முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை.

முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் இந்த முருகப்பெருமான் ஆலயம். இதன் பழமை போகர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது.

சித்தர்களில் முக்கியமானவரான போகர் இந்த மலையில் தவம் செய்தும் மூலிகை ஆராய்ச்சிகள் செய்தும் வந்தார். அப்படியான போகரின் பெயரால் இந்த இடம் போகனபள்ளி என அழைக்கப்பட்டது, போகர் தங்கிய இடம் என அதற்குப் பொருள்.

அந்தப் போகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயம் இது, போகர் காலத்தில் இருந்தே இது பிரசித்தியானது.

காலம் காலமாக வழிபடபட்ட இந்த ஆலயத்தில் பின்னாளில் பெருமாளுக்கும் சன்னதி கட்டபட்டது பெருமாளும் முருகரும் ஒருசேர அருள்புரியும் ஆலயம் இது என்றாலும் அடிப்படையில் இது சித்தர் காலத்தில் இருந்து முருகபெருமான் ஆலயமே

சித்தர்கள் அருள் மிக்க இந்த ஆலயத்தில் எல்லா அதிசயங்களும் அற்புதங்களும் முருகப்பெருமான் அருளால் அக்காலத்தில் இருந்தே உண்டு. கிருஷ்ணகிரி பகுதியின் பிரசித்தி பெற்ற ஆலயம் இது.

முருகப்பெருமானின் எல்லாப் பண்டிகைகளும் வெகு உற்சாகமாக கொண்டாடப்படும், அதுவும் தைப்பூச பெருவிழா அந்தப் பகுதியின் மிகப்பெரிய விழா இது.

இந்த ஆலயத்தின் சிறப்பு இது. சித்தர்கள் பலரை உருவாக்கி அவர்கள் வழியாக அருள் வழங்கும் ஆலயம், அவ்வகையில் போகர் காலத்தில் இருந்து ஏகப்பட்ட சித்தர்களை உருவாக்கியிருக்கின்றது.

அவர்களில் முக்கியமானவர்கள் இருவர் முதலாமவர் சாது சென்றாய சுவாமிகள்.

இவர் இந்த ஆலய முருக பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். பெரும் ஞானியாக எண்ணற்ற அற்புதங்களைச் செய்தார். முருகப்பெருமானுக்காக தன் வாழ்வை அர்பணித்து அங்கே வாழ்ந்தவர் அந்த மலையேறும் படியினைத் தனி ஒரு அடியாராக செய்து முடித்தார்.

அவர் பெயரில்தான் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன‌.

முருகப்பெருமானின் பெயரில் எண்ணற்ற அற்புதங்களைச் செய்த வல்லமையான அந்தச் சித்தரின் ஜீவசமாதி அங்கேதான் அமைந்துள்ளது.

இன்னொருவர் சபரிமுத்து சித்தர், இவர் பிறப்பால் கிறிஸ்தவர் அப்படியே வளர்ந்தவர். ஆனால், உரிய காலத்தில் முருகப்பெருமான் அவரை ஆட்கொண்டு தன் அடியார் என்றாக்கித் தன்னோடு வைத்துக் கொண்டார்.

இந்த ஆலயத்தை விட்டுப் பிரியாமல் அங்கே தங்கி பெரும் அற்புதங்களைச் செய்தவர் சபரிமுத்து சித்தர் எனும் சட்டி சுவாமிகள், இவர் செய்த அற்புதமும் ஆச்சரியங்களும் ஏராளமானவை.

சித்த கோலத்துடன் அருகில் சட்டியுடன் அவர் அந்தக் கோவில் வாசலில் அமர்ந்திருப்பார். அந்தச் சட்டியில் உணவோ கனியோ இட்டு அவரிடம் வேண்டிய எல்லாமும் பலிக்கும்.

எவ்வளவோ சித்துக்களை ஆச்சரியங்களைச் செய்தவர். முருகப்பெருமானின் முழு அடியாராக வாழ்ந்த அவரின் ஜீவசமாதி அங்கேதான் உண்டு.

இந்த ஆலயம் முருகப்பெருமானின் அருளை சித்தர்கள் மூலமாக தரும் சித்தர் பீடம், இங்கு எல்லா நோய்களும் தீரும், எல்லாச் செய்வினைக் கோளாறுகள் பில்லி சூனியங்கள் என எல்லாமும் மாறும்

கர்மவினைகள் எல்லாம் அழித்துப் பெரும் வாழ்வு தரும் ஆலயம் இது. திருமண தடை தொழில் முடக்கம் உடல் நோய்கள் மன நோய்கள் என எல்லாமே இங்கு முருகன் அருளால் நீங்கும்.

இந்த ஆலயத்தின் முருகப்பெருமான் முக்கியமானவர். அப்படியே சென்றாய சுவாமிகள், சபரிமுத்து சுவாமிகள் என இருவரின் ஜீவ சமாதிகளும் பெரும் சக்தி மிக்கவை.

அடுத்த ஆலயம் கந்தர்மலை முருகப்பெருமான் ஆலயம்.

இந்த ஆலயம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் சிறிய மலைமேல் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

சுமார் 750 அடி உயரமுள்ள இந்த மலைக்கோவிலுக்கு செல்ல 250 படிக்கட்டுகள் உண்டு.

இந்த ஆலயம் முருகப்பெருமான் பால் ஸ்தாபிக்கபட்டது. வள்ளியுடன் மலைகளில் தங்கிய முருகப்பெருமான் இங்கே வரும்போது வள்ளிக்கு விக்கல் வந்தது, சூரிய சந்திர ஒளிப்படாத நீரைப் பருகினால் விக்கல் தீரும் என அவர் நாடகமாடி உருவான ஆலயம் இது.

இந்த மலையில் மிக மிக இடுக்கமான ஒரு பிளவில் அந்த நீர் உண்டு, சிறிய குளமாக இருளில் உண்டு. அதுதான் வள்ளியின் குளம் என அழைக்கப்படும், அதுதான் இந்த மலையின் சூட்சும சக்தி மிக்க தீர்த்தம்.

இது சதுரகிரி போல மிக மிக சூட்சுமமான பகுதி, சித்தர்கள் அரூபியாக உலாவும் பகுதி, ஒளிவடிவில் இன்னும் பல வடிவில் வாழும் சித்தர்கள், பெரிய நாகங்கள் வடிவில் இன்றும் அங்கே உண்டு.

எங்கும் காணப்படாத அரிய வகை நாகங்கள் இங்கு உண்டு. அவை எப்போதாவதுதான் பக்தர்கள் கண்ணில் படும், அடிப்படையில் அவை சித்தர் வடிவங்கள்.

இம்மலையின் குகைகளில் சித்தர்களின் உருத்திராட்சமும் அவர்களின் அடையாளங்களும் நிரம்ப கிடக்கின்றன. அந்த அளவு இது சித்தர்கள் உலாவும் பகுதி.

சித்தர்கள் அருளோடு முருகப்பெருமான் அருளும் கொட்டிக்கிடக்கும் ஆலயம் இது. ஆலயம் சிறியதாக கட்டப்பட்டிருக்கின்றது, அந்த வள்ளி குளத்து குகை அருகிலே உண்டு.

சித்தர் குகைக்குச் செல்வது மிகக் கடினமானது என்பதால் எல்லோருக்கும் அனுமதியில்லை. ஆனால், விரும்பியவர்கள் உரிய காவலுடன் சென்று வணங்கலாம்.

இந்தக் குகையின் நீர்தான் இங்குப் பெரும் பிரசாதம், வள்ளிக்காக முருகப்பெருமான் உருவாக்கிய அந்தத் தீர்த்தம் எல்லா நோய்களையும் குணமாக்கும். அந்த நீரை வீட்டில் தெளித்தால் எல்லாத் தோஷமும் நீங்கும்.

இந்த ஆலயம் குழந்தை வரம் தரும். சாபங்களைப் பில்லி சூனியங்களைக் கொடும் செய்வினைகளை நீக்கித் தரும். எந்த வேண்டுதல் வைத்தாலும் கந்தர்மலை முருகன் நிறைவேற்றித் தருவார்.

கந்தர்மலை வருவோர்க்குத் துன்பமில்லை எனும் அளவு பக்தர்கள் துயரை துடைத்து நல்வழி காட்டிவரும் ஆலயம் இது.

இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு அந்தப் புனிதநீரை குடித்தால் நோயெல்லாம் தீரும். எடுத்துவந்து உங்கள் வீடு, தொழில் நிலையம், நிலம் எனத் தெளித்தால் எல்லாத் தீவினையும் சாபமும் தீர்ந்து எல்லாமும் நலமாக்கி செழிப்பாக்கி தரும்.

கிருஷ்ணகிரி பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களைக் காணத் தவறாதீர்கள். சித்தர்கள் தனி ராஜ்ஜியம் செய்யும் ஆலயங்கள் இவை. சித்தர்கள் அருள் இருந்தால் மட்டும் செல்லமுடியும், அங்கே சென்றுவந்தால் சித்தர்கள் அருளில் முருகப்பெருமானின் கருணையில் உங்கள் வாழ்வின் எல்லாச் சிக்கலும் தீர்ந்து புதுவாழ்வும் புது உலகமும் பிறக்கும். இது சத்தியம்.