முருகப்பெருமான் ஆலயங்கள் : கொளஞ்சியப்பர் ஆலயம் மற்றும் செட்டிக்குளம் முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கொளஞ்சியப்பர் ஆலயம் மற்றும் செட்டிக்குளம் முருகன் ஆலயம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அமைந்திருகும் ஆலயம் கொளஞ்சியப்பர் முருகன் ஆலயம். இதன் வரலாறும் சக்தியும் சிலிர்ப்பானது மகா அதிசயமானது.

பொதுவாக சிவாலயங்கள் இருக்குமிடமெல்லாம் அருகில் முருகப்பெருமான் ஆலயங்களும் கட்டாயம் இருக்கும், சில இடங்களில் அருகிலிருக்கும் சில இடங்களில் சற்று தொலைவில் இருக்கும். ஆனால், நிச்சயம் ஏதோ ஒரு வடிவில் இருக்கும்.

மிகச் சில இடங்களில் இவை பௌத்த சமண இதர மதமாற்ற காலங்களில் மறைந்திருக்கலாமே தவிர சிவபெருமான், முருகப்பெருமான் அவர்களோடு சித்தர்களின் ஜீவசமாதிகள் என எல்லாம் கலந்த வகையில்தான் முருகப்பெருமான் தலங்கள் திகழும்.

அப்படி அமைந்த ஆலயங்களில் ஒன்று இந்த கொளஞ்சியப்பர். இது பிரதான ஆலயமான திருமுதுகுன்றம் எனும் விருத்தாச்சலம் சிவாலயத்தில் இருந்து சற்று தள்ளி அமைந்திருக்கின்றது.

இந்த ஆலயத்தின் தொன்மையானது மிக நீண்டது. அதாவது, விருத்தாச்சலம் எனும் திருமுதுகுன்றம் திருவண்ணாமலை, காசி, மதுரை என யுகங்களைத் தாண்டிய ஆலயங்களைப் போல தொன்மையானது.

புராணங்கள் வேதங்கள் தோறும் அதன் பெருமை உண்டு. அது சுல்தான்களிடம் சிக்கியிருந்த காலம் அதன் பெருமை அறிந்து சத்ரபதி சிவாஜியே வந்து அதை மீட்டெடுத்தான்.

மிகப் பழமையான ஆலயம் என்பதால் அது பழமலை ஆலயம் என்றுமானது, விருத்தாச்சலம் என்பது வடமொழியில் ஆதிமலை என்பதைச் சொல்லும் வார்த்தை.

அப்படியாக பாரதம் முழுக்க பிரசித்தியான அந்த ஆலயத்திலிருந்து சற்றுத்தள்ளி மணவாளநல்லூர் எனும் ஊரில் அமைந்திருக்கின்றது இந்த கொளஞ்சியப்பர் ஆலயம்.

காலத்தால் மூத்த இந்த ஆலயம் பௌத்த சமணகால இந்துமத வீழ்ச்சியில் அடையாளம் தெரியாமல் அழிந்துபோனது அல்லது ஊழிகாலம் ஒன்றில் மறைந்துபோனது, பின் காலம் வரும்போது அது மீண்டெழுந்தது.

அது மீண்டெழுந்த கதை ஆச்சரியமானது.

பெரும் காடாக கிடந்த அந்தப் பகுதியில் மாடுகள் மேய வந்தன. அப்படி மேயவந்த மாடுகளில் ஒரு பசு கொளஞ்சி செடி மேல் தானாகப் பால் சொரிய ஆரம்பித்தது.

இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அந்தக் கொளஞ்சி செடிக்கு அடியில் தோண்டி பார்த்தபோது ஒரு பலிபீடம் மட்டும் இருந்தது, இது ஒரு ஆலயம் இருந்த இடம் என நம்பிய மக்கள் அங்கே வழிபட தொடங்கினார்கள். ஆனால், எந்த சாமி என்பது யாருக்கும் தெரியவில்லை.

கொளுஞ்சி செடி அருகே கிடைத்ததால் அது கொளுஞ்சி சாமி என்றானது.

அதனைக் காட்டி கொடுத்தவர் சுந்தரர். ஆம். நால்வரில் ஒருவரும் நாயன்மாரில் ஒருவருமான அந்தச் சுந்தரர். அவர் ஒருமுறை இந்த ஆலயம் வந்தார் அவர் வருவதற்கு காரணமும் இருந்தது.

அதாவது பெரும் பஞ்சம் தாக்கிய வேளை இங்கு வந்து தன்னைப் பாடும்படி சிவன் கட்டளையிட அப்படிச் சிவனிடம் வந்து பாடி பொருள் பெற்றார் சுந்தரர்.

“பொன்செய்த மேனியினீர்
புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்
பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
அடியேனிட் டளங்கெடவே”

எனத் தொடங்கும் ஏழாம் திருமுறைப்பாடல் அங்குபாடப்பெற்றது. அப்படிப் பாடி பொன் பெற்ற சுந்தரரை மீண்டும் தன் தலத்துக்கு வரவைக்கும் விருப்பம் சிவனுக்கு உண்டானது.

அதன்படி இங்கு பொன்பெற்று திரும்பிய சுந்தரரை முருகப்பெருமான் சோதித்தார். வேடன் வடிவில் வந்த முருகப்பெருமான் அவர் பொருளை பறித்துக்கொண்டார்.

மனமொடிந்த சுந்தரர் இதனை நினைத்து வருந்த, வந்தவர் சிவனின் திருவிளையாடலை செய்ய வந்த முருகப்பெருமான் என உணரப்பெற்றார். அப்படி உணர்ந்தவர் இந்த இடம்தேடி வந்து இந்த கொளஞ்சியப்பனான முருகனே தன்னை சோதித்தது என வணங்கிவிட்டு பின் விருத்தாச்சலம் சென்றார்.

ஆம். சுந்தர பெருமானால் அடையாளம் காட்டப்பட்ட ஆலயம் இது. அன்றிலிருந்து இந்த ஆலய முருகன் கொளஞ்சியப்பராக கொண்டாடப்படுகின்றார். சுந்தரரால் முருகப்பெருமான் ஆலயம் என அடையாளபடுத்தப்பட்ட இந்தத் தலத்தில் நின்று அவர் அருள் பாலிக்கின்றார்.

பின்னாளில் இது பெரும் ஆலயமாக மாறிவிட்டாலும் முருகப்பெருமானுக்கு சிலை இல்லை, அந்த பலிபீடமே முருகப்பெருமான் போல கண்கள் கிரீடமெல்லாம் வைக்கப்பட்டு, சரவணபவ என மந்திரம் எழுதப்பட்டுள்ளது வணங்கப்படுகின்றது.

மிக மிகச் சக்தியான ஆலயம் இது, அது கொடுக்கும் வரங்கள் ஏராளம்.

ஆலய முகப்பில் வீரானர் கோவில் உண்டு, அதைத் தாண்டினால் கிழக்கு மற்றும் வடக்கு இராஜகோபுரங்களோடு கொளஞ்சிநாதர் ஆலயம் நிற்கின்றது.

உள்ளே சித்தி விநாயகர் மேல் வட்டவடிவ விமானம் உண்டு, அங்கே திருமால் உள்ளிட்ட உருவங்கள் உண்டு.

இந்த முருகனை கொளஞ்சி செடி அடியில் அடையாளம் காட்டிய பசுவுக்கு அற்புதமான உருவம் அது பால்சொரியும் வடிவுடன் செதுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பக்கம் இடும்பன் கடம்பன் சன்னதிகள் உண்டு.

முருகப்பெருமான் ஆலயங்களில் எப்போதும் சித்தர்கள் அமர்ந்திருப்பார்கள்; மிக சக்திவாய்ந்த இந்த ஆலயத்தில் அகப்பை சித்தர் அமர்ந்திருக்கின்றார்; சித்தர்களில் முக்கியமானவரான இவர் ஜீவசமாதி கொண்டிருக்கின்றார்.

இப்படியான இந்த ஆலயம் பல வரங்களைத் தரும். முதலாவது சுந்தரரிடம் முருகன் செய்த அந்த மாய விளையாட்டு தத்துவத்தை அர்த்தமாகத் தரும்.

அதாவது, பொன் என்பது மாயை அதை அகற்றினால் இறைவனை நோக்கிச் செல்லும் ஞானம் வரும், சுந்தரர் வாழ்வில் அதைத்தான் போதனையாக முருகன் செய்தார்.

இந்த ஆலயம் வழக்குகள், பஞ்சாயத்துகளுக்கு நல்ல தீர்ப்பு சொல்லும் ஆலயம். அங்குப்பிராது கட்டுதல் என்பது மகா ஆச்சரியமான சம்பிரதாயம்.

அதாவது வழக்குகள், குடும்ப சண்டைகள், சொத்து சண்டைகளில் பாதிக்கப்பட்டோர் இங்கு முறையிடுவார்கள். சட்டம் வளைக்கப்பட்டு நீதி தங்களிடமிருந்து பறிக்கபட்டவர்கள், பெரும் துஷ்டரிடம் மோதமுடியாமல் நியாயம் மட்டும் வைத்திருப்பவர்கள், சொத்துசண்டையில் அநியாயமாக பறிக்கப்பட்டவர்கள் எனப் பாதிக்கபட்டவர்கள் இங்குப் பிராது கட்டுவார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கினை எழுதிக் கொடுப்பது போல் காகிதத்தில் தங்கள் முகவரியுடன் தங்கள் வழக்கினைச் சொல்லி நீதிவேண்டி எழுதி அந்த கொளஞ்சியப்பர் முன்னால் நீதிபதியாக அவரைப் பணிந்து சமர்பிப்பார்கள்.

அங்கு அந்த காகிதம் பூஜிக்க படும், பின் அது உள்ளே வளாகத்தில் இருக்கும் முனியப்பர் சன்னதியின் திருசூலம், ஈட்டி ஆகியவற்றில் கட்டப்படும்.

அதன் பின் சில நாட்கள் மிஞ்சிப்போனால் சில வாரங்களில் பக்தர்களின் வழக்கு முடிந்துவிடும். பக்தர்களுக்கு சாதகமாக முடிந்துவிடும் அதன் பின் பக்தர்கள் வந்து நேர்ச்சையினைச் செய்து புகாரைத் திரும்ப பெற்று கொள்வார்கள்.

இது காலம் காலமாக நடக்கும் காட்சிகள், முருகனை நம்பி வந்து புகார் கொடுத்து நீதிகிடைக்காமல் சென்றவர் யாருமில்லை எனுமளவு அது சக்திவாய்ந்த ஆலயம்.

இந்தப் பிராது கட்டும் விஷயத்தில் ஒரு நுணுக்கம் உண்டு. பக்தர்களின் ஊருக்கும் அதாவது வழக்கு நடக்கும் ஊருக்கும் ஆலயத்துக்கும் என்ன தொலைவோ, அந்த தொலைவில் ஒரு மைலுக்கு 25 பைசா வீதம் கட்டவேண்டும் (இப்போது ஒரு ரூபாய் ஆகியிருக்கலாம்)

அப்படிக் கட்டணம் கட்டி புகாரை செலுத்தினால் முருகப்பெருமான் உத்தரவில் முனியப்ப சாமி வந்து சிக்கலைத் தீர்த்துவைப்பார், இந்தக் கட்டணம் ஆலயப் பணிகளுக்கே பயன்படும்.

காலம் காலமாக நடக்கும் இந்தச் சம்பிரதாயத்தில் முருக பெருமானே நீதிபதியாக அமர்ந்து தீர்ப்பு சொல்கின்றார், வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத அற்புதம் இது.

பணம், சட்டம், ஆள்பலம் அதிகாரம் இன்னும் என்னென்ன விதிகளையோ தாண்டி முருக பெருமானே பிரபஞ்ச நீதிபதியாக நின்று நீதிவழங்கும் அற்புதத் தலம் இது.

உங்களுக்கு எவ்விதப் பிரச்சினை இருந்தாலும், வழக்குகள் சர்ச்சைகள் இருந்தாலும், நீதியும் நியாயமும் உங்களிடம் இருந்தால் இங்கு வந்து பிராது கட்டுங்கள். வெகுசில நாட்களிலே எல்லாமும் சரியாகி நீதி உங்களைத் தேடிவரும், முருகப்பெருமான் அந்த அற்புததத்தைச் செய்வார்.

அடுத்த ஆலயம் செட்டிக்குளம் ஆலயம். திருச்சி பெரம்பலூர் பக்கம் அமைந்திருக்கும் சக்திமிக்க ஆலயம் இது.

செட்டியார் இன வணிகன் ஒருவன் உறையூருக்கு வரும் வழியில் பொழுது முடிந்ததால் வழிப்பறி கொள்ளையர்க்கு அஞ்சி கடம்பம் மரம் ஒன்றின் மேல் உறங்க முயன்றான், அந்நேரம் பிரகாசமான ஒளி அந்த இருளில் வந்தது, பெரும் ஒளி நடுவே சிவலிங்கம் ஒன்று இருந்தது.

தேவர்களும் முனிவர்களும் அந்தச் சிவலிங்கத்தை தொழுது பணிந்து போற்றினார்கள், பெரும் இசையும் வேத மந்திரங்ங்களும் ஒலித்துக்கொண்டிருந்தன‌.

அதிகாலையிலே மரத்தைவிட்டு இறங்கிய வணிகன் மன்னனிடம் ஓடிச் சென்று விஷயத்தைச் சொன்னான், அந்நேரம் மதுரையில் இருந்து குலசேகர பாண்டியனும் வந்து உறையூரில் தங்கியிருந்தான்.

சோழனும், பாண்டியனும் வணிகன் சொன்னதை கேட்டு விரைந்தனர். ஆனால், அவன் சொன்னபடி சிவலிங்கம் ஏதும் காணப்படவில்லை, மன்னர்களின் படைகள் சிவலிங்கத்தைத் தேட ஆரம்பித்தன‌.

அந்நேரம் வயதான ஆசாமி ஒருவர் கையில் கரும்புடன் வந்தார், வந்தவர், “என்னய்யா தேடுகின்றீர்கள்?, இந்தக் காட்டை முழுக்க அறிந்தவன் நான்” என்றார்.

குலசேகரபாண்டியன் விஷயத்தைச் சொல்ல, “என் பின்னால் வாருங்கள். நான் சிவலிங்கத்தை காட்டித் தருகின்றேன” என அவர் முன்னே நடந்தார்.

பாண்டியனும் சோழனும் பின்னால் நடக்க “இதோ லிங்கம்” எனக் காட்டி தந்தவர் சட்டென மறைந்தார், அவர் எங்கே எங்கே எனத் தேடும்போது அருகிருந்த குன்றின் மேல் தண்டாயுதபாணி கோலத்தில் கையில் கரும்புடன் நின்று சிரித்தார் முருகன்.

அந்த காட்சியினைக் கண்ட அனைவரும் விழுந்து வணங்கினர். குலசேகர பாண்டியன் சிவலிங்கம் இருந்த இடத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும், முருகப்பெருமான் நின்ற இடத்தில் முருகப்பெருமான் கோவிலுமாக கட்டிவைத்தான்.

அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.

முருகப்பெருமான் இங்கு அகத்தியரை வளையல் விற்ற செட்டி உருவில் வந்து சோதித்து விளையாடிய காரணத்தால் இந்த இடம் செட்டிக்குளம் என்றானது.

முருகன் செட்டிக்குளம் முருகன் என்றானார்.

செட்டிக்குளம் ஊரின் நடுவில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும் அருகில் குன்றின் மேல் 243 படிகள் கடந்து முருகப்பெருமான் ஆலயமும் அமைந்துள்ளன‌.

ஏகாம்பரேஸ்வரர் கோவில் பிரமாண்டமானது, அது ஏழு நிலை இராஜகோபுரம் கொண்டது.

அதேபோல், கோபுர வாயிலைக் கடந்து அர்த்த மண்டபம், மகாமண்டபம், கருவறை என மொத்தம் ஏழு வாசல்கள் உள்ளன.

ஏழு நிலை கோபுரம் கடந்து, ஏழு வாசல்களைக் கடந்து சென்றால் ஏகாம்பரேஸ்வரரைத் தரிசிக்கலாம் என்றும் இப்படி ஏழு வாசல்களைக் கடந்து சென்று, ஏகாம்பரேஸ்வரை தரிசித்தால், ஏழு ஜென்ம பாவமும் விலகும்.

அப்படியே இந்த மலைமேல் இருக்கும் முருகனும் சக்திவாய்ந்தவர்.

அவர் கையில் கரும்பு ஏந்தி நிற்கும் ஒரே தலம் இது. காஞ்சி காமாட்சி போல, கற்பகாம்பாள் போல, பட்டினத்து சுவாமிகள் போல அவர் கரும்புடன் நிற்கும் ஒரே ஆலயம் இதுதான்.

கரும்பு பலவகை பொருளைத் தரும்.

முதலாவது, கரும்பும் ஐவகை பாணமும் மன்மதனுக்குரியது.

ஐந்து பானம் என்றால் ஐந்துவகை புலன்களாலும் எழும் ஆசை. பெண்ணை கண்டோ அவள் குரல் கேட்டோ, நறுமணமோ, தொடுதலோ என எதுவோ தூண்டிவிடும் ஆசை, இதனை ஐந்து மலருக்கு ஒப்பிட்டார்கள். அந்த ஐந்து மலர்களான தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ , முல்லை மலர் ஆகிய ஐந்தும் பார்வைக்கு, மணத்துக்கு, மென்மைக்கு என ஒவ்வொரு தனித்துவ ஈர்ப்பைக் கொண்டது.

கரும்பு என்பது இனிமையானது மட்டுமல்ல அதன் ஒவ்வொரு துண்டும் மறுபடி மறுபடி வளரக்கூடிய சக்தி கொண்டது, அந்த சுழற்சியில் வரும் ஆசைக்குத்தான் கரும்பும் ஐவகை பாணங்களும் அடையாளமாகக் கொடுத்தார்கள்

இந்த முருகனை வழிபட்டால் அந்த ஆசைகளை அடியோடு ஒழிப்பார். ஞானம் வழங்குவார்.

அடுத்து இன்னொரு தத்துவம் உண்டு.

கருமபு சாறை வெல்லமாக்கிய பின் அந்த சக்கை எரிந்தால் வருந்துவோர் யாருமில்லை, அப்படி உடல் மரிக்கும் முன் மூன்றாம் கண் திறந்து பரம்பொருளோடு ஐக்கியமாகிவிட்டால் மரணம் கண்டு, உடல் எனும் சக்கை எரிவதை கண்டு துயர்மேதுமில்லை என்பது கரும்பினை ஏந்தியிருக்கும் தத்துவம்.

இதனை நாலடியார் பாடல் ஒன்று சொல்லும்
“கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ தில”

கரும்புகாடு எரிகின்றது எனும் செய்தி வந்தால் ஒருவர் பதறி ஓடுவர் ஒருவர் பதறவே மாட்டார், அதாவது கரும்பை வெட்டி அதன் சாறை பிழிந்துவிட்டு வெறும் தோகையும் சக்கையும் குவித்திருப்பவர் பதறமாட்டார் எரியட்டும் என அவர்போக்கில் இருப்பார், யார் இன்னும் கரும்பை வெட்டி சாறு எடுக்கவில்லையோ அவர்தான் அலறி அடித்து ஓடுவார்.

அப்படி இந்த உடலாகிய கரும்பை ஏற்கனவே பிழிந்து அதாவது தன்னை வருத்தி இறைவனை கண்டோர் தன் உடலுக்கு தன் வாழ்வுக்கு என்ன வந்தாலும் அவர்கள் போக்கில் இருப்பார்கள் காரணம் முழு உண்மையும் அறிந்து இனி தன் ஆத்மா நித்திய ஒளியில் சஞ்சரிக்கும், சதா காலமும் பரம்பொருளுடன் பேரானந்த நிலையிலிருக்கும் என்பதை உணர்ந்ததால் அவர்கள் பதறமாட்டார்கள்.

தன் பக்தன் எந்த நிலையிலும் பதறும் அவசியமில்லை என்பதையும் போதிக்கின்றார் முருகப்பெருமான்.

அப்படியே லௌகீக தத்துவங்களையும் அந்தக் காட்சி போதிக்கின்றது, அந்தக் கரும்பு பதினோரு கணுக்களைக் கொண்டது.

அந்தப் பதினோறு கணுக்களும் பெரும்தத்துவம் சொல்கின்றது.

அதாவது, தெய்வங்கள் 11 நடனங்கள் ஆடின என்பது புராணம் சொல்வது, அந்த 11 வகை நடனமும் பிரசித்தியானது.

அல்லியம்: கண்ண பிரானை அழிக்க ஏவப்பட்ட யானையை அவன் வென்றதைக் குறித்து ஆடும் ஆட்டம் இது.

கொடுகொட்டி: சிவபெருமான் அசுரர்களின் முப்புரத்தை எரித்து ஆடிய ஆட்டம் கொடுகொட்டி.

குடை: முருகப் பெருமான் அவுணர்களை வென்றதைச் சித்தரிப்பது குடை நாட்டியம்.

குடம்: கண்ண பிரான் தனது பேரப் பிள்ளை அநிருத்தனை பாணாசுரனிடமிருந்து மீட்க ஆடிய ஆட்டம் குடம் என்னும் வகை ஆகும்.

பாண்டரங்கம்; சிவன் முப்புரம் எரித்த பின்னர் நான்முகன் காண ஆடியது பாண்டரங்கம் என்னும் வகை.

மல்: கண்ணனும், பாணனும் நடத்திய மற்போரைக் காட்டுவது மல் வகை நடனம்.

துடி: சூரபத்மனை முருகன் வென்ற பின்னர் ஆடிய ஆட்டம் துடி.

கடையம்: வாணாசுரனின் தலைநகரின் வடக்கு வாசலில் அயிராணி (இந்திராணி) ஆடியது கடையம் என்னும் வகையால் காட்டப்படும்.

பேடு: மன்மதன் தன் மகன் அநிருத்தனை சிறையிலிருந்து மீட்க பேடி வடிவத்தில் ஆடியது பேடு என்பதாகும். பாணாசுரணின் மகள் உஷாவைக் கடத்திச் சென்றதால் அநிருத்தனை பாணன் சிறையில் போட்டான்.

மரக்கால்: கொற்றவையை/ துர்க்கையை வெல்ல அவுணர்கள் தேள், பாம்பு முதலிய விஷப் பிராணிகளை அனுப்பினர். அப்போது மரக் கால்கள் கொண்டு நடனமாடி துர்க்கை வெற்றி பெறுவதைக் காட்டும் நடனம் இது.

பாவை: போர் செய்ய வந்த அரக்கர்களை அழித்து திருமகள் ஆடிய ஆட்டம் பாவை எனப்படும்.

இந்த 11 வகை நடனமும் நானே, எல்லா சக்தியும் நானே என்ற பெரும் தத்துவத்தை போதித்து, எல்லாமும் நானே சகலமும் நானே என்பதைப் போதிக்கின்றார்.

கரும்பு என்பது மன்மதனின் ஆயுதம் மட்டுமல்ல, சந்ததி தரும் சக்தியும் அதுதான், அவ்வகையில் இந்த ஆலயம் குழந்தைவரம் தரும் ஆலயம்.

குழந்தைகளுக்காக இந்த முருகனை நேர்ந்தால் அந்த வரம் நிச்சயம் கிடைக்கும், சஷ்டியில் விரதம் இருந்து இந்த கோவிலில் உள்ள வில்வமரத்தில் தொட்டில் கட்டி நேர்ச்சை செய்வார்கள்.

குழந்த வரம் கிடைத்தபின் உரிய நாளில் கரும்பு கட்டில் தொட்டில் செய்து அதில் குழந்தையினை இட்டு மலையேறிச் சென்று கரும்பினைச் சாற்றி குழந்தையினைக் கிடத்தி நன்றி சொல்லும் காட்சி அங்கு எந்நாளும் வாடிக்கை.

பெரம்பலூர் பக்கம், கடலூர் பக்கம் செல்லும் போது இந்த இரு ஆலங்களைக் காண தவறாதீர்கள்.

விருத்தாச்சல சிவனை வணங்கிவிட்டு இந்தக் கொளஞ்சியப்பரை வணங்கினால் எல்லாம் கைக்கூடும், அந்தச் சிவனை வணங்கிவிட்டே இவரை வணங்குதல் முறை.

கொளஞ்சியப்பர் ஆலயத்தில் முருகன் அரூபியாய் நின்று நீதிபரிபாலனம் செய்கின்றார்.

அங்கு வைக்கப்படும் எல்லா வேண்டுதலும் நடக்கும். பிராது சீட்டுக் கட்டி வணங்கி வந்தால் உச்சநீதிமன்றத்திலும கிடைக்காத நியாயமான தீர்ப்பு முருகப்பெருமானின் சந்நிதியில் கிடைக்கும், அகப்பை சித்தரின் நல்லாசியும் அங்குப் பூரணமாக கிடைக்கும்.

இந்தச் செட்டிகுளம் முருகன் எல்லாக் காவலும் தருவார். ஏகாம்பரேஸ்வரரை வணங்கிவிட்டு இவரை வணங்குதல் சாலச் சிறந்தது.

வளையல் வியாபாரி என அவர் வந்தது சாதாரண வடிவம் அல்ல, வளையல் என்றால் காப்பு எனப் பொருள், அதாவது நம் வாழ்வுக்கு காவல் தரும் முருகன் அவர்.

கரும்பினைக் கையில் ஏந்தி ஞானம் போதிக்கும் அம்முருகனே வாழ்வை கரும்பாக இனிக்கவும் செய்வார், 11 கணு கொண்ட கரும்பினை தாங்கி நானே சகலமும் எனப் போதிக்கும் அந்த ஞானபண்டிதன் குழந்தை வரம் முதல் எல்லா வரமும் தந்து நம்பினோர் வாழ்வை செழிக்க வைப்பார். இனிக்க வைப்பார். இது சத்தியம்.