முருகனின் மூன்று சோழதேச கோவில்கள்
முருகப்பெருமானின் ஆலயங்கள் உலகெல்லாம் உண்டு, ஒவ்வொரு ஆலயமும் முருகபெருமானின் அளவற்ற ஆற்றலையும் தனி கருணையினையும் சொல்பவை, அப்படியே தன் அடியார்மேல் அவன் கொண்ட அளவற்ற பிரியத்தையும் காலமெல்லாம் அந்த பக்தியின் பெருமை நிலைபெற்று நிற்க அவன் காட்டிய தனிபெரும் அதிசய வரலாறுகளின் காட்சிதலமாய் நிற்பவை
இப்படி ஏராளமான ஆலயங்கள் உண்டெனினும் மூன்று ஆலயங்கள் ஒரே ஒரு முருகபக்தனை, அவன் செய்த அற்புதமான கலையினை முருகபெருமான் சிலையாய் கொண்டு கண்முன் நிற்கின்றது
அந்த வரலாறு ஒவ்வொருவரும் அறியவேண்டிய ஒன்று, ஒவ்வொரு இந்துவும் முருகபெருமான் பக்தர்களும் தெரிந்திருக்கவேண்டிய பக்தி வரலாறு
அந்த அற்புதமான காலமும் காட்சியும் சோழநாட்டின் ஒரு பகுதியினை முத்தரசசோழன் என்பவன் ஆண்ட காலத்தில் நடந்தது
முத்தரசன் காலத்தில் சிக்கல் அருகே, அதாவது இன்றும் சூரசம்ஹாரத்தின்போது முருகன் வேல்வாங்கும் தலமான அந்த சிக்கலில், இப்போதும் வேல் வாங்கும்போது முருகபெருமானுக்கு முத்து முத்தாக வியர்க்கும் அந்த சிக்கல் எனும் ஊர் அருகே இருக்கும் “பொருள் கொண்ட சேரி” எனும் ஊரில் ஒரு சிற்பி வசித்துவந்தான்
அவன் அற்புதமான முருகபக்தன், முருகன் என்றால் அவனுக்கு சகலமும், மிக மிக நுணுக்கமான சிற்பகலை கொண்டிருந்தவனுக்கு அவன் தொழிலுக்கு இணையானவன் என்று எவனுமில்லை
அவன் இயற்பெயர் அறிவாறில்லை ஆனால் “சிற்பத்தில் பெரியவன்” என அழைக்கபட்டான் அது நாளடைவில் “சிற்பா” என மாறிற்று
அந்த முருகபக்தன் வகை வகையான முருகன் சிலையினை வடித்துகொண்டிருந்தான், தனிபெயர் அவனுக்கு உருவாயிற்று
இதனை கேள்விபட்ட மன்னன் முத்தரசன், தனக்கென ஒரு சிறந்த முருகன் சிலையினை உருவாக்கும்படியும் அதை சிக்கல் கோவிலில் அர்பணிக்க இருப்பதாகவும், அது விஷேஷமாக இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டான்
மன்னன் உத்தரவினால் மட்டுமல்ல, முருகபெருமானுக்கு சிறந்த சிலையினை அமைக்க இது நல்ல வாய்ப்பு என கருதிய சிற்பி பெரும் மகிழ்ச்சியுடன் களமிறங்கினான்
சிற்பத்துக்கு தேவை அருமையான கல், மிக தரமான பழுதில்லா கல் அவசியம், பின் மிக நுணுக்கமான உளிகள், சிறப்பான உலோகத்தில் செய்த உளிகள் முதனால கருவிகள் அவசியம்
பின் நல்ல முன்மாதிரி உருவம் அவசியம்
கல்லையும் உளியினையும் அரச உத்தரவால் தேடி தேடி பெற்றவன் மாதிரி உருவாக முருகனை மனதில் இருத்திகொண்டான், மனதில் நினைத்த உருவினையே வடிக்க தொடங்கினான்
முருகப்பெருமான் ஆறு முகத்தோடு தோகை விரித்த மயில்மேல் அமர்ந்திருக்கும் அக்கோலத்தை அழகுற செதுக்கினான் சிற்பி
எந்த அளவு நுணுக்கம் என்றால் மயிலின் தோகை வடிவை அவ்வளவு நுணுக்கமாக சிற்பத்தில் கொண்டுவந்தான், முருகப்பெருமானின் உடலில் நரம்புகளை கூட தெரியவைத்தான், விரல்கள் இடையே இடைவெளி வந்து, கைவிரல் ரேகைகள வரை காட்டினான்
காதில் தோடுபோடும் துளைவரை செய்து தத்ரூபமாக வடித்தான், கைவிரல் கால்விரல் நகங்களையும் துல்லியமாக செதுக்கினான்
ஆறுமுகங்களும் ஆறுவகை முகபாவங்களுடன் அருள் செய்வது போல அப்படியே கனிவான முகத்தை அங்கங்களுடன் கொண்டுவந்தான்
முத்தாய்ப்பாக இந்த பெரிய சிலை மயிலின் ஒரு காலில் நிற்கும்படி அசத்தினான், இன்னொருகால் லேசாக பூமியினை தொடுமே தவிர முழுக்க பதியாது
சிலையின் பன்னிரண்டு கண்களை அவன் திறந்தபோது பார்ப்போர்க்கு முருகப்பெருமானே காட்சி கொடுப்பது போல் பரவசம் வந்தது
ஒரு சிலைக்கு கண்ணை திறப்பதுதான் உயிர்கொடுக்கும் நேரம், அப்படி அவன் திறந்தபோது காண்போரெல்லாம் அசந்தே போயினர், அப்படியே உருகி மண்டியிட்டனர்
அப்படி ஒரு அழகான சிலை, ஆதிசயமான சிலை, ஆதாரம் மயிலின் ஒற்றைகாலில் நிற்கும் சிலை எங்கும் எந்தகாலத்திலும் இல்லை
சிலையினை கண்ட மன்னன் அப்படியே உருகினான், சிற்பிக்கு பொருளை அள்ளி அள்ளி குவித்தான், சிலையினை சுற்றி சுற்றி கண்டவனுக்கு மனதில் ஒரு விபரீதம் உண்டாயிற்று
எல்லா மன்னனுக்கும் ஒரு மெல்லிய அகங்காரம் மனதில் இருக்கும், உலகில் சிறந்தது தன்னிடம் இருக்கவேண்டும் எனும் கர்வம் இருக்கும், அவ்வகையில் முருகப்பெருமானின் சிலை தன்னிடம் மட்டுமே இருக்கவேண்டும் எனும் கர்வம் கொண்டான்
அப்படி கர்வம் கொண்டவன், இதைவிட அழகான சிலையினை இந்த சிற்பி இன்னொரு நாட்டில் இன்னொருவனுக்காக செதுக்கிவிட கூடாது என அஞ்சியவன் அந்த சிற்பியின் கட்டை விரல்களை கேட்டான்
ஒரு சிற்பிக்கு கட்டைவிரல்தான் வண்டிக்கு அச்சாணி போன்றது, அது அல்லாமல் சிலை செதுக்கமுடியாது, ஆனால் மன்னனின் வேண்டுகோள் பின் கட்டளையாகி மிரட்டலாகி, உயிருக்கு விரல் பரவாயில்லை என வெட்டபட்டது
சிற்பி முருகனிடம் அழுதான் புரண்டான், இப்படி ஒரு அநியாயம் தனக்கு நடந்ததை எண்ணி எழுதழுது முறையிட்டான் , முருகன் சிரித்தபடி இருந்தானே தவிர பதில் சொல்லவில்லை
தனக்கு அங்கு அநீதிநடந்தபின் அந்த “பொருள் கொண்டே சேரி” எனும் ஊரைவிட்டு அவன் நகர்ந்தான், அந்த ஊர் புலவாச்சேரி என்றாயிற்று
மன்னனோ சிற்பி இனி இப்படி ஒரு சிலையினை வடிக்கமுடியாது என கருதி அச்சிலைக்கு ஒரு கோவிலும் கட்டி வைத்துவிட்டான், அக்கோவில்தான் புரவாச்சேரி முருகப்பெருமான் ஆலயம்
அந்த சிலை அங்குதான் இன்றும் அழகுற காட்சியளிக்கின்றது
அங்கிருந்து வேதனையுடன் புறப்பட்ட சிற்பி உளிகளை மட்டும் எடுத்துகொண்டு தெற்கு நோக்கி நகர்ந்தான், அங்கே ஒரு ஆலயத்தில் தஞ்சமடைந்தான்
அந்த ஆலயம் எட்டிமரங்கள் நிறைந்திருந்த பகுதியில் இருந்தது, எட்டிமரங்கள் நடுவே குடிகொண்டிருந்த முருகபெருமான் ஆலயத்தில் வான்மீகி எனும் சித்தர் ஜீவசமாதி அடைந்திருந்தார்
அந்த முருகப்பெருமான் ஆலயத்தில் தஞ்சமடைந்து அந்தசித்தர் சமாதியில் மன்னன் தனக்கு செய்த கொடுமைகளை சொல்லி சொல்லி அழுதார் சிற்பி,கைவிரல் இழந்த நிலையில் கோவில் வேலைகளை செய்து கிடைத்ததை உண்டு வாழதொடங்கினார்
ஆனால் அவர் புரவாச்சேரியில் இழந்த அந்த அழகான முருகப்பெருமான் சிற்பம் அவர் கண்ணுக்குள்ளே வந்தது, அப்படி ஒரு சிற்பத்தை ரகசியமாக வடிக்க முனைந்தார்
ஆனால் கட்டைவிரல் இல்லா தன்னால் என்ன செய்யமுடியும் என ஏங்கியவருக்கு ஒரு சிறுவன் துணையாக கிடைத்தான், அவனை சிற்பகலைக்கு பழக்கினார், அவரும் தன் இதர விரல்களால் சிலை செதுக்க பயிற்சி பெற்றுகொண்டார்
சிறுவன் துணையோடு ஒரு பாறையினை கண்டெடுத்து அதை ஆலயத்துக்கு புறம்பாக ரகசிய இடத்தில் வைத்து செதுக்க தொடங்கினார்
புரவாச்சேரி சிலை போலவே அதனை அதே வடிவில் அதே அளவில் அதேபோல் போற்றும் பொலிவில் செய்யதொடங்கினார்
அவர் சிலை செய்யும் விஷயம் அக்கம் பக்கம் தெரியஆரம்பித்தது, அவர் மறைவாய் செய்தாலும் விஷயம் கசிய ஆரம்பித்தது
ஏற்கனவே மன்னன் இவர் என்ன செய்கின்றார் என அறிய உளவாளிகளை அமர்த்தியிருந்தான், இவர் ஏதோ செய்கின்றார் எனும் செய்தி மன்னனை எட்டிற்று
ஆத்திரமடைந்தவன் சிலைக்கு கண்திறக்கும் நேரம் வந்துவிட்டான்
சிலை என்பது சாதாரணம் அல்ல, பல வகை அம்சங்களும் பெரும் நுணுக்கமும் நிறைந்தது, தமிழக இந்துக்கள் அக்கலையில் தனி நிபுணத்துவம் பெற்றிருந்தனர்
32 லட்சணங்களை கொண்ட சிலை உயிர்பெறும் என்பது சாஸ்திரம், அப்படி ஒரு சிலை பெரும்பாலும் அமைக்கமுடியாத ஒன்று
ஆனால் புரவாச்சேரியில் இழந்த சிலைக்கு ஈடாக அப்படி ஒரு சிலையினை இங்கே 32 லட்சணங்களுடன் சிற்பி அமைத்து சாதித்தார், கைவிர்ல் இழந்த நிலையிலும் சாதித்தார், அப்படியே மயிலின் ஒரு காலில் மொத்த சிற்பமும் அழகுற நிற்கும்படி சாதித்தார்
சிலை கண்திறக்கும் நேரம் வந்த மன்னன் அதிசயித்தான், அச்சிலை 32 லட்சணங்களுடன் அதிசயித்து நின்றது
மன்னன் வந்ததும் சிற்பி அஞ்சினான், முருகா என சரணடைந்தான், அப்போது அச்சிலை உயிர்பெற்று எழுந்தது ஆம், அது பறக்க தொடங்கிற்று
கூட்டம் அலறியது, பிடியுங்கள் பிடியுங்கள் என கத்தியது
சிற்பி முருகபெருமானை வேண்ட அச்சிலை மறுபடி அமர்ந்தது, மன்னன் அதிசயித்தான் அரண்டே போனான் ஆனாலும் சிற்பி தன்னை மீறி தன் கட்டளையினை மீறி இன்னொரு சிலை வடித்ததை அவனால் தாங்கமுடியவில்லை
மக்களுக்கு அஞ்சிய அவன் சிற்பியினை வஞ்சகமாக பழிவாங்கினான், அந்த சிறுவனை தன் ஆட்கள் மூலம் பிரித்து வேறுநாட்டுக்கு அனுப்பியவன் சில விஷ மருந்துகள் மூலம் சிற்பி உறங்கும் நேரம் அவர் கண்களை பாழ்படுத்தினான்
சிற்பி பார்வையும் இழந்தான்
ஏற்கனவே விரலை இழந்தவன் அந்த கொடுமையால் கண்ணையும் இழந்தான், கண் இல்லா சிற்பி இனி இப்படி ஒரு சிலையினை படைக்கமுடியாது என இருமாந்த மன்னன், அந்த எட்டுகுடி கோவிலிலே அந்த சிலையினை ஸ்தாபித்தான்
அச்சிலை இன்றும் அங்கு உண்டு
இச்சம்பவத்துக்கு பின் அங்கிருக்க மனமில்லா சிற்பி குருடனாய் திருவாரூர் நோக்கி சென்றான், பெரும் சோதனை வந்தாலும் அவன் அழுதானே தவிர முருகபெருமான் மேலான பக்தியில் இருந்து கொஞ்சமும் விலகவில்லை
விரல் இல்லா வாழ்வு பழகியது போல கண் இல்லா வாழ்வும் அவனுக்கு பழகிற்று, கண்ணால் வழிபட்ட முருகனை அதன்பின் அவன் மனதால் வழிபட தொடங்கினான்
தன் வாழ்வு இந்த ஆலயத்திலே இனி குருடனாய் முடிந்துவிடும் என அஞ்சியவன் அந்த ஆலயத்துக்கும் ஒரு அழகான சிலையினை வடிக்க எண்ணினான், அதை செதுக்கிவிட்டு அங்கே செத்துவிடவும் விரும்பினான்
காரணம் மன்னன் ஊற்றிய விஷம் கண்ணை மட்டுமல்ல உடலையும் பாதிக்க தொடங்கியிருந்தது, உடல் நலம் கெடுவதை அவன் உணர தொடங்கினான்
அந்த ஊருக்கு பிரம்மபுரம் என பெயர், பிரம்மன் தன் சாபம் நீங்க முருகப்பெருமானிடம் அருள் பெற்று தன் எட்டு கண்களால் வணங்கிய ஊர் என அதற்கு பெயர்
எண்கண் முருகன் எனும் பெயர் அப்படி வந்தது என்பார்கள்
அந்த கோவிலில் கண் தெரியா நிலையில் எப்படி சிலைவடிப்பது என சிந்தித்தான், அம்மனே அப்போது ஒரு சிறுமியாய் வந்தாள்
அவள் அவனுக்கு ஆறுதலாய் இருந்தாள், அவனோடு பேசினாள் உணவூட்டினாள் அவள் அம்மன் என அறியா சிற்பியும் அவளிடம் சிற்பகலை பற்றி பேசினான்
தன் வீட்டில் சொல்லி கல்லும் உளியும் வாங்கி தருவதாகவும் நாம் இருவரும் சேர்ந்து சிலை செய்யலாம் என்றும் சொன்னாள் சிறுமி
தன் வாழ்வின் கடைசி நொடியினையும் முருகனுக்கே செலவழிக்க நினைத்தவன் தன் மனதில் நினைந்த மனதி வணங்கிய முருகனை அப்படியே பாறையில் முதலில் வரைந்தான்
பின் சிறுமியும் அவனுமாக செதுக்க தொடங்கினார்கள், சிறுமி அவன் மனதில் கண்ட காட்சிக்கு வடிவம் கொடுத்தாள்
“என் விரலை வெட்டலாம், கண்ணை பிடுங்கலாம் ஆனால் மனதில் தோன்றும் முருகனை யாரால் பிரிக்கமுடியும்” என வைராக்கியமாய் நின்று செதுக்கினான் சிற்பி
அவன் கைகளை பிடித்து உரிய இடத்தில் வைத்து செதுக்க உதவினாள் சிறுமி, உண்மையில் அமம்னே அவனோடு சேர்ந்து செதுக்கி கொண்டிருந்தாள்
சிறுமியின் கையால் செதுக்குவதும் பின் தடவிபார்த்து தடவிபார்த்து மகிழ்வதும் பின் தொடர்வதுமாக சிற்பி சிலையினை வளர்த்தான்
சில வாரங்களில் சிலை முடிந்தது இனி கண் திறக்கவேண்டும்
வழமைபோல் சிறுமி உளியினை வைத்து மெல்ல தட்ட சொல்ல அவனும் தட்டினான் “அம்மா” என அலறினாள் சிறுமி
காரணம் அவள் கை உளிக்கு அடியில் இருந்தது, அவளின் ரத்தம் தெறித்து சிற்பி கண்ணில் பட்டது, அந்த நொடி அவன் பார்வை பெற்றான்
“என் கண்கள்” , “என் கண்” தெரிகின்றது என கத்தினான், மகிழ்ந்தான் சிலையினை ஆரதழுவி முருகா முருகா என மகிழ்ந்து மகிழ்ந்து அழுதான்
அப்போதுதான் தன் கைவிரல் மீண்டும் வந்ததை கண்டவன் பணிந்து தொழுதான்
அப்படி மகிழ்ந்தவன் அந்த சிறுமியினை தேடினான் அவளை காணவில்ல்லை, ஆம் வந்த அம்மன் மறைந்துவிட்டாள், அந்த சிறுமி குரலை கேட்டானே தவிர கடைசிவரை அவள் முகம் காணவில்லை
அவன் செதுக்கிய மூன்றாம் சிலை இன்றும் எண்கண் முருகன் ஆலயத்தில் உண்டு
மூன்று சிலைகளையும் அப்படி செதுக்கியவன், பின் முழு ஞானியானான், யாராலும் எக்காலத்திலும் வடிகக்மடியா அழகான சிலைகளை முருகனுக்கு செதுக்கியவன் எண்கண் ஆலயத்திலே ஞானியாய் சித்தனாய் இருந்து மரித்தான்
அவன் கல்லறை இன்றும் எண்கண் ஆலயத்தில் உண்டு
முருகபெருமான் என்பவர் என்றோ வந்து எந்த அசுரனையோ அழித்துவிட்டு சென்றவர் அல்ல, அவர் எக்காலமும் உண்டு, எல்லா நாளும் உண்டு உலகம் தோன்றுமுன்பும் உண்டு அது முடிந்தபின்பும் உண்டு
அப்படிபட்ட முருகபெருமான் தன் அடியார்க்ளை தேர்ந்துகொண்டு அவர்களின் திறன் எதுவோ அதன் மூலம் தன்னைவெளிகாட்டி தன் அடியார் கொண்ட பக்தியினையும் உலகறிய செய்கின்றார்
கவிஞன், அரசன், புலவன், தனவந்தன் என யார் யாரையோ ஆட்கொண்டு அவர்களளை உலகம் அறியசெய்த முருகபெருமான் ஒரு சிற்பியினை தேர்ந்துகொண்டு மூன்று அழகிய சிற்பங்களை அதிசய சிற்பங்களை தனக்கென உருவாக்கி கொண்டார்
உலகின் மிக மிக அழகான உருக்கமான கண்டாலே பரவசமும் கண்ணில் நீரையும் வரவழைக்கும் சிலைகள் இவை
இவை தெய்வதன்மை வாய்ந்தவை, சிற்பி வடிவில் முருகப்பெருமான் கொடுத்தது தெய்வீக ஆரோக்கியம்
புரவாச்சேரியில் இச்சிலையினை தரிசிப்பாவ்ருக்கு பொருள் கூடும், எட்டுகுடியில் அச்சிலையினை காண்போருக்கு ஆரோக்கியம் வரும், எண்கண் ஆலயத்தில் தரிசிப்போருக்கு ஞானக்கண் திறக்கும்
ஆம் அறம், பொருள், ஞனத்தால் முக்தி என மூன்றையும் வழங்கும் ஆலயங்கள் இவை
சோழநாட்டு பக்கம் சென்றால் உலகின் மிக சிறந்த முருகன் சிலை, அதிசய சிலை , மூன்றும் ஒரேமாதிரி ஒரே அளவில் ஒரே அழகில் இருக்கும் இந்த புனிதமான சிலைகளை காண தவறாதீர்கள்
இச்சிலையினை கண்டு வழிபட்டால் எல்லாம் நலமும் அருளும் பொருளும் ஞானமும் முருகபெருமானால் கைகூடும், அதை தவறவிடாதீர்கள்
அழகான சிற்பவடிவில் முருகப்பெருமான் அங்கு உங்களுக்காக காத்துகொண்டிருக்கின்றார், எது கேட்பீர்களோ அது அங்கு கிடைக்க்கும் அது சத்தியம்