மகா சிவராத்திரி நாள் தத்துவமும் விரதமும்
இந்த பாரத கண்டத்து சனாதன தர்மம் என்பது மதம் மட்டுமல்ல, அது ஆன்மீகம், அறிவியல், உளவியல், பிரபஞ்ச தத்துவம், தெய்வீகம் எல்லாம் கலந்த வாழ்வியல் நெறி.
ஒரு மனிதன் உடலாலும் மனதாலும் பலமாகி உறுதியாகி இறைவனை அடைய பிரபஞ்ச விதிகளுக்குட்பட்ட பல வழிகளைச் சொன்ன மதம் இந்துமதம். அதை வழிபாடு, விழா, கொண்டாட்டம், அனுசரிப்பு என பல வகைகளில் தெய்வத்தின் பெயரை முன்னிறுத்திச் சொன்னது.
அதில் ஒன்றுதான் மகா சிவராத்திரி நாள்.
இந்நாளை விழா எனச் சொல்வதை விட மனதை கட்டுப்படுத்தும் விரதம் என்பதே பொருத்தமானது. அதைக் கொண்டாட்டம் என்பதை விட வைராக்கியாமாக ஏற்று அனுசரிப்பது என்பதே சரி.
இந்துக்களின் வழிமுறை எல்லாம் புராணக் கதைகளில் தொடங்கி மானிட மன, உடல் நலத்தைப் பாதுகாத்து அதன் மூலம் இறைவனை உணார்ந்து அடைதல் எனும் அமைப்பினைக் கொண்டதே.
அவ்வகையில் இந்த நாள் சிவபெருமானிடம் ஒடுங்கியிருந்த உலகை மீண்டும் படைக்க வேண்டி அன்னை விரதம் இருந்த நாளாகச் சொல்லி இன்னும் பல சிறப்புகளை சொல்வார்கள்.
(ஒரு வகையில் விஞ்ஞான விளக்கமும் இங்கு மிகச் சரியாக பொருந்திச் செல்வதைக் காணலாம். இந்த பிரபஞ்சம் விரிந்து சுருங்கி மறுபடி விரிந்து சுருங்கும் இயக்கத்தை கொண்டது என்கின்றது விஞ்ஞானம்.
இந்த தத்துவத்தை ஆன்ம தத்துவமாக இந்து ரிஷிகளும் சொன்னார்கள்.
அப்படி பிரபஞ்சம் சுருங்கி அடங்கி பின்னர் விரியும் என விஞ்ஞானம் சொல்வதை மிக சரியாகச் சொல்லும் மதம் இந்துமதம். )
பிரம்மனும் விஷ்ணுவும் சிவனைப் பணிந்த நாள். அர்ஜூனனுக்கு பாசுபதத்தினை கொடுத்த நாள். கண்ணப்ப நாயனார் முக்தி அடைந்த நாள் என ஏகப்பட்ட சிறப்புகள் உண்டு.
ஒரு சிவராத்தியிரில் புலிக்கு பயந்து மரத்தின் மேல் இரவெல்லாம் தூங்காமல் இருக்க வில்வ இலையினை பறித்து லிங்கத்துக்கு போட்டவனே அடுத்த பிறப்பில் குகனாகப் பிறந்தான் என்கின்றது இன்னொரு செய்தி.
ஆயிரமாயிரம் செய்திகள் புராணங்களில் இருந்தாலும் கூர்ந்து நோக்க வேண்டிய சில பக்கங்கள் இந்த மகா சிவராத்திரியில் உண்டு.
ஏன் மிகச் சரியாக ஒரு தேய்பிறையின் 14ம் நாளைச் சொன்னார்கள்?
ஆசை என்பது நிலவு போன்றது அது வளரும் தேயும் அகலும். மறுபடி மெல்ல முளைக்கும். இப்படி முடிவில்லா விளையாட்டு காட்டும், நிலவற்ற வானம் போல் ஆசையற்ற மனமே இறைவனை அடைய வழி என அந்நாளைச் சொன்னார்கள்.
லிங்க வழிபாடு மகா மகா விசேஷமானது. லிங்கம் என்பது பிரபஞ்ச சக்தியின் வடிவம். அதை கவனித்தால் ஒரு முட்டை வடிவில் இருக்கும், இன்றும் பிரபஞ்சம் அவ்வடிவே. கோள்கள் சுற்றுபாதை இவ்வடிவே.
லிங்கத்தினை ஏன் சிவன் என்றார்கள்?
லிங்கம் என்பதை உருட்டினால் ஓடிக் கொண்டே இருக்கும், அதன் வடிவில் தொடக்க புள்ளியுமில்லை முடிவுமில்லை.
ஆம் தொடர்ந்து இயங்கும் அழிவற்றவன் இறைவன், தொடக்கமும் முடிவுமில்லாதவன் இறைவன், பிரபஞ்ச விதியின் பெருவடிவம் இறைவன் என லிங்கத்தை அடையாளமாய் வைத்தார்கள்.
லிங்கம் என்பது சிவனின் அரூப வடிவம் என்பது இதனாலேயே.
மாத சிவராத்திரியெல்லாம் அந்நாளில் வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக விசேஷமானது. பிரபஞ்ச தத்துவபடி நல்ல அதிர்வுகள் பூமியில் பெருகும் மாதம் என்பதால் விழாக்கள் பல வைத்தார்கள். அப்படியே அந்த சிவராத்திரியும் விசேஷமானதாயிற்று.
சிவராத்திரியின் ஆன்மீக விஷயங்களை புராணங்கள் சொன்னது, அதன் பிரபஞ்ச தத்துவங்கள் என்னென்ன?
சந்திரன் என்பது தேய்ந்து வளரும் பொழுது மானிடரின் எண்ணங்களில் அதாவது மனதில் பல மாற்றங்களைக் கொடுக்கும். புவிஈர்ப்பு விசை உள்ளிட்ட எல்லாமே அந்நாளில் மாறும், கடல் மட்டம் கூடிக் குறையும்.
அதே கொந்தளிப்பு மானிட மனதிலும் ஏற்படும், அன்று சில விரதம் பக்தி வழிபாடு மூலம் மனதை கட்டுப்படுத்தும் முறை அவசியம். இதனாலே ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் 14ம் நாள் சிவராத்திரி ஆயிற்று.
அதன் முன்னால் வரும் 13ம் நாள் பிரதோஷம் இன்னும் குறிப்பிடத்தக்கதாயிற்று.
பிரதோஷம் என்பது பாற்கடலை கடைந்தபொழுது அதில் திரண்ட விஷத்தை உலக உயிர்களுகாக்க சிவன் தானே குடித்து காத்ததினை குறிப்பது என புராணம் காரணம் சொன்னாலும் மூன்று விஷயங்கள் உண்டு. முதலாவது யோகிகள் சொல்வது, இரண்டாவது ஞானியர் சொல்வது, மூன்றாவது உலக பொது நம்பிக்கையும் விஞ்ஞான ரகசியமும்.
ஆம் யோகிகள் இந்தப் பாற்கடலை கடைவதை தியானத்தோடு ஒப்பிடுவார்கள் மூலாதாரத்தை (பாற்கடல்) முதுகெலும்பு எனும் மத்தினைக் (மேருமலை) கொண்டு பிங்கலை, இடகலை எனும் மூச்சுகாற்றாக (வாசுகி) கொண்டு தியானித்தால் (கடைந்தால்) குண்டலினி எனும் அபரிமிதமான (அமிர்தம்) சக்தி வரும்.
ஆனால் தியானம் இருக்கும் பொழுது முதலில் ஒருவனின் கெட்ட அதிர்வுகளும் விஷம் போன்ற பாவச் சிந்தனைகளும் முதலில் வரும். அது தலையில் துரியம் எனும் சக்கரத்துக்குச் சென்றால் அவன் துஷ்டனாகி விடுவான்.
இன்னும் தெளிவாகச் சொன்னால் குண்டலி என்பது நெருப்பு அதாவது தீ, நம் தீ என்பதே நந்தியுமாயிற்று, அந்தக் குண்டலினி எனும் சக்திமேல் இருக்கும் நற்சக்தி அந்தக் கெட்ட விஷயங்களைத் தலைக்கு ஏற்றாமல் களைந்து விடும். விசுத்தி எனும் கழுத்து சக்கரத்திலேயே அதைக் களைந்துவிடும் என்பது யோகியர் சொல்வது.
இது 13ம் நாளில் தியானம் கைகூடும் நாள். அதாவது சந்திர பூமி ஈர்ப்பு விசையால் மனம் ஒரு கொந்தளிப்பில் இருக்கும் பொழுது எளிதாக நடக்கும் என்பதால் அந்நாளில் வழிபாடு முக்கியம் என்றார்கள்.
ஞானியர் அந்நாளில் பாவங்களை எல்லாம் இறைவனிடம் விட்டு விட்டு அமிர்தம் போன்ற புண்ணியத்தை மட்டும் பெற வேண்டும் என்றார்கள்.
உலக வழக்கில் இன்றும் ஐரோப்பியர் 13ம்நாளை துரதிருஷ்டமாகக் கருதுகின்றனர். அந்நாளில் தீய அதிர்வுகளும் சக்திகளும் வானில் இருந்து வருவதாக அவர்கள் நம்பிக்கை, அதிலிருந்து காவல் பெற பிரார்த்தனை, ஆலயம் என வழி செய்திருந்தார்கள்.
இதனை மேற்குலகம் இந்துக்களிடம் இருந்தே எடுத்துக் கொண்டது.
ஆம் அந்த 13ம் நாள் மாலை ஆகமவிதிக்கு உட்பட்ட ஆலயம் சென்று வணங்கினால் தீய அதிர்வுகளிடம் இருந்து தப்பலாம் என்பது விஞ்ஞான உண்மை. இந்துக்களின் ஆகம விதி ஆலயம் அந்தக் கவசத்தைக் கொண்டது.
இதைத்தான் பிரதோஷம் என்றார்கள். பிரதோஷம் என்றால் ஒடுங்கும் நேரம், நம் பாவமும் நம் முன்னோர்களின் சந்ததிப் பாவமும் இறைவனில் ஒடுங்கும் நேரம் என்பதால் அந்த வழிபாடு அவசியமாயிற்று.
அந்தக் காலகட்டமான 14ம் நாள் அந்த சிவராத்திரியில் மனம் கொந்தளிப்பான அல்லது இனம்புரியா இறுக்கம் கலக்கம் வரும் நேரம். அந்த மாலை நேரம் மனதை சிவனிடம் செலுத்த இறை சக்தியிடம் செலுத்த அந்த சிவராத்திரி ஏற்படுத்தினார்கள்.
அந்தப் பொழுது இறை சிந்தனையில் இருந்தால் தேவையற்ற குழப்பங்களில் மனம் சிக்காது என்பதே அதற்கான தத்துவம்.
சந்திரன் சிந்தனைக்கு காரணம் என்பதால் அந்தப் பவுர்ணமி அமாவாசை ஒட்டிய நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும்.
இன்று தொட்டதெற்கெல்லாம் மருத்துவம் மருந்து மனநல ஆலோசனை தூக்கமருந்து என மனதையும் உடலையும் கெடுத்துக் கொள்ளும் முட்டாள் சமூகம் போல் அன்றைய சமூகம் இல்லை. அது மனதை பிரபஞ்சத்தின் இயக்கப்படி கணித்திருந்தது. பிரபஞ்ச இயக்கம் மனதை பாதிக்கும் என்பதை உணர்ந்திருந்தது.
அந்த அறிவுடைச் சமூகம் இதைப் புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மன வலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத் தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டு வரவும் விரதம் மற்றும் பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.
மாதம் மாதம் கடைபிடித்தார்கள்.
மாதாந்த வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற ஏகாதசி திதிகளில் குறைவான உணவுப் பழக்கத்தைக் கைக் கொண்டார்கள். துவாதசி திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத் தவிர்த்து, உப்பைக் குறைத்து, கீரைவகைகளை அதிகமாகச் சேர்த்தார்கள்.
திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெயை நீக்கி, இனிப்பைக் கொஞ்சம் சேர்த்து மதியம்1.30 மணிக்குள் உண்பார்கள்.
மாத சிவராத்திரிகளில் மதிய உணவு அரை வயிறும் இரவு பால் பழம் உணவாகக் கொண்டார்கள். சிலர் சிவ சிந்தனையில் இருந்து பூஜை, அபிஷேக ஆராதனைகளைச்செய்வார்கள். யோக சாதகர்கள் தியானம் மேற் கொள்வார்கள்.
மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொண்டார்கள். அதற்குப் பிறகு ஓய்வு எடுப்பார்கள்.
மாதம் மாதம் இது நடந்து கொண்டிருக்கும்.
அதாவது சரியை வழியில் உள்ளவர்கள் பூஜைகள் விரதங்கள். கிரியை வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும் அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச் செய்வது அதாவது தியானம்.
இதைக் கடைபிடிப்பதால் உடல்நலமும், மனவளமும் காக்கப்படும். விரதமும் தூக்கக் கட்டுப்பாடும் பிரபஞ்ச விதிக்கு ஏற்ப சந்திரனின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப உடலை வளைக்கும் ஒரு நுட்பமே.
அப்படி செய்வதால் உடலில் செரிமானம் முதல் பல சிக்கலை தவிர்க்கலாம். மனதில் எழும் இனம்புரியாத சிக்கல்களை விலக்கலாம்.
இதில் மாசி மாதம் வரும் அந்தத் தேய்பிறை 14ம் நாள் கொஞ்சம் சக்தி வாய்ந்தது என்பதால் சில வழிகளை மனதை காக்கக் சொன்னார்கள், இறைவனிடம் இருக்கும் மனம் எதிலும் குழம்பாது என்பதை உணர்ந்து அந்நாளில் பூஜை வழிபாடு என விழித்திருக்கச் சொன்னார்கள்.
அந்நாள் இந்த சூரிய மண்டலமும் பூமியும் பிரபஞ்சத்தின் மையத்துக்கு வரும் நாளாக வான்வெளியில் கருதப்படுகின்றது அப்பொழுது சில விசேஷித்த கதிர்வீச்சும் சக்தியும் பூமி மேல் விழும்.
இதனை விழித்திருந்து பெற்றுக் கொள்ளத்தான் அந்த இரவை மகாசிவராத்திரி என்றார்கள்.
பிரதோஷத்தின் அன்று பாவங்களை இறைவனிடம் விட்டு விட்டு, துர்சிந்தனைகளை விட்டுவிட்டு முழுத் தெளிவான அன்பான மனதுடன் மறுநாள் விரதம் இருக்கச் சொன்னார்கள்.
அப்படியே அன்றிரவு விழித்திருக்கவும் சொன்னார்கள்.
ஏன்?
ஆம் உணவும் தூக்கமும் மனிதனின் அடிப்படைத் தேவைகள். மானிட இயக்கத்தை கூர்ந்து கவனித்தால் மனிதன் இதை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருப்பான், மருத்துவன் நோயாளியிடம் கேட்கும் முதல் கேள்வியே இந்த இரண்டும் பற்றியதுதான்.
ஆனால் இந்த இரண்டிலும் மனிதன் மிக மோசமாக சிக்கிக் கொண்டால் அவன் மனம் வேறு எதையும் தேடாது சுகம் ஒன்றையே நாடும்.
அந்த சுகத்தினைத் தேடி அலைந்து அதற்காக பாடுபட்டுத் திரியும் மனிதன் கடவுளை தேட மறந்துவிடுவான், அச்சிந்தனையே எழாது.
உணவும் தூக்கமுமே ஒரு மனிதனை இவ்வுலகில் எல்லா சுகங்களுக்கும் அடிமையாக்கி கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன.
இதை இந்நாளில் உணர்த்தி உணவும் உறக்கமும் ஒரு வித சங்கிலி என்பதைப் புரிய வைக்கும் நாள் சிவராத்திரி. இந்த இரண்டும் நெருப்பு போல் எரிந்து கொண்டே இருக்கும் எனச் சொன்ன நாளும் இதுவே.
அதைக் கட்டுப்படுத்த விரதம் இருக்கச் சொன்னார்கள், தூங்காமல் விழித்திருந்து இறைவனை சிந்திக்கச் சொன்னார்கள்.
விரதம் இருக்கும் பொழுது இரு விஷயங்கள் சாத்தியம். முதலில் உடல் ஒடுங்கும் உடல் ஒடுங்க ஒடுங்க மனம் ஒடுங்கும். உணவைத் தவிர்க்கும் மனம் இறைவனைத் தேடும்.
மஹா சிவராத்திரி.
(அப்படியே பசிக்கொடுமையினையும் அது புரியவைக்கும். அன்னதானத்தின் அவசியத்தை தெளிய வைக்கும்.)
உறக்கம் தவிர்க்கப்படும் பொழுது சிந்தனை பெருகும், இது காலமும் தேவையற்று தூங்கிக் கழித்த வெட்டிப் பொழுதுகள் நினைவுக்கு வந்து தூக்கத்துக்கு மனம் கடிவாளம் இடும்.
ஆம் உணவும் உறக்கமும் உன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அதன் கட்டுப்பாட்டில் நீ இருக்கக் கூடாது. அதற்காகப் போராடு எனச் சொன்ன மதம் இந்துமதம்.
இந்த இரண்டையும் வென்றவன் உலகில் எதையும் வெல்லும் சக்தியினைப் பெறுவான். இந்த இரண்டிலும் சுகம் கண்டவன் வீட்டை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் முடங்கியே அழிவான்.
உணவு குறைந்தால் உணர்ச்சி குறையும், தூக்கம் குறைந்தால் தெளிவு சிறக்கும். இந்த இரண்டிலும் மனம் ஒருமுகப்பட்டு இறைவன் பால் சாயும் என்பதன் ஏற்பாடே சிவராத்திரி.
சைவ சமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜைமுறை என்று விரிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அக்கால ஞானியர் ரிஷிகள் அதைச் செய்தார்கள்.
பக்தியும், பூஜைகளும், விரதங்களும், தியான யோகங்களும் எல்லாமே ஈசனை அடைவதற்குத்தான், மானிட பிறவி ஈடேறத்தான்.
அதற்கு உடல்நலமும், மனவளமும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டே இத்தகைய நுட்பமான விரத முறைகள் இந்துக்களுக்கு தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒட்டியே வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கும் போது அவர்களின் அக்கால விஞ்ஞான அறிவு குறித்து ஆச்சரியம் தோன்றுகிறது.
மனம், உடல், பிரபஞ்சம், தெய்வம், ஆலயம் என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் இணைத்த அவர்களின் மிக மிக மேம்பட்ட அறிவு என்பது ஆச்சரியமானது.
மனம் தாண்டி உடல் சார்ந்த நன்மைகளும் சிவராத்திரியில் உண்டு.
ஆம், விரதம் இருக்கும் உடலில் எப்படி கெட்ட கொழுப்பெல்லாம் கரைந்து உடலின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் எல்லாம் கட்டுக்குள் வருகின்றதோ அப்படித் தூங்காமல் இருக்கும் பொழுதும் பல நல்ல மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன.
உடலுக்கு விரதம் எனப் பட்டினி போடும் பொழுது பல நல்ல மாற்றங்கள் நடப்பது போல, தூக்கம் எனும் மயக்கத்துக்கு விடுமுறை கொடுக்கும் பொழுது பல உறுப்புக்களும் ஹார்மோன்களும் சீரடைகின்றன.
மாதம் ஒரு நாள் நோன்பிருந்து மாதம் ஒரு நாள் தூங்காமல் இருந்தால் ஒரு நோயும் அண்டாது.
ஆம் ஆன்மீகம், பக்தி, பிரபஞ்சத்தை ஒட்டிய மானிட அசைவு, சந்திரனால் ஏற்படும் தாக்கம், உடல் நலம், மனநலம், பிரபஞ்ச சக்தி வீச்சு என எல்லாமும் கலந்த ஒரு வழிபாடு சிவராத்திரி.
அன்று மிக மிக அமைதியாக அதிகம் பேசாமல் உண்ணாமல் உறங்காமல் இறை சிந்தனையில் நிலைத்து அமர்ந்திருப்பதும் 4 கால வழிபாடுகளில் பங்கெடுப்பதும் சாலச் சிறந்தது.
4 யாமங்களின் பூஜையும் அந்த வடிவங்களை வழிபடுவதும் சால சிறந்தது.
அது உஷ்ணமிக்க இரவு என்பதால் பால், தயிர், நெய் போன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுத்து பூஜையில் பங்கெடுப்பது இன்னும் நல்லது.
மாசி மாத தேய்பிறையின் 14ம் நாள் இரவு கொஞ்சம் தீயத்தன்மை வாய்ந்தது என்பதால் அன்று ஆலயத்தில் தங்குதல் நலம். இதனால் பிரபஞ்ச தீய கதிர்கள் தாக்காது, ஆலய கவச அமைப்பு அதற்குத் துணை செய்யும்.
இதனாலேயே ஆலயமெல்லாம் திறந்து வைத்து வழி காட்டியது இந்துமதம்.
இந்நாளில் இரு விஷயங்களை ஆலயத்திலும் மற்ற இடங்களிலும் தவிர்த்தல் நலம்.
முதலாவது ஆங்காங்கே நடக்கும் அன்னதானம், இந்நாள் விரதத்துக்குரிய நாள் எனும் வகையில் இது அனுமதிக்க முடியாதது என்றாலும் விரதத்துக்கு விலக்கான பெரியோர்களும், உடல் நலம் சரியில்லாதோரும் சிறுவர்களும் அதில் பங்கு பெறுவதை அனுமதிக்கலாம்.
மற்றவர்கள் அன்று உண்பதும் அதை ஊக்குவிப்பதும் சரியல்ல.
இரண்டாவது தூங்கக் கூடாது எனச் சொல்லிவிட்டு டிவி, திரைப்படம், அரட்டை என திசைமாறி விழித்திருப்பதும் சரியல்ல.
அக்காலங்களில் சிவராத்திரி அன்று நடனம் இருந்ததா என்றால் இருந்தது. ஆனால் இப்பொழுது இருக்கும் ஆட்டம் அல்ல, இறை சிந்தனையில் இறை வழிபாட்டின், இறைவனின் செய்தியினை, புராணக் குறிப்பினை நடனத்தால் சொல்லும் அந்த ஆட்டம் அனுமதிக்கப்பட்டது.
ஆம் இறைபாடல் போல இறைவனை உணர்த்தும் நடனங்கள் அனுமதிக்கபட்டவை. மாறாக காட்டு கூச்சலும் பெரும் விளக்கு வெளிச்சத்தில் நடக்கும் ஆட்டமெல்லாம் நிச்சயம் தவறானவை.
இந்நாள் முழுக்க சிவ நினைவில் மனம் லயிக்க வேண்டிய நாள், பிரதோஷத்தை ஒட்டி இருக்கப்படும் அந்த விரதம் ஒரு நாள் கழிந்த பின்பே முடியும்.
இடைப்பட்ட 36 மணி நேரமும் இறை சிந்தனையிலே மனம் லயிக்க உணவு தூக்கமின்றி லயிக்க ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல் என்றும், சிவ புராணம், திருவிளையாடல், பன்னிரு திருமுறை படித்தல் என மனம் லயித்தல் நன்று.
வாயில் சிவநாமம் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும், சிந்தையெல்லாம் சிவன் நினைவு நிறைந்தே இருக்கட்டும்.
தியானம் செய்யும் வழக்கம் இருந்தால் இன்னும் விசேஷம்.
சிவராத்திரி என்பது பிரபஞ்சத் தத்துவப்படி மனம் அமைதியாக இறைவனை தரிசிக்க ஒரு நன்னாள், அதாவது காற்றே இல்லா இடத்தில் தீபம் ஏற்றினால் எப்படி எறியுமோ அப்படி பல சஞ்சலங்களைத் தாண்டி மனம் இறைவனில் லயிக்க வழி செய்யும் ஒரு அழகான பொழுது.
அந்தப் பொழுதினை, மனம் கட்டுப்பட்டு நிற்கும் அந்தப் பொழுதினை மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கின்றது இந்துமதம்.
அந்நாளில் அந்தப் புராணக் கதையில் அதாவது சிவனில் எல்லா உயிர்களும் ஒடுங்கியது போல் ஒடுங்கியிருங்கள். பார்வதி தேவி மறுபடியும் உலகம் படைக்கப்பட வேண்டும் என தவமிருந்தது போல் இருங்கள்.
நிச்சயம் விரதம் முடியும் பொழுது சிவன் அருளால் புது உயிராக, பாவம் நீங்கிய புதுப் பிறப்பாக நிச்சயம் எழுவீர்கள். இறைவனின் அருள் உங்களை முழு கவசமாக இருந்து நல்ல தெளிந்த சிந்தனையுடன் வழி நடத்தும்.
எல்லா மானிடரும் இந்த நன்னாளில் தனித்திருந்து விழித்திருந்து இறையருள் பெற வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் இந்நாளின் சிறப்பினை உணர்ந்து இந்துக்களெல்லாம் இந்துவாய் வழிபட்டு இந்து மதத்தின் மிகப்பெரிய சூட்சும வழிகளை எல்லாம் புரிந்து அதில் மனம் நிறைந்து வழிபட்டு வந்தால் தெளிவு பிறக்கும்.
அந்தத் தெளிவில் மாய அரசியல் பிடியில் இருந்து அந்த சைவ பூமி விரைவில் மீழும், சிவன் அதற்கு வழிகாட்டி வருவார் அது சத்தியம்.