முருகப்பெருமான் ஆலயங்கள் : கந்தகோட்டம் ஆலயம், சென்னை.
முருகப்பெருமான் ஆலயங்கள் : கந்தகோட்டம் ஆலயம், சென்னை.
சுமார் 400 வருடங்களுக்கு முன்பிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது என்றாலும் அந்த மூலவர் சிலையின் வரலாற்றை அறிந்தவர்களில்லை. எப்போதோ யாராலோ அழிக்கப்பட்ட ஆலயத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட முருகன் தன் அடியார் மூலம் பின்னர் மீண்டு வந்து இந்த ஆலயத்தில் அமர்ந்தார்.
அவ்வகையில் இந்த ஆலயம் 400 ஆண்டு வரலாற்றைக் கொண்டிருக்கலாம். ஆனால், மூலவர் சிலை மகா தொன்மையான காலத்தைச் சேர்ந்தது. இடையில் வந்த சமண பௌத்த காலமோ, இல்லை சுல்தான்களின் கொடுங்காலத்திலோ இந்தச் சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அப்படிச் சிலை மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை முருகப்பெருமான் தன் அடியாராலே மீட்டுத் தனக்கென ஒரு ஆலயமும் கட்டிக்கொண்டு எண்ணற்றவரை ஆட்கொண்டார். அதுதான் இன்று சென்னையின் கந்தகோட்ட ஆலயமாகத் தனித்து நிற்கின்றது.
இதன் வரலாறு மாரி செட்டியார் என்பவரிடமிருந்து துவங்குகின்றது. சென்னை பக்கம் சிறிய வியாபாரம் செய்து வந்த மாரி செட்டியார் தீவிர முருகபக்தர், அவர் கிருத்திகை தோறும் திருப்போரூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வந்தவர், ஒரு கிருத்திகைக் கூடத் தவறியது இல்லை.
திருப்போரூர் என்பது முருகப்பெருமான் தன் அடியார் சிதம்பரம் சுவாமிகளுக்குக் காட்சி கொடுத்த வகையில் பிரசித்தியான ஆலயம். அப்படி ஒரு காட்சித் தனக்குக் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர் இந்த மாரி செட்டியார், அவரின் மனம் அப்படி ஏங்கிக் கொண்டிருந்தது.
திருப்போரூரில் இருந்து இப்படி ஒரு கிருத்திகை அன்று மாரி செட்டியாரும், அவர் நண்பர் கந்தசாமி தம்பிரான் என்பவரும் திரும்பி வரும்போது இருட்டிவிட்டது. மழைக்கால மிரட்டலும் இருந்தது. இதனால் அருகில் இருந்த சத்திரம் ஒன்றில் தங்கிக் கொண்டார்கள்.
அது 1595 ஆம் ஆண்டு மார்கழிமாதம் 13 ஆம் தேதியாக இருக்கலாம் என்கின்றது செய்திகள்.
அப்போது மாரிசெட்டி கனவில் வந்த முருகன் அருகிருக்கும் புற்றில் தான் மறைந்திருப்பதைச் சொல்லி தன்னை எடுத்துச் சென்று ஆலயம் கட்டி வழிபட சொல்லி அவரை ஆசீர்வதித்தார். முருகப்பெருமானைக் கனவில் முழுக்கத் தரிசனம் செய்த மாரி செட்டி அளவில்லா ஆனந்தத்துடன் கண்விழித்தார். பின், நடந்ததைப் பிறரிடம் சொல்லிப் புற்றைத் தோண்டியபோது அங்கு முருகர் சிலை, தேவியர் இருவருடன் அப்படியே கிடைத்தது.
நம்பமுடியா அதிசயத்தை முருகப்பெருமான் தன் கண்முன் காட்டியதை , தனக்காகச் செய்தது போல் செய்ததைக் கண்டு மிகுந்த மனமுருகிய அந்த மாரி செட்டியார் முருகப்பெருமான் சிலையினைத் தானே சுமந்து வந்தார், மிகப் பயபக்தியாய்ச் சுமந்து வந்தார்.
அது கனமான சிலை என்றாலும் முதுகில் கட்டியபடி அவர் சுமந்து வந்தார்.
வரும்போதே இந்தச் சிலையினை எங்கு வைத்துக் கோவில் கட்டலாம் எனும் சிந்தனை அவருக்குள் ஓடியது. கோவில் என்றால் ஆச்சாரம், பூஜை என எல்லாம் மிகுந்தது, தன்னால் அதைச் செய்யமுடியுமா என்பது அவருக்குக் குழப்பமாயிற்று. ஆனால், கனவில் முருகன் தனக்குக் கோவில்கட்டச் சொன்னது அவர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இந்தக் குழப்பத்தில் அவர் வந்து கொண்டிருக்கும் போதே சிறிது இளைப்பாற அவர் சிலையினை ஓரிடத்தில் கீழே வைத்து, தாகம் தீர்த்துக் கொண்டார். பின், பயபக்தியாய்ச் சிலையினை எடுக்க முயன்றால் முடியவில்லை.
அவர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. முருகப்பெருமான் அவ்விடத்தில் குடிகொண்டதை அறிந்த அவர் அடுத்து என்னாகுமோ, இது யாருடைய நிலமோ எனக் கடுமையாகச் சிந்தித்தார். விஷயம் பரவி நிலத்தின் சொந்தக்காரன் வந்து பார்த்து நடந்த அதிசயத்தைக் கண்டு வணங்கி, அந்த நிலத்தை முருகப்பெருமானுக்கே வழங்கினார்.
மாரிசெட்டியார் பெரும் தனவான் அல்ல, சிறிய வணிகர். ஆனால், தன்னைத் தேடி வந்த முருகப்பெருமானுக்குக் கோவில் கட்டுவதில் உறுதியாக இருந்தவர், தன் மனைவியின் நகைகளை விற்றுக் கோவில் கட்டினார். விநாயகர் சந்நிதியுடன் சிறிய முருகப்பெருமான் சந்நிதியும் கட்டி வழிபாடுகளைச் செய்தார்.
பின், அவர் சார்ந்த ஆயிரம் வைசிய பேரி செட்டியார் சமூகத்திடம் ஒப்படைத்தார். அவர்கள் மெல்ல மெல்ல ஆலயத்தை விரிவுப்படுத்தினார்கள். ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரசித்தியடைவதைக் கண்டபடி மாரி செட்டியாரும் நிம்மதியுடன் முருகப்பெருமானோடு கலந்தார்.
400 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் சென்னை மாநகரம் இல்லை. அது ஏகப்பட்ட கிராமங்கள், குளங்கள், நிலங்கள் கொண்ட பகுதியாக இருந்தது. எண்பது கிராமங்களின் தொகுப்பாக வளரத் தொடங்கியது, அப்போது இந்த இடமெல்லாம் காடாக, வெறும் நிலமாகக் கிடந்தது, அப்போதுதான் ஆலயம் எழுந்தது.
இந்த ஆலயம் எழுந்தபின் சென்னை வேகமாக வளர்ந்தது. அதோடு எல்லா இடமும் கட்டடமும் வீடுகளும் வந்தன, அப்படி இந்த ஆலயமும் பெரிதானது.
அந்த வைசிய பேரி சமூகம் வழிவழியாக ஆலயப் பணிகளைச் செய்து கொண்டே வந்தது. அப்போது 18 ஆம் நூற்றாண்டை அண்மித்த காலத்தில் மூலவரைப் போல உற்சவரைச் செய்ய முடிவெடுத்தார்கள். மிகச் சிறந்தவனும், தெய்வாம்சம் கொண்டவனுமான சிற்பியினை அழைத்து வந்தார்கள்.
அந்தச் சிற்பியும் பஞ்சலோகத்தால் மூலவரைப் போல அற்புதமான உற்சவரை உருவாக்கினார். எனினும், வார்க்கப்பட்ட சூடு அடங்கும் முன் எடுத்ததால் சில பிசிறுகள் இருந்தன, அவற்றையும் நீக்கித் தரும்படி சிற்பியிடம் கேட்டனர் ஆலயத்தார்.
சிற்பியும் அப்படியே அது எளிதான பணி என உளியுடன் அச்சிலையினைத் தொட்டார். தொட்ட மாத்திரத்தில் மின்னல் தாக்கியது போல் தள்ளி விழுந்து சுருண்டார், தட்டுத்தடுமாறி எழும்பியவர் சொன்னார்.
“ஐயா, இது மிகச் சக்திவாய்ந்த சிலை. இதனைத் தொடக் கூட இனி முடியாது” எனச் சொல்லி சிலை முன் விழுந்து வணங்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
ஆலயத்தாருக்கும், மக்களுக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை. சில பரிகார பூஜைகளைச் செய்து, பின் சில மரகம்புகளைக் கொண்டு சிலையினை அப்படியே எடுத்து ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டனர், அதைத் தொடும் சக்தியும் தைரியமும் யாருக்குமில்லை, அச்சிலை என்றாலே அச்சம் இருந்தது.
அப்படி அது பூட்டப்பட்ட நிலையில் காசியில் இருந்து சபையர் பண்டிதர் என்பவர் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தார், அவர் இந்த ஆலயத்தில் மூலவரைத் தரிசனம் செய்துவிட்டு பக்தர்களிடம் கேட்டார், “மூலவர் இவ்வளவு அழகு என்றால் உற்சவர் எங்கே?”
அவர்கள் நடந்த சம்பவத்தைப் பயபக்தியாய் எடுத்துச் சொன்னார்கள், அவர் புன்னகைத்துச் சொன்னார், “மூலவரின் அருள் உற்சவரில் இருப்பது மிகச் சில ஆலயங்களிலேதான் உண்டு, நீங்களெல்லாம் பாக்கியசாலிகள்.
இப்படிச் சக்திமிக்க சிலைகளை உளியால் தொடக்கூடாது. சில மந்திரங்களால் சரி செய்யலாம்” எனச் சொல்லி அவர் திரையிட்டு மறைத்துச் சிலை முன் அமர்ந்து வழிபாடுகளைச் செய்தார்.
மூன்று மண்டலம் அவர் செய்த வேதவழிபாட்டில் உளி இல்லாமலே சிலையில் இருந்த பிசிறுகள் மறைந்தன. சிலை மிகுந்த பளபளப்பாக, அழகாக வந்தது. அதைத் தன் கையாலே ஸ்தாபனம் செய்து கொடுத்தார் சபையர் பண்டித சுவாமிகள்.
அந்த முகத்தில் இருந்த பிசிறுகள் சிறு முத்துப்புள்ளிகளாக மாறின, அதனால் அவர் முத்துக்குமாரசாமி என்றானார்.
இப்படி வந்ததுதான் இன்று காணும் உற்சவர் சிலை. இது மிகுந்த சக்திவாய்ந்தது. இங்கு எல்லா வகை அதிசயங்களும் நம்பமுடியா ஆச்சரியங்களும் நடந்ததால் பக்தர் கூட்டம் அலைமோதி இன்று ஆலயம் மிகப்பெரியதாக வளர்ந்து நிற்கின்றது.
கல்விப்பணி, மருத்துவப்பணி, எண்ணற்ற சமூகப் பணி என இந்த ஆலயம் சார்பாகச் செய்யப்படும் பணிகள் கணக்கற்றவை. எத்தனையோ லட்சக்கணக்கான மக்களுக்குப் பல சேவைகளைச் செய்யும் ஆலயம் இது.
இக்கோவிலின் தலவிருட்சம் மகிழ மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. ஐந்து நிலை கோபுரங்களைக் கொண்டது இக்கோவில்.
உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடி மரத்துடன் வீற்றிருக்கிறார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகுப் பொருந்தியவராகக் காட்சித் தருகிறார். விசேஷ நாட்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. குளக்கரை விநாயகர் சித்தி, புத்தியுடன் தனிச் சன்னதியில் காணப்படுகிறார். சரவணப் பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் உள்ளார். அவருக்கு வலப்புறத்தில் லட்சுமி தேவியும், இடப்புறம் சரஸ்வதி தேவியும் உள்ளனர்.
முருகப்பெருமான் இவ்விடத்தில் தானாகவே விரும்பி வந்தவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்துத் தரையில் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். மிகச் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தனித்தனி சந்நிதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேராக வாயில் கிடையாது. அவருக்கும் கொடி மரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிக மிகச் சக்திவாய்ந்தது. இது இந்திய வரலாற்றிலும் சென்னை வரலாற்றிலும் தொடர்புடையது.
சென்னை பக்கம் போர்ச்சுகீசியர் பெரும் இந்து ஆலய அழிவுகளைக் கடற்கரையில் செய்த காலத்தில் அதி அற்புதமாக உருவாகி வந்த ஆலயம் இது. இந்த ஆலயம் வந்தபின்பே அப்பக்கம் மதமாற்றமெல்லாம் குறைந்தது. கடைசிவரை அந்த அந்நியக் கும்பலால் இதனைத் தொடமுடியவில்லை.
இந்த ஆலயம்தான் சக்தி மிக்க பலரை உருவாக்கிற்று, பெரும் மகான்களை உருவாக்கிற்று, அவர்களில் முக்கியமானவர் வள்ளலார் சுவாமிகள்.
அவர் சிறுவயதில் இந்த ஆலயத்தில்தான் ஞானம் பெற்றார். அவர் சிந்தனை முழுக்க இறைசக்தி ஆக்கிரமித்தது. இங்குதான் மிகச் சிறிய வயதிலே அவரின் ஞானம் வெளிப்பட்டது, அவரின் ஆசிரியரும் குடும்பத்தாரும் அந்த ராமலிங்கம் எனும் சிறுவன் ஞான அவதாரம் எனக் கண்டது அங்குதான்.
அவரின் “தெய்வ மாலை” நூல் இங்குதான் பாடப்பட்டது.
இங்குப் பாரதியார் வழிபட்டிருகின்றார். இன்னும் பல ஞானியரும் மகான்களும் வழிபட்டிருக்கின்றார்கள். பாம்பன் சுவாமிகள் வழிபட்டு பாடல் பல எழுதியிருக்கின்றார்.
சென்னையில் மிக முக்கியமான முருகப்பெருமான் ஆலயம் இது. அங்கு எக்காலமும் முருகப்பெருமான் வல்லமையுடன் உண்டு.
சென்னையில் இருப்போரும் சென்னைக்குச் செல்வோரும் தவிர்க்கக் கூடாத ஆலயம் இது. முருகபக்தராக இருந்தால் அந்த உற்சவச் சிலையினைக் கண்டதும் உங்களுக்குத் தானாகவே கண்ணீர் வரும், இயல்பாகவே அபார சக்தி கொண்ட அச்சிலை சபையர் சுவாமிகளால் இன்னும் சக்தி கொடுக்கப்பட்டு முருகப்பெருமானின் தனி அருளில் உயர்ந்து ஜொலிக்கின்றது.
அங்குக் கால்வைக்கும் நேரம் உங்கள் சிக்கலெல்லாம் தீரும். பெரும் சுமை அகலும். மனகலக்கம் தீரும். சென்னைக்கே வாழ்வு தந்த அந்த ஆலயம் உங்கள் வாழ்வையும் மாற்றும், முழுக்க மாற்றும். இது சத்தியம்.
அங்குப் பணிந்து “தெய்வமாலை” நூலின் முழுப்பாடலையும் இப்படித் தொடங்கி பாடினால் எல்லா வினையும் அகலும். வாழ்வு மிக மிக நலமாகும். இது சத்தியம்.
“திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.”