பன்னிரு ஆழ்வார்கள் – முன்னுரை.
பன்னிரு ஆழ்வார்கள் – முன்னுரை.
பாரத திருநாடு ஞானபூமி, உலகமெல்லாம் உணவும் பொன்னும் பொருளும் தேடிகொண்டிருந்த காலத்தில் ஒரு பிடி பொன்னுக்கும் ஒரு வாய் உணவுக்கும் ஓடிகொண்டிருந்த காலத்திலே அது வாழ்வை தாண்டி வாழ்வுக்குப் பின்னால் இருப்பது என்ன என்பதை சிந்தித்தது.
பூமியில் பொன்கிடைக்கும், கடலை தாண்டினால் வளம் கிடைக்கும் என ஒவ்வொரு இனமும் சிந்தித்த காலத்திலே பூமியும் கடலும் ஏன் வந்தது? ஏன் இந்த உலகம் படைக்கப்பட்டு இயங்குகின்றது என யோசித்த மதம் இந்துமதம்.
அது வாழ்வின் நோக்கத்தையும் வாழ்க்கையின் முடிவிற்கு பின் இருப்பதையும் மட்டும் சிந்தித்தது, எல்லா இனமும் உயிர் பிரிந்தது என்றபோது, ஆன்மா அழியாதது அதனால் உடல் பிரிந்தது எனச் சொன்ன மதம் இந்துமதம்.
ஆத்மாவின் ஈடேற்றம், ஒரு ஆத்மா இறைவனை உணர்ந்து அவனை அடைவதே வாழ்வின் ஒரே நோக்கம் என்பதை என்றோ உணர்ந்து, உலக நிலையாமை சொல்லி, அவனுக்கு ஞானம் போதித்து இறைவன்பால் திரும்ப வழி செய்த மதம் இந்துமதம்.
அதன் வேதங்கள் தொடங்கி , உபநிஷதங்கள், புராணங்கள், மந்திரங்கள் என எல்லாமே அதை அடிப்படையாகக் கொண்டவை.
அதை அஸ்திபாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை.
அந்த இந்துமதம் மென்மேலும் மக்கள் தெய்வத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், புதுப்புது தத்துவம் பிறக்கவும் இன்னும் இன்னும் தெய்வத்தினை மக்கள் அறியவும் மிகச் சரியான வழி ஒன்றைச் செய்தது.
ஒரே அரசன் தன் படைகளை இரண்டாகப் பிரித்துப் பயிற்சியளிப்பது போல,அவர்களுக்குள் சண்டையிட்டு பலமாவது போல ஒரு ஏற்பாட்டை செய்தது.
சைவம், வைணவம் என இரு பிரிவுகள் வந்தது அப்படித்தான்.
இரண்டும் வேறு வேறு என நினைத்தால் அது மடமை, இரண்டும் ஒன்றே இரண்டும் ஒரே வேதத்தில் இருந்து வந்தவை, அடிப்படையில் ஒன்று.
ஆனால், நதி இரு கிளையாகப் பிரிந்தால் இடைப்பட்ட நிலம் இன்னும் செழிக்கும் என்பது போல, ஒருபுறம் கூரான வாள் இன்னும் வெட்டும் என்பது போல, இரு கருத்துக்கள் மோதும்போது புதிய வாதங்கள் வரும். ஞானம் பெருகும் என்பதற்காக இரு பிரிவுகளை அது அனுமதித்தது.
சைவம், வைணவம் என வந்தது இப்படித்தான்.
சைவத்தினை அகத்தியர் போன்ற ரிஷிகளும், இன்னும் பலரும் வந்து தாங்கினார்கள்.
வைணவம் அப்படி இறைவழிபாட்டின் மூலத்தில் இருந்து தானே வந்தது, இறைசக்தி அதை உருவாக்கிக் கொடுத்தது.
அந்த வைணவம் நிலைக்க தழைக்க பல வடிவங்களில் பலர் வந்துகொண்டே இருந்தார்கள்.
கோவில் கட்ட ஒருவன், சிலைவடிக்க ஒருவன், மந்திர ஸ்லோகம் எழுத ஒருவன் என யார்யாரோ வந்து கடமையாற்றினார்கள்.
அவ்வகையில் மக்களிடம் ஆழ்ந்த பக்தியினை பரப்ப, ஆழ்ந்த ஞானத்தில் உதித்து பெரும் அடிதளம் இட்டு சென்றவர்கள் ஆழ்வார்கள்.
தமிழின் வைணவமரபு இவர்களிடமிருந்துதான் தொடங்குகின்றது, தமிழ்பேசும் இனம் பரமனை அடைய ஞானமும் பக்தியும் பெற பரம்பொருளால் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் இவர்கள்.
அவர்கள்தான் ஆழ்வார்கள்.
இவர்கள்தான் வைணவ பாரபரியத்தின் அஸ்திபாரம், இவர்கள்தான் அடிதளமிட்டார்கள், வேதங்களின் சாரத்தை பாடல்களாக்கி வழிபாடாக்கி மக்களுக்குத் தந்தார்கள்.
இவர்கள் இட்ட அஸ்திபாரத்தில்தான் பின்னாளில் ஆச்சாரியர்களெல்லாம் வந்தார்கள், வைணவம் வளர்ந்தது.
அத்வைதம் எனும் சைவம், துவைதம் எனும் இந்த வைணவம என்பதெல்லாம் இந்துமதப் பிரிவுகள் அல்ல, மாறாக இரு கருத்துக்களிலும் இரு கொள்கைகளிலும் ஒருவன் முட்டி மோதி ஞானம் அடைந்து இறைவனை அடையவேண்டும் ஞான உரைகற்கள்.
அவ்வகையில் இந்த ஆழ்வார்கள் எனும் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள், இறைவனின் அருளால் வந்தவர்கள் இறை அவதாரமாக வந்தவர்கள், இறை அருளில் பெரும் காரியம் செய்துவிட்டு சென்றவர்கள் மகா முக்கியமானவர்கள்.
இவர்களைப் படிக்காமல் வைணவ தாத்பரியம் புரியாது, இவர்களைப் படிக்காமல் அதன் வடிவம் புரியாது.
சைவம் இறுக்கமான மதமாக அறியப்பட்டது, அதன் பாடல்கள் எளிமையும் இறுக்கமும் கொண்டவவை, அதன் போத்னைகள் எல்லாம் துறந்து வாழ சொல்லும் வகை கொண்டவை.
வைணவம் வாழ்வை அதன்போக்கில் ஆனந்தமாய் எடுக்கச் சொன்னது, இறைவன் ஆனந்த வடிவம் அதனால்
அவனோடு இப்பிறப்பில் ஆனந்தமாய் வாழ ஆட்டம் , பாட்டம், கொண்டாட்டம், அலங்காரம் என அது உற்சாகம் கொண்டது.
சைவமோ வைணவமோ இரண்டுமே வேதத்தில் இருந்து வந்தவை என்பதால் அடிப்படை ஒன்றே.
ஒன்று கொஞ்சம் இறுக்கமான வாசல், இன்னொன்று கொண்டாட்டமான பரந்த வாசல் மற்றபடி இரண்டும் ஒரே நோக்கம் கொண்டவையே.
அப்படிப்பட்ட இந்துமதத்தின் வைணவம் மாபெரும் ஞானத்தைக் கொண்டாட்டமாக கொண்ட வழி, அந்த ஞானவழியினை ஏற்படுத்தித் தந்தவர்கள் ஆழ்வார்கள்.
அவர்கள் அஸ்திபாரமிட்டத்தில்தான் இங்கு வைணவம் எழுந்து பெரும் ஞானக் கோபுரமாய் எழுந்து ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது.
இந்துஸ்தானமெங்கும் எழுந்த அந்த ஞானமரபை தமிழுக்கு அடிதளமிட்டு தந்தவர்கள் இந்த ஆழ்வார்கள்
அவர்களைப் பற்றி அறியாமல் ஒரு இந்து இருக்கமுடியாது அல்லது கூடாது. அந்தத் தமிழும் அதில் சொன்ன ஆழ்ந்த ஞானமும் அந்த ஞானம் தரும் தாத்பரியமும் அவ்வளவு உன்னதமானவை.
இதனால் ஆழ்வார்களைப் பற்றி ஒரு சுற்று சுற்றி வரலாம், 12 ஆழ்வார்கள் என வணங்கப்படும் இவர்களின் வாழ்வும் போதனைகளும் வியாழன் தோறும் தர முடிவு செய்திருக்கின்றோம்.
இதன் பின்பு சரித்திர பக்கம் செல்லலாம்.
ஆழ்வார்கள் என்பவர்கள் பிரபஞ்சத்தின் ஆழம் போன்றவர்கள், அவர்களின் முழுப்பாடலுக்கும் வார்த்தைக்கும் முழு அர்த்தம் சொல்லமுடியாது, அதில் வாழ்வியல் ஞானம், பரம்பொருள் விஞ்ஞானம் புரிந்துகொள்ளமுடியா பிரபஞ்ச ரகசியம் என எல்லாமும் உண்டு.
அந்த ஞானபாற்கடலின் சில சிறிய துளிகளை முடிந்தளவு எடுத்துத் தர முயல்கின்றோம்.