முருகப்பெருமான் ஆலயங்கள் : வயலூர் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வயலூர் முருகப்பெருமான் ஆலயம்.

தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் மிக முக்கியமானது திருச்சிராப்பள்ளி அருகே அமைந்திருக்கும் வயலூர் முருகப்பெருமான் ஆலயம், இது மிக மிகத் தனித்துவமானது.

இதன் வரலாறு உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழமன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் தொடங்குகின்றது. அப்போது அப்பக்கம் வயல்வெளிக்குச் சென்ற சோழமன்னன் தாகம் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு கரும்பைக் கடிப்பதற்காக வெட்டியபோது அதிலிருந்து இரத்தம் கொப்பளித்தது.

அஞ்சிய மன்னன் அங்கே நின்று பெரும் தவறு நடந்ததற்காய் வருந்தினான். பின் அரண்மனை ஜோதிடர் உள்ளிட்ட பலர் வந்து பிரசன்னம் பார்த்ததில் அங்குக் கரும்புக்கு அடியில் சுயம்புலிங்கம் இருப்பது தெரிந்தது.

சோழமன்னன் அதை வெளிக்கொணர்ந்து கோவில்கட்டினான். அதாவது இது கரிகால் சோழனுக்கும் முந்தைய காலத்துக் கோவில். பின்னாளில், அப்பக்கம் வயல்களாக திருத்தப்பட்டபோது இது மறைந்துபோனது, பின் மீண்டெழுந்தது.

சோழமன்னர்கள் மீளக்கட்டிய இந்த ஆலயம் அடிப்படையில் சிவாலயம், அந்தச் சிவன் ஆதிகாலத்து சிவன் என்பதால் “ஆதிநாதர்” என்றானார்.

இந்த ஊர் வயல்களுக்கு இடையில் அமைந்திருப்பதால் வயலூர் எனவும், மேலும் இவ்வூரை ‘உறையூர் கூற்றத்து வயலூர்’, ‘தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்’ ‘இராஜகம்பீர வளநாடு’ ‘மேலைவயலூர்’ என்றும் வேறு பெயர்கள் குறிப்பிடுகின்றன.

இங்குச் சோழமன்னர்கள் காலத்தில் முருகப்பெருமான் சந்நதியும் ஸ்தாபிக்கப்பட்டது. இது சோழவள நாடுகளின் ஆலயதில் முக்கியமான ஒன்றாக விளங்கிற்று, அப்பக்கம் தவிர்க்க முடியாத சிவாலயங்களில் ஒன்றாக இந்த ஆதிநாதர் சிவாலயம் இருந்தது.

பின்னாளில் இது தனிப்பெரும் அடையாளம் பெற முருகப்பெருமானின் ஆலயமாக அடையாளம் பெறக் காரணம் அந்த அருணகிரியார்.

அருணகிரிநாதர் மிகப் பெரிய சிவாலயமான திருவண்ணாமலையில்தான் முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார், அங்கிருந்துதான் முருகப்பெருமான் அவருக்கு “முத்தைத் தரு” எனும் பாடலுக்கு அடியெடுத்தும் கொடுத்தார்.

அருண கிரி எனும் திருவண்ணாமலையில் அவர் முருகப்பெருமானின் அருள் பெற்றதாலே அருணகிரி என்றானார்.

அதன் பின் முருகப்பெருமானின் தரிசனத்துக்கு விரும்பிய அருணகிரியாருக்கு “வயலூர் ஆலயம் செல்” எனக் கட்டளையிட்டார் முருகப்பெருமான்.

வயலூர் ஆலயம் தேடி வந்த அருணகிரியார் அங்கு வந்து முருகனின் தரிசனத்துக்கு ஏங்கி நின்றார். ஆனால், முருகப்பெருமான் உடனே வரவில்லை.

“கட்டளையிட்டதும் பொய்யோ? இங்கு வரச் சொன்னதும் பொய்யோ?” என அவர் மண்டியிட்டு அழ அங்கே முருகப்பெருமான் தோன்றி தன் வேலால் அவர் நாவில் எழுதிப் பாட‌ச் சொன்னார்.

அதன்பின்பே முதல் 18 திருப்புகழை அங்கே பாடினார் அருணகிரியார், பிரசித்திப்பெற்ற வரியான “சும்மா இரு சொல்லற” எனும் முருகப்பெருமானின் வரி அங்கிருந்தே கிடைத்தது.

அதிலிருந்துதான் கந்தர் அனுபூதி எனும் மிக நுணுக்கமான ஞான காவியம் கிடைத்தது.

அருணகிரியாரின் வாழ்வில் மிக முக்கியமானது இந்த ஆலயம். அங்குதான் முருகப்பெருமானை மயில்மேல் அமர்ந்த கோலத்தில் கண்ணாரக்கண்ட அருணகிரியார் அழியாப் பாடல்களை அதன்பின் அள்ளி அள்ளி கொடுத்தார்.

வயலூரில் விளைந்த ஞானப்பயிர் அந்த அருணகிரியார். முருகப்பெருமான் அங்குதான் அவரை வரச்சொல்லி பெரும் கவிஞானத்தைக் கொட்டினார், அவர் ஆட்கொள்ளப்பட்ட இடம் திருவண்ணாமலை என்றாலும் கவிமழை அதுவும் தீந்தமிழ் கவிமழையினை முருகப்பெருமான் மேல் கொட்ட ஆரம்பித்த இடம் இதுதான்.

இங்கிருந்துதான் அவர் ஒவ்வொரு முருகப்பெருமான் தலமாகச் சென்றுபாடி மாபெரும் பாடல் தொகுப்பை நமக்குக் கொடுத்தார், முருகப்பெருமான் உத்தரவின்பேரில் அவர் விரும்பி வந்து வழிபட்ட மிகப் பிரசித்தியான ஆலயம்.

அவரின் உயிரில் கலந்த ஆலயம் இது.

அப்படியே இன்னொரு மகா முக்கியமான முருகபக்தர் ஞானவரோதயர்.

16 ஆம் நூற்றாண்டு என்பது தமிழகத்தில் இந்து எழுச்சி ஏற்பட்ட காலம், இடையில் ஏற்பட்ட ஆப்கானிய இஸ்லாமிய படையெடுப்புக்கு பின் இந்துமதம் சீறி எழுந்த காலம், நாயக்கர்கள் மராட்டியர்கள் என மன்னர்கள் வந்து இங்கு எல்லா இந்து ஆலயங்களும் மீண்டெழுந்த காலம்.

அப்போது ஏகப்பட்ட அடியார்கள் தோன்றி மதம் காக்கப் பாடுபட்டார்கள், தெய்வங்களும் பலரைத் தேர்ந்து கொண்டு அவர்கள் மூலம் இந்துமதத்தை, மண்ணை நிலை நிறுத்தியது.

சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மகாஞானிகள் இன்னும் பலர் அப்படி உருவானார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமிபட்டர் எனப் பலர் இக்காலகட்டத்தில் உருவானார்கள்.

இந்தப் பொற்காலத்தில் முருகப்பெருமான் தேர்தெடுக்கபட்டவர்களில் அருணகிரிநாதர் முக்கியமானவர், அப்படி வந்த இன்னொருவர் ஞானவரோதயர்.

இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் அங்கிருக்கும் ஆயிரங்கால்மண்டப முருகப்பெருமான் அருளால் உருவாகி வந்தவர், பிரசித்தியான கச்சியப்ப சுவாமிகள் இவரின் குருநாதர்.

கவி காளமேகம் இவரின் சீடர், அந்த அளவு மகா முக்கியமான தமிழறிஞர், பெரும் முருகபக்தர்.

இவர் அருணகிரிநாதரைப் போல முருகனால் ஆட்கொள்ளபட்டார், அவர்தான் கச்சியப்பர் கந்தபுராணம் என அற்புதமான நூலை தமிழுக்குக் கொடுத்தார்.

சமஸ்கிருதத்தில் இருந்த கந்தபுராணம் இவராலே பின்னாளில் மீண்டும் தமிழுக்கு கிடைத்தது, அவர் ஏழாவது காண்டமான உபதேச காண்டம் எழுதும்போது அவர் மிக திணறிப்போனார்.

அதை எழுத அவர் மிக மிகப் போராடினார், கடைசியில் வயலூர் முருகப்பெருமானை சரணடைந்தார். அவர் அருளால் அந்த உபதேசத்தை அவர் எழுதிமுடித்தார்.

ஆம், கந்தபுராணதைத் தமிழில் தந்ததும் இந்த முருகன், திருப்புகழ் தந்ததும் இதே வயலூர் முருகன்.

காலங்காலமாக இப்படி மகா அற்புதங்களைச் செய்த முருகப்பெருமானே கிருபானந்தவாரியாரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

1934 இல் அதாவது வாரியாருக்கு 17 வயதாகும் போது இங்கு வழிபட வந்தார், அப்போது ஆலயத் திருப்பணிக்காக 50 காசுகளை அங்கிருந்த ஜம்புநாத சிவாச்சாரியார் எனும் அர்ச்சகரிடம் கொடுத்து முருகனை வணங்கிச் சென்றார் வாரியார்.

அன்றிரவே அர்ச்சகர் கனவில் வந்த முருகன் “அவன் தந்த 50 காசில் கோவில் பணி செய்வாயா? அவனிடமே கொடுத்துவிடு” எனச் சொல்லிச் சென்றார், மறுநாள் அர்ச்சகர் அவர் கொடுத்த காசை அவரிடமே திருப்பிக் கொடுத்து நடந்ததைச் சொன்னார்.

அன்று ஐம்பது காசு என்றால் எட்டணா, இதற்கு 10 கிலோ அரிசி வாங்கலாம். அந்தப் பணமதிப்பு கொண்டது. ஆனால், முருகப்பெருமான் அதனை ஏற்காமல் திருப்பி அனுப்பினார்.

அப்படியானால் முருகன் தன்னிடம் அதிகம் எதிர்பார்க்கின்றான், இனி என் உடல் பொருள் ஆவி எல்லாம் இனி இந்த முருகனுக்கே என அன்றே முழு அடியாரானார் வாரியார், அந்த ஆலயப் பணிகளில் பங்குபெற்றார்.

எங்குத் தன் சொற்பொழிவு நடந்தாலும் வயலூர் முருகனை நினைந்து தொழுதுவிட்டே அவர் தொடங்குவார், முதல் வார்த்தை வயலூர் முருகன் என்றே தொடங்கும், காலம் முழுக்க அதைச் செய்தார்.

கிருபானந்த வாரியார் எனும் அற்புதமான முருகபக்தர் இந்த நூற்றாண்டின் மாபெரும் ஞான அடையாளம், முருகப்பெருமானின் பக்திக்குச் சான்றாக நின்ற அந்த ஞான ஒளியினை ஏற்றிவைத்த ஆலயம் இது.

இக்கோவிலின் இராஜகோபுரம் பின்னாளில் கட்டப்பட்டது, சக்திவாய்ந்த இந்த ஆலயத்தில் எல்லாச் சந்நதிகளும் சிறப்பானவை, இந்த ஆலய கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது, அருணகிரி நாதருக்கு இவர் காட்சிக் கொடுத்தார்.

இவர் கையில் விளாம்பழம் உண்டு, அது மனிதன் உடல் சார்ந்த மாயைகளை நீக்கி இறை பாதம் அடைய வேண்டும் என்பதைச் சூட்சுமமாக சொல்லும்.

இவரை அண்மித்து அருணகிரி நாதருக்குப் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் எதிர்புறம் கல்லால மரத்தடி தட்சிணாமூர்த்தி தவம் செய்யும் சந்நிதி உண்டு.

இங்கிருக்கும் நடராஜர் சதுர தாண்டவக் கோலத்தில் நிற்கின்றார். அதாவது, காலடியில் முயலகன் இல்லாமல் இரு கால்களையும் ஊன்றி நிற்கின்றார், அதாவது இது அவர் ஆடல் கோலம் கொள்ளுமுன் நின்றிருக்கும் திருக்கோலம் எனும் வகையில் இது மகா தொன்மையான ஆலயம் என்பதைச் சொல்கின்றது.

சதுர யுக தாண்டவர் எனப் பொருள் கொள்ள வேண்டியது அதாவது பன்னெடுங்காலத்துக்கு மகா சதுர யுகத்துக்கு முன்பிருந்தே உள்ள ஆலயம் இது என்பது அதன் தாத்பரியம்.

பொய்யாக்கணபதி சந்நிதியை அடுத்து முத்துகுமார சுவாமி மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கின்றார். அந்த முத்துகுமார சுவாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாகக் காட்சியளிக்கிறார்கள்.

வடப்புற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார், கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றம் இடும்பன் வடிவமாகும்.

இங்குள்ள தடாகம் முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட ஞான தீர்த்தம்.

இந்த ஆலயத்தின் மகா சிறப்பு என்னவென்றால் அறுபடை வீடுகளான‌ பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்தக் கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது. அவ்வகையில் எல்லா முருகப்பெருமான் ஆலயங்களுக்கும் தலைமை ஆலயம் இதுதான்.

இந்தக் கோவிலில் தத்துத் திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் உண்டு, அதாவது தோஷம் உள்ள குழந்தைகளைக் குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்குத் தத்துக் கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்துத் திருப்புதலும் இங்கு வழமை.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகைத் திருவிழா, ஆடிக் கிருத்திகை, சஷ்டி விழா என வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.

இந்த ஆலயம் நம் கர்மபலன்களைத் தீர்த்து புதுவாழ்வை வழங்கும். அதனால் கடன் தொல்லை, குழந்தையின்மை, வேலையின்மை இதெல்லாம் இங்குத் தீரும், அவரவர் கர்மத்தை அவரவர் விதிப்படி தீர்க்க முழு ஆற்றலை தந்து வழிநடத்தும்.

இந்த ஆலயம் ஞானம் தரும் ஆலயம். அதுவும் முருகப்பெருமானின் பக்தர்கள் இங்குவழிபடும் போது, இந்த முருகனை முழுக்க நம்பி பணியும்போது பெரும் தொண்டு செய்யும் வரம் பெறுவார்கள்.

பெரும் ஞானமும் அர்ப்பணிப்பும் உறுதியும் பலமும் எல்லாமும் அவர்களுக்குக் கிடைக்கும், பெரும் ஞானமும் கல்வியும், சொல்வாக்கும் செல்வாக்கும், எல்லா அதிகாரமும் இந்த ஆலயம் முருகபக்தர்களுக்குத் தரும்.

திருப்புகழ், கந்தர் அலங்காரம், சேவல் மயில் வேல் விருத்தம், கந்தர் அனுபூதி, வேல்மாறல் என எல்லாமும் இங்கிருந்துதான் பிறந்தது.

கந்தபுராணம் தமிழில் இங்குதான் மீண்டது, அழியாப் பெரும் ஞானியரும் அவதாரங்களும் மகான்களும் கிருபானந்தவாரியார் போல் இங்கிருந்துதான் உருவானார்கள்.

வயலூர் முருகன் எல்லோரையும் வாழவைப்பான், தரையில் வயல்நடுவில் அமைந்திருக்கும் இந்த அற்புத ஆலயம் ஞான விளைச்சலை அள்ளி அள்ளி தந்து கொண்டே இருக்கும்.

கட்டாயம் ஒவ்வொரு முருகபக்தனும் வணங்க வேண்டிய ஆலயம் இது. அப்படி வணங்கும்போது உங்கள் வாழ்வு மிக சரியாய் மாறும்; அந்த மாற்றம் எல்லா வகையிலும் எதிரொலிக்கும்; உங்கள் கர்மப்படி பெரும் முருகப்பெருமான் பணி செய்ய தடைகள் ஏதும் இருந்தால் அதெல்லாம் அகலும்; மாபெரும் இடத்துக்கு இந்த ஆலயம் உயர்த்தும்; காலத்தால் அழியாத பெரும் இடத்தை அது தரும். இது முக்கால சத்தியம்.

அருணகிரி நாதரின் வரிகளோடு இந்த முருகனை வணங்குவோர்க்கு ஒரு குறையும் எக்காலமும் வாரா.

“அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
றறுமுக வேளே நமோவென் …… றுனபாதம்

அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருண சொரூபா நமோவென் …… றுளதாசை

பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம் …… பரநாளும்

பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம் …… பெறவேணும்

கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் …… டியுமாடக்

கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
களமிசை தானேறி யேயஞ் …… சியசூரன்

குரல்விட நா(ய்)பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் …… பலதோளா

குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லூரார மேவும் …… பெருமாளே”

“திருவு ரூப நேராக அழக தான மாமாய திமிர மோக மானார்கள் கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி செருகு மால னாசார வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு கனவி லாள்சு வாமீநின் மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத கழலு நீப வேல்வாகு மறவேனே

சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை சகச மான சாரீசெ யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான வரையில் வீசு தாள்மாயன் மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை வயலி மீது வாழ்தேவர் பெருமாளே”