முருகப்பெருமான் ஆலயங்கள் : தோவாளை செக்கர்கிரி மற்றும் அமரர்பதிகாத்த நயினார் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தோவாளை செக்கர்கிரி மற்றும் அமரர்பதிகாத்த நயினார் ஆலயம்.

பாரத தென்முனை எக்காலமும் தவம் செய்ய ஏதுவான இடம், இதனை அன்னை தேவி கன்னியாகுமரியில் வந்து அமர்ந்து சொன்னாள், இன்னும் பல அவதாரங்கள் அதை உறுதிப்படுத்தின. அந்தத் தென்முனை எப்போதும் சூட்சுமான சித்தர்களைக் கொண்டிருந்தது, அந்தச் சித்தர்களின் தலைவனாக கடவுளாக அந்த முருகப்பெருமான் வீற்றிருந்தார்.

அவர் இருந்ததாலே அகத்தியர், விசுவாமித்திரர், கௌதமர் என எல்லா ஞானியரும் தென் பக்கம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்கள், ஞானம் தேடி அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கும் முருகனுக்குமான பந்தம் எப்போதும் இருந்தது.

அகத்தியர் பொதிகை மலையில் தவமிருந்தார், விசுவாமித்திரர் கடலோரம் தவமிருந்தார், கௌதம முனிவர் இந்தத் தென்பழனி எனும் ஆரல்வாய் மொழி மலைப்பக்கம் தவமிருந்தார்.

இதனால் அவதாரங்களுக்கும் அவர்களுக்குமான தொடர்பு எக்காலமும் இருந்தது.

கௌதமரின் பேரன் கிருப்பாச்சாரியே பாண்டவர்களின் ஆசிரியருமாக இருந்தார், வனவாச காலத்தில் பாண்டவர்கள் வந்த இடங்களில் இந்த மலையும் ஒன்று.

இராமபிரான் தென்பக்கம் மிகவும் தொடர்புடையவர். அவர் சபரி எனும் பக்தை வாழ்ந்த சபரிமலைக்கு வந்தார், விசுவாமித்திரர் வாழ்ந்த விஜயாபதிக்கும் வந்தார்.

இராமபிரான் வனவாச காலத்தில் காடு காடாக அலைந்தார் என்பதைவிட ஒவ்வொரு ரிஷிககளாக சந்தித்து ஆசிபெற்றார், அப்படி அகத்தியரை இன்னும் பலரை அவர் தேடி தேடி சந்தித்தார். இராவணன் எனும் சக்திவாய்ந்தவனை வெல்ல அவருக்கு ரிஷிகளின் ஆசிர்வாதம் முழுக்க வேண்டியிருந்தது.

அப்படியே அவர் கௌதமமுனி வாழ்ந்த இடத்தின் பக்கம் வரும்போதுதான் கல்லாய்க் கிடந்த அகலிகை மீண்டாள். இந்த இடம் ஆரல்வாய்மொழி மலையில் உள்ளது.

அந்த அகலிகை கதையின் தொடர்ச்சியாகத்தான் தோவாளை எனும் இந்த ஊரும், அதன் வரலாறும் முருகப்பெருமான் ஆலயத்தின் அடுத்தப் பரிமாணமும் தொடங்குகின்றது.

கௌதமரின் சாபத்தால் உடலெல்லாம் புண்பெற்று சீர்கெட்ட இந்திரன் தன் சாபம் போக்க சுசீந்திரத்தில் வழிபட்டான். அப்போது அவன் மலர்களைச் சமர்பிக்க மாபெரும் நந்தவனத்தை உருவாக்கினான், அது கொடுத்த மலர்களால் சுசீந்திரத்தில் சிவன், பிரம்மன், விஷ்ணு எனும் மும்மூர்த்திக்கும் பூஜைகள் செய்தான்.

அதனால் அவன் தன் சாபம் தீர்ந்து சுத்தமானன். இந்திரன் சுத்தமான இடம் என்பதால் அது சுசி+இந்திரம் என்றாயிற்று, சுசி என்றால் மிகச் சுத்தமான எனச் சமஸ்கிருதத்தில் பொருள்.

அவன் நந்தவனம் அமைத்த இடத்தில் தேவர்கள் குடியிருந்து தங்கள் வேந்தனுக்காய் உழைத்தார்கள், தேவர்கள் இருக்குமிடமெல்லாம் முருகனும் தேவசேனாதிபதியாக இருப்பார், முருகப்பெருமான் செந்நிறமுடையவர், செவ்வாய் கிரகத்தின் அதிபதி அவரே.

இந்திரன் செய்த தவற்றினால் அவன் இரத்தத்திலும் ஆசை எனும் குற்றம் இருந்தது. செவ்வாய் கிரகம் இரத்தத்தோடு தொடர்புடையது என்பதால் சிவந்த நிறமுடைய முருகனை வணங்கி தன் பாவத்தைக் கரைத்தான் இந்திரன்.

அப்படிச் சிவந்த முருகன், செக்கச் சிவந்த முருகன் நின்ற மலை செக்கர் மலை என்றாயிற்று.

இந்திரனுக்காக வந்த தேவர்கள் வாழ்ந்த இடம் பின்னாளில் தேவர்வாழி என்றாகி “தோவாளை” என மருவிற்று.

இந்திரன் கொடுத்த வரத்தின் காரணமாக இன்றளவும் அந்தத் தோவாளை பகுதி மலர்களுக்குப் பெயர்பெற்றது, இந்தியாவின் மிகப்பெரிய மலர்ச்சந்தை அங்குதான் உண்டு, அன்றும் இன்றும் என்றும் அது மலர்களுக்கான தன் பிரசித்தியான இடத்தை விடுவதே இல்லை.

அந்தத் தோவாளையின் பூக்கள் அழகானது மட்டுமல்ல, அற்புதமான மணம் கொண்டதும் கூட. அதனால்தான் இன்றுவரை அந்த இடம் மலர்களுக்கான தனிச் சந்தையாய் நிலைத்திருக்கின்றது, இந்திரன் கொடுத்த வரம் அப்படி.

அப்படிப்பட்ட தோவாளை ஊரின் மலையில் அமைந்திருகிக்கும் முருகன் ஆலயம்தான், இந்திரன் சாபம் தீர்த்த ஆலயம்தான் செக்கர் மலை முருகன்.

கௌதமர் அகத்தியர் என எல்லா ரிஷிகளாலும் வணங்கப்பட்ட முருகன், இந்திரன் முதலான தேவர்களால் வணங்கப்பட்ட அம்முருகன் இராமபிரானாலும் வணங்கப்பட்டார்.

இராமபிரானுக்கும் முருகனுக்கும் தொடர்புகள் உண்டு, தன் வனவாசத்தின் போது இராமர் வணங்கிய முருகப்பெருமான் ஆலயம் இன்றும் கிரவுஞ்சபுரி என உண்டு, அங்கு முருகப்பெருமான் காலடியில் இராமர் அமர்ந்திருப்பார்.

கழுகு வடிவில் இருந்த முனிவர் சீதையினைக் காக்கத் தவறியதை சொல்லி இராமனிடம் வருந்தியபோது அந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக முருகப்பெருமானை வழிபட சொன்னார் இராமபிரான். அந்த இடமே கழுமலை முருகப்பெருமான் ஆலயமாயிற்று.

அப்படியான இராமன் இங்கு வந்து இந்த முருகனைப் பணிந்தார், அதன் பின்பே இதன் அருகிருக்கும் மகேந்திர கிரி மலையில் இருந்து அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையினைக் கண்டு வந்தான்.

இதனைக் குறிக்கும் வகையில் இன்றும் இராமன் சீதை அனுமனின் சிற்பங்கள் இந்தக் கோவிலில் உண்டு, இவை வேறு எந்த முருகப்பெருமான் கோவிலிலும் காணப்படாத சிறப்பு.

முருகப்பெருமான் ஒளவையாருடன் சுட்டக்கனி சுடாதகனி என விளையாடியதும் இங்குதான். அக்காலத்தில் இங்கு நாவல் பாதை என்றொரு மலைப்பாதையே இருந்தது, நாவல் மரங்கள் இடையே அப்பாதை சென்றது.

ஒளவையார் இப்பக்கம் வாழ்ந்தவர். இன்றும் அவருக்கான கோவில்கள் இந்த மலையினை சுற்றியே உண்டு, பூதபாண்டி அருகே ஒளவையார் ஆலயம் என்றும், முப்பந்தலில் ஒளவையார் ஆலயம் என்றும் நிரம்ப உண்டு. அவர் இப்பக்கம் வசித்தவர் இப்பாதை வழியே அவர் செல்லும் போதுதான் சிறுவன் வடிவில் வந்த முருகன் நாவல் பழங்களைக் கொண்டு “சுட்டக்கனி, சுடாதகனி” என விளையாடினான்.

அவற்றின் சாட்சியான மிகப் பழமையான நாவல்மரங்கள் இன்றும் அங்கு உண்டு.

ஒளவையாரின் பிரசித்தியான “அரிது அரிது” போன்ற பாடல்களெல்லாம் இங்குதான் பிறந்தன.

இவ்வளவு புகழுக்குரிய தலமே செக்கர்மலை முருகன் தலம். அன்றல்ல இன்றல்ல என்றும் அது சித்தர்களுக்கும், அவர்களுக்கான அருளுக்கும் உரிய முருகப்பெருமான் தலம்.

இந்தப்பகுதிகள் பழைய சேரநாடாக இருந்தவை. 1957 ஆம் ஆண்டு வரை கேரளாவின் பகுதிகளாக இருந்தவை பின்னாளில்தான் தமிழகத்தோடு வந்தவை என்றாலும் இந்துமதம் சந்தித்த எல்லாச் சவால்களையும் பௌத்த குழப்பம் இதர கிறிஸ்தவ கும்பல் செய்த குழப்பத்தை இந்த ஆலயமும் சந்தித்தது.

ஆனால், ஆவுடையம்மாள் எனும் ஒரு சித்தரால் இந்த ஆலயம் மீண்டும் துலங்கிற்று, அந்த அம்மையார் அதிசயிக்கத்தக்க சக்தி கொண்டிருந்தார், பெரும் முருகபக்தரான அவருக்கு எளிதில் சித்துநிலை வாய்த்தது.

அவர் இம்மலையில் குடிகொண்டிருந்தார். ஒளவையாரின் மறுபிறப்பு போலவே அவரின் வாழ்வு அதிசயம் நிரம்பியதாக இருந்தது, அவரால் இந்த ஆலயம் மீண்டது.

அவருக்கு ஒரு சீடர் கிடைத்தார், அவர் பெயர் லாட சுவாமிகள்.

அந்த ஆவுடையம்மாள் சீடரான லாட சுவாமிகள் பெரும் அற்புதங்களைச் செய்தவர். அப்பக்கம் குகைகளிலே குடிகொண்டிருந்தவர், எவ்வளவோ மகா மகா அற்புதங்களை எளிதில் செய்து மக்களைக் காத்தவர், அவர் சமாதியும் அவருக்கான சந்நதியும் அங்குதான் உண்டு.

அவர் எவ்வளவுக்கு சக்திவாய்ந்தவர் என்பதைப் பல இடங்களில் பக்தர்கள் உணர்ந்தார்கள், அவரின் தரிசனத்தைக் கண்டார்கள், கோவிலின் பல இடங்களிலும் நாவல்மர அடியிலும் பல உருவங்களில் அவரின் சாட்சிகளை உணர்ந்தார்கள்.

முன்பு அவர் தவம்செய்யும்போது அவருக்குக் குடைபிடித்த நாகம் இன்றும் கல்லாய்க் கிடப்பது மிக முக்கிய சாட்சி.

அந்த லாட சுவாமிகளைச் சந்திக்க ஏகப்பட்ட சித்தர்கள் பௌர்ணமிக்கு வருவதும் சித்தர் தன் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுப்பதும் மிக மிக வழமையான ஒன்று.

அந்தச் சித்தருக்கு அங்கு பழையகால சந்நதி உண்டு, கோவில் விரிவாக்கத்தின் போது அந்தக் கல் சந்நதியினை அகற்ற எவ்வளவு முயன்றும் முடியவில்லை, கடைசியில் பாறைகளை உடைக்கும் தோட்டாக்கள் வைக்கப்பட்டன, அப்போதும் அந்தச் சந்நதி கொஞ்சமும் அசையவில்லை.

இதனால் அந்தச் சந்நிதியினை அப்படியே விட்டுவிட்டார்கள். இன்றும் அது அங்கு உண்டு.

சக்திமிக்க இந்த ஆலயம் மலையாள மன்னர்களால் கொண்டாடப்பட்டது. திருவாங்கூர் மகாராஜாவின் முக்கிய கோவிலாக இருந்தது, அவர் ஆபத்து காலத்தில் வரவும், செல்லவும் இங்குப் பல குகைவழிகளும் சுரங்கங்களும் இருந்தன. இப்போது அவை பல மூடப்பட்டிருக்கின்றன‌.

இந்த ஆலயம் மலையில் இருந்தாலும் தரமான சாலை வசதி உண்டு, இதனால் வாகனத்தில் கோவிலுக்கே சென்றுவிடலாம்.

அங்குச் சுப்பிரமணிய சுவாமி கம்பீரமாக வீற்றிருபார். இவர் எப்போது உருவானவர் எனச் சொல்லமுடியா அளவு தொன்மையானவர், அச்சிலை கூட சில மூலிகைகளால் உருவானது, எந்த நோய் என்றாலும் என்ன கவலை என்றாலும் தீர்த்துத் தரும் ஆலயம் இது.

இம்மலை மூலிகைகள் நிறைந்த மலை என்பதால் எல்லா வித நோயும் குணமாகும். மனநலம் பாதித்தவர்கள், பித்தம் கலங்கியவர்கள் போன்றோர்க்கு இங்கு நல்ல சுகம் கிடைக்கும், சில நாட்கள் தங்கியிருந்தால் சித்தர்கள் அருளாலும் முருகப்பெருமான் வரத்தாலும் அவர்கள் நலம் பெறுவார்கள்.

மலையில் சிறிய கோவில் என்றாலும் இந்த முருகப்பெருமான் மகத்தான சக்தி கொண்டவர்.

பெரும் ரிஷிகளும் ஞானியரும் ஆஞ்சநேயரும் இராமபிரானுமே இந்த முருகரைப் பணிந்தார்கள் என்றால் அதைவிட வேறு எப்படி இந்தத் தலத்தின் பெருமையினைச் சொல்லமுடியும்?

இந்தச் சுப்பிரமணியசுவாமி சந்நிதிக்கு செல்வதற்கு முன்பாகவே ஆவுடையம்மாள் சமாதி உண்டு.

இம்மலைக்கோவிலில் பால் கிணறு ஒன்றுள்ளது. இதில் உள்ள தண்ணீர் பால் போன்று சுவையாக இனிப்பதால் அப்பெயர் பெற்றது, எக்கோடையிலும் வற்றாத இந்தச் சுனையின் நீர் நோய்தீர்க்கும், மருந்து, கோவிலின் தீர்த்தமும் அதுவே.

இந்தக் கோயிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் முடிந்ததும் கஞ்சி வழங்கப்படுகிறது. இந்தக் கஞ்சியை கர்ப்பிணிகள் பருகினால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை எந்தவிதக்குறைபாடும் இல்லாமல் முருகப்பெருமான் அருளுடன், ஆரோக்கியமாகப் பிறக்கும், பிள்ளை இல்லாதவர்கள் பருகினால் பிள்ளை செல்வம் கிடைக்கும்.

இங்கே தனிப் பாறை பகுதியில் ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் முன் பகுதியில் உள்ள ஆவுடையம்மாள் சந்நிதிக்கு முன்பாக காளிகோயில் உள்ளது. இந்தக் கோவிலின் சூலம் எப்படி வந்தது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. கன்னியாகுமரி அம்மனுக்கும் இந்தச் சூலத்துக்கும் தொடர்புகள் சூட்சுமமாக உண்டு.

இங்குக் கந்தசஷ்டி, தைப்பூசம், சூரசம்ஹார விழா, வைகாசி விசாகம் போன்றவை சிறப்பு. அப்படியே ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் பிரசித்தி.

தைப்பூசமன்று இங்கு கேட்கும் வரம் எதுவும் தப்பாமல் கிடைக்கும்.

இன்னும் இங்குப் பல குகைகளும் அவற்றில் ஏகப்பட்ட சிற்பங்களும் உண்டு. இராமபிரான் சீதாபிராட்டி சிலைகளும் உண்டு. சில குகைகளில் சூட்சுமமாக சித்தர்கள் வசிப்பதும் உண்டு.

இப்படியான பெரும் அதிசயங்களை, அற்புதங்களைக் கொண்டது செக்கர் கிரி எனும் முருகப்பெருமான் மலை, மிக மிக சூட்சுமமான சக்திகளைக் கொண்ட அற்புதமான தலம் இது.

இதுதான் மூத்த ஆலய சித்தர்களும், இராமபிரானும் இந்திரனும் வழிபட்ட ஆலயம், இது மலையில் இருப்பதால் மக்கள் வழிபட இதே தாத்பரியத்தில் ஊரில் இருக்கும் சிறிய குன்றில் ஒரு முருகப்பெருமான் ஆலயம் சேரநாட்டு மன்னர்களால் கட்டப்பட்டது.

இதற்கு “அமரர் பதி காத்த நயினார்” ஆலயம் எனும் பெயரும் உண்டு.

இந்தக் குன்றின் அடியில் முருகப்பெருமானின் மாமன் விஷ்ணுவுக்கு கோவில் உண்டு. மேலே நயினாராக முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார், நயினார் எனும் சொல்லுக்குத் தலைவன், காவல்காரன் எனப் பொருள் உண்டு.

நாயன், நாயனார்,நயினார் எல்லாம் ஒரே பொருளைத் தருபவையே.

இநத ஆலயத்திலும் இராமபிரான், சீதாபிராட்டி, அனுமன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இராமபிரான் இப்பக்கம் வந்தார் என்பதன் சாட்சியாக அது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திரனின் அடையாளமும் சில தூண்களில் உண்டு, மிகப் பழமையான ஆலயமும் இதுவானது.

இந்திரன் உருவாக்கிய அந்த மலர்களின் உற்பத்தி இன்றும் இப்பக்கம் உண்டு. ஊருக்குள் நுழைந்தாலே மலர்களின் வாசம் வரவேற்கும், இதனால் இங்கு முருகனுக்கு நடக்கும் மலர்முழுக்கு எனும் மலர் அபிஷேகம் மிக மிக பிரசித்தி.

நாகர்கோவில் செல்லும் போது, கன்னியாகுமரி பக்கம் செல்லும் போது இந்தச் செக்கர்கிரி முருகன், அமரர் பதிகாத்த நயினார் ஆலயம் எனும் இந்த இரு ஆலயங்களைக் காண மறவாதீர்கள்.

இந்திரன் தன் சாபத்தை இந்த முருகனிடம் வழிபட்டே போக்கினான். அப்படி உங்களின் பாவ சாபமும் தீரும், இராமபிரானின் கொடும் துன்ப காலம் இங்குதான் முடிந்தது, இந்த முருகனை தரிசித்தபின்பே இராமபிரான் சீதையினை மீளப் பெற்றார் என்பதால் உங்களுக்கும் அற்புதம் நிகழும்.

அந்த லாடசித்தர் சமாதியும், ஆவுடையம்மாள் சமாதியும் உங்களுக்கு எல்லா அருளையும் பொழியும்.

சப்தகிரிகள் என அழைக்கப்படும் மகேந்திரகிரி, வெள்ளையங்கிரி, சிவகிரி , நீலகிரி, சதுரகிரி, சபரிகிரியில் இது செக்கர்கிரி என முக்கியமானது. இங்கு வழிபட்டால் எல்லாத் துன்பமும் துயரமும் நீங்கும். சாபமெல்லாம் பாவமெல்லாம் நீங்கி வாழ்வே மாறும்.

அப்படியே அமரர்பதிகாத்த நயினார் முருகன் கோவிலும் எல்லா வரமும் தரும்.

அங்குச் செல்லும்போது கைநிறைய மலர்களை ஏந்திச் செல்லுங்கள், மாலைகள் கட்டி அள்ளிச் சென்று அந்த முருகனுக்கு சமர்பித்து வணங்குங்கள், அந்த முருகன் மலர்களின் மணம் போல் உங்கள் வாழ்வை உலகம் சிறக்க வைப்பான். தனிப்பெரும் வரத்தை, செல்வாக்கை, நல்வாழ்வினை உங்களுக்குத் தருவான். இழந்ததை எல்லாம் சேர்த்து மீளத் தருவான். இது சத்தியம்.