முருகப்பெருமான் ஆலயங்கள் : இரத்னகிரி முருகப்பெருமான் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : இரத்னகிரி முருகப்பெருமான் ஆலயம்.
வேலூர் மாவட்டம் இராணிபேட்டை அருகே அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். குன்று ஒன்றின் மேல் அழகுற எழுந்தருளியிருக்கும் இந்த ஆலயம் புராண காலத்துடன் தொடர்புடையது.
அசுரனால் விரட்டப்பட்ட இந்திரன் இம்மலையில் ஒளிந்திருந்தான், அவனைக் காக்க வந்த முருகப்பெருமான் இந்திரனையே மயிலாகக் கொண்டு அசுரனை ஒழித்து அவனுக்கு மீண்டும் தேவலோகப் பதவியினை வழங்கினார். அதிலிருந்து இங்கு முருகப்பெருமான் ஆலயம் ஸ்தாபனமானது.
இங்கு மலைப்பிளவில் தானே உருவான சுயம்பு விநாயகர் இன்னும் விசேஷம். இந்திரனை முருகப்பெருமான் மயிலாக மாற்றியபோது அது இரத்னமயமாக ஜொலித்தது. அதிலிருந்து இந்த மலை இரத்னகிரி என்றாயிற்று.
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலம் இது, “ரத்தினகிரி வாழ் முருகனே, இளைய வாராமரர் பெருமாளே” என அவர் இந்த ஆலயம் பற்றிப் பாடியுள்ளார்.
இந்தக் கோவில் ஆரம்பத்தில் சிலை மட்டும் கொண்டதாக இருந்தது. சோழமன்னர்கள் மலைமேல் கோவில் கட்டி திருப்பணிகள் செய்தனர், அப்போதே இந்த ஆலயம் அருளோடு இருந்தது.
குழந்தையில்லாப் பெண் ஒருத்தி அடிக்கடி இங்கு வந்து தன் குறை சொல்லி அழுதாள், ஒருநாள் கிருத்திகை அன்று ஆடுமேய்க்கும் சிறுவன் அவளை எதிர்கொண்டான், அவள் கண்கள் கலங்கியிருப்பது கண்டு காரணம் கேட்டான், அவள் தன் குறையினைச் சொன்னாள்.
அவன் தன் இடுப்புப் பையில் இருந்த விபூதியினை எடுத்து அவள் நெற்றியில் பூசிவிட்டு , இந்த முருகனுக்கு பாலாபிஷேகம் செய் எனச் சொன்னான், அவளும் கேட்டுகொண்டு நடந்தாள்.
சற்று நடந்தவள் திரும்பி பார்த்தால் அவனைக் காணவில்லை, அவன் சொன்னபடியே முருகனுக்குப் பாலாபிஷேகம் செய்து வந்தாள். விரைவில் அவள் குறை நீங்கிற்று.
அதன்பின் இது குழந்தைவரம் தரும் ஆலயமாக அறியபட்டாலும் பின்னாளில் அது மிக மிக மோசமான நிலைக்குச் சென்றது, மக்கள் கூட்டமுமில்லை, அரச உதவியுமில்லை.
இனி ஆலயம் அவ்வளவுதான் சிதலமடைந்து பாழாகிவிடும் என்ற காலம் 1970 இல் வந்தபோது கிட்டதட்ட ஒருவேளை பூஜைக்கும் வழியின்றி இனி ஆலயம் நடத்தமுடியாது என்றபோதுதான் ஒரு அடியாரை முருகப்பெருமான் அழைத்து வந்தார்.
அவர் பெயர் சச்சிதானந்தம். அருகிருக்கும் கீழ்மின்னல் கிராமத்தைச் சேர்ந்தவர். படித்து முடித்து மின்சார துறையில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவர், திருமணத் தடை இருந்ததால் இந்த ஆலயத்துக்கு வழிபட வந்தார்.
அப்போதுதான் முருகப்பெருமான் அவரை ஆட்கொண்டார், அது அவரின் முன் ஜென்ம பந்தத்தால் வந்தது.
அவர் அந்த ஆலயம் வந்தபோது அந்த ஆலய நிலை எப்படி இருந்தது என்றால் வாழ்ந்து கெட்ட முதியவர் இல்லம் போல் அது வறுமைபட்டிருந்தது, ஒரே ஒரு அர்ச்சகர் தட்டில் விபூதியோடு இருந்தார், அர்ச்சனை மணி கூட உடைந்திருந்தது.
இந்த சச்சிதானந்தம் சென்றபோது அர்ச்சனை செய்ய சூடமில்லை, சூடமில்லை என்பதை விட தீப்பெட்டிக்கே வழியில்லை, ஒரு ஊதிபத்தி கொளுத்திவைக்கக் கூட வசதியில்லை.
அதிர்ந்தார் அந்த சச்சிதானந்தம். இதற்கே வழியில்லா முருகனிடமா, இந்த நிலையில் இருக்கும் சக்தியற்ற ஆலயமா தன்னை காக்கும் எனக் குழம்பினார், அந்தக் குழப்பம் அவருக்கு மயக்கம் கொடுத்தது.
அந்த மயக்க நிலையில் அவர் கண்ட காட்சிபற்றி இன்றுவரை அவர் சொல்லவில்லை. ஆனால், மயக்கம் தெளிந்து எழுந்தவர் தன் உடை களைந்தார் ஒரு கோவணம் மட்டும் உடுத்தினார், கோவில் முன் சென்று அமர்ந்து கொண்டார்.
குருக்கள் அவரை விசிதிரமாக பார்த்தார், அவரோ பேசவில்லை. இரவானது எனச் சொல்லி குருக்கள் சென்றபின்பும் அவர் நகரவில்லை.
அவர் அங்கே பித்துபிடித்த நிலையில் இருந்தார், வற்றிவிட்ட குளத்தோரம் மான்குட்டி போல் அமர்ந்திருந்தார், பட்ட மரத்தில் தங்கிய பறவைபோல் அமர்ந்திருந்தார்.
அவரைக் காணாத பெற்றோரும் சொந்தபந்தமும் தேடி வந்தனர், அவர் அவர்களுக்கு மணலில் எழுதிக் காட்டினார்.
“இனி என் வாழ்வு இந்த ஆலயத்துக்கு, இங்கிருந்து நகரமாட்டேன்”
அவர் தோற்றம் மாறிற்று, பெயர் “பாலமுருகனடிமை” என மாறிற்று. அவர் ஒரு சித்தராக மாறிப்போனார். அந்தளவு முருகப்பெருமான் அவரை ஆட்கொண்டார்.
அவரைத் தரிசித்து சென்றால் நன்மை நடந்தது, அவர் முன் குறைகளைச் சொன்னால் உடனே தீர்ந்தது. மக்கள் அவரையும், ஆலயத்தையும் தேடிவர ஆரம்பித்தனர்.
அவர் ஒரு வார்த்தையும் பேசமாட்டார், சைகை மட்டும் செய்வார், பெரும் பக்த கூட்டம் இக்கோவிலைத் தேடி வர ஆரம்பித்தது, காணிக்கை கொட்டிற்று.
கொட்டிய காணிக்கையினைத் திருப்பணிக்கே செலவிட்டார், அந்த ஆலயம் புதிதாக மீண்டெழுந்தது, 1970 அவர் தொடங்கிய திருப்பணி 55 வருடமாக தொடர்கின்றது.
27 வயதில் தொடங்கிய அவரின் திருப்பணியால் கோவில் எழுந்து சந்நிதிகள் எழுந்து பெரும் தெப்பக்குளம் எழுந்து இன்று கோவிலே மலையிலும் மலை அடிவாரத்திலும் பெரும் கோபுரமும் சந்நிதியும், மக்கள் கூட்டமுமாக விழாக்கோலம் காண்கின்றது.
உலகிலே எங்குமில்லா வகையில் அறுகோண வடிவில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதம் கிருத்திகை அன்று வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.
தன் ஆலயத்தை ஒரே ஒரு அடியாரைக் கொண்டு மீட்டெடுத்தார் முருகப்பெருமான். பொதுவாக முருகன் ஆலயங்களில் சித்தர் சமாதி இருக்கும், இங்கே வாழும் சித்தராக முருகனடிமை சுவாமிகள் நின்று அருள்பாலிக்கின்றார்.
நம்பமுடியா அதிசயம் இது, ஆனால் கண்முன் நடக்கும் காட்சியும் இது.
ஒரு காலத்தில் சென்னிமலை ஆலயத்தை சாது கட்டினார், திருசெந்தூர் ஆலயத்தை சித்தர்கள் சந்நியாசிகள் கட்டியதாக வரலாறு உண்டு, அதைக் கண்ணெதிரே முருகப்பெருமானின் அருளால் காணும் இடம் இது.
இந்த ஆலயத்தை அவர் அறுபடை வீட்டின் சாயலாக ஸ்தாபித்தார், அதன்படி கோவிலில் இரு சந்நிதிகள் முருகனுக்கு உண்டு.
வள்ளி தெய்வானையுடன் மயில்மேல் இருக்கும் கோலமும், தனியே குருவடிவில் இருக்கும் கோலமும் உண்டு. அற்புதமான அமைப்பு இது.
முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் அமர்ந்திருக்கின்றார், அடிவாரத்தில் துர்க்கைக்குத் தனிக்கோயில் இருக்கிறது.
நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும், இங்கு வாராஹிக்கு சந்நிதி உள்ளது. அங்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது.
இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. திருமண தடை, புத்திர தடை உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பின் தடை விலகி பலன் பெருகின்றார்கள்.
முருகப்பெருமான் மட்டுமல்ல இங்கு வாராஹியும் சிறப்பு. அங்கு வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ளும் வழிபாடு உண்டு.
இந்த ஆலயம் முழுக்க முழுக்க அந்த பாலமுருகனடிமை சுவாமிகள் கையசைவில் நடப்பது, அவர் பேச்சற்ற நிலையில் எப்போதும் முருகப்பெருமான் நினைவிலே கலந்திருப்பார்.
சைகைகள் அல்லது எழுத்து ஒன்றிலேதான் அவரிடமிருந்து பதில் வரும். அவர் உத்தரவுப்படியே இந்த ஆலயம் இயங்குகின்றது.
55 வருடமாக இங்கு சித்த நிலையில் இருக்கும் அந்த முருகனடிமை சுவாமிகள் செய்திருப்பது பெரிய விஷயம். ஆனால், தமிழக வழமைபடி அது மறைக்கப்பட்டது அல்லது வெளித்தெரியவில்லை.
அந்தச் சுவாமிகளால் மீள உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் இன்று மிகப்பெரிய இடத்தை இந்திய அளவில் பெற்றுள்ளது, அந்தத் தலத்துக்கே பெரும் அடையாளம் கிடைதிருக்கின்றது.
ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் அந்த ஆலயத்தை நம்பி முருகனடிமை சுவாமிகளை நம்பி வாழ்கின்றது.
அந்த இரத்தினகிரிக்கு குடிநீர் வசதி, காவல் நிலையம், தபால் நிலையம், மின் வசதிகள், வங்கி வசதி, தங்கும் விடுதிகள், ஆராதனை பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் உணவக வசதிகள், திருமணங்கள் நடத்த கட்டிடங்கள், முடிகாணிக்கை செலுத்த பிரத்யேக கூடங்கள், அன்றாட அன்னதானம் 3000 நபர்களுக்கு மேல் என அவர் செய்திருக்கும் சாதனை கொஞ்சமல்ல.
முருகன் அருளால் அவர் அதைச் சாதித்தார், இன்னும் பல மக்கள் பணிகள் உண்டு.
தரமான மருத்துவமனை அங்கே இலவச மற்றும் ஆககுறைந்த செலவில் சிகிச்சை என நவீன மருத்துவமனை உண்டு, சுவாமிக்கு ஏகப்பட்ட மருத்துவ அன்பர்கள் உண்டு என்பதால் ஏழை மக்கள் பெரும் பலன் அடைகின்றனர்.
ஒரு வறண்ட பின் தங்கிய சிறிய கிராமம், கல்குவாரியில் அழிந்திருக்க வேண்டிய மலை என எல்லாம் அவரால் காக்கப்பட்டு இன்று பெரிய அடையாளம் பெற்றிருக்கின்றது.
முருகப்பெருமான் அவர்மேல் இறங்கி கண்முன் அதிசயங்களைச் செய்து கொண்டிருக்கின்றார், அந்த ஆலயமும் ஊரும் பெற்றிருக்கும் வாழ்வே சாட்சி.
இங்கு முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.
பொதுவாக, ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்குத் தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால், இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும். முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார்.
இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர். கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.
இந்த ஆலயத்தில் “பூ இட்டு அறிதல்” எனும் மரபு முக்கியமானது. பின்னாளில் அது “பூப்பறிதல்” என மருவிற்று.
அதாவது, எந்தத் தடை இருந்தாலும் முருகனை நினைந்து தங்கள் கைகளால் செடி வளர்த்து தங்கள் கைகளால் மலர் கொய்து முருகனுக்கு இட்டு வணங்கினால் நினைத்தது நடக்கும்.
விரும்பிய திருமணம் முதல் குழந்தை செல்வம் வரை இது நடக்கும், சாட்சிகள் ஏராளம். வேறெங்கும் இந்த மரபு இல்லை, அப்படி வளர்க்க முடியாதவர்கள் தங்கள் கைகளால் மலர் சாற்றினாலும் நிச்சயம் பலன் உண்டு.
வேலூர் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை தரிசிக்க மறவாதீர்கள். அங்கே பாலமுருகன் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றார், பால் கொண்டு அந்தக் குழந்தை வேலவனை தரிசித்தால் எல்லாப் பலனும் உங்களுக்கு அவன் அள்ளித் தருவான்.
அங்கே வாழும் சித்தராக சந்நிதிமுன் கௌதாம்பீனியாக அமர்ந்திருப்பார். அந்த “பால முருகனடிமை” சுவாமிகள், அவர் கண்பட்டாலே கர்மமெல்லாம் தீரும், அவர் விரலசைந்தால் கோடி அருள் கிட்டும்.
அந்த மகான் பாதத்தில் விழுந்து வணங்குங்கள், முருகப்பெருமான் ஆட்கொண்ட சித்தர் அவர், அருணகிரிநாதர் போன்றோரின் தொடர்ச்சி அவர்.
55 ஆண்டுகளாக அக்கோவில் விட்டு ஒரு அடி நகராமல் ஒருவார்த்தை பேசாமல் முழு தவத்திலிருக்கும் அந்த மகான் கால் தொட்டு வணங்கி நில்லுங்கள். அவர் சந்நிதியில் உங்களுக்கு எல்லா நலமும் அருளப்படும்; எல்லாக் குறைகளும் அகலும், வாழ்வு மலைமேல் இட்ட விளக்கு போல் ஜொலிக்கும்.
ஒரு மாபெரும் மௌனசித்தர் நம் கண்முன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், அவரை தரிசித்து முருகப்பெருமான் அருளை முழுக்கப் பெற்றுக்கொள்ள உங்களை அழைக்கின்றது அந்த இரத்னகிரி ஆலயம்.