முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை.
முருகப்பெருமான் ஆலயங்கள் : தேனி பெரியகுளம் பாலசுப்பிரமணியர் ஆலயம்.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அமைந்திருக்கும் ஆலயம் இது. இதன் வரலாறும் அங்கு முருகப்பெருமான் குடிகொண்ட காட்சியும் சிலாகிப்பானவை.
ஆயிரம் ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மாபெரும் இராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினான் இராஜராஜ சோழன். தஞ்சாவூரில் மாபெரும் சிவாலயம் எழுப்பிய அந்த உன்னதமான சிவபக்தனுக்கு எதிரிகளை அடக்கும் அவசியமும் இருந்தது.
அவ்வகையில் அவனின் எதிரிகளாகச் சேரர்கள் இருந்தார்கள். மேற்கு மலையின் கணவாய்களில் முக்கியமானதான குமுளி வழி பிரதானமாய் அவர்களுக்கு இருந்தது. அதன் அருகில்தான் காந்தளூர்சாலை எனும் பலமான சேரர் முகாம் இருந்தது.
அது மிகவும் பலமான முகாம், பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்த முகாம். மலைமேல் இருந்த அந்தக் கோட்டையினை அழிப்பது சுலபமல்ல, மிகக் கடினமான ஒன்று. காரணம், அது இன்றைய கோட்டையம் பத்தனம்திட்டா பகுதிகளை அப்பக்கம் கொண்ட பகுதி, மலையாள தேசத்தின் பெரும் வல்லமையான மாந்தீரிகர்களெல்லாம் அப்பக்கமே இருந்தார்கள்.
இராஜராஜசோழனுக்கு இவர்கள் ஏவிவிட்ட சூனியமும் இதர துர்சக்திகளும் கொஞ்சமல்ல. அவனை அழிக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால். சிவனின் அருள் கருவூர் சித்தர்மூலம் சோழனைக் காத்தது.
அதே பில்லிசூன்ய ஏவல் தாக்குதல் இராஜேந்திரனுக்கும் இருந்தது. சித்தரும் சிவனும் அவனையும் காத்து வந்தார்கள்.
காந்தளூர் சாலையில் பெரிய பில்லி சூனிய சாலை எல்லாம் இருந்தது. அதை மிக மிக தைரியமாக அழித்துப் போட்டான் இராஜராஜன், எல்லோரும் நுழையத் தயங்கிய இடம் அது, இராஜராஜன் சிவன் மேல் பாரத்தை இட்டு அந்தச் சவாலை எடுத்து மீண்டான்.
இது அவனின் மெய்கீர்த்தியில் “காந்தளூர்சாலை கலமறுத்து அருளிய” என்ற வரியோடு வரும்.
இந்த வெற்றிக்குப் பின் இன்னும் விழிப்பாய் இருந்தது சோழ குலம். எப்போதும் சேரர்கள் தலையெடுக்கலாம் என்பதால் அவர்களை அடக்கி வைக்க இராஜராஜனின் மகன் இராஜேந்திரசோழன் அப்பக்கம் காவல் இருந்தான். சேர மந்திரவாதிகளின் செய்வினை முயற்சிகள் தொடர்ந்தபடி இருந்தன.
அது வராக நதி பாயும் பூமி, வராகம் என்றால் காட்டுப்பன்றியின் ஒருவகை, அது அதிகமுள்ள மலை என்பதால் அந்த ஆற்றுக்கே வராக நதி எனப் பெயரும் வந்தது.
இராஜேந்திர சோழன் இராஜராஜனைப் போல மாபெரும் சிவபக்தன், இராஜராஜனும் வானமாதேவியும் அவனை மிகச் சிறந்த சிவனடியாராக வளர்த்திருந்தார்கள். அவனுக்குத் திருவிளையாடலும், நாயன்மார் கதையும் எப்போதும் பிடித்தமான ஒன்று.
கண்ணப்ப நாயனாருக்காக காளஹஸ்தியில் கோவில் கட்டியதும் அவனே, தாராசுரம் கோவிலில் நாயன்மார் வரலாற்றைச் சிலைகளாகச் செதுக்கியவனும் அவனே.
இவ்வளவுக்கும் இவன் காலத்தில் பெரியபுராணம் இயற்றப்படவில்லை. நாயன்மார் வரலாறு திருத்தொண்டர் தொகை எனும் வடிவில் செய்தியாகத்தான் இருந்தது. அந்நக் காலகட்டத்திலேயே பெரும் அன்பை சிவன் மேலும், சிவனடியார் மேலும் கொண்டிருந்தான் இராஜேந்திரன்.
செல்லுமிடமெல்லாம் சிவாலயம் எழுப்புவது அவன் தலையாயப் பணி. அதைக் கங்கை கொண்ட சோழபுரம் தொடங்கி கடாரம் வரை செய்தான்.
அப்படிப்பட்டவன் வராகநதி ஓரம் சிவனுக்கு ஒரு கோவில் எழுப்பினான். அது இராஜேந்திர சோழீஸ்வரர் எனப் பெயர்பெற்றது, அவன் அமைத்து வழிபட்ட சிவனுக்கு அந்தப் பெயர் வந்தது.
கண்ணப்ப நாயனார் கதை, அர்ஜூனன் சிவனுடன் பன்றிக்காக சண்டையிட்ட கதை எல்லாம் அவனை ஈர்த்தது. அப்படியே பன்றிக்குப் பரமன் பால் கொடுத்த திருவிளையாடலும் அவனை உருக வைத்தது.
இதனால் வராகம் என்றால் அவனை அறியாமல் ஒரு உற்சாகம் அவனுள் வரும், அப்படி உற்சாகமாக அன்று அட்டகாசம் செய்த வராகங்களை அடக்கி அழித்துக் கொண்டிருந்தான்.
மலைவாழ் வராகங்கள் விவசாயத்துக்குப் பெரும் எதிரி, இரவில் மலையில் இருந்து ஆயிரக்கணக்கில் இறங்கும் பன்றிகள் மொத்த வயலையும் அழித்துப்போட்டு செல்லும் என்பதால் தொல்லை மிக அதிகம்.
இவற்றை ஒடுக்குவது மன்னர் கடமை, அவ்வகையில் இராஜேந்திரன் அந்த வேட்டைக்குச் சென்றான், அவனும் அவன் படையினரும் சுற்றி வளைத்துப் பன்றிகளை அழித்தார்கள்.
அப்போது ஒரு பன்றி போக்குக் காட்டியது. இராஜேந்திரனின் ஈட்டிக்கும் அம்புக்கும் சிக்காமல் லகுவாக ஓடியது. அதை விரட்டிச் சென்ற இராஜேந்திரன் ஒரு மரத்துக்குப் பின் பன்றி படுத்திருக்கக் கண்டான்.
இதுதான் தான் விரட்டிய பன்றி என எண்ணியவன் ஈட்டியினை எறிந்தான். அது குறிதவறாமல் பன்றியினைத் தாக்க அலறியபடி பன்றி சாய்ந்தது.
அருகில் சென்று அதனைக் கண்டவன் அதிர்ந்துபோனான். காரணம், இது வேறு பன்றி, அதுவும் பச்சிளம் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய் பன்றி.
இராஜேந்திரன் மனம் கலங்கிப் போனான். காரணம் வேட்டைக்கும் தர்மம் உண்டு. சினையான விலங்குகளைக் கொல்லக் கூடாது, குட்டிகளைக் கொல்லக் கூடாது, பாலூட்டும் தாய் விலங்கை கொல்லக் கூடாது. அவை பெரும் சாபம் எனக் கருதப்பட்டது.
இராஜேந்திரன் துடிதுடித்துப் போனான். சிவனே இந்தப் பாவம் போக்க நான் என்ன செய்வேன்? எனக கதறினான். குட்டிகள் செத்துப்போன தாயின் மடியில் பாலைத் தேடியபோது இன்னும் உடைந்து போனான்.
சிவனே எனக்கு வழிகாட்டு, இந்தப் பாவத்தில் இருந்து என்னை விடுவி என அவன் கலங்கி நின்றபோது தொலைவில் ஒரு பன்றி வந்தது. அதுவும் பெண் பன்றி தாயின் நிலையில் இருந்தது.
அதைக் கண்டு விலகிச் சென்றான் இராஜேந்திரன். அந்தப் பன்றி வந்து இந்தக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தது. சரிந்து படுத்து அவற்றின் பசியினைப் போக்கிக்கொண்டிருந்தது.
சிவனே நன்றி, என் வேண்டுதலை கேட்டதற்கு நன்றி என அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே அந்த அதிசயம் நடந்தது.
அப்பன்றி முருகப்பெருமானாக மாறிற்று. பெரியவெளிச்சத்தின் நடுவில் முருகன் இரு மனைவியரோடு மயில் மேல் காட்சித் தந்து புன்னகைத்தார். இராஜேந்திரன் நடுநடுங்கியபடி “எம்பெருமானே” எனச் சொல்லி பணிந்தான். அத்தோடு முருகப்பெருமான் மறைந்தான். அவரோடு பன்றிகளும் மறைந்தன.
இராஜேந்திரன் சிலையாய் நின்றான். தன் இல்லம் திரும்பும் வரை அவன் பேசவே இல்லை, வந்தவன் கண்முன் பன்றிக்குச் சிவன் பால்கொடுத்த திருவிளையாடலும், இன்னும் பலவும் வந்து போயின.
முருகப்பெருமானும், சிவனும் வேறல்ல என்பதும், முருகனே சிவனின் அம்சம் என்பதும் தெளிவாயிற்று. ஆனால், இதுகாலமும் இல்லாதபடி முருகப்பெருமான் வந்து நின்றது அவனை அதிரச் செய்தது.
ஞானியர், சித்தர்களிடம் அவன் நடந்ததைச் சொல்லி ஆலோசனைக் கோரினான், அவர்கள் புன்னகைத்துச் சொன்னார்கள்.
“இராஜேந்திரா, சிவனை முழுக்க வணங்கி பல ஆலயங்களை எழுப்பிய நீ, போரில் உனக்கு வெற்றிகளைத் தந்த முருகப்பெருமானுக்கு ஒரு ஆலயமும் எழுப்பவில்லை என்பதை அறிந்துகொள்.
உன் தந்தை மேலும் உன் மேலும் ஏவப்படும் பெரும் செய்வினை ஏவல்களை நீ அறிவாய். அவற்றைத் தடுக்கும் சக்தி முருகப்பெருமானுக்கே உண்டு. அவரிடம் எந்த ஏவலும் எடுபடாது. சோழநாட்டுக்குக் காவல் வரும் பொருட்டு, இங்கு நின்று அவர் காவல் செய்யும் பொருட்டு நீ முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது சிவன் விருப்பம். அதுவே இங்கு சோழநாட்டுக்குக் காவலாயும் அமையும்” என்றார்கள்.
அதன்பொருட்டு தானே கல் மண் சுமந்து முருகப்பெருமானுக்கு சந்நிதி கட்டினான் இராஜேந்திர சோழன். தான் அமைத்த சிவாலயத்தினுள்ளே கட்டினான். பின்னாளில் அந்தச் சிவன் கோவில் பாலசுப்பிரமணியர் ஆலயமாகவே அறியப்பட்டது.
பெரிய கோவிலாக அவன் கட்டியதால் இது பெரியகுளம் பெரியகோவில் என்றானது.
அவன் அக்கோவிலுக்கு நிறைய நகைகள் சொத்துக்கள் அளித்தான். காலத்துக்கும் அது நிலைக்க வழி செய்தான். அன்னையினை அறம் வளர்த்த நாயகி என நிறுத்தி மகிழ்ந்தான். அவன் கட்டிய அந்த ஆலயம் அருளில் பெருகிற்று, முருகப்பெருமானின் அருள் ஓங்கியது.
சோழர்க்குப் பின் நாயக்க மன்னர்களும் பெரும் திருப்பணி அங்குச் செய்தார்கள். இப்படி முருகப்பெருமானே தேடி வந்து அமர்ந்த ஆலயம் அது.
இராஜேந்திர சோழீஸ்வரர் என இங்குள்ள சிவபெருமான் புகழ்பெறுகிறார். தாயார் அறம் வளர்த்த நாயகி என்று புகழ்பெறுகிறார். ஒரே கோயிலில் தனித்தனியாக ஒவ்வொரு கொடிமரங்களுடன் சிவன், அம்பாள், முருகன் வள்ளி தெய்வானையுடனும் தனி தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர் தம்பதி சமேதராக சூரியன், சந்திரன், அதிகார நந்தி, கன்னிமூல கணபதி, லட்சுமி சரஸ்வதி, பாலதண்டாயுதபாணி, ஏகாம்பரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள், ஜுரதேவர், பைரவர், 63 நாயன்மார்கள், ஆகியோர் தனி தனி சந்நிதிகளில் அருள்புரிகின்றனர்.
அகோரவீரபத்திரர், உருத்ரதாண்டவர், துர்கை, மன்மதன் நவக்கிரகங்கள் ஆகியோரும் உண்டு.
இராஜேந்திர சோழன் அமைத்த அந்த மயில் மண்டபம் சிறப்பானது. அந்த மயில் மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளது, அந்த மயில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட அற்புதமான சிற்பம்.
இன்னுமோர் பெரும் சிறப்பு இங்குள்ள மிருத்யுஞ்சர் சந்நிதி. இதனால் அறுபதாம் எண்பதாம் திருமணங்கள் இங்கு பிரசித்தி. இன்னும் நோயின்றி வாழ வேண்டுதலும் உண்டு.
இந்த ஆலயத்தை ஒட்டி வராகநதியில் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுகிடையில் வராக நதி ஓடுகிறது. இந்த வராக நதிக்கரையில் நீராடினால் காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும்.
இந்நதியைப் பிரம்ம தீர்த்தம் என்பதால் இங்கு நீராடினால் எல்லா நலமும் கிடைக்கும். சாபம் அகலும் என்பதால் இது கங்கைக்கு நிகராகக் கருதப்பட்டு தர்ப்பணங்கள் செய்யப்படுகின்றன.
இங்கு மூலவர் சிவன் லிங்க சொரூபமாக இராஜேந்திர சோழீஸ்வரர் என இருந்தாலும் முருகன்தான் இங்கு பிரசித்தி. அதுவும் முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன், மயில் வாகனத்தில் காட்சி தரும் அழகு தனித்துவமானது.
இங்குச் சித்திரைத்திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்த சஷ்டி திருக்கார்த்திகையின் முக்கிய விழாவான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், பங்குனி பிரமோற்சவம் விழாவில் தேரோட்டம், பிரதோஷ வழிபாடு, போன்ற நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
அருணகிரி நாதரால் பாடப்பட்ட ஆலயம் இது. முருகப்பெருமான் தானே வந்து அமர்ந்த ஆலயத்தை அருணகிரியாரும் தேடி வந்து பாடித் தொழுதார்.
ஆலயம் அமைந்திருக்கும் இடம் முன்பு ‘குளந்தை’ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. அருணகிரி நாதர் தமது திருப்புகழில் இக்கோயில் முருகனை “குளந்தை மாநகர் முருகனே” என்று பாடியுள்ளார்.
இந்த ஆலயம் சித்தர்களையும் உருவாக்கியது. ஜெயதேவ மகரிஷி எனும் மாபெரும் சித்தர், இவர் இந்த முருகனுக்குச் சாட்சியாக வாழ்ந்தவர். அவரின் சமாதி இன்றும் இந்த ஆலயத்தின் அருகில் உண்டு.
பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கும் அற்புதமான ஆலயம் இது. சாட்சிகள் ஏராளம் உண்டு. எத்தனையோ இடங்களில் மூன்று கொடிமரம் கொண்ட இந்த ஆலயத்தை அடையாளம் சொல்லிச் சித்தர்கள், பாதிக்கபட்டோரை அனுப்பி சாபம் தீர்த்தார்கள்.
இன்றும் இந்த ஆலயம் நோய் தீர்க்கும்; சாபம் தீர்க்கும்; பகை அறுக்கும்; நீண்ட ஆயுளைத் தரும்; சாபங்களை நிவர்த்தி செய்யும்; செவ்வாய் தோஷமெல்லாம் காணாமல் போகும்.
குறிப்பாக எவ்வகை பில்லி சூனியம் என்றாலும் இங்குத் தீரும். எந்தப் பெரிய சக்திவாய்ந்த மந்திரவாதமும் இங்கு வெல்லாது. மாயா தேவியின் வம்சமான சூரபத்மனையே வென்ற முருகன் சன்னதியில் எல்லாப் பில்லி சூனியமும் ஏவலும் தீரும்.
இந்த முருகனின் காவலாலே இராஜேந்திர சோழன் மாபெரும் அரசனாக நீண்டகாலம் பெரும் புகழோடும் சிறப்போடும் பெரும் வல்லமையோடும் ஆட்சி செய்தான். சேரர்களின் பகை அவனைத் தொடமுடியவில்லை. எந்தச் சூனியமும் அங்கே எடுபடவில்லை. முருகப்பெருமானின் துணை அப்படி அவனுக்கு இருந்தது.
இந்த ஆலயம் சொல்லும் நுணுக்கமான தாத்பரியம் இதுதான். சிவனை அண்டியோர்முன் எந்தப் பில்லி சூனியமும் பெரும் செய்வினையும் தாக்காது, சிவபக்தனைத் தொடும் பில்லி சூனியம் எதுவுமில்லை.
சிவனை நோக்கி வேண்டி நிற்போர்க்கு முருகப்பெருமான் தானே வந்து பெரும் காவல் கொடுப்பார், அவரை மீறி எந்த துர்சக்தியும் வராது, செய்வினை கோளாறுக்கு முருகனைத் தவிர வேறு யாரும் முழுக் காவல் இல்லை.
சுப்பிரமணியனை மிஞ்சிய தெய்வமில்லை என்பது அந்த வாக்கு.
தேனி பக்கம் செல்லும் போது இந்த முருகன் ஆலயத்தைக் காணத் தவறாதீர்கள். தாயில்லா பன்றிக்குட்டிகளுக்குத் திக்கு திசை தெரியாத, எதிர்காலம் தெரியாத பிஞ்சுகளுக்குப் பாலூட்டி காத்த முருகன் உங்களுக்கும் ஞானப்பால் கொடுத்து பெரும் அருள் கொடுத்து வழிகாட்ட அங்கே தயாராக இருக்கின்றான். சென்று வணங்கி வாழ்வின் கர்மம் முடிக்கும் பலத்தை பெற வேண்டியது உங்கள் பொறுப்பு.
இராஜேந்திர சோழன் முதல் எத்தனையோ அடியார்க்குப் பெரும் அருள் செய்த முருகப்பெருமான் உங்களுக்கும் பெரும் அற்புதம் நிச்சயம் செய்வார். அவரை நம்பி செல்வோர்க்கு ஒரு குறையும் வராது. எல்லாம் நிறைவாகும். இது சத்தியம்.