மருது பாண்டியர்

24 / 10 / 2023

மருதுபாண்டியர் நினைவுகள் எப்போதும் கண்ணீர்வர வைப்பது, அவர்களின் வாழ்வும் போராட்டமும் கலங்க வைப்பது என்றால் அவர்கள் தியாக வரலாறு கடுமையாக மறைக்கபட்டது என்பது இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி

ஆம், இங்கே ஜாலியன் வாலாபாக்கில் செத்தவர்கள் தெரியும், ஆனால் மருதுபாண்டியரோடு கொல்லபட்ட 800 பேர் பற்றி வரலாறு பேசாது

அப்படி ஒரு பெரும் கொடுமை நடந்திருக்கின்றது, சிவகங்கையில் 800 பேரை ஒரே நேரம் பிரிட்டிசார் கொடுமையாக கொன்றொழித்த கொடுமை மருதுபாண்டியரோடு நடந்தது

யார் பேசுவார்கள்? யாரும் பேசவில்லை, நேற்று கவர்னரும் இந்த எண்ணூறு பேர் பற்றி பேசவில்லை

மிக மிக உக்கிரமான இந்து எழுச்சியினை, தமிழக இந்துக்கள் ஆப்கானிய நவாபுக்கு எதிராக கொந்தளித்து விடுதலையினை அறிவித்த எழுச்சியினை நவாபின் கூலிபடையாக வந்த பிரிட்டிசார் அடக்கி பின் தங்கள் ஆட்சியினை நிறுத்தியபோது எல்லாம் மறைத்தார்கள்

அவர்களின் கைகூலிகள், அவர்களின் அடிபொடிகள் இன்னும் திராவிட கோஷ்டிகளெல்லாம் சமூகநீதி சமத்துவம் என பிரிட்டிசாரின் சதிகளை சொல்ல சொல்ல இந்த உண்மையான தியாகிகள் வீரவரலாறுகளெல்லாம் அழிக்கபட்டன‌

கட்டபொம்மன் கோட்டையினையே இடித்து அந்த இடத்தையும் உழுது உப்பும் எள்ளும் ஆமணக்கும் விதைத்து தடம் தெரியாமல் அழித்த கூட்டம், இப்படியான வரலாறுகளை எப்படி விடும்?

அவை எல்லாம் எங்குமில்லை அந்த அளவு பிரிட்டிசாரால் மறைக்கபட்டன, அழிக்கபட்டன‌

ஆனால் அந்த வீரர்களின் வரலாறு நாட்டு மக்களின் மனதில் இருந்தது, எழுத்தில் இருந்தால் பிரிட்டிசார் அழிப்பர், மனதில் இருப்பதை எப்படி அழிக்க முடியும்?

ஏதோ ஒரு சக்தி இவை எல்லாம் அழியாமல் காத்துகொண்டது.

அதுதான் நாட்டுபுற பாடல்களாக வந்தது, அதுதான் காலம் காலமாக அவர்கள் வரலாற்றை சுமந்து வந்தன, அதுவும் சுதந்திரம் பெறும்வரை மறைக்கபட்டது

1945களில்தான் இந்த வரலாறுகளெல்லாம் வெளிவந்தன, பலர் அதனை வெளிகொண்டுவந்தார்கள்

ம.பொ.சி அப்படித்தான் கட்டபொம்மன் வரலாற்றை கொண்டுவந்தார், அப்படி மருதிருவர் வரலாறும் வெளிவந்தன‌

கன்ணதாசன் மருதிருவர் கதையினை “சிவகங்கை சீமை” படமாக எடுத்தார், ஆனால் பல தவறுகளை செய்தார்

முதலில் கண்ணதாசன் அப்போது திராவிட கோஷ்டியில் இருந்தார், அதனால் வீரபாண்டிய கட்டபொம்மன் போல அவரால் ஒரு இந்துபடமாக , இந்து எழுச்சிபடமாக எடுக்க முடியவில்லை

இரண்டாம் தவறு எஸ்.எஸ் ராஜேந்திரன் எனும் பொருத்தமற்ற நடிகரை நடிக்க வைத்தது, அவர் இலட்சிய நடிகரானது இன்னும் கொடுமை, அவர் திருநீறு அணியமாட்டார், இந்துபக்தி பேசமாட்டார்

அவரை வைத்து கோவிலுக்காக உயிரை விட்ட இந்துமன்னன் கதையினை எடுத்தது தவறு

“ஜம்புதீவு பிரகடனம்” என இந்துதேச விடுதலையினை சொன்ன மன்னர்கள் வரலாற்றினை “எங்கள் திராவிட பொன்னாடு” என பாடல் வைத்தது தவறு

வீரபாண்டிய கட்டம்பொம்மன் படம் முழு இந்துபடமாக இருந்தது, ஆனால் சிவகங்கை சீமை அப்படி அமையவில்லை என்பது சோகம்

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மருதுபாண்டியர் வரலாறு வெளிவருகின்றது, இனி தேசம் முழுக்க அது அறியபடும் அகில இந்திய அளவில் மருதுபாண்டியர் புகழ் பரவும்

அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது

பெரும் நூலாக எழுதவேண்டிய வரலாற்றை சுருக்கமாக இங்கே காணலாம்

இந்திய சுதந்திர போர் என்பது பல கட்டங்களை கொண்டது, கொடியவன் கோரி காலத்தில் தொடங்கிய அப்போர் கடைசி கட்டமாக பிரிட்டிஷார் காலத்தில் முடிந்தது

பிரிட்டிசாருக்கு எதிரான போரின் தொடக்கத்தை இத்தேசம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கிற்று, வீரசிவாஜி அஞ்சியபடியே தமிழகமே பிரிட்டிசார் காலூன்ற வாய்ப்பான இடமாயிற்று, சிவாஜி அஞ்சியது கடைசியில் நடந்தது

ஆற்காடு நவாபை முகமூடியாக அணிந்துகொண்டு அவர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை அமைக்க முயன்றபோது பல இந்துமன்னர்கள் தீவிரமாக எதிர்த்து போராடினார்கள்

ஆப்கானிய இஸ்லாமிய நவாபிடமிருந்து அதிகாரம் கிறிஸ்தவ பிரிட்டிசாருக்கு செல்லும் விபரீதத்தை அறிந்து அவர்கள்தான் போராடினார்கள்

புலித்தேவன், கட்டபொம்மன் போன்றோர் இந்து பூமியினை மீண்டும் இந்து மண்ணாக மீட்டெடுக்கும் இந்துக்களுக்கான சுதந்திரபோரை தொடங்கினார்கள்

ஆம், இந்து மன்னர்களான அவர்கள் தொடங்கியது இந்துக்களுக்கான விடுதலை போர், அதுதான் இந்திய சுதந்திர போரின் கடைசிகட்டமாகவும் அமைந்தது

அந்த வீரமிக்க இந்துஎழுச்சி போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது.

தமிழகத்தில் மிகபெரிய போர்குரலாக அவர்கள்தான் விளங்கினார்கள், பிரிட்டிஷார் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர்களில் முக்கியமானவர்கள் அவர்கள்

அவர்கள்தான் இங்கு தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என முதலில் சொன்னவர்கள், தேசத்துக்காக பெரியமருதுவும் கோவிலுக்காக சின்னமருதுவும் உயிரையே கொடுத்தார்கள், அந்த வீர அடையாளம் அவர்கள்

அந்த சிவகங்கை சீமையின் வரலாறு நீண்டது, ஜடாவர்ம சுந்தரபாண்டியன் நாடாக இருந்த அந்த பூமி துக்ளக் மதுரையினை ஆண்டபோதும் தனி ராஜ்ஜியமாகத்தான் இருந்தது

பாண்டிய வம்சத்தின் ஐந்து ராஜ்ஜியங்களில் ஒன்றாக அது நீடித்தது

நாயக்கர், மராட்டியர் ஆளுகையிலும் அது சிக்கவில்லை தன்னை தற்காத்தது 17ம் நூற்றாண்டின் இறுதியில் இதை ஆண்டு வந்த கிழவன் சேதுபதியின் காலத்தில் புதுக்கோட்டை, இராமநாதபுரம். சிவகங்கை ஆகிய ஜமீன்களைக் கொண்ட மறவர் நாடு சீரும் சிறப்பும் அடைந்து திகழ்ந்தது.

சிவாஜி தஞ்சாவூரை தாண்டி செல்லாததன் காரணம் அதை தாண்டி இந்த இந்துராஜ்யம் இருந்ததாலே, இந்து மன்னர்கள் இருப்பதால் சிவாஜி தலையிடும் அவசியம் இல்லை சிவாஜிக்கு யார் ஆண்டாலும் ஆள்பவன் இந்து என்றால் சிக்கலே இல்லை

அந்த சேதுபதி 36 ஆண்டுகள் மறவர் நாட்டை ஆண்ட பின் 1710 ஆம் ஆண்டில் இறந்து போனான். அப்போது வாரிசு சிக்கல் வந்தது, புதுக்கோட்டை அரசர், தஞ்சை மராத்திய மன்னர், மதுரை நாயக்க மன்னர் ஆகியவர்களும் இந்தப் போரில் கலந்து கொண்டு, ஏதாவது தங்களுக்கு ஆதாயபடுமா என பார்த்துகொண்டிருந்தார்கள்

வாரிசு சண்டையில் மறவர் நாடு ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று பங்கு கட்டையத் தேவன் என்பானுக்கும் மீதி இரண்டு பங்கு சசிவர்ணத் தேவனுக்கும் வழங்கப்பட்டன.

சுமார் 1730 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் பயனாகச் சசிவர்ணன் பெற்றதே சிவகங்கை சீமை.

இந்தச் சசிவர்ண தேவன் சிவகங்கைச் சீமையைச் சுமார் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவனுக்குப் பின் இவன் மகனான முத்துப் பெரிய வடுகநாத உடையணத்தேவர் பட்டத்துக்கு வந்தார்

இவர் காலத்தில்தான் ஆற்காடு சுல்தானியம் உருவாகி மொகலாய பிரதிநிதியாக இங்கே ஆள தொடங்கினார்கள், அவன் கூலிபடையாக வந்தார்கள் பிரிட்டிஷார்

அக்காலத்தில் அவுரங்கசீப்பின் வாரிசுகளை மராத்திய இந்துபடை நொறுக்கிபோட ஆற்காடு நவாபை காக்க யாருமில்லை, பெரும் படைகள் இல்லை. அதற்கு முன் சிவாஜியின் இந்துராஜ்ய பகுதியாக இருந்த இடமும் இப்போதும் இந்துமன்னர்கள் நேரம்பார்த்து சாய்த்துவிடுவார்கள் எனும் நிலையில் இருந்த நவாப் பாதுகாவலை தேடி பிரிட்டிசாரிடம் விழுந்தான்

அவன் குடும்பத்து சிக்கலும் இதற்கு உதவிற்று அங்கே பிரிட்டிசார் பிரெஞ்சுக்காரரெல்லாம் கூலிபடையாக புகுந்தனர், பிரிட்டிசார் கை ஓங்கிற்று

அப்படி அவர்கள் ஆட்சி ஆரம்பிக்கும் போதுதான் மருதுபாண்டியரின் எழுச்சி இருந்தது

அவர்கள் மறவர்சீமையின் போர்குல வழிவந்தவர்கள், போரும் மோதலும் அவர்களுக்கு விளையாட்டு களமாயிற்று

அவர்கள் சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர்.

இருவருமே மிக பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், எடைமிக்க பீரங்கிகளை அனசாயமாக‌ தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது

தொடக்கத்தில் பிரிட்டிசாரின் வேல்ஸ் , அக்விஸ் போன்ற அதிகாரிகள் மருதுபாண்டியருடன் நட்பு பாராட்டி பழகியிருகின்றார்கள்

அதாவது வியாபாரம் ராஜ உறவு என வந்தவர்கள் உறவாடிகொண்டேதான் இருந்தார்கள்

ஆனால் மருதுபாண்டியர் அவர்களை உறவாக கருதினார்கள், அவர்களோ உளவுபார்க்க வந்த கொடியவர்கள் என்பதை இவர்கள் கணிக்கவில்லை

உளவாளிகள் என்றாலும் பெரியமருதுவின் வீரத்தை பதிந்தவர்கள் அவர்களே “அவன் கிழக்கின் நிம்ரோடு” என எழுதி வைத்தான் வால்ஷ்

நிம்ரோடு என்றால் பெரும் பலம்வாய்ந்த பாரசீக மன்னன், மலைகளை புரட்டுபவன் என அவன் அறியபடுவான் அவ்வளவு பலசாலி, அம்மாதிரி பெரிய மருதுவின் பலத்தை சொன்னான் வால்ஷ்

பெரியமருது புலிவாலை பிடித்து தூக்கி சுழற்றி அதன் வாயினை கிழித்த வரலாற்றை நேரில் கண்டு எழுதி வைத்தவனும் அவனே

அவனும் அக்குயிசும் மருதுபாண்டியரிடம்தான் சிலம்பம், வளறி எல்லாம் கற்றார்கள், அந்த குறிப்பு இன்றும் உண்டு

அவர்களை நண்பர்கள் போலத்தான் நடத்தினர் மருதுபாண்டியர், ஆனால் அந்த வஞ்சகர்கள்தான் இவர்களை பின்ன்னாளில் கொன்றும் போட்டனர்

உறவாடி வஞ்சகத்தால் சரிக்கபட்டவர்கள் மருதுபாண்டியர்கள், அவர்கள் வரலாறு உருக்கமானது வீரமானது

முத்துவடுகநாதரை சாய்த்தால் சிவகங்கை சாயும் என பிரிட்டிசார் செய்து அவரை வீழ்த்தினாலும் மருது பாண்டியரே அந்த சீமையினை தாங்கினார்கள்

வீரசிவாஜியின் கொரில்லா போர்முறையினை களத்தில் காட்டியவர்கள் அவர்கள்தான், ராணி வேலுநாச்சியாரை பிரிட்டிசார் தேடியபோது அவளை காட்டில் மறைத்துவைத்துவிட்டு பெரும் கொரில்லா தாக்குதல் நடத்தி சிவகங்கை அரண்மனையினை மீட்டு 8 ஆண்டுகள் கழித்து அவளை அரியணை ஏற்றியது அவர்கள்தான்

வீரசிவாஜியின் கொரில்லா போரை அட்டகாசமாக் தொடர்ந்தவர்கள் மருதுபாண்டியர்கள்

ஹைதர் அலியினை மொகலாய சாம்ராஜ்யதொடர்ச்சியாக விலக்கித்தான் முதலில் மருதுக்கள் வைத்திருந்தனர், ஆனால் பிரிட்டிசாரை எதிர்க்க வேறுவழி அவர்களுக்கு தெரியவில்லை என்பதால் கவனமுடன் ஆதரவினை மட்டும் பெற்றனர்

மருதுபாண்டியருக்கு மராட்டிய இந்து சாம்ராஜ்ய உதவியினை பெறும் திட்டம்தான் இருந்தது, மராட்டியரும் தயாராக இருந்தார்கள்

ஆனால் மைசூரில் இந்த ஹைதர் அலி இருந்ததால் மராட்டியர் வரமுடியவில்லை, அவர்களும் காசி, டெல்லி மீட்பு என வடக்கு நோக்கி செல்வதிலே கவனமாக இருந்தார்கள்

இதனால் ஹைதர் அலியுடன் ஒரு கவனமான உறவைத்தான் மருதுபாண்டியர் கொண்டிருந்தனர்

நாளையே பிரிட்டிசார் வீழ்ந்தால் ஹைதர் தங்கள் மேல் பாய்வான் என தெரியும் என்பதால் கவனத்துடனே அவனை கையாண்டனர்

வேலுநாச்சியார் வீழ்த்தபட்டபின்னும் சிவகங்கை மன்னர்களாக பிரிட்டிசாரை எதிர்த்து நின்றதும் அவர்களே

ஆம், சிவகங்கை அரசின் முத்துவடுகநாதர் அவரை தொடர்ந்து வேலு நாச்சியார் என இருவருக்கும் துணையாய் இருந்து போர் நடத்திவிட்டு அவர்கள் இல்லா காலங்களில் 3ம் அலையாக போரை தொடங்கியவர்கள் இவர்கள்தான்

பிரிட்டிசார் வேலுநாச்சியாரின் வீழ்ச்சிக்கு பின் சிவகங்கையில் தங்கள் கைபாவையாக உடையண்ண தேவன் என்பவனை வைத்து ஆளதொடங்கினார்கள்

அந்த சதியினை மருதிருவர் முறியடித்தபோது நாச்சியாரின் மகள் சிறுமி என்பதால் இவர்களை ஆள சொல்லி மக்கள்தான் அரசர்களாக வைத்தார்கள்

அப்போதும் ராணியின் பிரதிநிதிகளாக நாங்கள் ஆள்வோம் என்றுதான் சிவகங்கை சீமையின் ஆட்சிபொறுப்பை ஏற்றார்கள் மருதுக்கள்

கட்டபொம்மனுக்கு பின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைதுரை பெரும் போர் நடத்தவும் காரணம் அவர்கள்.

தென்னகத்தாரை எல்லாம் திரட்டி திருச்சி கோட்டையில் தென்னகம் சுதந்திர நாடு என ஜம்புதீவு அல்லது ஜம்வீத்யூத் பிரகடனம் என சுதந்திர நாட்டினை அறிவித்ததும் அவர்களே

த‌மிழ் இலக்கியங்களில் நாவலன் தீவு என தமிழகத்தினை சொல்வார்கள் அல்லவா, அந்த நாவலந்தீவுதான் சமஸ்கிருதத்தில் ஜம்பு தீவு

எப்படியோ இந்நாட்டு சுதந்திர பிரகடன உரையினை வாசித்த மாவீரர்கள் முதலில் அவர்கள்தான், இந்திய வரலாற்றில் அவர்கள்தான்.

அதன் பின்பு 1947ல் மவுண்ட் பேட்டனே வாசித்தார்.

நிச்சயம் அவர்களை பிரிட்டிசாரால் வெள்ளையனால் முடியவில்லை ஆனால் மருதுபாண்டியருடன் இருந்த பலர் உள்நாட்டு காட்டிகொடுப்பால் கொல்லபட, குறிப்பாக இந்த புதுகோட்டை மன்னன் தொண்டைமான் போன்றோரின் சதிசெயல்களால் மருதுபாண்டியர் தோற்றனர்

பெரிய மருதுவுக்கு காலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததால் நடக்க முடியா நிலை ஏற்பட்டது, அவரால் தொடர்ந்து போராடமுடியவில்லை எனினும் இருவரையும் பிடிக்க முடியவில்லை

மக்கள் ஆதரவு தொடர்ந்து இருந்ததால் அவர்கள் தலைமறைவாகவே இருந்தார்கள்

யுத்தத்தில் பிடிக்க முடியாதவர்களை வஞ்சகத்தால் பிடிக்க நினைத்தான் பிரிட்டிஷ்காரன், மருதுபாண்டியரின் பெரும் குணம் பக்தி.

எண்ணற்ற கோவில்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் அவர்கள் குன்னக்குடி கோவில் முதல் ஏகபட்ட ஆலயங்களுக்கு பணி செய்தவர்கள், காளையார் கோவில் கோபுரத்தையும் கட்டி வைத்திருந்தார்கள்.

பிரிட்டிசாரால் அவர்களால் பிடிக்க முடியவில்லை. சில விஷேஷ ஆயுதங்களில் அவர்கள் பாதுகாப்பாய் இருந்தனர், குறிப்பாக வளறி (வளை எறி) போன்ற ஆயுதம் அது.

தாக்கிவிட்டு திரும்ப கைக்கே வரும் பூமராங் வகையது, தமிழரின் சிறப்பான ஆயுதம். மருதிருவர் அதில் கைதேர்ந்திருந்தனர்

ஆங்கிலேயர் அதில் தடுமாறினர், அப்படியான பல வகை சாகசங்களால் பிரிட்டிசாரை அடித்திருந்ததால் அவர்களுக்கு அச்சம் இருந்தது.

எப்போது வேண்டுமானாலும் மருதுபாண்டியர் தங்கள்மேல் பாய்வர் படைதிரட்டி அரண்மனையினை மீட்டுவிடுவர் என அஞ்சினார்கள்

மருதுபாண்டியர் இருக்கும் வரை தென்னகம் தங்களுக்கு இல்லை என்பதில் அஞ்சி இருந்தனர் ஆங்கிலேயர்

அதனால் மருதுகளின் பலவீனத்தில் அடித்தனர், மருதிருவரின் பலஹீனம் பக்தி

மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார் கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என் அறிக்கையிட்டனர் பிரிட்டிசார்.

அப்போது காளையார் கோவில் என்பது கோட்டைகளின் உள் இருந்தது அது அரண் மிக்க கோட்டையாக இருந்தது, கோட்டையினை தகர்க்க தொடங்கிய பிரிட்டிசார் கோவிலையும் இடிக்கபோவதாக மிரட்டினார்கள்.

அது பொறுக்காது, தம்மை விட ஆலயமே முக்கியம் என சரண்டைந்தார்கள் மருது பாண்டியர்கள், சங்கரபதி காட்டில் இருந்து வெளிவந்து ஆலயமே முக்கியம் என மரணத்தை எதிகொண்டார்கள்

தங்கள் உடலை அந்த ஆலயத்திற்கு முன்பே புதைக்குமாறும், இதுகாரும் ஆலயங்களுக்கு தாங்கள் செய்த உதவிகள் தொடர்ந்து நடக்குமாறும் பிரிட்டிசாரரிடம் உறுதிபெற்றுகொண்டே தூக்கு மேடை ஏறினர் அவர்கள்

“தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற பசும்பொன் தேவரின் புகழ்மிக்க வாசகம் இவர்களிடமிருந்தே பிறந்தது.

மருது சகோதர்கள் முடிவுக்கு பின் பிரிட்டிசார் செய்த காரியம் வளறி எனும் ஆயுத தடை. அது செய்யவும் கற்பிக்கவும் தடை விதிக்கபட்டது

மருதுக்களுக்கு கடல்படையும் இருந்திருகின்றது, ஆங்காங்கே பிரிட்டிசாரை கடலில் அடித்த வரலாறும் உண்டு, ஆனால் அது மறைக்கபட்டது

மருதுக்களின் கடல் போருக்கு பின்பே இந்துயாவின் தமிழகத்தில் இந்துக்கள் கடல் கலன் செய்ய கூடாது, கப்பல் கட்ட கூடாது என சட்டம் இயற்றியிருக்கின்றான் பிரிட்டிஷ்காரன் என்பது வரலாறு

களறியும் தமிழரின் கப்பல் கட்டும் தொழிலும்இன்று வழக்கிலே இல்லாமல் ஒழிக்கபட்டது, பிரிட்டிஷாரின் சதி அப்படி இருந்திருக்கின்றது.

இன்று அந்த மாவீரர்கள் தூக்கிலடபட்ட நாள், சில கைகூலிகள் மூலம் காயம்பட்ட பெரியமருதுவினை மருந்து உதவி என வளைத்தவர்கள், கோவிலை இடிப்போம் என மிரட்டி சின்னமருதுவினை பிடித்து உடனெ கொன்றார்கள்

இதே நாளில் கொன்றார்கள், ஆனால் இந்த தேதியில் ரகசியமாக கொல்லபட்டாலும், மக்களுக்கு அஞ்சி அவர்களின் உடலை பிரிட்டிசார் உடனே கொடுக்கவில்லை

27ம் தேதிதான் அவர்கள் உடல் காளையார் கோவில் எதிரில் புதைக்கபட்டது

மண்ணும், மதமும் உயிரைவிட மேலானது என வாழ்ந்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம் கடமை

இத்தேசம் கண்ட மாபெரும் வீரர்களில் என்றுமே மருதுபாண்டியருக்கு உயர்ந்த இடம் உண்டு, தமிழரின் வீரம் அது

அந்த வீர வேங்கைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பெரிய மருதுவின் மகனை பிரிட்டிடார் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தினர், அவர் பெயர் துரைச்சாமி, இன்றும் மலேசிய பழமை தமிழ் குடும்பங்களில் மூத்தவன் பெயர் துரைசாமி.

துரைச்சாமிக்கு அப்போது ஐந்து வயது, அவனை விட்டுவைத்தால் மக்கள் அரசனாக்கிவிடுவார்கள் என பிரிட்டிசார் செய்த வஞ்சகம் அது

மறக்க முடியா வீரமும் தியாகமும் அந்த மருதிருவருடையது

அவர்கள் உடல் கொல்லபட்டிருக்கலாம், ஆனால் இந்நாட்டு விடுதலையிலும் அவர்கள் அள்ளிகொடுத்த ஆலயங்களும் அவர்கள் செய்வித்த தேர்களும், அவர்களால் கட்டி காக்கபட்ட காளையார் கோவில் கோபுரமும் உள்ளவரை அவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

கடைசியாக ஒன்றை சொல்லலாம்

மருதிருவரை வெள்ளையன் தனியாக கொல்லவில்லை அவனின் விசுவாசிகள் பங்காளிகள் இன்னபிற மக்கள் என கிட்டதட்ட 800 பேரை மொத்தமாக கொன்றிருக்கின்றான்

ஜாலியன் வாலாபாக் கொடுமைக்கு சற்றும் குறையாத கொடூரம் அது

விட்டால் எவனாவது ஒருவன் பழிதீர்க்க கூடும் என்பதும் எதிரியினை மொத்தமாக அழி என்பதும் அரசியல் கணக்கு, ஆனால் பெரியமருதுவின் மகனை கொன்றால் அது வேறுமாதிரி ஆகும் என்பதாலும் அவன் பாலகன் என்பதாலும் அதாவது அரசனின் வாரிசை ஒழிப்பது அக்கம் பக்கமும் அதிர்வுகளை உண்டாக்கும் என்பதால் நாடு கடத்தினான்

ஒரு சில திராவிட கோஷ்டி சொல்லிகொண்டிருக்கும் “அய்யயோ அவன் ஆண்டான் நாங்கள் அடிமை, அப்படி அடிமை இப்படி அடிமை எங்களுக்கு அது இல்லை இது இல்லை.” என ஏக புலம்பல்கள் புலம்பும்

ஆனால் அரசனோ ஆண்ட வர்க்கமோ, நாட்டுக்கு ஆபத்து என்றால் அவர்கள்தான் மொத்தமாக செத்த்திருக்கின்றார்கள், வாரிசே இல்லாமல் அழிந்திருக்கின்றார்கள்

மற்ற எல்லா இனமும் சுகமாய் பாதுகாப்பாய் அடுத்த ஆட்சிக்கு நகர்ந்திருகின்றன‌

ஆள்வதும், அரசனாய் இருப்பதும் அதில் பாதுகாப்பாய் இருப்பதும் சுலபலமல்ல, நிம்மதியான வாழ்வும் அல்ல

நிம்மதியாக ஆண்டு நிம்மதியாக ஓய்ந்த அரச இனம் ஆண்ட இனம் என எதுவுமில்லை, ஒருவகை சாபமான வாழ்வு அது. அதை கரித்து கொட்டுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை

அவர்கள் நாட்டுக்காய் ஆண்டார்கள், காவல் காத்தார்கள், ஆபத்தென்றால் குடிகளுக்காக செத்தார்கள்

மருதுபாண்டியரோடு செத்த அந்த 800 பேரோடு பல நினைவுகள் இந்நாளில் வருகின்றன, எல்லோருக்கும் ஆழ்ந்த அஞ்சலி

அந்த காளையார் கோவிலின் மேல் எம் நினைவினை நிறுத்தி சொல்கின்றோம், ஒருநாள் இங்கே தேசியமும் தெய்வீகமும் மலரும், அன்று இந்த மண் இவர்களை இன்னும் கொண்டாடும்

அந்நேரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெயர் “மாவீரர் மருதுபாண்டியர் கோட்டை” என மாற்றபடும், அந்த மாவீரர்களுக்கும் அவர்களோடு செத்த 800 வீரமக்களுக்கும் மிகபெரிய அஞ்சலியாக அது அமையும்

அமைந்தே தீரும், காளையார் கோவிலில் அன்றொருநாள் இந்த கொடுமையெல்லாம் கண்ட தெய்வம் அதற்கு பரிகாரமாக இந்த அஞ்சலியினை செய்ய துணைவந்தே தீரும்

ஆம், அந்த ஜார்ஜ் கோட்டைக்கு மாவீரர் மருது சகோதரர்கள் பெயரை சூட்டியே தீரவேன்டும். அக்கோட்டை இங்கே சுரண்டபட்ட செல்வத்தில் இங்குள்ள மக்களால் கட்ட்பட்டதே அன்றி ஆங்கிலேயன் அங்கிருந்து கொண்டுவந்த பணத்தில் கட்டபட்டது அல்ல‌

அக்கோட்டைக்கு மருதிருவர் பெயரை சூட்ட எந்த தயக்கமோ சந்தேகமோ துளியும் இல்லை, அவர்களை விட பொருத்தமான பெயரும் இல்லை

அந்நிய கிறிஸ்தவ தேசத்தவனால் கொல்லபட்ட இந்து மன்னர்களுக்கு, இந்து கோவிலை காக்க உயிர்விட்ட அந்த ஆயுதம் ஏந்திய சைவ‌ நாயன்மார்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்.