முருகப்பெருமான் ஆலயங்கள் : வல்லக்கோட்டை முருகன் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : வல்லக்கோட்டை முருகன் ஆலயம்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் வல்லக்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ள ஆலயம் இது. இதன் தொன்மை முருகப்பெருமான் காலத்தோடு தொடர்புடையது.
முருகப்பெருமான் காலத்தில் சூரபத்மன் மட்டுமல்ல, ஏகப்பட்ட அசுரர்கள் தொல்லை கொடுத்து ஆடினார்கள். அப்படியான அசுரர்களில் வல்லன் என்பவனும் ஒருவன், அவனை முருகப்பெருமான் வதம் செய்த இடம் இது, அவன் பெயரிலே வல்லன் கோட்டை என்றாகி பின் வல்லக்கோட்டை என நிலைத்துவிட்டது.
இந்தத் தலம் தேவர்களின் அரசன் இந்திரனால் வழிபடப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. ஒருமுறை அசுரர்களுடனான யுத்தத்துக்குச் செல்லுமுன் முருகப்பெருமானை வழிபட்டு கூடுதல் பலங்களைப் பெற விரும்பினான் இந்திரன். அதனால் எங்குச் சென்று வழிபடுவது என தன் குரு பிரகஸ்பதியிடம் கேட்டான்.
அவரோ முருகப்பெருமானின் தலங்களில் இந்திரனுக்கு தகுந்தது என வல்லக்கோட்டைக்குச் செல்ல அறிவுறுத்தினார்.
அவர் உத்தரவுப்படி இந்திரனும் இத்தலம் வந்தான், அவன் ஒரு பாதிரி மரத்தடியில் முருகனின் உருவத்தினைப் பிரதிஷ்டை செய்து ஸ்தாபித்தான். அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்டு தனது வஜ்ராயுதத்தால் பூமியைத் துளைத்து ஒரு குளத்தை உருவாக்கி அபிஷேகம் செய்தான்; அவனுக்கு முருகப்பெருமான் எல்லா வரமும் அருளினார்; அவன் போரில் பெரு வெற்றி பெற்றான்.
இன்றும் அத்தலத்தில் அக்குளம் வஜ்ர தீர்த்தம் என்றும், இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டு அழியா அடையாளமாக நிலைபெற்றுள்ளது.
இந்தத் தலத்தின் முக்கிய வரலாறு பகீரத மன்னனுடையது. இது கங்கையினைப் பூமிக்கு அழைத்து வந்த அந்தப் பகீரதன் அன்று, வேறு பகீரதன்.
இவன் இலஞ்சி எனும் நாட்டை ஆட்சி செய்து வந்தான், மகா கர்வி. தன் நாடு செழிப்பானது, வளமானது, அதனால் எல்லோரும் தன்னைத் தேடி வருகின்றார்கள் எனும் இறுமாப்பு அவனுக்கு இருந்தது. அந்தக் கர்வத்தில் தன்னைத் தேடிவந்த நாரத முனிவரை அவமானப்படுத்தினான்.
அவர் ஆத்திரத்தில் அந்நாட்டை விட்டு வெளியேறும்போது கோரன் எனும் அசுரனைக் கண்டார், அவன் நாரதரை வணங்கி ஆசிபல பெற்றான். அவனின் பணிவில் உருகிய நாரதர் அவனைப் பற்றி விசாரித்தார்.
அவன் தான் அஸ்வமேதயாகத்துக்காக திக் விஜயம் செல்வதாக கூறினான். அதாவது, எல்லா மன்னர்களையும் வெல்வது அவன் நோக்கம்.
அவனிடம் இலஞ்சி மன்னன் பகீரதனை வென்றால்தான் உன் யாகம் பூர்த்தியாகும் எனச் சொல்லி அவனுக்கு மேலும் ஆசிகளை வழங்கினார் நாரதர். அந்தக் கோரன் எனும் அசுரனும் பகீரதனை வென்று அவன் நாட்டை கைப்பற்றினான், பகீரதன் தப்பி ஓடினான்.
அப்படி ஓடியவன் நாரத முனியினைச் சரணடைந்தான். அவனின் கர்வமெல்லாம் அகன்றிருந்தது, பெரும் மன்னனாகப் பெரும் அதிகாரத்துடன் இருந்தவன் ஒன்றுமில்லா நாடோடியாக உயிருக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருந்தான்.
அவனிடம் நீ துர்வாசமுனிவரிடம் செல், அவர் உனக்கு அபயவழி தருவார் என அனுப்பினார் நாரதர், அவன் முனிவரிடம் ஓடினான்.
துர்வாசர் அவனை இந்த தலத்துக்கு அனுப்பினார். பாதிரி மர அடியில் இருக்கும் முருகனை வணங்கச் சொன்னார், அவனும் வந்து அந்தத் தீர்த்தத்தில் நீரெடுத்து முருகப்பெருமானை அபிஷேகம் செய்து விரதமிருந்து வழிபட்டான்.
அவனின் தவத்துக்கு இறங்கி முருகப்பெருமான் சித்திரை மாதம் சுக்கிரவாரத்தில் முருகப் பெருமான் அவனுக்குக் காட்சி கொடுத்து மீண்டும் அரசுரிமை கிடைக்குமாறு வரமருளினார். அதன் பின் நாட்டை மீட்ட அவன் இங்கு முருகப்பெருமானுக்கு கோவிலை ஸ்தாபித்தான்.
அதிலிருந்து இங்கு வழிபாடுகள் தொடங்கின. இன்று இது பிரசித்தியான ஆலயமாக அப்பக்கம் விளங்குகின்றது.
இது அருணகிரிநாதர் வந்து வழிபட்டு பாடல்பாடிய தலம், அவர் இப்பக்கம் திருப்போரூர் வந்து முருகனை தரிசித்து விட்டு மறுநாள் திருத்தணி செல்லலாம் என நினைத்துக் கொண்டே உறங்கினார்.
அவர் கனவில் வந்த முருகன், “பக்தனே, என்னை மறந்தாயோ?” என மும்முறை சொன்னார். எந்தத் தலத்தை மறந்தேன் எனக் குழம்பிய அருணகிரியார் முருகனே தனக்கு வழிகாட்டட்டும் எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்.
அப்படிச் செல்லும் வழியில் வல்லக்கோட்டையினைக் கண்டடைந்து, இதுதான் நான் தவறவிட்ட முருகன் என மகிழ்ந்து மனமார பாடினார், எட்டுப் பதிகங்களைப் பாடினார்.
தன் பாடல்களில் இந்த வல்லக் கோட்டையை கோட்டை நகர், கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி, மற்றும் கோட்டை எனக் குறிப்பிடுகின்றார் அருணகிரியார்.
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் புராதனப் பெருமையுடன் அமைந்துள்ளது. வாயிற்கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றதும் மகா மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், பின்பு கருவறை வாயிலைக் கடந்து சென்றவுடன் இராஜ கம்பீரத்துடன் ஏழு அடி உயரத்தில் கிழக்கு நோக்கியபடி வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சந்நிதி உள்ளது.
அர்த்த மண்டபத்தில், தூண்களில் ஸ்ரீ காமாட்சி தவம் செய்வது போன்ற சிற்பங்களும், ஸ்ரீ ஹனுமானை இராமர் தழுவிய சிற்பங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் கன்னி மூலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ விஜய கணபதி சந்நிதி, அடுத்து ஸ்ரீ உற்சவர் சந்நிதி, அதனருகில் ஸ்ரீ சண்முகர் சந்நிதியும், மற்றும் ஸ்ரீ தேவி கருமாரி திரிபுரசுந்தரி சந்நிதியுமாக அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் 7 அடி உயரங்கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு முகமாய் அருள்பாலிக்கின்றனர், மிக அபூர்வமான அமைப்பு இது.
முருகனுக்கு எதிரே இரட்டை மயில் உண்டு. இந்தக் கோவிலின் கருவறை மிக எளிமையாக அக்கால தோற்றத்தில், எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் மட்டுமே முருகனை காணும் படி இருப்பது அழகைக் கூட்டுகிறது.
இந்த ஆலய பிரகாரத்தின் தென்மேற்குத் திக்கில் முக்கால கணபதி சந்நிதி உள்ளது. முக்காலமும் உணர்ந்த மூன்று கணபதிகள் ஒரே சந்நிதியில் இங்கு அருள்பாலித்து வருவர், இங்கு வழிபட்டால் முக்கால சாபமும் தீரும்.
மேற்குப் பிரகாரத்தில் உற்சவர் சந்நிதி உண்டு. இதனருகே தலமரமாகிய பாதிரி மரம் உண்டு.
இதன் வடமேற்கு பக்கம் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமானின் சந்நிதியும் பிரகாரத்தின் கிழக்கில் இடும்பன், கடம்பன், பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன. பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரி, உற்சவர் ஆகியோரது சந்நிதிகள் காணப்படுகின்றன.
இது துர்வாசர் பகீரதனை வெள்ளிகிழமை தொழச் சொன்ன ஸ்தலம் என்பதால் இங்கு வெள்ளிகிழமை வழிபாடு விசேஷம், வியாழக்கிழமை இரவு தங்கி மறுநாள் வஜ்ஜிர தீர்த்தத்தில் குளித்து, வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் எல்லா நலமும் வந்தடையும், இழந்ததெல்லாம் மீள வரும்.
இங்கு நாள்தோறும் 6 கால பூஜைகள் காமிக ஆகமத்தின்படி நடைபெறும். வைகாசி விசாகம், வைகாசி பிரம்மோற்சவம், ஆடிக்கிருத்திகை. கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம் பங்குனி உத்திரம் ஆகிய விசேஷங்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும்.
இங்கு எல்லா வேண்டுதலும் நிறைவேறும் என்பதால் நோய்கள் தீரும், குடும்பம் செழிக்கும், மனக்கவலை தீரும் என ஏகப்பட்ட அற்புதங்கள் நடப்பதால் இந்த ஆலயம் அங்குப் பிரசித்தியானது.
பல்லாயிரகணக்கான பக்தர்கள் கூடி காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் என எப்போதும் நேர்ச்சை வழிபாடுகள் செய்யும் தலம் இது.
காஞ்சிபுரம் பக்கம் செல்லும் போது இந்த முருகனைக் காணத் தவறாதீர்கள். மிகுந்த சக்தியுடன் இங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமான் நீங்கள் எதை இழ்ந்தீர்களோ அதையெல்லாம் நிரம்பத் தருவார்.
அவர் சந்நிதி முன்னால் என்ன முறையீடுவீர்களோ அந்தக் குறை நீக்கி உங்களைப் பெருவாழ்வு வாழவைப்பார், வல்லக்கோட்டை முருகன் சந்நிதி நல்லது எல்லாம் தரும்; நிரம்பத் தரும்; நிலைக்க நிலைக்க தரும். இது சத்தியம்.