முருகப்பெருமான் ஆலயங்கள் : கன்னியாகுமரி முருகன் குன்றம் ஆலயம் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : கன்னியாகுமரி முருகன் குன்றம் ஆலயம் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆலயம்.
முதலாவது ஆலயமான முருகன் குன்றம் ஆலயம் கன்னியாகுமரியின் நுழைவாயிலில் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, இந்த ஆலய வரலாறு மகா தொன்மையானது. வரலாற்றின் அடிப்படையில் ஆழமானது.
அதாவது, இந்தப் பகுதிகள் சேரநாட்டின் தென்கிழக்கு எல்லையாய் இருந்த பகுதிகள். சேர நட்டின் கிழக்கு எல்லை மிகப்பெரிய மலைகளால் ஆனது என்பதால் இந்தப் பிரதேசம் மட்டும் சிறிய பகுதி மட்டும்
கொஞ்சம் காவல் செய்யப்பட வேண்டிய பகுதி என்பதால் இங்கு எல்லைகள் நீண்டு இருந்தன.
இன்று வட்டக்கோட்டை எனச் சொல்லப்படும் அந்தக் கோட்டை பகுதி முதல் ஆரல்வாய் மலை வரை தொடர் காவல் நிலையங்கள் நிரம்ப இருந்தன, அவற்றில் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அதாவது கடல்சார் நடவடிக்கைக்காகக்
புதுபிக்கப்பட்டது வட்டக்கோட்டை அன்றி வேறு இடங்கள் பழமையானவை.
இங்கெல்லாம் சேர மன்னர்களின் காவல் நிலையங்கள் இருந்தன. அப்படி அவர்கள் காவல் நிலையங்களிலெல்லாம் முருகப்பெருமானும் நிறுத்தப்பட்டு வணங்கப்பட்டார், சேரர்களின் எல்லையிலெல்லாம் இதனைக் காணமுடியும்.
இந்த இடத்திலும் ஒரு கோட்டை அக்காலத்தில் இருந்தது அந்தக் காலத்தில் நிறுவப்பட்டு காவல்தெய்வமாக வணங்கப்பட்டவர் இந்த முருகப்பெருமான். கடைசி வரை மலையாள மன்னர்கள் ஆப்கானியர் ஆளுகைக்குள் சிக்காமல் இருந்ததற்கு இதுவும் காரணமாக இருந்தது.
பின்னாளில் பலத்த மாற்றங்களால் இந்தக் கோட்டைகள் கைவிடப்பட்டன. அப்போது இந்த ஆலயமும் கைவிடப்பட்டது. பின்னாளில் அங்கு மிகப்பெரிய செம்பு வேல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதில் இருந்து இந்த ஆலயம் மீள் உரு பெற்றது.
ஏராளமான பக்தர்களும் இன்னும் பலரும் கூடி உருவாக்கிய ஆலயம் இது. இப்பக்கம் வந்த பாம்பன்சுவாமிகள் இங்கு வழிபட்டபின் ஆலயம் மிகப்பெரிய வடிவம் பெற்றது, மிக அழகான ஆலயமாக அமையப்பெற்றது.
சிறிய குன்றின் மேல் அமைந்திருப்பதால் அது முருகன் குன்றமானது, ஆலயம் இப்போது பழைய கோட்டை சுவரில் எழுப்பப்பட்டிருப்பது எளிதாக அடையாளம் காணக் கூடியது, சுமார் 200 படிகளைக் கடந்தால் ஆலயத்தை எளிதில் அடையலாம்.
அங்கு மயில் கொடிமரம் ஆகியவை பக்தர்களை வரவேற்கும் விநாயக பெருமானின் சந்நதி உண்டு. அடுத்து அங்குக் கண்டெடுக்கப்பட்ட அக்கால வேல் ஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கும்.
இக்கோவிலுக்கு முருகப்பெருமானால் அனுப்பப்பட்ட பாம்பன்சுவாமிகளின் சந்நதி ஒன்று அழகுற அமைக்கப்பட்டுள்ளது, உள்ளே கருவறையில். கிழக்கு நோக்கி முருகப்பெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார்.
இந்த ஆலயம் சேர மன்னர்கள் முருகப்பெருமானிடம் காவல் வேண்டி அமைக்கப்பட்ட ஆலயம். அக்கால மலையாள மரபுப்படி பெரிய பூஜைகளும் பெரிய யந்திரங்களுமாக செய்யப்பட்டு உருவான ஆலயம் என்பதால் சக்தி அதிகம். இந்த முருகப்பெருமான் தன்னை அண்டி வருவோர்க்கு எல்லாக் காவலையும் நிரம்ப அருள்வார், முழுக் காவலும் தருவார்.
இங்கு முருகப்பெருமானின் எல்லாச் சிறப்புநாட்களும் விசேஷமாகக் கொண்டாடப்படும் என்றாலும் ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் வழங்கப்படும் அன்னதானமும் சித்ரா பௌர்ணமி சிறப்புவழிபாடும் முக்கியமானது, பெரும் அருள் தரக்கூடியது.
கன்னியாகுமரிக்குச் செல்லும் போது அதன் நுழைவாயிலாகச் சாலையின் தென்புறம் நிற்கும் இந்த முருகன் குன்றம் ஆலயத்தைத் தரிசிக்கத் தவறாதீர்கள். அன்னையின் குமரனைத் தரிசித்த பின்பு பகவதியினைத் தரிசித்தால் பெரும் பலன் உறுதி, கேட்ட காவலை வரமாக தந்து இந்த முருகபபெருமான் உங்களைக் காவல் செய்து வாழவைப்பார், அவரின் வேல் எல்லாக் காவலும் எல்லா வகையிலும் தரும்.
அடுத்த ஆலயம் நாகர்கோவில் அருகே அமைந்திருக்கும் மருங்கூர் ஆலயம், அங்குச் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
இந்த ஆலயம் தேவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. முன்பே ஆரல்வாய்மொழி தோவாளை முருகன் ஆலயங்களைக் காணும்போது வரும் இந்திரனின் சாபம் தொடர்பான வரலாறு இங்கும் உண்டு.
இந்திரன் அகலிகையிடம் நெருங்கி கௌதம முனிவரிடம் சாபம்பெற்ற இடம் தோவாளை மலைப்பகுதி, அவன் பின் அப்பக்கம் நந்தவனம் அமைத்து மலர்களால் சுசீந்திரம் தாணுமால் அயன் எனும் மும்மூர்த்திகளை வணங்கி சாபம் நீங்கினான்.
ஆனால், அவனின் சாபம் அவன் குதிரையான உச்சாஸ்ரவஸ் என்பதையும் பிடித்து அதுவும் பாதிக்கப்பட்டது, அக்குதிரை சிவனிடம் சென்று தனக்கு நற்கதி வேண்டும் எனக் கோரியபோது சிவன் அதனை மருங்கூரில் இருக்கும் முருகப்பெருமானை வழிபடச் சொன்னார்.
அதனால் அக்குதிரை மருங்கூர் முருகனை நெருங்கிச் சென்று வேண்டியது. முருகப்பெருமான் அருளால் நலமும் அடைந்தது.
இதனால் இந்தக கோவிலில் முருகனுக்கு வாகனம் மயில் அல்ல, இந்தத் தேவலோக குதிரை, அது இன்றும் அக்கோவிலில் சிலையாக உண்டு.
இந்த ஆலயம் சித்தர் பலரால் வழிபடப்பட்டது, சித்தர்கள் அருள் மிக்க ஆலயமாயிற்று, மருங்கூர் சித்தர் எனும் மகா சித்தர் இங்கு ஜீவசமாதி அடைந்தார்.
இந்த ஆலயத்தில்தான் ஐயா வைகுண்டர் வழிபட்டார். திருச்செந்தூர் முருகனிடம் தனிப் பக்தி கொண்டிருந்த அந்த அவதாரத்தின் விருப்பமிகு கோவிலாக இது இருந்தது.
இந்தக் கோவிலின் சக்திக்குப் பெரும் அடையாளம் நாராயண குரு, கேரளாவில் தெய்வீக மனிதராக இந்து சன்னியாசியாக நின்று பெரும் புரட்சி செய்த சனாதனதர்ம அவதாரமான ஐயா நாராயண குரு இங்குதான் தவமிருந்தார்.
ஆம், இந்த முருகப்பெருமான் ஆலயம் பலவகை வரங்களைத் தரும். முதலாவது சாபம் என்பது நாம் செய்யும் காரியத்தால் மட்டுமல்ல இன்னொருவர் செய்யும் காரியமும் நாம் தொடர்புடைய மற்றொருவர் செய்யும் காரியத்தாலும் வரும்.
இந்திரனின் குதிரை சாபம்பெற்றது என்பது இந்திரனைச் சுமந்து வந்ததால் அவன் பாவம் செய்ய அதனை அறியாது துணை சென்றதால் வந்தது, இப்படி நம்மை அறியாமல் வரும் சாபங்களுக்கு இந்த ஆலயம் சாபநிவர்த்தி தரும்.
நம்மை அறியாமலே நாம் தவறுகளுக்கு துணை சென்றிருக்கலாம், முன்னோர்களின் சாபம் நம்மேல் தங்கியிருக்கலாம், அவை எல்லாம் இங்குத் தீரும்.
இன்னொரு விஷயம் தத்துவார்த்தமானது. குதிரை என்பது எப்போதும் எண்ணங்களுக்கும் புலன் இன்பங்களுக்கான காரியங்களுக்கும் சித்தர்களால் சொல்லப்படும் உவமை “மனமெனும் புரவி” என்பது அதுதான்.
இந்திரனை அவன் குதிரை சுமந்தது என்பது எண்ணங்களால் அவன் சீரழிக்கப்பட்டதைச் சொல்வது, இந்த ஆலயம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை தரும், மன ஒருமையினைத் தரும் அதனாலே யோகியர் இங்கு ஓடி வந்தனர்.
ஐயா வைகுண்டர், நாராயணகுரு போன்ற மகான்களும் இன்னும் பலரும் வந்து மருங்கூர் முருகனைத் தரிசித்து ஞானம் அடைந்தனர்.
அதிலும் நாராயணகுரு பெற்ற அனுபவங்கள் ஏராளம். ஒருமுறை அவர் இங்கு வந்து தவத்தில் மூழ்கி பசியாய்க் கிடந்த வேளை முருகப்பெருமானே சிறுவன் வடிவில் வந்து அவருக்கு உணவு கொடுத்த அதிசயமெல்லாம் இங்கு நடந்தது, இது அவர் வாழ்விலும் உண்டு.
மருங்கு என்றால் நெருக்கமாக எனப் பொருள், மருங்கூர் என்றால் முருகப்பெருமான் நெருங்கி வந்து அருள்பாலிக்கும் இடம் எனப் பொருள்.
இந்த ஆலயம் சாபம் நீக்கி வாழ்வைத் தரும், எல்லா வகை சாபமும் நீக்கி குழந்தைச் செல்வம் முதல் எல்லாச் செல்வமும் நிரம்பத் தரும், யோக வரம் தவம் கைகூடும் வரம் எல்லாம் தரும்.
இந்த இரு ஆலயங்களுமே முருகப்பெருமான் காவலும் வாழ்வும் தரும் ஆலயங்கள், கன்னியாகுமரி பக்கம் செல்லும்போது இந்த ஆலயங்களைத் தரிசிக்க மறவாதீர்கள். மருங்கூர் ஆலயம் “கேட்டவரம் தரும் முருகன் ஆலயம்” என்பதால் எதை வேண்டுகின்றீர்களோ அதை நிச்சயம் அடைவீர்கள். இது சத்தியம்.