பன்னிரு ஆழ்வார்கள் : 05 நம்மாழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 05 நம்மாழ்வார்.
“உறுபெருஞ் செல்வமுந்தந்தையுந் தாயுமுயர்குருவும்
வெறிதருபூமகணாதனுமா றன் விளங்கியசீர்
நெறிதருஞ் செந்தமிழாரணமேயென்றிந்
நீணிலத்தோ றிதரநின்றவிரா மாநுசனெனங் காரமுதே
மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தாற் கடைந்து
துறைப்பாற் படுத்தித்தமிழாயிரத்தின் சுவையமீர் தங்
கறைப்பாம் பணைப்பள்ளியானன் பரீட்டங்களித்தருந்த
நிறைப்பான் கழலன்றிச்சன்ம விடாய்க்குநிழலில்லையே”
ஆழ்வார்களில் மகா முக்கியமானவரும், தமிழில் வேதங்களின் சாரத்தை தந்துச் சென்றவரும், எக்காலமும் பாசுரங்களுக்கும், வழிபாட்டு பாடல்களுக்கு இலக்கணம் அளித்தவரும், அழியா உருக்கமான பாசுரங்களை பின்னாளில் ஆண்டாள் போல் அருளிய ஆழ்வார்களுக்கு முன்னோடியாகவும் இருந்த அந்த நம்மாழ்வாரின் வாழ்வும், அவர் ஆற்றிய மகா பெரிய தொண்டும், அவர் செய்வித்த உன்னத திருப்பணியும் ஏட்டில் எழுதித் தீர்பவை அல்ல.
அந்த அளவு மிகப்பெரிய இடம் பிடித்து வைணவ சம்பிரதாயத்தின் அஸ்திபாரமாகவும், அதன் கோபுர கலசமாகவும், ஆலய மணியாகவும் அவர் நிலைத்திருக்கின்றார். அவரைக் கொண்டே பகவான் மிகப்பெரிய வைணவ பக்தியினை தமிழில் வழிபட வழிவகை செய்திருக்கின்றார்.
அந்த மாபெரும் ஞானகோபன் எனும் சடகோபனின் வாழ்வினை பார்ப்பதும், படிப்பதும் பகவான் கொடுக்கும் வரம். அவன் அருளாலே தெரியவரும் ஞானம்.
இப்படி அவதாரங்கள் வர முக்கிய காரணம் இருக்கும். அப்படியான காரியம் ஈடேற பகவான் பலவிதமான நாடகங்களை நடத்துவார். அந்த நாடகத்துக்கான காரணங்கள் இன்னொரு காரணத்தின் சங்கிலி போல் தெரியும்.
எப்படி ஒரு சங்கிலி பல கண்ணிகளால் கட்டப்பட்டிருக்குமோ, ஒரு கட்டடம் பல செங்கல்களால் எழுப்பப்படுமோ அப்படி ஒன்றுக்கொன்று தொடர்பான வகையில் மானுடர்க்கு புரியா வகையில் பகவான் காரியங்களை நோக்கி நாடகங்களை அடுக்குவார்.
அப்படி மிக முக்கியமான காலக்கட்டம் ஒன்று வருவதை அவதானித்தார் பகவான்.
அதாவது கலியுகம் பிறக்க இருந்தது. யுகங்கள் மாற மானுடர் மாறுவர். அவர்கள் வாழ்க்கைமுறை சிந்தனை என எல்லாமும் மாறும். அப்படி கலியுகத்தில் மக்களின் மனம் பலவித சிந்தனைகள் பிரிவினைகள் அர்த்தமில்லா குறுக்கு கேள்விகள் எனக் குழம்பி தவிக்கும்.
மக்களின் வழிபாடும், பக்தியும் பலவித மாயைகளால் குழப்பப்படும் . மானுட இனம் குழம்பித் தவிக்கும். ஏகப்பட்ட சக்திகள் அதனை குழப்பும். அப்போது மானிடர் தெளிவடைய , காலத்துக்கு ஏற்றபடி வழிபாடுகளை செய்ய, பல ஏற்பாடுகளைச் செய்தல் அவசியம் என்பதை உணர்ந்தார்.
யுகங்கள் மாறலாம். மானுட சிந்தனை ஆசாபாசங்கள் மாறலாம். பக்தி வழிபாடுகள் மாறலாம். ஆனால், ஜீவாத்மா என்பது மாறாது அல்லவா? அந்த ஜீவாத்மாவின் ஈடேற்றத்துக்கு அது பரமனை அறிந்துகொள்ள, பிறப்பின் அர்த்தம் புரிந்துகொள்ள ஒரு வழியினைக் குழப்பமில்லாமல் செய்ய திருவுளம் கொண்டார்.
அதன்படி அவரின் அம்சத்தில் ஒரு அடியார் வர சித்தமானார். அப்படியே அவரை எப்போதும் தாங்கும் ஆதிசேஷனை அங்கே ஒரு புளியமரமாக போகும்படி ஏற்பாடு செய்தார்.
எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு உரிய காலம் வரும் வரை காத்திருந்தார். எப்போது, எங்கு, எந்த நேரம் அவதரிக்க வேண்டும் என்பதை அவரைவிட யார் கணித்துவிட முடியும். இந்த பிரபஞ்சமும் அங்கு இயங்கும் எல்லாமும் அவரின் அசைவல்லவா?
அப்படி உரிய காலம் கலிகால தொடக்கத்தில் வந்தது. அப்போது பாண்டிய நாட்டில் ஒரு குலத்தின் வாரிசாக அவதரிக்க திருவுளம் கொண்டார் திருமால்.
தமிழில் வைணவம் அசைக்கமுடியா இடத்தில் இடம்பெற, தமிழில் வேதங்களின் சாரத்தில் பாடல்களும் தத்துவங்களும் வர, தமிழில் வைணவத்தின் பெரும் ஞான சாயலில் பாடல்கள் வர கலிகாலத்தில் மக்கள் குழம்பாமலும், பாதை மாறாமல் செல்லவும் வழி செய்வதே பகவானின் நோக்கமாக இருந்தது.
அதனால் தமிழ் வளர்க்கும் பாண்டிய நாடும், அகத்திய மாமுனி அமர்ந்து தமிழ் வளர்த்த பொதிகை மலையில் இருந்து உருவான தாமிரபரணி கரையும் பகவானின் தேர்வாகின.
ஒளவையாரால் “பாண்டியா, நின்னாடுடைத்து நல்ல தமிழ்” எனக் கொண்டாடப்பட்ட நாடு அது.
இந்தத் தாமிரபரணி கரை அப்போது பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டது. பாண்டியரின் பெரும் தேசம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அப்படி இந்த வளமான பகுதியில் திருவழுதி என்பவர் பாண்டிய மன்னரின் பிரதிநிதியாக இருந்தார்.
அவரின் நான்காம் தலைமுறையில் செந்தாமரை கண்ணன் என்பவர் வந்தார்.
இந்தச் செந்தாமரை கண்ணன் தாமிரபரணிக் கரையில் திருக்குருகூர் எனும் ஊரில் வசித்தார். அரசனின் பிரதிநிதி போல் இருந்த குடும்பம் என்பதால் செல்வாக்கானது.
காலம் காலமாக இக்குலம் திருமால் வழிபாட்டை பிரதானமாக கொண்டது. அளப்பரிய பக்தியும் தீரா மனஉருக்கமும் திருமால் மீது கொண்ட வம்சம் அது. திருமால் பக்தி ஒன்றே அக்குலத்தின் வேராய் இருந்தது.
இந்தச் செந்தாமரை கண்ணன் பாண்டிய நாட்டின் பிரதிநிதி, அப்படி சேர மன்னன் ஆளும் சேர நாட்டின் சில பகுதிளோடு அவருக்கு தொடர்பு இருந்தது. தன்னை போலவே வைணவ வழிபாட்டில் சிறந்தவரான திருவாழ்மார்பன் என்பவரோடு நட்பு பாராட்டினார். அது திருமால் பக்தி எனும் ஒருமித்த மனம் அடிப்படையில் அமைந்தது.
கண்ணன் சேரநாட்டின் தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், திருவண்பரிசார பெருமாள் என அவர் சென்று வழிபட்டு வரும் போது இந்த நட்பு ஆழமாயிற்று.
(இந்த திருவண்பரிசாரம் என்பது இப்போது திருப்பதிசாரம் என அழைக்கப்படுகின்றது)
நண்பர்களாக இருந்த இருவரும் சம்பந்திகளாக முடிவு செய்தார்கள். ஆம். தன் மகன் பொற்காரியாரை திருவாழ்மார்பன் மகள் நங்கைக்கு மணமுடிக்க பேசிமுடித்தார் கண்ணன்.
அரச தொடர்புள்ள குடும்பம் என்றால் செல்வாக்கானது அல்லவா? அதுவும் சேர நாட்டு பாண்டியநாட்டு அரச தொடர்புடைய குலம் என்றால் எப்படி விமரிசையாக இருந்திருக்கும்?
பெரும் ஆர்பாட்டம் ஆரவாரத்தோடு பொற்காரியார், நங்கை திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. வள்ளுவ நாட்டு அறிஞர்களெல்லாம் வந்து வாழ்த்தினார்கள்.
திருமாலின் பெரும் அருளால் அந்தத் தம்பதிகள் வைணவ வரலாற்றிலே இடம் பிடிக்கப் போகின்றார்கள் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
காலம் மட்டும் கோவிலோடுச் சேர்ந்து புன்னகைத்துக் கொண்டது.
பொற்காரியார் மிகுந்த அறிவும் அழகும் கொண்டவர், வீரத்துக்கும் நிர்வாகத்துக்கும் பெயர்பெற்றவர். நங்கை அம்மையார் பெண்ணுக்குரிய அம்சமெல்லாம் கொண்ட பூமா தேவி சாயல்.
வீட்டில் எல்லாச் செல்வமும் தாமிரபரணி கரைபோல் விளைந்து கிடந்தது, இறைந்து கிடந்தது. நவமணிகள் காலடியில் குவிந்தன. சொடுக்குப் போட்டால் குவியும் சேவகர் ஏராளம்.
ஆனால், எல்லாவற்றையும் கொடுத்து ஒன்றை மட்டும் பாக்கி வைத்து அதை நோக்கி மானிடரை ஏங்க வைப்பது இறைவனின் திருவிளையாடல் அல்லவா?
முக்கியமான ஒன்றை கொடுக்காமல் அதை வைத்தே ஒருவனிடம் விளையாடி தன்னிடம் வரச்செய்து அதைக் கொண்டே தன் நோக்கத்தை செயல்படுத்துவது பரமனின் தனி விளையாட்டல்லவா?
அப்படி இந்தப் பொற்காரியாருக்கும் நங்கைக்கும் இருந்த மிகப்பெரிய கவலை அவர்களுக்கு வாரிசு இல்லை என்பது.
இந்தக் கவலை அவர்களை வாட்டிற்று. பெரியவர்கள் ஆலோசனைப்படி ஒவ்வொரு பெருமாள் ஆலயமாக வேண்டத் தொடங்கினார்கள். அப்படி திறுக்குறுங்குடி நம்பி ஆலயத்துக்கும் வந்தார்கள். அக்கோவில் எப்போதும் வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் போல் தனி இடம் கொண்டது.
இந்தத் தலத்தில் ஒரு வாரிசுக்காக இருவரும் நம்பி நாதனிடம் கதறினார்கள், அந்தக் கதறல் தசரத மகாராஜா ஒரு வாரிசுக்காக பரமனிடம் கையேந்தி நின்றது போல் இருந்தது.
மனிதனின் தேவையும் இன்னமுமே இறையருள் நுழையுமிடம், சந்நிதியில் மானுடன் கையேந்தி கதறியழும் அந்தத் தருணமே ஆண்டவன் அனுமதி வழங்குமிடம்.
அப்படிப் பகவான் இவர்களுக்கு அருள்புரிந்து தன் நாடகத்தின் கடைசிக் கட்டத்துக்கு வந்திருந்தார்.
தெய்வம் எப்போதும் முடிவுகளை எழுதிவைத்துவிட்டு, காரியங்களை முடிவு செய்து நாள் குறித்துவிட்டே நாடகங்களை நடத்தி முடிவு நோக்கி இழுத்துச் செல்லும், அப்படித்தான் அங்கும் முக்கிய கட்டம் வந்தது.
பொற்காரியாரின் கனவில் வந்த திருக்குறுங்குடி பகவான் “பொற்காரி, உமக்கு நம் அம்சத்தில் ஒரு குழந்தை பிறக்கும், அது மிகப்பெரிய அடையாளமாக மின்னும்” என வாக்களித்தார். அதே உறுதிமொழி நங்கைக்கும் பகவானால் கொடுக்கப்பட்டது.
பரந்தாமன் அவர்களுக்கு அருளியவாறே, சேனை முதலியார் அம்சமாக, உடையநங்கையாருக்கு ஒரு மகவைப் பிறக்கச் செய்ய சித்தமானார்.
ஆழ்வாராக சேனைமுதலியார் அங்கு அவதரிப்பதற்கு முன்பே, பெருமாளின் பஞ்சணையான ஆதிசேஷன் அவ்வூரின் பெருமாள் கோயிலில் வடப்புறத்தில் ஒரு புளியமரமாகத் தோன்றியிருந்தார்.
பகவான் வாக்கின் பலனாக வைகாசி திங்கள், சுக்லபக்ஷம், விசாக நட்சத்திரத்தில், கடக ராசியில் அவதரித்தார் அந்த அவதாரம், அது பௌர்ணமியும், வெள்ளிகிழமையும் கூடிய நாளாய் இருந்தது.
அரச நிர்வாக குலத்தில் சேர, பாண்டிய நிர்வாகிகள் வாரிசாக அது வந்தது என மக்களும் குடும்பமும் நம்பிக்கொண்டிருக்க, அது வைணவம் தழைக்க வந்த குழந்தை, வேத தாத்பரியங்களை உலகுக்குச் சொல்ல வந்த குழந்தை என்பது பரம்பொருளுக்கு மட்டும் தெரிந்திருந்தது.
குழந்தை பிறந்த பெரும் மகிழ்ச்சி மறுநாளே அந்த வீட்டில் அற்றுப் போனது.
காரணம், அக்குழந்தை தாயின் பாலை உண்ணவில்லை, கண்களை அசைக்கவில்லை, கை கால் உதறவில்லை, ஒரு பிண்டம் போல் கிடந்தது.
அது உண்ணவில்லை, மலஜலம் கழிக்கவில்லையே தவிர அதன் உடலில் எவ்வித மாற்றமுமில்லை.
இறைவன் அறுதியிட்டு தந்த குழந்தை இப்படியாயிற்றே எனக் கலங்கினார்கள் பெற்றோர்கள். அவர்கள் சக்திக்கு மேல் யார் யாரையெல்லாமோ அழைத்து குழந்தையினை இயல்பு நிலைக்கு கொண்டுவர படாதபாடுபட்டார்கள்.
ஆனால், பகவானின் திட்டம் முன் மானுட முயற்சி என்ன செய்ய முடியும்?
நங்கை மனமுடைந்து அழுதாள், பொற்காரியார் மனமுடைந்தார். ஆனாலும், பிள்ளை எழுந்துவரும் என்ற நம்பிக்கையில் பெயர் இட்டார்.
மாறன் எனப் பாண்டிய வம்ச பெயரை இட்டார்கள். ஆனால், மக்களும் மருத்துவர்களும் சடகோபன் எனும் நாமத்தைச் சொன்னார்கள்.
சடம் என்றால் ஒரு வாய்வு, அதை மாய வாய்வு அல்லது கர்ம வாய்வு என்பார்கள். பூலோக நடபடிக்கைகளை அந்த வாய்வுதான் பிறக்கும் குழந்தைக்குக் கொடுக்கும் என்பது ஐதீகம்.
அந்தச் சட வாயு பிறந்த குழந்தையினை தழுவும் போதுதான் பூலோக விதிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் மானுட பிறப்பு கட்டுப்பட தொடங்கும்.
(இதனாலே மானுட உடல் உயிர் நீங்கிய பின் “சடலம்” என அழைக்கப்படும்)
இந்தச் சட வாயுக்கு விரோதமாய் பச்சிளம் குழந்தையாக இருந்தபோதே இருந்தவர், அதைக் கோபித்தவர் என்பதால் அக்குழந்தை சடகோபன் என்றானது.
நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாயின. பெற்றோர் உற்றோரின் துயரம் வளர்ந்ததே தவிர குழந்தை நிலையில் மாற்றமில்லை.
எல்லா முயற்சியும் பலனளிக்கா நிலையில் மனமுடைந்து போனார்கள் பெற்றோர்கள்.
(அழகிய நம்பி என்பவர் தான் இயற்றியருளிய குரு பரம்பரை என்னும் நூலில், இந்தக் குழந்தையின் நிலை கண்டு பெற்றோர் பட்டபாட்டையும் அழுகையும் மனதை உருக்கும்படி பதிவு செய்துள்ளார்)
இனி வழியே இல்லை எனும் நிலையில் திருக்குருகூரில் உள்ள பெருமாள் ஆலயத்தில் கொண்டு குழந்தையினை விட்டுவிட தீர்மானித்தனர், இறைவன் கொடுத்த குழந்தை இனி அவன் பாடு எனக் கலங்கிய கண்களோடு எடுத்துச் சென்றனர்.
எனினும், பெற்ற மனம் பித்து அல்லவா? தாய் நங்கை அந்த புளியமரத்திலே ஒரு தொட்டில் கட்டி அக்குழந்தையினை அதிலிட்டு பரம்பொருளிடம் கண்ணீர் விட்டு மன்றாட ஆரம்பித்தாள்.
பொற்காரியார் ஒரு நிர்வாகி, அவர் முதல் குழந்தை, அதுவும் ஆண்குழந்தை, அதுவும் பகவானே வந்து உறுதியிட்டு கொடுத்த குழந்தை இப்படி ஆன பெரும் துயரில் இருந்து மெல்ல மீண்டு வந்தார்.
குழந்தை உயிரோடு இருப்பதும், தாய்பால் உண்ணாவிட்டாலும் அது நலமோடு இருப்பதும் அவருக்கு ஆறுதலை கொடுத்தது.
இராமனை பிரிந்த தசரதன் போல கண்ணீரோடு ஆலயம் விட்டு வந்து தன் பணிகளைத் தொடங்கினார்.
ஆனால், நங்கை அப்படி அல்ல, அது தாயுள்ளம் அல்லவா? முதல் பிறந்த நாள் அதாவது மறுவருட வைகாசி விசாகம் வரும்போது அவளால் தாங்க முடியவில்லை.
தன் பிள்ளை நலமாக வேண்டும் இல்லை தான் இறக்க வேண்டும் எனப் பட்டினி நோன்பை தொடங்கினாள். காயம்பட்ட தாயின் வைராக்கியத்தைத் தடுக்கும் சக்தி யாருக்குமில்லை.
அவளின் உடல் பலவீனமடைய, கண்களில் நீர்வற்றிப்போக இனி அவள் மரித்துவிடுவாள் எனும் நிலைவந்தபோது அந்த அதிசயம் நடந்தது.
அந்தப் பிஞ்சு குழந்தை அதுவும் நடைபழகாக் குழந்தை, ஏன் கைகால் கூட அசைக்காத குழந்தை மெல்ல தொட்டிலில் இருந்து வெளியேறி அந்தப் புளியமரத்தின் பொந்தில் அமர்ந்து கொண்டது.
கண்டவர் அதிர்ந்தனர், சிலர் கைணகூப்பி அப்போதே தொழுதனர், சிலர் அக்குழந்தையினை கண்டபின் நல்லது நடப்பதாக சொல்லத் தொடங்கினர்.
ஒரு தெய்வீகச் சூழல் அங்கே உருவாகத் தொடங்கிற்று.
நங்கை அந்த அதிசயத்தை நேரில் கண்டாள். தனக்கான குழந்தையாக அதனைப் பகவான் தரவில்லை அவருக்கான குழந்தையாக அதை தன்னிடம் உருவாக்க வழி செய்திருக்கின்றார் என்பதை அறிந்தவள் இனி எல்லாமே பகவான் விருப்பம் என்றபடி வீடு திரும்பினாள்.
அக்குழந்தை சடகோபனாக அந்த புளியமர பொந்திலே அமர்ந்திருந்தது.
அக்குழந்தை காற்றிலும், சூரிய ஒளியிலுமே தன் உடலுக்கான சக்தியினை பெற்றுக்கொண்டிருந்தது என்பதை யோகியர் மட்டும் அறிந்து புன்னகைத்தார்கள்.
அதன்பின் அந்தப் புளியமரத்தை விட்டு அக்குழந்தை நகரவில்லை. குழந்தை கொஞ்சம் பெரிதாக பெரிதாக அந்த மரமும் தன் பொந்தை வளர்த்து குகைபோல் கொடுத்தது.
குகையில் தவமிருக்கும் யோகிபோல் அப்படி தவக்கோலத்தில் இருந்தார் சடகோபன், வருடங்கள் உருண்டோடத் தொடங்கின.
அந்தக் குழந்தை பாலகனான், பாலகன் பதின்ம வயதினன் ஆனான், அவன் உண்ணவுமில்லை உறங்கவுமில்லை அப்படியே கண்களை மூடிய நிலையில் இருந்தான்.
முதலில் அதிசயமாக மக்களுக்குத் தெரிந்த காட்சி பின் வாடிக்கையாயிற்று. ஆனால், அவரைத் தரிசித்து வந்தால் நல்லது நடக்கும் எனும் அந்த நம்பிக்கை தொடர்ந்தது.
அந்தப் புளியமரம் மெல்ல மெல்ல தெய்வீக நிலையினை அடைந்தது.
இந்நிலையில் பாண்டிய நாட்டின் திருக்கோளூர் எனும் ஊரில் பிறந்தவர், உண்மையில் நம்மாழ்வார்க்கு இவர் மூத்தவர், இளம் வயதிலே ஞானம் தேடி நல்ல குருவைத் தேடி ஊர் ஊராக அலைந்தவர்.
அப்படி அவர் தமிழக பக்கம் தென்னிந்திய பக்கம் மட்டுமல்ல வடக்கே எல்லா இடமும் சுற்றித் திரிந்தார். நல்ல குரு அவரின் தேடலாய் இருந்தது. நல்ல குருவே தனக்கு ஞானம் தந்து பிறவி பந்தத்தில் இருந்து விடுவிக்க முடியும் என நம்பி சுற்றிக்கொண்டிருந்தார்.
இங்கே திருக்குருகூர் ஆலய புளியமரத்தின் பொந்தில் அமர்ந்திருந்து, கண்களை மூடி தியானத்தில் இருந்த சடகோபருக்கு ஆலயம் பக்கம் வரும் மக்களின் பிரார்த்தனையும் பந்த பாசமும் அர்த்தமற்று தெரிந்தன.
16 வயதினை அவர் தொடப்போகும் நேரம் எல்லா ஞானமும் அவருக்குக் கைகூடியிருந்தன, எல்லா நுணுக்கமான தத்துவங்களும் கடல்போல் பெருகியிருந்தன.
அங்கே ஒவ்வொரு மனிதரின் மனதையும் அவரால் மிகக் கவனமாக கண்களை மூடியபடியே படிக்க முடிந்தது. அந்த மனதில் எல்லாமே தன் மகன், தன் தாய், தன் குலம், தன் காதலன், தன் கணவன் என ஒரே உறவுகளின் தவிப்பாக இருப்பதை உணரமுடிந்தது.
இந்த மனிதர்கள் தெய்வத்திடமும் தன் மாய உறவுகளுக்காக அற்பமும் அழிந்துவிடுவதும் அர்த்தமே இல்லாததுமான மாய உறவுகளுக்காக வேண்டுவதை கண்டு மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டார்.
உறவுகளை அறுக்காமல் ஞானமில்லை. உறவாகவே இறைவனைக் கருதினால் போதும், அதி உன்னத நெருக்கமான பந்தமாக எல்லாமுமாக பகவானைக் கொண்டாடினால் போதும் அதுவே முக்திக்கு ஊடாகும். சக மானுடரை உறவென்றும் நெருக்கமென்றும் முக்கியமென்றும் சொல்லித் திரிவதை விட பகவானைக் கொண்டாடி உறவாடுதல் போதும் என உணர்ந்தார்.
இங்கே இவர் ஞானத்தில் பெருகி நிற்க வடக்கே அயோத்தி, மதுரா,ஹரித்துவார்.வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைன் மற்றும் துவாரகை என சுற்றிக்கொண்டிருந்தார் மதுரகவியார்.
இந்த ஏழு நகரங்களும் புண்ணியம் தரும் நகரங்கள், முக்தி தரும் நகரங்கள். இங்கே சென்று நல்ல குருவைத் தேடி ஞானம் அடைதல் அவரின் தேடலாய் இருந்தது, தவிப்பாய் இருந்தது.
அயோத்தியில் அவர் வணங்கிவிட்டு அமர்ந்திருந்த சமயம் தெற்கே ஒர் பிரம்மாண்ட ஒளிக்கீற்று ஜோதிவடிவில் தெரிவதை அவர் கண்கள் கண்டன.
அவர் கண்கள் மட்டும் கண்டன.
அது என்ன ஒளி எனத் தெரியாமல் குழம்பியவர், அந்த ஒளி நோக்கி செல்லத் தொடங்கினார். அவர் செல்ல செல்ல அந்த ஜோதியும் தெற்கு நோக்கி நகர்ந்தது.
மதுரகவியாழ்வார் அதை நோக்கி நகர்ந்தார். அது மாதக்கணக்கில் அவரை இழுத்துச் சென்று கொண்டே இருந்தது. கடைசியில் தாமிரபரணி கரையில் திருக்குருகூர் ஆலய புளியமரத்தின் மேல் வந்து நின்றது.
மதுரகவி ஆழ்வார் ஆச்சரியமாக அந்தப் புளியமரம் நோக்கி வந்தார், உள்ளே தவக்கோலத்தில் சடகோபன் அமர்ந்திருந்தார்.
அந்த முகத்தில் ஒரு தேஜஸ் இருந்தது, உடல் ஒரு யோகிக்குரிய அளவில் ஒளிவீசிற்று, இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை உணர்ந்து கொண்ட மதுரகவியார் அவர் கண்விழிக்க என்ன செய்யலாம் எனச் சிந்தித்தார்.
பின் சிறிய கல்லை எடுத்து மரப்பொந்தில் வீசினார், யோகி கண்விழித்தார். ஆனால், கண்விழி அசையவில்லை.
அந்தக் கண்களின் தீர்க்கத்தைக் கண்ட மதுரகவியார் தன் மிகப்பெரிய ஞானத் தேடலின் கேள்வியும் யார் அந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் அவரைக் குருவாக ஏற்க தயார் என மனதார நினைத்திருந்தாரோ அந்த மிக நுணுக்கமான ஆனால் வலுவான ஞானக் கேள்வியினை எழுப்பினார்.
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறப்பின் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”
அந்தச் சடகோபன் தன் வாழ்வில் முதல் முறையாக வாய்திறந்து சொன்னார், முதல் முதல் வார்த்தையாகச் சொன்னார்,
“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”
இந்தப் பதிலை கேட்டதும் “என் குருவைக் கண்டேன், என் நீண்ட காலத்தேடலை பகவான் அனுப்பிய ஒளியில் இங்கே கண்டேன், இதோ அவதாரம் இதோ என் ஞானம்” என அங்கே மண்டியிட்டார் மதுரகவியார்.
அங்கேதான் மதுரகவி என்பவர் மதுரகவி ஆழ்வார் என்றானார்.
அந்த உரையாடல் இருவரிகளில் நடந்தது எனப் பாமர கண்களுக்குத் தெரிந்தாலும் அதில் உள்ள உள்ளர்த்தம் ஆழமானது, மிக மிக நுணுக்கமானது.
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறப்பின் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்பதன் ஞான விளக்கம் உருக்கமானது.
அது என்னவென்றால் சித்து அல்லது செத்து என்றால் சிறிய எனப் பொருள். இந்தச்சிறிய உடலில் சிறியதான ஜீவாத்மா வாழும் போது அது என்ன அனுபவங்களைப் பெறும், எதை அனுபவித்து வாழும் என்பது.
அதற்கு நம்மாழ்வார் கொடுத்த பதில் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்பது, அதாவது அந்த உடலுக்குரிய கர்மம் எதுவோ அந்த மாயையில் சிக்கி அதை அனுபவித்து அங்கே கிடக்கும்.
ஆம். ஒவ்வொரு ஜீவாத்மாவும் பிறக்கும் கர்மவினைகளைப் பொறுத்து எல்லாவற்றையும் அனுபவித்துப் பிறவிப் சுழலில் சிக்கிக்
கிடக்கின்றது என்பது.
இங்கே இரு பெரும் ஞானியர் இருவரும் பேசாமல் பேசியபோதனை ஞானமான பொக்கிஷ உரையாடல்.
ஒரு ஆத்மா கர்ம வினைப்பயனாக உடலுக்குள் வருகின்றது, அது அந்த லௌகீக மாயையில் சிக்கி அப்படியே அந்த சூழலுக்கு ஏற்ப வினைகளை அனுபவித்து அங்கே கிடக்கின்றது, அப்படியே பிறவி சுழலில் சிக்கி விடுகின்றது.
அந்த ஆத்மா எப்போது இதெல்லாம் மாயை என உணர்ந்து இறைவனை நோக்கி தியானிக்குமோ, எல்லாம் மாயை இறைவன் ஒருவனே நிரந்தரம் எனக் கருதுமோ அப்போது அந்த ஆத்மா இறைவனை தேடி பிறவிச்சூழலில் இருந்து விடுபடும்.
( “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதவர்” எனும் குறளின் மூலம் இந்த வரிதான், குறள் இவர்கள் காலத்துக்கும் பிந்தையது)
தான் தேடிய ஞானி, தனக்கு வழிகாட்டும் ஞானி கிடைத்துவிட்டார் என நிறைவு கொண்ட மதுரகவியாழ்வார் அந்த புளியமரத்தின் அடியிலே அமர்ந்து கொண்டார்.
அவர் வாய்திறந்து பதில் சொல்லி தனக்கான சீடனை தேர்ந்து கொண்ட நேரம் வானில் கருடனுடன் எழுந்த எம்பெருமான் அவரை வாழ்த்த அதிலிருந்து அவர் தன் பிறவிக்கடனை, வந்த நோக்கத்தை செய்யத் தொடங்கினார்.
இறைவனை நோக்கி மானுடரை இழுத்து உய்விக்கும் பாடல்களை பாட திருவுளம் கொண்டார் சடகோபன், மதுரகவி ஆழ்வார் அவர் சொல்ல சொல்ல எழுதினார்.
மானுட உணர்வின் அத்தனை பாகங்களையும், உலகில் காணும் காணாதவை எல்லாமும் பரமனை நோக்கிப் பாடும் நுணுக்கத்தை, எல்லாமே கண்ணன் எனப் பாடும் அந்த நோக்கினை இவர்தான் தொடங்கி வைத்தார்.
ஏன் நம்மாழ்வார் பாடிய பாடல்களும், அவர் சொன்ன தத்துவங்களுமே பின்னாளில் ஆச்சாரியர்களுக்கும் இன்னும் பலருக்கும் வழிகாட்டியாய் அமைந்தன.
இதனாலே இவர் நம்மவர், நமக்காக வந்தவர், நம்மில் ஒரு ஆழ்வார் எனக் கொண்டாடப்பட்டார், அந்த பெயர்தான் நம்மாழ்வார் என நிலைத்துவிட்டது.
அவரின் உன்னத தொண்டு நான்கு வேதங்களுக்கும் நான்கு பாடல் தொகுப்புகளை தமிழில் பரம்பொருளின் தத்துவத்தில் தந்தது.
அதாவது வேதங்கள் என்றாலே சமஸ்கிருத மந்திரம் என்பதை தாண்டி வேதங்கள் பகவானின் தன்மையினை சொல்பவை, எல்லா நதிகளும் கடலுக்கு செல்வது போல நான்கு வேதங்களும் இறைவனை அடைய வழிகாட்டுகின்றன எனப் போதித்தார்.
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என அவரின் நான்கு பிரபந்த பாசுர தொகுப்பும் வேதங்களின் சாயலைக்கொண்டது.
ரிக் வேதசாயலான திருவிருத்தம் நூறு பாசுரங்களைக் கொண்டது.
யஜூர் வேத சாயலான திருவாசிரியம் ஏழு பாசுரங்களைக் கொண்டது..
அதர்வண வேத சாயலான பெரிய திருவந்தாதி எண்பத்தேழு பாசுரங்களைக் கொண்டது.
பெரியதும் சங்கீத வடிவமானதுமான திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு பாசுரங்களைக் கொண்டது.
இப்படி சமஸ்கிருதத்தில் இருந்த வேதத்தை நான்கு பிரிவுகளாக தமிழில் இறைவனின் தன்மையினை வேதங்களின் சாரம், இறைவனை அடைதல் எனச் சொல்லி முதல் முதலாக வழி செய்தவர் நம்மாழ்வார்.
ஆயிரம் பாடல்களை அந்தாதிகளாக பாடுவது என்பது மானுடரால் முடியாது, 100 பாடல்களை மகா பெரிய சித்தர்கள் பாடுவார்கள்.
ஆயிரம் பாடல்களை அப்படி அந்தாதியாக பாடுவது அவதாரம் ஒன்றாலே முடியும், நம்மாழ்வார் அதைச் செய்தார். இன்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கடைசி பிரபந்த ஆயிரம் பாடல் இந்த பாடல்கள்தான்.
அதாவது நான்கில் ஒரு பங்கு பாடலை தனி ஒருவராக அந்த பிரபந்தத்துக்கு வழங்கியவர் நம்மாழ்வார்.
அவர் பெயராலே திருக்குருகூர் எனும் பெயர் ஆழ்வார் திருநகரி என அழைக்கப்படலாயிற்று.
32 வயது வரை அவர் அந்த ஆழ்வார் திருநகரி ஆலய புளியமரத்திலேதான் இருந்தார். ஆதிசேஷன் வடிவமான அந்த புளியமரம் அவரைப் பாற்கடலில் பரமனை தாங்குவது போல் தாங்கிற்று.
அவருக்கு எந்தக் கோவிலின் நாதன் கண்முன் காட்சியளிப்பாரோ அந்த வடிவத்தை கொண்டு அங்கேயே மங்களாசாசனம் பாடுவார் நம்மாழ்வார்.
அப்படி அவர் திருவரங்கம், திருப்பேர்நகர், கும்பகோணம்,,திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, திருமோகூர், திருக்குருகூர், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவரமங்கை.
திருப்புளிங்குடி, திருப்பேரை, ஸ்ரீவைகுந்தம், வரகுணமங்கை, பெருங்குளம்,திருக்குறுங்குடி,திருக்கோவலூர், திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருக்காட்கரை, திருமூழிக்களம், திருப்புலியூர்.
திருச்செங்குன்றூர், திருநாவாய், திருவல்லவாழ்,திருவண்வண்டூர், திருவட்டாறு, திருக்கடித்தானம், திருவாறன்விளை, திருவேங்கடம்,,திருவயோத்தி, துவாரகை,வடமதுரை, திருப்பாற்கடல், பரமபதம் ஆகியவை.
மிகப்பெரிய பணியினை முன்னெடுத்து பெரும் அஸ்திபாரமிட்ட அந்த நம்மாழ்வாரின் அங்கே அந்த ஆலயத்திலே இறைவனோடு கலந்துவிட்டாலும் இன்றும் அங்கு அருள்பாலிக்கின்றார்.
நாதமுனிகள் வரலாறு அதைத்தான் சொல்கின்றது.
நாதமுனிகள் காலத்தால் பிந்தையவர். காட்டுமன்னார் கோவில் பக்கத்தில் இருந்து வந்தவர், அவர் மிக சிறந்த பக்தர், பக்தி பாடல்களை கேட்டால் உருகிவிடும் மனம் கொண்டவர்.
அவருக்கு முந்தைய காலத்தில் சமண பௌத்த காலங்களில் நம்மாழ்வார் கொடுத்த பாடல்களெல்லாம் மறைக்கப்பட்டு அழிந்தே போயின், ஓரிரு பாடல்கள் மட்டும் எஞ்சியிருந்தன.
அதில் ஒரிரு பாடல்கள் அவர் கேட்க நேர்ந்தது. அதில் மனம் சொக்கிப் போனார் நாதமுனிகள். அப்பாடல் “ஆயிரத்தில் பத்து” என முடியும்.
ஆயிரத்தில் பத்து பாடல்களே இப்படி என்றால் ஆயிரம் பாடல்களும் எங்கே என தேடியவர் அவர்தான்.
அவர் நம்மாழ்வார் பற்றி அறிந்து நேரே ஆழ்வார் திருநகரிக்கே வந்து அந்த ஆலயத்தின் புளியமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டார்.
ஆழ்வார் அப்பாடல்களை மீளத் தரவேண்டி “கண்ணிநுண்சிறுத்தாம்பு ” எனும் பாசுரத்தை பாடினார், அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல பன்னிரெண்டாயிரம் முறை பாடினார்.
அவரின் அந்த அர்ப்பணிப்புக்கு வேண்டித் தானே தோன்றிய நம்மாழ்வார் சொல்ல சொல்ல எல்லாப் பாசுரங்களையும் மீட்டெடுத்தார் நாதமுனிகள்.
நம்மாழ்வார் பாசுரம் மட்டுமல்ல, அழிந்த நாலாயிரம் பாசுரங்களையும் திரிகால ஞானியான நம்மாழ்வாரே நாதமுனிக்கு அந்தப் புளியமரத்தின் அடியில் மீளக் கொடுத்தார்.
அப்படி எப்போதும் அரூபியாய் இருந்து பாசுரங்களை பகவான் மேல் பக்தி கொண்ட அடியார்களை காத்துவருபவர் நம்மாழ்வார்.
ஆழ்வார் திருநகரி ஆலயத்தில் அவர் வசித்த புளியமரம் இன்றும் உண்டு. அந்த புளி முளைக்கும் தன்மை கொண்டது அல்ல. அதாவது பிறப்பறுக்க வந்தவர், பிறப்பறுக்கும் பாடலை தந்தவர் என்பதன் சாட்சியாக இப்போதும் நிற்கின்றது.
நீங்கள் ஞானம் பெற விரும்பினால், பகவானைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள நினைந்தால் அந்த ஆலயம் சென்று அவரை பணியுங்கள். அங்கே அரூபியாய் நிற்கும் அந்த ஆழ்வார் உங்களுக்கு எல்லா அறிவும் ஞானமும் தருவார். இது சத்தியம்.
நம்மாழ்வார் எப்படிப் பகவானால் ஏற்றுக்கொள்ளபட்டார், எப்படி அவர் காலம் காலமாக பகவானாலே சிறப்பிக்கப்படுகின்றார் என்பதற்கு கம்பனே சாட்சி.
கம்பன் தன் இராமாயணத்தை எழுதி திருவரங்க கோவில் மண்டத்தில் அரங்கேற்றம் செய்யவந்தபோது, பல தடங்கல்களை எதிர்கொண்டான். அது பற்றி கலங்கி நின்றபோது “சடகோபனை பாடினாயோ” என ஒரு குரல் கேட்டது.
கம்பன் அதன் பின்பே தன் “சடகோபன் அந்தாதி” எனும் பாடலை நம்மாழ்வாருக்காக எழுதினான், கம்பராமாயணம் போல் அதுவும் அழகானது.
திருமால் கோவிலில் சடாரி வைக்கும் வழக்கம் நம்மாழ்வார் காலத்துக்கு பின்பே தோற்றிற்று. நம்மாழ்வார் திருமாலின் திருவடியாகக் கருதப்படுவதால், சடாரியில் இருக்கும் திருமாலின் இரு பாதங்கள் நம்மாழ்வாராகப் போற்றுகிறோம். சடாரிக்குச் ‘சடகோபம்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. நம்மாழ்வார் பாடலைக் கேட்டு தியானித்து இறைவனை அடையுங்கள் என அவர் பாதம் தாங்கிய சடாரி, சடகோபனின் காலடி பதிக்கப்பட்ட சடாரி ஒவ்வொரு பக்தன் தலையினையும் தொடுகின்றது.
கம்பன் காலமல்ல, நாயக்க மன்னர்கள் காலத்திலும் பெரும் இடம்பெற்றார் நம்மாழ்வார். கிருஷ்ண தேவராயன் அவையின் எட்டு முக்கிய அமைச்சர்களில் ஒருவன் அல்லசானி பெத்தண்ணா.
இவர் மனுசரித்திரம் என தமிழக பாசுரங்கள், ஆழ்வார்கள் வரலாற்றை பிறமொழிக்கு மாற்றும் போது நம்மாழ்வார் குறித்து பிரம்மித்திருக்கின்றார். இப்படியான வார்த்தைகள் எப்படி சாத்தியம்? இப்படியான பக்தி மானுடர்க்கு சாத்தியமே இல்லை இவர் ஞானக்குரவர் எனச் சொல்லி வணங்கியிருக்கின்றார்.
பல இடங்ளில் நம்மாழ்வார் பாடல் தமிழில் மட்டுமல்ல பல மொழிகளிலும் இன்றும் பாடப்பட அவன் காரணமாகியிருக்கின்றான்.
அந்த அளவு எல்லோரையும் தொட்டவை ஆழ்வாரின் பாடல்கள்.
சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், தம் தமிழ் செய்த மாறன், வகுளாபரணன். குருகைப்பிரான்,
குருகூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரி துறைவன், பவரோக பண்டிதன், முனி வேந்து, பரப்ரம்ம யோகி, நாவலன் பெருமாள், ஞான தேசிகன், ஞான பிரான்
தொண்டர் பிரான், நாவீரர், திருநாவீறு உடையபிரான், உதய பாஸ்கரர், வகுள பூஷண பாஸ்கரர்.
ஞானத் தமிழுக்கு அரசு, ஞானத் தமிழ் கடல், மெய் ஞானக் கவி, தெய்வ ஞானக் கவி, தெய்வ ஞான செம்மல், நாவலர் பெருமாள், பாவலர் தம்பிரான், வினவாது உணர்ந்த விரகர், குழந்தை முனி,
ஸ்ரீவைணவக் குலபதி, பிரபன்ன ஜன கூடஸ்தர், மணிவல்லி என ஏகப்பட்ட அடைமொழிகளில் அழைக்கப்படுபவர் அவர்.
அந்த நம்மாழ்வாரின் வாழ்வை கண்டோம், அவர் பாடிய பாடல்களில் மிக மிக உருக்கமான பாடல்களை அடுத்துக் காண்போம்.
நம்மாழ்வாரின் பாசுரங்களெல்லாம் மகா உருக்கமானவை. மானிட உணர்வுகளைப் பகவான் மேல் செலுத்தி பகவானைக் காதலனாக, தலைவனாக, மகனாக, குடும்பத்தில் ஒருவனாக எண்ணிப் பாடும் பாடல்வகையினை அவர்தான் தொடங்கி வைத்தார்.
அதுதான் பின்னாளில் ஆண்டாள் கண்ணனைக் காதலனாகவும், பாரதி “கண்ணன் என் காதலன்” என சொல்லும்படியாகவும் வழி வழியாக வந்தது.
மானிடரின் பாசபந்தம், காதல், ஏக்கம் என எல்லாவற்றையும் ஆத்மாவின் காதலாக, ஏக்கமாக, பாசமாக பாடிவைத்தவர் நம்மாழ்வார். ஆத்மாவின் கதறலை அதன் தேடலை அவர்தான் அழகுறப் பாடிவைத்தார்.
அவரின் பாடல்கள் வேதங்களின் சாரங்கள் என்பதை அறிந்திருந்தோம். அவ்வகையில் அவரின் திருவிருத்தம் ரிக் வேத தழுவலாகவும், திருவாசிரியம் யஜூர் வேதமாகவும், பெரிய திருவந்தாதி அதர்வண வேத தழுவலாகவும் அறியப்படுகின்றது.
இசையால் இறைவனைப் போற்றும் சாமவேதம் திருவாய்மொழி என ஆயிரம் பாசுரங்களைக் கொண்டதாகவும் அறியப்படுகின்றது. இந்தப் பாடல்களை முழுக்க இங்கே காணமுடியாது. எனினும், முக்கிய பாடல்கள் சிலவற்றைக் காணலாம். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில பாசுரங்களைக் கொண்டு அவரின் பாசுரங்களின் உருக்கத்தைக் காணலாம்.
முதலில் திருவிருத்தப் பாடல். அப்பாடலின் சிறப்பைக் கிடாம்பியாச்சான் என்பவர் பாடுகின்றார் இப்படியாக,
“கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர் உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே”
அதாவது, கர்ப்பமாகிற வட்டமான குழியை விட்ட பின்பு சிற்றின்ப அனுபவமாகிய கொடிய குழியிலே விழுந்து கிழத்தனத்தை அடைந்து அலைந்து கொண்டிருக்கும் மக்களே உங்களுடைய உயிர் அடைவதற்குரிய பயன்களுக்கு இடையூறு சிறிதும் நேராதபடி திருக்குருகூரில் உள்ளாருக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம் என்னும் நூலில் ஒரு பாசுரத்தை கற்று உணர்ந்து பரமபதத்தில் வாழ்ந்து இருப்பீராக.
அப்படியான திருவிருத்தம் 100 பாடல்களைக் கொண்டது, அதன் உருக்கமான பாடல்கள் இதோ,
“பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்,
இந் நின்ற நீர்மை* இனி யாம் உறாமை, உயிர் அளிப்பான்-
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே”
அதாவது, மனிதனிடம் பொய் நிறைந்த, மாசு கலந்த ஞானம் உள்ளது. சுத்தமில்லா பொல்லாத ஒழுக்கம் உள்ளது. நல்லொழுக்கம் அவனிடம் இல்லை. அழுக்கேறிய உடல்தான் உள்ளது. சுத்தமான உடல் இல்லை. இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் “கடவுள் இல்லை’ என்று சொல்வது எவ்வளவு அபத்தம்?
வானவர்களின் தலைவனே! இறைவனே! உலகினைக் காத்து அருளும் நீ, பல வகைப் பிறப்புகளை எடுக்கிறாய். நாங்களோ பொய்யே நிலைபெற்ற அறிவும், தீய நடத்தையும், அழுக்குப் பதிந்த உடம்பும் கொண்ட மனிதப் பிறவியில் உழல்கிறோம். இப்படிப்பட்ட பிறவி அமையாதபடி நீதான் அருள வேண்டும்.
“காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந்நாள்
பாண் குன்றநாடர் பயில்கின்றன, இதெல்லாம் அறிந்தோம்,
மாண்குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடத்து உம்பர் நம்பும்
சேண்குன்றம் சென்று பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே”
ஒரு பெண் பாடுவது போல் அமையபெற்ற பாடல் இது, ஆண்டாள் பாடல்களுக்கு முன்னோடி இதுதான்.
அதாவது தோழி, என் காதலன் இன்றைக்கு என்னிடம் வித்தியாசமாக நடந்துகொள்கிறான், அவன் செய்கிறவற்றைப் பார்த்தால், அவன் சொல்கிறவற்றைக் கேட்டால், எல்லாம் வெறும் உபசார நடவடிக்கைகள் என்று எனக்குப் புரிகிறது, உண்மையாக அவனுடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதும் எனக்குப் புரிகிறது.
சிறப்புமிகுந்த கோவர்த்தனமலையைத் தூக்கியவன் கண்ணன், அவனுடைய குளிர்ந்த, சிறந்த மலை, வானோர்களும் நம்புகிற உயர்ந்த சிகரம், திருவேங்கடம்.
என் காதலன் என்னைப் பிரிந்து அந்தத் திருவேங்கடமலைக்குச் செல்லப்போகிறான், பொருள்தேடப்போகிறான், இதைச் சொன்னால், அவன் பிரிவை எண்ணி நான் வருந்துவேன் என்றெண்ணி, கல்நெஞ்சோடு இப்படி நடந்துகொள்கிறான்.
திருவேங்கடம் எனும் திருப்பதி பணம் கொட்டும் ஆலயம் என்பதை மிக மிக நுணுக்கமாக அன்றே பாடியிருக்கின்றார் நம்மாழ்வார்.
“பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அணையாய்!
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இப் பாய் இருளே “
தலைவி ஒருத்தியின் பிரிவினை சொல்லும பாடல் இது. ஆத்மா பரம்பொருளை எண்ணி ஏங்குவதை நயம்பட பாடியிருக்கின்றார் நம்மாவ்ழார்.
தலைவனோடு கூடியிருந்து பிறகு விதிவசந்தாற் பிரிந்த நாயகி அப்பிரிவை ஆற்ற மாட்டாதாளாய், தலைவனில்லாமல் இராப்பொழுதைக் கழிக்க முடியாதிருக்கிற நிலையினை தோழிக்குச் சொல்லுகிறாள்.
அவனைத் தேடி ஏங்கி தவிக்கும் நிலையினை இதனால் சொல்கின்றாள். அவனோடு மகிழ்ந்திருந்த காலங்களை சொல்கின்றாள். அவனோடு கூடி மகிழ்ந்ததெல்லாம் நினைவில் நிற்கும் போது தலைவினை நோக்கி தோழியானவள் அந்த இன்பம் பற்றி கேட்க, பிரிந்திருக்கும்போது காலம் நெடுகுவதுபோல, கூடியிருக்கும்போது காலம் குறுகும்படி என்னே!” என்று கலவிநிலையிற் காலங்கழிவது தெரியாது கழிந்த இன்பச் சிறப்பைக் கூறினாள் தலைவி.
பகவானோடு கலந்திருக்கும் போது யுகம் கூட நொடியாகின்றது அல்லா காலத்தில் ஒரு நாள் கூட யுகம் போல் நீள்கின்றது என்பது பாடல் சொல்லும் பக்தியான உருக்கம்.
“நானிலம் வாய்க்கொண்டு நன்னீர்அற மென்று கோதுகொண்ட
வேனில் அம்செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்தபொன்னே!
கால்நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது; அம்பூந்
தேன்இளம்சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே”
காதலன் சொல்கின்றான், வெய்யிலைத் தனது செல்வமாகக் கொண்ட சூரியன், நான்குவகை நிலங்களையும் வாயில்போட்டு மெல்கிறான், நன்றாகச் சுவைத்து உண்டு, அவற்றிலிருக்கும் ஈரப்பசையெல்லாம் தீர்ந்தபிறகு, மீதமிருக்கிற பகுதியைச் சக்கை என்று உமிழ்ந்துவிடுகிறான். அதுவே இந்தப் பாலை நிலம்.
அப்படிப்பட்ட பாலை நிலத்தைக் கடந்துவந்த பொன்னே, (என் காதலியே, வருந்தாதே, நாம் வந்து சேர வேண்டிய ஊர் நெருங்கிவிட்டது)
அதோ, கால் தரையில் தோயும்படி தேவர்கள் வந்து வணங்குகிற திருவெஃகா என்கிற கண்ணனின் திருத்தலம் அருகில் உள்ளது. அங்கே தேன் நிறைந்த பூக்கள் நிரம்பிய ஓர் அழகிய பூஞ்சோலை உள்ளது. நமது துயரங்கள் அனைத்தையும் அது போக்கும். நம்மைக் காக்கும்.
துன்பம் நிறைந்த வாழ்வில் ஆத்மாவுக்கு இறைவன் காட்டும் நம்ம்பிக்கையினைச் சொல்வது இப்பாடல்.
“கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால்வரைபோன்று மதிவிகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில்நிறமே?”
எம்பெருமான் கண்கள் செந்தாமரை போன்றவை, கைகளும் செந்தாமரை போன்றவை, திருவடிகளும் செந்தாமரை போன்றவை, அவனது வண்ணம், கருமை நிறத்திலுள்ள பெரிய மலையைப் போன்றது.
உண்மையில் எம்பெருமானின் எழிலான நிறம் எத்தகையது? இந்த உலகைக் கடந்து, விண்ணைக் கடந்து, அதற்கு அப்பால் உள்ள தேவர் உலகத்தையும் கடந்து பார்த்தாலும்கூட, எப்பேர்ப்பட்ட ஞானம் கொண்டவர்களாலும் அதைச் சிந்தித்துப் பார்க்க இயலாதே.
எவ்வளவு அழகான பாடல்.
“உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான்
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்
கண் ஆய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே”
கண்ணால் காணப்பட்ட தலைவியின் கண்களினழகு இவ்வுலகப் பற்றை நீத்து ஊணுமுறக்கமுமற்று போக நிலையிற் பயின்று அதில் தேர்ச்சிபெற்ற மஹா யோகிகளையும் வசப்படுத்திக்கொள்ள வல்லது என்றதனால், தான் அக்கண்ணழகில் ஈடுபட்டதைக் குறித்து நீ என்னைப் பழிக்க இடமில்லையென்று பாங்கனை நோக்கித் தலைவன் கூறினான்.
தலைவியின் கண்கள் ஒன்றிலே மயங்கி அங்கே உடல் பொருள் ஆவி எல்லாம் அவளுக்கே கொடுத்து கிடக்கும் போது, யோகியரும் விழும் இக்கண்ணில் நான் விழுவதில் என்ன எனக் கேட்பது போன்ற பாடல் இது.
திருமாலின் கண்ணழகை, அரங்கனின் கண் அழகை சொல்லும் கவித்துவமான பாடல் இது.
“நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல்
பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே “
பராங்கச நாயகியின் சிந்தனை வருமாறு என் தலைவனின் ஆற்றல் நான் புகழ்ந்து சொல்லி வரையறை செய்யும் தன்மையில் முடிவதன்று. அவர் உலகத்தை துன்புறுத்திய நரகாசுரனை கொன்றவர் ஆவார். வாணாசுரனது வலிய தோள்களை வெட்டித் தள்ளி தன் போர் வலிமையை வெளிக்காட்டியவர் அவர். இப்படிப்பட்ட பெருமாளின் சிறப்பை நாம் புகழ்ந்து சொல்லி முடிக்க இயலாது .
நீலமலை போன்ற கம்பீரமான வடிவழகு கொண்ட அழகர் அவர் அணிந்துள்ள திருத்துழாய் (துளசி) மாலையை பெறுவதற்கு நான் விரும்பி வருந்தினேன். எனது நெஞ்சமும் அதற்கு ஆசைப்பட்டு என்னை விட்டு
நீங்கிப் போகிற பொழுது எனக்கு தந்து விட்டுப் போனது இந்த பிரிவு துயரம் ஒன்றைத்தான்.
“திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும்
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே?”
தலைவனைச் சந்திக்காமல் அவன் படம் கண்டு தலைவி கலங்கும் பாசுரம் இது. எம் பெருமானை நேராக சேவிக்கப் பெறுமளவில் மாத்திரமேயல்லாமல் அவனது விக்ரஹத்தை காணுமளவில் அவனாகவே பாவித்து இடைவிடாது வணங்கிவரும் நமக்கு இந்த வேதனைக்குரிய தீவினை எங்கிருந்து வந்ததென்று தலைவி வெறுத்துரைக்கிறாள்.
இப்படி உருக்கமான பாடல்களை கொண்டது திருவிருத்தம். இனி திருவாசிரியம், அது எட்டு பாடல்களை கொண்டது, அதில் முக்கியமான பாடல் இதோ,
“செக்கர் மா முகில் உடுத்து மிக்க
செஞ் சுடர்ப் பரிதி சூடி
அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த
தாமரை உந்தித் தனிப் பெரு நாயக
மூவுலகு அளந்த சேவடியோயே”
பவழங்களாலே சிவந்த இடங்களையுடையதும், விளங்குகின்ற பசுமையான நிறத்தையுடையதுமான
ஒரு பச்சை மாமலையானது, சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும், மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய சூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும்,
குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைக் கண்ட பூக்ஷணமாக அணிந்து கொண்டும், (நக்ஷத்திரங்களாகிற) பல தேஜஸ்பதார்த்தங்களையும் (பலவகை ஆபரணங்களாக) அணிந்து கொண்டும்
கடலரசனுடைய கைமேலே
கண்வளர்வதுபோல், திருவபிஷேகம் கண்டிகை முதலான சிறந்த பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு, அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப்பெற்று, திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது, மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு போர் செய்துகொண்டு விளங்கப்பெற்று
அலையெறிகின்ற கடலினிடையே, விஷத் தொழிலையும், பல தலைகளையுமுடைய,
திருவனந்தாழ்வானாகிற போக்யமான சயனத்தின் மீது ஏறி அமர்ந்து, சிவன் அயன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ சமூகங்களும் கை தொழ கிடந்த
தாமரை உந்தி தனி பெரு நாயக, மூ உலகு அளந்த அழகியதிருவடிகளை யுடையவன் எவனோ அவனை பற்றியோர் வாழ்க என்பது பொருள்.
அடியார்க்குத் தொண்டு புரிதலே தலையாயது. அவர்களுக்கு எந்தக் காலத்திலும் நாம் பணிவிடை செய்யாதிருக்கலாமோ என்று, வைணவத்தின் அடிநாதத்தை இந்தப் பாசுரத்தால் புரிய வைக்கிறார் நம்மாழ்வார்.
“ஊழிதோறூழி ஓவாது வாழியே என்று யான்தொழ இசையுங் கொல்?,
யாவகை யுலகமும் யாவரு மில்லா மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி
மாயக் கடவுள் மாமுத லடியே”
ஊழக்காலம் தோறும் மாய்ந்துவிடாது நம்மை காக்கும் இந்த உலகை காக்கும் பகவானை பாடினால் அவனின் பாதங்களை அடையமுடியுமா என்றால் முடியும்.
பெரும் தேவர்களும் தெய்வங்களும் உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாசனம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.
அதைப்பார்த்து ‘இவர்களுடைய காலக்ஷேபமேயன்றோ நமக்கு உத்தேச்யம், இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாசனமே பண்ணிக்கொண்டிருக்கின்றார்கள், இப்படிப்பட்ட பாக்கியம் நமக்கும் கிடைக்குமாகில் நலமாயிருக்குமே என ஏங்கும் பாடல் இது.
பகவானிடம தேவர்களும் தெய்வங்களுமே சரணடைகின்றார்கள், அப்படியான பகவானுக்கு அடியாராய் நின்று பாடுவதை விட என்ன பாக்கியம் வேண்டும் எனும் பாடல் இது.
அடுத்துத் திருவாய் மொழி.
“ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்,
பாழிஅம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே, மறவாது வாழ்கண்டாய்”
என் நெஞ்சே, நீ வாழ்க, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய பெருமான், பெருமிதத்தையுடைய அமரர்களைத் தாண்டி உயர்வானவன், ஊழிக்காலத்திலும் உள்ளவன், அந்த ஊழிக்காலத்தில் அழிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் படைத்தவன், பசுக்கூட்டங்களை மேய்த்தவன், வலிமை மிகுந்த, அழகிய தோளாலே கோவர்த்தன மலையை எடுத்தவன், அத்தகைய பெருமானின் பாதங்களை மறக்காமல் வாழ்வாயாக என்பது பொருள்.
“கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”
கண்ணனின் கழலணிந்த திருவடிகளைப் பெறவேண்டும் என்ற மனம் உள்ளவர்களே, நீங்கள் எண்ணவேண்டிய திருநாமம், ‘நாரணன்’ என்ற திருநாமம்தான், இது உறுதி.
“நாரணன் தமரைக் கண்டுஉகந்து நல்நீர்முகில்
பூரண பொன்குடம் பூரித்தது உயர்விண்ணில்
நீரணி கடல்கள் நின்றுஆர்த்தன நெடுவரைத்-
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர்உலகே”
நல்ல தீர்த்தம் நிரம்பிய மேகங்களானவை நாராயணன் தமரைக் கண்டவுகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக அமைந்தன. அதன் அழகான மேகங்கள் அவனை தாங்கி கொண்டிருந்தன, கடல்கள் அவனை அலையால் வரவேற்றன, எங்கும் அழகான காட்சியுடன் அவனை வரவேற்றது உலகம்.
“எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே “
தெய்வீக கிரீடத்தின் மீது தேன் சொட்டும் துளசியை உடைய ஸ்ரீயாபதியின் சேவகர்கள் தங்குவதற்குத் தங்குமிடங்களைத் தங்கள் கண்களை இமைக்காத தேவதைகள் உருவாக்கினர்.
பன்னிரண்டு ஆதித்யாக்களும் அந்தந்த திறமையில், தங்கள் கைகளாகிய தங்கள் கதிர்களை அலங்கார வரிசைகளாகக் கொடுத்தனர்; அவர்கள் அடித்த முரசின் ஆரவாரமான ஓசை, கடலின் உரத்த சத்தத்துடன் அலைகளுடன் பொருந்தியது.
“வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே “
அதாவது, எம்பெருமான் அடியவர்கள் வைகுந்தத்தில் நுழைந்ததும், அங்கே வாசலில் காத்திருந்த வானவர்கள் அவர்களை வரவேற்றார்கள், ‘வைகுந்தனாகிய எம்பெருமானின் அடியவர்களாகிய நீங்கள், எங்களுடைய தலைவர்களைப்போன்றவர்கள், எங்கள் இடத்துக்கு வருக’ என்று அழைத்தார்கள்.
வைகுந்தத்திலிருக்கும் அமரர்களும் முனிவர்களும் இந்த அடியவர்களைக் கண்டு வியந்தார்கள், ‘மண்ணுலகில் பிறந்தவர்கள் வைகுந்தம் புகுவது பெரும் பாக்கியமே’ என்று வாழ்த்தினார்கள்.
(ஆண்டாள் பாடிய வாணரம் ஆயிரம் பாசுரத்தின் முன்மாதிரி பாசுரம் இதுதான்)
இன்னும் பாடுகின்றார், மிக மிக உருக்கமாகப் பாடுகின்றார் ஆழ்வார்,
“முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா
தனியேன்ஆர்உயிரே என்தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகல்ஒட்டேன் ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே”
சிருஷ்டி செய்யும் விதத்தை நினைப்பவனே! சிருஷ்டியைச் செய்வதற்காக ப்ரம்மாவைச் சரீரமாக உடையவனே! சிருஷ்டித்த உலகத்தை பின்பொரு நாள் அழிப்பதற்காக முக்கண்ணனாய் உபகாரகனான ருத்ரனைச் சரீரமாக உடையவனே! எனக்கு பழுத்த பழம் போலே மிக இனிமையாக இருக்கும் திருவதரத்தையும் தாமரைப்பூப்போலே இருக்கும் திருக்கண்களையும் துளைக்கப்படாத, கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியையும் உடையவனே!
என்னையும் அவ்வழகாலே வஞ்சித்துக் கொண்டவனே! சம்ஸாரத்தில் தனிமைப்பட்ட எனக்கு உயிரானவனே! என் தலைக்கு மேலே வந்து இருந்து உன்னிடத்தில் எனக்கு பிரியத்தையும் உண்டாக்கின பின்பு நான் உன்னை முன்புபோலே அகன்று போக அனுமதிக்கமாட்டேன். என்னை நீ சிறிதும் வஞ்சிக்காமல் இருக்கவேண்டும்.
இனி, பெரிய திருவந்தாதி.
“முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்”
எம்பெருமானை பற்றி பேசுவதில் என்னை விட ஊக்கமும் எழுச்சியும் கொண்டிருக்கிற மனமே, நீ தனிப்பட்டு செல்லாமல் என்னுடன் கூடவே இருந்தல்லவா செயலை செய்ய வேண்டும்.
நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய செயல் என்னவென்றால் காயம் பூவின் நிறத்துடன் விளங்கும் பெருமாளின் திருக் கலியாண குணங்களை நாம் இருவரும் அன்பு பொருந்திய சொற்களை பேசி அடக்குவோம்.
நாவால் அவன் பெருமையை நல்ல பொருத்தமான வார்த்தை சேர்க்கைகளில் விவரித்து பேசுவோம் என்பதாம்.
“புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை”
சிவந்த கண்களுடைய எங்கள் திருமாலே உன்னை நாங்கள் புகழ்வோம், புகழமாட்டோம்; பழிப்போம் பழிக்க மாட்டோம்; மதிக்கலாம், மதிக்காமலும் இருக்கலாம். நீ அதற்காக எங்களைக் கோபிக்காதே… (சீறல் நீ) உன்னைச் சரியாக எங்களால் புகழவே முடியாது. இது என்ன தீவினை, இது என்ன பிரேமை..? இந்த சங்கடத்துக்கு காரணத்தை அடுத்த பாடலில் சொல்கிறார்.
“பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ அம்மா காட்டும் நெறி?”
நீ எனக்குச் செய்தவற்றை எண்ணிப்பார்த்துச் சொன்னால், என்னைப் பெற்ற தாய் நீ, பிறப்பித்த தந்தையும் நீ, மற்றபடி என் குருநாதரும் நீயேதான்.
பெரும் மாயத்துடன் உன்னைக் கொல்ல வந்த தாடகையின் மார்பில் வாய் வைத்து அவளை வீழ்த்திய பெருமானே, நீ என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி எனக்குக் காட்டிய நல்வழி பெரும் ஆச்சர்யத்துக்குரியதுதான்!
“சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப்
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே?
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து”
மகானு பாவனான பெருமாளே சிறப்புடன் பிறந்தான், சிறப்புடன் வளர்ந்தான் என்று புகழும் படி இல்லாமல் வாமனன் என்னும் குள்ள உருவனாக அவதரித்தாய் , நீ இவ்வாறு வந்ததால்தான் பூமியை தானமாக பெற முடியும் என்பதோ, இந்த பூமியானது உன் மார்பால் தழுவப்பட்டது.
அதுவே உன் வயிற்றினுள்ளே இருந்தது பின்பு வெளிப்படுத்தப்பட்டது. இப்படி இப்பூமி உன் கைப்பொருளாய் இருந்தும் அதை நீ தானமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் வாமனனாய் வந்தாய் போலும். நான் இதனை நன்கு தெரிந்து கொள்ளும்படி நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேண்டும்.
“சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட
அன்று அங்கு பார் உருவம் பார் வளைத்த நீர் உருவும்
கண் புதையக் கார் உருவன் தான் நிமிர்த்த கால்”
முன்பு மாவலியால் உலகம் துன்பப்பட்ட காலத்தில் அந்த மாவலியின் யாகசாலையில் சென்று பூமியின் வடிவமும் பூமியை சூழ்ந்த தண்ணீர் பரப்பும் மறையும் படி காளமேகம் போன்ற வடிவம் கொண்ட பெருமான் திரிவிக்கிரமனாக அவதரித்து தன் திருவடிக்கீழ் உலகங்களை அடக்கினான். அத் திருவடிகளே இன்று இவ்விடத்திலே என் நெஞ்சிலே நெருக்கிக் கொண்டு கிடக்கின்றன. நான் கொடிய நரகத்திலே சேராதவாறு காப்பதற்கு என்றே இத்திருவடிகள் என்னை உய்விக்க என் இதயத்திலே புகுந்தன.
“இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன்தமர்கள் பற்றி- இளைப்புஎய்த
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய்தந்தை எவ்உயிர்க்கும்”
ஓ மனமே, நமது முடிவு காலத்தில் எமதூதர்கள் நம்மை பிடித்து இழுத்து நாம் தளர்ந்து தொய்ந்து துடிக்கும்படியாக நாய்களை நம் மீது ஏவி விடுவர். இவ்வாறு எமபடர் கையில் நாம் சிக்கித் துடிக்காதவாறு எம்பெருமான் நமக்கு அருள் செய்கிறான். ஒருவேளை அவன் அருள் செய்யாமல் இருந்தாலும் அதைப்பற்றி எண்ணாதே.
நமக்கு அருள் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவன் தான் எவ்வுயிருக்கும் தாயும் தந்தையும் ஆவான் என்கின்ற உண்மையை சொல்லிவிட்டேன்.
இந்த நம்பிக்கை குறையாமல் இருந்தால் நீ தளர்ச்சி அடைய மாட்டாய் .
“மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது
உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?”
எம்பெருமான் முன்னொரு காலத்தில் குட்டையான வடிவம் கொண்டு வாமனனாக தன்னை பாவித்துக் கொண்டு பூமியை யாசித்தான். கண்ணனாக வந்த போது பூதனை என்னும் பேச்சியினுடைய தனத்திலே தடவி இருந்த நஞ்சை சாப்பிடுவதாக பாவனை செய்து அவளை வதைத்தான்.
இப்படிப்பட்ட பெருமைகளை உடைய எம்பெருமானை சேவிப்பதில் என் கண்களுக்கு மிகுந்த ஆசை உள்ளது. மற்ற எவற்றையும் இவை காண விரும்பவில்லை .
என் வாயோ அவன் திருக்குணங்களை பேசுவதை தவிர வேறு எதையும் உண்பதற்கு விரும்புமோ?விரும்பாது.
“மாலே, படிச்சோதி மாற்றேல், இனிஉனது
பாலேபோல் சீரில் பழுத்துஒழிந்தேன், மேலால்
பிறப்புஇன்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவல்அன்று,
மறப்புஇன்மை யான்வேண்டும் மாடு”
திருமாலே, பால்போன்ற தூய்மையான உன்னுடைய சிறப்புக்களை எண்ணி நான் திளைக்கிறேன், உனது பிரகாசமான திருமேனியின் ஒளியை நான் என்றைக்கும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், அதனை மாற்றிவிடாதே!
இனி மறுபடியும் பூமியில் பிறக்காமல், உன்னுடைய திருவடியிலே அமர்ந்து உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதைவிட, உன்னை என்றைக்கும் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, அதுவே நான் விரும்பும் செல்வம்.
“அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில்
அதுவோ பொருள் இல்லை அன்றே? அது ஒழிந்து
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்”
அறிவு கெட்ட மனமே இவ்வுலகை விட்டு பரபத உலகம் வேண்டுமென்று நீ விரும்பினால் பகவானிடம் அதை பெறுவது முடியாத காரியம் அல்ல, அதை விட்டுவிட்டு இவ்வுலகிலேயே செல்வம் பெற்று ஆட்சி செய்வேன் என்று கேட்டாயாகில் அதையும் அவன் எளிதில் தந்து அருள்வான்.
ஆக இப்படி இரு வகை செல்வத்தையும் தரவல்லவன் கண்ணபிரானே என்பதை தெரிந்து கொண்டு அவன் திருவடிகளை வாழ்த்த நீ கற்றுக்கொள்.
“அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உய்ப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து”
ஓ மனமே, செய்ய தகாதவற்றையே செய்ய முயல்கிறாயே என்று நான் உன்னைப் பற்றி பயப்படுகிறேன்.
கண்ணபிரான் மல்லர்களுடன் போரிட்டு அவர்களை முடித்த செய்தியை மங்களாசாசனம் பண்ணிக்கொண்டு இரு.
நீ பிழைக்கும் வழி இதுவேயாகும் நான் சொல்கிறபடி கேட்காமல் அப்பெருமானை மறந்து கெட்டுப் போனால் போ அல்லது என் அறிவுரை கேட்டு மறவாமல் துதித்து வாழ்வதானாலும் வாழ்வாயாக.
நான் உனக்கு கூற வேண்டிய நல்லதை சொல்லிவிட்டேன். இனி உன் விருப்பம்.
“கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது?”
உலகத்தவர் பெருமாளின் திருக்குணங்களை சொல்லி அனுபவியாமல் பொழுதை போக்குகிறவர்களே! அப்பெருமான் மேகம் போன்ற திருமேனி உடையவன் கையோடு சேர்ந்த திருச்சக்கரத்தை உடையவன்.
பிரளய காலத்தில் உலகம் எல்லாம் வந்து சேரப்பெற்ற வலிய திருவயிற்றை உடையவன் ஆதிசேடனை படுக்கையாக கொண்டுள்ளவன். இப்படிப்பட்ட பெருமானின் திருக்குணங்களை சொல்லி துதித்தால் சூழ்கின்ற பாவங்களால் ஏற்படும் துயரங்கள் தொலையும் இவற்றை போக்கிக் கொள்ளாமல் இவ்வுலகத்தவர் வீணே கழிக்கிறார்களே.
பகவத் குணம் பேசாமல் இவர்கள் பொழுதை எப்படித்தான் கழிக்கிறார்களோ?
“இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்”
என்னுடைய மனமே, நம்மிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டுமாயின் எம்பெருமான் திருவடிகளையே துதி செய். ஒருபோதும் திருக்கையை விட்டு நீங்காத திரு சக்கரம் தாங்கிய பெருமானின் திருவடிகளை ஏற்றித்தொழ உற்சாகம் கொள்வாய். இக்காலத்திலும் மேலுள்ள காலத்திலும், ஆக எல்லா காலத்திலும் இதுவே நான் உனக்கு சொல்லும் உபதேசமாகும்….
இப்படி உருக்கமான பாடல்கள் பல நூறு பாடிவைத்தவர் நம்மாழ்வார், அதன் சிறப்பை பின் வரும் பாடல் சொல்கின்றது.
“அவாஅறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாஅற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாஇல் அந்தாதிகளால் இவைஆயிரமும் முடிந்த
அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே”
ஆசை நீங்கும் படி ஹரியை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, ஆசை நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன ஆசை நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த ஆஙை நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்றே கொள்ளலாம்.
“வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணங்கடந்த
போதக் கடலெங்கள் தென்குரு கூர்ப்புனி தன்கவியோர்
பாதத்தின் முன்செல்லு மோதொல்லை மூலப் பரஞ்சுடரே?”
அதாவது திருமாலின் திருப்பாதங்கள் வேத சாஸ்திரங்களைக் கடந்து சென்றாலும் செல்லட்டும்; அன்றி உண்மை நிலை கண்ட பிரமன் முதலானவர்களின் குற்றமற்ற ஞானத்தின் முடிவைக் கடந்து சென்றாலும் செல்லட்டும்; ஆனால் அந்த ஆதிமூலச் சுடரான இறைவன், குணங்களுக்கெல்லாம் அப்பால் திகழும் ஞானக் கடலான திருக்குருகூர் சடகோபர் அருளிச்செய்த கவிதைகளில் ஒரு பாதத்தையேனும் கடந்து செல்வானோ?
(செல்லமாட்டான், சடகோபரின் தமிழால் ஈர்க்கப்பட்டு அவர் கவிதைகளைப் பின்தொடர்ந்தே வருவான்)
இன்றும், கோவில்களில் உற்சவங்களின் போது, எம்பெருமான் நடுவே எழுந்தருள, வடமொழி வேதம் எம்பெருமானுக்குப் பின்னால் பாராயணம் செய்யப்பட்டு வருவதும், தமிழ் வேதமாகிய திவ்யப் பிரபந்தம் எம்பெருமானுக்கு முன்னே ஓதப்பட்டு வருவதும் திவ்ய தேசங்கள் முழுவதும் காணப்படுவது நம்மாழ்வார் வளர்த்த தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது.
பொதுவாக எந்த நூல் ஆரம்பிக்கும் போதும் சடகோபர் புகழைப் பாடிப் பின் மற்ற பாடல்களை அளிப்பது வைணவ மரபு. புகழேந்திப் புலவரும் கம்பரும் கூடத் தத்தம் நூல்களாகிய நளவெண்பாவிலும் கம்பராமாயணத்திலும் தொடக்கத்தில் சடகோபரைத் துதிக்கின்றனர்.
கம்பனும், புகழேந்தி புலவரும் அவரை துதிக்கின்றார்கள்.
“நேசரிதங் கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரிதங் கூற வருந்துணையா – பேசரிய
மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த
மாமகிழ்மா றன்தாள் மலர்”
– நளவெண்பா
பொருள்: புகழ்பொருந்திய திருமகள் நாதனாகிய திருமாலின் பெருமையை வளமிக்க தமிழில் பாடி நான்கு மறைகளின் பொருளை விரித்துரைத்து அருளிய மகிழ மலர்மாலை அணிந்த சடகோபரின் திருவடித் தாமரை மலர்கள், நளன் கதையை நான் கூறத் துணையாகும்.
“தருகை நீண்ட தயரதன் தான்தரும்
இருகை வேழத் திராகவன் தன்கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குறைகழல் காப்பதே”
எளியவர்களுக்கு வாரி வழங்கும் நீண்ட கரங்களை உடைய தசரதனின் மைந்தனாகத் தோன்றிய, இரண்டு துதிக்கைகளைக் கொண்ட யானை போன்ற வலிமை வாய்ந்த மேனியனான இராம பிரானின் திருக்கதையை இந்த உலகம் போற்ற நான் மொழிவதற்கு, திருக்குருகூர் தோன்றிய திருவருட் செல்வரான நம்மாழ்வாரின் வேத நாதம் ஒலித்திடும் திருவடிகள் துணையாக நின்று காக்கும்.
திருவாய்மொழி என்பது சாதாரண பாசுரம் அல்ல, அந்த திவ்யப் பிரபந்தத்தில் தலைமையாக விளங்குவது சடகோபர் இயற்றிய திருவாய்மொழி.
‘செந்தமிழ் வேதம்’, ‘ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரம்’ என்றெல்லாம் இப்பிரபந்தத்தை ஆன்றோர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அன்றும் இன்றும் என்றும் கொண்டாடப்படும் பாடப்படும் அற்புத பாசுரம் அது.
இறைவன் சடகோபர் மூலமாக தன்னைத் தானே பாடிக் கொண்டது தான் இந்த இன்னிசை நூலாக உருவெடுத்தது என்பதை, ‘பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி’ என்னும் திருவாய்மொழி வரிகளே சொல்கின்றன.
திருவாய்மொழி உட்பட, திவ்யப் பிரபந்த தொகுப்பில் உள்ள எல்லாப் பாசுரங்களும் ”பத்து”என்று சொல்லப்படும் பதிகங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன. எல்லாப் பாசுரங்களும் விஷ்ணு பக்தியின் பல பரிமாணங்களைத் தான் பேசுகின்றன என்றாலும், ஒவ்வொரு “பத்து”க்கும் ஒரு குறிப்பிட்ட மைய கருப்பொருள் உள்ளது.
பத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும் அந்தக் குறிப்பிட்ட கருப்பொருளைச் சுற்றியே இருக்கும். முழுமையாக அந்தக் கருப்பொருள் தரும் அனுபவத்தில் திளைக்க இது வகை செய்கிறது.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் இருந்து சில பாடல்களைப் பார்க்கலாம். அவ்வளவு உருக்கமானவை.
“மாலையும் வந்தது மாயன் வாரான்
மாமணி புலம்ப, வல் ஏறு அணைந்த
கோலநல் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர்முல்லை கருமுகைகள்
மல்லிகை அலம்பி வண்டு ஆலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என்சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே.”
மாடுகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. அவைகளில் கழுத்தில் கட்டிய மணிகள் கிணிகிணி என்று சத்தமிடுவது புலம்பல் போன்று இருக்கிறது அவளுக்கு.”ஊதும் அத்தீங்குழற்கே உயிரழிந்தேன்” என்று அவள் மனம் பறிகொடுத்த அந்த இனிய குழலோசையும் கொடுமையாகக் குழறுவது போல் இருக்கிறது.
மாலையின் இயற்கை நிகழ்வுகள் எல்லாம் கூடலாகவும், அதற்கான தவிப்பாகவுமே அவளுக்குத் தோன்றுகின்றன.
காளையை அணைந்து கூட்டமாக வளைந்து வளைந்து நடந்து வருகின்றன பசுக்கள் (கூடலுக்குப் பின் மாடுகள் திரும்பி வருவதைக் குறிக்க “மாடு அணஞ்சு வருது” என்று இன்றும் கிராமப் புறங்களில் கூறுவார்கள்). சங்குகளும், மணிகளுமாக அழகுக் கோலம் செய்து கொண்டிருக்கின்றன பசுக்கள், நாயகன் வரவை எதிர்பார்த்து தனக்குத் தானே மீண்டும் மீண்டும் அலங்காரம் செய்து கொண்டு நிற்கும் நாயகி போல. (”தன் செய் கோலத்து” என்று இன்னொரு நம்மாழ்வார் பாடலில் வரும்). காதலுக்காக ஏங்கும் நல் நாகுகள் அவை. மாலை வந்தும் தான் வராமல் முரண்டு பிடிக்கும் காளைகள் *வல்” ஏறுகள்!
மல்லிகை, முல்லைப் பூக்களுடன் கூடித் தேன் உண்டு, அந்த மகிழ்ச்சியில் ரீங்காரம் இடுகிறது வண்டு. அது கூடலின் இன்னொரு சங்கேதம்.
பொங்கியெழுந்து வானவெளியில் அலறுகிறது கடல், அவள் மனம் பொங்குவது போல. கடலும் வானுடன் கூடுவதற்காக இப்படி அலைபாய்கிறதோ?
அவனை விட்டு எங்கு போவாள் அவள்?
“ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதனால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே? வல்வினையேன் ஆவி காப்பார் இனியே.
இது ஊர் உறங்கும் நேரம் தலைவி பாடும் பாடல்.
ஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர்! அந்த வம்புப் பேச்சுக்கள் தான் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்.”ஊரவர் கவ்வை” என்று தமிழ் இலக்கியத்தில் அதற்கு ஒரு பெயரே உண்டு. அதோடு, வீட்டில் அம்மா சொல்லும் கண்டிப்புச் சொற்கள் காதலை நீரூற்றி வளர்த்தன. அவளது ஈரநெஞ்சமாகிய வயலில் அப்படித் தான் காதல் பயிர் செழித்து வளர்ந்ததாம்!
“ஊரவர் கவ்வை எருவிட்டு, அன்னைசொல் நீர் மடுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன்”
அப்படி வம்பு பேசிய ஊர் அடங்கி விட்டது. அம்மா, தோழி எல்லாரும் உறங்கிவிட்டார்கள். யாரிடமும் பேசிப் பொழுது போக்க முடியாது. சரி, எதையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றால், உலகம் முழுவதுமே நள்ளிருளாகி விட்டது. ”நள்” என்ற சொல்லே இருளின் அடையாளம், பேச்சற்ற இரவின் மௌன ஒலியைக் குறிக்கும் சொல் அது. இந்த இருண்ட உலகத்தில் இவள் மட்டும் தனியே விழித்துக் கொண்டிருக்கிறாள்.
“ஆவிகாப்பார் இனி யார்? ஆழ்கடல் மண் விண்மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்..
காப்பார் யார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்ச்
சேட்பாலது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய”
இப்பாடல் விஞ்ஞானத்தோடு பிரபஞ்ச தத்துவத்தோடு ஒத்துபோவதை காணலாம்.
இந்த பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஒடுங்கி மீண்டும் விரிவடைவதை விஞ்ஞானம் சொல்கின்றது. இந்த வானம் கடல் விண்மீன் என எல்லாமே ஒடுங்கி மீண்டும் வளரும்.
இதுதான் ஊழிக்காலம், இதுதான் யுகங்களின் முடிவும் தொடக்கமும்.
இந்த இயக்கத்தின் பெயர் அதற்குப் பெயர் பிரளயம். லயம் என்றால் ஒடுக்கம்; பிரளயம் என்றால் முழுமையான ஒடுக்கம்.
இந்த விஞ்ஞான தத்துவமே இங்கு சொல்லப்படுகின்றது.
இங்கு நம்மாழ்வார் சுட்டும் பிரளயமும் இந்த அகப் பிரளயமே என்று கொள்ள இடமிருக்கிறது. தூய வேதாந்தத்தில் அனைத்தும் ஒடுங்கி பிரம்மம் மட்டுமே எஞ்சுகிறது. வைஷ்ணவ சித்தாந்தத்தில் திருமால் அனைத்து உலகங்களையும் உண்டு தான் மட்டும் எஞ்சியிருப்பதாக வர்ணிக்கப் படுகிறது. உயிர்கள் திருமாலினின்றும் வேறுபட்டவையாக அல்லாமல், அவனது உறுப்பாக, அங்கமாக இருக்கின்றன.
நம்மாழ்வார் ஒரு மகாகவி மட்டுமல்ல; மாபெரும் தத்துவ ஞானியும் ஆவார். நம்மாழ்வாரது பாடல்களின் வாயிலாகவே பின்னாளில் ஸ்ரீராமானுஜர் தமது விசிஷ்டாத்வைத தத்துவத்தை வளர்த்தெடுத்தார். ஆனால் நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது. திருவாய்மொழியின் வசீகரத்திற்கு இதுவே காரணம்.
இன்னொரு அழகான பாடலை காணலாம்.
“கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ
கடல்ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கடல்ஞாலத்து என் மகள் கற்கின்றவே”
கடல்சூழ்ந்த இவ்வுலகைச் செய்தவனும் நானே என்று சொல்கிறாள். இவ்வுலகமும் தானே என்கிறாள். இவ்வுலகத்தைத் தாவி அளந்து கொண்டவனும் (வாமன அவதாரம்), அகழ்ந்து எடுத்தவனும் (வராக அவதாரம்), உண்டவனும் தானே என்கிறாள். கடல்சூழ்ந்த உலகத்தின் ஈசன் இவள்மேல் வந்து ஏறி விட்டானோ? உலகத்தார்களே, கடல்சூழ்ந்த உலகத்தில் இருந்து கொண்டு என் மகள் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பற்றி நான் என்ன சொல்வேன்?
இதைத்தான் சித்தன் பாரதி பாடினான்
“வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்”
“காக்கை சிறகினிலே நந்தலாலா” என அவன் பாடிய வரியின் பொருளும் இதுதான்.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்.
”கடல்ஞாலம் செய்தேனும் யானே – கடல்ஞாலம் ஆவேனும் யானே” என்ற வரிகளில் முரண் இருக்கிறது. அதெப்படி செய்பவனும் செய்யப்படு பொருளும் ஒன்றாக இருக்க முடியும்?
படைப்பவனும், படைப்பும் வேறுவேறு அல்ல; ஒன்றே எனும் மகா தத்துவத்தை சொல்லும் வரி இது.
இன்னொரு மகா நுணுக்கமான தத்துவத்தை சொல்லும் பாடல் ஒன்று உண்டு.
’எனக்கே ஆட்செய் எக்காலத்தும்’ என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னித்
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே”
’எல்லாக் காலத்திலும் எனக்கே ஆட்செய்வாய்’ என்று என் மனத்தின்கண் வந்து, பிரிதலின்றி நிலைபெற்று நின்று, தனக்கே உரியவனாகும்படி என்னை ஏற்றுக் கொள்கிறான் கண்ணன். இதுவே, எனக்கே உரியவனாகும்படி நான் அவனைக் கொள்கின்ற சிறப்பாகும்.
ஆட்கொள்ளுதல், ஆட்செய்தல், ஆட்படுதல் என பரிபூரண நிலையினை பாடுகின்றார் நம்மாழ்வார்.
நம்மாழ்வார் மானிட உணர்வுகளை பகவானுக்கு சமர்பித்து பாடினார், பின்னளைய ஆண்டாள், பாரதி என எல்லோரும் அவரிடம் இருந்தே கற்றுக்கொண்டு பாடினார்கள்.
அவர் பாடலில் முழு ஆன்மீகம், முழு பாகவதம் என எல்லாமும் உண்டு, பாகவத புராணத்தையே திருவாய்மொழி எனச் சொன்னவர் அவர்.
வேதங்கள் நான்கின் முடிவும் பகவானை உணர்தலே எனச் சொல்லி, அந்த வேதங்களை நான்கு பாடல் பிரிவுகளாக பாடிவைத்து தமிழில் வேதம் தந்த மகான் அவர்.
அவரின் பாடல்களே இன்றும் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவைகளிலும் அவை வழிவந்த எல்லாப் பாடல்களிலும் எல்லாத் தழுவலிலும் எல்லாக் காலமும் அவரும் அவரின் வரிகளும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
தூத்துக்குடி பக்கம் சென்றால், தென்முனை பக்கம் சென்றால் அவர் வாழ்ந்த ஆழ்வார் திருநகரிக்கும், அந்த ஆலயத்துக்கும் செல்ல மறவாதீர்கள்.
அங்கே சென்று அவர் வாழ்ந்த அந்தப் புளியமரத்தில், இன்றும் உள்ள அந்த புளியமரத்தின் அருகில் நின்று அவரை நினைத்து வணங்குங்கள், அவரின் பாசுரங்கள் சில பாடி வணங்குங்கள்.
அப்போது நீங்கள் என்ன நினைந்து சென்று வழிபடுகின்றீர்களோ அது நிச்சயம் உங்களுக்கு அருளப்படும். இது சத்தியம்.
அங்கு செல்லமுடியாதோர் அருகிருக்கும் ஆலயத்தில் வீட்டினில் அந்த பாசுரங்களை படித்து அவரோடு பகவானை தியானியுங்கள். எல்லா நலமும் வளமும் பகவான் அனுகிரஹமும் உங்களுக்கு கைக்கூடும்.
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே!
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே!
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே!
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே!
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே!
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே!
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே!
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.