முருகப்பெருமான் ஆலயங்கள் : பாலசுப்ரமணியன் ஆலயம், உத்திரமேரூர்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பாலசுப்ரமணியன் ஆலயம், உத்திரமேரூர்.

(இந்த ஆலயத்து வரலாறும், இளையனார் வேலூர் வரலாறும் ஒன்றுபோல் சொல்லப்பட்டாலும், முருகப்பெருமான் தன் வேல் ஊன்றி நின்ற இடம் இதுதான், யுத்தம் நடந்த இடம் இளையனார் வேலூர் என்றாலும் முருகப்பெருமான் வேலூன்றி சிவனை வழிபட்ட இடம் இதுதான்.)

சரித்திரத்தில் மட்டுமல்ல தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது உத்திரமேரூர் பாலசுப்ரமணியன் ஆலயம்.

இந்த ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உத்திரமேரூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

உத்திரவாகினி எனும் நதி இங்கு இப்போது சேயாறாக ஓடுகின்றது. அந்த உத்திரவாகினியின் பெயரால் உருவான ஊர் உத்திரமேரூர், இங்குத்தான் இந்துக்கள் அன்று பஞ்சாயத்துத் தேர்தல் நடத்திய குடவோலை முறையினைச் சொல்லும் கல்வெட்டுகள் வைகுண்ட பெருமாள் கோவிலில் உண்டு.

அதற்கும் மூத்த தொன்மையான ஆலயம் இந்த முருகப்பெருமான் ஆலயம்.

இந்தத் தலத்தின் புராணச் செய்திபடி உத்திரவாகினி ஆற்ற‌ங்கரையான இந்தக் கடம்பக்கரையில் காசிப முனிவர் பெரும் யாகம் செய்தார். அவரின் யாகம் உலக நலனுக்கானது. உலக நலம் என்றால் அது தங்கள் நலனுக்கு எதிரானது என‌ அதனை ம‌லையன், மாகறன் என இரு அசுரர்கள் தடுத்துப் பெரும் அட்டகாசம் செய்தார்கள்.

இவர்கள் சூரபதுமனின் தாயான மாயாதேவியின் அருளைப் பெற்றவர்கள்.

அவர்கள் தொல்லைத் தாளாத காசிப முனிவர் அவர்கள் பொருட்டு சிவனிடம் முறையிட்டார். சிவபெருமான் அந்த வேள்வியினைக் காக்க‌ முருகப்பெருமானை அழைக்கச் சொன்னார்.

முருகப்பெருமான் தன் தந்தையிடம் ஆசிபெற்றார், இவர்கள் வரம்பல வாங்கிய அசுர கூட்டம் என்பதால் சிவன் வாள்படையுடன் முருகனை அனுப்பினார்.

காசிப முனிவரின் வேண்டுதலுக்கு ஏற்ப முருகப் பெருமானே வந்து அவர்களுக்குத் தன் உபதேசத்தைச் சொன்னார், கருணையே வடிவான கந்தவேள் அவர்களுக்குக் கருணயுடன் போதித்தார்.

ஆனால், அவர்கள் அசுரர்கள் அல்லவா? கந்தனின் கருணைக்கு அர்த்தமில்லாமல் போனது, போர் மூண்டது. இருவரையும் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார்.

மலையன் விழுந்த இடம் மலையன் களமானது, மாகற‌ன் விழுந்த இடம் மாகற‌ல் என்றானது. அசுரர் ஒழிந்தபின் காசிப முனிவரின் யாகம் தொடர்ந்தது.

இன்னும் அசுரக் கூட்டம் வராமல் இருக்கவும் எக்காலமும் அவர்களை எச்சரிக்க தன் வேலை ஆழமாக நட்டுவைத்தார் முருகப்பெருமான், அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.

முருகப்பெருமான் ஊன்றிய வேல் அப்படியே இருக்க அதனை ரிஷிகளும் முனிகளும் தேவர்களும் தொழுது வணங்க, அதுவே ஆலயமாக மாறிற்று.

இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமத்தோடு சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். அவர் ஜடாமுடியோடு நிற்பது இங்குத்தான். முனிவர்களுக்கு தான் காவல் என எழுந்தருளியிருக்கின்றார்.

இக்கோயிலில் வடகிழக்கு மூலையில் சிவலிங்க மூர்த்தியாக கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார். அசுரர்களை ஒழித்த முருகப்பெருமான் இந்தச் சிவனை வணங்கி நின்றார், சக்திவாய்ந்த சிவன் இவர்.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளையுடைய இராஜ கோபுரமும், வெளிப்பிரகாரத்தில் இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும், வலதுபுறத்தில் வசந்த மண்டபமும் அமைந்திருக்க நடுவில் பலிபீடம், கொடிமரமும் உண்டு.

இங்கு முருகப்பெருமான் வாகனமாக சேவல் இல்லை, ஆனால் யானை உண்டு. முருகப்பெருமானுக்கு பிணிமுகம் என்றொரு யானை வாகனம் உண்டு என்பதைப் புராணம் சொல்கின்றது, அதை இந்த ஆலயத்தில் காணமுடியும்.

கருவறைக்கு முன்பாக உள்ள தரிசன மண்டபத்தின் உட்புறச் சுவரில் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பெற்று அதில் சித்தர்கள் பலரின் வடிவை அமைத்திருக்கிறார்கள். சுவரின் மேற்புறத்தில் முருகப்பெருமான் மலையன், மாகறனுடன் போரிடும் காட்சிகள் ஓவியமாய் உண்டு.

இங்கு மகா சிறப்பாக அமைந்திருப்பது கஜவள்ளி அம்மன் சன்னதி, முருகனின் இருதுணைவியரும் இணைந்து ஒரு வடிவாகி கஜவள்ளி அம்மனாக இங்கே சந்நிதி கொண்டுள்னர். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக முருகன் தலத்தில் சன்னதி கொண்டிருப்பது இங்கு மட்டும்தான்.

முருகப்பெருமான் ஊன்றிய வேல் இங்கு அடுத்து நிற்கின்றது. இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை யாராலும் அறியமுடியாதது.

இங்கு சண்டிகேஸ்வரர் சுமித்ர சண்டிகேஸ்வர் என அமர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு.

காலம் காலமாக மக்கள் வழிபட்ட இடம் சிறிய கோவிலாக இருந்தது, அது பின்னாளில் ஜெயம் கொண்ட சோழனால் கட்டப் பெற்றது. மிக பழமையான கோவில் இது

ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்டது. காசிப முனிவர் தவமிருந்து, இத்தலத்துக்கு அருகில் உள்ள நெய்யடிப்பாக்கம் என்ற ஊரில் சமாதி அடைந்தார்.

இப்படி மகா சிறப்புக்களை கொண்ட ஆலயம் அது.

இந்த ஆலயம் பல சிறப்புக்களைக் கொண்டது போல ஆழ்ந்த தத்துவமும் கொண்டது, அந்த இரு அசுரர்களும் லௌகீகம் மற்றும் ஆன்மீகம் என இருவகை எதிரிகள் வடிவம்.

ஒரு மனிதன் புவியில் நல்லமுறையில் வாழ்ந்து மறுமையில் நற்கதி அடையவேண்டும். இந்த இரண்டையும் தடுக்கும் மாயைகளை, சோதனைகளை முருகன் தன் ஞானத்தால் அருள்வான் என்பதுதான் இந்த ஆலய தாத்பரியம்.

நல்லகர்மா, தீய கர்மா எனும் இரு கர்மாக்களையும் அழித்து பிறப்பற்ற நிலையினை முருகப்பெருமான் தருவார் என்பதைப் போதிப்பது இந்த ஆலயத்தின் தாத்பரியம்.

வள்ளி என்பது பூலோக வடிவம், தெய்வானை என்பவள் வானலோக குறியீடு.

அவர்கள் இருவரும் கலந்திருக்கும் வடிவம் என்பது இம்மைக்கும் மறுமைக்குமான வரத்தை ஐஸ்வர்யத்தை முருகப்பெருமான் தருவார் என்பது.

இந்த ஆலயம் எதிரிகளை ஒழிக்கும், காசிப முனி தன் கர்மப்படி யாகம் செய்யவந்தார். அவரின் யாகம் தங்களுக்கு உவப்பானது அல்ல எனக் கருதிய அசுரர்கள் அவரின் கர்மத்தில் தலையிட்டு தொல்லைக் கொடுத்தனர்.

அப்போதுதான் முருகப்பெருமான் வந்து அவர்களை ஒழித்து ‘வேலை’ ஊன்றினார்.

உங்கள் கர்மத்தை இயல்பாக அதன் வழியில் செய்யும் போது, பூமிக்கு நீங்கள் வந்த கடமையினைச் செய்யும் போது அதனை எதிரிகள் தடுக்க பல தொல்லைகளைச் செய்யும் போது நீங்கள் இந்த முருகனிடம் முறையிட்டால் தொல்லை எல்லாம் நீங்கும்.

ஆம். இந்த ஆலயம் எதிரிகளை அழித்து இம்மையிலும் மறுமையிலும் ஒருவன் பலனடையும் வரத்தை தரும் ஆலயம்.

இங்குச் செல்லும் போது முதலில் காசிப முனிவரின் சமாதி இருக்கும் நெய்யடிப்பாக்கம் எனும் தலத்துக்குச் சென்று அவரை வணங்கிவிட்டு இத்தலம் வரவேண்டும்.

இங்கே முதலில் சிவபெருமானைத் தொழுதுவிட்டு பின் அன்னையினைத் தொழுதுவிட்டு அவரிடம் உத்தரவு வாங்கியபின்பே முருகப்பெருமான் வேலினை தொழ வேண்டும்.

அந்த வேல் முன்னால் நின்று மனமார தொழுது நின்றால் எல்லாக் கஷ்டமும் தீரும், அபிஷேகம் செய்தால் கூடுதல் பலன் உண்டு.

அந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால் எல்லாப் பலனும் கிட்டும், அதன் பின் வாழ்வே மாறும்.
மனதாலும் உடலாலும், சிந்தையாலும் செய்கையாலும், ஆன்மீகத்திலும் லௌகீகத்திலும் வரும் எல்லாச் சிக்கலையும் இந்தத் தலம் போக்கும்.

இங்குச் சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் விசேஷம், வைகாசி விசாகம் போன்றவை இன்னும் சிறப்பு. ஆடி கிருத்திகை அன்று சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெறும்.

இங்கே சஷ்டி விரதம் உண்டு. ஆனால், சூரசம்ஹாரமில்லை.

மாறாக, மலையன் மாகறன் வதம் நடைபெறும், உலகிலே இந்த இரு அசுரர்களை அழிக்கும் சம்ஹாரம் நடக்கும் ஒரே தலம் இதுதான்.

புரட்டாசி மாத கஜவள்ளி பூஜை இன்னும் விசேஷம்.

முருகப்பெருமான் வழிபாட்டின் தொடக்கம் வேல் வழிபாடுதான், அவ்வகையில் இலங்கையின் கதிர்காமம் மூத்தது.

அங்கு வேல்தான் பிரசித்தி.

அதாவது, காலத்தால் அவ்வளவு பழைய வழிபாடு அது, இங்கே முருகப்பெருமான் ஆலயத்தில் கருங்கல்லில் வேல் என்பது இந்த ஆலயத்தின் தொன்மையினைக் காட்டுகின்றது.

அவ்வளவுக்கு மகா மூத்த தொன்மையான ஆலயம் இது.

இங்குச் சென்று வழிபட்டு காசிபமுனிவர், கடம்பரநாதர் ஆவுடை நாயகி, கஜவள்ளி, முருகப்பெருமான் என எல்லோரையும் வணங்கினால் வாழ்வு மாறும், தீயது அகலும்.

எல்லா வளமும் நலமும் உங்களை இம்மையிலும் மறுமையிலும் சூழும்.

வேல் வழிபாடு என்பது ஞானத்துக்கான வழிபாடு, முருகப்பெருமானின் வேல் அடியாழம் காணமுடியா வகையில் பதிந்துள்ளது என்பது ஆழமான ஞானம் அங்கே குடிகொண்டுள்ளதைச் சொல்லும்.

அந்த ஞானத்தை வணங்கி பெற்றுக்கொள்ள அந்தத் தலத்துக்குச் செல்லுங்கள், ஞானத்தோடுப் பெரும் வாழ்வினை அந்த ஞானப்பண்டிதன் அருள்வான்.

இன்றும் பல இடங்களில் பல பிரச்சினைகளுக்காக அகத்திய முனியின் நாடி ஜோதிடம் பார்க்குமிடத்தில் இந்த ஆலயதுக்குச் செல்லச் சொல்லி அகத்தியர் சொல்வதும், அங்குச் சென்றுவரும் மக்களுக்கு நல்வழி பிறப்பதும், வாழ்க்கை நல்லபடியாக மாறுவதும் அடிக்கடி நடக்கும் ஆச்சரியங்கள். அவர்கள்தான் இந்த ஆலயத்தின் இன்றைய பெரும் சாட்சிகள்.

முருகப்பெருமான் சூரபதுமனை மட்டுமல்ல பல அசுரர்களை சம்ஹாரம் செய்தார் அதில் மலையன், மாகறன் எனும் அசுரர்களும் உண்டு என முருகப்பெருமானின் ஆற்றலின் பல பக்கங்களைச் சொல்லும் ஆலயம் அதுதான்.

இதுவும் இளையனார் வேலூர் ஆலயமும் ஒரே அமைப்பினை ஒரே தாத்பரியத்தைக் கொண்டவை என்றாலும் முருகன் வேல் ஊன்றிய இடம் இதுதான், அந்த வேல் கந்தவேளுடையது.

அருணகிரி நாதர் இந்தத் தலத்தில் நான்கு பாடல்களைப் பாடியுள்ளார், அதிலொன்று மிக முக்கியமானது.

“நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
நேசமுற் றடியேனு …… நெறிகெடாய்

நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
நீதியிற் சிவவாழ்வை …… நினையாதே

பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
பாடலுற் றிடவேசெய் …… திடுமோச

பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
பார்வைசற் றருளோடு …… பணியாயோ

ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
மாகமப் பொருளோரு …… மனைவோரும்

ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
மாயிரத் திருநூறு …… மறையோரும்

வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
வாகுசித் திரதோகை …… மயிலேறி

மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
மான்மகட் குளனான …… பெருமாளே”

அதாவது நீண்ட மேகம் போல் இருண்ட கூந்தல் உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து, மிகவும் நேசம் அடைந்து அடியேனும் நன்னெறியை இழந்தவனாய் பூமியில் பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து, மனம் சோர்ந்து, நீதியான மங்களகரமான வாழ்க்கையை வாழ நினையாமல், பாழுக்கே உணவாயிற்று
என்னும்படியாக, மற்றவர்களுடைய பெயர்களைக் கவிதையில் வைத்து, கோடிக் கணக்கான பாடல்கள் அமையும்படி இயற்றுகின்ற மோசக்காரப் பாவியாகிய நான் எங்ஙனம் வாழ்வேன்?

அன்பர்களுக்கு நீ வைத்துள்ள பார்வையை கொஞ்சம் திருவருள் வைத்து எனக்கும் பாலிக்க மாட்டாயா?
திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், சிவாகமத்துக்கு உரிய
மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும், ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து உலவும் ஞானிகளும், ஆயிரத்து இரு நூறு மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூரில் வீற்றிருந்து அற்புதமாக, அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி பகைவருடன் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே. மான் பெற்ற மகளான
வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே எனப் பொருள்.

அதாவது, பிரசித்தியான 1200 முனிவர்களும் தவம் செய்யும்படி இங்கு முருகப்பெருமான் காவல் இருக்கின்றார், எக்காலமும் அவர் உண்டு, எல்லா முனிவர்களின் தவத்துக்கும் அவர் வேல் இங்கு ஆழமாக காவலாக உண்டு என்பதைச் சொல்கின்றார்.

அதனால் நீங்கள் யாராகவும் இருக்கலாம் ஆனால் பொதுநன்மைக்காக, உலக நன்மைக்காக, அடுத்தவரின் பொது நலனுக்காக முழு மனதுடன் இங்கு வந்து வேண்டினால் உங்கள் வாழ்வையும் மாற்றி நீங்கள் வேண்டிய வரத்தையும் தந்து உங்களை பெருவாழ்வு வாழவைப்பார் அந்த உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன், காலமெல்லாம அவர் வேல் உங்களுக்குத் துணையாக காவலாக நிற்கும். இது சத்தியம்.