முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றக்குடி முருகன் ஆலயம் மற்றும் கோவனூர் முருகன் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றக்குடி முருகன் ஆலயம் மற்றும் கோவனூர் முருகன் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்களில் பிரசித்தியானது குன்றக்குடி ஆலயம் திருப்பத்தூர் அருகே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் மகா தொன்மையானது.
“அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
அமுத புஞ்ச இன்சொல் …… மொழியாலே
அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
டணிச தங்கை கொஞ்சு …… நடையாலே
சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
தொடுமி ரண்டு கண்க …… ளதனாலே
துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
துயரை யென்றொ ழிந்து …… விடுவேனோ
எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
யெதிர டைந்தி றைஞ்சல் …… புரிபோதே
இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
மொழிய வென்ற கொண்டல் …… மருகோனே
மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
மநுவி யம்பி நின்ற …… குருநாதா
வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
மலைவி ளங்க வந்த …… பெருமாளே”
என அருணகிரியார் பாடிய தலம் இது
மயூரகிரி என்றும் மசிலீஸ்வரம் என்றும் அழைக்கப்படும் அந்த ஆலயத்தின் வரலாறு சூரசம்ஹாரத்துக்கு முன்பே தொடங்கிற்று. அதாவது, முருகப்பெருமானின் அவதார காலங்களிலே தொடங்கிற்று, அதை தொடங்கி வைத்தது முருகப்பெருமானின் வாகனமான மயில்.
அந்த மயிலுக்கு எப்போதும் தானே முருகப்பெருமானை சுமப்பதாகவும் மற்ற பறவைகள் தன்னைவிட அழகானவை இல்லை எனும் கர்வமும் இருந்தது, அந்தக் கர்வம் ஆணவமாக மாறிற்று.
மயில் முருகனின் வாகனம் என்பதால் சூரர்களின் ஆட்களும் இதனைக் கண்காணித்து கொண்டே இருந்தார்கள். மயிலை முடக்குவது அவர்களின் திட்டங்களில் ஒன்றாயிருந்தது. அதன்படி முருகப்பெருமானுக்கும் மயிலுக்கும் இடையே விரோதம் வளர்க்கும் பொருட்டு, பிரம்மனின் அன்னம் பெருமாளின் கருடனெல்லாம் உன்னை விட விரைவானது, வேகமாகச் செல்வது நீ ஒரு பெரிய கோழி என வசவுப்பாடி இன்னும் விரைவில் முருகன் உன்னை விடுத்து வேறு வாகனம் தேடுவான் என அச்சமூட்டின.
முருகப்பெருமானை பிரிந்துவிடுவோமோ என அஞ்சிய மயில் தனக்கு போட்டியான அன்னத்தையும் கருடனையும் வம்பிழுத்து சண்டையிட்டு பெரும் குழப்பம் செய்தது. அது முருகப் பெருமானிடம் புகாராய்ச் செல்ல அவர் தன் மயிலை பூமியில் கல்லாய்ப் போகும்படியும் உரிய காலத்தில் தான் வந்து மீட்கும்வரை அப்படியே கிடக்கவும் சாபமிட்டார்.
அப்படி மயில் ஒரு குன்றானது. கயிலாயத்தைப் பார்த்தபடி தலையும், தென்பக்கம் தோகையும் கொண்ட மலைசிலையாய் வீழ்ந்தது. அப்படி கல்லான மயில்மேல் முருகப்பெருமான் ஆட்கொண்டு ஆலயம் கண்ட இடம் இந்த ஆலயம், மயில் சாபவிமோசனம் பெற்றபின் அதன் ஸ்தூல உடல் இந்தப் பாறையாய் மாறி நிலைத்துவிட்டது.
குன்றின் மேல் முருகன் குடியிருந்த இடம் என்பதால் குன்றக்குடி என்றானது. மயில் மலையான இடம் என்பதால் மயூரகிரி என்றுமானது, மசிலீஸ்வரம் என்றுமானது.
இந்த ஆலயத்தின் கருவறையில் சண்முகநாதர் ஆறு திருமுகங்களுடனும், பன்னிருகைகளுடனும் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். வலப்பக்கத்தில் வள்ளியம்மையும், இடப்பக்கத்தில் தெய்வானையும் தனித் தனி மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.
இப்படி மூவரும் தனித் தனி மயில் மேல் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை வேறு எங்கும் காண இயலாது.
இந்த ஆலயத்தின் மேற்பகுதி கற்களால் கட்டப்பட்டது, கீழ்பகுதி குடைவரை கோவிலாக குடையப்பட்டு அற்புதமாக உருவாக்கப்பட்டது, அங்குதான் மயில் மலையின் தோகை பாகம் உள்ள இடத்தில் விநாயகர் உண்டு அவர் தோகையடி விநாயகர் என்றானார்.
இதன் அருகே சுயம்புவாக உருவான சிவலிங்கம் உண்டு. இந்த மலை தேனாற்று பக்கம் இருப்பதால் இவர் தேனாற்றுநாதர் என்றானார், அகத்தியர் வந்து வழிபட்ட நாதன் இவர். அன்னையின் பெயர் அம்பாள் அருட்சக்தி.
குன்றக்குடி முருகன் கோவிலுக்கு மேலே ஏறி செல்ல 149 படிகள் உள்ளன. பக்தர்கள் இளைப்பாறும் வகையில் பல மண்டபங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. மலை மேல் இருக்கும் இக்கோவில் ஒரே திருச்சுற்று மட்டுமே உள்ளது.
இதற்குச் சற்று அருகில் வல்லப கணபதிக்கு தனி சன்னதி உண்டு. அங்கு அவர் தேவியுடன் காட்சி அளிக்கின்றார். முருகனுக்கு காவடி எடுத்துச் செல்லும் இடும்பனுக்கும் தனிச் சன்னதி உள்ளது. 17 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட கோயில் என்பதால் கந்த புராணத்தில் வரும் வீரபாகுவுக்கும் ஒரு தனி சன்னதி உண்டு.
கோயிலுக்குள் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ண கணபதி, பைரவர், நடராஜர் ஆகியோரர் உள்ளனர். காசி விஸ்வநாதரும் விசாலாட்சியும் தனிச் சன்னதியில் உள்ளனர். ஈசான்ய மூலையில் நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
பஞ்சபாண்டவர்கள் இங்கு வழிபட்டார்கள் என்கின்றது குறிப்புகள். அப்படியே பிரமன், இந்திரன், வசிஷ்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன் , சூரியன், மன்மதன் எனப் பலர் வந்து பணிந்த ஆலயம் இது.
கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும், இதுபற்றிய ஆவண கல்வெட்டு இன்றும் உண்டு.
அருணகிரிநாதர் இந்த முருகக் கடவுளைத் திருப்புகழ் பாடியிருக்கிறார். பாம்பன் குமரகுருதாஸ சுவாமிகளும் இந்தத் தலத்து இறைவனைப் பாடியுள்ளார்.
நல்ல விளைச்சல் கண்ட விவசாயிகள், தங்களது வேண்டுதலின்படி விளைபொருட்களில் ஒரு பகுதியை வைக்கோலுக்குள் வைத்து உருண்டையாகக் கட்டி கொண்டு தலையில் வைத்து ஆடிப் பாடி உற்சாகத்துடன் காணிக்கை செலுத்தும் ‘கோட்டைக் காவடி’ நிகழ்வு இந்த கோயிலில் மட்டுமே காணப்படுகிறது.
இந்த ஆலயத்தின் அற்புதமான அமைப்பு குடைவரை கோவில்கள். அவை நான்கு ஆலயங்களாக உண்டு சுந்தரேசுவரர், அண்ணாமலையார், மலைக்கொழுந்துநாதர், சண்டேசுவரர் என நான்கு ஆலயங்கள் உண்டு.
இந்த ஆலயம் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம், குடைவரை கோவில்களும் அவர்கள் உருவாக்கமே. அவர்களைப் பற்றிய பெரும் ஆவண கல்வெட்டுகள் இங்கே செதுக்கப்பட்டிருக்கின்றன, பாண்டிய வம்சத்தின் சாட்சியாக நிற்கும் ஆலயம் இது.
முருகப்பெருமான் மனைவியரோடு அருள்பாலிக்கும் இடம் என்பதால் இங்கு திருமண தடைகள் விலகும், திருமண வாழ்வு சீராகும், திருமண வரமும் நல்ல குடும்ப வாழ்க்கையும் தரும் தலமிது.
கலிங்கத்து இடும்பன் நோய் தீர்த்த தலம் என்பதால் இன்றும் அது நோய்தீர்க்கும் ஆலயமாக அறியப்படுகின்றது.
இந்தக் குன்றக்குடி முருகன் கோவிலில் சில வித்தியாசமான நேர்த்திக்கடன்களும் பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்று கும்பிடு தண்டம் என்பதாகும். கோயிலைச் சுற்றி தொடர்ந்து கும்பிட்டு விழுந்து கொண்டே வர வேண்டும். இது செட்டிநாட்டு வழக்கங்களில் ஒன்று அது இங்கும் பின்பற்றப்படுகின்றது.
அடிபிரதட்சணமும் அங்க பிரதட்சணமும் இங்கு வழமையானது, ஆண்கள் இங்கு அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். பெண்களின் மார்பு மண்ணில் படக்கூடாது என்ற காரணத்தினால் அங்கப் பிரதட்சணம் செய்வதில்லை. அவர்கள் அடிப்பிரதட்சண நேர்த்திக்கடன் மட்டும் செய்வர்.
இந்த ஆலயத்தின் காவடி பிரசித்தியானது, என்ன நோக்கத்திற்காக காவடி எடுப்பார்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும், உலகெல்லாம் இருந்து பக்தர்கள் வந்து காவடி எடுப்பது சிறப்பு, இங்கு காவடி எடுத்தால் எதுவும் குறைவுபடாது.
குன்றக்குடி முருகன் கோவிலுக்கு விவசாயிகள் தங்கள் முதல் விளைச்சலை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். வைக்கோல் விரித்து அதில் நெல்லைக் கொட்டி பொதிந்து திரித்துக் கட்டிக் கொண்டு வந்து கோவிலுக்குக் காணிக்கை செலுத்துகின்றனர்.
காரைக்குடி பகுதியில் பல கோவில்களில் குழந்தைகளைத் தத்து கொடுத்து வாங்கும் முறை காணப்படுகின்றது. செட்டியார் சமுதாயத்தில் வாரிசு இல்லாதவர்கள் உறவினர்களின் குழந்தைகளைத் தத்தெடுக்கும் பழக்கம் உள்ளது.
இங்குச் செட்டியார்களிடையே ஒரு பாரம்பரியம் உண்டு, அவர்களில் வாரிசு இன்மை அதிகம் என்பதால் கிடைக்கும் வாரிசினை இந்தக் கோவிலில் கொடுத்துவிட்டு பின் தத்தெடுத்து வளர்ப்பு பெற்றோராக இருந்து வளர்ப்பார்கள்.
அதாவது, பெற்ற பிள்ளையினை ஆலயத்தில் இட்டு பின் தத்தெடுத்து வளர்ப்பார்கள். கோவில் பிள்ளையினை வளர்ப்பதாக வளர்ப்பார்கள். இதனால் தங்கள் சாபமும் குழந்தையின் கர்மாவும் தங்களையும் குழந்தையினையும் தாக்காது முருகப்பெருமான் அதனை ஏற்றுக்கொள்வார் என்பதால் இது அங்கு வழமை.
நோய் வந்தவர்கள் நோய் தீர வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டிக்கொண்டு எந்த உறுப்பில் நோய் வந்ததோ அந்த உறுப்பை வெள்ளியில் செய்து வாங்கி உண்டியலில் செலுத்துகின்றனர்.
இங்குக் கோயில் தீர்த்தத்திலும் இடும்பன் சன்னதியிலும் பக்தர்கள் உப்பும் மிளகும் வாங்கிக் காணிக்கையாக செலுத்துகின்றனர். உப்பு கரைவது போல பக்தர்களின் தோல் நோய் காணாமல் போய்விடும் .
அரிசி தூவும் சம்பிரதாயம் இன்னொரு சிறப்பு, இங்கு அரிசி கொண்டு வந்து மலைப் படிகளில் ஏறும் போது தூவிச் செல்கின்றனர் பறவைகள் அங்கே பசியாறுகின்றன.
இந்தக் கோவிலில் சனுக வேள்வி இன்னும் விசேஷம்.
இந்தக் கோவிலின் மாபெரும் சான்று மருதுபாண்டியர்கள், பெரிய மருதுவுக்கு முதுகில் வந்த ராஜபிளவை எனும் கொடும் வலிதரும் கட்டியினை முருகப்பெருமான் அகற்றிப்போட்ட அற்புதம் நடந்தது. அதற்கு மருதுபாண்டியர் செய்த திருப்பணியே சாட்சி.
ஆம். 1780ல் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த பெரிய மருது பாண்டியருக்கு முதுகில் இராஜபிளவை ஏற்பட்டது. அப்போது அவரைச் சந்திக்க வந்த காடன் செட்டியார் குன்றக்குடி முருகன் கோவிலின் விபூதியை முதுகில் பூச உடனே பெரிய மருது குணமடைந்தார்.
நன்றிக்கடனாக அந்தப் பெரிய மருது குன்றக்குடி முருகன் கோவிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்தார். தான் அடிக்கடி அங்கு வந்து தங்கி இறைவனை வழிபட தனக்கென்று ஒரு அரண்மனையும் கோயிலின் அருகினில் கட்டினார்.
கோவிலுக்குத் தென் திசையில் தீர்த்தக் குளத்தைச் சரி செய்து படித்துறைகள் அமைத்தார். இன்றும் அவருடைய பெயரால் அந்த ஊருணி மருதாவூருணி எனப்படுகின்றது.
மூலவர் சந்நிதிக்கு முன்பு மயில் மண்டபமும் உற்சவர் சன்னதி முன்பு அலங்கார மண்டபமும் எழுப்பினார். இராஜகோபுரமும் கட்டினார். அதன் அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்ற எழுத்துக்களை பொறித்து உற்சவமூர்த்திக்குத் தங்க கவசமும் செய்து சாத்தினார்.
உற்சவத்துக்குத் தேர் செய்து கொடுத்தார். தைப்பூச நன்னாளன்று தேர்த் திருவிழா மருது பாண்டியரின் பெயரால் நடந்து வருகிறது. தனக்கு விபூதி பூசிக் குணமளித்த காடன் செட்டியார் பெயரிலும் ஒரு மண்டகப்படி கட்டிக் கொடுத்தார்.அன்னதானச் சத்திரமும் கட்டினார்.
மருதுபாண்டியரின் பெயர் சொல்லும் ஆலயம் இது.
இப்போது குன்றக்குடி ஆதீனத்தின் பொறுப்பில் இருக்கும் இந்த ஆலயம்தான் குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழறிஞர்கள், குன்றக்குடி வைத்தியநாதன் போன்ற இசைமேதைகளை எல்லாம் உருவாக்கிற்று.
மயில் கல்லானதா அப்படி ஆகுமா என்பதல்ல விஷயம், அது அன்று நடந்த சம்பவம். ஆனால், மயில் என்பது ஆத்மாகவும் சூரர்கள் என்பது மாயையாகவும் கொண்டு சொல்லப்பட்ட தத்துவம் அது.
ஆத்மா அகங்காரம் கொண்டாலோ, தன் நிலை கண்டு கர்வம் கொண்டாலோ, அகங்கார ஆட்டம் ஆடினாலோ முருகப்பெருமானுக்கு பிடிக்காது, அப்படியான ஆத்மா சாபம் பெறுகின்றது பின் தவறை உணர்ந்து அழும்போது முருகப்பெருமான் அந்த ஆத்மாவினை தன்னோடு சேர்க்கின்றான் என்பதைச் சொல்லும் தத்துவம் இது.
எந்நிலையில் இருந்து அவரை மனமார ஏற்று பணிந்தாலும் அந்த முருகப்பெருமான் உங்களை தன்னோடு சேர்த்துக் கொள்வார், உங்கள் சாபம் பாவம் எல்லாமும் மாறும் இந்த ஆலயம் அந்த வரத்தைத் தரும்.
செட்டிநாடு பக்கம் சிவகங்கை பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தில் வழிபட மறவாதீர்கள். உங்கள் குடும்பம், தொழில், ஆரோக்கியம், குழந்தைச்செல்வம் என எல்லாமும் தரும் அருள்மிக்க ஆலயம் இது.
அடுத்து கோவனூர் ஆலயம்.
இது மதுரைக்கும் சிவகங்கைக்கும் இடையே பில்லூர் கிராமம் அருகே அமைந்துள்ளது, இதன் தோற்றம் அகத்தியரும் அவர் சீடர்களும் வலம் வந்த காலத்தில் இருந்து தொடங்குகின்றது.
சித்தர்கள் எப்போதும் மக்கள் நலன் உலக நலன் பற்றியே சிந்திப்பவர்கள். இதனால் எங்கு நோய் உண்டோ எங்கு அறியாமை உண்டோ எங்கு எல்லா வகையிலும் மக்களை வழிநடத்த நல்ல ஆத்மா தேவையோ அங்கெல்லாம் சென்று மக்களுக்குப் பணிசெய்வார்கள்.
நோய் தீர்ப்பார்கள், நாடி நரம்பு வலுபெற பயிற்சி அளிப்பார்கள், வாழ வழி சொல்வார்கள், நல்ல போதனைகள் செய்வார்கள், தேவை எனில் அற்புதங்களை செய்வார்கள், மக்கள் நலமாய் வாழ்ந்து இறைவனை அடைய எல்லா லௌகீக ஆன்மீக வழிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள், அவர்கள் கர்மா இது.
அப்படி அகத்தியரும் அவர் சீடர்களும் ஊர் ஊராய் சென்றார்கள். அப்படிச் சென்று திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்தனர். பிறகு காளையார்கோவில் அருள்மிகு சொர்ண காளீஸ்வரரை வழிபட்டார்கள்.
பின் திரும்பும் வழியில் அன்று காட்டுப் பகுதியாக இருந்த கோவனூரில் தங்கிவிட்டார்கள். காலையில் எழுந்ததும் நீராடி, சிவபூஜை செய்வதற்காக எங்கேனும் நீர்நிலை இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தனர். எங்குமே தண்ணீர் இல்லாத நிலையில் அகத்தியரே ஊற்றை தோற்றுவித்தார்.
சிவவழிபாடு அவர்களுக்கு முக்கியம், அதற்கு நீர் மிக முக்கியம்.
அப்படி அவர்கள் ஊற்று நீரில் இருந்து கமண்டலத்தில் நீரினை சேகரித்தனர். அந்தக் கமண்டலம் பொங்கி எழுந்த நீர் அங்கிருந்த பூச்செடிகளில் பட்டு பூநீரானது, அந்த இடத்தில் தன் கமண்டலம் பொங்குவதை அறிந்து இங்கு ஒரு சக்தி உண்டு என உணர்ந்த அகத்தியர் அந்த இடத்தில் தன் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை வள்ளி தெய்வானையுடன் ஸ்தாபித்தார்.
அதன்பின் அவர் இதனைப் பாண்டிய மன்னனிடம் சொல்ல அவன் பெரும் கோவிலாக அகத்தியருக்காக அதைக் கட்டிவைத்தான். அதன் வருமானத்திற்கும் திருப்பணிக்குமாக ஏகப்பட்ட நிலங்களையும் அக்கம் பக்கம் கிராமத்தில் எழுதி வைத்தான், அப்படி உருவான ஆலயம் இது.
இது சித்தர்களின் தலைவரான அகத்தியர் உருவாக்கிய ஆலயம் என்பதால் எப்போதுமே சித்தர்கள் அரூபமாக வருவது உண்டு, இன்றும் என்றும் அது உண்டு.
அகத்தியர் இந்த ஆலயத்தின் முருகனை திருசெந்தூர் முருக வடிவாகவே ஸ்தாபனம் செய்ததால் அந்தச் சாயல் அப்படியே உண்டு.
பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தை அழகுற அமைத்தான். வம்ச வம்சமாக அதை பாண்டியர்கள் பெரிதாக்கினார்கள்.
முருகன் சன்னதி முன்பு மயில் மண்டபமும், கோபுர வாசலின் வட புறத்தில் இடும்பன் சன்னதியும், இடது பக்கம் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி சன்னதியும், விநாயகர் சன்னதியும் தனித்தனியாக அமைந்துள்ளன.
கோபுர வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும், விஸ்தாரமான பிராகாரம் காணப்படுகிறது. கோயிலின் எதிரே பலிபீடம், மயில் வாகன மண்டபம் ஆகியவை அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கொடி மரம் இருந்த இடம் தற்போது வெறுமையாக உள்ளது. பிரதான கோயிலில் மகா மண்டபம் அர்த்த மண்டபம், கருவறை என நேர்த்தியான கற்றளியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரில் சித்தர்கள் அரூபியாக இருந்து உருவாக்கிய சித்தர் “சாத்தப்ப ஞானி”. முருகன் கோவிலெல்லாம் ஒரு சித்தர் அவசியம் இருப்பார், அவ்வகையில் சித்தர்கள் உருவாக்கிய சித்தர் இந்த சாத்தப்ப ஞானி.
அவர் சிறுவனாக இருந்தபோதே இறைவனைத் தேடினார், இந்தக் கோவனூர் பக்கம் எப்போதுமே யோசகிகள், தவசிகள், சித்தர்கள் சுற்றித் திரிவார்கள், அப்படித் தவமிருந்த யோகியருக்கு நீரும் உணவும் கொடுத்து அவர்கள் காலடியில் அமர்ந்திருந்தார் சாத்தப்பன்.
அந்தச் சாத்தப்பனைப் பெரும் ஞானியாக உருவாக்கினார்கள் சித்தர்கள்,”சாத்தப்ப ஞானி” தான் இன்றைய சிவகங்கை எழ காரணமானவர்.
அப்போது சசிவர்ண தேவர் என்பவர் அப்பக்கம் வேட்டைக்கு வந்தார், அவர் ஒரு காவல் அதிகாரி என்பதால் புலிகளை ஒடுக்கும் பொறுப்பில் இருந்தார், காட்டில் இந்தச் சாத்தப்பர் தவம் செய்துகொண்டிருக்க அவர் முன் ஒரு புலி மான்போல் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
பின் அங்கேயே காத்திருந்தார் முனிவர் கண்விழித்ததும் புலி அவரைப் பணிந்தது. அவர் தடவி கொடுக்க அது இன்னும் குழைந்தது. இந்தக் காட்சியினை கண்டு மெய்சிலிர்த்த சசிவர்ணதேவர் அவரைப் பணிந்தார்.
அவரை ஆசீர்வதித்த “சாத்தப்ப ஞானி”, “நீ பெரிய இராஜ்ஜியத்தை நிறுவுவாய்” என அருளாசி வழங்கினார்.
அதன்பின் காலம் சசிவர்ணதேவருக்கு கைகொடுத்தது. அவர் ஒரு சமஸ்தானம் நிறுவி தன் குருவான சாத்தப்ப ஞானியினைக் கண்ட இடத்தில் ஒரு குளம் வெட்டி அதற்கு “சிவகங்கை” எனப் பெயரிட்டார்.
அவ்வாறே செய்து தனது குருவான ஞானியருக்கு மடம் நிறுவி நிலங்களையும் சமயப்பணி சிறப்பாக செய்வதற்கு அளித்தார். மேலும் சாத்தப்பர் அவர்களின் புதல்வரும் புகழ்பெற்ற சேது தளவாயான வைரவன் சேர்வைக்காரர் கட்டிய இராமநாதபுரம் அருகிலிருக்கும் பெறுவயலில் இரணபலி முருகன் கோயிலுக்கு திருவொற்றியூரில் சில இடங்களைக் கொடுத்துள்ளார்.
இன்று வரை இவ்வூரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு சாத்தப்பையா எனப் பெயர் வைக்கின்றனர்.
இன்றும் இங்குக் குருவின் நினைவாக ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று படையல் வைத்து குரு பூஜை செய்து அன்னக்கொடி நட்டு அன்னதானமும் நடைபெறுகிறது.
மன்னர் சசிவர்ண தேவரவர்கள் காளையார்கோயிலில் தனது சிலையை நிறுவி அதற்கு எதிரே சாத்தப்ப ஞானியாரின் சிலையை நிறுவினார். அது இன்றும் உண்டு.
இந்தக் கோவனூர் தலத்துக்கு மூன்று திசைகளிலும் குண்டுமணி அம்மன், சுந்தரவள்ளி அம்மன், ராக்காச்சி அம்மன் ஆகிய மூவர் காவல் தெய்வங்களாகத் திகழ்கின்றனர்.
இவற்றுள் கோயிலுக்கு நேர்கிழக்கில் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் குண்டுமணி அம்மன் கோயில்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் குண்டுமணி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமியன்று இங்கே நடைபெறும் விழா மிகவும் பிரபலம்.
அன்றுதான் சித்தர்கள் சூட்சும வடிவில் கோவனூர் கோயிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபடுகின்றனர்.
சித்ரா பௌர்ணமியில் மட்டுமல்லாமல், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற நாள்களிலும் சித்தர்கள் இங்கே வந்து வழிபாடு செய்வார்கள். பின்னர் குண்டுமணி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு, அங்கே கிடைக்கும் பூநீரைப் பருகுவார்கள், அரூபமாய் இது நடக்கும்.
அன்றைய தினம் சித்த வைத்தியர்களும் கோயிலுக்கு வந்து பூநீர் சேகரித்துச் செல்வது இன்றும் உண்டு.
கோவனூரில் உள்ள முருகன் கோயில் விபூதிப் பிரசாதம் அளவற்ற மகிமை கொண்டது. திருச்செந்தூரில் தருவதுபோலவே இங்கும் இலை விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.
“குண்டுமணி அம்மன் சந்நிதியிலே சாகா மூலிகை பூத்திருக்கு சாய்ந்து கொட்டடி ஞானப்பெண்ணே” என்ற பாடல் இன்றும் இந்தப் பகுதியில் பாடப்படுகிறது.
இந்தத் தலம் சதுரகிரி போல, கொல்லி மலை போல சித்தர்கள் அரூபமாய் உலாவும் பகுதி, இங்கு எக்காலமும் அற்புதங்களை அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.
இது சித்தர்கள் அருள் செய்யும் தலம் என்பதால், மக்கள் ஆரோக்கியம் பெற சித்தர்கள் அருள் வழங்கும் தலம் என்பதால் சித்த மருத்துவமும் மருந்தும் இங்கே பலிக்கும்.
சித்த மருத்துவர்களும், சித்த மருந்து பயன்படுத்துவோரும் வந்து வழிபட்டால் கூடுதல் பலன் உண்டு. இந்த குண்டுமணி அம்மன் ஆலய பூநீர் வியாதியெல்லாம் தீர்ப்பது.
இந்த தலத்துக்கு வந்து பணியுங்கள். எல்லா நலனும் ஆரோக்கியமும் தெளிவும் உங்களுக்குக் கிடைக்கும். அப்படியே அந்தச் சாத்தப்ப ஞானியின் ஜீவசமாதியும் வணங்க தவறாதீர்கள். சிவகங்கை என்றொரு பலமான சமஸ்தானம் எழவும் எவ்வளவோ கோவில்களை அது உருவாக்கி காவல் இருக்கவும் காரணம் அவர்தான் அந்த சித்தர்தான்.
கோவனூர் முருகப்பெருமானுடன் அந்தச் சித்தரையும் வணங்கி வாருங்கள். மனதார வணங்கினால் அங்கு உங்கள் வாழ்வே மாறி பெரும் உச்சம் அடையும். உங்களுக்கும் உலகுக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து பெரும் வாழ்வு வாழ்ந்து புகழும் மக்கள் தொண்டுமாக பெரும் வாழ்வு வாழ்வீர்கள். இது சத்தியம்.