முருகப்பெருமான் ஆலயம் : வில்வ ஆரண்யம் (வில்வாரணி) நட்சத்திர கிரி.

முருகப்பெருமான் ஆலயம் : வில்வ ஆரண்யம் (வில்வாரணி) நட்சத்திர கிரி.

முருகப்பெருமான் எல்லா இடங்களிலும் தன் உருவில்தான் காட்சியளிப்பார். ஆனால் ஒரே ஒரு தலத்தில் மட்டும் சுயம்புவாய் சிவலிங்கத்துடன் காட்சியளிப்பார். அந்த அபூர்வ ஆலயம் இந்த வில்வாரணி மலை எனும் நட்சத்திர கிரி.

இதன் அன்றைய பெயர் வில்வ ஆரண்யம், அதாவது வில்வ மரக்காடு என பொருள், அந்த வில்வ ஆரண்யம் என்பதே விவராணி என மருவிற்று

இந்த ஆலயத்தின் பெருமை அருணாச்சல புராணம், காஞ்சி புராணம் ஆகிய நூல்களில் வெகுசிறப்பாக சொல்லப்பட்டுள்ளது, அதி முக்கிய தலம் இது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே இந்தத் தலம் அமைந்துள்ளது. முருகப்பெருமான் லிங்க வடிவில் காட்சி தரும் அற்புதத் தலம் இது. இவரோடு 27 நட்சத்திரங்களும் சிவபூஜை செய்வதால் இந்த மலைக்கு நட்சத்திர மலை எனப் பெயர் வந்தது.

இந்த ஆலயம் அமைந்த வரலாற்றுக்கு புராண கதை ஒன்று உண்டு.

பாலகனாக இருந்த முருகப்பெருமான் வேல் எறிந்து விளையாடியபோது இந்தப் பக்கம் தவமிருந்த சப்த ரிஷிகளின் தலை உருண்டது. அதனால் அந்த செய்நதி எனும் செய்யாறு நதியே சிவந்து ஓடிற்று. சப்தரிஷிகளை அப்படி வதைத்தது பிரம்மஹத்தி தோஷம் என்பதால் முருகப்பெருமானே பரிகாரம் தேடவேண்டிய நிலை வந்தது. தாய் சக்தி அவனுக்கு வழிகாட்டினாள்.

அதன்படி செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி பரிகாரம் சொன்னாள்.

செய்நதியின் வலதுகரை பக்கம் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரை பக்கம் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோயில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

முருகப்பெருமானே வழிபட்ட தலம் இந்த பதினான்ங்கும் என்பதால் அவை சக்திமிக்கதாயின. இந்த 14 சிவாலயங்களும் மிகுந்த பக்தியுடன் பக்தர்கள் வழிபடும் இடமாயிற்று.

முன்னொரு காலத்தில் இரு சிவாச்சாரியார்கள் வாழ்ந்தார்கள். மகா பக்தியுள்ள அவர்கள் இந்த 14 சிவாலயங்களையும் முழுக்க வணங்கி வந்தார்கள். அப்படியே ஆடிக் கிருத்திகை அன்று திருத்தணி சென்று வணங்குதல் அவர்களுக்கு இயல்பான ஒன்று.

அப்படி அம்முறை அவர்கள் ஆடிகிருத்திகைக்கு திருத்தணிக்கு கிளம்பும்போது பெரிய தடங்கல் வந்ததால் அவர்களால் செல்ல முடியவில்லை, மிகுந்த மனம் வருந்தினார்கள்.

அவர்கள் கனவில் தோன்றிய முருகப்பெருமான், “அடியார்களே, திருத்தணிக்குச் செல்ல இயலவில்லை என வருந்த வேண்டாம். நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாகக் குடியிருக்கின்றேன். சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கும். எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திர புஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்து சேருங்கள்” எனச் சொல்லி மறைந்தார்.

கனவில் வந்த செய்திப்படி சிவாச்சாரியார்கள் பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்குச் சென்றனர்.

அங்கே, சப்பாத்திக்கள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார். அவரைக் கண்டு வணங்கிய சிவாச்சாரியார்கள் தொடக்க ஆலயத்தை அமைத்தார்கள்.

அப்படித் தொடங்கப்பட்ட ஆலயம்தான், முருகப்பெருமானே அழைத்து தன்னை அடையாளப்படுத்தி நின்ற அந்த ஆலயம்தான் இன்று வில்வாரணி நட்சத்திர கிரியாக அருள்பாலிக்கின்றது.

இந்த ஆலயம் அருள் வழங்கும் ஊற்று. ஏகப்பட்ட தத்துவங்களைத் தன்னில் கொண்டது.

முதலாவது சப்தரிஷிகளின் தலையினை முருகப்பெருமான் வேல் அழித்தது என்பது அகந்தையினை அழிப்பதைச் சொல்வது. இறைவனின் திருவிளையாடல்கள் யாரும் புரிந்துகொள்ள முடியாதது. விளையாட்டாகச் செய்து பெரும் காரியங்களை அந்த பரம்பொருள் செய்யும்.

அப்படித் தலை உருண்டது என்பது உடல்ரீதியாக அல்ல மாறாக அவர்களின் தலைகணத்தை ஒழித்தார் என்பது.

அடுத்து முருகப்பெருமானே ஆயினும் ரிஷிகளைத் தொட்டதற்காக அவரே சிவபூஜை செய்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதுவும் 14 சிவாலயங்களை ஸ்தாபித்தார் என்பது கொஞ்சம் நுணுக்கமாக நோக்க வேண்டிய விஷயம். இது ஈரேழு உலகங்களையும் குறிப்பது. 14 லோகங்களுக்கும் இந்த ஆலயங்களுக்குமான தொடர்பைக் குறிப்பது.

இங்கே இன்னும் ஆழமாக கவனிக்க வேண்டிய விஷயம் மறுபிறப்பு.

இந்தப் பிறப்பில் இந்த லோகத்தில் நாம் பிறந்திருக்கலாம். ஆனால் முந்தைய பிறப்பில் எந்த லோகத்தில் என்ன பிறப்பெடுத்தோம் என்பது தெரியாது.

இப்படி எந்த உலகில் எந்த பாவம் செய்திருந்தாலும் எந்த கர்மா செய்திருந்தாலும் இங்கே தீரும் என்பதுதான் இந்த ஆலயத்தின் தாத்பரியம்.

இன்னும் 27 நட்சத்திரங்களும் நாகங்களும் இங்கு வழிபடுகின்றன என்பது ஆழமான தத்துவத்தைச் சொல்வது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஜாதகம் உண்டு. அது அவன் கர்மாபடி ஒவ்வொரு நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஜாதகத்தில் அமைகின்றது. அந்த ஜாதகப்படியே அவரவர் வாழ்வும் இயங்குகின்றது.

இந்த தலத்தில் வந்து வணங்கினால் அந்த ஜாதகத்தின் கர்மா தீர்க்கப்படும். 27 நட்சத்திரங்களைக் கொண்டு இயக்கப்படும் மானுடரின் எல்லா சிக்கல்களும், அவர்கள் யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்ந்துபோகும் கரைந்து போகும். இதுதான் இங்கு சொல்லப்படும் தாத்பரியம்.

நாகம் இந்த நட்சத்திரங்களோடு வணங்குவது என்பது இரு விஷயங்களைச் சொல்வது. முதலாவது நாகமென்பது குண்டலினி சக்தியினைக் குறிப்பது. அந்த சக்தி இங்கு வந்து வழிபடுவோர்க்கு மிகுந்த அளவில் பெருகி அவர்களை தியான உச்ச நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது.

இரண்டாவது நாக கிரகங்கள் எனும் ராகு மற்றும் கேதுவின் தாக்கம் ஜாதகத்தில் முக்கியமானது. அந்தத் தாக்கங்கள் குறையும் தலம் இது.

கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர் என்பது ஆறு சக்கரங்களைக் குறிப்பது. இங்கு வந்து வழிபட்டால் ஆறு சக்கரங்களும் துலங்கி யோக சக்தி சித்தியாகும் என்பதையே கார்த்திகை பெண்களுடன் நாகமும் வழி.

இந்த தலத்தில் சிவலிங்க வடிவில் முருகப்பெருமான் இருப்பது எல்லா கிரகங்களும் சிவனில் அடக்கம், எல்லா கிரகங்களுக்குமான எல்லா கோள்களுக்குமான கட்டுபாட்டு சக்தியாய் அவர் இருக்கின்றார் என்பது. ஆம், இந்த ஆலயம் ஜாதக ரீதியான எல்லா சிக்கல்களையும் தீர்க்கும் ஆலயம்.

எல்லா நட்சத்திரத்தவரின், எல்லா ராசிக்காரர்களின் ஜாதக ரீதியான எல்லா தோஷங்களும் இங்கே தீர்க்கப்படும். அவ்வளவுக்கு சக்தியான ஆலயம்.

ஒருவகையில் முருகப்பெருமானே எல்லா வல்ல சிவனை, தன் ஆதிமூலத்தை வணங்கி சாபம் தீரப்பெற்ற தலம் என்பதால் முருகப்பெருமான் எல்லா மக்களுக்கும் வழிகாட்டிய தலமாகும்.

ஜாதகம் என்பது கர்மாவினைச் சொல்லும் வழி. ஒருவன் கர்மாவே அவன் ஜாதகமாக அமையும். ஒருவன் கர்மப்படி அவன் பிறப்பு, கிரகங்கள் எனும் சிவனின் வேலையாட்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அந்த கிரகங்கள் அதனதன் வேலையினைச் சரியாகச் செய்கின்றன‌.

இங்கே மானுடரின் கண்ணீரோ அவர்கள் செய்யும் பெரிய பெரிய பரிகாரமோ ஜாதகத்தை மாற்றாது. அதன் சில தீவிரம் கொஞ்சம் குறையலாமே தவிர பாதிப்போ பிடியோ தீராது. ஜாதகமே தலையெழுத்து எனக் கருதப்படுவதும் உண்டு.

இந்த ஆலயம் அந்த ஜாதகத்தை மாற்றும். அங்கு நம்பிக்கையோடு சென்று வணங்கினால் உங்கள் கர்மா மாறும். கர்மா மாறி பாபம் அழியும் போது ஜாதக கிரகங்களின் வேலை எதுவும் உங்களை பாதிக்காது.

இந்தத் தலம் ஜாதகரீதியான இடைஞ்சல்களைத் தீர்க்கும் தலம். அதனால் திருமணத் தடை, குழந்தையின்மை, வேலையின்மை, சொத்துச் சண்டை இன்னும் என்னென்ன சிக்கல்கள் ஜாதகத்தில் உண்டோ அதெல்லாம் தீரும்.

இன்றும் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டு இந்த சிக்கல்களெல்லாம் தீர்ந்து முருகன் அருளால் வாழ்வு பெற்றவர்கள் ஏகப்பட்டோர் உண்டு. அவர்களெல்லாம் சாட்சிகள். இந்த ஆலயத்தில் எப்போதும் சென்று வழிபடலாம் என்றாலும் சிறப்பு நாட்களில் சிறப்பான வழிபாடுகள் உண்டு.

முருகனே அருள்காட்சியளித்த நட்சத்திரகிரி கோயிலில் மகா முக்கியமன பண்டிகைகள் உண்டு. சித்திரை பிறப்பு பால் குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விசேஷமானவை.

கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம், புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்.

பாலபிஷேகம் செய்து, சிவந்த மலர்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும். நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை. உங்கள் ஜாதகங்களுக்கு பரிகாரம் தேடினால் இல்லை இதர தோஷமோ சிக்கலோ இருந்தால், நாக தோஷம் உள்ளிட்ட பல கர்மாக்களின் தொடர்ச்சி இருந்தால் இங்கே வந்து வழிபடுங்கள். எல்லா சிக்கலையும் அந்த முருகப்பெருமான் தீர்த்து வாழ்வினை புதிதாக்கித் தருவார்.

யோகங்களில் பழக்கம் இருந்து, ஆறு சக்கரங்களும் துலங்கி குண்டலினி எழுச்சிபெற்று ஞானநிலை அடையவேண்டும் எனும் விருப்பம் இருந்தால், தேடல் இருந்தால் இங்கு தாராளமாய் சென்று வழிபடலாம், நிச்சயம் அந்நிலை வாய்க்கும். “நாகம் வழிகாட்ட என்னிடம் வந்து சேருங்கள்” எனச் சிவாச்சாரியார்களுக்கு முருகப்பெருமான் சொன்னது அவர்களுக்கானது மட்டுமல்ல. குன்டலினி சக்தி எழுச்சிபெற்றால் எல்லா மாந்தரும் தன்னை அடையலாம் எனும் ஞான மொழி அது.

இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருவது சிறப்பு. 27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்தக் கோயிலைத் தவிர உலகில் வேறெங்கும் இல்லை என்பதால் உலகிலே இது தனித்துவமான கோவில். சுயம்புவடிவ முருகப்பெருமானும் 27 நட்சத்திரங்களும் சேர்ந்திருக்கும் ஒரே ஒரு ஆலயம் இதுதான்.

இங்குதான் மலேசிய பத்துமலை முருகன் சிலைபோல அதே அளவும, அதே வடிவான சிலை ஒன்று நிறுவப்பட்டு முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார்.

யாருடைய ஜாதகத்தில் இந்த ஆலயத்தினை தரிசிக்கும் பாக்கியம் உண்டோ அவர்கள் சென்று பெரும் பலனை அடைந்து பழையன கழிந்து புதுவாழ்வு பெறுவார்கள். அது சத்தியம்.