முருகப்பெருமான் ஆலயங்கள் : மேலக்கொடுமலூர் முருகப்பெருமான் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : மேலக்கொடுமலூர் முருகப்பெருமான் ஆலயம்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ள ஆலயம் இந்த மேலக்கொடுமலூர் ஆலயம், முருகப்பெருமானின் மகா தொன்மையான ஆலயங்களில் இதுவும் ஒன்று, மிக மிக விசேஷமானதாக இங்கு அமைந்திருப்பது முருகப்பெருமானின் சுயம்பு வடிவம்.
ஆம், முருகப்பெருமான் இங்குச் சுயம்பு வடிவாக எழுந்தருளியிருக்கின்றார், அது எப்படிச் சுயம்பு உருவம் என உறுதிச் செய்யப்பட்டதென்றால் முன்பு திருப்பணிக்காக முருகப்பெருமானை வேறு இடத்துக்கு மாற்ற அந்தச் சிலையினைத் தோண்டியபோது அதன் ஆதாரம் கீழே சென்று கொண்டே இருந்ததே தவிர முடிவில்லை.
அதாவது, அது நிறுவப்பட்ட சிலை அல்ல. மாறாக, தானே உருவான சுயம்பு என்பது அப்போதுதான் தெரிந்தது, முருகப்பெருமான் சுயம்புவாக நிற்கும் வெகு சில ஆலயக்களில் இதுவும் ஒன்று.
இங்கு முருகப்பெருமான் வந்து அருள்பாலிக்கும் வரலாறு சூரசம்ஹாரத்தில் இருந்து துவங்குகின்றது. முருகப்பெருமான் அந்த யுத்தத்தில் சூரனின் மகன் பானுகோபனை மழு எனும் கோடரி போன்ற ஆயுதத்தால் வதைத்து அழித்தார், பானுகோபனை ஒழித்தபின் அவர் உக்கிரமாய் நின்று பின் தன் கோபம் தணிந்த இடம் இது.
இதனால் கையில் மழுவோடு அவர் காட்சியளிப்பார். முருகப்பெருமான் எப்போதும் வேலுடன் அல்லவா காட்சியளிப்பார், இங்கே மழு எப்படி வந்தது என்றால் அதற்குக் கந்தபுராணத்திலே விடை இருக்கின்றது
முருகப்பெருமான் சூரனை அழிக்க செல்லும் போது அன்னை சக்தி வேல் கொடுத்தாள் என்பது செய்தி. ஆனால், அந்த வேல் சிவசக்தி தத்துவமாகக் கொடுக்கப்பட்டது என்பதும், அப்போது சிவன் தன் உருத்திர அம்சங்களை ஆயுதமாகக் கொடுத்தார் என்பதும் கந்தபுராணம் சொல்லும் செய்தி.
முருகப்பெருமான் போருக்குச் செல்லும் போது சிவபெருமான் பதினோரு உருத்திரர்களையும் அதாவது தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு எனும் பதினோரு ஆயுதங்களாக்கி அளித்தார்.
கடைசியில் ஐந்து பூதங்களையும் ஒரு சேர அழிக்கக்கூடியதும் எவர் மேல் விடுத்தாலும், அவருடைய வலிமைகளையும் வரங்களையும் கெடுத்து உயிரைப் போக்கக்கூடியதும் அனைத்துப் படைக்கலங்களுக்கும் தலைமையான வேலை கொடுத்தார் என்கின்றது கந்த புராணம்.
“ஆயுதற் பின்னர் ஏவில் மூதண்டத்து
ஐம்பெரும்பூதமும் அடுவது
ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர்மேல் விடுக்கினும்
அவர்தம்
மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி
மண்ணியில் உண்பது
எப்படைக்கும்
நாயகமாவது, ஒரு தனிச் சுடர்வேல்
நல்கியே மதலை கைக் கொடுத்தான்.”
எனத் தெளிவாகச் சொல்கின்றது.
அப்படிச் சிவன் கொடுத்த மழுவினைக் கொண்டே மாய மந்திர யுத்தத்தை தரையில் கால்படாமல் மறைந்து பறந்து யுத்தம் செய்த பானுகோபனை மழுவால் வீழ்த்தினார் முருகன்.
அந்தக் கோலத்தில் அவர் நிற்குமிடம் மேலமழுவனூர் என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னாளில் அது மேலக்கொடுமலூர் என மருவி அப்பெயர் நிலைத்துவிட்டது.
மேல என்றால் மேற்குபக்கம் எனப் பொருள், கொடு மழு ஊர் என்பது கொடுமலூர் என மருவிற்று.
முருகப்பெருமான் மேற்கு நோக்கி நிற்கும் தலம் இது, அக்கோலத்திலே தன்னை நோக்கி தவமிருந்த ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் காட்சி கொடுத்த தலமும் இதுதான்.
இக்கோவில் முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு வழிபடப்பட்டது. பின், இராமநாதபுர சேதுபதிகளின் விருப்பமான இடமாயிற்று. இங்கு உடல்நலம் ஆரோக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பதால் மன்னர்கள் காலமுதல் இக்காலம் வரை கூட்டமும் வழிபாடும் மிக அதிகம்.
இந்த ஆலயத்தின் விருட்சம் கருவேலமரமான உடை மரம். முருகப்பெருமான் அந்த மரத்தடியில் இளைப்பாறினார் என்பதால் அதுவே இங்குத் தல விருட்சமாயிற்று.
இந்தக் கோவிலில் ஏகப்பட்ட அற்புதங்கள் சூட்சுமங்கள் உண்டு, வித்தியாசமான நடைமுறைகளும் உண்டு.
பொதுவாக, எல்லாக் கோவிலிலும் காலையில்தான் வழிபாடு நடக்கும். ஆனால், இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்திருப்பதாலும், மாலை நேரத்தில்தான் முனிவர்களுக்கு முருகன் காட்சிகொடுத்தார் என்பதாலும் இங்கு மாலை வழிபாடுதான் பிரசித்தி.
இங்குப் பொங்கல் வைக்கும் வழக்கமெல்லாம் இல்லை. மாறாக, ஆதிகால வழக்கப்படி தேனும் திணை மாவும் கனிவகைகளும் படைத்து முருகனை வணங்கும் வழிபாடுதான் உண்டு, நன்றிக்கடன் என்றாலும் இதுதான்.
இந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு மா, பலா, வாழை என முக்கனிகளால் அபிஷேகம் செய்யப்படும். இது அக்காலத்தில் மன்னர்களுக்கே உள்ள மரியாதை, மன்னர்கள் முன் மட்டுமே முக்கனி படைக்கப்படும்.
இங்கு முருகப்பெருமான் அக்காலமும் முதல் மன்னர்களுக்கெல்லாம் மன்னராகக் கருதபடுவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இன்றளவும் பின்பற்றப்படுகின்றது.
திங்கள், வெள்ளி, கிருத்திகை ஆகிய நாட்களின் மாலை பொழுதுகள் இங்கே விசேஷமானவை, அப்போது 33 வாசனை திரவியங்கள் கலந்து செய்யப்படும் அபிஷேகம் மகா சிறப்பு.
அது முப்பது முக்கோடி தேவர்களும் வந்து முருகப்பெருமானை வணங்கி துதிப்பதைச் சொல்லும் தாத்பரியம்.
இந்த ஆலயத்தின் தல விருட்சமான உடைமரத்தின் இலையினை உண்டு 48 நாட்கள் விரதமிருந்தால் எல்லாக் குறையும் தீரும், குழந்தை இல்லாக் குறை நிச்சயம் தீர்ந்து நல்ல மகவருள் கிடைக்கும்.
இந்த ஆலயம் மூட்டு வலி மற்றும் கால் சம்பந்தமான எலும்புச் சம்பந்தமான எல்லா நோய்களும் வலிகளும் தீரும், சூரனின் மகனான பானுகோபன் நிலத்தில் நில்லா வகையில் யுத்தம் செய்பவன், அவன் கால்கள் தரையில் படுவதில்லை. அவனை ஒடுக்கி அவன் சக்தியினை அகற்றி அவனை நிலத்தில் நிறுத்தினார் முருகப்பெருமான், அதன் பின்னும் அவன் அடங்காததாலே அவன் முடிவு நெருங்கிற்று.
அவன் கால்களுக்கு அவர் ஸ்திரதன்மை கொடுத்து நிறுத்திய வகையில் வந்த ஆலயம் என்பதால் இது மூட்டு வலிக்கு மிக மிக நல்ல தீர்வினை முருகப்பெருமான் அருளால் தரும் ஆலயம்.
கவட்டை வடிவ உடை மரக் கிளையினை, கொம்பினை வெட்டி முருகப்பெருமானுக்கு முன் வைத்து வேண்டினால் மூட்டுவலி, கால் வலி குறையும்.
இதன் இன்னொரு தாத்பரியம் வாழ்க்கையில் உங்களை முருகப்பெருமான் சொந்தக் காலில் நிற்க வைப்பார் என்பது.
கால் வலிக்கு மட்டுமல்ல, வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகிய பாதிப்புகளால் அவதிப்படும் மக்கள் இங்கு வந்து மாவிளக்கு ஏற்றி வைத்து முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் அந்த நோய் உடனே அகலும்.
இந்த மேலக்கொடுமலூர் முருகனை ஏகப்பட்ட அடியார்கள் வந்து வணங்கி பாடியிருக்கின்றார்கள், அவர்களில் பாம்பன் சுவாமி முக்கியமானவர்.
திருவேகம்பத்தூர் கவிராஜ பண்டிதர் இன்னொரு முக்கியமான பக்தர், அவர் அடிக்கடி இங்கு வந்து முருகனை வணங்கிக் கொண்டிருந்தவர்.
இன்னொரு முக்கிய கவிஞர் இஸ்லாமியரான ஜாவது புலவர்.
அவர் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் ஊரைச் சேர்ந்தவர், அவர் பெயர் முஹம்மது மீர் ஜவாது புலவர், மிகச் சிறந்த தமிழ் புலமை மிக்கவர்.
அவர் இராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள் என நிறைய பாடினார்.
17 ஆம் நூற்றாண்டில் அப்பக்கம் மிகச்சிறந்த கவிஞராக இராமநாதபுர மன்னன் அவையில் இருந்தவர் இந்த முருகனை வழிபட்டு “குமரையா பதிகம்” பாடினார் .
அவரின் குமரையா பதிகம் உருக்கமானது என்பதால் அது கல்வெட்டாக ஆலய வாசலில் பதிக்கப்பட்டுள்ளது, புலவருக்கு அங்குச் சிலையும் உண்டு.
இந்த மேலக்கொடுமலூர் முருகன் இப்படி எல்லா மதத்தவரையும் தன்பால் ஈர்த்துக் கொள்பவர், எல்லா மத மக்களும் வந்து பணியும் ஆலயம் இது.
பரமக்குடி பக்கம் சென்றால் இந்தமுருகனைக் காணத் தவறாதீர்கள். கண்ணுக்குத் தெரியாத வகையில் போரிட்ட பானுகோபனை வீழ்த்திய முருகப்பெருமான் உங்களுக்கே பிடிபடாத உங்கள் பிரச்சினை எல்லாம் தீர்த்துத் தருவார்.
தேனும் திணை மாவும் படைத்து அவரை வணங்குங்கள், மாவிளக்கிட்டால் இன்னும் நலம். மூட்டுவலி உள்ளோர் உடைமரத்து கவட்டையினை மஞ்சள் பூசி முருகனுக்குச் சமர்பித்தால் கால்வலியெல்லாம் தீரும்.
முக்கனிகளைச் சமர்பித்து வணங்கினால் உங்களுக்கு எல்லா நலமும் முருகப்பெருமான் அருள்வார்.
அந்த உடைமரத்தின் குச்சிகளைப் பிரசாதமாக எடுத்து வந்து வீட்டில் வைத்தால் எல்லா வகை காவலும் அந்த ஞானப்பண்டிதன் தருவான்.
மாலை வேளையில் முதல் ஆராதனை நடக்கும்போது உக்கிரமாக இருக்கும் முருகப்பெருமான் முகம், அடுத்த ஆராதனையில் புன்னகை பூக்க மலர்ந்து நிற்பது இந்த ஆலயத்தின் மெய்சிலிர்க்கும் தரிசனம்.
அதாவது, நம் கர்மவினைகளை முருகப்பெருமான் ஏற்றுப் புன்னனைக்கின்றார் எனும் அதிசயம் அங்கு அனுதினமும் நடக்கும், அந்த ஆலயம் சென்று தரிசித்து வருவோர்க்கு எல்லா அதிசயமும் நடக்கத் தொடங்கும். இது சத்தியம்.