்கி அதில்தான் முட்கின்றது
இந்த வெளிதான் வேதங்களை ஒலிவடிவில் கொண்டிருகின்றது, அந்த வேதங்களை கொண்டுதான் பிரம்மன் உலகை படைக்கின்றான், வேதங்கள்தான் உலகை இயக்குகின்றன
இந்த வேதங்களின் சப்த வடிவினைத்தான் ரிஷிகள் நால்வகை வேதங்களாக பதித்து தந்தார்கள், அந்த வேதங்கள் உலகை படைக்க தொடங்குமுன் சிவனை வணங்கும் தலம் இது
பின் எல்லாம் முடியும்போது அவை சரணடையும் இடமும் இதுதான்
இந்த தலத்தின் பெருமையினை சொல்லும்போது அங்கு வாழ்ந்த ஆபஸ்தம்ப ரிஷி என்பவரை சொன்னாலே எல்லா தத்துவமும் விளங்கிவிடும்
அப்படி ஒரு முனிவர் இருந்தார், அவர் தானம் கேட்க போன இடத்தில் ஒருவன் அவர்மேல் நீரை எறிந்தான் ஆனால் நீர் அவர்மேல் படாமல் அந்தரத்தில் நின்றது
அதிசயத்த சாமான்யன் அவர் காலில் வீழ்ந்து பணிந்தார், அந்த ஆஸ்தம்ப முனி இந்த தலத்தில் வழிபட்டார் தவமிருந்தார்
ஆபஸ்தம்ப முனி இந்த தலம் ஆகாய தத்துவம் கொண்டது என்பதை எளிதாக புரியவைத்தார், அந்தரத்தில் நீரை நிறுத்தினார் என்பது இந்த தலம் ஆகாய சக்தி கொண்டது என்பதை தெளிவாக காட்டுகின்றது
ஆம், இங்கே உணரகூடியது எளிதான தத்துவம், பூவி ஈர்ப்பு விசை என்பது ஜடபொருளுக்கு மட்டுமல்ல ஆத்மாவுக்கும் உண்டு
பூமி எல்லா பொருளையும் ஈர்ப்பது போல ஆன்மா எல்லா மாயைகளாலும் ஈர்க்கபடும், மாயைகள் கர்மத்தை செய்ய வைக்கும், கர்மம் ஆத்மாவினை கட்டிபோட்டு மறுபடி மறுபடி பூமியில் பிறக்க வைக்கும்
புவீ ஈர்ப்பு விசையினை அறுத்த பொருள் அந்தரத்தில் மிதப்பது போல, மாய பிடியினை கர்மங்களை அறுத்தால் ஒரு ஆத்மா அந்தவெளியில் கலந்தே விடும்
அந்த அதிசயத்தை செய்வது இந்த ஆலயம்
இது மிக மிக சக்திவாய்ந்த ஆலயம், யுகம் யுகமாக பிரம்மனை அவன் படைப்புக்களை தன்னுள் ஈர்த்து பின் இன்னொரு படைப்பாக உருமாற்றும் ஆலயம்
இது விதிகளுக்கு அதாவது பூலோக ஆகம விதிகளுக்கோ எதற்குமோ கட்டுபடாது, ஆகாயத்தை போல அது எல்லையோ விதிகளோ இல்லாதது
இங்கு சென்று வழிபட்டால் ஒருவனின் கர்மா அழியும் அவன் முக்திநிலை ச்மாதி நிலை அடைந்து ஆகாயவெளியில் இருந்து மறுபடி பிறப்பது போல் உருமாறுவான்
அதுவரை அவனை ஆட்டிவைத்த கர்மம், இன்னும் கர்ம்படி அவனை இழுத்துசென்ற விதி மாறும் அவனோடு ஒத்துழைக்க தொடங்கும்
பிறப்பில்லா பெரும் பாக்கியமும் இந்த காலமட்டும் நிம்மதியும் நன்மைகளும் சூழும் பாக்கியமும் பெருவான்
நால்வகை வேதங்களும் வணங்கியஆலயம் இது என்பதால் இங்கு சென்று வணங்கினால் எல்லா ஞானமும் இயக்க சூத்திரமும் புரியும், கர்மம் அழிந்து எல்லா ஞானமும் தெளிவும் வாய்க்கும்
முக்திநிலை ஞானநிலை எனும் பெரும் நிலை வாய்க்கும்
பிறப்பில்லா நிலை அடைய , கர்மம்முழுக்க அழிய, இந்த வாழ்வின் அவலம் நீங்கி புது வடிவாய் புதுவாழ்வாய் உருமாறி வர இந்த ஆலயம் வந்து வழிபடுங்கள்
அங்கே பழையன எல்லாம் கழிந்து புது யுகத்தில் புதுவாழ்வில் புது வெளிச்சத்தில் புது மனிதனாய் திரும்ப வருவீர்கள், ஞானமும் தெளிவும் அறிந்த நிலையும், அதனால் பற்றற்ற கவலைகள் அற்ற நிதானமும் அன்பும் கூடிய, செய்வதெல்லாம் வாய்க்கும் சிறந்த ஞானமும் அறிவும் தெளிவும் கொண்டவர்களாக திரும்பி வருவீர்கள் இது சத்தியம்
எந்த அளவுக்கு இது சூசகமாக அமைக்கபட்டிருக்கின்றது என்றால் ஆண்டின் தொடக்கமான சித்திரைமாத தொடக்கத்தில் சூரிய கதிர்கள் சிவலிங்கம் மேல் விழும்படி அமைக்கபட்டிருகின்றது
அதாவது பழையது புகுந்து புதியதில் புகும்போது சிவனருளோடு இந்த ஞானபரமேஸ்வரரின் அருள் ஞானத்தொடு தொடங்கவேண்டும் என்பதை சூசகமாக சொல்ல அப்படி ஏற்பாடு செய்யபட்டிருக்கின்றது
இந்த அதிசயம் இன்றும் உண்டு
அதனால் மிக மிக உறுதியாக சொல்லலாம், அது இப்போது சிறிய வெளிதெரியா ஆலயமாக இருக்கலாம் ஆனால் அதுதான் மகா தொன்மையானது, யுகங்களுக்கு முன்பே வேதங்களும் பிரம்மனும் வந்து வழிபட்ட தலம் அது
அதனால்தான் சம்பந்தரும் சுந்தரரும் தேடி சென்று பாடி வணங்கி பிறப்பில்லா பெருநிலை எய்தினார்கள், ரிஷிகளும் மகான்களும் அவ்வழியே பணிந்து முக்தி அடைந்தார்கள்
சோழமன்னர்களின் முன்னோர் முதல் ராஜராஜசோழன் என எல்லா சோழ மன்னர்களும் ஓடிவந்து பணிந்து திருப்பணி செய்து கொண்டாடிய தலம் இது
இது ஆகாய தலம், திருசிற்றம்பலம் எனும் அந்த மகா புனிதமான வார்த்தையின் தாத்பரிய ஆலயம்
“சிவாய நமஹ” எனும் பிறப்பறுக்கும் மந்திரம் மட்டுமே இங்கு உச்சரிக்கபடவேண்டும் என்பது இங்கு வலியுறுத்தபடுவது
அந்த தலம் உங்கள் வாழ்வை மாற்றும், அருளல் தொழில்வடிவாக அங்கு வீற்றிருக்கும் கருணை மிக்க சிவபெருமான் உங்கள் எல்லா கர்மத்தையும் ஏரித்து ஆகாய பிரபஞ்சத்தில் கலந்த பெரு ஞானத்தை தெளிவினை உங்களுக்கு அருள்வார், பிரபஞ்ச பெருவெளியோடு கலந்துவிடும் உங்கள் மனம் முக்தி நிலையினை மிக எளிதாக தரும், மாபெரும் பெருவாழ்வு வாழ்ந்து பிறப்பில்லா பெருநிலை அடைவீர்கள். இது சத்தியம்.