பன்னிரு ஆழ்வார்கள் : 03 பேயாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 03 பேயாழ்வார்.

“பேயரேயென க்கியாவரும்யானு மோர்
பேயனே யெவர்க்கும் மிது பேசியென்
னாயனேயரங்காவென்றழைக்கின்றேன்
பேயனாயொழிந்தேனெம்பிரானுக்கே”

“சீராரு மாடத் திருக்கோவலூரதனுட்
காரார் கருமுகிலைக் காணப்புக் – கோராத்
திருக் கண்டேனென் றுரைத்த சீரான்கழலே
யுரைக்கண்டாய் நெஞ்சேயுகந்து”

தொண்டை நாட்டின் மிக முக்கிய ஸ்தலமாக பக்தி மிகுந்த இயற்கை செழுமை மிகுந்த நகரமாக விளங்கிய இடம் மயிலாப்பூர்.

இன்று சென்னை என பெருநகரமாக அந்த ஊர் ஆகிவிட்டாலும் அன்று அது ஏகப்பட்ட ஊர்களை தனித் தனியே கொண்டிருந்த பகுதியாய் இருந்தது, அதில் முக்கியமானது இந்த மயிலாப்பூர்.

இயற்கை வளம் மிகுந்திருந்த ஊர் அது, மயில்கள் ஆர்பரிப்பதால் மயிலாப்பூர் என்றாயிற்று. அது முன்னாளைய கிரேக்கர்களின் குறிப்புகளில் உண்டு, இன்னும் பல வரலாற்று இடங்களில் உண்டு.

அது வாழ்வாங்கு வாழ்ந்தபூமி காஞ்சி போல் வரலாற்றில் அடையாளமிட்ட பூமி, ஆன்மீகமும், லௌகீகமும் கடலும் அலையும் போல ஒருங்கே வளர்ந்த ஞானபூமி.

அதன் பெருமைகள் இந்து அரசர்கள் இல்லா காலங்களில் ஐரோப்பிய மிலேச்சர் காலங்களில்தான் கெட தொடங்கின. ஆனாலும், தன் அடையாளத்தை அது இழக்கவில்லை.

போர்ச்சுகீசியரும் பிரிட்டிசாரும் கிழக்கு கடற்கரையினை ஆக்கிரமித்து சாந்தோம் கோட்டை, ஜார்ஜ் கோட்டை என கட்டத்தொடங்கியபோது இந்த இடம் பாதிக்கப்பட்டது, பல ஆலயங்கள் நகர்த்தப்பட்டன. சில தடமின்றி அழிக்கப்பட்டன‌.

ஆனால், அந்த பழம்பெருமையின் அடையாளமாக எஞ்சியிருப்பது கோலவிழி அம்மன் கோவில். கடைசிவரை அதைத் தொட்டுபார்க்க யாருமில்லை, ஒரு காலத்தில் கபாலீஸ்வரரும் இந்த கோலவிழி அம்மனும் ஒரே இடத்தில்தான் இருந்தார்கள், போர்ச்சுகீசியர் கபாலீஸ்வரர் ஆலயத்தை அழித்தார்கள்.

ஆனால், அன்னை மயில்வடிவில் தவமிருக்கும் அந்த ஆலயத்தை தொடமுடியவில்லை. விட்டுவிட்டார்கள். அது நீடிக்கின்றது. பின்னாளில், கபாலீஸ்வரருக்கும் அப்படியே உடைக்கப்பட்ட காளிகாம்பாள் ஆலயத்துக்கும் வேறு இடங்களில் ஆலயங்கள் உருவாக்கப்பட்டன‌.

மயிலாப்பூர் மிக மிகப் பாரம்பரியமான மிக மிகத் தொன்மையான ஸ்தலம் அங்கே சைவமும் வைணமும் தழைத்தோங்கின, சப்த சிவஸ்தலங்கள் இன்றும் அங்கு உண்டு. வைணவ தலங்களும் உண்டு.

அந்த மயிலாப்பூரில் அவதரித்தவர்தான் பேயாழ்வார்.

அங்கே ஆதிகேசவ பெருமாள் மயிலாப்பூர் ஆலயத்தின் தீர்த்தமான சித்திரை குளத்தில் ஒரு சிகப்பு அல்லி மலரில் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அவதாரம் செய்தார் பேயாழ்வார்.

அவரும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் போல மானிட பிறப்பு அல்ல “அயோ நிஜர்கள்” எனப்படும் அவதார பிறப்பு.

இவர் விஷ்ணுவின் கையில் இருக்கும் நந்தகம் எனும் வாள் அம்சமாக பிறந்தார், வாள் என்பது தன்னையும் காக்கும் எதிரியினையும் வீழ்த்தும் ஆயுதம், நம்பியவரைக் காக்கும் ஆயுதம்.

அந்த வாளின் அம்சமாக பின்னாளைய சமண குழப்பங்கள் இதர குழப்பங்களில் இருந்து பகவான் வழியினை காக்க முன்பே அவதரித்தவர் வாளின் அம்சமாக அவதரித்தவர் பேயாழ்வார்.

இவரின் இயற்பெயர் அறிந்தவரில்லை, பேயாழ்வார் எனும் பெயர் நிலைத்துவிட்டது.

பேய் என்றால் கொடிய குணம் படைத்த துர் ஆவி என இப்போது மருவி விட்டது. ஆனால், பேய் என்றால் பெரிய மகாபெரிய சக்தி எனப் பொருள்.

பேய் மழை, பேய் காற்று என்பதெல்லாம் அதுதான். சுவை மிகுந்த வாழையினை கூட பேய்வாழை என்பார்கள்.

பேய் என்றால் ஒரு வேகம், ஒரு பெரிய ஆவேசம், இடைவிடாமல் இயங்கும் பெரிய சக்தி, அதி தீவிரமான சக்தி.

எது அதிதீவிரமோ அது அதிவேகமும் அதி ஆற்றலும் கொண்டதோ அதை பேய் என்பார்கள். பேய் என்றால் பெரிய என்றொரு பொருளும் உண்டு.

மிகச்சிறந்த உதாரணம் காரைக்கால் அம்மையார். தன் இல்லறவாழ்வு இனி இல்லை எனும் நிலையில் அவர் சிவனடிமை எனும் நாயனார் நிலைக்கு சென்றபோது மூத்த உருவம் அதாவது பெரியவர் எனும் உருவம் பெற்றார், அது பேய் உருவம் என்றானது.

அவரை “பேயார்” என அழைக்கின்றார் சுந்தரர்.

“பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம் ” என தானும் சிவனை சுற்றி நிற்கும் சக்திமிக்க கணங்களான பேய்களில் ஒன்றாகும் வரம் வேண்டும் என்கின்றார் காரைக்கால் அம்மையார்.

ஆக பேய் என்றால் பெரிய, தீவிரமான, சக்திமிக்க எனப் பொருள்.

பகவான் மேல் அதி தீவிரமான பற்று கொண்டதால், பெரும் பக்தி கொண்டதால் எப்போதும் அவன் காரியங்களை ஆவேசமாக செய்தலும், ஒரு பித்து நிலையில் அவனை உளம் உருக பாடியதாலும் அவர் பேயாழ்வார் என்றானார்.

இவர் மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்து தன் மாபெரும் திருப்பணியினை துவக்கினார், ஒவ்வொரு இடமாக சென்றுபாடி மங்களாசனம் செய்துவைத்தார்.

அவர் மங்களாசனம் செய்த ஆலயங்கள் பதிமூன்று மற்றும் திருப்பாற்கடலை பற்றி பாடியது.

இவர் திருக்கோவிலூரில் மண்டூக முனிவரின் அறையில் சிறிய அறையில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வாருடன் இருட்டு அறையில் பகவனால் நெருக்கப்பட்ட காட்சி எல்லோரும் அறிந்தது.

அப்போது பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் அக இருள், புற இருள் நீங்க பாடியபின் இவருக்கும் இரு இருளும் அகன்று பகவானை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

பேயாழ்வாரின் வாழ்வும் திருக்கோவிலூர் திருசம்பவமும் சொல்வது அதுதான், திருவந்தாதியின் முதல் இருநூறு பாடல்கள் அதாவது “வையம் தகளிய” எனக் கடலை நெய்யாக்கி ஒளியேற்றி எனப் பொய்கையாழ்வார் பாடிய நூறு பாடலையும், “அன்பை நெய்யாக்கி” என பூதத்தாழ்வார் பாடிய நூறு பாடலையும் கேட்டாலே புற, அக இருளெல்லாம் நீங்கி பகவானை தரிக்கலாம் எனபது.

அப்படி இவரும் பகவானை தரிசித்து 100 பாடல்களை பாடினார், அதுதான் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மூன்றாம் திருவந்தாதியாக அமைந்துள்ளது.

இவரின் மிகப்பெரிய முத்திரை திருமழியிசை ஆழ்வாருக்கு ஞானம் போதித்து அவரை பெரும் ஞானியாக்கி ஆழ்வாராக்கியது, பகவானை எப்படி காண்பது, எப்படி அடைவது என குழப்பத்தில் இருந்த அவருக்கு பேயாழ்வார்தான் குருவாக நின்று பாதை காட்டினார்.

அதனால் அவர் ‘மஹதாஹ்வயர்’ என்ற பட்டமும் பெற்றார்.

இந்த ஆழ்வாரின் வரலாறும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் போல் கொஞ்சம்தான் கிடைத்தது. மூவரும் எப்படி மானுடரில் பிறக்கவில்லையோ அப்படி மரிக்கவுமில்லை, கரைந்தே போனார்கள்.

அவர்களின் பாசுரங்களே அவர்ளைப் பற்றி நிரம்ப சொல்கின்றது, அவ்வகையில் பேயாழ்வாரின் பாசுரங்களும் அவ்வளவு சிலாகிப்பானவை.

அவர் முழுக்கப் பகவானிடம் அன்பும், பக்தியும், சரணடைதலும் பற்றியே பாடுகின்றார், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே அங்கே பிரிவினை ஏதுமில்லை என ஆணிதரமாகப் போதிக்கின்றார்.

அழகிய உருவகமும், மயக்கம் தரும் வார்த்தைகளுமாய் அவர் பகவானைப் பாடுகின்றார், அவரின் எல்லாப் பாடல்களும் கிடைக்கவில்லை என்றாலும் திருவந்தாதி பாடிய பாடல் மட்டும் கிடைத்தது.

அவை அவ்வளவு உருக்கமான பாசுரங்கள், அவற்றில் சிலவற்றைக் கண்டாலே அவரின் அதிசயமான உருக்கமான மனம் மருகி நிற்கும் பக்தி கோலம் தெரியும்.

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று”

அதாவது, ‘திரு’ என்றால் மகாலஷ்மி, அந்த ல‌க்ஷ்மியைக் கண்டேன், அப்படியே திருமாலின் பொன் போல் ஜொலிக்கும் மேனியைக் கண்டேன்.

சூரியனைப் (அருக்கன்) போல் ஒளி விடும் நிறத்தைக் கண்டேன், யுத்தத்திற்கு கிளர்ந்து வரும் சக்ராயுதம் கண்டேன், அவன் கையில் சங்கு இருப்பதைக் கண்டேன், கடல் வண்ணமாய் இருக்கும் அவனிடத்தில் எனப் பொருள்.

இப்பாடல்தான் திருக்கோவிலூர் சிறிய அறையில் முதல் மூன்று ஆழ்வார்களும் பாடிய பாடலில் மூன்றாம் ஆழ்வாரான பேயாழ்வார் பாடிய முதல் பாடல்.

மூன்றாம் திருவந்தாதி தொடக்கமும் இதுதான்.

முதல் இரு ஆழ்வாரும் அக இருள், புற இருள் நீங்கப் பாடியபோது இவர் அந்த இரண்டும் நீங்கினால் மகாலஷ்மியோடு பகவானைக் காணலாம் என்பதைச் சொல்லிப் பாடுகின்றார்.

“இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டுகொண்டு என் மனம்”

பகவானே, உன் பாதம் கண்டேன், என் பிறவியினை அறுத்துவிட்டேன் அதனால் பிறப்பில்லா நிலை அடைந்தேன், பொன் மின்னும் உன் பெரிய மார்பில் பூமாலை அணிந்த கோலத்துடன் மஹாலட்சுமியுடன் நீ எனக்கு தரிசமானாயே அன்றே உன்னோடு என் மனம் ஒட்டிவிட்டது, இனி உன்னை எக்காலத்திலும் நீங்க மாட்டேன்.

( மரு என்றால் அப்படியே ஒட்டிக்கொள்ளுதல் எனப் பொருள். மருதாணி, மரு என்பதெல்லாம் நீங்காத, நீக்கமுடியாத எனும் பொருளில் வரும்.)

“பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் தேசு உடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு”

மணம் மிக்க மலர்களோடு கூடிய திருத்துழாய் மாலையை அணிந்தவனும், ஒனியையுடைய திருச்சக்கரத்தை ஏந்தியவனும், திருச்சங்கத்தை உடையவனும், சார்க்கவில்லை உடையவனும், மிக்க ஆரவாரமுடையவனாய் வந்த தந்தவக்கிரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய வடிவு எப்படிப்பட்டதென்றால், பேசுகின்ற அவரவர்கள் எவ்வெவ்வளவு பேசுகின்றார்களோ அவ்வளவுதான் அவர்களால் முடியும்.

அதாவது, பகவானின் அழகும் பெருமையும் ஆற்றலும் எல்லையில்லாதது அதனால் மானிடரால் முழுவதும் அவன் பெருமை பேசிவிட முடியாது, பாடிவிட முடியாது.

அவரவர்க்கு என்ன முடியுமோ அந்த அளவில் முழுவதும் பேசுகின்றார்கள், தங்களால் முடிந்த அளவு அவன் பெருமையினைச் சொல்கின்றார்கள். ஆனால், அதெல்லாம் முழுமை அல்ல, அவர்களால் முடிந்தது மிக மிக கொஞ்சமே. சிப்பியால் கடல் நீரை அள்ளியது போல் அவரவரர் அளவில் பேசிக் கொள்கின்றார்கள் என்பது பொருள்.

இதைத்தான் “தோள் கண்டார் தோளே கண்டார்” என்றான் கம்பன்.

“ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங் கடலை நேரே
கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து?”

மேகங்கள் நிறைந்த பெரிய கடலை தானே முன்னின்று கடைந்தவனும் ,ச‌கல உலகின் காவலனும், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டிருப்பவனுமான எம்பெருமானை நாள்தோறும் பணிந்து
துக்கங்களுக்கு மூலமான பாவகர்மாக்களைச் செய்திருந்தாலும் அதனால் துன்பபட்டவர் எவர்?

அதாவது, எந்தப் பெரும் பாவி என்றாலும் பகவானின் பாதங்களைச் சரணடைந்தால் அவர் பரிசுத்தமாகி பாவத்தின் கர்மங்களில் சாபங்களில் இருந்து விடுதலையாவார் என்பது ஆழ்வாரின் போதனை.

“மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ”

அவன் மண்முதல் அண்டமெல்லாம் விரிந்து நீண்டு எட்டு திசையும் ஆக்கிமித்தவனாய் தன் பாதத்தாலே உலகை அளந்த அந்த வாமனனாய் வந்தான்.

அவன் கோவர்த்தன மலையினை உயர்த்தி குடையாக பிடித்து மக்களையும் பசுக்களையும் காத்தான்.

ஆம், உலகை காலால் மிதித்துக் காத்தவனும் அவனே, அதே உலகின் மலையினைத் தலைக்கு மேல் பிடித்துக் கையால் பிடித்து எல்லோரையும் காத்தவனும் அவனே.

அவன் பாதங்களின் பெருமை சொல்வேனா? அவன் கைகளின் பெருமையினைச் சொல்வேனா? அவன் எல்லையில்லாப் பராக்கிரமம் கொண்டவன்.

அவன் கால்களில் பணிந்தால் தன் கரங்களால் உங்கள் எல்லோரையும் காப்பான் அவ்னைச் சரணடையுன்கள்.

“விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு”

மாவலியிடம் நீரினால் தானம் பெற்றவன் வாமனன், அவன் நெஞ்சில் ஈரம் உள்ளவன். நீர் போல் மக்களைக் காப்பவன் வாழவைப்பவன்.

அந்த நீரை போல் வளம் தருபவன் விண்ணகரத்தில் இருக்கின்றான் திருவெக்காவில் இருக்கின்றான், நீர் ஆடும் திருவேங்கடத்தில் இருக்கின்றான், வளம் மிகுந்த திருவேளுக்கையில் இருக்கின்றான், இன்னும் பெருமை மிக்க திருவரங்கத்தில் இருக்கின்றான், தெற்கே திருக்கோஷ்டியூரில் இருக்கின்றான்.

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் பகவான் திருப்பதியில் நின்ற கோலம், திருவரங்கத்தில் சயன கோலம், சில இடங்களில் நடந்த கோலம் எனப் பல வடிவங்களைச் சுட்டிக்காட்டி, இப்படியெல்லாம் நின்றும் நடந்தும் படுத்தும் காட்சியளிக்கும் பகவான், நாம் நடக்கும்போதும் நிற்கும்போதும் சயனிக்கும் போதும் எப்போதும் காத்துக்கொண்டே இருக்கின்றார் என்பது, அதைப் போதிக்கின்றார் ஆழ்வார்.

“நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும்
ஆர் படு வான் நேமி அரவு அணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு”

தன் முன்னே வந்து நின்று எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும், நேர்த்தியான மணிகளை உடைய தேரின் மேலேறி வந்தவனுமான பாணாசுரனின் ஐநூறு அடி உயரமுள்ள ஆயிரம் தோள்களும் ஒரே நேரத்தில் கீழே விழுமாறு அறுத்துப்போட்ட பெரும் காரியத்தைச் செய்த கூர்மையான சக்கரத்தினை உடையவனை, பாம்பு அரண் மேல் படுத்திருப்பவன் பாதத்துக்கு என் நெஞ்சம் தானே சென்று உருகிக் கிடக்கின்றது என்பது பொருள்.

நெஞ்சமே ஆயிரம் ஆபத்து மலைபோல் வந்தாலும் அதனை வெட்டிப்போட பரமாத்மாவும் அவன் காவலும் உண்டு, அதனால் வருந்தாதே, அஞ்சாதே அவன் பாதங்களைச் சரண்டைந்தால் அவனே காப்பான் என்கின்றார் ஆழ்வார்.

“அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து”

மானிடரே, இது சரியானதா, இல்லையா என்று சந்தேகப்பட்டுக் கொண்டிராமல் குளிர்ந்த மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய சர்வ சாதாரணமான விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே தொழுங்கள். அப்போது எல்லா வினையும் நீங்கப்பெற்று விடுதலை அடைவீர்கள் என்பது பாடலின் பொருள்.

பகவானைச் சந்தேகத்துக்கும் தயக்கத்துக்கும் அப்பாற்பட்டு அதாவது நாம் செய்வது சரியா இல்லையா, இவரை வணங்கலாமா வேண்டாமா எனும் தயக்கமே இல்லாமல் சரண்டையுங்கள், கொஞ்சமேனும் அணு அளவேணும் தயங்காமல் முழுச் சரணாக்தியாகி நில்லுங்கள் அதுபோதும் எல்லாம் வாய்க்கும் என்கின்றார்.

“நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் கனைத்து உலவு
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெல்லத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து”

நெஞ்சமே நினைந்துபார், இந்த அண்ட சராசரமெல்லாம் எழுந்து நின்றவன், மாபெரும் விஸ்வரூபம் காட்டியவன் அன்று ஊழிக்கால வெள்ளத்தில் ஆலிலை மேல் ஒரு குழந்தையாய் உறங்கிக்கொண்டிருந்தானே அவனை எப்போதும் நினைந்து போற்றி வழிபடக் கடவாய் என்கின்றார்.

அதாவது, அந்தப் பரம்பொருள் அண்டமெல்லாம் நிறைந்தவன், அப்படி நிறைந்தவன் நம் நெஞ்சிலும் உண்டு. அவனை வேண்டி வழிபடுதல் வேண்டும்.

அவன் அண்டமெல்லாம் பரந்து விரிந்தவன் ஆனாலும் ஆல் இலை மேல் தன்னைச் சுருக்கிக்கொள்ளும் அளவு எளிமையானவன், அப்படிப்பட்டவன் அண்ட சராசரமாய் விரிவான் என்றாலும் நம் நெஞ்சிலும் வீற்றிருப்பான், நம் நெஞ்சுக்கும் குடிவருவான் அவனை அழைத்து நெஞ்சில் வைத்துப் போற்றவேண்டும் அவனையே தியானித்து முக்தி நிலை எய்ய வேண்டும் என்கின்றார்.

அவன் அண்டமெல்லாம் விரிந்தவன் என்றாலும் அடியார் மனதில் ஆலிலை குழந்தைபோல் வரும் எளியவன்.

குழந்தை பாசத்துக்குக் கட்டுப்படுவது போல் அவன் அன்பு ஒன்றுக்கே கட்டுப்படுவான் மனமே என்கின்றார்.

“உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து”

நான் அவனை முழுக்கப் பற்றிக்கொண்டு அன்பெனும் உணர்ச்சியால் தீபத்தை ஏற்றி அவனைத் தேடினேன், அந்த மாயன் குறைவின்றி என் நெஞ்சத்து புகுந்து முதலில் நின்றான், பின் வீற்றிருந்தான், பின் பள்ளிகொண்டருளினான்.

இது அழகான தத்துவத்தைச் சொல்லும் பாடல்.

மனமெல்லாம் அறியாமை இருளில் இருந்தேன், அன்பெனும் விளக்கேற்றி அவனைத் தேடினேன், எங்கிருந்தோ அந்த மாயன் மெல்ல வந்து என் மனதில் முதலில் நின்றான், பின் வீற்றிருந்தான், அதன் பின் என் மனமே கதி எனப் பள்ளிகொண்டான் என்கின்றார்.

பெருமாளை நான் அன்போடு தேடினால் மெல்ல மெல்ல வந்து நம் மனதிலே முழுக்கத் தங்கிவிடுவார் என்பதை அழகாகச் சொல்லும் ஆழ்வார் அப்படியே இன்னொரு போதனைச் சொல்கின்றார்.

பெருமாள் திருப்பதியில் நிற்கின்றார், இன்னும் சில ஆலயங்களில் வீற்றிருக்கின்றார், திருவரங்கத்திலே சயனிக்கும் கோலத்தில் பள்ளி கொள்கின்றார்.

ஆம், பகவானை வேங்கட மலை முதல் வணங்கி எல்லா ஆலயங்களிலும் வணங்கி திருவரன்கத்தில் அவனோடு
கலக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சொல்லி வரிசைப்படுத்துகின்றார்.

பகவான் ஒவ்வொரு ஆலயத்தில் நிற்கும் சிறப்பைச் சொல்லி சிலாகிக்கின்றார்.

திருப்பதியில் வணங்குங்கள் அவன் மனதால் வருவான், திருமால் சோலை போன்ற இடங்களில் அவன் நெஞ்சத்தில் அமர்வான், திருவரங்கத்தில் வணங்கினால் நீங்காமல் உங்கள் நெஞ்சோடே அமர்ந்து கொள்வான்

அவன் குடியிருக்கும் ஆலயமெல்லாம் தத்துவ அடையாளங்கள், ஒவ்வொன்றும் போதனைகள், என்னை வணங்கினால் மெல்ல வருவேன் அமர்வேன் அங்கேயே சயனம் கொள்வேன் என்கின்றான்.

அன்பெனும் விளக்கு மனதில் எரிய எரிய பக்தி எனும் ஓளி ஜொலிக்க ஜொலிக்க அந்தப் பகவான் மனதில் நீங்காமல் கலந்ந்துவிடுவான் என்பது அவரின் உருக்கமான போதனை.

“தானே தமக்குவமன் தன்னுருவே எவ்வுருவம்
தானே தவ்வுருவும் தாரகையும்-தானே
எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து
இருசுடருமாய இறை”

எம்பெருமான் அவனே அவனுக்கு உவமையானவன், அவன் எல்லா உருவிலும் இருப்பவன் தவமிருக்கும் தேவர்கள் அவனே, நட்சத்திரம் அவனே, வானமும் சுடர்களும் மதியும் சூரியனும் இன்னும் எட்டுதிசையும் அண்டத்தின் எல்லாமும் அவனே, அவனைச் சரண்டையுங்கள் என்கின்றார்.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

என வள்ளுவன் சொன்னதும் இதுதான்.

இப்படி மிக மிக உருக்கமான, நெஞ்சை அள்ளும் பாசுரங்களைத் தந்த அவரின் போதனைகள் மகத்துவமாவை, அவற்றின் சுருக்கத்தைக் காணலாம்

“பகவானின் கருணையினை அன்பின் கடாட்சத்தைப் பெற்ற நான் மகாலட்சுமியோடு பகவானைச் சேவித்தேன், அவரின் அழகிய திருமேனி கண்டேன், மாபெரும் பிரகாசமான அவரைக் கண்டேன். அவர் கையில் சங்கும், சக்கரமும் காணபெற்றேன்”

“பகவானே, என் மனம் உன்னைப்பற்றி ஆசைகொண்டது. இப்பொழுதே உன் திருவடியைப் பற்றிக்கொண்டேன், அதனால் எல்லையற்று வளரும் பிறவிகளைப் போக்கிக்கொண்டேன். கொடிய நரகங்களில் விழாமல் என்னைக் காப்பதற்கு நீயே அருமருந்தாவாய். என் மனதில் என்றும் குடிகொண்ட உன்னுடைய திருவடிகளே அமிருதமும் தனமுமாகும்.”

“நல்லது எண்ணும் நெஞ்சமே, பகவானுனுடைய பல பல நாமங்களையும் நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தையும் வாயாரச் சொல்லி கைகூப்பிச் சரணடைவோம், விருப்பத்தோடு அதைச் செய்வோம். அவனையே, அவனை மட்டுமே நம்முடைய கண்கள் காணக்கடவதாக”

“அவனுடைய திருநாமத்தைச் சொல்லி, அதன் பெருமையினை சக்தியினை பேசி னால் செல்வமும் அழகும் மேன் குலத்தில் பிறப்பும் ஒளியும் திறமையும் தானாய் விரும்பி வந்து நம்மைச் சேராதோ?

வேதங்களை ஆய்ந்த ஞானம் எனும் பூட்டாலும், ஐம்புலன்கள் எனும் கதவுகளை அடைத்து கொள்வதாலும் உலகின் மாயைகளில் இருந்து நாம் காக்கப்படுவோம், அதுவே சர்வேஸ்வரனை அடையும் வழி என்பதை அறிந்து கொள் நெஞ்சமே”

“என் மனமே, பகவானுடைய திருவடிகன் அர்ச்சித்து அவனிடத்தில் மனதைக் காட்டினால் பெண்ணாசையையழித்து வேதங்களின் உட்கருத்தான பரம் பொருளை அடைவது எளிதல்லவா? திருருப்பாற் கடலில் திருஅனந்தம் செய்யும் அந்தப் பெருமான், பாபணையில் படுத்திருக்கும் எம்பெருமான், என் மனமாகிய மலர்படுக்கையிலும் சயனிக்க வந்தானே, அவன் பெருமையினை எப்படிப் பாடுவேன்?”

“தாமரையில் அமர்ந்திருக்கும் மஹாலஷ்மியுடன் பாற்கடலில் இருக்கும் பரந்தாமன், பக்தர்களுகாக திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக எழுந்தருளியிருக்கின்றான், அவனையே நான் அடைக்கலமாக கொண்டு பாதங்களைப் பற்றிக் கொண்டேன்”

“மனமே, பகவான் நம்மிடத்திலே பெரும் அன்பு கொண்டவன் என அறிந்த நாள் நன்னாள், அதற்கு முந்தைய நாட்கள் அதன் பிந்தைய நாட்களெல்லாம் இனி நன்னாட்களே. அவனால் நடந்தது நன்றாக நடந்தது, நடப்பதும் நன்றாய் நடக்கும்”

“அவன் பாதம் பற்றியபின் வரும் பிறவிக்கெல்லாம் அவனே பொறுப்பு, அந்த அச்சத்தை அவனே போக்குவான், அவன் பெருமையினை ஆளாளுக்கு அவர்கள் அறிந்தபடி பேசமுடியுமே தவிர முழுக்க அறிந்தவர் எவருமிலர்”

“என்னுடைய நாதன் நித்தியமாய் நின்று ஆளும் இடங்கள் திருப்பாற்கடல், திருக்குடந்தை , திருமலை, பரமபதம், என் மனம், திருப்பாடகம், திருவனந்தாழ்வான் எனும் ஆதிசேஷன்”

‘மனமே, அவனின் திருமேனியினைக் கண்கள் காணவேண்டும் என்றால், அவன் காவல் வேண்டுமென்றால் அவன் திவ்ய சரித்திரங்களை, பிரபந்தங்களைப் பாடு, அதை மனமுருகப் பாடினாலே அவனைக் காணலாம்”

அவன் பிரபஞ்ச வடிவானவன், அவன் சப்த மண்டலங்களை, சப்த ரிஷிகளையும் தனக்கு உதவியாளர்களாய்க் கொண்டவன், வடவாக்கினி முதல் எல்லா எல்லைகளையும் அவனே கொண்டவன், சூரிய சந்திரர்களும் அவனே. அவனுக்கு அவனே உவமையானவன், அவனைத் தவிர அவனுக்கு இணையோ ஈடோ யாருமில்லை”

“என் நெஞ்சமே பருஷோத்தமன் அவனே என்பதைத் தயங்காமல் ஏற்றுக்கொள், அவன் எப்போதும் எங்கும் இருப்பவன் என்பதையும் மறவாதே, தியானம் செய்வோர் மனதில் அவன் உடனே எழுந்தருள்வான் என்பதில் உறுதி கொள்”

தனக்கு இணையற்ற அந்த லோகநாதனின் சங்கல்பத்தில் இந்த உலகம் இயங்குகின்றது என்பதை கலைகளான சரஸ்வதி கூட முழுக்கப் பாடிவிடமுடியாது என்பதை மனமே நீ அறிந்துகொள், அவன் எல்லையற்றவன்.

அவன் பாற்கடலை வாசுகி கொண்டு கடைந்து அமிர்தம் எடுத்தது எவ்வளவு பெரிய காரியம், அந்த அசதியினால்தான் அவன் திருவெக்காவில் சயனம் கொள்கின்றானோ, காஞ்சியில் எழுந்தருளுகின்றானோ, திருப்பாடகத்தில் நிற்கின்றானோ, அந்தப் பாற்கடலைக் கடைந்த களைப்பினை இப்படி எம்பெருமான் போக்குகின்றானோ?

மனமே, அந்த ஸ்ரீகாந்தனுடைய திருவடிகளைப் போற்றுவதே நாவினால் பெறத்தக்க பயன்”

“மானுடரே, நீங்கள் பகவானை அடைய தவம் செய்ய மலைச்சாரலில் இறங்கவும் வேண்டாம், பொய்கைகளில் ஆறுகளில் மூழ்கவும் வேண்டாம், யாக நெருப்பில் வாடவும் வேண்டாம், அன்புடன் சில மலர்களை இட்டு கண்ணனை நினையுங்கள், அந்தப் பரந்தாமன் எல்லாப் பாவங்களில் இருந்தும் உங்களை மீட்பான்”

மனமே, அந்த மகா சக்தியான பகவான் பெரியவன் அவன் சங்கு சக்கரம் ஏந்தியவன், அவன் நம்மிடம் வருவது எப்படி? நாமோ பாவி, அனுஷ்டாங்கமில்லாப் பாவி என்றெல்லாம் நினைந்து கலங்காதே, எதையும் சிந்தியாதே, அவனை இடைவிடாமல் தியானி அதுபோதும், அவன் வந்து உன்னை அடைவான்”

“புலன்களை அடக்கி அவனையே தியானித்திருந்தால், வைராக்கியமாக நிலைத்திருந்தால், அவனின் செயல்களையெல்லாம் ஆராய்ந்திருந்தால் இனி வரப்போகின்ற எல்லா ஜென்மங்களில் இருந்தும் விடுதலை அடையலாம், பிறப்பை அறுக்கலாம்”

“அவனை நினைந்து ஒருமுறை மனதால் அடைந்துவிட்டால் அவன் உன்னைவிட்டு நீங்காமல் அங்கே உறுதியாய் வாசம் செய்வான், அவனை அறிவால் தேடி அடைந்துகொள் மனமே”

“அவனைத் தேடுவதும் அடைவதும் அசாத்தியம். எங்கும் நிறைந்திருப்பவனை எங்கே தேடி அடைவது எனக் கலங்காதே மனமே. அவன் மாயாவிதான் ஆனால் மனதால் தியானித்தால் ஓடிவந்து அங்கே அமர்ந்து புன்னகைப்பான், அவனை மனதால் காணலாம் மனமே”

“அவன் நான்கு மறைகளின் உட்பொருளானவன், தன்னை விரும்பி தியானிப்போர் மனதில் குடியேறி வாழ்பவன், அவனைக் கவிபாட முனைவோர் அவனை முழுக்கத் தேடி அவனிடம் கரைந்து போவார்கள், அப்படியான நிலையில்தான் அவனைப்பற்றி பாடமுடியும்”

“அவனை வேத வழி, யாகவழி இதர வழிகளில் அடையலாமா எனக் குழம்பி நிற்காதே மனமே, தயங்காமல் அவன் பாதம் சரணடைந்து அன்பால் அவனைத் தேடு, அந்த முயற்சியினைச் செய்தாலே போதும், உன் பாவமெல்லாம் நீங்கி அவனை நீ காண்பாய்”

“மானுடரே, ஞானமெனும் ஒளியுடைய திருவிளக்கை உள்ளத்தில் ஏற்றிவைத்து அந்த ஜனார்த்தனனை மாலைபோல் கட்டி அணிந்து கொண்டேன், அவன் என்வசமாகிவிட்டான்.
அவன் என்மனதில் மெல்ல வந்தான், பின் நின்றிருந்தான் பின் அமர்ந்தான் இப்போதோ பள்ளிகொண்டுவிட்டான்”

“மிக அபூர்வமான குணங்களும் செய்கைகளும் கொண்டவனான அந்தப் பத்மநாபன் செய்த விஷயங்களில் இந்திரன், பிரம்மன், ருத்திரன் செய்த சாகசங்களைக் கொஞ்சமேனு நினைக்க தோன்றுமோ?”

“எம்பெருமான் பெரிய இமய மலையையும் பெரிய ஆகாசத்தையும் காற்றையும் மற்றும் யாவையும் ஊடுருவி நின்ற மகா பெரியவன், அவன் எமனால் ஆளப்படும் நரகத்தில் வீழாதபடி நம்மைக் காப்பான்”

இப்படி உருக்கமாகப் பாடும் பேயாழ்வாரின் பாசுரங்களெல்லாமே உருக்கமானவை, அதில் சில முத்தான பாடல்களோடு அவரை வணங்கலாம்.

“தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயக்கரத்தா னன்னான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கெட்டுச் சார்வு”

திருக்கையில் எடுத்த ஆயுதங்கள் எட்டினாலும், எட்டுக் கரங்களில் எட்டு ஆயுதங்களைக் கொண்டு எட்டுத் திசையும் வெற்றிப்பெற்ற ஜெயசீலனாய் அவன் முன்பு குளத்தில் ஆதிமூலமே என அழைத்த முதலையினை மீட்டு நின்றவன். மாயையினால் அமிழ்க்கப்படும் நாமும் அவனை அந்த ஆதிமூலத்தை அழைத்து நம்முடைய மீட்பினைத் தேடிக்கொள்ள வேண்டும், அவனே மாயையில் இருந்து நம்மை விடுவிப்பான்”

“சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்துழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் – காரார்ந்த
வான் அமரும் மின்னிமைக்கும் வண்தா மரைநெடுங்கண்
தேன்அமரும் பூமேல் திரு”

திருவாழி எனும் சக்கரத்தை உடையவனாய், குளிர்ந்த பூக்களைக் கொண்ட மாலை உடைய மார்பைக் கொண்டவனாய், மேகம் நிறைந்த வானில் மின்னும் மின்னலைப் போன்ற பிரகாசம் கொண்டவளை, அழகிய தாமரை போல கண்களைக் கொண்டவனை, தேன் நிறைந்த தாமரை மேல் வசிக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே நாம் அடையவேண்டிய ஆதிசக்தியான பரம்பொருள்.

அதாவது அன்னையும் பகவானும் வேறல்ல என்கின்றார்.

இன்னும் அழகான உண்மை ஒன்றை அன்றே பாடுகின்றார் பேயாழ்வார்.‌ திருப்பதியில் இருக்கும் பெருமாள் சிவனின் அம்சம் என்கின்றார், சிவனும் பெருமாளும் ஒன்றே என்கின்றார்.

“தாழ்சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன் நாணும் தோன்றுமாம்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலையே எந்தைக்கு
இரண்டு உருவம் ஒன்றாய் இயைந்து”

தாழ்ந்த சடையும் நீண்ட முடியும் மழுவும் சக்கரமும் பாம்பும் பொன் நாணும் திருமலையில் காட்சி தரும் எந்தையின் இரண்டு உருவங்களின் அம்சங்கள் என்கின்றார்.

திருப்பதியில் சிவனும் எம்பெருமானும் இணைந்தே காட்சிதருகின்றார்கள் என என்றோ சொல்லிவைத்தவர் பேயாழ்வார்.

“மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் மாற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி- கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண்டிருந்தான்
வயிற்றினொடு ஆற்றா மகன்”

கண்ணன் மண் உண்டவன், பூதகி மார்பினை உறிஞ்சி அவளைக் கொன்றவன், அவன் வெண்ணெய் தேடித் தேடி விழுங்கியவன் அவன் வயிற்றை கட்டிப்போட்டாலும் அது காயப்படும்படி உரலை இழுத்து திரிந்தவன் எனப் பொருள்.

இது மேலோட்டமாக அவன் பெருமையினை சொல்லும் பாடல் என்றாலும் , மறைமுகமாக அபார பொருள் கொண்டது.

ஒருமனிதனின் அடிப்படை தேவை உணவு அதாவது வயிறு, அங்கிருந்துதான் எல்லா தேவையும் தொடங்கி விரிகின்றது, மானுட வாழ்வின் ஆதிமூல பிரச்சினை வயிற்றுத் தேவை.

அதைச் சொல்லிப் பாடுகின்றார் பேயாழ்வார்.

அவனுக்கு வயிற்றின் கொடுமை தெரியும், அவன் பசியால் மண்ணை உண்டவன், வெண்ணை உண்டவன், பூதகியினை உறிஞ்சிக் கொன்றவன், அவன் வயிறும் கட்டப்பட்டிருந்தது, அதனால் மனமே வருந்தாதே. அவனும் பசிக்கொடுமை முதல் எல்லா கொடுமையும் அறிந்தவன். அதனால் நம்மை கைவிடமாட்டான் என மிக நுணுக்கமாக கண்ணன் அவதாரத்தின் அவன் மாய விளையாட்டின் ஆதார தாத்பரியத்தை விளக்குகின்றார்.

“மாலே நெடியோனே கண்ணனே – விண்ணவர்க்கு
மேலா வியன்துழாய்க் கண்ணியனே – மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு”

என்ற பாடல் அந்தமாகவும் அமையப் பாடினார்.

அவரின் பாடலில் உன்னதமான பக்தி உண்டு, பரந்தாமனின் அளவிட முடியா பெருமைகள் உண்டு, மகா முக்கியமாக சிவனும் பகவானும் ஒன்றே எனும் மாபெரும் தத்துவ போதனை உண்டு.

இன்னும் ஆகச்சிறந்த வரலாற்றையும் அவர் தருகின்றார்.

திருவல்லிக்கேணி பற்றி அவர் பாடுகின்றார்.

“வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்த விளக்கும் அணி விளக்காம்-எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர்
மார்பன் திருவல்லிக்கேணியான் சென்று”

திருவல்லிகேணியில் இருக்கும் எம்பிரானை கடலின் வெண்ணிறமான அலைகள் ஓடி ஓடி வந்து பணிகின்றன, முத்தும் பவளமும் கொண்டு அவை சேர்க்கின்றன, அந்திமாலையில் அவை விளக்குபோல் மின்னுகின்றது என்கின்றார்.

இவரின் காலம் துவாபரயுகம் முடியும் காலம். அதாவது ஆறாயிரம் ஏழாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட காலம், அப்போதே திருவல்லிகேணி, திருப்பதி, மயிலாப்பூர் எல்லாம் இருந்திருக்கின்றது, அங்கே பகவானின் ஆலயங்களும் வழிபாடும் இருந்தது என்பதை ஆணிதரமாக சொல்கின்றார்.

உலகில் யாருக்குமில்லா தொன்மை இந்துக்களுக்கு உண்டு, பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே மாபெரும் ஞானத்தை கொண்டாடி பகவானிடம் சரணடைவதை போதித்த ஞானமதம் இது, ஞான தாத்பரிய மண் இது, உலகில் எல்லா ஞான தத்துவ விசாரங்களுக்கும் இந்துமதமே தாய் என்பதை நிறுவுகின்றார் பேயாழ்வார்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் எனும் மூவரும் முதல் மூன்று ஆழ்வார்கள், சமகாலத்தவர்கள் இவர்கள். நீண்டகாலம் பூமியில் வசித்தார்கள், பெரும் அற்புதங்களும் ஞான பாசுரங்களும் தந்தார்கள். எனினும், இந்த மூவரின் முதல் 100 பாடல்களே முன்னூறு பாடல்களாக முதல் மூன்று திருவந்தாதியில் அமைந்துள்ளது.

அவ்வகையில் இந்த மூவரும் எக்காலமும் அடியார்களால் நினைவு கூறப்பட்டு போற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள், இவர்கள் இட்ட அஸ்திபாரத்தில்தான் வைஷ்ணவ சம்பிரதாயமே கோபுரமாக எழுந்து நிற்கின்றது.

அந்த மூவரில் மூன்றாவதரான பேயாழ்வாரை வாழ்த்தி அவர் பாதம் சரணடைவோம்.

“திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே.
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே.
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே.
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே.
நெருக்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே.
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே.
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே.
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே”

பேயாழ்வார் திருவடிகளே சரணம்.