முருகப்பெருமான் ஆலயங்கள் : தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம், மேகமலை வழிவிடும் முருகப்பெருமான் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம், மேகமலை வழிவிடும் முருகப்பெருமான் ஆலயம்.
தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோடாங்கிபட்டி எனும் ஊரில் மலையடியில் அமைந்துள்ள ஆலயம் இந்தத் தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம்.
இந்த ஆலயம் புராணக் காலத்திலே உண்டு, அதன் தோற்றம் சப்தகன்னியரிடம் இருந்து வருகின்றது.
அசுரர்களை ஒழிக்க சக்திதேவிக்குத் துணையாக வந்த சப்த கன்னியர் ஒரு தவசியினை அறியாமல் கொன்றுவிடுகின்றார்கள். பின், உண்மை அறிந்து கலங்கினர். தங்கள் சாபம் தீர என்ன வழி எனத் திகைத்து முருகப்பெருமானை வேண்டினார்கள்.
முருகப்பெருமான் தானே வந்து இந்தச் சுனையினை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்து நீராடி வழிபடச் சொன்னார். அவர்களின் பாவம் அங்கே மறைந்தது. முருகப்பெருமானைப் பணிந்து நன்றிச் சொல்லி அவர்கள் தங்கள் இடம் சென்றனர்.
ஆனால், முருகப்பெருமான் உருவாக்கிய சுனை அப்படியே இருந்தது. அந்தச் சுனை ஒரு காலமும் வற்றுவதே இல்லை எனும்படி நீர் ஊறிக்கொண்டே இருந்தது, இன்றுவரை அந்த அதிசயம் உண்டு.
முதலில் இந்தச் சுனை இருந்த இடத்தில் ஆலயம் எழுப்பவும் முருகப்பெருமானே நேரில் வந்தார்.
அதாவது, ஒரு முதியவர் முருகப்பெருமானின் பக்தராய் இருந்தார். ஒருமுறை அவர் கானகத்தில் நடந்து வரும்போது முதுமையால் தளர்ந்திருந்ததால் மேற்கொண்டு முடியாமல் ஓய்வெடுத்தார். அந்நேரம் ஒரு வேடன் வடிவில் வந்த முருகன் முனை மழுங்கிய வேல் ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்றுகோலாகக் கொண்டு நடக்கச் சொன்னார்.
கையில் தடி இல்லா நிலையில் அந்த வேலை ஊன்றுகோல் போல ஊன்றி இப்பக்கம் வந்தவர் இந்த சுனையினைக் கண்டதும் நீர் அருந்தி நீராடி களைப்பைப் போக்க எண்ணி அந்த வேலை அருகிருந்த இடத்தில் குத்திவைத்துவிட்டு நீராடினார்.
பின் திரும்பி வந்து வேலை எடுத்தால் அது அசையவில்லை, எவ்வளவோ முயன்றும் முடியவில்லை, முதியவர் முருகனை நினைந்து மீண்டும் அசைத்தபோது அந்த வேடன் தோன்றி சிரித்துவிட்டு மறைந்தான்.
வந்தது முருகப்பெருமானே என உணர்ந்த அந்தப் பக்தர் அங்கேயே முருகப்பெருமானை தொழுதார். பின்னாளில் பக்தர் கூட்டம் பெருகியது.
அது கானகம் என்பதால் நாகங்களுக்கான சந்நிதியும் அருகில் எழுப்பப்பட்டது. கேட்டவரம் கிடைக்கப்பெற முருகப்பெருமானின் அருள் பெருகியோட அந்த இடம் பிரசித்தியானது.
பின், விருப்பாச்சி எனும் ஊரின் குடியானவன் கனவில் முருகன் வந்து வயல் ஒன்றில் தன் சிலை மறைந்து கிடப்பதையும், அதை வேல் இருக்கும் இடத்தில் வைத்துக் கோவில் எழுப்புமாறும் சொன்னார். அவர் சொன்னபடியே வயலில் இருந்து சிலை கிடைத்தது.
விஷயம் அறிந்த அப்பக்க குறுநில மன்னன் ஓடிவந்தான், அவனே ஆலயம் எழுப்பி அந்த விருப்பாச்சி முருகனை ஸ்தாபித்தான்.
விருப்பாச்சியில் கிடைத்ததால் விருப்பாச்சி எனும் பெயரோடும், நாகத்தோடு வழிபட்டதால் அவர் நாக சுப்பிரமணியர் என்றுமானார்.
அன்று முதல் இந்த ஆலயம் தீர்த்ததொட்டி விருப்பாச்சி நாகசுப்பிரமணியர் ஆலயம் என்றானது, இது ராகு கேது பரிகார தலமுமானது.
மூலவர் விருப்பாச்சி ஆறுமுகனாருக்கு அருகில் ஏழு தலை நாகம் குடைப்பிடித்தபடி இருக்கின்றது, அதன் மத்தியில் மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் நாக சுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
நாகத்தின் மத்தியில், வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். இவருக்கு பூஜை செய்த பின்பே மூலவரை பூஜிக்கிறார்கள்.
மூலவர் விருப்பாச்சி வயலில் கிடைத்த தனித்த முருகன் என்பதால் வள்ளி தெய்வானை இல்லாமல் காட்சித் தருகின்றார். இங்கு நாக தோஷம் உள்ளவர்கள் இவருக்குப் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
இது ராகு கேது தலமாதலால் இந்தத் தோஷம் நீங்கும். இது போக கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் இவருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து தோஷ நிவர்த்தி அடைகிறார்கள்.
இந்தக் கோவிலுக்கு முன்புதான் அந்தத் தீர்த்த தொட்டி எனும் சுனை உண்டு. முருக தீர்த்தம் எனும் அந்த வற்றாத சுனையில் நீராடினால் எல்லாத் தோஷமும் சாபமும் பாவமும் நோயும் தீரும்.
கோவில் முன்பு முருக தீர்த்தம் எனப்படும் வற்றாத தீர்த்த தொட்டி உள்ளது. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷம் நீங்க வேண்டி இந்தத் தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர்.
நாகதோஷம் உள்ளவர்கள், நாகத்தால் பாதிக்கப்பட்டவர் தொடங்கி பெரும் நோய், தீராச்சாபம், பில்லிசூனியம் என எந்தப் பாதிப்பு இருந்தாலும் அது இங்கு நீராடி முருகனைப் பணிந்தால் அகலும்.
இக்கோயிலில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைபெறுவது இல்லை. திருமணம், குழந்தைப்பேறு, ஐஸ்வர்யம், ஆரோக்கியம் என்று பல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் ஸ்தலமாக இருந்து வருகிறது.
எல்லா நோயும் சாபமும் இந்தத் சுனையில் தீரும், எல்லாச் சாபமும் இங்கு மாறும்.
அடுத்த ஆலயம் வழிவிடும் முருகன் ஆலயம். இது மேகமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, லோயர் கேம்ப் வழியான குமுளி மலைச்சாலையில் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் காலத்தால் மூத்தது. பின்னாளில் அது புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டதே அன்றி அது சிறிய ஆலயமாக அக்காலத்திலே இருந்தது.
இது மிகவும் சக்திவாய்ந்த ஆலயமாக அன்றே வணங்கப்பட்டது. ஆபத்தான மலையேற்றம் செல்வோர், குமுளி வழியாக மலையாளம் செல்வோர், இன்னும் அப்பக்கம் இருந்து திருயாத்திரை செல்வோர் என எல்லோரும் முதலில் வழிபடும் ஆலயம் இந்த ஆலயம் தான்.
இந்த ஆலயத்தில் வழிபட்டால் எல்லாத் தடையும் தகர்த்து நல்வழிக்கு முருகன் வழிவிடுவார், நல்ல பாதையில் பத்திரமாக நம்மை வழிநடத்துவார், துன்பங்கள் தடைகளில் இருந்து நம்மை கரம்பிடித்து வழிஎடுத்து தருவார் என்பதால் இது வழிவிடும் முருகர் ஆலயமாயிற்று.
இந்த முருகனை நம்பி தொழுதுவிட்டு செய்யும் பயணம் எதுவும் தோற்பதுமில்லை, ஆபத்து வருவதுமில்லை என்பதால் இந்த முருகன் அப்பக்கம் மகா பிரசித்தி.
ஒருமுறை சாலையினை விரித்து அமைக்க முயல இந்த ஆலயத்தை அப்புறப்படுத்த ஆங்கில அரசு முயன்றது, எவ்வளவோ முயன்றும் இந்தப் பாறையில் ஒரு துளி கல்லை பெயர்க்க முடியவில்லை எல்லா முயற்சியும் தோற்றுப்போனது.
மாபெரும் சக்தி இங்கு இருக்கின்றது என உணர்ந்தபின் அக்கால அரசாங்கம் வழிஒதுங்கிச் சென்றது. ஆலயம் நிலைத்தது. அப்படி வரலாற்றில் மிகப் பெரும் இடம் இந்த ஆலயத்துக்கு உண்டு.
தேனி சின்னமனூர் பக்கம் இந்த முருகன் மிக மிக விசேஷம். இங்குள்ள விநாயகரைத் தொழுது தொட்டில்கட்டி இந்த முருகனுக்கு இராஜ அலங்காரம் செய்தால் பிள்ளை செல்வம் நிச்சயம் கிடைக்கும், அப்படிப் பெற்ற சாட்சிகள் ஏராளம் அங்கு உண்டு.
பழனி போன்ற கோவில்களுக்கு முருக பக்தர்கள் செல்லும் முன் தேனி மாவட்டத்திலுள்ள முருக பக்தர்கள் இந்தக் கோவிலுக்குப் பாதயாத்திரையாக வந்து பால் குடம் செலுத்திய பின்னரே பெரிய திருத்தலங்களுக்குச் செல்வது வழமை. இதே காட்சி சபரிமலை செல்லும் பக்தர்களிடமும் உண்டு.
இந்த வழிவிடும் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகனுக்கு அபிஷேகம் செய்தும் எலுமிச்சை விளக்கு ஏற்றியும், கூடுதல் சில சிறப்பு பரிகாரங்கள் செய்வதன் மூலமும் திருமணத்தடை உள்ளவர்களுக்கு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
இந்த ஆலயத்தில் தை மற்றும் பங்குனி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஆலயம் நிரம்பி வழியும். சிறப்பு நாட்களில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு, இளநீர், பன்னீர், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட சகல திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும்.
இந்த ஆலயத்துக்குத் தமிழகம் மட்டுமன்றி கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவது சிறப்பு. முருகன் இரு மாநில எல்லை மக்களுக்கும் காவலாக வழிகாட்டும் தெய்வமாக அருள்பாலிக்கின்றார்.
தேனி பக்கம் செல்லும் போது இந்த இரு முருகன் ஆலயங்களையும் காணத் தவறாதீர்கள். தீர்த்ததொட்டி ஆலய சுனையில் நீராடி முருகனை வணங்கி நில்லுங்கள், அந்த சுனையின் அருள்நீரை வீட்டுக்கு எடுத்து வந்து கொஞ்சம் தெளித்துவிட்டு பூஜை அறையில் வைத்து வணங்குங்கள்.
அந்த வழிவிடும் முருகனையும் மறக்காமல் வணங்குங்கள். உங்கள் வாழ்வின் எல்லாத் தடைகளையும் நீக்கி நல்ல வாசலை திறந்து உங்களுக்கு வழிவிட்டு காவல் நிற்பார் அந்த முருகன். இது சத்தியம்.