மார்கழியின் சிறப்பு

இந்துமதம் என்பது விஞ்ஞானமும் ஆன்மீகமும் வானவியலும் மருத்துவமும் கலந்த ஒரு விசேஷமான ஞானமார்க்கம்.

ஒவ்வொரு காலநிலைக்கும் மனிதரை அது நலம்பெற வைக்கவும் அந்த நலத்தில் இறைவனை தேடவும் பல வழிகளை வைத்திருக்கின்றது, மார்கழி மாதமும் அதில் ஒன்று

இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள்

மாதங்களில் அது சைவருக்கும், வைணவருக்கும் மேலான மாதம். சைவர்கள் தேவர் வரும் மாதம் என திருவெம்பாவை பாடி கொண்டாடுவார்கள். வைணவருக்கு கண்ணணே “அர்ஜூனா, மாதங்களில் நான் மார்கழி” என சொன்னபின் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?

ஒரு வகையில் இந்த மாதம் பண்டைய உலகில் கடவுளுக்கு அர்பணிக்கபட்ட மாதமாகவே இருந்திருக்கின்றது

மிக பெரும் பழமை மதங்களான கிரேக்கம் மற்றும் ரோமை மதங்களில் இக்காலகட்டம் கடவுளுக்கான கொண்டாட்ட மாதமாக இருந்திருக்கின்றது, மிக சரியாக கிறிஸ்து பிறந்ததாக அங்கே திரிபு செய்து தன்னை புகுத்தி கொண்டது கிறிஸ்தவம்

கிறிஸ்தவத்துக்கென எந்த பாரம்பரியோ கொண்டாட்டமோ கிடையாது அதன் ஆதாரம் யூதர்களுடையது, இதனால் செல்லுமிடமெல்லாம் எது அந்த மண்ணின் அந்த மக்களின் பூர்வமத கொண்டாட்டமோ அங்கே புகுந்து தன்னை வலுகட்டாயமாக நிறுத்துவது கிறிஸ்துவ அரசியல்

அப்படித்தான் டிசம்பரில் கிறிஸ்மஸும் வந்தது, அது புகுத்தபட்ட ஒன்று

ஆம் இயேசு என்பவர் இந்தமாதம் இந்த தேதியில் பிறந்தார் என்பதற்கு ஆதாரமில்லை, எல்லாம் பண்டைய பண்டிகையான‌ ஈஸ்டர் திருவிழாவில் இயேசு உயிர்ப்பை கலந்தது போல, ரோமர் கொண்டாட்டத்தில் புகுத்தபட்டது கிறிஸ்மஸ்

அந்த ரோமை மதத்திலும், கிரேக்க மதத்திலும் இந்துக்களின் சாயல் இருந்தது, அதிகாலையில் துயில் எழுப்புதல் பாடலும் இன்னும் பலவும் இருந்தன. இந்துக்களின் மார்கழி காட்சிகள் இருந்தன

அதில் மிக சரியாக கிறிஸ்து பிறப்பினை உட்சொருகிய கிறிஸ்தவம், அதிகாலை வழிபாடு, வானவர் வாழ்த்து இன்னபிற காட்சிகளை செய்து தன் வசபடுத்திகொண்டு ரோமை ,, கிரேக்க மதங்களை ஒழித்தது, அந்த மாதத்தில் கிறிஸ்துமஸ் மட்டும் நிலைத்தது.

ரோமை, கிரேக்க மதங்கள் அழிந்தன, ஆனால் அவற்றின் சம்பரதாயங்களை கிறிஸ்தவம் எடுத்து கொண்டது

ரோமானியருக்கு மார்கழி பஜனை போன்ற ஊர்வலமும் பாடல்களும் கிறிஸ்மஸ் கேரல்களாக மாறின , பைபிளில் அப்படி ஒரு ஏற்பாடும் போதனையும் இல்லவே இல்லை, யூதனுக்கே இல்லை

மார்கழி பஜனை போன்ற சாயல் கொண்ட ரோம வழிபாடு கிறிஸ்துமஸ் கேரல்களானது. ரோமை மதம் இந்து மத சாயலே

சீனர்களும் இந்தியர்களும் கலாச்சாரத்தாலும் பண்டை மதத்தாலும் ஒன்று என்பதால் இம்மாதம் அவர்களுக்கும் சில சாங்கியம் உண்டு, இதை அனுசரித்துவிட்டு சீன விழாக்களை கொண்டாடுவார்கள்

நாம் மார்கழி முழுக்க கடவுளை வணங்கிவிட்டு தைமாதம் கொண்டாட்டம் தொடங்குவோம்

இவை எல்லாம் தொன்றுதொட்டு வரும் கலாச்சார மத அடிப்படை விஷயங்கள், ரோமை மதம் அதை இழந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என மாறிவிட்டது, ஐரோப்பாவும் அவர்கள் புகுந்த் இடமெல்லாம் மாறிற்று

ஆனால் பாரதம் அதன் மார்கழி மகிமையினை அப்படியே பின்பற்றி வருகின்றது. இந்துமதம் அந்த பண்டைய பெருமையினை பாதுகாத்து வருகின்றது

இம்மாதம் முழுக்க கடவுளுக்கானது என்பதால் வேறு விஷேஷங்களை செய்யமாட்டார்கள், குடும்ப விழா இருக்காது, முழு வழிபாடு மட்டுமே வீட்டிலும் ஆலயங்களிலும் நடக்கும்

அக்காலத்தில் மார்கழியில் போர் கூட செய்யமாட்டார்கள், புனிதமான மாதம் என்பதால் போர் நிறுத்தம் இந்து மன்னர்களிடையே இருந்தது

இன்னும் ஏகபட்ட சிறப்புகளை கொண்டது இம்மாதம், பாற்கடல் கடையபட்டதும் கண்ணன் கோவர்த்தன மலையினை தூக்கி மக்களை காத்ததும் இன்னும் பல சிறப்புகள் கொண்டதும் இம்மாதமே

பகவான் கிருஷ்ணன் ஒவ்வொரு தமிழ்மாதமும் ஒவ்வொரு பெயரில் அழைக்கபடுவார், இந்த மாதத்தில் அவருக்கான பெயர் கேசவன். கேசி எனும் அரக்கனை கொன்றதால் கேசவன்

எண்ணற்ற ஆழ்வார்களும் அடியார்களும் நாயன்மார்களும் இம்மாதத்தில் தோன்றினார்கள், நம் கண் கண்ட பெரும் அவதாரமான ரமண மகரிஷி மார்கழியிலே அவதரித்தார்

இது தேவர்களுக்கான மாதம் என்பதால் அதிகாலையில் எழும்பி வழிபாடுகளை தொடங்குவார்கள், திருபள்ளி எழுச்சி மிக விமரிசையாக நடக்கும்

கடவுளை நாம் எழுப்பவேண்டுமா? இது மூடநம்பிக்கை என பகுத்தறிவு கோஷ்டிகள் ஏளனம் செய்யும், ஆழ கவனித்தால் அதன் ஏற்பாடு புரியும்

கடவுளை யாரும் எழுப்ப வேண்டாம், அது அவசியமல்ல ஆனால் அப்படி சொன்னால்தான் மனிதன் அதிகாலையில் எழும்பி கடவுளை தேடுவான் எனும் மறைமுக ஏற்பாடு அது

மங்கையரை வாசல் தெளித்து அதிகாலை கோலமிட சொல்வதும், தெருதெருவாக பஜனை நடப்பதும் அதனாலே

ஆம் எல்லோரும் இம்மாதத்தில் அதிகாலை விழித்தல் வேண்டும்.

விஞ்ஞானத்தில் சீதோஷண விஞ்ஞானம் என்றொரு பிரிவு உண்டு, அது கார்த்திகைக்கு அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதத்தில் மழை பெயது ஓய்ந்திருக்கும் மாதத்தில் அதிகாலையில் ஓசோன் காற்றில் அதிகரிக்கும் அதை சுவாசித்தால் உடலுக்கு நல்லது , மூளைக்கும் நல்லது என்கின்றது

பூமி சூரிய மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நுழையும் பொழுது குறிப்பிட்ட இந்த மாதம் அந்த வரம் பூமிக்கு கிடைக்கின்றது

இதனாலேதான் இந்துக்களை அதிகாலை வெளியில் நடமாட வைக்க தேவர்கள் வருவதாக சொல்லி வைத்தனர் அறிவார்ந்த இந்துக்கள்

அந்த மார்கழி குளிர் தூக்கத்தை வரவைக்கும் பருவம், அதில் லயிப்பவர்கள் அன்றாட கடமையினை தாமதமாக செய்தால் உலக இயக்கம் சரிவராது, இதனால் துயில் எழுப்ப ஆலயத்தில் திருபள்ளி எழுச்சியும் வீதிகளில் பஜனையும் நடந்தது

ஆன்மீகம் , அறிவியல், வானவியல், உளவியல் என எல்லாம் கலந்த விஷயம் மார்கழி வழிபாடு

சபரிமலை திருபயணமோ இல்லை பழனி போன்ற ஆலயங்களுக்கான திருபயணமோ இந்த மாதமே தொடங்கும், எல்லாம் மேற்சொன்ன ஏற்பாடுகளே

தைபூச விரத முருக பக்தர்களுக்கான விரத ஏற்பாடும் இக்காலத்திலேதான் நடக்கும்.

அதை அவசியம் எல்லொரும் செய்தல் வேண்டும்

தெய்வம் என்றொரு சக்தி இருக்கின்றது, அதை நீ காக்க வேண்டாம் துயில் எழுப்பி சுமக்க வேண்டாம், உன் ஆரோக்கியத்தை நீ காத்து கொள்ள தெய்வத்தின் பெயரை சொல்லி சில காரியங்களை செய் என்றது இந்துமதம்

ஆம் ஆரோக்கியம் என்பது வரம், அந்த வரத்தை அருளும் மாதம் மார்கழி. இதை சரியாக செய்தால் உடல் நலத்துக்கு ஒரு கேடும் வராது

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அதாவது முறையாக விரதம் இருந்து கடும் தவம் இருந்து செல்லும் பக்தர்களுக்கு வருடம் முழுக்க நோய் வராது என்கின்றது ஆய்வு

மார்கழி மாதத்தை முறையாக அனுசரிக்கும் யாரும் மருத்துவமனை வாசலை மிதிக்கபோவதில்லை

உடல் நலத்தை பேணவும் ஆன்மீகத்தை வளர்க்கவும் அன்றே இது தேவருக்கும் கண்ணனுக்குமான மாதம் என சொல்லி வைத்த இந்துமதம் எவ்வளவு அறிவானதும் உயர்ந்த சிந்தனை மிக்கதாக இருந்திருக்க வேண்டும்?

சிந்திக்க சிந்திக்க பெரும் ஆச்சரியமும் அதிசயமுமே விளங்கும்

மார்கழி மாதம் திருப்பவையும், திருவெம்பாவையும் பாடபடும்

இரண்டுமே தமிழுக்கு இந்துமதம் செய்த மாபெரும் இலக்கிய ஆலயங்கள், செந்தமிழின் தேன்சாறுகள், பெரும் அடையாளங்கள்.

மாணிக்க வாசகரும், ஆண்டாளும் தமிழை அப்படி ஆண்டிருக்கின்றார்கள்

மாணிக்க வாசகர் உருக வைக்கின்றார், ஆண்டாள் தமிழை அனாசயமாக ஆண்டிருக்கின்றாள். அந்த வார்த்தையும் உருக்கமும் சொல்லாடலும் இன்னொருவருக்கு வராது

அந்த திருவெம்பாவை வைரம் என்றால் திருப்பாவை வைடூரியம்

30 பாடல்களை ஆண்டாள் 30 நாளும் விரதம் இருந்து பாடினார் என்பார்கள்

அக்காலத்தில் கார்த்திகையில் பேசி முடித்து தை மாதம் திருமணம் செய்வார்களாம், அப்பெண்கள் மார்கழியில் மன்னவன் நினைப்பிலே இருபபர்களாம்

ஆண்டாள் பகவான் கண்ணனை தன் மணாளனாக நினைத்ததால் அவனுக்காக உருகி உருகி பாடியிருக்கின்றாள்

தமிழ் இலக்கியங்களிலே தனி சிறப்பு வாய்ந்தது திருப்பாவை, அவ்வளவு அழகிய சொற்கள் , வார்த்தை பிரயோகம், பக்தி, காதல், உருக்கம், ஏக்கம்

அதியுச்ச பக்திநிலைக்கு அதை விட்டால் பாடலே இல்லை

அந்த ஆண்டாள் மார்கழியில் இறைவனுக்கும் தமிழுக்கும் செய்த சேவை கால காலத்துக்கும் நிலைத்துவிட்டது, திருப்பதி முதல் தெருமுனை பெருமாள் கோவில் வரை இக்கால கட்டம் அனுதினமும் ஆண்டாளின் வரியோடு தொடங்கும்

சைவ ஆலயங்களில் மாணிக்கவாசகர் அருந்தமிழில் அடியெடுத்து கொடுக்கின்றார்

அது தமிழ்பேசும் மாகாணம் என்பதே ஆண்டாளாளும் மாணிக்க வாசகராலுமே அறியபடும் காலம் இது

ஆண்டாளின் பாடல்கள் பக்தியின் உச்சிக்கு இழுத்து செல்லும், மாணிக்கவாசகரின் வரிகள் கர்வம், மாயை, தற்பெருமை எல்லாம் சில்லு சில்லாக உடைக்க்கும்

மார்கழியில் தவறவிட கூடா பாடல்கள் இவை, மனதை பக்குபபடுத்தும் பாடல் அவை

மிக பக்தியாக அனுசரிக்க வேண்டிய மாதம் மார்கழி, அப்படி அனுசரித்தால் உடல் நலம் முதல் ஆத்ம நலம் வரை ஒருவனுக்கு ஓங்கும். உடல் நோயும் மனபிணியும் அவனை தீண்டா

“மாதாவை வணங்காத சிசுவும், மார்கழியில் இறைவனை வணங்காத ஜீவனும் வீண்” என்பார்கள்.

அப்படி இறைவனை வணங்கி அடுத்த நல்ல தலைமுறையினை உருவாக்குவோம், அடுத்த தலைமுறை நம் பாரம்பரியத்தினை தொடர்ந்து நல்ல உடல் மற்றும் மனபலத்தோடு உருவாகட்டும்

மார்கழியினை விரதத்துடனும் அதிகாலை வழிபாட்டுடனும் அனுசரிக்கும் அனைவருக்கும் பரந்தாமனின் அருள் மென்மேலும் பொழியட்டும், மானுடம் வாழட்டும் பாரதம் செழிக்கட்டும்.