முருகப்பெருமான் தலங்கள் : வள்ளிமலை முருகப்பெருமான் ஆலயம்.
முருகப்பெருமான் தலங்கள் : வள்ளிமலை முருகப்பெருமான் ஆலயம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சிறிய மலையில் அமைந்திருக்கின்றது இந்த வள்ளிமலை தலம். இங்குதான் முருகப்பெருமான் வள்ளியினை சந்தித்தார் என்பதால், திருத்தணியில் வள்ளியுடன் திருமணம் நடந்தாலும் அந்தத் திருமணத்துக்கான எல்லாக் காட்சியும் இங்குதான் நடந்தது என்பதற்கான சுவடுகளும் ஆதாரமும் நிரம்ப இருப்பதால் இந்தத் தலம் முருகப்பெருமானின் தலங்களில் மிக முக்கியமான ஒன்றாகின்றது.
தன் பூர்வ ஜென்மத்தின் வாசனையால் முருகனை மணக்க வள்ளி திருமால் பாதத்தை வழிபட்ட இடம் இதுதான். அந்த வள்ளியினை தேடி வந்த முருகப்பெருமான் அவளை விநாயகருடன் சேர்ந்து அச்சுறுத்தி விளையாடி நின்ற இடமும் இதுதான். நம்பிராஜன் திருமணத்துக்கு சம்மதித்த இடமும் இந்தத் தலமே.
இது மலையினைக் குடைந்து உருவான கோவில். மலையின் உச்சிப்பாறை அப்படிக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கின்றது. சிலைகளும் அப்படிப் பாறையினைக் குடைந்து உருவாக்கிய அற்புதம் கொண்டவவை. முருகப்பெருமானின் ஆலயங்கள் வெகுசில இந்தச் சிறப்பைக் கொண்டது. அதில் முதலாவது வருவது இந்த ஆலயம்.
இது மலையடிவார ஆலயம், மலைமேல் ஆலயம் என இரு பகுதிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் உள்ள ஆலயத்தில் வழிபட்டு பின் படியேறி மேலே செல்லுதல் வேண்டும்.
அடிவார வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன், வள்ளி தெய்வானையுடன் காட்சித் தருகிறார். அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
இங்கு வள்ளிக்கு தனிச் சன்னதி இருக்கிறது. கையில் பறவைகளை விரட்டும் உண்டி வில், கவண் கல் சகிதம் அவள் காட்சி தருகின்றாள். முன்பு முருகப்பெருமான் வள்ளியுடன் பேசும்போது தன்னை வேங்கை மரமாக உருமாற்றி மறைந்து நின்றார். யாருமறியாக் கோலத்தில் அப்படி நின்றார். அதனால் இந்தத் தலத்தில் வேங்கை மரமே தல விருட்சமாயிற்று.
மலைப் பயணம் சுமார் 454 படிக்கட்டுகளைக் கொண்டது. சுற்றி ஆயிரக்கணக்கான மரங்கள் நடுவில் செல்லும் பாதை இது.
மேலே வந்தவுடன் கம்பீரமான கொடி மரத்தையும் அருகில் வள்ளிமலை முருகன் குன்றினையும் பார்க்கலாம். குன்று வெளியில் இருந்து காண்பதற்கு சிறிதாகத் தெரியும். ஆனால், உள்ளே நீண்டு கொண்டே போகும். குகையின் இடது பக்கத்தில் வள்ளியம்மை சந்நிதியும் அதைத் தொடர்ந்து விநாயகர் சந்நிதியும் இருக்கும்.
அடுத்ததாக முருகப் பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையோடு காட்சியளிப்பார். முருகனை தரிசித்த பிறகு குகை கோயிலை சுற்றி வர பாறைகளுக்கு இடையே படிக்கட்டு பாதை அமைந்திருக்கும்.
கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் அமர்ந்திருக்கின்றார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், வள்ளியினை வளர்த்த நம்பிராஜன் உண்டு.
இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் எனப் பல உண்டு.
யானைக் குன்று என ஒரு குன்று அப்படியே யானைப் போல காட்சித் தருகின்றது, வள்ளியினை அச்சுறுத்த வந்த விநாயகர் அப்படி கல்வடிவமாக அமர்ந்ததால் அந்த யானைக் குன்று உருவாயிற்று.
இங்குச் சரவணப் பொய்கை உண்டு, அதனருகே வள்ளிக்குச் சந்நிதியும் உண்டு.
நுழைவாயிலில் உள்ள ஒரு சந்நிதியில் வள்ளி அம்மன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தச் சிற்பத்திற்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லும் போது குனிந்துதான் செல்ல வேண்டும். அவ்வளவு தாழ்வான நுழைவாயிலை அடுத்து முருகன் கர்ப்பகிரஹத்தில் காட்சியளிப்பார்.
குகன் எனும் முருகனுக்கு மலையினைக் குகையாக்கி படைக்கப்பட்ட ஆலயம் இது. வள்ளி மனதில் எழுந்த நாதனுக்கு மனக்குகை வேந்தனுக்கு குகையினை உருவாக்கி அமைந்த அற்புதமிது.
இங்கிருந்து பார்த்தால் யானைக்குன்று அப்படியே யானை உருவில் இருப்பதை அறியலாம், கணேச கிரி என்றும் அதற்குப் பெயர்.
மலையின் உச்சியில் திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. வள்ளியின் முதல்பிறப்பில் அவர் திருமாலிடம் தோன்றியவர் எனும் நினைவாக உருவாக்கப்பட்ட சந்நிதி இது.
கோவிலின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதற்குச் சூரியன் காணாத சுனை எனப் பெயர்.
அந்தச் சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லை. தேனும் தினைமாவும் முருகனுக்கு வள்ளி கொடுத்தபோது அவரின் விக்கல் தீர்க்க வள்ளி நீர் எடுத்து வந்த சுனை இது.
இதன் அருகில்தான் திருப்புகழ் ஆசிரமம் அமைந்துள்ளது. இது அருணகிரி நாதரின் திருப்புகழில் வரும் ஆலயம் என்பதால் திருப்புகழ் பெயரிலே இங்கு ஆஸ்ரமம் அமைக்கப்பட்டு இன்றளவும் அற்புதமாய்ச் செயல்படுகின்றது.
இந்த ஆலயம் சமணர்காலத்தில் சமண ஆலயமாக மாற்றும் சோதனையினைச் சந்தித்தது என்றாலும் பின்னாளில் மீண்டெழுந்தது. அதனால் சமணமத அடையாளம் இன்றும் உண்டு.
இந்த மலையும் ஆலயமும் காலம் காலமாக சித்தர்கள் வசிக்குமிடம். எப்போதும் அரூபமாகவும் உருவமாகவும் சித்தர்கள் இங்குத் தவக்கோலத்தில் இருந்து அருள் பாலிப்பர்.
கோயில் கருவறைக்குள் கூட சில துளைகள் உண்டு. அங்கு இப்போதும் சித்தர்கள் மறைந்த வடிவில் தவம் செய்வது உண்டு.
கோவிலினுள் மட்டுமல்ல மலையெங்கும் சித்தர்கள் உண்டு. இந்த வள்ளிமலைக் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கால் மண்டபப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்தது.
அது சித்தர்கள் தியான நிலையில் இருக்குமிடம் என அறியபட்டதால் அப்படியே அது மறுபடி மூடப்பட்டது. இப்படிப் பல மெய்சிலிர்க்கும் அனுபவங்களைத் தருமளவு சித்தர்கள் நிறைந்திருக்கும் மலை அது.
இந்த மலை சித்தர்களின் மலை என்பதற்கு பெரும் உதாரணம் கண்கண்ட சாட்சியாக விளங்கியவர் வள்ளிமலை சுவாமிகள் எனும் சச்சிதானந்த சுவாமிகள், அவர் சமாதி இங்குதான் உண்டு, அவர் இங்குதான் வாழ்ந்தார்.
கடந்த நூற்றாண்டில் வள்ளிமலையில் வாழ்ந்தவர் அந்த வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்.
அவரை முருகப்பெருமான் ஆட்கொண்டு அழைத்துவந்த விதம் நம்பமுடியா அதிசயம். ஆனால், நடந்தது.
அவர் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கன்னட பெற்றோர்க்குப் பிறந்தவர். அது மைசூர் சமஸ்தான ஆட்சியில் தமிழகம் வந்த குடும்பம், அவர் பெற்றோர்க்குக் குழந்தை இல்லாததால் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரரிடம் 12 அமாவாசைக்கு வேண்டி பெற்ற குழந்தை அவர்.
அவருக்கு அர்த்தநாரீஸ்வரர் வரமாக அர்த்தநாரி என பெயருமிட்டார்கள், அவர் வளர்ந்து மைசூர் அரசிடம் வேலைக்குச் சென்றார்.
பின் இரு மனைவியும் அமைந்தார்கள். முதலில் சரியாக சென்ற வாழ்க்கை பின்னால் புயலடித்தது, அவர் மிக மோசமாக அலைகழிக்கப்பட்டார்.
முதல் மனைவியும் மூன்று மகள்களும் அடுத்தடுத்து இறந்தனர். இரண்டாம் மனைவியின் மூத்த மகனும் இறந்தான். எஞ்சியது கடைசி மகனும் இரண்டாம் மனைவியுமே. இந்நிலையில் அவருக்கு வயிற்றுவலியும் பெரிதாகத் தாக்கிற்று.
வாழ்வில் மிக நொடிந்து போன அவர் தன் மனைவி எஞ்சிய மகனுடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு ஒரு யாசகனைப் போல வாழ்ந்தவர் முருகன் கோவிலில் கோவிலை துடைப்பது இதர வேலைகளைச் செய்வது என நான்கு வருடங்கள் அங்கே கிடையாய்க் கிடந்தார்.
அந்நேரம் அவர் வயிற்றுவலி நீங்கிற்று. குடும்பத்தில் வந்த அழிவும் முருகன் அருளால் நீங்கிற்று என்பதால் முருகனுக்கு நன்றி சொல்லியபடி அங்கே தொண்டுகள் செய்து வந்தார்.
அந்நேரம் மதுரையில் இருந்து வந்த தேவதாசி திருப்புகழை பாடி முருகனை வழிபட அந்த வரிகளின் அழகிலும் தாள லயத்திலும் மனம் உருகிப் போனார் அர்த்தநாரி, அந்தப் பாடல்கள் அவர் மனதை மிகவும் கவர்ந்தன.
ஆனால், அவருக்கு தமிழ் பேசவருமே அன்றி வாசிக்க வராது. திருப்புகழை படிப்பதற்காகவே கஷ்டப்பட்டு தமிழை பள்ளி சிறுவர்களிடமிருந்து கற்றார். அங்கே அவமானம் ஏதும் அவர் கருதவில்லை, முருகனுக்காக தமிழை அப்படித் தேடிப் படித்தார்.
பின் பல முருகப்பெருமான் தலங்களுக்குச் சென்றவர் இலங்கைக்கும் சென்றுவந்தார். கடைசியில், திருவண்ணாமலையில் ரமணரிடம் சென்று அவர் ஆசிரமத்தில் தங்கினார்.
எல்லோரையும் கவர்ந்து ஈர்க்கும் ரமண மகரிஷி, சந்திப்போரை எல்லாம் தேனுண்ட வண்டுபோல் தன் வசம் ஈர்க்கும் மகரிஷி அவரையும் ஈர்த்துக் கொண்டார்.
ஆனால், சில நாட்களிலே ஆசிரமத்தை விட்டு அவரை வெளியேறச் சொன்னார். கருணையே உருவான ரமண மகரிஷி அப்படிக் கண்டிப்பாய்ச் சொன்னதில் மனம் வருந்தினார் அர்த்தநாரி.
ஆனாலும், வேறு வழியில்லை. ரமணரோ தன் முடிவில் உறுதியாய் இருந்தார், “சுவாமி என்னைத் திருப்பி அனுப்பாதீர்கள் ” என மன்றாடிய அர்த்தநாரிக்கு ரமணர் இரக்கம் காட்டவில்லை.
அழுது உடைந்த மனதுடன் தன் குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவில் முன் கலங்கி நின்றவரிடம் அடுத்து நான் என்ன செய்வேன் என அழுது நின்றவர் முன் தோன்றினார் சேஷாத்திரி சுவாமிகள்.
“அடேய், ரமணர் உன்னை வள்ளிமலைக்குப் போக சொல்கின்றார், அங்கே போய் தவம் செய். இனி முருகன் உன்னைப் பார்த்துக்கொள்வான், ரமணர் விருப்படிதான் செல்கின்றாய்” என அனுப்பி வைத்தார் அந்தச் சுவாமிகள்.
வள்ளிமலைக்கு வந்த அர்த்தநாரி அங்கே குகையில் தியானம் செய்தார். முருகபெருமான் அருள் அவருக்குக் குவிந்தது. சித்தர்களில் ஒருவராக அவரை அணைத்துக் கொண்டார் முருகன்.
பழனியில் அவர் செய்த சேவையெல்லாம் இங்கு ஞானமாய்க் குவிந்தது.
அர்த்தநாரி எனும் பெயர் மறைந்து சச்சிதானந்த சுவாமிகளானார். வள்ளிமலையில் தங்கியிருந்ததால் அவர் வள்ளிமலை சுவாமிகள் என்றானார்.
அதன்பின் அவர் மாபெரும் ஞானியாக ரிஷி கோலத்தில் பல ரகசியங்களை உரைத்தார். ரமணருடன் அவர் அரூபமாகச் சந்திப்பு செய்வதையும் ரமணருடன் முருகப்பெருமானைக் கண்டதையும் சொன்னார்.
முருகபெருமானின் இயக்கு சக்தி வள்ளி, அதனால் வள்ளியம்மையினை வணங்காமல் முருகன் அருளை முழுமையாகப் பெறமுடியாது. வள்ளி வழிபாடும் மிக அவசியம் என அவளைக் கொண்டாடினார்.
இன்னும் தன் தவயோகத்தில் மூழ்கி கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட வள்ளி முருகன் திருமணம் நடந்த இடமே மோட்சமுக்திக்கு உகந்த தலமென இங்குக் குடிவந்ததை சொன்னார்.
அவர் ஆதிசங்கரர் இயற்றிய ‘சிவமானசீகபூஜா’ எனும் சமஸ்கிருத நூலின் தழுவல், அந்தச் சாயல் கொண்டது திருப்புகழ் என்பதை மிக அழகாகப் பொருந்திச் சொன்னார்.
திருப்புகழ்மேல் பெரும் நம்பிக்கையும் அபார பக்தியும் கொண்டிருந்தார். திருப்புகழ் என்பது முருகனை கண்முன் உணரச் செய்யும் மந்திர நூல் எல்லா வரத்தையும் அள்ளித்தரும் பொக்கிஷம் எனக் கொண்டாடினார்.
இதனாலே அவர் வள்ளிமலையில் அமைத்த ஆசிரமம் “திருப்புகழ் ஆசிரமாயிற்று”
“திருப்புகழ் ஞான சச்சிதானந்த வள்ளி கைத்தம்” என அற்புதமான ஞான நூலை மருத்துவ நூலாகக் கொடுத்தவர் சுவாமிகள். ஆன்மீகம் லௌகீகம் என இரண்டுக்குமான அருமருந்து அந்நூல்.
திருத்தணி முருகன் மேல் அபார பக்தி கொண்டிருந்த வள்ளிமலை சுவாமிகள்தான் “வேல் மாறல்” எனும் தெய்வீக மந்திர பாடலையும் நமக்குத் தந்தார்.
ஆங்கில ஆட்சியில் ஜனவரி ஒன்று புத்தாண்டு எனக் கொண்டாடபஅபட்டபோது, இங்கு அந்நிய ஐரோப்பிய கிறிஸ்தவ நாகரீகம் முளைத்தபோது அதனைத் தடுக்க எழுந்தவரில் இவர் முக்கியமானவர்.
டிசம்பர் 31ஆம் தேதி முருகப்பெருமான் கோவிலில் படியேறும் நிகழ்வு என அறிவித்து அந்நிய கலாச்சாரத்தில் இருந்து இந்து கலாச்சாரத்துக்கு மக்களைத் திருப்பினார்.
அந்நியரிடமிருந்து நாடு சுதந்திரமடைந்தால் மட்டுமே இந்துமதத்தை காக்கமுடியும் என மனமார நம்பியவர் இந்தியச் சுதந்திரத்தை பார்த்துவிட்டே முருகப்பெருமானுடன் கலந்தார்.
இன்றும் அவர் சமாதி வள்ளிமலையில் உண்டு, அவர் உருவாக்கிய திருப்புகழ் ஆசிரமம் உண்டு.
வள்ளிமலை முருகனை வணங்கினால் எல்லா நலமும் அருளும் கிடைக்கும். குறிப்பாக வள்ளியினை நினைந்து இந்தத் தலத்தில் வணங்கினால் நினைத்ததெல்லாம் நடக்கும், மணவாழ்வு சிறக்கும். மனமார வேண்டினால் நினைத்த துணையே மணஉறவாய் அமைத்துத் தரும் ஆலயம் இது.
யோகத்தை வேண்டினால் யோகமும், முக்தியினை வேண்டினால் முக்தியும், ஞானம் வேண்டினால் ஞானமும் நல்வாழ்வும் இல்லறமும் வேண்டினால் அதனையும் அள்ளி அள்ளி தரும் ஆலயம் இது.
இந்த ஆலயத்துக்குச் செல்லும்போது வள்ளியினை முதலில் மனமார வழிபடுங்கள். வள்ளிக்கும் முருகனுக்கும் தேனும் தினைமாவும் படைத்து வணங்குங்கள். வள்ளி நீர் எடுத்து முருகனுக்குக் கொடுத்த அந்தச் சுனையில் இருந்து நீர் எடுத்து அருந்தி தலையில் தெளியுங்கள். அதன் பின் எல்லா நலமும் அருளும் ஐஸ்வர்யமும் உங்களுக்கு வாய்க்கும். எல்லாம் சரியாகும்.
நல்ல துணை எல்லாவகையிலும் உங்களுக்குப் பொருத்தமாக அமையும்.
மறவாமல் வள்ளிமலை சுவாமிகள் சமாதியினை வணங்க மறவாதீர்கள். அங்கு ஒரு விளக்கேற்றி காவி உடை அணிந்து திருநீறு பூசி வேல்மாறலை உளமாற மும்முறை பாடுங்கள். அப்படிப் பாடி வழிபட்டு என்ன வரம் கேட்பீர்களோ அதை அந்த வள்ளிமலை சுவாமிகள் முருகப்பெருமானின் அருளில் அள்ளித் தருவார். இது முக்கால சத்தியம், எக்காலமும் சத்தியம்.
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் …… கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் …… தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் …… சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் …… கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் …… குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற் …… றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் …… தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் …… பெருமாளே.