பன்னிரு ஆழ்வார்கள் 07 : குலசேகரப் பெருமாள் ஆழ்வார்

பன்னிரு ஆழ்வார்கள் 07 : குலசேகரப் பெருமாள் ஆழ்வார்.

அன்றைய சேர நாட்டின் மகா முக்கியமான ராஜ்ஜியங்களில் கொல்லி நகரத்தில், வஞ்சைக்களத்தில் ஒன்று அந்த அரசு, மொத்த சேர நாட்டையும் அது கட்டுப்படுத்தியது.

அதனை திருவரதன் ஆண்டுவந்தான். அவன் ராஜ்ஜியத்தில் அமராவதி கோழிக்கோடு முக்கிய புண்ணிய நகரமாய் இருந்தது. எந்த அளவு முக்கிய புண்ணிய பூமியாக அது இருந்ததென்றால் பிரம்மன் ஒருமுறை தேவலோக நகரத்தையும், அமராவதி கோழிக்கோடு எனும் இந்த நகரத்தையும் நிறுத்துப்பார்க்கும் போது இந்த மன்னன் ஆண்ட இந்த நகரமே பிரதானமாய் இருந்தது.

அந்த அளவு அது செல்வ செழிப்பும், பாதுகாப்பும் மிக்க நகரமாய் இருந்தது.

அந்த சேரமன்னனுக்கு இந்த அமராவதி, கோழிக்கோடு, திருவஞ்சிக்களம் என முக்கிய நகரங்கள் இருந்தன‌.

இந்த மன்னன் மாபெரும் விஷ்ணுபக்தன், அவன் ஏகப்பட்ட விஷ்ணு ஆலயங்களை ஸ்தாபித்தான், எங்கும் விஷ்ணுநாமம் விஷ்ணுபக்தி வளரவும் ஏகப்பட்ட காரியங்களை செய்தான்.

பரசுராமனால் உருவாக்கப்பட்ட சேரநாட்டில் எக்காலமும் விஷ்ணு பக்தி அதிகம், விஷ்ணுவும் தான் விரும்பிய இடமாக அதை தேர்ந்துகொண்டு ஏகப்பட்ட ஆலயங்களில் அருள்பாலித்தார்.

இப்படி விஷ்ணுபக்தியே பிரதானமாகக் கொண்ட திருவரத மன்னனுக்கு எல்லா செல்வமும் இருந்தும் பிள்ளை செல்வமில்லை.

அவர் மன்னன் அல்லவா? அதனால் புத்திரகாமேஷ்டி யாகம் உள்ளிட்ட பல யாகங்களை செய்தான். ஆனாலும், ஒரு பலனுமில்லை.

அவன் அமைச்சர்களும் தேர்ந்த ஞானியரும் ரிஷிகளும் அவனை பகவாதார யாகம், அதாவது பகவான் அவதார யாகம் எனும் பெரும் யாகத்தை செய்யச் சொன்னார்கள்.

மன்னனும் பகவானிடம் தனக்கொரு மகவு வேண்டி அந்த பெரும் யாகத்தை செய்தான். பகவானும் அருள் புரிந்தார்.

அதன்படி இராமபிரானின் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில், மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி வெள்ளிக்கிழமை பகவானின் கௌஸ்துப சாயலாக அந்த அவதாரம் நிகழ்ந்தது, திருவஞ்சைக்களம் அரண்மனையில் அந்தக் குழந்தை ஜெனித்தது.

குலம் காக்க வந்த அந்த வாரிசை “குல சேகரன்” எனப் பெயரிட்டு வளர்த்தார் மன்னர்.

குலசேகரன் பெரும் யாகத்தில் கிடைத்த மகன் என்பதால் அவரை விஷ்ணுவின் கொடையாக கருதிய மன்னர் குலம், பக்தியில் ஊன்றி வளர்த்தது.

விஷ்ணுபக்திதான் முதன் முதல் பொருளாகக் கொள்ளப்பட்டு, பின் எல்லா அரசக்கலைகளும் ஊட்டப்பட்டன, இளவரசனாக வளர்ந்த குழந்தை வாளேந்தி நின்றது.

ஒரு அரசனின் பெருமை நல்லாட்சி மட்டுமல்ல அவன் பகைகளை அடக்கியும் காட்டுவது, அப்படி அந்த குலசேகரன் பாண்டிய, சோழ மன்னர்களை வென்று கரூவூர் எனும் கரூர் வரை தன் ஆட்சியினை நீடித்தார்.

தெற்கே பாண்டியர்களை அடக்கி குற்றாலம், களக்காடு என தென்னகப்பகுதிகளை எல்லாம் வென்று தன் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனும் ஊரின் பெயர் இவரால் அமைந்ததே.

பாண்டியரும், சோழரும் அவருக்கு அடிபணிந்தனர், மூவேந்தர்களில் முதல் வேந்தராக ஆளத் தொடங்கினார் குலசேகரர்.

அதனால் அவருக்கு “கொல்லி காவலன்”, “கூடல் நாயகன்”, “கோழிக்கோன் குலசேகரன்” எனப் பட்டங்கள் வந்து சேர்ந்தன‌.

இவரின் பிரதான வெற்றியினை அடுத்து தந்தை திருவரதன் இவருக்கு முடிசூட்டிவிட்டு கானகம் புகுந்தார். இவருக்கு இளம் மனைவியும், மக்களும் இருந்தாலும் அவர் மனம் நிலையாமையினை உணர்ந்தது.

பெரும் அரசராக பகை ஒடுக்கி வெற்றிகளின் உச்சியில் இருப்பவர், அதிகாரம் செல்வாக்கு கீர்த்தி புகழ் எனப் பெரும் இடத்தில் இருந்தாலும் அவர் மனதில் நிறைவில்லை.

தகப்பனார் கானகம் புகுந்ததும், இன்னும் பல காரணங்களும் அவருக்கு வாழ்வு நிலையற்றது என்பதை சொன்னது.

பகவான் அவதார யாகத்தில் இராமனின் நட்சத்திரத்தில் பிறந்தவர், ஒரு கட்டத்தில் பரம்பொருளே பிரதானம், அவரே நிலையானவர் மானிட வாழ்வோ அதன் அதிகாரமோ நிலையானது அல்ல என்பதை உணர்ந்து முழுக்க அவர் பகவானை தேடினார்.

பகவான் நாமம் பாடினார், பாடவைத்தார், திருப்பணிகளை செய்தார், எங்கும் இராமநாமம் ஒலிக்க வைத்தார், இராமாயணம் தன் ஆட்சியில் எல்லாருக்கும் கட்டாயம் எனும் நிலையினை ஏற்படுத்தினார்.

திருவரங்கம் அவருக்கு பிடித்தமான இடமாயிற்று, திருவேங்கட நாதன் மிகப்பிடித்த தெய்வமானார்.

இராம பக்தியில் திளைத்த மன்னர் இராமாயணத்தை கேட்கும் போது அந்த இராமன் காலத்துக்கே சென்று அந்தப் படையில் தானும் இருப்பதாக மனம் லயித்துக் கிடப்பார், அந்த காட்சிக்குள் தானே இருப்பதாகவும் இராமனை காப்பது தன் கடன் என்றும் அங்கே காட்சிக்குள் தன்னை நிறுத்தி நிற்பார்.

ஒருமுறை இராமகாதையினை கேட்டுக்கொண்டிருந்தார், அங்கே இராமன் தனியாய் பதினான்காயிரம் அரக்கர்களுடன் போரிட்ட சரித்திரத்தைக் கேட்க நேர்ந்தது. ஆச்சாரியார் உற்சாகமாய் விளக்க இவர் காட்சிக்குள் கரைந்துபோனார்.

அது சூர்ப்பனகைக்கு ஆதரவாக வந்த அரக்கர்களுடன் இராமபிரான் போரிட்ட காட்சி.

உடனே “இராமனுக்கு என்னாகுமோ? துணையாய் எவருமில்லையே?” என்று எண்ணி, தனது படைகளுடன் சென்று தனியே நிற்கும் நம் ராமனின் சார்பில் போரிடுவோம்” லட்சுமணனை, சீதைக்கு காவல் விட்டு அண்ணல் தனியே நிற்கின்றார். இனி நாம் இருந்து என்ன பயன்? இதோ வருகின்றேன்” என‌ இராம பிரானுக்கு உதவி செய்யக் கிளம்பினார்.

இவரின் வேகம் கண்ட ஆச்சாரியார், இராமன் திரும்ப வந்து லட்சுமணனை தழுவிக் கொண்டான் எனச் சொன்னதும் நிம்மதி அடைந்தார்.

அந்த அளவு அவர் இராம பக்தியில் கரைந்திருந்தார்.

விஷ்ணு பக்தர்கள், இராம பக்தர்கள் மேல் அவர் பெரும் அன்பு காட்டினார். இதனால் பொறாமை கொண்ட‌ அமைச்சர்கள் சிலர், அரச நிர்வாகத்தை மனதில் கொண்டு, விஷ்ணு பக்தர்கள் மேல் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர்.

அதன்படி காணாமல் போன விலையுயர்ந்த மாலையை விஷ்ணு பக்தர்கள் எடுத்துவிட்டார்கள் என்று அரசனிடம் உரைத்தார்கள்.

விஷ்ணு பக்தர்கள் மேல் மிகவும் நம்பிக்கை கொண்ட ஆழ்வார், கொடிய விஷம் கொண்ட‌ பாம்புகளை குடத்திலிடச் சொன்னார்.

பின், “விஷ்ணு பக்தர்கள் அந்த மாலையை எடுத்திருந்தால், நானும் அப்பக்தர்களில் ஒருவன், ஆதலால் இக்குடத்திலுள்ள பாம்புத் தன்னைத் தீண்டட்டும்” என்று கூறிக் குடத்தினுள் தன் கையை விட்டார்.

ஆனால், அப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை. அமைச்சர்கள் அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டனர், அந்த இராமபக்தர்களை விசாரிக்காமலே விட்டுவிட்டார் மன்னர்.

அதாவது இராமநாமம் மேல் அவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் அப்படியானது.

அவரின் வாழ்வு முழுக்க திருவரங்க யாத்திரை சொல்லப்படுகின்றது, ஒரு ஸ்லோகத்தை அவர் எழுதிவைத்தது அதற்கு சான்றாகின்றது.

“குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே
தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம்”

அதாவது திருவரங்கநாதன் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகிறேன் எனப் பொருள்.

அவர்தான் திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பனிட்டார் . இதனாலேயே இம்மூன்றாவது சுற்று குலசேகரன் சுற்று என இன்றும் வழங்கப்படுகிறது.

அவரால்தான் ”பவித்ரோத்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே.

அவர் எந்த அளவு பெருமாள் பக்தியில் இருந்தார் என்றால் தன் மகள் சேரகுலவல்லி கோவில் பணிக்கு செல்லவெண்டும் எனக் கருதி திருவரங்க நாதனுக்கே மணமுடித்து வைத்தார்.

தன்னை ஜனகனாக கருதி கொண்டவர் பகவானுக்கே தன் மகளை கொடுப்பதாக கொடுத்து திருப்பணிக்கு அனுப்பினார், அந்த இளவரசி சேரகுலவல்லி திருவரங்கத்தில் பெருமாள் சேவகியாக வாழ்ந்தாள்.

இன்றும் சேர குல வல்லி நாச்சியார் சேர்த்தி உற்சவம் என்று ஒவ்வொரு வருடமும், ஸ்ரீ ராம நவமி அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெறுவது இதனாலே.

இப்படி மன்னராக இருந்தாலும் ஒரு இராமபக்தனாக, ஒரு அடியாராக நின்ற அந்த குலசேகர ஆழ்வார் ஆழ்ந்த பக்தி எனும் பட்டம்நிலைக்கு சென்று பாடினார்.

ஸ்ரீ ராமனுக்கு வைஷ்ணவ‌ சம்பிரதாயத்தில் “பெருமாள்” என்று பெயர். ஸ்ரீரங்கத்தில் உற்ஸவருக்கு நம்பெருமாள் என்றும், அவர் ஸ்ரீ ராமனின் பிரதிநிதி என்றும் சொல்வது வழக்கம்.

அதனாலே ஸ்ரீ ராமனிடம் அபரிமிதமான அன்பு கொண்டவரான, குலசேகராழ்வார் எழுதிய பாடல்களெல்லாம் “பெருமாள் திருமொழி” என்று பெயர் பின்னாளில் வந்தது.

அவர் பல ஆலயங்களுக்கு சென்றும் அதை நினைந்தும் பாடினார்.

திருஅரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம் , திருச்சித்திரக்கூடம் எனப் பாடியவர், பின் அயோத்திக்கும் பாடினார்.

குலசேகர ஆழ்வார் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரவேண்டியது, எல்லா விஷ்ணு கோவில்களிலும், பெருமாள் முன்னால் உள்ள படிக்கட்டிற்கு “குலசேகரன் படி ” என்று பெயர்.

அதாவது பகவானை காணச் செல்லும் பக்தர்களுக்கு தான் படிகட்டாய் இருப்பேன் என சொல்லிய அந்த பணிவின் படி இடப்பட்ட பெயர்.

அப்படியான பெரும் அன்பை பக்தியினை பகவான் மேல் கொண்டிருந்தவரின் பாடல்களே “பெருமாள் திருமொழி” என நாலாயிரம் திவ்யபிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதில் சில பாடல்களை காணலாம்.

“இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு”

இதில் “தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்கிறார் இராமானுசன். தொண்டரடிப் பொடியாழ்வார் தான் ஸ்ரீரங்கத்தைத் தவிர வேறு திவ்ய தேசத்தைப் பாடவில்லை. அதனாலேயே “பதின்மர் பாடும் பெருமாள்” என்ற பெருமையை நம்பெருமாள் தட்டிச்சென்றார். ஆனால், அவருக்கு அந்தப் பெருமையை கொடுக்காமல் உடையவர் குலசேகர ஆழ்வாருக்கு ”தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்” என்ற பெருமை வாய்த்தது.

வெளி நாட்டில் வசிக்கும் மகளுக்கு இந்தியாவில் இருக்கும் அம்மாவை எப்போது பார்க்க போகிறோம் என்ற நினைப்பு இருக்குமோ அதே போல நம் குலசேகர ஆழ்வார்
பெருமாள் திருமொழி ஆரம்பிக்கும் போது முதல் மூன்று திருமொழிகளிலும் “திருவரங்கத்தைக் காண்பது என்றைக்கோ?” என்று உணர்ச்சியின் மிகுதியால் அவர் பாடிய திருமொழிகள்.

அரசனுக்குடைய கடமைகளை தவிர்க்க முடியாமல், அவர் திருவரங்கப் பயணம் தொடர்ந்து தடைப்பட்டிருக்கிறது. இன்று, நாளை என்று இழுத்தடித்து அவர் ஏங்கி ஏங்கித் துடித்திருக்கிறார். திருவரங்கம் செல்லாமல் அந்த வேட்கையிலேயே உருவானது தான் பெருமாள் திருமொழி.

இப்போது பெருமாள் திருமொழி பாசுரங்களில் சிலவற்றை பார்ப்போம்.

“இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்
பெருஞ்சோதி அனந்தன் என்னும்
அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே “

அதாவது,

இந்தப் பூமியில் அஞ்ஞானமாகிய இருள் அழிவதற்காக ‘இருள் இரிய’ என்று உச்சஸ்வரத்தில் தொடங்கி அருளிய சிறந்த திருமொழி 105 பாசுரங்களையும் நீ என்மீது அன்புகொண்டு நன்றாக எனக்கு அருள்செய்வாயாக.

பகவானை சேவிப்பதும் அவனோடு இருந்து அவனுக்குக் கைங்கர்யம் செய்வதும் மிகச் சிறந்த செயல்களாகும். அவ்வாறே அடியார்களைக் காண்பதும் அவர்களோடு வாழ்வதும் சிறந்த செயல்களாகும்.

காவிரியின் இடையில் திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான்மீது பள்ளி கொண்டிருக்கும் அழகிய மணவாளானை என்று சேவித்து மகிழ்வேனோ? அவனைக் கண்டு கண்கள் களிக்கும் நாள் எந்நாளோ? என் வாய் அவனை என்று வாழ்த்துமோ? என் தலை எப்போது அவனை வணங்குமோ? என் கைகள் மலரிட்டுத் தொழுதிடும் நாள் எந்நாளோ? அவனுடைய அடியார்களோடு கூடி மகிழ்வு எய்தும் நாள் எந்நாளோ? என்று கூறி அந்நாள் கிட்டவேண்டும் என்கிறார் குலசேகராழ்வார்.

அடுத்தும் பாடுகின்றார்.

” வன்பெரு வானகமுய்ய அமரருய்ய
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய
துன்பமிகு துயரகல அயர்வொன்றில்லாச் சுகம் வளர
அகமகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்தடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு
யானும் இசைந்துடனே என்றுகொலொ இருக்கும் நாளே?”

அதாவது, செழிப்பான பெரிய வானகம் உய்ய, வானவர்களான தேவர்கள் உய்ய, இப்பூவுலகம் உய்ய, பூவுலகில் வாழும் மக்கள் உய்ய, துன்பம் தரும் துயரங்கள் அகல, அயர்ச்சி இல்லாமல் நலம் வளர, பக்தியுடன் வாழும் தொண்டர்களின் மனம் மகிழ்ந்து வாழ, அன்போடு தென் திசையை நோக்கி பள்ளி கொண்டிருக்கும் அழகான திருவரங்கனின் கோவில் முற்றத்தில் கூடியிருக்கும் அடியார்களின் குதூகலத்தைக் கண்டு, நானும் அவர்களின் மகிழ்ச்சியில் இணைந்து திளைக்கும் நாள் எந்நாளோ?

“ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய்
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லிப் பாடி வண் பொன்னிப் பேர்-
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில்-திருமுற்றம்
சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே”

நப்பின்னை பிராட்டியாருக்காக ஏழு எருதுகளை வழி அடக்கியதும் வராக அவதாரம் எடுத்து பூமியை கோட்டாற் குத்தி எடுத்ததும், முன்பு சக்கரவர்த்தி திருமகனாய் பிறந்து பகைவரை வேரோடு கிள்ளி எறிந்ததும் திருவிக்கிரமவதாரம் எடுத்து உலகளந்ததும் ஆகிய செயல்களை வாயால் சொல்லி வாய்விட்டு பாடி காவிரி ஆறு நீர் சுரப்பது போன்று கண்களில் நீர் பெருக்கி அரங்கன் திருக்கோயில் முற்றத்தை சேறாக்குகிற தொண்டர்களின் திருவடிகளால் மிதிக்க பெற்று துகையுண்ட அழகிய சேற்றை என் நெற்றிக்கு திலகமாக கொள்வேன் என்று குலசேகர ஆழ்வார் குன்றாக்களிப்புடன் கூறுகிறார்.

ஆம் . இதுதான் இந்த பக்திதான், அடியாரின் கால்பட்ட சேற்றை எடுத்து திலகமிடுவேன் எனும் அந்த பண்புதான் இன்று “குலசேகரப் படி” என திவ்ய தேசங்களுக்கெல்லாம் செல்லும் படிக்கல்லில் அவர் பெயராக பதிந்திருகின்றது.

அடுத்தப்பாடல் இதோ.

“தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி இன்பு உறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே”

அதாவது தோய்க்கப்பட்ட தயிர், வெண்ணெய், பால் ஆகியவற்றை ஒரே நேரத்தில் திருடி உண்ட கண்ணனை, யசோதை கண்டு கோபித்த அவன் கைகளைக் கட்டினாள். இப்படிக் கட்டப்பட்ட தோள்களையுடைய எம் அரங்கனின் அடியார்கள் நாக்கு தடிக்கும்படி “நாராயணா!” என்று அழைத்து அவன் காலில் மீண்டும் மீண்டும் விழுந்து அதனால் அவர்கள் உடம்பில் தழும்பேறத் தொழுது இன்புறுவர். இவர்களின் திருவடிகளை என் நெஞ்சம் துதி செய்யும்.

இன்னொரு பாடல் இப்படி வரும்.

‘மெய் இல் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளும் இவ்
வையம்தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந்தேன் என்தன் மாலுக்கே ‘

அதாவது பொய்யான வாழ்க்கையை மெய் என்று கொண்டு வாழும் இவ்வுலகத்தாரோடு யான் சேர்வதில்லை. ஐயனே! அரங்கா !என்ற நின் திருப்பெயர்களை சொல்லி அழையா நின்றேன். என்னிடத்தில் பரிவு காட்டும் திருமாலுக்கே யான் ஆறாத காதல் கொண்டொழிந்தேன் என்கிறார் ஆழ்வார்.

இன்னும் சொல்கின்றார்.

“ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே”

நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே என்கின்றார்.

அடுத்துப் பாடுகின்றார்.

“ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே”

அதாவது கொக்காய்ப் பிறப்பேன் என்றேன். ஆனால் கொக்காய்ப் பிறந்தால் ஏதோ ஒரு நேரத்தில் திருவேங்கடத்தை விட்டுப் பறந்து போக வாய்ப்புண்டு. அதனால் கொக்காய் பிறப்பதைக் காட்டிலும் மீனாய்ப் பிறப்பது மேல்.

அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.

இப்படி திருமலையிலேயே இருக்கும் தனக்கு வாய்ப்பு வாய்க்க வேண்டுமென்று அங்கேயே இருக்கும் ஏதாவது ஒன்றாக பிறக்க வேண்டும் என்று பாடிய ஆழ்வார் எதிலுமே திருப்தி வராமல் திருமலை எம்பெருமானின் சந்நிதியில் படியாய் இருந்து அவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மேல் பட வேண்டும் என்பதற்காகவும் அந்த எம்பெருமானை கண நேரமும் பிரியாமல் அவன் சன்னதியின் வாயிற் படியிலிருந்து அவனது பவளம் போன்ற அவன் திருவாயினை ஸேவிக்கும் பாக்கியத்தை அருள வேண்டுமென்ற வேண்டுகின்றார்.

பகவானும் அருள் புரிந்தமையால் இன்றைக்கும் திருமலை மட்டுமல்லாது அனைத்து திவ்யதேசங்களிலும் எம்பெருமான் சன்னிதியின் முன்னுள்ள படிக்கு குலசேகரப்படி என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.

உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.

பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்கின்றார்.

அடுத்து விற்றுவக்கோட்டு திவ்ய தேசத்தில் உள்ள பெருமானைப் பாடுகின்றார்.

“தருதுயரம் தடாயேலுன்
சரணல்லால் சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்
விற்றுவக்கோட் டம்மானே,
அரிசினத்தா லீன்றதாய்
அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி
அதுவேபோன் றிருந்தேனே.”

விற்றுவக்கோடு என்பது ஒரு திவ்ய தேசம். இது கேரள நாட்டில் உள்ளது. இதை வித்துக்கோடு என்றும், திருமிற்றக் கோடு என்றும் கூறுவர்.

‘விற்றுவக்கோட்டு அம்மானே!உன்னைத் தஞ்சமாக வந்தடைந்தேன். நீயே என்னைக் காக்க வேண்டும். என் துன்பத்தை நீக்கா விட்டாலும், தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை போலவும், அரசனின் கோல் நோக்கி வாழும் குடி போலவும் உன் அருளையே எதிர்பார்த்து ஏங்கி இருப்பேன்.

உன்னிடமன்றி வேறு யாரிடம் செல்ல முடியும்? விசாலமான கடலில் செல்லும் கப்பலின் பாய் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் பறவையைப் போல் வேறு கதியின்றி இருக்கிறேன். ஆதலால், உன் சரணல்லால் சரணில்லை’என்று ஆழ்வார் அந்த எம்பெருமானைச் சரணடைகிறார்.

“வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே.”

“வித்துவக்கோட்டம்மா! வைத்தியர் கத்தியைக் கொண்டு அறுத்தாலும், ஊசியைக் காய்ச்சிச் சூடு போடுதலுமாகிய அறுவை சிகிச்சைகளைச் செய்தாலும், அம்மருத்துவனிடத்து நீங்காத அன்புடைய நோயாளியைப் போல உன் மாயையினால், நீங்காத துன்பத்தை எனக்கு விளைவித்தாலும், உனது அடியவனான நான் அவ்வடிமைத் திறம் முற்றும் வந்தெய்வதற்காக உன்னுடைய கருணையையே நோக்கி நின்றேன்” என்கிறார்.

சேரநாட்டு அரசராக இருந்து ஆழ்வாராகிய குலசேகரப்பெருமாள் “அனன்ய கதித்வம்” எனப்படும், ”உன் சரணல்லால் எனக்கு வேறு சரணில்லை” என்பதை ஆழ்வாரின் பாசுரங்கள் உணர்த்துகின்றன.

இந்த பாசுரத்தில் ஆழ்வார் வாளால் அறுத்து என்று அறுவை சிகிச்சை (Surgery) யும், சுடினும் என்று கதிரியக்கம்(radiation) பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது நம்முடைய தற்போதைய நவீன நடைமுறை மருத்துவத்தினை ஆழ்வார் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது வியப்புக்குரியது.

குலசேகர ஆழ்வாருக்கு இராமாவதாரத்தில் ஈடுபாடு அதிகம். ஆனாலும் கிருஷ்ணவதாரத்தையும் மிக அழகாகப் பாடியுள்ளார்.

“கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள-விழியை விழித்துப் புக்கு
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே.”

என் அகத்திற்குக் கீழ் அகத்திலில் இருக்கும் ஒரு பெண் பிள்ளையானவள் தனியாக தயிர் கடைந்து கொண்டிருக்கையில் அப்போது அங்கு வந்த தாமோதரன் அவளருகில் ஓடிச் சென்று, ”அம்மா! நீ தனியாகத் தயிர் கடைந்தால் ஒரு காலும் வெண்ணெய் புறப்படமாட்டாது. நானும் ஒருதலைப் பற்றிக் கடைந்தால் தான் விரைவில் வெண்ணெய் வெளிவரும்” என்று வாயாற் சொல்லி, உள்ளே வேற்று நினைவு இருக்கும் படி தோன்றத் திருட்டு விழி விழித்து, மயிர் முடி அவிழ்ந்து அலையும் படி, தாமரையிலே முத்துப் படிந்தாற் போலே ஒளி பொருந்திய முகம் வேர்க்கும் படி, அதரம் துடிக்கும் படி, அவளோடே கூடி நீ தயிர்கடைந்த வரலாறு எனக்குத் தெரியுமப்பா! என்கிறாள். ‘அங்கேயே தயிர் கடையப்போ; இங்கே உனக்கென்ன வேலை’ என்ற ஊடல் உள்ளே பொதிய வைத்து அழகாக சொல்லியிருக்கிறார் ஆழ்வார்.

கண்ணபிரானது பிள்ளை திருவிளையாடல்களை கண்டு களிக்கும்போது ஆயர்பாடி யசோதைக்கு கிடைத்த கொடுப்பினை போல தனக்கு கிருஷ்ணனை பாலூட்டி, தாலாட்டும் வாய்ப்பு கிடைக்காததை நினைத்து பெற்ற தாயான தேவகி அப்பெருமானை கண்டபோது புலம்பியதை பாடும் ஆழ்வாரின் பாசுரங்கள் கண்ணீர் வரவழைப்பவை.

கண்ணபிரான் செய்த லீலைகளை காணும் பெரும் பாக்கியத்தை பெற்றதால் தான் யசோதையின் கண்களுக்கே அழகு வந்து சேர்ந்ததாம். அந்த பாக்கியம் பெற்ற தாயான தனக்கு கிடைக்கவில்லை என்று தேவகி வருத்தம் கொள்கிறாள்.

மகனின் திருவிளையாடல்களைக் கண்டுகளிக்கும் அனுபவத்தை இழந்த தேவகியாக இருந்துகொண்டு ஆழ்வார் பாடுகின்றார்.

“ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ
அம்பு யத்தடங் கண்ணினன் தாலோ,
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ
வேழப் போதக மன்னவன் தாலோ,
ஏல வார்குழ லென்மகன் தாலோ’
என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய,
தாலொ லித்திடும் திருவினை யில்லாத்
தாய ரில்கடை யாயின தாயே”1

கண்ணா! என்னை உனக்குத் தாய் என்கிறார்கள். உலகில் உள்ள தாய்மார்களுள் நான் கடைசியாக இருப்பவள். பாக்கியமில்லாதவள்!உன்னைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டவில்லை. நீ படுத்திருக்கும் அழகைக் காணவில்லை!உன்னுடைய இளம் பருவ இன்பத்தை நான் அனுபவிக்கவில்லை. உனக்குப் பால் கொடுக்கும் பாக்கியத்தையும் பெறவில்லை. ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் திருவிலேன். எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே என்று தேவகி புலம்புவது போல் ஆழ்வார் உள்ளமுருகக் பாடுகின்றார்.

“மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும்; வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளி
விரலை செஞ்சிறுவாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே”

பாலகிருட்டிணன் ஆய்ப்பாடியில் வளர்ந்த பொழுது, அவர் அணிந்த அழகான நெற்றிச்சுட்டி அசைய, ‘உன் வாயில் முத்தம் தரவும் உன் அப்பா சாயலில் இருக்கிறாய்’ என்று உள்ளம் குளிரவும்’ விரலை வாயில் வைத்து வெகுளியாய்ப் பேசும் மழலைப்பேச்சை ரசிக்கவும் பாக்கியமில்லாத நான் பெறவில்லை. யசோதைக்குக் கிடைத்ததே என தேவகி புலம்புவதாக ஆழ்வார் பாடுகின்றார்.

கண்ணபிரானுக்கு பெரியாழ்வார் பாடிய தாலாட்டு பாடலை,

“மாணிக்கம் கட்டி
வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ”

என்று முன்பே அனுபவித்தோம்.

இங்கு குலசேகர ஆழ்வார் இராமபிரானுக்கு தாலாட்டு பாடுகிறார்.

“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ”

இந்தப் பாடலைப் படித்தாலே போதும், பொருள் புரிந்துவிடும். அவ்வளவு எளிமையான சொற்கள். புகழ் மிக்க கௌசல்யாவின் மணி வயிற்றில் உதித்தவனே, இராவணனின் முடியைத் தரையில் சாய்த்தவனே, அழகிய மதிள்கள் சூழ்ந்திருக்கும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே, என் இனிய அமுதே, இராகவனே, தாலேலோ. இப்படி அருமையாகத் தாலாட்டுப் பாடுகிறார் குலசேகர ஆழ்வார்.

“பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்தரசே
தாராளும் நீண்முடி என் தாசரதீ தாலேலோ”

நாட்டை ஆளும் உரிமையையும், அதோடு அடர்ந்த செல்வத்தையும் பரதனுக்கு வழங்கி, தீராத அன்பை உடைய தம்பி இலக்குவனோடு அருமையானக் காட்டை அடைந்தவனே, அழகான மலைப் போன்ற மார்பை உடையவனே, திருக்கண்ணபுரம் அரசே, மாலையை அணிந்த நீண்ட முடியைக் கொண்ட என் தாசரதீயே தாலேலோ.

கொடைத் தன்மையும், அழகும், அன்பும் நிறைந்த என் இராகவா தாலேலோ என்கிறார் குலசேகராழ்வார்.

“சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா தாலேலோ”

உற்றார் உறவினர் எல்லாரும் பின் தொடர, பழமையானக் காட்டை அடைந்தவனே, வேறு கதி இல்லாதவர்களுக்கு அரு மருந்து போன்றவனே, அயோத்தி நகருக்கு அரசனே, கற்றவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்தில் வசிக்கும் என் கண்ணின் மணியே, சித்தியின் சொல்லை சிரமேற்கொண்ட சீராமா தாலேலோ.

கைகேயிக்கு அளித்த வரங்களால் வேறு வழியின்றி தவமாய் தவமிருந்து பெற்ற மகனை காட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு ராமபிரான் பிரிந்து சென்றதால் உண்டான ஆற்றாமையை தசரதன் புலம்பியது போல ஆழ்வார் பாடியிருப்பது, ஆழ்வார் எந்தளவுக்கு தசரதனின் துயரத்தை உள்வாங்கி உள்ளார் என்பதை உணரலாம்.

“கொல் அணை வேல் வரி நெடுங் கண் கௌசலைதன்
குல மதலாய் குனி வில் ஏந்தும்
மல் அணைந்த வரைத் தோளா வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய்
வியன் கான மரத்தின் நீழற்
கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ?
காகுத்தா கரிய கோவே”

கொலை தொழில் பொருந்தின வேலாயுதம் போன்ற செவ்வரி பரந்த நீண்ட கண்களை உடைய கோசலையினது குலத்தில் தோன்றிய குமரனே. வளைந்த வில்லை தடுத்த வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை உடையவனே. மனத்தை கசிய செய்வதில் வல்லவனே. காகுத்த மரபில் தோன்றியவனே, கருநிறமுடைய ஐயனே, மென்மையான பஞ்சணை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கி பழகியவனான நீ இனிமேல் புதிதாக இன்றைக்கு சென்று, பெரிய காட்டில் உள்ள மரத்தின் நிழலிலே கருங்கல் பாறைகளையே படுக்கையாக, கொண்டு அதன் மேல் படுத்து, துயில பழகுகின்றாயோ என்று புலம்புகிறார் தசரதர்.

“அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வச்சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழிதகையேன் இருக்கின்றேனே”

ஐயா என்று அழைக்கும் மகனது இன்சொல்லைக் கேட்கப் பெறாமலும் இயற்கையழகோடு செயற்கையழகு செய்யும் ஆபரணங்கள் அசைந்து விளங்குகின்ற அவனது மார்பைத் தழுவிக் கொள்ளப் பெறாமலும், ஆநந்தஸாகரத்தில் அழுந்தப் பெறாமலும் உச்சிமோரப் பெறாமலும் நடையழகு காணப்பெறாமலும் முகாரவிந்தத்தை அநுபவிக்கப் பெறாமலும் என் கண்மணியைக் காட்டுக்குத் துரத்தின படுபாவியாகிய நான் அப்போதே சாவாமல் இன்னும் பிழைத்திருக்கவும் வேணுமா என்று பரிதவிக்கிறார் தசரதர்.

இராமனிடம் பெரிதும் ஈடுபாடு கொண்ட குலசேகர ஆழ்வார், பெருமான் அவதாரம் செய்தது தொடங்கி தன் அடி சோதிக்கு எழுந்தருளியளவும் நிகழ்ந்த அருஞ் செயல்களை நினைத்து வால்மீகி முனிவர் இராமச்சரித்தரத்தை பேசி அனுபவித்தது போல தானும் பேசி அனுபவித்து இருக்கின்றார் இந்தத் திருமொழியில்.

“அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே”

நெடுமதில்கள் புடைசூழ, காவல் நகராக விளங்குகிறது அயோத்தி. அந்த நகருக்கு அழகு சேர்க்கும் விதமாக அவதரித்தவன் ராமன். அவன் இந்த உலகுக்கே தர்மத்தின் ஒளிகாட்ட பிரகாசித்துத் தோன்றினான். சூரியனின் குலத்துக்கு ஒளிவிளக்காகத் தோன்றி, உலகம் முழுவதையும் தன் ஆற்றலாலும், தர்மத்தின் வலிமையாலும் உய்யக் கொண்ட வீரன் அவன். செக்கச் சிவந்த கண்களையும் கருமையான மேகத்தைப் போலும் நிறம் கொண்ட இராமன் தன்னை, தில்லைநகரான திருச்சித்ரகூடந்தன்னுள் கண்வளரும் பிரானாய்த் திகழும் எங்கள் தனிமுதல்வனை எம்பெருமானைக் கண்குளிரக் காணும்நாள் எந்நாளே என்று உளம் உருகுகிறார் குலசேகராழ்வார்.

“அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே.”

அயோத்தி மாநகரில் உள்ள சங்கமம், தாவரமுமான எல்லா உயிர்களையும் பரம பதத்திற்கு போகச் செய்து வலிமையையுடைய பாம்புகளுக்கு பகையான கருடன் மேல் ஏறிக்கொண்டு அசுரர்களை வெற்றிக்கொண்டு வெற்றி செல்வி விளங்கப் பெற்ற அழகிய நீண்ட தனது திருக்கைகள் நான்கும் விளங்க பரமபதத்தில் உள்ளவர் எல்லாம் எதிர்கொண்டு உபசரிக்கும் படி தனது பழமையான பரமபதத்திலேயே போய் சேர்ந்து தன் மேன்மை எல்லாம் தோன்றும்படி இனிமையான சிம்மாசனத்தில் எழுந்தருளியிருந்த அம்மான் தன்னை தில்லை திருச் சித்திரக்கூடத்தில் எந்நாளும் நமக்காக வசித்தருளும் அப்பெருமானே என்று அறிந்து துதித்து, அவனுக்கு அடியவர்களான நீங்கள் நாள்தோறும் வணங்கி உய்வடைவீர்களாக.

இப்படி உருக்கமான பாடல்களை “பெருமாள் திருமொழி” எனத் தந்த அந்த ஆழ்வார் ஏகப்பட்ட திவ்ய தேசங்களை தரிசித்தபின் கடைசியாக மன்னார்கோயில் என்ற திருத்தலம் வந்தார்.

அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அரசனாக பிறந்தவனுக்கு ராஜவாழ்வு என்பது அமையும், அந்த ராஜவாழ்விலும் அவர் நிறைவடையாமல் தன் ஆத்மத்தின் ஏக்கமாக பகவானை தேடி, அவனுக்காய் வாழ்ந்து அடியார்களை ஆதரித்து அடியாரில் அடியாராய் நின்று , அடியாராக பகவானை பாடி, பகவான் ஆலயம்செல்லும் பக்தர்களை தாங்கும் படியாக தான் இருக்க வேண்டும் என பக்தியில் பதிந்து போன அந்த ஆழ்வார் எக்காலமும் தன் அளப்பறிய பெருமாள் பக்தியால் நிலைபெற்றிருப்பார்.

“அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே.
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே.
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே.
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே.
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே.
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே.
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே.
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.

குலசேகரப் பெருமாள் ஆழ்வார் திருவடிகளே சரணம்.