பினாங்கு தைப்பூசம்
உலகெங்கும் கொண்டாடப்பட்ட தைப்பூசம் மலேசிய திருநாட்டின் பல பாகங்களிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பினாங்கு தீவில் நடந்த கொண்டாட்டமும் முக்கியமானது.
இதே பினாங்கு தீவில்தான் பெரிய மருதுவின் மகன் துரைச்சாமியினை பிரிட்டிசார் சிறை வைத்தனர். இந்தியத் தமிழகம் சிவகங்கையில் இந்து அரசர்களாக இருந்த மருதுபாண்டியரை இந்து ஆலயத்தை இடிப்பேன் என மிரட்டி சரணடையச் செய்த பிரிட்டிசார் அவர்களை கொன்றுபோட்டு மகனை பினாங்குக்கு கடத்தினார்கள்.
இந்து ஆலயத்தை இடிப்போம் இந்து மதத்தினை ஒழிப்போம் என பீரங்கி துப்பாக்கி முனையில் பிரிட்டிஷார் செய்த அட்டகாசத்திற்கு மருது சகோதரர்கள் தலை கொடுத்தார்கள்.
அவர்கள் தலைவெட்டி பழியெடுத்தான் பிரிட்டிஷ்காரன், அப்படியே அவர்கள் வாரிசை நாடு கடத்தி இனி இந்து அரசன் இல்லை எனக் கொக்கரித்தான் பிரிட்டிஷ்காரன்.
மருது பாண்டியரோடு தூக்கிலிடப்பட்டோர் மட்டும் 700 பேர்.
ஆனால் கடைசியில் யார் வென்றார்கள் என்றால் மருதுபாண்டியரோடும் அவர்களோடு இந்துமக்கள் செய்த தியாகமே வென்றது, இந்துமதம் காக்க அவர்கள் செய்த உயிர்த் தியாகமே வென்றது.
இன்று சிவகங்கை இந்துபூமி. எந்த பினாங்கில் அந்த துரைசாமியினை 14 வயது பாலகனாக அனாதையாக கடத்தி சிறை வைத்ததோ பிரிட்டிஷ் அரசு, அந்த பினாங்கில் தைப்பூசம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
அகந்தையிலும் அகங்காரத்திலும் கர்வத்திலும் பிரிட்டிசார் செய்த காரியங்களை புன்னகையுடன் பார்த்த இந்துமதம் பினாங்கில் தன்னை நிறுத்திக் கொண்டது.
ஏதோ தான் பெரும் தந்திரக்காரன் என நினைத்த பிரிட்டிஷார் தாங்கள் இந்துமத கைப்பாவை என்பதை அறியாமலேயே காரியம் செய்தனர் என்பதையும், அவர்கள் இந்தியாவினை பிடிக்கவில்லை இந்துமதம்தான் தன்னை உலகெல்லாம் பரப்ப அவர்களைப் பிடித்தது என்பதையும் வரலாறு கண்டு கொண்டிருக்கின்றது.
ஒருவகையில் அது சரியானது, 18ம் நூற்றாண்டுக்கு முன் இந்துஸ்தானம் தாண்டி இந்துமதம் இல்லை. அது அப்படி இருந்து பின் பவுத்தத்தால் ஒடுக்கப்பட்டது.
பிரிட்டிசார் மீள அதனை உலகெல்லாம் இந்து தொழிலாளர், இந்து கைதிகள் என இழுத்துச் சென்று பரப்பிவிட்டனர். பினாங்கு கொண்டாட்டம் அதை தெளிவாகச் சொல்கின்றது.
பினாங்கிற்கு 18ம் நூற்றாண்டில் கப்பலில் சில இந்துக்களோடு ஒரு கைதியாக துரைசாமியினை அனாதை அபலையாக அவனை அழைத்து வந்த இந்துமதம் இன்று பத்து லட்சம் பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசமாக தன்னை காட்டிக் கொண்டிருக்கின்றது என்றால் அதன் சூட்சும இயக்கத்தை புரிந்துகொள்வது கடினமல்ல.
மருதுபாண்டியரின் தியாகத்தோடு, இந்துமதம் பிரிட்டிசாரை எப்படி அவர்களை அறியாமலே பயன்படுத்தி உலகெல்லாம் கொண்டு நிறுத்தியது என்பதையும் நினைக்கும்போது சிலிர்ப்புத்தான் மேலிடுகின்றது.