மாசி மகம்
இந்துக்களின் வானியல் அறிவு அக்காலத்திலே உன்னதமாய் இருந்தது, தங்களின் மாபெரும் தவவலிமையால் விண்ணக இயக்கத்தின் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த ஞானியர் அதனை வகை வகையாக சொல்லி வைத்து, ஒவ்வொரு கோளின் இயக்கமும் இந்த பூமியில் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கண்ணுக்கு தெரியாத வானலோக கதர்வீச்சும் சக்தியும் மானிட மனதை குணத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் உணர்ந்தனர்.
அப்படியே அவர்கள் அதனில் இருந்து தப்பவும் இன்னும் உன்னதமான பலன்களை அடையவும் பல போதனைகளையும் ஏற்பாடுகளையும் செய்தனர்.
அமாவாசை பவுர்ணமி காலங்களில் பூமி சந்திர ஈர்ப்புவிசை பலனால் கடல் மட்டம் குறைந்து கூடுவதை போல மானிட மனங்களிலும் சில சஞ்சலங்கள் இருப்பதை அறிந்தனர்
கிரகங்களின் கதிர்வீச்சு மானிட மனதை பாதிப்பதையும் அதனையே சில காலங்களில் பெரும் பலனாகவும் பெறமுடியும் என்பதை உணர்ந்தனர்
சந்திரன் தாக்கமே மன சஞ்ஞலம் தெளிவற்ற மனநிலைக்கு காரணம் என முதலில் சொன்னவர்கள் இந்துக்கள், பின் அவர்களிடம் இருந்தே மேற்குலகம் இதனை பெற்று சந்திரனின் பெயரான லூனா பெயரில் அந்த பாதிப்புள்ளோரை “லுனாட்டிக்” என அழைத்து இன்றுவரை அது நிலைத்தும் விட்டது
இப்படி பவுர்ணமி அமாவாசை அன்று மானிடர்களுக்கு சில நலன்கள் கிடைக்கவும் அவர்கள் மனநிலை தெளிவு பெறவும் பல ஏற்பாடுகளை செய்தது இந்துமதம்
அக்காலத்தில் இப்பொழுது இருப்பது போல் வார விடுமுறை இல்லை, இது ஐரோப்பிய பாணி, இந்துக்கள் மரபில் ஒவ்வொரு பாதினான்கு நாட்களுக்கு அடுத்து பவுர்ணமி அமாவாசை காலங்களே விடுமுறை தினமாக இருந்தது
அன்று மனசஞ்சாரம் அதிகமிருக்கும் என்பதும் சில பலன்களை பெற அவர்கள் பலவழிபாடுகளை மேற்கொள்ளா வேண்டும் என்பதற்காகவும் அப்படி வழி வகைகள் செய்யபட்டிருந்தன
அப்படி உருவானதுதான் ஒவ்வொரு மாதத்தின் ஒவ்வொரு பவுர்ணமிக்குமான விழாக்கள், 12 ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் போது வரும் 12 பவுர்ணமிகளும் முக்கியமானது என சொல்லி வைத்தது இந்துமதம்
அந்நாளில் அவர்கள் நிலவொளியில் நடக்கவும் உலாவவும் இப்படி வழி செய்தது இந்துமதம், இதனால் மேலே படும் நிலவொளி பலத்த நன்மைகளை கொடுக்கும், மனம் தெளிவடையும் இன்னும் பலவும் உண்டு
இது சித்திரா பவுர்ணமி முதல் பங்குனி உத்திரம் வரை தொடரும் என்றாலும் மாசி மகம் முக்கியமானது
மாசி என்பது பூமி இருக்கும் இந்த சூரிய மண்டலம் பிரபஞ்சத்தின் மைய இடத்துக்கு வரும் அப்பொழுது பல வகையான கதிர்வீச்சுக்கள் பூமிக்கு சிறப்பாக வரும், பல பிரபஞ்ச சக்திகள் தேடி வரும்
மாசி மாதத்தின் மூல பெயர் மக மாதம் அதாவது மக நட்சத்திரத்தை வைத்துப் பெயரிட்டது, தமிழில் மாசி என்றாகியிருக்கிறது. ககாரம் சகாரமாகி, மாகி என்பது மாசி என்றாயிருக்கிறது.
வைகாசி, புரட்டாசி, ஐப்பசி என்று சி யில் முடிந்தாற்போலவே, இங்கேயும் சி யில் முடித்து, மாசி என்று மாறிவிட்டது
இந்த மாசி மாதம் சூரியன் கும்ப ராசிக்கு வருவார், வானியல் ஜோதிட விதிபடி கும்பம் என்பது ஞான தெளிவினை கொட்டி கொடுக்கும் ராசி என்பார்கள், பெரும் புதையல் அதனில் உண்டு என்கின்றது ஜாதக விதி
அதனாலே அது கும்ப ராசி என்றானது
இந்துக்கள் மரபில் கும்பம் புனிதமானது, கோவில் கும்பம் புனித பொருட்களின் குவியலாக பார்க்கபடும் கொண்டாடபடும் அப்படி மாதங்களில் புனிதமானது இந்த கும்ப மாதம்
இதனாலே மகா சிவராத்திரி முதல், மாசி மகம், காரடையான் நோன்பு என ஏகபட்ட பண்டிகைகளை இந்துமதம் இந்த மாதத்தில் போதித்தது, பிரசித்தியான கோவில்களில் மாசி திருவிழா நடக்கும் காலமும் இதுதான்
இம்மாதம் சூரியன் கும்ப ராசிக்கு வரும்பொழுது அதன் சொந்த ராசியான சிம்ம ராசியில் சந்திரன் மக நட்சத்திரமன்று வருவார் இது மாசி மகம்
12 வருடத்துக்கு ஒருமுறை இந்த சிம்மராசிக்கு சந்திரனோடு குரு வருவார், அன்று கொண்டாடபடும் மாசி மகம் பண்டிகைதான் மகா மகம்
வடக்கே கும்பமேளா என கொண்டாபடடும் பண்டிகையும் இதுதான், உலகின் அதிக பக்தர்கள் கூடும் கொண்டாட்டமாக கருதபடுகின்றது, அன்று பிரக்யாகை திரிவேணி சங்கமும் கங்கை நீராடுதலும் மிக பெரிய கடமை
அப்படியே கும்ப அடிப்படையில் உருவான கோவில் நகரான கும்பகோணம் எனும் காவேரி கரை மக்கமும் இந்த மகாமகம் சிறப்பாக நடக்கும்
அப்படிபட்ட சிறப்பை கொண்டது இந்த மாசி மகம்
இந்துக்கள் ஏன் இந்த பவுர்ணமி நாளில் நீராடுதலை முக்கியமாக வலியுறுத்தினார்கள், ஏன் ஆற்றிலும் கடலிலும் நீராட சொன்னார்கள், நீருக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை
நீர் எல்லாவற்றையும் தன்னில் கிரகஹித்து அதன் தன்மையினை பெறும் தன்மை கொண்டது
அது தன்னில் எந்த நிறம் விழுமோ அந்த நிறத்துக்கு மாறும், தன்னில் எந்த சுவை கரையுமோ அந்த சுவைக்கு கரையும்
அது வண்ணபொடி கரைத்தால் வண்ணநீராகும், இனிப்பு கலந்தால் இனிப்பு நீர், கசப்பு கலந்தால் கசப்பு நீர் ,உப்பு கலந்தால் உப்பு நீர்
அப்படிபட்ட நீர் எல்லா மணத்தையும் தன் இயல்புபடி தன்னில் வாங்கும் தன்மையும் கொண்டது
இன்னும் பருவகால வெப்பமோ சூடோ அந்நிலைக்கும் அது மாறும், நீராக குளிரும் பனிகட்டியாகும் ஆவியாகும் இன்னும் பல வடிவில் மாறும்
இப்படி எல்லாவற்றையும் தன்னில் கிரஹிக்கும் சக்தியுடையது நீர், இதனாலே இந்து வழிபாட்டில் அது முக்கியமானது
பூஜையில் வைக்கபடும் நீர் மந்திர்சக்தி பெறுவதும் இப்படியே, கமண்டலத்தில் ரிஷிகள் நீரை சுமந்தபடி அலைந்து அதிசயங்கள் செய்ததும் இப்படித்தான்
காசியின் எண்ணற்ற ஆலய பூஜைகளின் பலன் இருப்பதாலே கங்கை நீர் இந்துக்களிடம் அவ்வளவு புனிதமானது
இப்படிபட்ட நீரானது இந்த மாசி மகம் நாளில் பிரபஞ்ச நல் அதிர்வுகளை தன்னில் நிரம்ப பெற்று கொள்கின்றது, அந்த நீரில் நீராடும்பொழுது நல்ல அதிர்வுகள் உடலில் இறங்கும்
இதனால்தான் மாசி மகம் அன்று நீர் நிலைகளில் நீராட சொன்னார்கள் இந்துக்கள், அன்று வெறும்காலில் பூமியில் நடந்து நீர் நிலைகளில் குளித்து பின் ஆலய பூஜைகளில் வழிபடுவது சால சிறந்தது நல்ல பலன்களை கொடுக்கும்
இதனால் மனம் தெளிவாகும், தெளிவான மனம் தெளிவான சிந்தனையினை கொடுக்கும், தெளிவான சிந்தனை நல்ல செயல்களை கொடுக்கும் இதனால் பலன் எல்லோருக்கும் உண்டு
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் எல்லா நாளும் சிறந்தது எனும் வகையில் இந்த மக ந்ட்சத்திர நாள் அதன் சொந்த ராசிபடி சிறப்பு அன்று சந்திரனும் வருவதால் பெரும் நல்ல அதிர்வுகள் பூமிக்கு வரும்
பூமியின் இயல்பான ஈர்ப்ப் விசை அதை ஈர்க்கும், அப்படியே நீர் நிலைகளும் அதனை ஈர்த்து வைப்பதால் நீராடினால் பலன் நிச்சயம்
கும்பராசியின் அதிபதி சனி, சிம்ம ராசி அதிபதி சூரியன், சிம்மராசியில் கேது பலமானவர், ராகு கும்ப ராசியில் பலமானவர் எனும் வகையில் ஒரு சமநிலை அன்று உண்டு, இது ஒவ்வொரு மனதின் சமநிலையினையும் சரிசெய்யும்.
இந்நாளில்தான் பல புராண நிகழ்வுகளும் நடந்தன என்பது இந்துமத ஐதீகம், அதுவும் நீராடுதல் தொடர்பானவை அவை
வருணன் கடலில் சிறைபிடிக்கபட்டான் சிவன் அவனை இந்நாளில் மீட்டார் என்பதும் நீராட சென்ற தட்சனின் மனைவி பார்வதி அவதாரமான தாட்சாயினையினை நீரில் கண்டெடுத்தாள் என்பதும் இந்நாளே
வராகமாக வந்து பூமியினை பகவான் மீட்டதும் இந்நாளே
முருகன் தன் தந்தைக்கு ஞானம் உபதேசித்து பாலஞானி என பெயர் பெற்றதும் இந்நாளே என்கின்றது புராணம்
இதெல்லாம் இன்று நீராடினால் நன்மை விளையும், ஞான தெளிவு வரும் என்பதை சொல்ல உருவான தத்துவங்கள்
இது இடையில் வந்த பண்டிகை அல்ல, இது எக்காலமும் இங்கு உள்ள வழிபாட்டு நாள்
“மதுரைக் காஞ்சி எனும் சங்க நூலில் அதன் ஆசிரியர் மாங்குடி மருதனார் இது பற்றி பாடுகின்றார்
புறநானூற்றுப் பாடலில் சங்ககாலப் பாண்டிய மன்னன் முந்நீர் விழாவின்நெடியோன் என்று அழைக்கப்படுவதாக ஒன்பதாவது பாடல் காணப்படுகிறது.
திருஞானசம்பந்தா தன்னுடைய சென்னை மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசு வரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.சைவத்திலும் இறைவனைத் தீர்த்தன் என்றே போற்றுவர்.
“பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்
நீர் ததும்பு உலாவு கங்கை நெடுமுடி நிலாவவைத்தாய்
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலைஉளானே
தீர்த்தனே நின் தன் பாதம் திறம் அலால் திறமிலேனே”
பொதுவாக எல்லா நாளும் இந்துமதம் கடலில் நீராடுதலை அனுமதிப்பதில்லை,அதன் சில நாட்கள் சரியில்லாதவை என்பது ஐதீகம்
அந்த இந்துமதம் சில நாட்களை இப்படி அனுமதிக்கின்றது அதனில் மாசி மகமும் ஒன்று
இந்நாளில் நீராடி நல்ல ஞான தெளிவினை பெறும் நேரம், தான தர்மங்களும் அவசியம். ஆம் நீராடிவிட்டு தானம் செய்துவிட்டுத்தான் வழிபாட்டினை முடித்தல் அவசியம்
அகதூய்மை புறதூய்மை செய்து எல்லா பலனும் மனதால் அடைய, பிரபஞ்ச பெரும் சக்திகளை ஈர்த்து நம்மை வலுபடுத்த வேண்டிய நாள் இது
இந்நாளில் இந்துமரபு படி சைவம் அவசியம், சுத்த சைவம் நல்லது விரதம் அதனை விட நலல்து
கடல்கரை நதிகரை என நீராடும் இடங்களில் சாஸ்திரமும் அவசியம்
நீராடும் நீரை கங்கையாகக் கருதி குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை ‘சப்த தீர்த்தம்’ என்று சொல்வர்கள்
இதனால் நீராடும் இடத்தில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, `கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ என்னும் ஸ்லோகத்தை சொல்லி விட்டு குளித்தால் நல்ல பலன் உண்டு
அப்படியே அந்நேரம் சொல்ல வேண்டிய ஸ்லோகமும் உண்டு
“மாக ஸ்நாநைர் விபந் நாசா:
மாக ஸ்நாநைர் அகஷயா:
ஸர்வ யஜ் ஞாதி கோ மாக
ஸர்வ தான பலப்ரத”
இதனைச் சொல்லி எல்லோரும் அந்த மாசிமக நீராடலை செய்து நற்பலன் பெற்று ஞான தெளிவடையட்டும், ஒவ்வொருவரும் தெளிவு பெற்றால் தேசம் தானாக தெளிவு பெற்று பலமாகும்.
இந்துக்களுக்கு தனி தலைவன் இல்லை, அரசன் இல்லை, உத்தரவிட்டு பின்பற்றவைக்க யாருமில்லை
ஆனாலும் இத்தனை ஆயிரம் வருடம் பெரும் பெரும் தடைகளையும் தாண்டி அது இப்படி கடல் போல் நிலைத்திருக்க காரணம் இம்மாதிரி பண்டிகைகளும் ஏற்பாடுகளும் வழி வழியாய் அதை காக்கும் இந்துக்களுமே.
இந்த ஏற்பாடுகளே இந்துமதத்தை இக்காலம் வரை நிறுத்துகின்றது, இவை பெருமளவில் கொண்டாடபட பட மதம் இன்னும் வலுவாகும் இன்னும் பரவும்
இந்நாளை குடும்பத்தோடு கொண்டாடி நீராடுதல் இன்னும் நல்லது, அடுத்தடுத்த தலைமுறைக்கு அப்பொழுதுதான் இந்துமதம் வலுவாக காலூன்றும்
முன்னோர்கள் அதைத்தான் செய்தார்கள், நாமும் அதையே சரியாக செய்வதுதான் இந்துமதம் எனும் ஞானமதம் வாழச் செய்யும் தொண்டு.