முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம்.
வேலூர் அருகில் உள்ள கே.வி குப்பம் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். சிறிய குன்றின் மேல் மாயல் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். இது பழங்காலத்தில் இருந்தே உண்டு எனினும் மீளக் கட்டப்பட்டது சமீபத்திய காலங்களிலே.
அங்கு நாகராஜ் சித்தர் என்பவர் இருந்தார். முருகபெருமானின் சீடரான அவர் திருத்தணி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்று முருகனை வழிபட்டு வந்தார், அவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான் இங்கே தனக்கொரு ஆலயம் எழுப்ப பணித்தார்.
இந்த நாகராஜன் மிளகாய் சித்தரின் சீடர் என அறியப்படுகின்றது, மிளகாய் சித்தர் என்பது தெற்கே நெல்லை பக்கம் பிரபலமான பெயர். பொதுவாக சில சித்தர்கள் சில பொருட்கள் மூலம் மக்களின் கர்மத்தை, கஷ்டத்தை வாங்கிக் கொள்வார்கள். விராலி மலையில் வைக்கப்படும் சுருட்டு அப்படியானது.
மானுடர்க்கு எல்லாமும் புரியவேண்டும் எனும் அவசியமில்லை. பல விஷயங்களைப பகுத்தறிவு கொண்டு அலசவும் அறியவும் முடியாது, அவ்வகையில் இதெல்லாம் அமானுஷ்யங்கள் அறிவுக்கு எட்டாத அற்புதங்கள்.
அப்படி மிளகாய் வற்றலின் காரத்தினுடன் பகதர்கள் கர்மத்தை ஏற்கும் சித்தர்கள் உண்டு. வள்ளியூர் வேலாண்டி தம்பிரான் அப்படி வாழ்ந்தார். அவரின் சீடர்கள் அவரைப் போல் மிளகாயினைப் பக்தர்களின் கர்மமாக ஏற்றுவாழ்ந்தார்கள். அப்படிக் கழுகுமலை பக்கமும் ஒரு சீடர் மிளகாய் சித்தரானார்.
இந்தச் சித்தர் பரம்பரையில் தன்னை இணைத்துக் கொண்டவர் நாகராஜ சுவாமிகள், இவர் 1970ல் கிருபானந்தவாரியார் தலைமையில் இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டி திருப்பணிகளைத் தொடங்கினார்.
நவக்கிரகங்களும் முருகனே. நவக்கிரக பாதிப்பும் அவை ஆட்டிவைக்கும் கர்மவினைப் பாதிப்பும் குறையும் கணக்காக இத்தல முருகனை ஒன்பதே முக்கால் அடி (9 3/4) எனக் கருவறையில் நிர்மாணித்தார்.
இதுவரை உலகம் கண்ட கருவறை முருகனில் இந்த முருகனே மிகப் பெரியவர். ஆனால், சிலையினைச் சித்தர் நிர்மாணித்து கொஞ்ச காலங்களிலே சித்தி அடைந்தார். அதன் பின் கோவில் பணி சிலகாலம் தொய்வடைந்தது. எனினும், பின்னாளில் இன்னொரு சித்தர் வந்து தாங்கிக் கொண்டார்.
அவர் பாலமதி சித்தர் என்ற ராமகிருஷ்ண சாது.
இவர்தான் இந்த ஆலயத்தை அழகுறக் கட்டி திருப்பணிகள் முடித்து மக்களுக்குத் தந்தார், இன்று இத்தலம் வேலூர் மாவட்டத்தின் சக்திவாய்ந்த தலமாகும்.
இங்கு எப்போதும் கூட்டம் அதிகம். கிருத்திகை போன்ற நாட்களில் வழிபாடுகள் சிறப்பு. வெள்ளி செவ்வாய் வழிபாடு விசேஷம். அப்படியே தினம் தோறும் வழங்கப்படும் அன்னதானத்தில் ஆயிரகணக்கான மக்கள் வந்து பங்கேற்கும் பெரும் கூட்டமும் உண்டு.
இந்த ஆலயத்தின் நேர்ச்சை வழிபாடு வினோதமானது. அது நாஜராஜ சுவாமிகளால் ஏற்படுத்தப்பட்டது, அதன்படி முழு தேங்காய், உரிக்காத தேங்காய் எடுத்துச் சென்று தன் கோரிக்கையினை வேண்டுதலை யாரிடமும் சொல்லாமல் கோவிலில் வைத்துவிட்டு வேண்டிவிட்டு வந்துவிடவேண்டும்.
அந்த ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானையிடம் பிரார்த்தித்துவிட்டு, அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆதி வேல் முன்னால் வழிபட்டு, தங்கள் அடையாளம் எழுதி வைக்க வேண்டும்.
பின் 12 செவ்வாய்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்றி வழிபடும் போது நிச்சயம் அந்தக் கோரிக்கை நிறைவேறும், அதன் பின்பு அந்தத் தேங்காயினை உரித்து சந்நிதியிலே உடைத்து என்ன வேண்டுதல் நிறைவேறியது என முருகன் சந்நிதி முன்பே நின்று சொல்லி சாட்சி பகிர்தல் வேண்டும்.
அந்தத் தேங்காய் சேகரிக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டு கோவில் காரியங்களுக்கு, அன்னதானத்துக்குப் பயன்படும்.
இந்தத் தேங்காய் கட்டி இதுவரை யாரும் வரம்வாங்காமல் சென்றதில்லை. இந்த நம்பிக்கை எவருக்கும் பொய்த்ததில்லை என்பது பெரும் சாட்சி. அதைச் சொல்லும் பக்தர்கள் ஏராளம்.
இந்த முருகனை, பெரிய முருகனை கருவறைக்குள் கருவறையாக வைத்து அமைத்திருக்கின்றார் சித்தர், அதன் அர்த்தம் இங்கு வணங்கி செல்லும்போது நாம் புதுப்பிறப்பு, நம் தலைவிதி மாறிவிட்டது என்பது.
ஆம், இது புதிய ஆலயம். ஆனால், மகா சக்திவாய்ந்த ஆலயம். இங்கு முருகபபெருமானிடம் கேட்கும் எதுவும் தேங்காய் கட்டி கேட்கும் எதுவும் நிச்சயம் நடக்கும். அவ்வளவு நம்பிக்கையான ஆலயம் இது.
இங்கு முருகன் சந்நிதி போலவே வள்ளி தெய்வானை சன்னதிகள் முக்கியமனவை. அவை 7 கிரகங்களின் அருள் தரும்படி 7 அடி உயரமானவை, அப்படியே பிருங்கி முனிவர் சந்நிதியும் இங்கு விசேஷம்.
இங்குச் சித்தருக்கு மட்டுமல்ல தன்னை நம்பிவரும் பக்தர்களின் பக்திக்கேற்ப அவர்களுடனும் முருகப்பெருமான் கனவிலோ சில சமயம் நேரிலோ வந்து உரையாடுவார். அவ்வளவுக்கு அவர் சாட்சாத் ஆட்சி செலுத்தும் மலை இது.
அப்பகுதி மக்களுக்கு இந்த முருகப்பெருமான் ஒரு காவலனாக ஒரு வைத்தியனாக ஒரு நீதிபதியாக ஒரு ஞானத் தகப்பனாக பசியாற்றும் தாயாக நின்று அருள்பாலிக்கின்றார்.
வாய்ப்பு கிடைத்தால் இந்த ஆலயத்துக்குச் செல்லுங்கள். உங்கள் கோரிக்கையினைத் தேங்காய் வடிவில் வையுங்கள். நிச்சயம் அது நிறைவேறும், அதன் பின் உங்கள் வேண்டுதலை செய்யுங்கள், நிச்சயம் அது முருகன் அருளால் நடக்கும்.
மிகுந்த இக்கட்டில் இருப்பவர்கள் 21 நாள் இங்குத் தொடர்ந்து வந்தால் நிச்சயம் அது எவ்வளவு பெரிய இக்கட்டாக இருந்தாலும் மறையும்.
அப்படியே அங்கிருக்கும் நாகராஜ சித்தர் சமாதியும், பாலமதி சித்தர் சமாதியும் முக்கியமானது. நாகராஜ சித்தரின் சமாதி ஆலயத்தின் அருகே சிவலிங்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கே அவரின் திருவுருவமும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இங்கு முருகன் பெயரைச் சொல்லிக் கேட்கும் எல்லா வரமும் கிடைக்கும்.
பாலமதி சுவாமிகளின் சமாதி மலை அடிவாரத்தில் உண்டு. அங்கும் பெரும் சக்தி உண்டு. முருகப்பெருமானை வழிபட்டு இந்தச் சித்தர்களையும் வழிபட்டால் நிச்சயம் வாழ்வு முழுக்க மாறும். இது சத்தியம்.
இந்த ஆலயம் நிச்சயம் ஒவ்வொரு முருகபக்தரும் சென்று வணங்கி கருவறையில் நுழைந்து மறுபிறப்பு எடுத்து வரவேண்டிய தலம.
இந்த ஆலயத்தின் தொடர்பு எண் 94456 73319 , விரும்புகின்றவர்கள் சென்று வழிபட்டு நல்ல பயனை அடையலாம். அந்தக் கோவிலில் கால்வைத்து அவனைக் கைகூப்பி வணங்கி பிரசாதத்தினை வாயில் வைத்தால் எல்லாமும் முழுக்க சரியாகும். புதுவாழ்வு அமையும்.
இன்னொரு ஆலயம் கனககிரி எனும் கனகமலை. இது திருப்பூர் அருகே கண்டியன் கோவில் அருகே அமைந்துள்ளது. இது மிகப பழமையான ஆலயம், அருணகிரி நாதரால் பாடப்பட்ட தலம்.
கனககிரி எனப் பல மலைகள் பல ஆலயங்கள் உண்டு என்றாலும் இந்த ஆலயம் மிக மிக நுட்பமானது அருணகிரி நாதருடன் தொடர்பும் கொண்டது.
அதாவது, அருணகிரி நாதர் வாழ்வின் அந்திம காலங்களில் அவர் கிளி உரு கொண்டது எல்லோரும் அறிந்தது. அரசனுக்குக் கண் தெரியா நிலையில் தேவலோக பாரிஜாத மலர் வந்தால் அவருக்குக் கண் தெரியும் எனும் நிலையில் அருணகிரியின் பகைவனான சம்பந்தாண்டான் என்பவன் அவரால் இது முடியும் என மன்னனை தூண்டிவிட்டான்.
இதை அவர் செய்யாவிட்டால் அதுவரை தான் அருணகிரியாரால் அடைந்த அத்தனை அவமானமும் தீரும் என நினைத்தவன் அப்படி மன்னனைத் தூண்டிவிட்டான்.
அருணகிரியாரும் மன்னனுக்குக் கட்டுப்பட்டு ஒரு கிளியில் தன் உயிரைச் செலுத்தி மேலே பறந்து பாரிஜாத பூவைக் கொண்டுவரச் சென்றார், அவர் உடல் அப்போது திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்தது.
இதை அறிந்த சம்பந்தாண்டான் அவர் உடலை யாரும் அறியாமல் எரித்துப்போட்டான், திரும்ப மலரோடு வந்த கிளி வடிவ அருணகிரியார் மன்னனுக்குப் பார்வை கொடுத்தார். ஆனால் அவர் உடல் இல்லை என்பதால் மீள உடல் உரு கொள்ளமுடியவில்லை.
ஆனால், அதற்குக் கலங்காமல் எல்லாமே முருகன் சித்தம் என்றவர் கிளிவடிவில் இருந்தே கந்தர் அனுபூதி பாடி முருகப்பெருமான் சந்நதிக்குச் சென்று அவன் இடது தோளில் அமர்ந்து அப்படியே சித்தி அடைந்தார்.
இந்தக் காட்சி மிக விசேஷம். முருகப்பெருமான் இடதுதோளில் அவர் கிளியாக அமர்ந்து இரண்டற கலந்த காட்சி மகா பிரசித்தம். ஆனால், அக்காட்சி வேறு எங்குமில்லை. இந்தத் தலத்தில் சிலையாய் எழுப்பப்பட்டுள்ளது.
ஆம், இந்தக் கோவிலின் மூலவர் முருகப்பெருமான் இடது தோளில் கிளியோடு அமர்ந்திருக்கின்றார். இது தன்னை நாடி வருவரோரை முருகன் எக்காலமும் கைவிடமாட்டான், எந்தக் கர்மவினையாக இருந்தாலும் அதைத் தாண்டி தன்னோடு சேர்த்துக் கொண்டு பெரும் அருள்புரிவான் என்பதைக் காட்டுகின்றது.
ஆம், இந்த ஆலயம் வாழ்வின் எந்த சிரமம் இருந்தாலும் அது யாராலும் எப்படியும் கர்மவினைப்படி வந்திருந்தாலும் அதையெல்லாம் நீக்கி முழுக் காவல் தரும் ஆலயம், முருகப்பெருமான் தன் பக்தர்களைத் தோளில் தாங்கும் ஆலயம்.
திருப்பூர் பக்கம் செல்லும் போது மிக அருகிருக்கும் இந்த முருகனை தரிசியுங்கள், அங்கே சிவனுக்கோர் சந்நிதி உண்டு. அப்படியே அன்னைக்கும் சந்நிதி உண்டு.
நடுவில் முருகப்பெருமான் தோளில் சிறிய கிளியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார், அதாவது அருணகிரி நாதரோடு நின்று அருள் பாலிக்கின்றார்.
இந்தத் தலம் சென்னிமலை, சிவன் மலை போன்ற தலங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது, கொங்கு நாட்டு தலங்களில் இது முக்கியமானது. தவறவிடக் கூடாதது.
இங்குச் சென்று விளக்கேற்றிப் பணிந்தால் வாழ்வின் எல்லாத் தடைகளும் நீங்கும், கர்மவினைகள் மறையும், முருகப்பெருமான் தோளில் உங்களைத் தாங்கி வழிநடத்துவார்.
அங்குச் செல்லும்போது மறக்காமல் இந்த அருணகிரியார் பாடலைப் பாடுங்கள். முழுப்பலனும் உங்களில் பொழியப்படுவதை நீங்களே உணர்வீர்கள்.
“அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட்
டசடனென மனது நொந்திட் டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட்
டவநெறியின் விழையு மொன்றைத் தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்றஃ
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற் றகமேவும்
படர்கள்முழு வதும கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற்
பதயுகள மிசைவ ணங்கற் கருள்வாயே
செருவிலகு மசுரர் மங்கக்
குலகிரிகள் நடுந டுங்கச்
சிலுசிலென வலைகு லுங்கத் திடமான
செயமுதவு மலர்பொ ருங்கைத்
லமிலகு மயில்கொ ளுஞ்சத்
தியைவிடுதல் புரியு முன்பிற் குழகோனே
கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத் திருமார்பா
கரிமுகவர் தமைய னென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கனககிரி யிலகு கந்தப் பெருமாளே”