பன்னிரு ஆழ்வார்கள் : 06 மதுரகவியாழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 06
மதுரகவியாழ்வார்.

பாண்டிய நாட்டின் திருக்கோளூர் எனும் ஊரில் துவாபர யுகத்தில் ஈஸ்வர வருடம் சித்திரை மாதம் சுக்கிலபட்சம் சித்திரை நட்சத்திரம் அன்று பிறந்தார்.

பகவானின் கருட அம்சமாக பிறந்த இவர், சாமவேதம் அத்யயநம் செய்யும் அந்தணக் குலத்தில் பிறந்தவர். இளம்வயதிலே வேதம் கற்றுப் பகவானைத் தேடித் திரிந்தவர், அற்புதமான கவிகளைப் பாடுவதால், இனிமையான கவிகளைக் கொட்டுவதால் அவர் மதுரகவி என்று அழைக்கப்பட்டார்.

ஏகப்பட்ட ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு வடநாட்டுக்கு யாத்திரை சென்றார்.

அயோத்தி, மதுரா,ஹரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைன் மற்றும் துவாரகை எனச் சுற்றிக்கொண்டிருந்தார் மதுரகவியார்.

இந்த ஏழு நகரங்களும் புண்ணியம் தரும் நகரங்கள், முக்தி தரும் நகரங்கள். இங்கே சென்று நல்ல குருவைத் தேடி ஞானம் அடைதல் அவரின் தேடலாய் இருந்தது, தவிப்பாய் இருந்தது.

எல்லாத் தலங்களும் தரிசித்தவர் கடைசியில் அயோத்தியில் ராமனைத் தரிசித்துக் கொண்டே சில காலம் தங்கியிருந்தார், பல ஷேத்திரம் தரிசித்துவிட்டு அவ்விடம் வந்திருந்தார், அக்காலம் அவர் நல்ல குருவினைத் தேடி அலைந்த காலமாய் இருந்தது.

நல்ல குருதான் தன்னைப் பகவானிடம் சேர்ப்பார்; அதுதான் வேண்டும் என நல்ல குருவினைத் தேடிக் காடெல்லாம், ஆலயமெல்லாம் அவர் அலைந்து கொண்டிருந்தார்.

அப்போது இதைச் சிந்தித்தபடியே இருந்தபோது தெற்கே சற்றுத் தள்ளிப் பிரம்மாண்ட ஜோதி தெரிந்தது. ஏதோ ஊரே தீப்பற்றி எரிந்ததுபோன்ற அந்த ஜோதியினைக் கண்டு தெற்கே நகர்ந்தார்.

ஆனால், அதன் பின் ஜோதி மறைந்தது, அவர் தவித்துப் போனார். ஆனால், சில தினங்களில் ஜோதி மீண்டும் தென்பக்கம் தென்பட்டது. அவர் மீண்டும் தெற்கே நகர்ந்தார்.

அப்படியே ஜோதி அவரைத் தெற்கே அழைத்துவந்தது.

மதுர கவியாழ்வார் அதை நோக்கி நகர்ந்தார். அது மாதக் கணக்கில் அவரை இழுத்துச் சென்று கொண்டே இருந்தது. கடைசியில் தாமிரபரணிக் கரையில் திருக்குருகூர் ஆலய புளியமரத்தின் மேல் வந்து நின்றது.

மதுரகவி ஆழ்வார் ஆச்சரியமாக அந்தப் புளியமரம் நோக்கி வந்தார், உள்ளே தவக்கோலத்தில் சடகோபன் அமர்ந்திருந்தார்.

அந்த முகத்தில் ஒரு தேஜஸ் இருந்தது, உடல் ஒரு யோகிக்குரிய அளவில் ஒளிவீசிற்று, இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை உணர்ந்து கொண்ட மதுரகவியார் அவர் கண்விழிக்க என்ன செய்யலாம் எனச் சிந்தித்தார்.
பின் சிறிய கல்லை எடுத்து மரப்பொந்தில் வீசினார், யோகி கண்விழித்தார். ஆனால், கண்விழி அசையவில்லை.

அந்தக் கண்களின் தீர்க்கத்தைக் கண்ட மதுரகவியார் தன் மிகப்பெரிய ஞானத் தேடலின் கேள்வியும், யார் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் அவரைக் குருவாக ஏற்கத் தயார் என மனதார நினைத்திருந்தாரோ அந்த மிக நுணுக்கமான ஆனால் வலுவான ஞானக் கேள்வியினை எழுப்பினார்.

“செத்ததின் வயிற்றில் சிறியது பிறப்பின் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”

அந்தச் சடகோபன் தன் வாழ்வில் முதல் முறையாக வாய்திறந்து சொன்னார், முதல் முதல் வார்த்தையாகச் சொன்னார்,

“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”

இந்தப் பதிலைக் கேட்டதும் “என் குருவைக் கண்டேன், என் நீண்ட காலத் தேடலை பகவான் அனுப்பிய ஒளியில் இங்கே கண்டேன், இதோ அவதாரம் இதோ என் ஞானம்” என அங்கே மண்டியிட்டார் மதுரகவியார். அங்கேதான் மதுரகவி என்பவர் மதுரகவி ஆழ்வார் என்றானார்.

அந்த உரையாடல் இருவரிகளில் நடந்தது எனப் பாமர கண்களுக்குத் தெரிந்தாலும் அதில் உள்ள உள்ளர்த்தம் ஆழமானது, மிக மிக நுணுக்கமானது.

“செத்ததின் வயிற்றில் சிறியது பிறப்பின் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்பதன் ஞான விளக்கம் உருக்கமானது.

அது என்னவென்றால் சித்து அல்லது செத்து என்றால் சிறிய எனப் பொருள். இந்தச்சிறிய உடலில் சிறியதான ஜீவாத்மா வாழும் போது அது என்ன அனுபவங்களைப் பெறும், எதை அனுபவித்து வாழும் என்பது.
அதற்கு நம்மாழ்வார் கொடுத்த பதில் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்பது, அதாவது அந்த உடலுக்குரிய கர்மம் எதுவோ அந்த மாயையில் சிக்கி அதை அனுபவித்து அங்கே கிடக்கும்.

ஆம். ஒவ்வொரு ஜீவாத்மாவும் பிறக்கும் கர்மவினைகளைப் பொறுத்து எல்லாவற்றையும் அனுபவித்துப் பிறவிச்சுழலில் சிக்கிக் கிடக்கின்றது என்பது.

இங்கே இரு பெரும் ஞானியர் இருவரும் பேசாமல் பேசியபோதனை ஞானமான பொக்கிஷ உரையாடல்.
ஒரு ஆத்மா கர்ம வினைப்பயனாக உடலுக்குள் வருகின்றது, அது அந்த லௌகீக மாயையில் சிக்கி அப்படியே அந்தச் சூழலுக்கு ஏற்ப வினைகளை அனுபவித்து அங்கே கிடக்கின்றது, அப்படியே பிறவிச் சுழலில் சிக்கி விடுகின்றது.

அந்த ஆத்மா எப்போது இதெல்லாம் மாயை என உணர்ந்து இறைவனை நோக்கி தியானிக்குமோ, எல்லாம் மாயை இறைவன் ஒருவனே நிரந்தரம் எனக் கருதுமோ அப்போது அந்த ஆத்மா இறைவனைத் தேடிப் பிறவிச்சூழலில் இருந்து விடுபடும்.
( “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதவர்” எனும் குறளின் மூலம் இந்த வரிதான், குறள் இவர்கள் காலத்துக்கும் பிந்தையது.)

தான் தேடிய ஞானி, தனக்கு வழிகாட்டும் ஞானி கிடைத்துவிட்டார் என நிறைவு கொண்ட மதுரகவியாழ்வார் அந்தப் புளியமரத்தின் அடியிலே அமர்ந்து கொண்டார்.

அவர் வாய்திறந்து பதில் சொல்லி தனக்கான சீடனைத் தேர்ந்து கொண்ட நேரம் வானில் கருடனுடன் எழுந்த எம்பெருமான் அவரை வாழ்த்த அதிலிருந்து அவர் தன் பிறவிக்கடனை, வந்த நோக்கத்தை செய்யத் தொடங்கினார்.

இறைவனை நோக்கி மானுடரை இழுத்து உய்விக்கும் பாடல்களைப் பாட திருவுளம் கொண்டார் சடகோபன், மதுரகவி ஆழ்வார் அவர் சொல்ல சொல்ல எழுதினார்.

மதுரகவி ஆழ்வார்தான் நம்மாழ்வாரின் வார்த்தைகளைப் பாடல்களை உலகுக்குச் சொன்னவர். காரணம், நம்மாழ்வார் அந்தப் புளியமரத்தின் பொந்தினை விட்டு வெளிவரவில்லை.

நம்மாழ்வார்க்கு மதுரகவியாழ்வார் மூத்தவர் என்றாலும் நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றுக்கொண்டு அவர்பாதம் பணிந்திருந்தார், பின் அவர் காலம் முடிந்தாலும் நமமாழ்வார் புகழைப் பரப்பிக்கொண்டிருந்தார்.

அக்காலங்களில் மதுரை தமிழ்சங்கத்தில் அங்கீகரிக்கப்படாத தமிழ்ப்பாடல்கள் எதுவும் செல்லாது, எந்தப் படைப்பு என்றாலும் அதைச் சங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

நம்மாழ்வார் பாடல்களைச் சங்கம் அங்கீகரிக்க மறுத்தது, அக்கால வழமைப்படி சங்கம் அங்கீகரிக்க மறுத்த பாடல்களைப் பாடக்கூடாது, பேசக்கூடாது. அரச நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் மிக மனமுடைந்த மதுரகவியாழ்வார் தன் குரு நமமாழ்வாரிடமே முறையிட்டார். நம்மாழ்வார் அவர் கனவில் தோன்றி “அஞ்சவேண்டாம், கண்ணன் கழலிணையை” எனும் பாடலைக் கொண்டு சங்கப் பலகையில் வைத்துவிட்டு நடப்பதைக் கவனி” என அருள்மொழி சொன்னார்.

அப்படிப் பாடலைக் கொண்டு சென்றார் மதுரகவியாழ்வார்.

“கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே.

நாரணன் எம்மான் பாரணங்காளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே.

தானே உலகெலாம் தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே.

ஆள்வான் ஆழிநீர் கோள்வாய அரவணையான்
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீரே.

நாடீர் நாள்தோறும் வாடா மலர்க்கொண்டு
பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.

மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன்
பேயார் முலையுண்ட வாயான் மாதவனே.

மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்
தீதொன்று மடையா ஏதம் சாராவே.

சாரா ஏதங்கள் நீரார் முகில்வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே.

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே.

வினைவல் இருளென்னும் முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே.

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே”

இப்பாடல் ஏட்டினைக் கொண்டு மதுரை தமிழ்ச்சங்கத்தின் சங்கப்பலகையில் வைக்க அது தாழ்ந்து எதிர்ப் பலகையில் இருந்த புலவர்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டது, அந்த அதிசயத்தை கண்ட சங்கம் நம்மாழ்வார் பாடல்களையும் அவரையும் ஏற்றுக்கொண்டது.

நம்மாழ்வார் பாசுரங்களுக்குத் தனிப்பெரும் இடம் பெற்றுத்தந்தவர் மதுரகவியாழ்வார்.

அதன்பின் அவர் ஏகப்பட்ட இடங்களில் நம்மாழ்வார் பாடலைப் பாடினார்; பரப்பினார்; அவரை உபதேசித்தார்.

செல்லுமிடமெல்லாம் சடகோபன் புகழை அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

தன் அந்திம காலத்தில் திருப்பதியில் தங்கி பகவானைச் சேவித்து நம்மாழ்வார் பாசுரங்களைப் பாடிக்கொண்டே இருந்தவர் அங்கே முக்தி அடைந்தார்.

நம்மாழ்வாரின் பாசுரங்களை மக்களிடம் விதைத்தவர் மதுரகவியாழ்வாரே, அது பெரும் இடம் மக்களிடம் பெற்றிருந்தது.

ஆனால், பின்னாளைய பௌத்த சமண குழப்பங்களில் அப்பாடல்கள் மறைக்கப்பட்டு ஆங்காங்கே ஒன்றிரண்டு இருந்தன‌.

அதனை மீட்டெடுத்தவர் நாதமுனிகள்.

நாதமுனிகள் காலத்தால் பிந்தையவர். காட்டுமன்னார் கோவில் பக்கத்தில் இருந்து வந்தவர், அவர் மிகச் சிறந்த பக்தர், பக்திப் பாடல்களைக் கேட்டால் உருகிவிடும் மனம் கொண்டவர்.

அவருக்கு முந்தைய காலத்தில் சமண, பௌத்த காலங்களில் நம்மாழ்வார் கொடுத்த பாடல்களெல்லாம் மறைக்கப்பட்டு அழிந்தே போயின, ஓரிரு பாடல்கள் மட்டும் எஞ்சியிருந்தன‌.

அதில் ஒரிரு பாடல்கள் அவர் கேட்க நேர்ந்தது. அதில் மனம் சொக்கிப் போனார் நாதமுனிகள்‌. அப்பாடல் “ஆயிரத்தில் பத்து” என முடியும்.

ஆயிரத்தில் பத்து பாடல்களே இப்படி என்றால் ஆயிரம் பாடல்களும் எங்கே எனத் தேடியவர் அவர்தான்.

அவர் நம்மாழ்வார் பற்றி அறிந்து நேரே ஆழ்வார் திருநகரிக்கே வந்து அந்த ஆலயத்தின் புளியமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டார்.

ஆழ்வார் அப்பாடல்களை மீளத் தரவேண்டி “கண்ணிநுண்சிறுத்தாம்பு ” எனும் பாசுரத்தைப் பாடினார், அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல பன்னிரண்டு ஆயிரம் முறை பாடினார்.

அவரின் அந்த அர்ப்பணிப்புக்கு வேண்டி தானே தோன்றிய நம்மாழ்வார் சொல்ல சொல்ல எல்லாப் பாசுரங்களையும் மீட்டெடுத்தார் நாதமுனிகள்‌.

நம்மாழ்வார் பாசுரம் மட்டுமல்ல, அழிந்த நாலாயிரம் பாசுரங்களையும் திரிகால ஞானியான நம்மாழ்வாரே நாதமுனிக்கு அந்தப் புளியமரத்தின் அடியில் மீளக் கொடுத்தார்.

இப்படி நாதமுனிகள் பின்னாளில் நம்மாழ்வாரை மீட்டெடுக்க அன்றே நம்மாழ்வார் பாசுரங்களை உலகெல்லாம் விதைத்தவர் மதுர கவியாழ்வார்.

அவர் நம்மாழ்வார் எனும் சடகோபன் புகழைப் பாடினாரேயன்றி, தான் மதுரகவியாயினும் பகவானைப் பற்றிப் பாடவில்லை. நம்மாழ்வார் பாடல்களை மிஞ்ச ஏதுமில்லை என்பதால் இவர் அதிகம் பாடவில்லை.

நம்மாழ்வார் மீது பதினோரு பாசுரங்களைத்தான் பாடினார், அதைக் காணலாம்.

“தேவு மற்றறியேன்” என்று நம்மாழ்வாரைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை அறியேன் என அவரைப் பணிந்திருந்தவர் மதுரகவி ஆழ்வார். அவரின் “கண்ணி நுண் சிறுத்தாம்பினால்” எனும் பாடல் மகா பிரசித்தம்.

பின்னாளில் நீரில் அமிழ்ந்த மூட்டைப்போல் நம்மாழ்வாரின் பாடல்களெல்லாம் மறைந்திருக்க, இந்த ஒரே ஒரு பாடலை கேட்டுத்தான் முடிச்சை பிடித்து மொத்த மூட்டையும் தூக்குவது போல நம்மாழ்வார் பாசுரங்கள் மொத்தத்தையும் மீட்டெடுத்தார் நாதமுனிகள்.

“கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே”

என்னுடைய சுவாமியும், சர்வேஸ்வரனுமான கண்ணன் எம்பெருமான் யசோதைப் பிராட்டி துண்டு துண்டான, மெல்லிய, சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்டான். அப்படிப்பட்ட எம்பெருமானை விட்டு, தென் திசையில் உள்ள திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் அது என்னுடைய நாக்குக்கு இனியதாகவும் அமிர்தமாகவும் உள்ளது.

நம்மாழ்வாரின் பாசுரங்களே தனக்கு மிகவும் இனிமையாக இருப்பதாகவும் அவற்றைச் சொல்லிச் சொல்லியே தன்னைத் தரித்துக்கொள்வதையும் விளக்குகிறார்.

அடுத்துப் பாடுகின்றார்.

“நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே”

நான் நாக்காலே ஆழ்வாரின் பாசுரங்களைச் சொல்லி மிகப்பெரிய ஆனந்தத்தை அடைந்தேன். ஆழ்வாரின் திருவடிகளிலே நன்கு சரணடைந்திருக்கிறேன். கல்யாண குணங்களால் நிறைந்த, திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை அறியேன். ஆழ்வாருடைய பாசுரங்களை இசையுடன் பாடிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வேன்.

நம்மாழ்வாரின் அடியவனாக இருப்பதாலே எம்பெருமான் தானே விரும்பி வந்து மதுரகவி ஆழ்வாருக்குத் தன் தரிசனத்தைக் காட்டிக்கொடுத்த நன்மையைப் பேசி மகிழ்கிறார்.

“திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே”

ஆழ்வாருக்கே அடியவன் என்றிருந்த நானும் அந்த நிஷ்டையில் இருந்து நழுவினேன். நித்யஸூரிகளின் தலைவனான, கறுத்த, அழகிய திருமேனியை உடையவனான ஸ்ரீமந் நாராயணனைக் அவன் காட்டிக் கொடுக்க நான் கண்டேன். சிறந்த, வள்ளல் தன்மை மிகுந்த திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரின் உண்மையான அடியவனாக இருக்கும் எனக்குக் கிடைத்த நன்மையைப் பாரீர்.

ஆழ்வார் நமக்குச் செய்த நன்மையைப் பார்த்தால், அவருக்கு எதுவெல்லாம் விருப்பமோ, அவற்றை நாமும் விரும்ப வேண்டும் என்கிறார். மேலும் தன்னுடைய தாழ்ச்சியையும் ஆழ்வார் தன்னை ஏற்றுக்கொண்ட விதத்தையும் பேசி அனுபவிக்கிறார்.

‘நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே”

நான் தாழ்ச்சிகளின் உருவமாக இருப்பதைக் கண்ட நான்கு வேதங்களில் சிறந்த ஞானமும் அனுஷ்டானமும் உடையவர்கள், என்னைக் கைவிட்டார்கள். ஆழ்வாரோ தாயும் தந்தையுமாக இருந்து என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டார் என்பதால் அவரே என் நாதன்.

முன் பாசுரத்தில் கூறிய தாழ்ச்சியை விளக்கி, அப்படி இருந்த தான் இப்பொழுது ஆழ்வாரின் காரணமற்ற அருளாலே திருந்தியுள்ளதைத் அறிவித்து ஆழ்வாருக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறார்.

“நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே”

முற்காலத்தில் பிறருடைய சொத்தையும் பெண்களையும் விரும்பினேன். இன்றோ, தங்கத்தால் செய்யப்பட்ட மாட மாளிகைகள் நிறைந்த திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரால் திருத்தப்பட்டு அவரின் அடியவனாகி, மேன்மையை அடைந்தேன்.

எவ்வாறு இப்படிப்பட்ட பெருமையைப் பெற்றீர்?” என்ற கேள்விக்கு, ஆழ்வாரின் அருளாலே இப்பெருமையைப் பெற்றேன், இனி இந்நிலையிலிருந்து நாம் வீழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.

“இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே”

திருக்குருகூருக்குத் தலைவரான, என்னுடைய ஸ்வாமியும் நாதனுமான ஆழ்வார் இன்று முதல் நான் அவருடைய பெருமையைப் பாடும்படியான பூர்ண விச்வாஸத்தை எனக்கு அருளினார். இனி அவர் எம்மை ஒருநாளும் கைவிட மாட்டார். இதை நீரே பாரீர்.

ஆழ்வாராலே அருளப்பட்ட தான் ஆழ்வாரின் பெருமையைத் தெரிந்து கொள்ளாமால் அதனால் ஆழ்வாரின் அருளை இழந்து துன்புற்றிருக்கும் அனைவருக்கும் ஆழ்வாரின் பெருமையை எடுத்துரைத்து அவர்களுக்கும் புகழ்ச்சியைப் பெற்றுத்தருவேன் என்கிறார்.

“கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே”

பொற்காரியின் திருக்குமாரரான காரிமாறன் என்னும் ஆழ்வார் என்னைக் கடாக்ஷித்துத் தன் கைங்கர்யத்தில் ஏற்றுக்கொண்டார். என்னுடைய அநாதி காலப் பாபங்களைப் போக்கினார். அற்புதத் தமிழ்ப் பாசுரங்களை அருளிச்செய்த ஆழ்வாரின் கருணையின் பெருமைகளை எட்டுத்திக்கிலும் உள்ளோர் உணரும்படிப் பாடுவேன்.

இதில் எம்பெருமானின் கருணையைவிட ஆழ்வாரின் கருணை உயர்ந்தது என்பதை விளக்குகிறார். எம்பெருமான் ஸ்ரீ கீதையை அருளிசெய்ததைவிட ஆழ்வார் திருவாய்மொழியை அருளிசெய்தது உயர்ந்தது என்கிறார்.

“அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே”

பகவானைக் கொண்டாடும் அடியார்களின் ஆனந்தத்துக்காக, ஆழ்வார் தன் பெருங்கருணையால் வேத ஸாரத்தை திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களாக அருளினார். ஆழ்வாரின் இந்தக் கருணை இவ்வுலகினில் மிகப் பெரியது

இதில் ஆழ்வார் வேத ஸாரமான “பாகவத சேஷத்வம்” என்னும் அடியார்களுக்கு அடிமையாக இருக்கும் விஷயத்தை என் தாழ்ச்சி பாராமல் எனக்கு வெளியிட்டார். அவருக்கு நான் எப்பொழுதும் நன்றி உடையவனாக இருப்பேன் என்கிறார்.

“மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே”

வைதிக சிரேஷ்டர்களாலே அத்யயனம் செய்யப்படும் வேதத்தின் ஸாரத்தை என்னுடைய நெஞ்சிலே நிலைத்து நிற்கும்படி அருளினார் ஆழ்வார். இதனால் அவருக்குத் தொண்டு செய்யும் அந்த உத்தம நிலை எனக்கு உடனே கிடைத்தது.

இதில் ஆழ்வார் எனக்கு மிக உயர்ந்த நன்மைகளைச் செய்துள்ளார் என்றும் அதற்குத் தகுதியாக என்னால் எந்த ப்ரதி உபகாரமும் செய்ய முடியாது என்றும் சொல்லி ஆழ்வார் திருவடிகளில் பேரன்பு கொள்கிறார்.

“பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே”

குயில்களின் ஓசை நிறைந்திருக்கும் சோலைகளாலே சூழப்பட்ட திருக்குருகூரில் வசிக்கும் ஆழ்வாரே! இவ்வுலகில் உள்ளவர்களாலே தேவரீருக்கு எந்த ப்ரயோஜனமும் இல்லை என்றபோதிலும், இவர்கள் திருந்தும் நிலையில் இல்லாவிட்டாலும், தேவரீர் உபதேசங்களாலும் நடத்தையாலும் இவர்களைத் திருத்திக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறீர். இப்படிப்பட்ட தேவரீர் திருவடிகளில் அன்பை வளர்த்துக்கொள்ள முயல்கின்றேன்.

இதில் இந்தப் ப்ரபந்தத்தைக் கற்பவர்கள் ஆழ்வாரின் ஆளுமைக்கு முழுமையாக உட்பட்ட ஸ்ரீவைகுந்தத்தில் வாழ்வார்கள் என்கிறார். ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதரும் தலைவர் ஆழ்வாரும் தலைவர். ஆனால் பரமபதத்திலோ ஆழ்வாரே தலைவர் என்பது உள் அர்த்தம்.

“அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே”

எம்பெருமான் எல்லோரிடத்திலும் (முக்கியமாகத் தன்னுடைய அடியார்களிடத்திலே) அன்புடையவன். நம்மாழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். நான் (மதுரகவி ஆழ்வார்) இப்படிப்பட்ட ஆழ்வாரிடத்தில் அன்பு பூண்டவன். இப்படிப்பட்ட நான் பக்தியுடன் பாடிய இந்த ப்ரபந்தத்தை முழுவதுமாக விஸ்வஸிப்பவர்கள் திருநாடான ஸ்ரீவைகுந்தத்தை அடைந்து அங்கே வாழ்வார்கள் என்பது பொருள்.

இப்படி உருக்கமான பாடல்களை பாடியவர் மதுரகவியாழ்வார்.

நம்மாழ்வாரின் சீடராக இருந்து அவரின் எல்லா பாசுரங்களும் உலகுக்கு கிடைக்க வழிசெய்த அந்த ஆழ்வார் எக்காலமும் நன்றிக்குரியவர்.

“சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே.
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே.
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே.
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே.
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே.
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே.
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே.
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே”

மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்.