பன்னிரு ஆழ்வார்கள் : 11 திருப்பாண் ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் : 11 திருப்பாண் ஆழ்வார்.

இந்துமதம் ஒரு காலமும் சாதி ரீதியான இழிவுகளைச் செய்தது அன்று. அப்படிச் சிலர் சொன்னால் அது அறியாமை. இந்துமதமோ அதன் போதனையோ சாதியினை ஒரு காலமும் வலியுறுத்தியதில்லை.

தொழில்கள் அடிப்படையில் சில நோய்பரப்பும் விஷயங்கள், சில மனரீதியான விஷயங்களுக்காக அவர்களை தள்ளி இருக்க சொன்னதே தவிர, ஒரு காலமும் அது சாதி எனும் அடையாளத்தை வலியுறுத்தியதில்லை.

எல்லா ஆத்மாவும் ஒன்றே என்பதும், எல்லாமே இறைவடிவம் ஒன்றே என்பதும் இந்துமத போதனை. அதனை இந்துக்களில் சிலர் மறந்து சாதி ரீதியாக சக ஆத்மாவினை இழிவுப்படுத்தினால் அந்த பரம்பொருளே வந்து அவர்களுக்கு பாடம் சொல்லும்.

இந்தக் காட்சி இந்து புராணம், வரலாறு என எல்லா இடமும் விரிந்து பரந்து கிடக்கின்றது.

வியாசரின் தாய் மீனவப்பெண்மணி என்பதில் தொடங்கி நாயன்மார்களில் பல காட்சிகள் குறிப்பாக நந்தனார் வரலாறு என அது நீண்டு செல்கின்றது.

சாதி என்பது ஒரு அடையாளம் அல்லl, அது தொழில் ரீதியான விஷயம். அதை தாண்டி எந்த சாதி எக்குலம் என்றாலும் பகவான் மேல் கொண்ட அன்பே பிரதானம், அப்படியான பக்தி கொண்ட பக்தர்களை தெய்வமே வந்து அவன் பக்திக்கு சாட்சி சொல்லி ஏற்றுக்கொள்ளும்.

இங்கே சாதி என்பதெல்லாம் இல்லவே இல்லை, உண்மையான பக்திக்கு பகவான் சாட்சி சொல்லி சேர்த்துகொள்வார் என்பது இந்துமதத்தில் அடிக்கடி காணப்படும் காட்சி.

அப்படியான வாழ்வினை சொல்வதுதான் திருப்பாணாழ்வார் வரலாறு, மிக உருக்கமான வரலாறு.

கலியுகம் 343 வதான துன்மதி வருடத்தில் கிருஷ்ணபட்சம் துவிதியையில் ஒரு புதன் கிழமையில் கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார் அந்த ஆழ்வார்.

காவேரி கரை உறையூரில் அவர் அவதரித்தார்.

ஸ்ரீவத்சம் எனும் பகவானின் மருவின் சாயலில் அவர் பிறந்தார் என்கின்றது புராணம்.

இவர் பாணர்கள் மரபில் உதித்தவர் என்றொரு கருத்தும், இவர் அயோநிஜர் எனும் மானுட பிறப்பல்லாமல் அவதாரமாய் நெல்வயல் ஒன்றில் உதித்துக் கிடந்தார், அவரை ஒரு பாணன் எடுத்து வளர்த்தான் என்பதுமாக இரு கருத்து உண்டு.

எது எப்படியாயினும் அவர் பாணர் குலம், அதுதான் அவர் வாழ்வும் அடையாளமுமாயிற்று.

பாணர்கள் என்றால் பண் இசைத்து வாழ்பவர்கள் , இங்கு அந்நாளைய வழக்கம் ஒன்றை வாழ்க்கைமுறை ஒன்றை அறிந்து கொள்ளல் நலம்.

அன்றைய கலைஞர்கள் கூத்தர், பாணர், பொருநர், விறலி எனப் பல வகைகளில் அழைக்கப்பட்டனர்.

கூத்தன் என்றால் கூத்து எனப்படும் ஆடிப்பாடும் கலைஞர்கள்; பாணர் என்றால் பண் இசைத்து பாடும் கலைஞர்கள்; பொருநர் என்றால் களங்களில் பாடுவோர் எனப் பொருள். அவர்களில் ஏர்களப் பாடுவோர்; போர்களம் பாடுவோர்; பரணி பாடுவோர் எனப் பல வகை இருந்தது.

எல்லா வகை உணர்வுகளை விறல் பட அதாவது உடலில் வெளிப்படுத்தி ஆடுபவர் விறலி என அழைக்கப்பட்டார்கள்.

ஆம். அன்றைய தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் செய்து நாடோடிகள் போன்று பல ஊர்களுக்குச் சென்று இவர்கள் தம் கலைகளால் மக்களை மகிழ்விப்பர்.

இக்கலைகளில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர்.

அந்நாளில் இந்தக் கூத்தாடிகள், பாடிப்பிழைப்பவர்கள் எல்லோருமே சொத்துக்கள் இல்லாதவர்கள், நில புலனோ இதர வருமானமோ இல்லாதவர்கள். அவர்களின் ஒரே வருமானமாக யாசகம் மட்டுமே இருந்தது. அதை தங்கள் கலை மூலம் பெற்று, ஊர் ஊராகச் சென்று யாரையாவது புகழ்ந்து பாடி வயிறு வளர்ப்பதே அவர்கள் தொழிலாக இருந்தது.

இதில் பாணர் எனும் அந்தப் பண் இசைத்து பாடும் சமூகம், அவர்கள் மூவகை வாத்தியம் வைத்திருந்தார்கள். தந்தி கருவிகள், ஊதி இசைக்கும் கருவிகள், தோலால் ஆன வாத்தியங்கள் என மூன்றுவகை இருந்தன.

இவர்கள் மக்களை மகிழ்விப்பவர்கள், மக்கள் ஒய்வுக்காலத்தில் ஆடிப்பாடி மகிழ்வித்து யாசகம் பெற்று வாழ்பவர்கள், அரசன் முதல் சாமானியன் வரை அவர்களை புகழ்ந்துபாடி அவர்கள் கொடுக்கும் யாசகத்தில் வாழ்பவர்கள்.

அக்காலத்தில் ஆலயங்களுக்குள் பாணர்கள் அனுமதிக்கபடா காலம் இருந்தது.

அதாவது நாடு நாடாய் சுற்றுபவர்கள், கண்ட இடத்திலும் தங்குபவர்கள், மது கள் என எல்லாம் உண்பவர்கள், எல்லா வகை மாமிசமும் உண்பவர்கள், காசுக்காக பாடுபவர்கள் என்றெல்லாம் அவர்களுக்கு பிம்பம் இருந்தது.

கோவிலில் பாட மிகுந்த பக்தியான சில பாடகர்களும், பட்டர்களும், தேவனுக்கு அடியார்கள் என்ற தனி கூட்டமும் இருந்தது. அவர்கள் ஆலயத்திலே தங்கி பகவானை மட்டும் பாடி ஆடுவார்கள்.

இதனால் பெரும்பாணர், சிறுபாணர் எனப்படும் அந்த குழுவினர் ஆலயங்களுக்குள் செல்ல அனுமதியில்லை, அதை அவர்களும் ஏற்றும் கொண்டனர்.

நோய் பரவல் முதல் பல விஷயங்களுக்கு அந்தத் தடை இருந்தது.
Hi
இதனால் கோவிலுக்குள் செல்லாமல் வாசலிலே நின்று யாழ் இசைத்து பாடிப் பாடி யாசக பொருள் பெற்று நகர்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

கோவில் உள்ளே எப்படி இருக்கும் எனத் தெரியாது, மூலவர் தெரியாது, தீபமோ சிற்பமோ இல்லை எதுவுமே அவர்களுக்குத் தெரியாது.

இப்படிப்பட்ட பாணர் மரபில் வந்த அவரின் இயற்பெயர் அறிவாரில்லை, பாணர் என்பதே அடையாளமாயிற்று.

இந்தப் பாணருக்கு தாமரை சூரியன் மேல் தானே விருப்பம் கொண்டு சூரிய பந்தத்தில் வாழ்வது போல பகவான் மேல் பக்தி தானாய் வந்தது.

ஆனால், அவரால் கோவிலுக்குள் செல்லமுடியாது; பகவானை காணமுடியாது; கோவிலோ சிலையோ மூலவரோ எப்படி இருப்பார்கள் என்பது கூட தெரியாது.

எந்த கோவிலுக்குள்ளும் அவர் நுழையமுடியாது என்றாலும் மனமெல்லாம் பக்தியும் பகவான் மேல் அன்பும் பெருகிக்கொண்டே இருந்தது.

ஒருநாளாவது பகவானை பார்த்துவிடமாட்டோமா எனும் ஏக்கம் பெருகிக்கொண்டே இருந்தது. அது வாய்ப்பில்லை என தெரிந்தும் பகவானை தரிசிப்போம் என மனமார நம்பினார்.

தானும் ஒரு ஆத்மா, தானும் ஒரு மானுடப் பிறப்பு, எல்லா ஆத்மாவும் இறைவனை அறியவேண்டும் எனும் போது தான்மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும் என நம்பினார்.

அக்காலத்தில் வேதம் அறிந்தோர்; சாஸ்திரம் அறிந்தோர்தான் பகவானை தரிசிக்கமுடியும். வேதமும் சாஸ்திரமும் அறியாதவர்,மந்திரம் அறியாதவர், யாகம் செய்யாதவர் எல்லாம் இறைவனை அடையமுடியாது என சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சரியை, கிரியை, ஞானம், யோகம் என்பதில் சரியை, கிரியைதான் முக்கியம் என அறியாமையில் சொல்லும் கூட்டம் பெருகியிருந்தது.

இந்தக் கூட்டம்தான் சாஸ்திரமே பெரியது, குல வழக்கமே பெரியது, பகவான் அவர்களுக்கே வருவார், பகவான் சாஸ்திர மந்திரங்கள் வழிபாடுகளுக்கே கட்டுப்படுவார் அவர்களைத்தான் தேடிவருவார் என நம்பிக்கொண்டிருந்தது.

இந்த நம்பிக்கையெல்லாம் தாண்டி பகவான் மேல் உள்ள தாளமுடியா அன்பினால் அந்த பக்தியில் உருகிக்கொண்டிருந்தார் பாணர்.

இதுதான் சூரியன் என யாரும் காட்டிக்கொடுக்காமல் எப்படி உலகத்தாருக்கு தெரியுமோ அப்படி பகவானே உண்மை அவரே பெரியவர் எனும் ஞானம் பாணருக்கு தானே உதித்தது.

ஆயிரம் பசு இருக்கும் மந்தையில் கன்று எப்படி தன் தாயினை அடையாளம் காணுமோ அப்படி பகவானே தன் மூலம் என்பதை அடையாளம் கண்டு தேடினார்.

ஆனால், அவரால் ஆலயத்துக்குள் செல்லமுடியாது.

அவர் சாஸ்திர ஞானமோ இதர அறிவோ இல்லாதவர்; அவருக்கு சாஸ்திரம் தெரியாது; ஞானம் தெரியாது; பகவான் எல்லா இடத்திலும் உண்டு; தன்னிலும் உண்டு என்பது தெரியாது.

அவருக்கு தெரிந்ததெல்லாம் பகவான் கோவிலில் இருப்பார் என்பது.

பாணர் பணக்காரர் அல்ல, அவர் அள்ளி அள்ளி கொடுக்க பணமில்லை, அவர் மந்திரம் சொல்லி வணங்க அவர் வேதம் படித்தவரும் அல்ல‌.

அவருக்கு தெரிந்ததெல்லாம் பாடல், அது ஒன்றுதான்.

ஆனால், அதையும் தெய்வ சன்னதியில் பாட அவருக்கு வாய்ப்பில்லை ஆனால், இறைசன்னதியில் தெய்வத்தை நோக்கிப் பாட விரும்பினார்.

ஒரு பூ கட்டும் தொழிலாளியின் ஆசை பகவானுக்கு மலர் அலங்காரம் செய்வது, ஒரு அரசனின் ஆசை கோவில் கட்டுவது, ஒரு சிற்பியின் ஆசை நல்ல சிலை பகவானுக்கு வடிப்பது.

அப்படித்தான் இவரும் தன்னால் இயன்றது பாடுவதே என கருதிக்கொண்டிருந்தார்.

அனுதினமும் காலை எழுந்து காவேரியின் தென் கரையில் நீராடி துளசிமாலை அணிந்து திருமண் இட்டு பகவான் இருக்கும் கோவிலை நோக்கிப் பாடுதல் அவரின் தொழிலாயிற்று.

அது முக்கியமான படித்துறையாக இருந்தது.

என்ன தான் காவேரியின் கரை மிக நீண்டது என்றாலும் எல்லா இடத்திலும் நீராடிவிட முடியாது. நில அமைப்பும், ஆற்றின் நீரோட்டம் எங்கு சரியாக அமையுமோ அங்கேதான் படித்துறை அமைப்பார்கள்.

அப்படி அந்தப் படித்துறையில் நீராடிவிட்டு பக்தனுக்குரிய அடையாளமெல்லாம் அணிந்து பகவான் கோவிலை நோக்கி நின்று பாடுவார்.

கையில் யாழோ, குழலோ இல்லை இதர இசைக்கருவியோ ஏதோ ஒன்றை ஏந்திப்பாடுவார்.

இது காலை, மாலை என இரு வேளையும் நடந்து கொண்டிருந்தது, அவ்வளவு உருக்கமாக பகவானை நினைந்து பாடுவார்.

பாடல் என்பது ஒரு யோகம். உடல், ஆன்மா, புத்தி, சிந்தை, மூச்சு என எல்லாம் ஒரே புள்ளியில் கலக்கும் யோகம்.

அந்த யோகம் என்பது ஒருவனை இறைவனுடன் கலக்கச் செய்யும், இந்துக்கள் வழிபாட்டில் பாடல் மகா முக்கியமா? என்றால் முக்கியம்.

ஆம். இசைக்கு இறைவன் இறங்குவாரா? நிச்சயம் இறங்குவார்.

இசை என்பது ஆன்மாவின் மொழி. ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் அந்த பொதுவான மொழி உண்டு. மானிட மொழிகள் பல்வேறு வகையாக அறிவுக்கு ஏற்ப பிரிந்திருந்தாலும், குழப்பம் இருந்தாலும் குழப்பமே இல்லாமல் எல்லோர் மனதிலும் நுழையும் மொழி இசை.

இதனால் இந்துக்கள் இசையினை இறைவடிவமாகவே கண்டனர். அதன் நுணுக்கத்தை உணர்ந்தனர். அதைக் கொண்டாடினர்.

ஆம். எல்லாக் கலைகளும் கற்பனையில் உதிக்கும் அல்லது காட்சியில் உதிக்கும்.

இசை ஒன்றே மௌனத்தில் இருந்து தொடங்கும், நிசப்தமே அதன் ஆரம்ப புள்ளி. அதில் இருந்து உயர்ந்து உயர்ந்து உயர சென்று பின் அதே நிசப்தத்தில் முடியும்.

உலகப் படைப்புக்கும், முடிவுக்கும் வாழ்வின் தொடக்க, முடிவுக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு எல்லா வகையிலும் உண்டு. இதனால் இசையே ஒரு வேதம் என்றது இந்துமதம்.

சாம வேதம் என்பது அதுவே.

உலகம் நிசப்தத்தில் இருந்து ‘ஓம்’ எனும் வார்த்தையில் தொடங்கியது போல், இசையும் நிசப்தத்தில் இருந்தே தொடங்கும் ஆன்ம மொழி.

ஆன்மா இறைவனில் இருந்து உதிப்பது என்பதால் ஆன்மா போல் இறைவனையும் இசை வளைகின்றது.

இந்துக்களின் மந்திரம் என்பது என்ன? அது பிரபஞ்ச மொழி, உரிய அதிர்வுகளுடன் அதை உச்சரிக்கும் பொழுது அங்கொரு சக்தி உருவாகின்றது.

அதே போல் இசை எனும் அந்த சக்தியினை மிகச் சரியான பதத்தில் கொடுக்கும் பொழுது அங்கு தெய்வம் மயங்கி நின்று கட்டுப்படுகின்றது.

எல்லா உயிரிலும் காணும் காணாத பொருளிலெல்லாம் இருக்கும் இறைவன், இசைக்கு மயங்குவதாலேதான் எல்லா உயிரையும், ஏன் இயற்கையினையும் இசையால் வளைக்க முடிகின்றது.

இசையால் மழை வருவதும், இசையால் பயிர் வளர்வதும், இசையால் மாடு பால் சுரப்பதும் இப்படியே.

உலகில் கண்ணை மூடிக் கொண்டு ஆத்மாவின் குரலில் எழுப்பபடும் ஒரே உன்னத கலை இசை, வேறு எந்த கலைக்கும் அது சாத்தியமில்லை.

ஆம். கண்காணா இடத்திலிருந்து வருவதால் இசையும் தெய்வமும் ஒன்று என்றார்கள் இந்துக்கள்.

ஆயிரம் பிரார்த்தனைகளை விட மனமுருகி இசைக்கும் இசை வலுவானது. மனதைக் கடவுளோடு எளிதில் ஒன்றச் செய்யும் வல்லமை உடையது.

கண்களை மூடிக் கொண்டு ஆன்மாவில் இருந்து எழுப்பப்படும் அந்த இசை, முழுமையான தவத்திற்குச் சமம். ஆயிரமாயிரம் யாகங்களுக்கு அது ஈடானது.

நல்ல இசையில் மூழ்குவது ஒரு தியானம், அமைதியில் இருந்து தொடங்கும் தியானம் போல் அதில் ஆழமாக செல்லும் தவம் போல் இசை ஒரு தியான வழிபாடு.

மனம் ஆத்மா எல்லாம் கலந்து எழும் அந்த ஆன்ம மொழி ஆன்மாவில் உறைந்திருக்கும் இறைவனை தட்டி எழுப்பும், இறை சக்தி அந்த மொழிக்கு உருகும்.

இதனால் இசையால் இறைவனை வழிபட சொன்னது இந்து மதம். இசை ஆதாரமில்லா இந்து தெய்வங்கள் குறைவு.

நந்தி மத்தளத்தோடும், கலைமகள் வீணையோடும், நாரதர் தும்புராவோடும், கண்ணன் புல்லாங்குழலோடும் இங்கு காட்சித் தருவர்.

கோவில் மணியின் இன்னிசை மனதுக்கு அமைதி தரும், இந்த வேதங்களைக் கூட ராகத்தோடுதான் ஓதுவார்கள். அந்த அதிர்வுகள் மனதைப் பக்குவப்படுத்தும் திறம் வாய்ந்தது.

இசைக்கு மயங்கி சிவன் வருவது பல இடங்களில் நடந்தது, சாம வேத வித்வானான இராவணனின் வீணை இசைக்குக்கு கட்டுப்பட்டு வந்த சிவனிடம் பெரும் வரம்பெற்றான் இராவணன், இப்படி ஏகப்பட்ட உதாரணம் உண்டு.

இராவணன் முதல் மீரா வரை எண்ணற்ற எடுத்துகாட்டுக்கள் உண்டு.

சாமவேதம் முழுக்க இசையே. இசை மட்டுமே.

பாரத தேசத்தில் தோன்றிய ஞானிகள் இசையுடன் தங்களை மிகவும் ஒன்றிணைத்து கொண்டே இருந்தனர். மீரா, புரந்தர தாசர், ஞான சம்பந்தர் மற்றும் ஏனைய ஞானிகளை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.

இந்துக்களின் மந்திரம், வேதங்கள், பண்டைய பக்தி இலக்கியம் எல்லாமே பாடல் வடிவிலேதான் இருந்தது. பாடலின் சக்தி அது என்பதை அந்த ஞானசமூகம் உணர்ந்திருந்தது.

அதுவும் பாலும் தேனும் போல, மாலையில் தொடுக்கப்பட்ட பூக்கள் போல, சந்தனமும் பன்னீரும் கலந்தது போல, அன்பும் பக்தியும் ஒன்றானது போல இசையோடு கலந்த பாடல் மிகப்பெரிய தியான வழிபாடு.

நவரத்னமாலா எனும் நூல் இசையால் வழிபட வேண்டிய வழிவகைகளை சொல்கின்றது.

ஆம். இசை என்பது ஒரு யோகம். மனதை பக்தியின் ஒரே புள்ளியில் நிலைக்கவைக்கும் யோகம். உன்னதமான பாடல் என்பது யோகம் என்றாகும் போது அப்படி பாடுபவன் யோகியாகிவிடுகின்றான்.

அந்த யோக நிலைக்கு வந்திருந்தார் இந்தப் பாணர்.

ஆனால், அது மானிட கண்களுக்கு தெரியவில்லை. அவைகளுக்கு தெரிந்ததெல்லாம் இந்தப் பாணரின் வறுமை, அந்த வறுமையில் பாடிப் பிழைப்பது அவர் தொழில். தொழில் தொடங்குமுன் பகவானை வேண்டுகின்றார் என்பது.

அதைப்பற்றியெல்லாம் கவலையின்றி அனுதினமும் பகவானை உருக்கமாக பாடுவதிலே, தன் உள்ளத்தின் பக்தி ஏக்கம் என எல்லாம் சொல்லி பாடுவதிலே கவனமாய் இருந்தார் பாணர்.

அப்போது அந்த ஆலயத்தில் ஒரு தலைமை சாஸ்திரி இருந்தார். அவர் பெயர் லோகசாரங்கர்.

இவர் சாஸ்திர சம்பிரதாயங்களில் மிகப் பெரியவராக இருந்தார். நால்வகை வேதமும் அறிந்திருந்தார். எல்லா வகை நிஷ்ட கர்மாவும் அவருக்குத் தெரியும்.

யாகம் செய்வதில் வல்லவர் எனப் பெரும் பெயர் அவருக்குண்டு. ஆச்சாரமும், பக்தியும் நிரம்பியவர். பக்தி மார்க்கதில் கடுமையானவர்.

சாஸ்திரமும் ஆச்சாரமுமே முக்கியம், மந்திரங்களும் வழிபாடுகளுமே முக்கியம், அதுதான் ஒருவனை முக்தி அடையச் செய்யும், பகவான் அருளை பெற்றுதரும் என நம்பினார்.

இவரின் மகா முக்கிய பணி பகவானின் காரியங்கள் பொருட்டு பொற்குடங்களில் தன் சீடர்களோடு சென்று காவேரியில் மந்திரங்களைச் சொல்லி மிக மிக சுத்தமாக ஆச்சாரமாக நீர் எடுத்து வருவது.

அப்படி செல்லும் போது ஆச்சார விதிகளில் கடுமையாக இருப்பார். எந்த சமரசமும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அரசனுக்கு விசுவாசமான முரட்டு தளபதி போல் அவரின் விசுவாசம் பகவான் மேல் இருந்தது.

அப்படியானவர் ஒரு ஏகாதசி அன்று தன் வழக்கமான நீர் எடுக்கும் நிகழ்வை செய்ய பரிவாரங்களோடு கிளம்பினார், சுத்தமாக குளித்து, கொண்டையிட்டு திருமண் இட்டு வஸ்திரங்களை முறையாக அணிந்து பகவான் நாமம் சொல்லியபடி தன் பரிவாரங்களோடு சென்றுக் கொண்டிருந்தார்.

அவரின் இசைக்குழு முன்னால் இசைத்தபடி சென்றது.

அப்போது படித்துறையினை மறித்தபடி நின்று தன் வழமையான பாடல்களை கண்களை மூடியபடி யாழ் ஒன்றை இசைத்து பாடிக்கொண்டிருந்தார் பாணர்.

சாஸ்திரம் அறியாதவன், அதுவும் நாடு நாடாய் பிச்சைஎடுக்கும் பாணகுலத்தவன், வேதமோ சாஸ்திரமோ அறியாதவன், கோவிலுக்குள் வரவே தகுதியற்றவன் பகவானை பாடுகின்றானா? எனும் அகங்காரத்தோடு அவரை தொலைவில் இருந்தே பார்த்தார் லோகசாரங்கர்.

தான் அருகே செல்லும்போது அவனே விலகிவிடுவான் என புன்னகைத்தபடி வந்தார். காரணம், அவரைக் கண்டால் எல்லோருக்குமான அச்சம் அல்லது மரியாதை அப்படி.

வேதம் ஓதுபவன் சபித்தால் அவன் கோபத்தில் சொல்லிவிட்டால் பலிக்கும் எனும் ஒரு நம்பிக்கை இருந்தது.

அப்படியான நிலையிலிருந்த லோகசாரங்கர் இவர் அருகில் வந்தும் அவர் கவனிக்கவில்லை, ஓரிரு முறை கண்கள் திறந்தும் அந்த கண்கள் நிலைகுத்தியிருந்தன‌.

முன்னே யார் நிற்பது என்று கூட அல்ல, முன்னே ஒருவர் நிற்கின்றாரா இல்லையா என்பது கூட தெரியாமல் அவர் பாடிக் கொண்டே இருந்தார்.

இசைக்குழு வாசிப்பதோ, அர்ச்சகர்கள் மந்திரம் சொன்னபடி வருவதோ அவருக்கு தெரியவே இல்லை.

அவர்கள் அருகில் வரும்போதும் அப்படித்தான் பாடிக்கொண்டிருந்தார் பாணர். அவரைத் தாண்டி செல்லவேண்டிய சூழல் வந்ததும் அவனாக வழிவிடுவான் என நின்று கொண்டார் லோகசாரங்கர், மேளக்காரரும் இசைப்பதை நிறுத்தினார்கள்.

பாணரோ மழை தன் போக்கில் பெய்வதை போல பாடிக்கொண்டிருந்தார், அதை கண்டுகொஞ்சம் எரிச்சலான லோக சாரங்கர் சொன்னார்.

“பாணனே, தள்ளிப் போ பகவானுக்கு நீர் எடுக்க வேண்டும், ஆச்சாரம் முக்கியம்”

பாணரோ தன் போக்கில் பாடிக்கொண்டே இருந்தார்.

மறுபடியும், அதையே சொன்னார் லோகசாரங்கர். முழுமையாக பகவான் நினைவில் இருந்த பாணரோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டிருந்தார்.

சில அடி தொலைவில் வந்துவிட்ட லோகசாரங்கரருக்கு ஆத்திரம் மேலிட்டது, “பாணனே கடைசியாக எச்சரிக்கின்றேன், நாழிகை கடக்கின்றது, ஒதுங்கி வழிவிடு” எனச் சீறினார்.

பாணரோ சுயநினைவிலே இல்லை. அவர் தன் கற்பனையில் மனதில் பகவான் முன்னின்று பாடுவதாக நினைந்து பாடிக்கொண்டே இருந்தார்.

லோகசாரங்கர் இதனை அவமானமாக உணர்ந்தார். தன்னை இந்த பாணன் அவமானபடுத்துவதாக அறிந்து கொந்தளித்தார்.

அவரின் கோபம் ஆணவத்தை தொட்டது, ஆணவம் தான் யார் எனும் அகந்தையினை தொட்டது, அது மூச்சை சீறச் செய்தது, மூச்சு சீற அறிவு மங்கி சிந்தை கொதித்தது.

‘உன்னை என்ன செய்கின்றேன் பார்” எனப் பாய்ந்தவர் அவரை தொட்டாலே தீட்டு எனச் சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்து எறிந்தார்.

அது பாணரின் தலையில் பட்டது, ரத்தம் கொட்டிற்று.

பாணரோ ஒரு பெரும் யோகியின் மனநிலையில் இருந்ததால் உடல் வேறு, ஆத்மா வேறு எனும் தத்துவத்தில், உடலில் பட்ட காயம் ரத்தம் கொட்டியது கூட தெரியாமல் அவர்போக்கில் பாடிக் கொண்டிருந்தார்.

உடலில் பிசின் வடிந்தாலும் வேப்பமரம் காற்றில் ஆடுவதைப் போல் அவர் தன் போக்கில் பாடிக் கொண்டிருந்தார்.

ரத்தம் வரும் போதும் பாணன் பாடுவதை கண்டு அவன் மனநோயாளி எனக் கருதிய லோகசாரங்கரர் அப்பக்கம் நின்றவர்களை நோக்கி ‘இவனை தள்ளிக் கொண்டு செல்லுங்கள்’ இவன் ரத்தம் தரையில் பட்டால் பகவானுக்கு நீர் கொண்டு செல்லும் போது அபச்சாரமாகிவிடும்” எனக் கத்தினார்.

அதை கேட்டவர்களும் லோக சாரங்கரர் வார்த்தைக்கு மறுபேச்சின்றி அவரை தள்ளினார்கள்.

மறுபடியும் மந்திரங்களை சொல்ல தொடங்கிய லோக சாரங்கர் நீருக்கு பூ இட்டு வணங்கி, இசைமுழங்க‌ புனிதநீரை பொற்குடத்தில் எடுத்துவிட்டு ஆலயம் திரும்பினார்.

சன்னதிக்கு வந்தவர் திடுக்கிட்டார். காரணம், அந்த பாணருக்கு எந்த இடத்தில் தலையில் காயம்பட்டு ரத்தம் வந்ததோ அப்படி பகவான் தலையிலும் ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.

“பகவானே..” எனத் தன் கையில் இருந்த குடத்தை நழுவவிட்டு அலறினார் லோலசாரங்கர்.

அந்நிலையிலும அவருக்கு பாணனுக்கு செய்த இழிவும் பரிகாசமும் நினைவுக்கு வரவில்லை. காரணம், பணக்காரன் யாரோ ஒரு அடிமையினை மிதித்து சென்றது போல் அவருக்கு மமதை அப்படி இருந்தது.

பின் சற்றுநேரத்தில் பகவான் சிலையில் இருந்து வடிந்த ரத்தம் நின்றது.

அங்கே லோகசாரங்கரரை மீற யாருமில்லை என்பதால் இந்த சம்பவம் குறித்து அவரே பிரசன்னம் பார்த்து முடிவெடுத்து பரிகாரம் செய்யட்டும் என ஒதுங்கிக் கொண்டார்கள்.

அவரின் வேதஞானம் மேல் எல்லோருக்கும் அவ்வளவு மரியாதை இருந்தது.

லோகசாரங்கரருக்கு ஆணவம் அதிகம், அவர் அங்கே ஏதும் காட்டிக்கொள்ளவில்லையே தவிர மனதால் அதிர்ந்து போனார். பகவான் சிலையில் ரத்தம் வடிவது என்பது ஏதோ நடந்துவிட்ட பெரும் பாவத்தின் அறிகுறி, அதைவிட முக்கியம் இது நாட்டுக்கு கேடு எனும் வகையில் அரசனுக்கு அவர் பதில் பரிகாரம் சொல்ல வேண்டும், காரணத்தை விளக்க வேண்டும்.

அவர் இப்படி மிகக் கடுமையாக கவலையுற்று போனார், சில பரிகார பூஜைகள் பற்றி சிந்தித்தாலும் சிலவற்றை செய்தாலும் அவர் மனம் கலங்கித்தான் இருந்தது.

அப்படியே வெறுத்துப்போன அல்லது கலங்கிய மனதுடன் உறங்கச் சென்றவர் கனவில் பகவான் வந்தார்.

“லோகசாரங்கா, இன்று காலை என் அடியார் பாணன் மேல் கல்லெறிந்ததை மறந்தே விட்டாயா? அவன் என் உத்தமமான பக்தன், அவனை நீ கல்லால் அடித்ததை எனக்கே செய்தாய்.

நாளை காலை அவனிடம் நீ மன்னிப்பு கேட்டுவிட்டு உன் தோளில் சுமந்துவந்து எம் சன்னதி முன் நிறுத்து” எனச் சொல்லி மறைந்தார்.

அதிகாலை அந்தக் கனவை கண்ட லோகசாரங்கர் அதிர்ந்து எழுந்தார், பின அந்தப் பாணரை தேடி ஓடினார்.

அங்கே வழக்கம் போல பகவானை நோக்கிப் பாடிக்கொண்டிருந்தார் பாணர், அதை கண்ட லோக சாரங்கர் பின் அப்படியே பணிந்தார்.

அவர் பாடி முடித்ததும் ஒடிச் சென்று அவர் காலில் விழுந்து வணங்கி “என்னை மன்னியும். நேற்று உம்மை காயப்படுத்தியது நானே” என மன்னிப்பு கோரினார்.

பாணர் பதறினார். காரணம், அவர் நேற்று பாடுகையில் என்ன நடந்தது என்பதே அவருக்குத் தெரியாது, அவர் மானுட சிந்தனையின்றி பாடியபோது உடலை மறந்திருந்தார், அவர் சொன்னார்.

“ஐயா , பகவானை நோக்கிப் பாடும் போது நான் என்னையே மறந்துவிடுவேன், எப்படி உங்கள் குரலுக்கு நான் செவிமடுக்கா நிலையில் இருந்தேனோ, அப்படியே நீங்கள் கல்லால் அடித்ததும் எனக்குத் தெரியாது.

வேதம் கற்றவர், பகவான் முன்னால் மந்திரம் ஒதுபவர் இப்படி விழலாமா? நான் உங்களை தொடவும் கூடாதே” எனப் பின்வாங்கினார்.

எழுந்த லோகசாரங்கரர் கனவில் தனக்கு பகவான் சொன்ன எல்லாமும் சொன்னார், திருபாண் ஆழ்வாருக்கு அதை கேட்க கேட்க ஆனந்தமும் அச்சமும் ஒருசேர வந்தது.

நாம் கோவிலை காணப்போகின்றோம், கோவிலுக்குள் பகவானை காணப்போகின்றோம் எனும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது, பகவான் தனக்கும் அனுகிரஹம் செய்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தவர் சொன்னார்.

“ஐயா, எனக்கு பகவான் கண்ணில் தயவு ஏற்பட்டு கோவிலை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கின்றது, நான் நடந்தே வருகின்றேன்”

ஆனால், லோகசாரங்கர் விடவில்லை.

“ஐயா இது பகவான் உத்தரவல்லவா? அதனால் நீங்கள் என் தோளில் ஏறித்தான் வரவேண்டும்” எனச் சொல்லி குனிந்தார்.

“இதுவும் பகவான் கட்டளை” என ஏறி அமர்ந்தார் பாணர்.

வேதம் ஓதும் ஞானி, சாஸ்திர வித்வான் என்றெல்லாம் கொண்டாடப்பட்ட லோகசாரங்கர் ஒரு எளிய இழிகுலப் பாணனை சுமந்து செல்லும் அதிசயத்தை ஊரே கண்டு அதிசயத்தது.

இப்படி தன் பகதனை ஊர் அறிய உயர்த்தினார் பகவான்.

முதல்முறையாக ஆலயத்தை அடைந்த பாணர் வாழ்வின் முழு பலனை அடைந்தார். பகவான் சன்னதியில் நின்று பத்து பாடல்களை பாடினார்.

பின் “உள்ளே வா” எனக் குரல் கேட்க உள்ளே சென்றவர் அப்படியே ஜோதிவடிவில் பகவானோடு கலந்தே போனார், அவரை பகவான் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

இதுதான் திருப்பாணாழ்வாரின் வாழ்வு.

இவரின் வாழ்வு மிக நுணுக்கமான தத்துவம் பலவற்றை சொல்கின்றது.

முதலில் இந்துமதம் சாதி கொடுமையினை வலியுறுத்தும் மதம் அல்ல, அது பக்தி ஒன்றையே வலியுறுத்துகின்றது. உண்மையான பக்திக்கு அங்கு எக்காலமும் சாதி தடை இல்லை.

சாதி பார்த்த வேத சாஸ்திரியினையே பகவான் ஊரறிய தன் பக்தனை சுமக்க வைத்து அடையாளம் காட்டினார் என்பதிலே பகவானுக்கு தேவை சாஸ்திரம், மந்திரம் யாகமெல்லாம் அல்ல, அன்புநிறைந்த பக்தி நிறைந்த மனம் ஒன்றே அவனுக்கு உகந்தது என்பது தெரிகின்றது.

இரண்டாவது, அவரின் வாழ்வு சரியை, கிரியை, ஞானம், யோகம் எனும் வரிசையில் யோக நிலைதான் இறைவனை அடையும் வழி. சரியை, கிரியை, ஞானமின்றி , யோகத்தால் இறைவனை அடையலாம்.

திருப்பாணாழ்வார் செய்தது கர்ம யோகம், அவரின் கர்மமான பாடலை யோகமாக கொண்டு பகவானை அடைந்தார்.

அவர் அங்கே கரைந்தே போனார் என்பது முதல்முறை பகவானை கண்டவர் மீண்டும் பிரிய மனமில்லாமல் கரைந்தே போனார்.

இது ஆண்டாள், மாணிக்கவாசகர் வாழ்வில் நடந்தது, வள்ளலார் வாழ்வில் நடந்ததும் இதுவே.

காயத்தை காற்றில் கரைத்தல் என்பது யோகத்தில் சிறந்தோருக்கு எளிது, அப்படி தங்கள் மேனியினை கரைத்துவிட்டு பகவானோடு இணைதல் என்பது யோகியருக்கு சாத்தியம்.

இடைவிடாமல் பகவானை நினைந்த பாணர், திருப்பாணாழ்வார் எனும் பெருமையோடு அவரோடு கலந்துவிட்டார்.

இவர் வாழ்வில் மிகச் சூட்சுமமான விஷயம் ஒன்று உண்டு. அது அவர் பாடியது, இறைவனை அடைந்த விதம்.

இந்துக்கள் மரபில் தீபம், தூபம், மலர்கள், நீர் என எல்லாம் வைத்துத்தான் வழிபடல் வேண்டும் என்பது மரபு, இவை ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை கொண்டவை.

பஞ்சபூத தத்துவங்களை குறிப்பவை இவை, பஞ்ச பூதங்களோடு மானிட மனதை கலக்க வைக்கும் விஷயம் இது.

மனதின் எண்ணங்களை எளிதாக கடத்தும் ஊடகம் போன்றவை இவை, சூட்சுமமான விஷயங்களை இவை கொண்டிருக்கும்.

யாகத்தில் நெருப்பு நம் வேண்டுதலை இறைவனிடம் சேர்க்கும் என்பது பொய் அல்ல, அதனாலே பிரார்த்தனைகளில் விளக்கு அவசியம் என்றார்கள்.

மலர்களும் அப்படியே, மலர்கள் நம் வேண்டுதலை இறைவனிடம் சூட்சுமமாக எடுத்துச் செல்லும், எண்ணங்களை கடத்தும் , மணம் எப்படி கண்ணுக்கு தெரியாமல் மலர்களிடமிருந்து வருமோ அப்படி மனதின் எண்ணங்களை பகவானிடம் சேர்ப்பது மலர்களின் பண்பு.

அப்படியேதான் நீருக்கும் எண்ணங்களை எடுத்துச் செல்லும் ஆற்றல் உண்டு.

அதுதான் காவேரி நீரில் கலந்திருந்தது, அவரின் மனமும் எண்ணமும் பக்தியும் அந்த நீரில் கலந்திருந்தது.

அந்த நீரை அபிஷேகத்துக்கு எடுத்து பகவானுக்கு சமர்பித்தபோது அந்த என்ணமும் அதோடு சேர்ந்து பகவான் சன்னதிக்கு வந்தது.

அங்கேதான் பகவானுக்கும் அவருக்குமான ஒரு பந்தம் அப்படி உருவாகி அவர் மனமும் உடலும் பகவானோடு கலந்தேவிட்டது.

இந்துக்களின் வழிபாட்ட்டில் ஒவ்வொரு ஏற்பாடும் அவ்வளவு நுணுக்கமானவை. நீர் வைத்தும் விளக்கு வைத்தும், மலர் வைத்தும் செய்யப்படும் வழிபாடுகள் ஒருகாலமும் பொய்க்காதவை.

காவேரி நீர் முன்னால் தன் பக்தியினை பாடிப் பாடி வெளிபடுத்தினார் திருபாண் ஆழ்வார். அதுதான் அந்த நீர்தான் அவரின் வேண்டுதலை பகவானிடம் சேர்த்து அவரையும் கொண்டு சேர்த்து அங்கே அணைத்தது. கலக்கச் செய்தது.

ஆம். வழிபாட்டில் நீர் வைப்பதும் விளக்கு வைப்பதும் சாதாரணம் அல்ல, அர்த்தமுள்ளது. பிரபஞ்சத்துடன் நம் பிரார்த்தனைகளை கொண்டு சேர்க்கும்.

ஆற்றங்கரைகளில் நீர் நிலைகளில் இந்துக்கள் வழிபடும் தத்துவம் இதுதான்.

அந்த பெரும் ஞான தத்துவமேதான் திருப்பாணாழ்வார் வாழ்விலும் நடந்தது. பிரபஞ்ச தத்துவத்தை உலகுக்கு சொன்ன வாழ்வு அவருடையது.

தெய்வம் மந்திரம், வழிபாடு, யாகம், வேதம் என தெரிந்தோர்க்கு மட்டுமல்ல, அது பெரும் பணமோ அறிவு கொண்ட பக்தனிடமோ வருவதல்ல, அது உண்மையான பக்திக்கும் மனபூர்வமான பக்திக்குமே இறங்கிவரும்.

அப்படிப் பெரும் பக்திக்குச் சான்றாய் விளங்குவது திருப்பாணாழ்வார் வாழ்வு.

அவர் பாடிய பாடல்கள் குறைவு, அவர் பகவான் முன் பாடிய பத்துபாடல்கள்தான் கிடைத்தன. அனுதினமும் ஆற்றங்கரையில் பாடிய பாடல்கள் கிடைக்கவில்லை.

இந்த 10 பாடல்கள் மட்டும் கிடைத்தது. அதை இனி பார்க்கலாம்.

திருப்பாணாழ்வார் அனுதினமும் காவேரிக் கரையில் பகவானை நினைந்து பாடியவர், அவ்வகையில் அவர் பாடிய பாசுரங்கள் எண்ணிக்கையில் அடங்காது. ஆனால், அவர் அரங்கன் சந்நதியில் பாடிய பத்து பாசுரங்கள்தான் கிடைத்தது.

ஆம். பத்து பாசுரங்கள்தான் அவர் பாடியதாக கிடைத்தது மற்றவை கிடைக்கவில்லை. இந்தப் பத்தும் அவர் பகவானை முதல் தடவை சந்தித்து அந்த மகிழ்வில் பகவனானின் அழகை வர்ணித்து பாடப்பட்டது.

திருப்பாணாழ்வாரை முதலில் அவமானப்படுத்தி பின் பகவானால் அவர் யார் எனத் தெரிந்தபின் அவரைத் தோளில்சுமந்து வந்த லோகசாரங்க‌ர் அவரை வணங்கிப் பாடினார், அதைப் பார்த்துவிட்டு அவரின் பாசுரங்களுக்கு வரலாம்.

“ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரது ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் || :

அதாவது

வடதிருக்காவேரி மற்றும் தென்திருக்காவேரி ஆகிய இரண்டுக்கும் நடுவே சயனித்துக்கொண்டிருக்கும் ஹரியான பெரிய பெருமாளைத் திருவடி தொடக்கமாக திருமுடி ஈறாக அனுபவித்து மகிழ்ந்த உள்ளத்தை உடையவரும், அந்தப் பெரிய பெருமாளைத் தவிர மற்ற விஷயங்களைக் காணமாட்டேன் என்று அறுதியிட்டவரும், லோக சாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டவருமான திருப்பாணாழ்வாரை நான் வணங்குகிறேன்.

அதையே இன்னொரு பாடலிலும் சொல்வார்கள்.

“காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி
தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே”

லோகசாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டு, பெரிய பெருமாள் ஸந்நிதியில் தனியே புகுந்தவரும், பெரிய பெருமாள் காட்டிக் கொடுத்த திருவடித் தாமரைகள், அழகிய ஆடை, திருநாபி, மிகவும் இனியதான திருவயிறு, திருமார்வு, கழுத்து, சிவந்த வாய், அப்போதலர்ந்த தாமரை போன்ற கண்கள், திருமேனி ஆகியவற்றைக் கண்டவரும், எம்பெருமானைப் பாடுவதே மகிழ்ச்சியாகக் கொண்டிருந்தவருமான திருப்பாணாழ்வார் திருவடிகளைக் கொண்டாடினோம்.

அடுத்துப் பாசுரங்களைக் காணலாம்.

“அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே”

என்னிடத்தில் எதையும் எதிர்பார்க்காத பரிசுத்தனாய், எல்லோருக்கும் காரணனாய், நன்மை செய்பவனாய், என்னைத் தன்னளவில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் தன் அடியார்களுக்கு ஆட்படுத்தும் தூய்மையை உடையவனாய், நித்யஸூரிகளுக்கு நாயகனாய், மணம் மிகுந்த சோலைகளால் சூழப்பட்ட திருவேங்கட மலையில் நித்யவாஸம் செய்பவனாய்,

அடியார்களுக்கு எளிதில் வந்தடையும்படி இருக்கும் தூய்மையை உடையவனாய், அடியார்களின் தோஷத்தைப் பார்க்காத தூய்மையை உடையவனாய், தலைவன் – தொண்டன் என்னும் நீதி மாறாமல் நடக்கும் பரமபதத்தை ஆள்பவனாய், நீண்ட மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் சயநித்தருளும் என் சுவாமியே! உன்னுடைய திருவடிகள் தானே வந்து என் கண்களுக்குள்ளே புகுந்ததனவே.

கடலில் அலைகளானவை எப்படி ஒரு மரக்கலத்தை சிறிது சிறிதாகத் தள்ளிச் செல்லுமோ, அதுபோலே ஆழ்வாரும் எம்பெருமானின் திருமேனியில் உள்ள அவயவங்களால் தள்ளப்பட்டு, அடுத்தடுத்த அழகுகளைக் காண்கின்றார்

“உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே”

இன்பம் மிகுந்த மனத்தை உடையவனாய் திருவுலகளந்தருளின எம்பெருமானின் திருமுடி (கிரீடம்) அக்காலத்தில் அண்டத்தின் எல்லை வரை நீண்டது. த்ரேதா யுகத்தில், எதிர்த்து வந்த ராக்ஷஸர்களை அழித்த க்ரூரமான அம்புகளையுடைய ஸ்ரீராமன் எம்பெருமான், நறுமணம் மிகுந்த சோலைகளையுடைய திருவரங்கத்தில் பெரிய பெருமாளாய் சயனித்திருக்கிறான். அந்த எம்பெருமானுடைய திருவரையிலே இருக்கும் பீதாமபரத்தில் என் சிந்தனையானது பதிந்தது.

அடுத்துப் பாடுகின்றார்.

“மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின்னுயிரே”

குரங்குகள் பாய்ந்து விளையாடும் தமிழ் தேசத்தின் வடதிசையில் உள்ள திருவேங்கடமலையில் நித்யஸூரிகள் வந்து வணங்கும்படி நிற்கும் ஸ்ரீநிவாஸனாய், திருவரங்கத்தில் திருவனந்தாழ்வானாகிய இனிமையான படுக்கையை உடையவனான பெரிய பெருமாளின் அழகிய செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும் அதற்கு மேலே இருக்கும் பிரம்மாவினை படைத்து அதனால் மேலும் அழகுபெற்ற திருநாபீகமலமும் ஆகிய இவற்றின் மேலன்றோ என்னுடைய நெஞ்சிலே விளங்குகிற ஆத்மாவானது சென்று படிந்தது.

எம்பெருமான் ஒருவரைக் கைக்கொள்ளும் முன் அஹங்கார மமகாரங்கள் அழியவேண்டுமே என்று ஒரு கேள்வி வர, ஆழ்வார் எப்படி எம்பெருமான் இலங்கையைச் சுற்றியுள்ள மதிள்களைத் தகர்த்தானோ, அதுபோல என்னுடைய விரோதிகளையும் போக்குவான் என்று சொல்லி அனுபவிக்கிறார்.

அடுத்துப் பாடுகின்றார்.

“சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே”

அதாவது, நான்கு விதமான அரண்களை உடைய இலங்கைக்குத் தலைவனான இராவணனை யுத்தத்தில் இருந்து விரட்டி, அதற்குப் பின் அவனுடைய பத்துத் தலைகளையும் உதிரும்படி ஒப்பற்ற ஒரு க்ரூரமான அம்பை எய்தவனும், கடல் வண்ணனும், வண்டுகளானவை இனிமையாக இசை பாட, சிறந்த மயில்கள் ஆடப்பெற்ற திருவரங்கத்தில் சயனித்திருக்கும் ஸ்வாமியான பெரிய பெருமாளின் திருவயிற்றை அலங்கரிக்கும் ஆபரணமான உதரபந்தம் என்னுடைய நெஞ்சுள் நிலைத்து நின்று உலாவுகின்றது.

அடுத்துப் பாடுகின்றார்

“பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே”

பெரிய சுமையான, அநாதி காலமாகத் தொடரும் வினைகளின் தொடர்பை நீக்கி, என்னைத் தன்னிடத்தில் அன்புகொள்ளும்படி செய்த பெரிய பெருமாள், அத்துடன் நில்லாமல் என் நெஞ்சிலும் புகுந்தான். இப்படிப்பட்ட பாக்யத்தைப் பெற நான் முற்பிறவியில் எத்தனை பெரிய தவம் செய்திருப்பேன் என்று தெரியவில்லை. அல்லது, இப்படிப்பட்ட பாக்யத்தை நான் பெற அவன் எத்தனை பெரிய தவத்தைச் செய்து வந்துள்ளேன் என்று தெரியவில்லை.

திருவரங்கத்தில் இருக்கும் ஸ்வாமியான அப்படிப்பட்ட பெரிய பெருமாளின் திருவையும் (பிராட்டியையும்) ஆரத்தையும் உடைய திருமார்பு அடியவனான என்னை ஆட்கொண்டது.

அடுத்துப் பாடுகின்றார்

“துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே”

ஒரு பிறை வடிவில் இருக்கும் நிலாவைத் தலையில் உடையவனான ருத்ரனின் துயரைப் போக்கியவனும் அல்லது ஒரு பிறை வடிவில் இருக்கும் சந்த்ரனின் துயரைப் போக்கியவனும், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் நிறைந்திருக்கும் சோலைகளை உடைய திருவரங்கத்துள் பொருந்தி இருக்கும் சுவாமியான பெரிய பெருமாள். அண்டத்தில் வசிப்பவர்களையும், அண்டங்களையும், அண்டத்துக்கு வெளியில் இருக்கும் ஆவரணங்களையும், ஒப்பற்ற பெரிய பூமியையும், மற்ற எல்லாப் பதார்த்தங்களையும் விழுங்கும் அந்தப் பெரிய பெருமாளின் திருக்கழுத்து அடியவனான என்னை வாழவைத்தது.

அடுத்துப் பாடுகின்றார்

“கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே”

அதாவது திருக்கையிலே பொருந்தி இருக்கும் சுரியையுடைய திருச்சங்கினையும் நெருப்பைக் கக்கும் திருவாழியையும் உடையவராய், பெரிய மலை போன்ற திருமேனியை உடையவராய், திருத்துழாயின் பரிமளத்தினாலே நறுமணம் வீசும் உயர்ந்த திருமுடியை (கிரீடத்தை) உடையவராய், எனக்கு ஸ்வாமியாய், அழகிய திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான் என்கிற இனிய படுக்கையிலே சயனித்திருப்பவராய், ஆச்சர்யமான செயல்களையுடைய பெரிய பெருமாளின் சிவந்த திருவாய் என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.

இதில் ஆழ்வார் எம்பெருமானுடைய அழகிய திருக்கண்களை அனுபவிக்கிறார். வாய் என்ன வார்த்தை சொன்னாலும், கண்ணான நான் தானே வாத்ஸல்யத்தைக் காட்டுகிறேன். மேலும் நானே எம்பெருமானைப் பரமபுருஷனாக அடையாளம் காட்டுகிறேன் ஆகையால் என்னைப் பார் என்று சொல்ல அக்கண்களை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

அடுத்துப் பாடுகின்றார்

“பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே”

மிகப் பெரிய உருவைக்கொண்டு வந்த அசுரனான ஹிரண்யனுடைய உடலைக் கிழித்துப் போட்டவனும், ப்ரஹ்மா முதலான தேவர்களுக்கும் அணுகமுடியாதவனும், எல்லோருக்கும் காரணபூதனும், நன்மையைச் செய்பவனும் ஆன திருவரங்கத்தில் சயனித்துக் கொண்டிருக்கும் பரம பரிசுத்தியை உடைய பெரிய பெருமாளின் திருமுகத்தில் கறுத்த நிறத்தில், பரந்திருப்பதான, ஒளிபடைத்த, செவ்வரிகள் படர்ந்திருப்பதான, நீண்டதான, பெருமை பொருந்திய திருக்கண்கள் அடியேனைப் பித்துப்பிடித்தவனாக ஆக்கி விட்டன.

இதில் ஆழ்வார் பெரிய பெருமாளின் திருமேனி முழுவதையும் சேர்த்து அனுபவிக்கிறார்

“ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே”

உலகெல்லாம் உண்டு பெரியதான ஆல மரத்தின் சிறிய இலையில் ஒரு சிறு குழந்தையாய் சயனித்து இருந்தவனும், திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான் என்கிற இனிய படுக்கையில் சயனித்து இருப்பவனுமான பெரிய பெருமாளின் அழகிய, உயர்ந்ததான ரத்னங்களால் செய்யப்பட்ட ஹாரமும் முத்து மாலை போன்ற பல ஆபரணங்களும் அணியப்பட்டதும், எல்லை இல்லாத ஒப்பற்ற அழகையுடையதுமான கறுத்த திருமேனியானது என்னுடைய நெஞ்சின் அடக்கத்தைக் கவர்ந்தது. ஐயோ! இதற்கு நான் என் செய்வேன்.

இறுதியில் ஆழ்வார் கண்ணன் எம்பெருமானைப் பெரிய பெருமாளில் கண்டு இனி வேறொன்றைப் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து அந்த எம்பெருமான் திருவடிகளில் சேர்ந்து பரமபதத்தை அடைகிறார்.

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே”

மேகத்தை போன்ற நிறத்தையும் குணத்தையும் உடையவனும், இடையர் குலத்தில் தோன்றி, வெண்ணெயைத் திருடி உண்ட திருவாயுடன் இருப்பவனும், என் உள்ளத்தைக் கவர்ந்தவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், திருவரங்கத்தில் சயனித்திருப்பவனும், எனக்கு ஆரவாமுதமான பெரிய பெருமாளைக் கண்ட கண்கள் இனி வேறொன்றைக் காணாது.

இங்கே திருப்பாணாழ்வார் பகவானின் மேனி அழகை பார்த்து மிக தேர்ந்த தத்துவம் இன்றை போதிக்கின்றார்.

அதாவது பகவானுக்கு உருவமில்லை. ஆனால், மானிடர் புரிந்துகொள்ளும்படி மானிட அவயங்களுடன் அவர் எழுந்தருளி திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கின்றார்.

மானுடனின் உடல் அவன் கர்மா செய்யும்படி கர்ம வினைப்படி அமைந்திருக்கின்றது, ஆன்மா தங்கும் அக்கூடு இந்த உலகில் மானுடர் செய்யும் காரியங்களுக்கும், கர்மாவுக்கும் ஆதாரமாகின்றது அதன் அவயங்களும் அப்படியானது.

பகவான் அப்படித் தான் மானுட குலம் மேல் அன்பு வைத்து அந்த அவயங்களுடன் எழுந்தளியிருக்கின்றார்.

அவரின் கண்கள் நம்மைக் கருணையுடன் நோக்குகின்றன; அவர் செவிகள் நம் குரலைக் கேட்கின்றன; அவர் தலையில் கிரீடத்துடன் பிரபஞ்சத்தை ஆள்கின்றார்.

அவரின் வாய்மொழி நமக்கு ஆறுதல்; அவரின் கால்கள் நம்மைக் காக்க விரைகின்றன; அவரின் கைகள் நம்மைக் காக்கின்றன; அவர் நெஞ்சில் நம்மைச் சுமக்கின்றார் எனப் பகவானின் திருக்கோலத்தின் தாத்பரியத்தை விளக்குகின்றார்.

அப்படியே மானுடரின் கைகள் அவரை வணங்கவேண்டும், மானுடரின் கால்கள் அவர் பாதையில் நடக்கவேண்டும், கண்கள் அவரை மட்டும் கண்டு, காது அவர் புகழ் கேட்டு வாய் அவர் புகழ்பாடி கொண்டே இருக்கவேண்டும் அதைத் தவிர மானுடர்க்கு வேறு கதி இல்லை என்கின்றார்.

அதாவது, பகவான் விக்ரகத்தையும் அதன் அழகையும் அந்தத் தாத்பரியத்தையும் தியானித்தலே உன்னதமான தியானம் என்கின்றார்.

பக்தி மார்க்கத்தின் எளிய வழி உருவ வழிபாடு, பகவானை உருவ வடிவில் கண்டு அதன் தாத்பரியம் உணர்ந்து தியானித்து, ஒரு நொடி விலகாது ஐம்புலன்களையும் அவரிலே வைத்திருந்து, ஐம்புலன்கள் அடக்கிய சிந்தைனையினை மனதில் குவித்து, மனதால் அப்படியே அவரில் கலந்துவிடுதல் என்பதே முக்தி என்பதைப் பாடுகின்றார் திருப்பாணாழ்வார்.

திருப்பாணாழ்வாரின் வாழ்வு பல விஷயங்களைப் போதிக்கும், அதில் முக்கியமானது இந்துமதம் சாதி மதம் அல்ல, அங்கு உண்மையான பக்திக்கு என்றும் பெரும் அங்கீகாரம் உண்டு, அவ்வகையிலே தாழ்ந்த குலத்தவரான திருப்பாணாழ்வார் ஆழ்வார் நிலைக்கு உயர்ந்தார்.

நீர் என்பதும் அபிஷேகம் என்பதும் சாதாரணம் அல்ல, நீர் என்பது மனதின் பிரார்த்தனையினை ஈர்க்கின்றது, அது வார்த்தைகளை மந்திரங்களை பாடல்களை ஈர்க்கின்றது, மனதின் என்ணங்களை அது தெய்வத்திடம் எடுத்துச் செல்கின்றது

இதனால் அபிஷேக நீர், வழிபாட்டு நீர் எல்லாம் சக்திவாய்ந்தவை, வழிபாட்டில் நீர் அவசியம் என்பதைச் சொல்கின்றது.

அடுத்து உருவ வழிபாடு பக்திமார்க்கத்தில் முக்கியமானது, அந்த உருவை தரிசித்து அதையே நெஞ்சில் நிறுத்தினால் அதுதான் தவம் என்பதை அவரின் பாசுரங்கள் சொல்கின்றன‌.

முக்கியமாக இசை என்பது தியான வடிவம், மனதில் இருந்து எழும் இசையும் உணர்வும் ஆத்மாவினை இறைவனோடு ஒன்றிக்கும் சக்தி கொண்டது.

பாடல் என அவர் பாடி நின்று வணங்கியதெல்லாம் தவம், இசையும் பாடலும் தியானம் தவத்தின் வழிகள், அதை உளமுருகப் பாடினால் இறைவனை அடையலாம் எனப் போதிக்கின்றது அவர் வாழ்வு.

ஆன்மா இறைவன் மேல் ஏக்கம் கொண்டால் இறைவனே உரியகாலம் வந்து அதனைத் தன்னோடு சேர்த்துக் கொள்வான், பரமாத்மா ஜீவாத்மாவினைத் தேடிவந்து அணைத்துக்கொள்ளும் என்பது அவரின் வாழ்வு சொல்லும் பெரும் போதனை.

“உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத் துறையூரான் வாழியே .
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே .
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே .
மலர்க்கண்கள் வேறொன்றில் வையாதான் வாழியே .
அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழியே .
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே .
செம்பொனடி முடியளவும் செவிப்போன் வாழியே .
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே”

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.