பன்னிரு ஆழ்வார்கள் 10 : தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 10 : தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

சோழவள நாட்டின் பிரதான திருப்பதியில் ஒன்று பூதங்குடி அருகே உள்ள திருமண்டங்குடி. அந்த ஊரில் வேத விசாரதர் என்றொரு முன்குடுமி பார்ப்பனர் இருந்தார். முன்குடுமி பார்ப்பனர் என்பது சேரநாட்டு தொடர்புடைய பாரம்பரியம், பகவான் கைங்கர்யங்களில் இளமை முதலாய் பெரும் ஈடுபாட்டோடு முழு பக்தியோடு இருந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர் அவர்.

அவரின் பக்திக்கு பரமன் பெரும் பரிசளிக்க விருப்பம் கொண்டார். ஒருவன் வாழ்ந்த வாழ்வெல்லாம் அவன் வாரிசுமூலமே அறியப்படும் என்பதால் அவரின் வாரிசு மூலம் அவரை பெருமைப்படுத்த பெருவிருப்பம் கொண்டார்.

விசாரதருக்கு கலியுகம் 298 ஆம் ஆண்டு மார்கழி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசியில் செவ்வாய் கிழமை கேட்டை நட்சத்திரத்தில் ஒருமகவு அவதரித்தது. அது பெருமாளின் மிகப்பெரிய கருணையில் கிடைத்த மகவு என்பதால் அதற்கு விப்ரநாராயணன் எனப் பெயர் சாற்றப்பட்டது.

அக்குழந்தை வனமாலி என பெருமாளின் மார்பில் ஆடும் மாலையின் அவதாரமாக அந்த சாயலில் வந்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. ஆழ்வார்களில் பத்தாவது ஆழ்வாராக கொண்டாடப்படுபவர் இவர்.

தந்தை விசாரதர் தன் மகன்பொருட்டு பெரும் பெருமிதம் கொண்டிருந்தார். தன் வேதங்கள், கலைகள், சாஸ்திரம் எல்லாம் கற்றுக்கொடுத்தவர் பகவானின் பக்தியினை அவருக்கு தாய் பாலோடு புகட்டினார். அவரின் ஒவ்வொரு வார்த்தையும் பகவான் பக்தியில் விப்ரநாராயணர் மனதில் மிக மிக ஆழமாக இறங்கிற்று.

பகவான் மேல் மிகப்பெரிய பக்தியுடன் வளர்ந்து வந்தார் விப்ரநாராயணர்.

எல்லா உயிர்களும் ஒரு கட்டத்தில் தன் பெற்றோரிடம் இருந்து பிரிந்தாக வேண்டும். இது விதி. காலம் காலமாக யாரும் அப்படி தங்கிவிட முடியாது, ஒன்று அவர்களாக பிரிதல் வேண்டும், இல்லை காலமே பிரித்துவிடும்.

வயலில் நடப்படும் நாற்று, வாழையின் கன்றுமுதல் பசுவின் கன்றுவரை யாரும் இதற்கு விதிவிலக்காக ஆகிவிட முடியாது. விப்ரநாராயணர் தன் பதின்ம வயதிலே அந்த பக்குவத்தை பெற்றார்.

அவரின் விருப்பமெல்லாம் திருவரங்க நாதனுக்கு தொண்டு செய்வதாய் இருந்தது. திருவேங்கடம், திருவரங்கம் என்பதெல்லாம் மிகப்பெரிய வகையில் அடியார்களை ஈர்க்கும் ஆலயங்கள், அதுவும் திருவரங்கம் திவ்ய தேசங்களில் முதன்மையானது என்பதால் மலரை மொய்க்கும் தேனீக்கள் போல அங்கு அடியார்களும், தொண்டு செய்யவருவோரும் எக்காலமும் அதிகம்.

விப்ரநாராயணர் வயதில் சிறியவர் இதனால் அனுபவமிக்கவர் இருந்த வேத வழிபாட்டு பணிகள் அவருக்கு வழங்கப்படவில்லை, இன்னும் எல்லா இடமும் எல்லா வகை அனுபவஸ்தர்களும் நிரம்பியிருந்தார்கள்.

இதனால் என்னென்ன பணிக்கு ஆட்கள் குறைவு என அவர் கண்டபோது மலர் வரத்தும், இதர கனிவகைகளும் கோவிலுக்கு வருவது சில நேரங்களில் சற்று குறைவாக இருந்தது.

இதனை கண்ணுற்ற விப்ரநாராயணர் தானே அந்த தொண்டை செய்ய முன்வந்தார். அவர் வேதம் படித்தவர், வேதம் சம்பந்தமான தொழிலைத்தான் பகவானுக்கு தொண்டாக செய்திருக்க வேண்டும்.

ஆனால், அவர் அங்கே தான் யார்? தன் குலம் என்ன? தன் கல்வி என்ன என நோக்கவில்லை. மாறாக, பகவானுக்கு என்ன தேவையோ அதை கொடுக்க தன்னை சூத்திரரில் ஒருவராக மாற்றிக்கொண்டார்.

அவர் வனமாலியின் அம்சம் என்பதால் அவரின் மனம் முழுக்க அந்த மலர்மாலை அமைப்பதிலே அவரை அறியாமல் கரைந்துக் கிடந்தது.

கம்சனின் வேலையாள் ஒருவன் நந்தகோபன் மகனுக்கு மலர் கைங்கர்யம் செய்தே உயர்வு பெற்றதையும், கஜேந்திரன் எனும் யானை புஷ்பவழிபாட்டால் மோட்சம் பெற்றதையும் எண்ணி தானும் அந்த புஷ்ப கைங்கர்யம் ஒன்றையே செய்ய தீர்மானித்தார்.

அதன்படி அரசனிடம் கொஞ்சம் நிலம் பெற்றார். ஒரு சோலை அமைக்க நிதியும் பெற்றார். அந்த நிலத்தில் அழகான சோலையினை மிகுந்த அறிவோடு அமைத்திருந்தார்.

காவேரியில் இருந்து சிறிய கால்வாயினை வெட்டி அது சோலைக்குள் ஓடும்படி செய்து மீதி நீர் காவேரியின் இன்னனொரு கிளையில் கலக்குமாறு செய்தார். அதாவது காவேரியின் கிளை ஒன்று தன் சோலைக்குள் வரும்படி பார்த்துக்கொண்டார். அது நீருக்கு ஆதாரமாயிற்று.

காவேரி என்பது ஆண்டுமுழுக்க நீர் செழித்தோடும் ஆறு அல்ல, சித்திரை வைகாசியில் அது சுருங்கும் அல்லது வற்றிவிடும், அதனால் ஒரு சிறிய கிணற்றையும் தோண்டி வைத்திருந்தார்.

அவரின் அந்த சோலை அவ்வளவு அழகானதாக இருந்தது. பார்க்கவே அழகும், இன்ப வனமும் காண்போர் மனதை ஈர்ப்பதுமாக அது வனப்பாக செழிப்பாக இருந்தது.

சுற்றி அழகான செடிகளில் வேலி அவை மேல் கொடிகள் படர்ந்து கிடக்கும். செதுக்கப்பட்ட அந்த செடிகளில் வரும் மலர்களும் அங்கே படரும் கொடிகளின் மலரும் பார்க்கும் போதே அழகைச் சொன்னது, மணம் இன்னும் கூடிற்று.

அதை அடுத்து தென்னை மரம் அதை அடுத்து அதைவிட உயரம் குறைந்த அளவில் (கொஞ்சம் தாமதமாக நட்டுவைத்ததால்) பாக்குமரம், அதை அடுத்து மாமர வரிசை என மரங்கள் இருந்தன‌.

அதனை அடுத்து வாழைமரங்கள் இருந்தன. அவை மாத மாதம் இடைவெளி விட்டு நட்டதால் ஏணிபோல் வளர்ந்திருந்தது. எல்லா மாதமும் வாழை இலையும் கனியும் கிடைக்க அப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதை அடுத்து நான்கு பாகமாக நிலத்தை பிரித்து நந்தவனம் அமைத்தார். அங்கே பெருமாளுக்கு உகந்த‌ மலர்களும் இருந்தன. மலர்களுக்கும், மரங்களுக்கும் இடைப்பட்ட இடத்தில் துளசி வகை வகையாக இருந்தது.

இந்த நந்தவன பாகங்களின் பாதை ஓரமாக பாரிஜாத மரம் இருந்தது. பவழமல்லி எனும் அந்த மலர் இரவில் பூத்து காலையில் வாடும் இயல்புடையது. பெருமாளுக்கு துளசி போல் உகந்த ஒன்று.

அந்த மரத்தில் வெற்றிலை கொடிகள் படரவிடப்பட்டிருந்தது.

இந்த நான்கு வகை மலர் நந்தவனத்தில் மல்லிகை முதல் சாமங்கி என பூஜைக்கு உகந்த எல்லா மலர்களும் பூத்துக்கொண்டிருந்தன‌.

நான்கு வகை நந்தவனம் நடுவில் வட்டவடிவ தடாகம் இருந்தது. அங்கே தாமரை, அல்லி என எல்லா வகை மலர்களும் மலர்ந்திருந்தன.

இதனால் எல்லாப் பொழுதும், எல்லா பருவமும் அங்கே வகை வகையான மலர்கள், துளசி, பாரிஜாதம், தாமரை என மலர் வகைகளும், தேங்காய், வாழைப்பழம், பாக்கு என எல்லாமும் கிடைத்துக் கொண்டிருந்தது.

அதனை நாள் தவறாமல் திருவரங்கத்துக்கு வண்டி வண்டியாக அனுப்பிக்கொண்டிருந்தார். எஞ்சியதை பொருளாக மாற்றி அடியார் பராமரிப்புக்கும், தன் தேவைக்கும் வைத்துக் கொள்வார்.

பகவானுக்குரிய தொண்டு இது. இதுதான் தன் கர்மா என அதில் கவனமாக இருந்தார். ஒரு நாள் கூட அவர் அங்கே தாமதிக்கவில்லை, கர்மமே தன் வாழ்வாக கொண்டு அந்தத் தொண்டை மிக மிக சிறப்பாக ஒரு நாள் தவறாமல் செய்தார்.

வகை வகையாக மலர்களும், துளசியும் இன்னும் எல்லா பொருளையும் அனுப்பிவிட்டு பின் அரங்கனை தரிசித்து கண்ணீர்மல்க நின்று கசிந்து உருகிவிட்டுத்தான் ஆகாரம் உண்பார்.

அவரைப் பற்றி எல்லோருக்கும் நல்ல மரியாதை இருந்தது. ஆண்டி முதல் அரசன் வரை அவரை பெரும் மரியாதையாக வைத்திருந்தார்கள்.

காரணம், நந்தவனம் அமைத்து பராமரிப்பது என்பது சாமான்யம் அல்ல, நிறைய குழந்தைகள் உள்ள குடும்பத்தை பராமரிப்பது போல் சிக்கலானது.

ஒருநாள் ஒரு பொழுது ஓய்வெடுக்க முடியாது. களை அகற்றல், நீர்பாய்ச்சல், உரமிடுதல் என வேலை அதிகம்.

மழைக்காலம் என்றால் பாத்திகளில் நீர்கட்டினால் செடிகள் அழுகிவிடும். இதனால் நீரை வெளியேற்றும் காரியம் மேற்கொண்டு நீர் தங்கா காரியமெல்லாம் செய்தல் அவசியம்.

பூச்செடிகள் என்பது காலம் காலமாக நிற்காது. மாதகணக்கில் மட்டும் பலன் கொடுக்கும். பின் புது செடிகளை உருவாக்க வேண்டும்.

செடிகளை நட்டு வளர்ப்பது பாராமரித்து வர சில மாதங்களாகும். அதன் பின்பே மலர் வரும், பகவானுக்கு தடைபடாமல் மலர் கொடுக்க மிகுந்த முன் தயாரிப்பும், எந்நாளும் மலர் கிடைத்து கொண்டே இருக்க பல ஏற்பாடுகளை செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அதிகாலை மலர் பறிப்பு இன்னொரு பெரும் பணி, ஒரு நாள்விடாமல் காலையில் மலர்களை பறிப்பது அதுவும் பவித்திரமாக பறிப்பது என்பது எளிது அல்ல‌.

இதன் பின் செடி பராமரிப்பு, நில பராமரிப்பு என ஒரு நிமிடம் ஓய்வில்லா பணி அது.

தன் பதின்மவயதில் தொடங்கிய அப்பணியினை தொடர்ந்து பிரம்மச்சாரியாக செய்துவந்தார் அவர். அந்த நந்தவனத்திலே பல குடிசைகளை அமைத்திருந்தார். அதில் ஒரு குடிலில் அவரும் பகவானின் சிலையுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

நல்ல சுத்தமான பிரம்மச்சாரி, பகவானுக்கு மலர்களை துளசிகளை கொடுப்பவர் என அவருக்கு மரியாதை இருந்தது.

பக்தர்கள் ஆயிரம் வேண்டலாம், மானுடர் ஆயிரம் சிந்திக்கலாம். ஆனால், ஒரு ஆலயத்துக்கு ஒருவனால் செய்யப்படும் திருத்தொண்டு என்பது பகவான் அனுமதித்தால் மட்டுமே சாத்தியம், அவன் அனுமதிக்காமல் யாரும் காலை கூட வைக்க முடியாது.

அதனால் பகவான் அனுமதித்த பக்தர் இவர், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர் எனும் நம்பிக்கை எல்லோரிடமும் இருந்ததால் மரியாதையாக நடத்தினார்கள்.

ஒரு இடத்தில் ஒரு புள்ளியில் ஒரு நொடியில் கூட அவர்மேல் யாருக்கும் எந்த சலனமும் அவநம்பிக்கையும் இல்லை. அப்படி முழுநேர அடியாராக மலரும், துளசியுமாக விளையவைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அதுபற்றி அவர் பெரிதாக நினைக்கவுமில்லை.

நீரும் மண்ணும் செடியும் பகவான் கொடுத்தது. நீரை செடிக்கு ஊற்றினால் அங்கே மண் மலராகும் அதிசயம் நடக்கின்றது. இங்கு நான் என்ன செய்துவிட்டேன்? மண்ணை மலராக்கும் அதிசயம் இறைவன் செய்வது இங்கே நான் ஒரு பார்வையாளன் எனும் பக்குவம் மட்டும் அவரிடம் இருந்தது.

இறைவனின் சக்தியினை ஆற்றலை அந்த மனதில் கண்டரே தவிர தான் செய்ததாக நினைக்கவில்லை, இந்த பண்பு அவரை இன்னும் உயர்த்திற்று.

அப்படியான தன் பக்தனை பெரும் இடத்தில் உயர்த்த பகவான் விரும்பினார். அனுதினமும் தனக்கு மலர்சூட்டி, துளசிமாலை சூட்டி அழகுபார்க்கும் பக்தனை உலகறிய செய்து அழகுபார்க்க பகவான் திருவுளம் கொண்டார்.

காரணம், தன் வாழ்வையே தனக்காக அர்பணித்தும் அந்த தொண்டன் தனக்காக ஒன்றுமே கேட்காமல் வெறுமனே பணிமட்டும் செய்தது அவர் உள்ளம் கவர்ந்தது, பகவான் புன்னகைத்தார்.

அதன்படி அந்த பக்கம் ஒரு கணிகை குடும்பம் இருந்தது. பணக்காரர் அவை, அரசன் அவை என ஆடி பரிசுபெற்று வாழ்வது அவர்கள் தொழில்.

சிலப்பதிகார மாதவி போல அவர்கள் வாழ்வு இருந்தது. அதில் இளையவள் தேவதேவி, நல்ல அழகி, பார்ப்பவர் எளிதில் வீழ்ந்துவிடாவிட்டால் அவர்கள் மனிதர்களே அல்ல என்பது போல் ஈர்க்கும் அழகு.

அவள் தன் அழகிலும், உடலிலும், நடனத்திலும் பெரும் கர்வம் கொண்டிருந்தாள். பொருளில்லார் அவளை நோக்குவதை மனமார ரசிப்பாள். ஆனால், கடந்து செல்வாள். பணக்காரர் அவளை நோக்குவதை கடைக்கண்ணால் அறிந்து எதை கொடுக்கவேண்டுமோ அதை நடனமாகவோ இல்லை தொழில்தர்மப்படியோ கொடுத்து தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வாள்.

பணக்காரர்கள் அவள் கால்முட்டிவரை பொன் கொட்டினார்கள். அவளுக்காக பொருள் தேடி ஒரு நாழிகை அவளை அருகிருந்து பார்த்து எல்லாமும் கொட்டி ஏழையானவர்களும் உண்டு.

அப்பக்கம் அவளை நோக்காத ஆண்கள் கண்கள் இல்லை, அவள் பெயர் தெரியாத ஆண்கள் இல்லை. கணவன்கள் மனைவியினை அச்சமூட்டும் பெயராகவும், மனைவியர் அந்த பெயரை கேட்டாலே இடியோசை கேட்ட நாகம்போல் அஞ்சியவர்களாகவும் அவள் பிரசித்தியாக இருந்தாள்.

பொதுவாக, பெண்களின் குணம் தன் அழகில் தன் மேலான மயக்கத்தில் ஆண்கள் கிறங்கிக்கிடப்பது, அது எல்லா உயிர்களுக்கும் உள்ளது போல பெண்களுக்கும் மானுட குலத்தில் உண்டு, மானுடம் அங்கேதான் பல்கிப் பெருகுகின்றது.

சிருங்காரத்தின் தொடக்கமே பெண்மேல் ஆண் மயங்கி அவள் காலடியில் கிடப்பது, ஒரு பெண் விரும்புவதும் அதுவே, அதனை விரும்பாத பெண்கள் இல்லை.

ஆண்கள் தன்னை நோக்குவதும், தன் காலடியில் கிடக்க விரும்புவதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பூரிப்பை மனதில் குறுகுறுப்பை கொடுக்கும் விஷயம், தன்னை ஆண்கள் கொண்டாடுவதை ஒரு பூலோக உயிராக, படைப்பின் மூலமாக அவளை அறியாமல் அவள் ரசிக்கின்றாள், விரும்புகின்றாள்.

பெண்கள் அலங்காரம் செய்வதும், பூச்சூடுவதும், ஆடை அணிகலன்களில் அக்கறை செலுத்துவதும், அவர்களை அறியாமலே அவர்கள் கொண்டிருக்கும் இந்த குணத்தாலே, இது அவர்களின் மன விருப்பம், ரத்தத்தில் வரும் விஷயம். சிருஷ்டிகர்த்தா அப்படித்தான் அவர்களை படைத்திருக்கின்றான்.

ஆண்களை அவர்கள் ஈர்ப்பதும் , ஆண்கள் பெண்களை ஈர்க்க பல சாகசங்களை செய்வதும் இயல்பு, உலக மானுடம் எனும் உயிர் அதில்தான் இன்றும் நிலைக்கின்றது.

ஆனால், குலப்பெண்கள் இந்த மனதை மறைப்பார்கள், அது ஆண்களை சலனப்படுத்தலாம், அதனால் தனக்கும் தன் வீட்டிற்கும் அவப்பெயர் உண்டாகலாம் என மிக போராடி மறைப்பார்கள்.

இந்த கணிகையர்க்கோ அந்த கவலை இல்லை, அவர்கள் தொழிலே ஆண்களை ஈர்ப்பது என்பதால் அவர்களின் அடிப்படை குணமே மூலதனமாகி தொழிலாகும் போது அவர்களுக்கு எல்லா ஆண்களும் தன்னை பெரிதாக மதித்தல் வேண்டும் எனும் விருப்பமும் ஏக்கமும் கர்வமும் உண்டு.

அப்படி அவள் எல்லா ஆண்களும் தன்னை நோக்கும்படியான வசீகரத்துடனும், அழகுடனும், அந்த பெருமையுடனும் வலம் வந்தாள்.

திருவரங்கத்துக்கு வடக்கே இருக்கும் திருக்கரம்பனூர் எனும் உத்தமபுரம் அவள் ஊராய் இருந்தது. அங்கிருந்து அவள் உறையூருக்கு சென்றாள். அங்கே ஆட்சி செய்யும் சிற்றரசனின் அவையில் ஆடிப்பாடி எல்லோரையும் மகிழ்வித்து பரிசில் பெற்றுவந்து கொண்டிருந்தாள்.

அப்படி வந்தவள் வரும் வழியில் திருவரங்கத்தை தரிசிக்க விரும்பினாள், அப்படி தரிசித்துவிட்டு வரும் வழியில் இந்த நந்தவனம் கண்டு அதிசயித்தாள், தன் தமக்கையிடம் அதுபற்றி வினவினாள்.

தமக்கை கொஞ்சம் உலகம் அறிந்தவள், அவள் இந்த நந்தவனம் பற்றியும், விப்ரநாராயணர் பற்றியும் அறிந்திருதாள், அதனால் இயல்பாய் சொன்னாள்.

“இது ஒரு அதிசயமான ஆணின் நந்தவனம், பெருமாளுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்து இன்றுவரை மலர் கைங்கர்யம் ஒன்றே செய்யும் பிரம்மசாரியின் நந்தவனம்.

இன்றுவரை அவரை கேளிக்கை, உல்லாசம், பொழுதுபோக்கு, மது, சூதாட்டம், தாசிகள் ஏன் பெண் என ஒருவருடன் கூட கண்டிருக்க முடியாது.

அப்படியான பிரம்மசாரியின் இடம் இது , வா அவரை பார்க்கலாம்” என அழைத்துச் சென்றாள்.

அங்கே புற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் விப்ரநாராயணர், அவர் இவர்களை வாய்பேசும் புற்களை போல பார்த்தார். அதாவது அழகு பெண்களாக பார்க்கவில்லை, தன்னை தேடிவந்த அழகிகளாக நோக்கவில்லை.

மாறாக என்ன வேண்டும் எனக் கேட்டார்?

அவர்களோ நந்தவனத்தை சுற்றிபார்த்துவிட்டு செல்ல வந்தோம் என்றார்கள். “பாருங்கள். ஆனால், மலரெல்லாம் பகவானுடையது. அவருக்கு போகத்தான் மற்றவர்க்கு. அதனால் தொடவேண்டாம்” எனச் சொல்லி தன் போக்கில் புற்களை பிடுங்கிக் கொண்டிருந்தார், ஒரு பார்வை கூட திரும்பி பார்க்கவில்லை.

அதுவரை ஆண்கள் என்றாலே தன்னை கண்டதும் வளைந்து குழைவார்கள், தான் விரும்புவதை கேட்கமாலே கொடுப்பார்கள், எல்லா ஆண்களும் பிறந்ததே தன்னை ஆராதிக்க, தன் காலடியில் கிடக்க என நினைத்து அகங்காரத்தில் இருந்த தேவதேவிக்கு அவர் செய்த விதம் அவமானமானது.

“அக்கா, நாம் என்ன பூவுக்கு இல்லாதவர்களா? எப்படி அவமானபடுத்தினார் பார்த்தாயா? என்னை அரசன் வரை பல்லக்கில் கொண்டாடுவான், இவரென்ன பெரிய ஆளா? பைத்தியம் பிடித்தவரா? ஆண்மை இல்லாதவரா?” எனப் பொரிந்து தள்ளினாள்.

அக்கா சொன்னாள், “தங்காய், நான் சொன்னேன் அல்லவா? அவருக்கு பகவானை, அவன் தொண்டை தவிர ஏதும் தெரியாது. அதனால் அவரைப் புரிந்துகொள். அவர் எப்பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமட்டார், பெண்களிடம் சிக்கவும் மாட்டார்” என அவளோடு நடந்தாள்.

தேவதேவி சொன்னாள், “மற்ற பெண்களும் நானும் ஒன்றா? இன்னும் ஆறுமாத காலத்தில் இவரை என் காலடியில் போட்டு காட்டுகின்றேன்” எனச் சவால் விட்டாள்.

அவளின் ஆணவம் அப்படி இருந்தது.

தமக்கை விப்ரநாராயணர்பால் உள்ள நம்பிக்கையில் அவரை பற்றி கேள்விபட்ட நம்பிக்கையில் சொன்னாள், “அப்படி நடந்தால் ஆறுமாத காலம் நான் உன் வேலைக்காரியாக இருக்கின்றேன்” என்றாள்.

அவர்கள் தம் இல்லம் திரும்பினார்கள். ஒருமுறை பரிசில் பெற்றால் சிலகாலம் வாழலாம் என்பது அவர்கள் தொழில், அதை தாண்டி அவர்கள் வீட்டுக்கே வந்து தங்கி அவர்களின் ஆடல் பாடல்களை ரசித்து அள்ளிக் கொடுத்துவிட்டு செல்லும் தனவான்களும் உண்டு.

தேவதேவி தன் சவாலில் வெல்ல காட்சியினை தொடங்கினாள். காவி சேலை கட்டிக்கொண்டாள், அலங்காரம், பொன்னகை என எல்லாம் துறந்தாள். தலை அலங்காரம் செய்யவில்லை, ஆளே மாறிப்போனாள். ஆனால், யாரும் அறியாதவாறு கண்ணுக்கு மட்டும் மையிட்டுக் கொண்டாள்.

மிக எளிய பெண்ணாக தன்னை உருமாற்றினாள், சாகசகாரிக்கு அது ஒன்றும் கடினமல்ல‌.

ஆடல் பாடலால் தன் வனப்பான உடலால் கவிழ்க்கமுடியாத விப்ரநாராயணரை சதியால் கவிழ்க்க திட்டமிட்டவள் அல்லவா? அவள் அந்த அழுக்கு காவி சேலையுடன் பராரி கோலத்துடன் அவரை சந்தித்தாள்.

அவர் காலில் விழுந்து கதறினாள், அவர் பதறினார். ஆனால், அவள் தன் காலை கூட தொடாதபடி கவனமாக இருந்தார்.

“ஐயா, நான் என் முன் ஜென்ம கர்மவினை காரணமாக இந்த கணிகையர் குலத்தில் பிறந்துவிட்டேன், அங்கே அந்த இழிவான வாழ்வை பொருளுக்காக தொடர என்னை நிர்பந்திகின்றார்கள்.

நான் பெரும் பாவி. ஆனால், அந்த பாவத்தை தொடர நான் விரும்பவில்லை, செய்த பாவமெல்லாம் கழித்துவிட்டு பரமன் பதம் செல்ல விரும்புகின்றேன்.

என்னை கோவிலின் தேவதாசிகளும் சேர்க்கவில்லை, அவர்கள் புனிதமான பணி செய்பவர்கள். கணிகையினை சேர்க்கமாட்டார்கள்.

மடபள்ளியிலும் சேர்க்கமாட்டார்கள், எங்கும் இடமில்லை.

ஐயா, எனக்கு உங்கள் மலர் கைங்கர்யத்தில் பங்குபெற உதவி செய்வீர்களா? நான் என் கரத்தால் மலர் தொடுத்து கர்மம் கழிக்க வழி செய்வீர்களா? எனக் கெஞ்சியவள் சட்டென கேட்டாள்.

“நான் ஒரு கணிகை என்பதால் இறைவனுக்கு சூடும் மலர்களை தொட அனுமதிக்கமாட்டீர்கள் தானே, கசக்கி எறியப்பட்ட மலர் நான் என்பதால் என்னை ஒதுக்குவீர்கள்தானே, பரவாயில்லை நான் புல்லை பிடுங்கி நந்தவனம் காக்க முயல்கின்றேன்” என்றாள்.

விப்ரநாராயணருக்கு அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது, அதுவும் ஒரு பெண் அழும்போது பொல்லா ஆண்கள் மனமே கரையும், அவரின் மென்மனம் என்ன செய்யும்?

அவர் அதுவரை பெண்களை அல்ல யாரையும் அணுக்கமாக கண்டதில்லை, பகவானும் அவனுக்கு சாற்றும் மலர்களுமன்றி அவருக்கு ஏதும் தெரியாது.

அவளின் கண்ணீர் அவரை உருக்கிற்று, அதுவும் பகவானுக்கு கைங்கர்யம் செய்யவேண்டும், என்னை யாரும் சேர்க்கவில்லை எனும் அந்த வார்த்தை அவரை உருக்கிற்று.

அவர் அவளின் கோரிக்கையினை ஏற்றார், அதன்படி நந்தவனத்தின் ஒரு மூலையில் அவள் தங்கி பல வேலைகளை செய்யச் சொன்னார்.

அவள் தன் நாடகத்தை தொடங்கினாள்.

முதலில் அவளை அவர் கொஞ்சமும் சிந்திக்கவில்லை, அவளோ தன் திட்டம் ஒவ்வொன்றாய் அரங்கேற்றினாள்.

ஒருவனை வளைத்துவிடவேண்டும் என்றால் பெண்களுக்கு ஆயிரம் திட்டம் உருவாகும், அதுவும் கணிகையருக்கு சாதுர்யம் அதிகம்.

அவள் தன் சாதுர்யத்தை மலர் மாலையில் காட்டினாள், அழகான மாலைகளை கதம்பமாக தனியாக தொடுத்தாள், விப்ரநாராயணருக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அழகான வகையில் அற்புதமான மாலைகளை மலரில் செய்தாள், அவற்றின் அழகும் மணமும் அவரை சந்தோஷம் கொள்ள செய்தன‌.

பின் ஓய்வு நேரம் கண்ணன் படத்தை வைத்து மாலை சூட்டி அழகான பாடல்களை அவர் அறியும்படி பாடினாள், இயல்பிலே பக்தரான அவர் மனம் இன்னும் கரைந்தது.

பகவானுக்கு மாலை, கண்ணனுக்கு பாட்டு என அவள் செய்ததை சிலாகித்தாரே தவிர அவளை அவர் ஏறேடுத்தும் பார்க்கவில்லை, அவர் சிந்தையில் அவள் இல்லை, மனதிற்கோ சிந்தைக்கோ அவர் அதை கொண்டுவரவில்லை.

அவளுக்கோ ஏமாற்றமாகவே இருந்தது, தான் தோற்றுவிடுவோமோ என அஞ்சினாள்.

கடைசியில் ஒரு வாய்ப்பு வந்தது, அதைச் சரியாக பயன்படுத்தினாள்.

அந்நாளில் பெரும் மழை கொட்டிற்று. விப்ரநாராயணர் கடும் மழையில் சிக்கி நனைந்தபடி குடிசைக்கு ஓடினார். அது சிறிய குடிசை.

அதை கவனித்தவள் தானும் மழையில் நனைந்தபடி அதே குடிசைக்கு ஓடிச் சென்றாள். ஆனால், வெளியில் குளிரில் நடுங்குவது போல் நடுங்கி நின்றாள், அவரின் பார்வையில் படுவதுபோல் நடுங்கினாள்.

அவர் அவளை பரிதாபப்பட்டு உள்ளே வரச்சொன்னார். ஒன்றுமே அறியாததுபோல் அவளும் வந்தாள்.

அவளின் உடை, நனைந்த உடல் அவருக்கு குழப்பம் தரவில்லை. மாறாக, அவர் அவளின் ஈரம் அகலும்படி உலர்த்திக் கொள்ள துணி கொடுத்தார்.

அதை வாங்குவதுபோல் வந்தவள் தன் ஈரமுடியினை சுழற்றி அவர் முகத்தில் வீசினாள். அவர் தடுமாறினார். அப்போது அவள் கண்களில் கண்ட சிருங்காரத்தில் அவர் தடுமாறினார்.

கொட்டும் மழை, அடிக்கும் குளிர் என தவித்தவர் அவளை உற்றுநோக்கினார். சூரியனை கண்ட பனிபோல் அவர் மனம் கரையத் தொடங்கிற்று.

நான்கு புலன்களாலும் அவளிடம் வீழாதவர் ஸ்பரிசம் எனும் ஒன்றால் வீழ்ந்தார். அந்த சாகசக்காரி அவரை வளைத்துக்கொண்டு தன் வசப்படுத்தினாள்.

அவள் சவாலில் வென்றாள், இந்த ஊடலெல்லாம் அவளுக்கு தொழில்.

ஆனால், அவருக்கு அதுதான் முதல் அனுபவம், முதல் முதலாக ஒரு பெண்ணிடம் வீழ்தல் என்பது ஆணுக்கு அப்படி ஒரு மயக்கமும் ஏகாந்தமும் கொடுத்து உலகமே அவள்தான் என நினைத்து மயங்க வைக்கும் இனம்புரியா கிறக்கம்.

அந்த இனம்புரியா மயக்கத்தில் அவரை மறுபடி மறுபடி விழவைத்தாள். அவரை யோசிக்கவிடாமல், சிந்திக்கவிடாமல் கட்டிவைத்தாள்.

அவரோ தேனுண்ட வண்டுபோல் மயங்கிக் கிடந்தார்.

அவரின் ஒழுக்கம், நியமம், மலர்பணி, நந்தவனம் எல்லாம் மறந்தே போனது, அவளின் அரவணைப்பும் சுகமுமே அவருக்கு எல்லாமுமானது.

பகவானுக்கு பக்த லாஹிரியில் தொண்டு செய்தவர் அதை மறந்து மோஹ லாஹிரியில் வீழ்ந்துக் கிடந்தார்.

அவள் தான் வெற்றிபெற்றதை மனமார ரசித்தாள். இனி தனக்கு அங்கு வேலையில்லை என்பதை உணந்தவள், “ஐயா எனக்கு என் தாய்வீடு நினைவு வந்துவிட்டது, நான் அங்கே செல்கின்றேன், உத்தரவு தருவீராக” என்றாள்.

அவரும் உத்தரவு கொடுத்தார். அவளும் தன் சாசகத்தை நினைந்து பெருமைபட்டு தன் இல்லம் ஏகினாள், சென்றவள் தன் தமக்கையிடம் பெருமையாக சொன்னாள்.

“அரசனையே ஆட்டிவைத்து காலடியில் கிடத்துபவள் நான், எனக்கு இந்த ஆண்டி எம்மாத்திரம், அவன் இனி என் காலடி சுண்டுவிரலுக்கு ஆடுவான், இருந்துபார்” என்றாள்.

தமக்கை அதிசயித்தாள், ஒரு சிறுபிழையும் சொல்லமுடியாதவர் எனக் கருதபட்ட அந்த அடியாரின் மனதை தன்னால் தன்னிடம் இட்ட சவாலால் தன் தங்கை கெடுத்துவிட்டாள் என அறிந்தவள் மனமொடிந்து காவிகட்டி வெளியேற முனைந்தாள்.

“எங்கே செல்கின்றாய்? என் வீட்டில் எனக்கு வேலைக்காரியாக ஆறுமாதம் பணியாற்றவேண்டும் என்பதை மறந்தாயோ?” எனச் சொல்லி தன் வேலைக்காரியாக அவளை வைத்துக்கொண்டாள் தேவதேவி.

அவள் இல்லாத நந்தவனத்தில் குருடனைப் போல் அமர்ந்திருந்தார் விப்ரநாராயணர். ஒரு ஆணிடம் பெண் காட்டும் அன்பும் பாசமும் அப்படி ஒருவனை முழுவதும் மாற்றிவிடும் சக்தி கொண்டது. ஒரு பெண் காட்டும் நேசத்தில் விழுந்து அவளை முழுக்க நம்பியவன் நிலை அப்படி உன்மத்த நிலையாகிவிடும்.

அப்படி உன்மத்த நிலையில் இருந்தார் விப்ரநாராயணர். அவரின் நந்தவனம் பேயாடிவிட்டு சென்ற வீடுபோல் சிதைந்துக் கிடந்தது, புயல் கடந்த சோலையாய் சிதைந்தது.

ஒழுக்கம் , ஆச்சாரம், நியமம் என எல்லாமும் விடைபெற்றது.

முற்றிய காமம் மூளை சிதைக்கும். அவர் காமமோ அவரின் இதயம், மூளை என எல்லாம் சிதைத்து, தான் யார், தன் தொண்டு என்ன என்பதுவரை சிதைத்தது, அவர் மனதில் அவள் உடும்பாய் பற்றியிருந்தாள்.

அவள்மேல் கொண்ட காமம் என்பது அவருக்குள் வேதாளமாய் ஏறிற்று.

அதனால் அவள் இல்லம் தேடி சென்றார். கொஞ்சம் தன்னால் இயன்ற பொருளுடன் சென்றார். பெருமாளோ, நந்தவனமோ அவர் நினைவிலே இல்லை. அப்படி ஒரு கேடுகாலத்தில் சிக்கிக்கொண்டார்.

அவரை முதலில் கண்டவள் தமக்கை, அவர் அவரின் கோலம் கண்டு கதறினாள்.

திருமண்ணும், நாமமும் இட்டு முகம் நிறைய கபடமில்லா தெய்வீக குழந்தைத்தனத்துடன், பக்தி இழையோடும் உருவத்துடன் தெய்வாம்சமாய் திருவரங்க நாதன் ஆலயம்தவிர எங்கும் செல்லாத அந்த பக்தன் இங்கே பாவியர் வந்துசெல்லும் பாவி வீட்டில், ஆளே உருமாறி, ஏக்கப் பார்வையுடன் நிற்பதை கண்டு கலங்கினாள்.

துளசியும், தாமரையும் ஏந்தி பகவானுக்காக காத்திருந்த கைகள் அற்ப மானுடத்திற்காக கொஞ்சம் சில்லறையுடன் நிற்பதை கண்டு அழுதாள்.

ஆனால், அவள் வேலைக்காரி, எஜமானியினை மீறி என்ன செய்துவிடமுடியும்?

அந்த தேவதேவி குற்றுயிராய் ஆகிவிட்ட விப்ரநாராயணரை வதைத்து வதைத்து ரசித்து கொல்ல முடிவெடுத்தாள், தன்னை முன்பு மதிக்காத ஒருவனை கதறவைத்து கொன்று பழிதீர்க்கும் குரூர மனநிலைக்கு வந்தாள்.

அதன்படி அவரை உள்ளே அழைத்து உறவாடினாள், “என்னைக் காண வந்துவிட்டீர்களா? எனச் சரசமாடி மயக்கினாள், அவரோ இழந்த சொர்க்கம் மீண்டது போல் மகிழ்ந்தார்.

ஓரிரு நாளில் சுயரூபம் காட்டினாள் தேவதாசி. அதை தான் செய்யாமல் தன் தாயினைத் தூண்டிவிட்டாள்.

தேவதேவியே அப்படி என்றாள் அவளை உருவாக்கிய தாய் எவ்வளவு அனுபவம் கொண்டிருப்பாள்? அவள் நேரடியாகவே விப்ரநாராயணரின் முகம் பார்த்து கொஞ்சமும் இரக்கமின்றி தன் தேர்ந்த தொழில் தர்மத்தின்படி மனசாட்சியின்றிப் பேசினாள்.

அந்தத் தேவதேவிக்கு ஒரே நோக்கம் தன்னை தன் அழகை ஏறேடுத்தும் பாராத அந்த விப்ரநாராயணரை பழிவாங்குவது, அதற்குத் தன் சாகச நடிப்பை கையில் எடுத்தவள் அவரை வீழவைத்து இப்போது பழிவாங்கிக் கொண்டிருந்தாள்.

அவரோ தன் பகவான் கைங்கர்யம், நந்தவனம் என எல்லாமும் மறந்து மது குடித்த மந்திபோல் தன்னிலை மறந்து அவளுக்காக ஏங்கிக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

அவளோ அவரை எள்ளி விளையாடத் தொடங்கினாள், அவருக்கு அங்கு அவமானங்கள் அரங்கேறின‌.

முன்பு சுத்தமான பிரம்மச்சாரி, ஒழுக்கம் தவறாதவர், மிகச் சிறந்த பக்தன் என்றெல்லாம் சொல்லப்பட்டு, வணங்கப்பட்டவர், ஒரு தாசியின் காலை பிடித்து தன் நிலை கலங்கிப் பித்தத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

அவளோ தன் தாய்க்குக் கண்காட்டினாள்.

தாய் சொன்னாள், முகத்தில் ஆயிரம் அவமான பாவனைகளைச் சுமந்து வார்த்தைகளை இராமாயண கூனிபோல் வஞ்சகத்தில் சொன்னாள்.

“ஏழை பார்ப்பனரே, இது தாசிகள் மாளிகை, இங்கே வரவும் தங்கவும் பொருள் அவசியம். எங்களுக்கு அதுதான் தர்மம்.

அதனால் சொல்கின்றோம், இங்கு நீ ஆசைபட்டதெல்லாம் நடக்காது, இங்குப் பொருள்களைக் கொட்டுவோர்க்கே இடம் உண்டு, என் மகள் ஏதோ மனவருத்தத்தில் அங்கே வந்திருக்கலாம். அதில் நீ பழகியிருக்கலாம்.

உன்னிடம் இருந்து வாங்க உன்னிடமே ஒன்றுமில்லை, உன் நந்தவனம் அரச சொத்து. நீ ஒரு அன்னக்காவடி.

உன்னை இங்கே தங்கவைத்தால் அடுத்து வருபவரும் வராமல் போவார்கள், எங்களுக்கு வருமானம் வராது. உன்னாலும் தரமுடியாது.

எனக்கு வயதாயிற்று. என் மகள் ஒருத்தித்தான் வருமானம். மூத்தவளும் ஒதுங்கிவிட்டாள். அதனால் அடுத்த தனவானை நாங்கள் மகிழ்ச்சிப்படுத்தும்படி நீ போய்விடு. இங்கே வராதே.

இதற்குமேலும் நீ போக மறுத்தால் ஆட்களை வைத்து உன்னை விரட்டிவிடுவேன் ஜாக்கிரதை” என மிரட்டினாள்.

வாழ்வில் முதல் முறையாக பணமில்லா அவமானம் என்றால் என்ன என்பதை உணர்ந்தவர் அவளைத் தேடினார். அவள் ஏதாவது சொல்லமாட்டாளா என ஏங்கினார்.

அவளோ மறைவாக நின்று அவரின் அனைத்துச் சோகங்களையும், பரிதாபத்தையும், ஏக்கக் கண்ணீரையும் அவமானத்தையும் ரசித்தாள்.

வாடிய முகத்துடன் தடுமாறும் நடையுடன் அவர் வெளியேறினார்.

உள்வீட்டு கதவு அவருக்குச் சாத்தப்பட்டது, அவர் தன் இல்லம் செல்ல வீதியில் நடந்தார். ஆனாலும், அவள் நினைவு உந்தப்பட ஓடிச் சென்று வெளித்திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டார்.

எப்படியாவது அவள் வருவாள் சந்தித்துவிடலாம், அவளோடு மறுபடி ஒட்டிவிடலாம் என ஒரு நம்பிக்கையில் ஏக்கத்தில் அங்கே அமர்ந்தவர் அப்படியே உறங்கிவிட்டார்.

அவரின் நிலையினை ஊர் பரிதாபமாகப் பார்த்தது, தேவதாசி இவன் இன்னும் போகவில்லையா என்பதுபோல் பார்த்தாள். பெண்மோகத்தால் வீழ்ந்த பராரி என மக்கள் பரிதாபப்பட்டுக் கொண்டனர்.

அவள் தாசி எனத் தெரிந்தபின்பும் அவளைவிட்டு நீங்கமுடியா அளவு மனதே இல்லாதராக மாயையில் சிக்கியவராக தன்னிலை இழந்து குப்பைமேட்டில் கிடந்தார் விப்ரநாராயணர்.

வயதின் குழப்பமும், சிற்றின்ப மயக்கமும், அவள் ஊட்டிய சிருங்கார இன்பமும் அப்படி அவரைக் குழப்பியிருந்தது. மயங்கிக் கிடந்தார்.

அவரைப்பற்றி யாருமே கவலைபடாநேரம், தெய்வம் மட்டுமே தனக்கான மலர்களைத் தரும் பக்தனைக் காணவில்லை, அவன் மலர்களையும் காணவில்லை என்னாயிற்றோ எனக் கவலைப்பட்டது.

நன்றிகெட்டவன் மனிதன், நன்றியுள்ளது தெய்வம் என்பது அதுதான்.

ஆம். பகவான் தன் தேவியோடு இறங்கிவந்தார்.

தனக்கு அன்றாடம் மலர்க்கொடுத்து துளசி கொடுத்து வணங்கிய பக்தனின் நிலைமை அவரை மனமுருக வைத்தது, தன் தேவியிடம் சொன்னார்.

“நம் ஆலய சந்நதியினை மலர்களால் மணக்க வைத்தவன் இங்கே வாடிய சருகாக கிடக்கின்றான், அவனுக்கு நாம் நல்லது செய்வோம்” என்றார். தாயாரும் தலையாட்டினார். இருவரும் மறைந்தார்கள்.

சற்று நேரத்தில் பணியாள் போல வேடமணிந்த அரங்கன் பொன்வட்டிலைக் கையில் ஏந்தி தேவதேவி இல்லக்கதவைத் தட்டினான். தாய் தாழ் திறந்தாள்.

அவனோ, “இவை விப்ரநாராயணனுக்காக கொடுக்கப்பட்டவை, அவர் கொடுக்கச் சொன்னார். இனி அவர் விரும்பியபடி மகிழ்ந்திருக்க தடையில்லை, வாசலில் அவர் காத்திருக்கின்றார்”

“இது பொன் தானா” என உரசிப் பார்த்தார் தேவதேவியின் தாய். சுத்தமான தங்கம் என்று தெரிந்த பிறகே விப்ரநாராயணரை உள்ளே அழைக்க விரும்பினார். பொருள்கண்டபின்னர் தாசிகள் விடுவதில்லை. அதனால் அவசரமாக அவரை உள்ளே அழைத்தார்கள், தன் தொழில் தர்மப்படி ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் தேவதேவி.

அவரோ அவள் உண்மையான அன்பில் அணைப்பதாக மகிழ்ந்திருந்தார். மறுபடி மறுபடி ஏமாறுவது என்பது பெண் மயக்கத்தில் இயல்பான ஒன்று. அவரும் ஏமாந்துகொண்டிருந்தார்.

மறுநாள் திருவரங்க ஆலய சந்நதியினுள்ளிருந்த பொன்வட்டில் காணாமல் போன செய்தி கசிந்து பதற்றமானது.

ஆலயத்திலே களவு என்பது அரசனையே அதிரச் செய்தது. அதன்படி விசாரணையும் தேடலும் பதற்றமுமாக நிலைமை மோசமானது.

அப்போது தேவதேவியின் தமக்கை நடந்ததையெல்லாம் அறிந்தாள். அவளே குழம்பிப் போனாள். திருவரங்க ஆலய பொன்வட்டில் தன் வீட்டுக்கு வந்தது எப்படி எனக் குழம்பினாள், அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

எனினும் பகவான் காரியத்தில் விளையாடக் கூடாது என்பதால் விஷயத்தைத் தன் ஆட்கள் மூலம் அரச அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திவிட்டு அமைதியானாள்.

பாய்ந்துவந்த வீரர்கள் கடும் சோதனையில் பொன் வட்டிலை கைப்பற்றினார்கள். ஆலயத்தின் பொருட்களை மட்டும் கைப்பற்றினார்கள், இதர நகைகளோ, நிதியோ அவர்களுக்கு அவசியமன்று.

தேவதேவிக்கு என்ன நடகின்றது என்பதை அறியவே நேரமானது.

அவளின் தாய் தன் சாகசத்தைத் தொடர்ந்தாள், “ஐயா, நாங்கள் தாசிகள், யார் பொருள் தந்தாலும் அதன் மூலம் பார்ப்பதில்லை, நேற்று இந்த விப்ரநாராயணன் பெயரைச் சொல்லித்தான் ஒருவன் இதனைத் தந்து சென்றான். அதனால் இவனைத்தான் நீங்கள் விசாரிக்கவேண்டும்” எனச் சொல்லி பொருளை ஒப்படைத்தாள்.

திருவரங்க ஆலய பொன்வட்டிலை களவாடினார் என மன்னர்முன் நிறுத்தப்பட்டார் விப்ரநாராயணர். காலமெல்லாம் எந்தத் திருவரங்க நாதனுக்கு மலர் கைங்கரியம் செய்தாரோ அந்த ஆலயத்திலே கொள்ளையிட்டார் என இப்போது குற்றச்சாட்டு.

மன்னனுக்கு அவரைப் பற்றி தெரியும், அமைச்சர்களுக்கும் தெரியும். ஆனால், குற்றச்சாட்டும், பொருள் மீட்கப்பட்ட வகையும், தேவதேவியின் தாய் சாட்சியமும் இங்குச் சிக்கலானது.

அதனால் அவரைச் சிறையில் அடைக்க வேண்டிய கட்டாயமாயிற்று. மன்னனுக்கு வேறுவழி தெரியவில்லை.

காரணம், அவர் மலர்க்கைங்கர்யம் செய்ததே கன்னம் வைக்கத்தான் எனும் குற்றச்சாட்டு வலுவானது. அதனை உடைக்க கால அவகாசமும் விசாரணையும் அவசியம்.

மன்னன் அமைச்சருடன் கலந்தாலோசித்தான். அவர் காலம் காலமாக ஆற்றிய கைங்கர்யம் பற்றியும், அந்தத் தேவதேவியும் நம்பக் கூடியவள் அன்று என்பதையும் அவருக்கு ஏதோ சோதனைகாலம் என்பதையும் அறிந்து அவரைச் சிறைவைத்து உரியநேரம் ஏதாவது செய்யப்பார்க்கலாம் என முடிவெடுத்தான்.

இது விப்ரநாராயணருக்குத் தெரியாது, அவரோ இனி தனக்குக் கசையடி தண்டனை, இன்னும் பல தண்டனை என அஞ்சிக் கிடந்தார். என்ன நடந்தது? ஏன் இப்படி ஆயிற்று எனப் புலம்பினார்.

அச்சிறையில் இருந்து விடுவிக்க தனக்கு யாருமில்லை என வாடினார். தேவதேவி வருவாள் என அப்போதும் நம்பினார், மாயையில் சிக்கிய மனம் அப்படித்தான் மயங்கிக் கிடக்கும்.

கடைசியில் தான் இனித் தப்பமுடியாது என்பதை உணர்ந்து பகவானை நோக்கி அழுது, “நீயுமா என்னைக் கைவிட்டீர்” எனக் கலங்கி அழுதார்.

எப்போது அவர் பகவானை நினைந்து அழுதாரோ அந்த நொடி அதிசயம் உண்டாயிற்று.

மன்னன் கனவில் சென்ற பகவான் “மன்னா, அந்த விப்ரநாராயணனுக்காக அந்த லீலையினை நாமே நடத்தினோம், அவன் கர்மவினைக் காரணமாக அப்படி நடந்தது.

அவனை விடுதலை செய்து, உரிய நிதியுடன் சகல வாழ்வுடன் அனுப்புவாயாக” எனக் கூறி மறைந்தார்.

மன்னன் தன் கனவை அவையில் சொன்னான், சாஸ்திரிகளும் பண்டிதர்களும் பகவான் முன்னிலையில் திருவிளக்கச் சீட்டு போட்டு பார்க்கலாம் என முடிவெடுத்தார்கள்.

அப்படிப் பார்க்கும் போது பகவானின் உத்தரவே மன்னன் கனவாக வந்ததும் உறுதிச் செய்யப்பட்டது.

கைதியாக தண்டனையினை எதிர்நோக்கி இருந்தவர் இழுத்துச் செல்லப்பட்டார், தன் தலைக்கு கத்தி என அஞ்சி நடுங்கிப் பகவானே எனக் கதறி சென்றவர்க்கு மன்னன் கௌரவம் அளித்து விடுதலை செய்தது பெரும் அதிர்ச்சி.

அப்படியே பெரும் பல்லக்கும் நிதியும் ஏற்பாடு செய்து, “நீர் போகவேண்டிய இடம் செல்க, இது பகவான் உத்தரவு” என அவன் சொன்னதும் ஆடிப்போனார் விப்ரநாராயணர்.

அதன் பின்பே நடந்ததெல்லாம் அவருக்குத் தெரியவந்தது.

அவர் குழம்பினார், நிரம்ப யோசித்தார். என்ன நடந்தது, என்ன நடந்தது என மாறி மாறி யோசித்தார்.

“நாம் பகவானுக்கு மலர் கைங்கர்யம் செய்துகொண்டிருந்தோம். இவள் இடையில் வந்தாள். அவளிடம் மயங்கினோம், கடைசியில் அவளோ தாசி தொழிலை காட்டினாள், பொருள் இல்லையென்றால் வெளியே போ என விரட்டினாள்.

நான் தெருவில் நின்றபோது பகவானே அவளுக்குப் பொருள் கொடுத்து என் சந்தோஷம் தொடர வழிசெய்திருக்கின்றார்.

பின், ஆபத்து வந்தபோதும் என்னை மீட்டு கைநிறைய பொருள் தந்து என்னை இங்கே நிறுத்தியிருக்கின்றார்.

இப்போதும் அவர் எனக்கு எந்த கட்டளையும் தரவில்லை, மிரட்டவில்லை, தண்டிக்கவில்லை, கைநிறைய பொருளோடு அவள் இல்லம் சென்று மகிழ்ந்திருக்க தடையேதுமில்லை.

அங்கே தங்க வட்டில் தவிர இதர சுகமும் பகவான் கொடுத்தார். இப்போது அரச நிதி வேறு.

இவ்வளவு தந்தும் அவள்தானே உன் விருப்பம் அவளோடு இன்புற்றிரு எனப் பகவான் அனுப்புகின்றார் என்றால் என்ன அவரின் அன்பு! என்ன அவரின் கருணை!!

ஆனால், அதற்காக செல்லமுடியுமா? முடியாது, எப்படிபட்டவள் அவள்?

அவளுக்கு அன்பு என்பதே இல்லை, கருணை இல்லை, பாசம் இல்லை, என்னை மோசம் செய்ய வந்து போலி அன்புக்காட்டி மயக்கி இப்போதும் செல்வத்துக்காக என்னை ஏற்றுக்கொள்வாள்.

ஆபத்துக்காலத்தில் உடன் இருப்பதல்லவா அன்பு, அப்படியானால் பகவானின் அருள்தானே நம்மைக் காத்தது.

இனி அவள் வீட்டிற்குச் செல்ல மனம் ஒப்புமா? அப்படிச் சென்றால் பகவான் முகத்தில் விழிக்கமுடியுமா?

நான் என்ன செய்தேன். அனுதினமும் நந்தவனத்தில் இருந்து மலர் பறித்து அனுப்பினேன், அதை நானே மறந்துவிட்டு இப்போது இவள் பின்னால் இப்படி மயங்கித் திரிகின்றேன்.

ஆனால், பகவான் என்னை மறக்காமல் நினைவில் வைத்து, தனக்குப் பணிவிடை செய்தவன் மகிழ்ந்திருக்க இவ்வளவுக்கு ஓடி ஒடி வந்து காக்கின்றார்.

இப்போதும் பகவான் எனக்குக் கட்டளையிடவில்லை அவளோடு மகிழ்ந்திருக்கவே என்னை அனுப்புகின்றார். ஆனால், நான் இனி செல்லமாட்டேன்.

இனி பகவான் தொண்டு ஒன்றையே செய்து வாழ்வேன் நான் புல்லுக்கும் தூசுக்கும் சமம். நான் அடியார் எனச் சொல்லக் கூட தகுதியில்லாதவன், நான் அவ்வளவு மோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றேன்.

பகவான் எனக்குச் செய்த கருணைக்கு நான் இனி பணியாளனாகத் தொண்டு செய்வேன், பெரும் பாவியான நான் இனி தொண்டர்களின் அடியானாக பணி செய்வேன்” எனத் திருவரங்கம் நோக்கி ஓடினார்.

கையில் இருந்த பொருளையெல்லாம் கண்ணில்பட்ட அடியார்களுக்குக் கொடுத்தபடி ஓடினார், ஓடியவர் அரங்கன் சந்நதியில் அப்படியே வீழ்ந்தார்.

மனமுருக நன்றி சொன்னவர் வெளியே வந்தார், அங்கிருக்கும் அடியார்களின் கால் பாத தூசியினை எடுத்து தன் தலைமேல் போட்டுக்கொண்டார்.

இனி நான் “தொண்டரடிப்பொடியான்” , “தொண்டர்களின் அடிபொடி” நான் எனச் சொல்லிக்கொண்டார்.

அங்கிருந்துதான் “தொண்டரடிப்பொடியாழ்வார் ” உருவானார்.

அங்கிருந்து பாடத்தொடங்கினார், திருப்பள்ளியெழுச்சி பாடினார். அந்தப் பாடல்களை அடுத்துப் பார்க்கலாம்.

நந்தவனம் அமைத்து தனக்கு மலர்க்கைங்கர்யம் செய்த பக்தன் திசைமாறி சென்றபொது அவனுக்கு நண்பனாய் நின்று அவன் இன்புற்றிருக்க பெரும் துணையாய் வந்து, என் பக்தனே இதுதானே இன்பம் எனக் கருதினாய், இன்பமாய் இரு எனத் தானே உதவியபோது கதறியபடி பகவானே உன் பாதமே வேண்டும் என ஒடிப்பற்றிக்கொண்ட அந்த ஆழ்வார் பாடியதுதான் திருப்பள்ளி எழுச்சி.

தன் மனதின் மாயை நீக்கி உண்மையினை மெய்பொருளை எழுப்பிய பகவானுக்கு அவர் திருப்பள்ளி எழுச்சி பாடினார், அந்தப் பாடல்கள் அவ்வளவு உருக்கமானவை. அதனை அடுத்துப் பார்க்கலாம்.

மலர்கள் அதிகாலை பூத்து மனம்வீசி நிற்பவை; அந்த மணம் நல்ல உற்சாகமும் தனிப்பெரும் சக்தியும் கொடுப்பவை.

அப்படி மலர்களை அதிகாலை பகவானுக்கு தூவி, மாலை சாற்றி வழிபட்ட விப்ரநாராயணர் பின் தொண்டரடிப்பொடியாழ்வார் என்றான பின் அதே பகவானை காலை திருப்பள்ளி எழுச்சி பாட முனைந்தார்.

அதிகாலையிலே முதல் குரல் பகவானுக்கு தன்னுடையதாக இருத்தல் வேண்டும் என அவர் பாடினார், அற்புதமான அந்த திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் அவராலே கொடுக்கப்பட்டன‌.

லௌகீகமாக திருப்பள்ளி எழுச்சி என்பது ஒருவன் அதிகாலையிலே எழுந்து தயாராகி இறைவனை வழிபடும் அவசியத்தை சொல்வது; ஆன்மீகமாக அது மனதில் இருக்கும் தெய்வத்தை உணரச்செய்வது; ஆத்மாவில் இருந்து இறைவனை மனதில் எழச்செய்யும் பாடல்.

இராமாயணத்தில் ஒரு கதை உண்டு.

ஸ்ரீ ராமபிரானை யாகத்தை காக்கும் பொருட்டு விசுவாமித்திர மகரிஷி அழைத்துச் சென்ற காலத்தில், அந்த ஸ்ரீராமர் நித்திரை செய்யும் அழகைக் கண்டு அனுபவித்து, “கௌசல்யா சுப்ரஜா ராமா” எனத் துயிலெழுப்பிய காட்சி போல் தானும் பாட விழைகின்றார்.

அதன் பெயரே பொருத்தமான தலைப்பாக மாறிவிடுகின்றது திருப்பள்ளி எழுச்சி.
இந்த திருப்பள்ளி எழுச்சியின் பெருமை கொஞ்சமல்ல‌.

“தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்த மீடே”

ஸ்ரீவைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசு தேவனாகிய (வாஸூதேவன் என்றால் பெருமாள். பரவாஸுதேவன் என்றால் இந்த உலகிற்கெல்லாம் அப்பாற்பட்ட, ஈரேழு உலகங்களையும் காப்பவன், ஆண்டு வருபவன், அதிபதி என்று பொருள் கொள்ள வேண்டும்) எம்பெருமானே ராஜாதி ராஜனாக காவேரிக் கரையில் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளான் என்பதை முழுமையாக உணர்ந்து அவனை துயில் எழுப்பும் பாசுர மாலையை அருளிச்செய்த தொண்டரடிப் பொடியாழ்வாரை போற்றி வணங்குகிறேன்.

ஒரு அரசனைப் போல் பூஜிக்கத் தகுந்தவரும், ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளுமான பரவாஸுதேவனான பெருமாளை, திருப்பள்ளியெழுச்சி (திவ்யபிரபந்தம்) பாடி எழுப்பிய பரமபக்தரான இந்த பக்தாங்க்ரிரேணு (பக்தாங்க்ரிரேணு என்பது தொண்டரடிப் பொடியாழ்வாரை குறிக்கும்) ஆழ்வாரை நான் துதிக்கிறேன் என திருமலையாண்டான்
இந்தத் தனியனில் கூறியுள்ளார்.

“காவேரி விரஜா சேயம், வைகுண்டம் ரங்க மந்திரம், சவாசுதேவோ ரங்கேச, பிரத்யஷம் பரமம் பதம்” என்பது ஸ்லோகம்.

வைஷ்ணவர்கள் இல்லங்களில் இந்த ஸ்லோகம் தினம் காலையில் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

“பொங்கோதம் சூழ்ந்த புவனியும், விண்ணுலகும் அங்காகும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்க செல்வனார் ” என்று நாச்சியார் திருமொழியில் சொல்கின்றாள் ஆண்டாள்.

இந்த திருபள்ளி எழுச்சியின் பாடல்களை காணலாம்,

“கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே “

எம்பெருமானே, அரங்கத்து அண்ணலே, கதிரவன் கீழ்த் திசையின் உச்சியிலே வந்து சேர்ந்தான். அதனால் மிகுந்த இருள் மெல்ல அகல்கின்றது, விடிகாலை நேரம் மலர்கள் மலர்கின்றன. தேன் அவற்றிலிருந்து ஒழுகுகின்றது.

வானவர் அரசர்கள் எல்லாரும் வந்து தங்களை வணங்க நெருங்கினர். இவர்களுடன் ஆண் யானைகளும், பெண் யானைகளும் வந்து ஒலி எழுப்புகின்றன. முரசும் முழங்குகிறது; இது கடலோசை போல் கேட்கிறது ஐயனே!! அனைவரையும் காக்க பள்ளி எழுந்தருள வேண்டும்.

அடுத்தப் பாடல்,

“சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிறுள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடல் இடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”

எம்பெருமானே, பார்க்கும் திசையெல்லாம் சூரிய ஒளி படர்கின்றது, விண்மீன்கள் ஒளி, நிலவின் ஒளி ஆகியவை குறைகின்றது. தோட்டங்களில் உள்ள பாக்கு மரங்கள் இலைகள் விரிந்து அதன் நறுமணத்துடன் காற்று மெதுவாக வீசுகிறது.

ஒளிவீசும் சக்கரத்தை ஏந்தும் வலிமையான கைகள் உடைய அரங்கநாதா, துயில் எழுவாய்.

இன்னும் அழகாகப் பாடுகின்றார்,

“அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெரு மானுன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”

அதாவது காலையிலே கோவிலின் முன் வேறு யார் யார் வந்து நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிறார்கள் என்று பட்டியலிடுகிறார். வானில் உள்ள தேவர்கள், சனகாதி முனிவர்கள், சப்தரிஷிகள், இந்திரன், அவரது ஐராவத யானை, யட்சர்கள் ஆகிய பலர். வானம், பூமி ஆகியவற்றின் இடமில்லாமல் இவர்கள் யாவரும் வந்து குழுமி உள்ளனர். ஆகவே பள்ளி எழுந்து கொள்வாய்.

அடுத்துப் பாடுகின்றார்,

“ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளியே
யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”

எம்பெருமானே எழுந்து பாராய் யார் யார் வந்து நிற்கின்றனர்? கின்னரர், கருடன், கந்தர்வர்கள் ஆகியோர் பறை, ஒற்றைத் தந்தி வாத்தியம், மத்தளம், வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றின் உதவியுடன் இசை முழக்கம் இடுகின்றனர்.
ரிஷிகளும், தேவர்களும், சாரணர், யக்‌ஷர்கள், சித்தர் ஆகியோர் உன்னை வணங்க வந்துள்ளனர். அவர்களுக்கு நாளொலக்கம் (சிம்மாசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அருள்பாலித்து விசாரிப்பது) அருளுவாயாக. ஆகவே அரங்கா, பள்ளி எழுந்தருள்வாய்.

“கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகிலுடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப் பொடி என்னும்
அடியனை அளியன் என்றருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே”

பகவானே, காவிரியால் சூழப்பட்ட திருவரங்கனே, தாமரைகள் மலர்கின்றன‌. சூரியன் உதிக்கின்றான். துடி (உடுக்கு போன்ற) இடை கொண்ட பெண்கள் காவிரியில் குளித்து நனைந்த முடியைப் பிழிந்து உதறிவிட்டு தன் ஆடைகளை அணிகின்றனர். நன்கு தொடுக்கப்பட்ட துளசி மாலையையும் பூக்களையும் தோளில் சுமந்த தொண்டரடிப்பொடி என்ற என்னை அடியார்க்கு அடியார் ஆக்கவேண்டும், எம் அரங்கனே பள்ளி எழுவாய்.

திருப்பள்ளி எழுச்சிபாடும் தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலுக்கு “திரு மாலை” எனும் பாமாலையினை பாசுரமாக சாற்றி பாடுகின்றார்.

அது எவ்வளவு அழகானது என்றால் ” திருமாலை அறியாதார் திருமாலையே அறியார் ” என்று சொல்லும்படி, அதாவது தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை என்ற பாசுரங்கள் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் அந்த எம்பெருமானைப் பற்றியே அறியாதவர்கள் என்று சொல்லும்படி உருக்கமானது.

“மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை எப்பொழுதும் பேசு”

என் நெஞ்சமே, ஏழு பதில்களை உடைய திருவரங்கத்தில் எழுந்தருளி இருப்பவனும்; பசுக்கூட்டங்களை மேய்த்தவனுமான எம்பெருமானுடைய இருதிருவடிகளிலும் ஊன்றிய பக்தியை உடையவரும்; திருமாலை என்ற இந்த பிரபந்தத்தை பாடுபவரும்; கலியாண குணங்கள் பொருந்தியவரும்; தொண்டரடிப் பொடி என்று அழைக்கப்படுபவருமான எங்களுடைய சுவாமியை எப்பொழுதும் சிந்திப்பாயாக, அதை தவிர வேறு எது வேண்டும்?

வேதங்கள் உரைப்பதெல்லாம் ஒருவன் தன் கர்ம பலன்களாகிய பாவ புண்ணியத்தை துறந்து பகவானை அடைந்து நித்தியகாலமும் அங்கு நித்யஸூரிகளைப் போல் நிற்கவேண்டும் என்பதே, மானுட பிறப்பின் தத்துவம் அது, அந்த தத்துவத்தை போதிக்கின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

அதையே திருமாலை என்ற இந்த திவ்யப்ரபந்தத்திற்கு மூலப்பொருள் ஆக்கினார்.

“காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப் புடைமை கண்டாய்
அரங்கமா நகரு ளானே”

பகவானின் திருநாமம் எம பயத்தை போக்கிவிடும் என்பதை மிக அழகாக‌ திருநாமம் கற்றதனால் எமன் தலை மீது சந்தோஷமாக சப்தம் போட்டு நடப்போம் என்று இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார். இந்த பாசுரம் திருநாமத்தின் புனிதத்தன்மையையும் நமக்கு விளக்குகிறது.

எல்லா உலகங்களையும் பிரளய காலத்திலே திருவயிற்றிலே வைத்து பாதுகாத்து பின்னர் வெளிப்படுத்திய உலகிற்கு காரணம் பூதனே, உன்னுடைய திருநாமத்தை கற்றதனால் உண்டான கர்வத்தினாலே ஐம்புலன்களையும் காவல் இல்லாமல் கண்டபடி திரிய விட்டு, அப்படி இருந்தும் பல பாவங்களையும் வாசனையுடன் உதறித் தள்ளி வெற்றி கூச்சலிட்டு எமன் அவனுடைய தூதர்கள் ஆகிய இவர்களின் தலைகளின் மேலே அடியிட்டு திரிகின்றோம் அறிவாயாக.

இன்னொரு பாடல் உண்டு.

“பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்,அரங்க மா நகருளானே”

முதல் பாசுரத்தில் திருநாம வைபவம், எம பயத்தை போக்கிவிடும் என்று சொன்ன ஆழ்வார் இந்த இரண்டாவது பாசுரத்தில் பெருமாளின் வடிவழகினை ரசித்துப் பாடுகிறார், ஏனென்றால், பயம் சென்ற பின் தான் எதையுமே ரசிக்க முடியும் என்பது உலக வழக்கு.

இப்பாடலில் ஆழ்வார் பரமபதத்தையே மறுப்பது போல் உள்ள இந்த பாசுரத்திற்கு முன்னால், பரமபதத்தை மறுத்தவர்களில் சிலர் உள்ளனர். அவர்களில் முதலாவதாக உள்ளவர், திருவடி என்று மிகுந்த பக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன்.

இராமாயணத்தில், அனுமன், “பாவோ நாந்யத்ர கச்சதி “ இராமனை விட்டு எனது நினைவானது வைகுந்தநாதனிடம் கூட செல்வதில்லை என்றார். இவர் வைகுந்தம் செல்லாமல், இந்த உலகத்திலேயே எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டு இருக்கிறார், அதைத்தான் இந்த ஸ்லோகம் சொல்கின்றது.

“யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம், மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்”

எங்கெல்லாம் ராம நாமம் அங்கெல்லாம் நான் இருப்பேன் என்கிறான் அனுமன். அதுவே தனக்கு இன்பத்தை தரும் என்றும், பரமபதம் தனக்கு வேண்டாம், ராமநாமம் இந்த பூமியில் போதும் என்பது அனுமனின் வேண்டுதல்.

அதாவது வைகுண்டத்தில் பகவானோடு இருப்பதைக் காட்டிலும் அனுமனுக்கு இங்கே அவன் நாமத்தை சொல்லித் திரிவது ஆனந்தமானது, அப்படியே வைகுண்டம் செல்லும் அளவு தான் புண்ணிவான் அல்ல என தன்னை தானே தாழ்த்தும் அந்த மனோபாவமும் உயர்ந்தது.

அந்த சாயலில்தான் பாடுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

“வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே”

வேதங்கள் எல்லோரும் பொதுவாக நூறு ஆண்டுகள் வாழ்வார்கள் என்றும், அதில் மனிதர்கள் எவராவது நூறு ஆண்டுகள் வாழ்ந்தால், அதில் பாதியாகிய ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலும், மீதி ஐம்பது ஆண்டுகளை குழந்தை, சிறுவயது மற்றும் இளமை அல்லது வாலிப வயது போன்ற பருவங்களைக் கடந்து வந்தாலும், நோய், பசி, முதுமை போன்ற கொடுமைகளுக்கு தள்ளப்பட்டு விடுவதாலும், திருநாமங்களை சொல்லி அனுபவிப்பதற்கு நேரம் இல்லாமல் மொத்த காலத்தையும் இழந்துவிடுவதால், தனக்கு இந்த பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் ஆழ்வார் முறையிடும் பாசுரம் இது.

இதற்கு முந்தைய பாசுரத்தில் ஸ்ரீவைகுந்தம் வேண்டாம் என்றவர், பூலோக வைகுந்தம் எனப்படும் திருஅரங்கம் தவிர வேறு எந்த இடமும் இவ்வுலகத்தில் வேண்டாம் என்று இந்த பாடலில் சொல்கிறார்.

ஆழ்வாரைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் உள்ள துன்பங்களை சொல்லி பெருமானிடம் முறையிடுவதைவிட, திருநாமங்களை சொல்லும் காலம் குறைந்துவிட்டதே என்று உருகுகின்றதை தன்னுடைய அனுபவமாக சொல்லும் பாசுரம் இது.

இன்னும் பாடுகின்றார்,

“நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே”

இப்பாசுரத்தில் ஆழ்வார் தான் அரங்கனை அவன் திருநாமங்களை நினையாத, தங்கள் நாவில் நவிலாத மக்களையும், அவர்களது அறியாமையினையும் அதனால் அவர்கள் படும் துன்பங்களையும் எண்ணி, அந்த பகவான் எப்படிப்பட்ட கருணைக்கடல், பிறப்பறுக்கும் மாயப் பிரான்.

அந்த அழகன், அமுதன், அரங்கன் என்று இவன் நாமங்களை எண்ணி அடையும் நன்மைகளை இழந்து
மாந்தர் வீணே பிறவியை பலனின்றி போகச் செய்துஅழியும் விஷயங்களில் ஈடுபட்டு தானும் அழிவதை எண்ணி கவலை படுகிறேன் என்று சிந்திக்கின்றார்.

இதற்கு முத்கலன் கதையினை நினைவு கூறுகின்றார், முத்கலன் எனும் ஒரு மகாபாவி அக்காலத்தில் இருந்தான் அவனும் தன் அந்திம காலத்தில் பகவானை அவரின் திவ்ய நாமம் சொல்லி அந்த புண்ணிய பலனாக சுவர்க்கம் பேறு பெற்று அங்கே செல்லுமுன் சில காரியங்களுக்காக முன்செய்த வினைக்காக நரகம் சென்றான்.

நரகத்தில் எமனே பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றான், அது கண்டு ஆச்சரியமாக கேட்டான் முக்தலன், தர்மராஜனே!! எனக்கா தாங்களே பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு தருகிறீர்கள்?! நானோ ஒரு மகாபாவி தண்டனை தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!! ஆனால் இது எனக்கு அதிசயமாக இருக்கிறது?

எமன் சொன்னான், பகவான் நாமத்திடம் நீர் சரணடைந்ததால் நரக தண்டனை நீங்கி வைகுண்டம் செல்கின்றீர் நாம் உம்மை அனுப்பி வைக்கின்றோம் என்றான்.

ஆம். பகவான் நாமத்தின் பெரும் பாக்கியத்தை சக்தியினை சொல்லும் காட்சி அது, அதைத்தான் பாடுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

‘வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதுஅணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நா(ய்)க்கு இடுமின்நீரே”

வண்டினங்கள் ஏகப்பட்ட தேனை உண்ட மயக்கத்தால் ரீங்காரமிட்டும் , மயில்கள் நர்த்தனமாடியபடியும் , மேகக்கூட்டங்கள் சூழ்ந்து கவிழ்ந்தும் நின்றிட, குயிலினங்கள் கூவியப்படி உள்ளதுமான சோலை, பல அண்டங்களுக்கும் (உலகங்களுக்கும்) வைகுண்ட வாசம் புரிபவர்களுக்கும் அரசனான திருமால் விரும்பி அமர்ந்திட்ட சோலை, ஆபரணமாக விளங்கும் திருவரங்கம் என்று சொல்லாத அறிவிலிகள்(நன்றி மறந்தவர்கள்) , பாய்ந்து சோற்றை மட்டும் உண்பவர்களை தவிர்த்து , நீங்கள் நா(ய்)க்கு சோற்றை இடுகின்றீர்கள் என்கின்றார்.

அதாவது திருவரங்கத்தில் இருக்கும் நாதனை பணிந்து வைகுண்டம் செல்ல வேண்டிய வாழ்வில் அவனை பற்றாமல் ஏதேதோ செய்து பிறவியினை வீணடிக்கின்றீர்கள் என்பதை இதைவிட அழகாக சொல்லமுடியாது.

“குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு,
உடல்எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே”

கடல் போல கரிய நிறம் கொண்ட ரங்கநாதனின் அழகை எப்படி சொல்லுவேன்? மேற்கில் தலையும், கிழக்கில் திருவடியும் நீட்டியபடி, வடக்கில் முதுகை காட்டி துயில்கிறான். தெற்கிலுள்ள இலங்கையைப் பார்த்தபடி இருக்கும் அவனது அழகு உருவம் கண்டு உள்ளமும், உடலும் உருகி விட்டது. செய்வதறியாமல் திகைத்து நிற்கிறேன்.

மானுடரே நீங்களும் அப்படி அவனை வந்து சரணடையுங்கள் என்பது பாடலின் பொருள்.

(குடதிசை என்றால் மேற்கு திசை காவிரித்தாய் காவேரி அங்குதான் தொடங்கும்.)

திருவரங்கத்தில் அண்ணல் எழுந்தருளும் போது இருபுறமும் அரங்கனுக்கு மாலையிட்டது போல இயற்கையிலே அமைந்து எம்பிராட்டியின் அரவணைப்பில் அரவு அணையில் துயில் கொண்டிருக்கும் அரங்கன் மேற்கில் குடதிசையில் தனது திருமுடியை வைத்து..

குணதிசை எனும் கிழக்கு திக்கில் பாதம் நீட்டி தன் திருவடி சம்மந்தத்தை தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு அருளியுள்ளார்.

ஆழ்வார் பிறந்த ஊர் திருமண்டங்குடி கிழக்கு திசையில் உள்ளது. தனது திருவடி அருளை மகிமையை ஆழ்வாருக்கு அருளி, தென் திசை நோக்கி விபீஷ்ணனுக்கு அருள்வது போல தனக்கும் உங்களுக்கும் அருள்வார் என்பது பாடலின் பொருள்.

“கங்கையிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள் மாலிறை வனீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே”

காவேரி முன்பு பிரம்மனிடம் கடும் தவம் புரிந்து கங்கையுடன் சமம் என்ற நிலையை அடைந்தது, பின் ஸ்ரீரங்கவிமானம் திருவரங்கத்தில் நிறுவப்பட்ட பின் அவள் கங்கையை விட உயர்ந்தவள் என்ற பெருமையை அடைந்ததாள்.

இதனை ஒரு பாடல் சொல்கின்றது.

“கரை புரண்டு ஓடும் காவிரி ஆறே
ஆற்றிடை கிடப்பதோர் ஐந்தலை அரவே
அவ்வரவம் சுமப்பதோ அஞ்ஜன மலையே
அம்மலை பூத்ததோர் அரவிந்த வனமே.
அரவிந்த மலர் தரும் அதிசயம் உளதே”

எனும் பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய இந்தப் பாடல் பிரசித்தி. அதை தனக்கே உரிய பாணியில் பாடுகின்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

“ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே”

இங்கே மூன்று வகைகளில் சம்பந்தம் இல்லாத தன் வருந்தத்தக்க நிலையை முன் வைக்கிறார்.

முதலலாவது, தனக்கு திவ்விய தேசம் ஒன்றில் பிறந்து பரமனுக்குச் சேவை செய்யவும் வாய்க்கவில்லை என்கிறார். இரண்டாவது, (காணியில்லை) தனக்கான காணி நிலம் வாய்க்கப் பெற்றிருந்தால், அதைப் பார்க்கச் சென்று வரும் காலத்தில், இடையில் ஏதாவது திவ்ய தேசப் பெருமாளைக் கண்டு தரிசிக்க தனக்கு வாய்த்திருக்கும், அதுவும் இல்லை.

மூன்றாவது, (உறவு மற்றொருவர் இல்லை) திவ்ய தேசங்களில் வாசம் செய்யும் உறவினர்கள், நண்பர்கள் இருந்திருந்தால், அவ்வடியவருடன் சேர்ந்து ஒரு திவ்ய தேசப் பெருமாளுக்குத் தொண்டு செய்யும் பேறு தனக்குக் கிட்டியிருக்கும், ஆனால் அதற்கும் கொடுத்து வைக்கவில்லை என்று ஆழ்வார் சொல்லி, பரமனின் திருவடிகளை பற்ற முடியாத தன் கையறு நிலையை அந்தப் பரந்தாமனிடமே எடுத்துரைக்கிறார் ஆழ்வார்.

இப்படி தனக்கு எதுவும் அங்கே இல்லை என்றாலும் பரமபக்தியுடன் திருமாலிடத்தில் திளைக்கும் தன்மை அவரிடம் இருக்கிறது . இரண்டாவது, அவனை விடுத்து, வேறு ஆதரவோ, ஆதாரமோ தனக்கு இல்லவே இல்லை என்கின்றார்.

அடுத்தப்பாடல் இதோ,

“பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர்! கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போலும் மதிள் திருவரங்கத்தானே”

அதாவது மதில் திருவரங்கத்தானே, பிரம்மன் முதல் தங்கள் அளவும் நீண்டு வருகிற வம்ச பரம்பரையில் ஒரு குற்றமும் இல்லாதவர்களாய் நான்கு வேதங்களையும் ஓதுகின்றவர்களே நமக்கு அடிமைப்பட்டவர்கள் என்று இருக்கும் பாகவதர்கள் கீழான குலத்தில் பிறந்தவர்களே ஆனாலும் நீங்கள் அவர்களை தொழுங்கள் உங்களிடம் உள்ள சிறந்த பொருள்களை அவர்களுக்கு உபதேசியுங்கள்.

அவர்களிடம் இருந்த சிறந்த பொருள் உண்டானால் கேட்டு தெளியுங்கள் என்று அருளிச்செய்து உனக்கு சமமாக அவர்களை ஆராதிக்கும் படியாக அறிவிச் செய்தாய் அன்றோ எனப் பொருள்.

இனி அடுத்தப் பாடல்

“அமரவோர் அங்கம் ஆரும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே”

அதாவது அரங்கம நகருளானே! ஒப்பற்ற ஆறு வேத அங்கங்களையும் நிகரற்ற நான்கு வேதங்களையும் நெஞ்சில் பதியும்படி ஓதி உன் அடியார்களின் முதல்வராய் பிராமண சாதியை சார்ந்தவர்கள் ஆயினும் தேவரையினுடைய அடியார்களை அவர்களுடைய பிறப்பு நோக்கி பழித்தால் அந்த நொடியிலேயே அந்த பிராமணர்கள் அப்பொழுதே சண்டாளர்களாவர் எனப் பொருள்.

தொண்டரடிப்பொடியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் உருக்கமானப் பாடல்களை பாடியவர், இன்றும் எல்லா பெருமாள் கோவில்களிலும் பாடப்படும் திருப்பள்ளி எழுச்சி அவருடையது.

தனக்கு மலர்சூட்டி அழகுபார்த்த பக்தனை காலமெல்லாம் தனக்கு திருப்பள்ளி எழுச்சி பாடும் பக்தனாக அந்தப் பெருமாள் தன் திருவிளையாடலை நடத்தி உயர்த்திய பெரும் வரலாறு அவருடையது.

திருவரங்கம் செல்லும் போது அவரை நினைந்து மலர்சாற்றி அவர் பாசுரம் பாடி வழிபடுங்கள். பலனெல்லாம் வந்து சேரும்.

அதிகாலையில் அவரின் திருப்பள்ளி எழுச்சி பாடி பகவானை வணங்கினால் போதும் அவரை முன்னிட்டு எல்லா பலன்களும் வந்து சேரும்.

தேவதேவியும் நற்கதி பெறவேண்டி அரங்கன் கோயிலில் பணிசெய்து நற்கதி அடைந்தது போல, நீங்களும் உங்களால் இயன்ற பணிகள் செய்து அரங்கன் அருள் பெற்றுக் கொள்ளுங்கள்.

“மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே.
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே.
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே.
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே.
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே.
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே.
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே.
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே”

தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.