முருகப்பெருமான் ஆலயங்கள் : பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அண்மித்து மலையில் அமைந்திருக்கும் ஆலயம் இந்தக் குழந்தை வேலப்பர் ஆலயம், பழனி போல இதற்கும் தனித்துவமான வரலாறும் தொன்மையும் உண்டு.

இது போகர் எனும் பெரும் முனிவரால் உருவாக்கப்பட்டது, அவர்தான் பழனிமலை முருகனையும் ஸ்தாபித்தார், அப்படிப் பழனிப் போலவே நவபாஷாணத்தால் உருவான சிலை இது.

சித்தர்களின் தலைவர் முருகப்பெருமான், சித்தர்கள் வழிபடும் ஞானப்பண்டிதர் அவர்தான். சித்தபரம்பரை என்பது அகத்தியர் தொடங்கிவைத்த குருகுலம், அந்த அகத்தியர் வழிபட்டவரும் அவருக்கு எல்லா வகை வழிகாட்டியாகவும் இருந்தவர் இந்த முருகப்பெருமான்.

இதனாலே இன்றுவரை ஒவ்வொரு முருகப்பெருமான் கோவில்களிலும் ஒரு சித்தரை அல்லது அவரின் ஜீவசமாதியினைக் காணமுடியும், முருகப்பெருமானும் சித்தர்களும் பிரிக்கமுடியாதவர்கள்.

அந்தச் சித்தர்கள் முருகப்பெருமான் அருளில் பிரபஞ்ச இரகசியங்களைச், சூட்சுமங்களை மானிடரின் நல்வாழ்வுக்கு ஈர்த்துத் தர பாடுபட்டார்கள். கர்மா கழிக்கவந்த மானுடர் மிக இலகுவாக அதைக் கழிக்க பல சூட்சும வழிகளைச் சொன்னார்கள், அதில் ஒன்று நவபாஷாண சிலை.

பாஷாணம் என்றால் விஷம், நவம் என்றால் ஒன்பது. கடுமையான விஷங்கள் ஒன்பதை பல மூலிகைகளுடன் சரியான பதத்தில் கலக்கும் போது அது மருந்தாகின்றது, அப்படி நவபாஷாணத்தில் செய்யப்பட்ட சிலைகள் மேல் பால், தயிர், தேன் என ஊற்றி வழிபடும் போது அந்த நவபாஷாணச் சிலையில் அவை கலந்து வரும்போது அந்த அபிஷேக நீர் அருமருந்தாகின்றது.

இன்னும் பல சூட்சுமங்கள் இதில் உண்டு, இந்த ஒன்பதுவகை பாஷாணமும் நவக்கிரகங்களோடு சம்பந்தபட்டவை. அவற்றை முறையாகப் பதப்படுத்தி மந்திரசக்திகள் ஏற்றி சிலையாக்கும் போது அதன் முன் நிற்கும் மாந்தர்களுக்கு நவக்கிரக பாதிப்புக்கள் குறையும்.

இப்படி ஏகப்பட்ட மிக மிக நுணுக்கமான வகையில் உருவாக்கப்படுபவை இந்த நவபாஷாண சிலைகள்.

இவை மூலிகை, மருந்தாக்கப்பட்ட பாஷாணம், இன்னும் சித்தர்கள் மந்திர உச்சாடனங்களில் உரு ஏற்றி கொடுத்த வல்லமையான‌ முருகப்பெருமானின் அருள் என எல்லாம் கலந்த அற்புதமான உருவாக்கம்.

போகர் எனும் மாமுனி, முருகப்பெருமானின் அடியார் இதனை மிக மிக நுணுக்கமாக பல ஆண்டுகள் மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கினார்.

பாஷாணம் எனும் விஷம் 64 நாகத்தின் விஷம் உள்பட. இந்த 64 விஷமும் சில வகை பதப்படுத்தலை செய்தால் ஆச்சரியமாக மருந்தாக மாறும்.

அப்படி ஒன்பது விஷங்களை எடுத்து உரிய முறையில் பதப்படுத்தி போகர் இதனைச் செய்தார். சாதிலிங்கம். மனோசிலை, காந்தம், காரம் கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் என ஒன்பது விஷங்களைக் கொண்டு செய்தார்.

அதனை அவரே பாடியும் வைத்தார்.

“பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி, கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற
தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான
மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு”

போகர் இங்குமட்டுமல்ல உலகெல்லாம் அலைந்து திரிந்தவர். இமாலயத்தின் எல்லா இடமும் நடமாடியவர் அப்படியானவர் தன் தவசக்தியால் இந்த அரிய ஒன்பது வகை பாஷாணங்களையும் மூலிகைகளையும் தேடி அவற்றைப் பதப்படுத்தி முருகப்பெருமானின் தனி அருளால் உருக்கொடுத்து முருகப்பெருமானை வடிவாக்கினார்.

அடிப்படையில் அவர் பல சிலைகளை இப்படி முயற்சித்திருக்கின்றார், பழனி பக்கம் உள்ள மலைகளில் ஏகப்பட்ட முயற்சிகளைச் செய்திருக்கின்றார்.

அவற்றில் இரு சிலைகள் முழு வெற்றியாயின, அதில் ஒன்றை பழனியில் தண்டாயுதபாணியாக ஸ்தாபித்தார், இன்னொன்றை இந்த பூம்பாறை எனும் இடத்தில் முருகப்பெருமான் உத்தரவின்படி ஸ்தாபனம் செய்து வழிபட்டார்.

அவர் நிறுவிய சிலை இது, பழனிபோல் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட அற்புதமான சிலை, உலகில் எங்குமில்லாத பெரும் பொக்கிஷமாக இங்கு நிறுவபட்டிருக்கும் சிலை.

இது காலத்தால் மிக மிக மூத்தது, பஞ்சபாண்டவர்கள் இங்கு வழிபட்டார்கள் என்றால் அதன் தொன்மையினை உணரலாம்.

போகர் இந்த ஆலயத்துக்கு தன் முதல் குருவான முருகன் பெயரில் “குரு மூப்பு” அதாவது முதலில் குருவருளால் செய்யப்பட்ட நவபாஷாண சிலை எனப் பெயரிட்டார், அது குருமூப்பு கோவில் என்றேதான் அழைக்கபட்டது, இன்றும் அதற்கு அப்பெயர் உண்டு.

இந்த ஆலயம் மலை, காடுகள் நடுவில் அமைந்தது. பின்னாளில் அதன் அருகே கிராமங்கள் வந்தாலும் இது போகரால் ஸ்தாபிக்கப்பட்டு அந்த மலைவாழ் மக்களின் மருந்துக்கும் மனநலத்துக்கும் வழிபாட்டுக்குமான ஆலயமாக இருந்தது.

பின்னாளில் சேரமன்னர்கள் அதற்குக் கோவில் கட்டினார்கள். இப்போதிருக்கும் அந்த மூல சந்நதியும் ஆலயமும் சேரர்கள் கட்டியதே, சேரர்களின் குலதெய்வம் முருகப்பெருமான் என்பதால் சேரர்கள் இந்த ஆலயத்தில் பெரும் பணி செய்தார்கள்.எ

இந்த ஆலயம் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும் பழங்கால சிலைகள் அழகும் எக்காலமும் சாட்சி.

இந்த ஆலயம் பழனிபோலவே மேற்கு நோக்கி அமைந்துள்ளது, வெகு அபூர்வமான ஆலயங்களே அப்படி அமைந்திருக்கும். அதற்கு கர்மம் தீர்க்கும் ஆலயங்கள் என ஆகமவிதியில் பொருள் உண்டு.

மானுடர் இந்த பூமியில் வந்திருப்பது கர்மம் கழிக்க, அந்தக் கர்மத்தை செய்ய உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் மிக மிக முக்கியம், அந்த இரண்டையும் நிரம்பத் தரும் ஆலயம் இது.

இந்த ஆலயத்திற்கும் பழனி தண்டாயுதபாணி ஆலயத்துக்கும் ஒரு வித்தியாசம் காணமுடியாது, பழனியில் கிடைக்கும் எல்லா அருளும் இங்கும் கிடைக்கும்.

இந்த ஆலயத்தில் அருணகிரிநாதர் வந்து தங்கும்போது முருகப்பெருமான் தன் திருவிளையாடலைக் காட்டினார். அந்தக் காட்டுப்பகுதியில் ஒரு பைசாசம் அருணகிரிநாதர் உறங்கும்போது அவரைக் கொல்ல வந்தது, குழந்தை வடிவில் வந்த முருகப்பெருமான் அதை விரட்டியடித்து தன் பக்தனைக் காத்தார்.

அங்கு அருணகிரிநாதர் முருகப்பெருமானைக் குழந்தை வடிவில் கண்டார். இது அவரின் வாழ்வில் முக்கியச் சம்பவம்.
அப்படி அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சிக்கொடுத்த இடம் இது, இதனால் அங்கு அருணகிரிநாதருக்கு ஒரு ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

இக்கோவிலுக்கு இராஜகோபுரம் எதுவுமில்லை. மூலஸ்தானத்தில் மேல் உள்ள கோபுரம் மட்டுமே உண்டு. பழங்கால பாணியில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்துக்கு முகமண்டபம், மகாமண்டபம், இடைநாழிகை, கருவறை ஆகிய பிரிவுகள் உண்டு.

கருவறையின் மேலே கருங்கல்லால் கட்டப்பட்ட ஒற்றை நிலை விமானம் உள்ளது. இது நாற்கர வடிவிலான சிகரத்துடன், உச்சியில் உலோகக் கவசத்துடன் அமைந்துள்ளது..

கோவில் வளாகத்தில், கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம், கொடிமரம், விளக்குத் தூண் போன்றவை அமைந்துள்ளன.

கருவறையின் வடக்கில், கிழக்கு நோக்கி சிவனுக்குச் சிறிய ஆலயம் உள்ளது. பிரகாரத்தைச் சுற்றி, விநாயகர், பைரவர், நவகிரகம், இடும்பன், நாகர், அருணகிரிநாதர், மள்ளர், பத்திரகாளியம்மன் ஆகியோருக்குத் தனித்தனியான சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் உண்டு என்றாலும் பழனிமலை தைப்பூச திருவிழாவின் மறுநாள் மகம் நட்சத்திரத்தில் இங்கு கொடியேற்றம் நடைபெறும். அடுத்து ஒன்பதாம் நாளில் கேட்டை நட்சத்திரம் அன்று திருவிழா நடக்கும்.

இந்த விழாவுக்கு முருகப்பெருமான் பழனியில் இருந்து வருவார் என்பதால் பத்தாம் நாள் அவரை வழியனுப்பிவைக்கும் வைபவமும் உண்டு.

உலகெல்லாம் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன. அவை பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, இன்னொன்று குழந்தை வேலப்பர் முருகன் சிலை என்பதால் இது மிக தனித்துவமானது.

இந்த ஆலயத்தின் தேர் முன்பக்கம் பின்பக்கம் வடம்பிடித்து இழுக்கப்படும், அத்தோடு முருகபக்தர்கள் தேர் அச்சில் நின்று 25 ஆயிரம் தேங்காய்களை உடைப்பது பிரசித்தியான நிகழ்வு.

இந்த ஆலயத்தின் தலமரம் 12 ஆண்டுகோர் முறை பூக்கும் குறிஞ்சிமரம், முருகன் மலையில் வள்ளியினைத் தேடி வந்த தெய்வம் என்பதால் மலைவழிபாடு முருகனுக்குப் பிரசித்தி. அந்த நுணுக்கமான கணக்கும் இங்கு உண்டு.

இங்கு முருகப்பெருமான் இராஜஅலங்காரத்துடன் காட்சி தருவார், அவருக்குச் செய்யப்படும் அபிஷேகம் தனித்துவமானது. அந்த அபிஷேக தீர்த்தம் மகா அருமருந்தானது.

அங்கே அந்தக் குழந்தை வேலப்பனாக நிற்கும் முருகப்பெருமான் கருணையே வடிவாக, கேட்போர்க்குக் கேட்ட வரம் தரும் தெய்வமாக, என்ன சொல்லி அழைக்கின்றீர்களோ அந்த உருவாக, குருவாக, அருவாக, மகனாக, தந்தையாக, தோழனாக, குழந்தையாக காவலனாக உங்களுக்கு அருள்பாலிப்பார்.

கொடைக்கானலை அண்மித்திருக்கும் இந்த முருகன் ஆலயத்தை அப்பக்கம் செல்லும் போது காணத் தவறாதீர்கள். போகர் எனும் மாமுனியால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட சிலை, அது முழுக்க மருந்தும் சூட்சுமமும் கொண்டது.

அங்கு வழிபடுவோர்க்கு என்ன குறை இருந்தாலும் தீரும், அந்த நவபாஷாண சிலை முன் நிற்கையில் நவக்கிரக கோளாறுகள் எல்லாம் சரியாகும், அந்தச் சிலைபட்ட காற்றும் அருமருந்து, நீர் அதைவிடப் பெரும் மருந்து.

போகர் எனும் மாமுனியுடன் முருகப்பெருமானே தன்னை நம்பும் பக்தர்கள் காலா காலத்துக்கும் பெருவாழ்வு வாழ உருவானது இந்த ஆலயமும், அந்த சிலையும்.

அது எல்லா வகையிலும் மூத்த முருகப்பெருமான் ஆலயம், பழனிக்குச் செல்வோர் தவறாமல் இங்கும் சென்று வந்தால் இரட்டிப்பு பலன் சத்தியமாய் உண்டு.

அருணகிரி நாதரின் பாடலோடு அந்தப் பூம்பாறை முருகனை எங்கிருந்தாலும் துதிக்கலாம், இந்த ஆலயத்தின் பெரும் தாத்பரியம் மற்ற ஆலயங்களைப் போல் அல்லாமல் இங்கு வர முருகப் பெருமானே உங்களுக்கு அனுமதி கொடுத்து அழைத்தல் வேண்டும் அது அல்லாது செல்லமுடியாது.

அருணகிரி நாதரின் இப்பாடலை சொல்லி அந்த முருகனைத் தொழுங்கள், உரிய காலத்தில் அம்முருகப்பெருமானே உங்களை அழைத்து உங்கள் குறையெல்லாம் தீர்த்து வாழவைப்பார்.

இந்தப் பாடலில் உலக மயக்களில் இருந்து விடுபட வேண்டும் என பாடுகின்றார் அருணகிரிநாதர். பாண்டவர் வந்து வணங்கிய எம்பெருமானே, அவர்களுக்கு உதவிய ஐயனே! எனக்கும் உதவு எனச் சூசகமாக கேட்கின்றார். இப்பாடல் அவ்வகையில் மிக நுணுக்கமானது, நிச்சயம் அவன்பாதம் உங்களை அழைத்துச் செல்லக் கூடியது.

“மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலைமாதர் உறவாமோ

பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன் மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையின் மேவு …… பெருமாளே”