மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் – அம்மா
20 / 10 / 2023
“நா(யே)னையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.“
என்ற வரிகளுக்கு அபிராமி பட்டருக்கு பின் சாட்சியாக வாழ்ந்த ஆத்மா அது. சிவந்து கனிந்த ஆத்மா அது.
செவ்வானத்தில் ஜொலித்தக் கொண்டிருந்த விண்மீன் ஒன்று வீழ்ந்துவிட்டது.
செந்நிற பூங்கொத்தில் இருந்து பக்தித்தேன் வழங்கிய மலர் ஒன்று காலத்தால் வாடி வீழ்ந்துவிட்டது.
செந்தாமரையாய் நின்று தேவியினைத் தாங்கி நின்ற அந்த ஞானத்தாமரை தன் காலத்தை முடித்துக்கொண்டது.
சிவப்பு கொடிகள் மிரட்டிய காலத்தில், குங்குமக் கொடியால் பதில் சொல்லி இந்துமதம் காத்த அந்த கோட்டையின் சிம்மம் இன்று நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டது.
அன்னை சக்தி அதர்மங்களை ஒழிக்க வீசிய திரிசூலத்தை திரும்ப எடுத்துக்கொண்டாள். ஆனால் அது கொடுத்த காவலின் சாரம் இன்னும் பல நூற்றாண்டுகள் அவள் பக்தர்களை வாழவைக்கும்.
மூட்டை மூட்டையாக ஆன்மீக சர்க்கரையினை மானிட எறும்புகளுக்கு இறக்கிவைத்த அம்பாளின் வண்டிக்காரன் விடைபெற்று சென்றுவிட்டான், அந்த ஞானச்சர்க்கரை மூட்டைகள் பல்லாயிரம் காலம் இந்த எறும்புகளுக்கு போதுமானது.
அம்பாளின் கருணைக்கோர் மகனும் காலம் கொடுத்த இந்துமத காவலனுமான அந்த பங்காரு அடிகளார் மறைந்துவிட்டார்.
கூட்டைவிட்டு அந்த ஞானப்பறவை பறந்துவிட்டது என்பது நவராத்திரி காலத்தில் மற்றவர்க்கு அதிர்ச்சி. ஆனால் நவராத்திரியின் வியாழக்கிழமை பஞ்சமி திதியில் அவரை அம்பாள் தன்னிடம் அழைத்துக்கொண்டாள் என்பதிலே அவர் எந்த அளவு அன்னையின் திருமகனாய் இருந்தார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இந்த நாளில் அவரை நினைத்து வணங்கி சில சொட்டு நன்றிக்கண்ணீர் விடாதவர்கள் நல்ல இந்துவாய் இருக்கமுடியாது. காரணம் அவர் ஆற்றிய சேவையும், அன்னை கொட்டி கொடுத்த சக்தியினை அப்படியே மக்களுக்கு நீட்டி கொடுத்த எளிமையும் கொஞ்சமல்ல.
எப்படி அன்னை அவரை உருவாக்கினார், என்னென்ன ஆச்சரியமான சாதனைகளை அவர் செய்தார் என்பதற்கு முன், மதமாற்றம் எனும் பெரும் ஆபத்தை தடுத்து இந்துக்களை இந்துக்களாக வாழவைத்து சென்ற பெரும் சேவைக்காக அவருக்கு சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி சொல்லி விட்டுத்தான் தொடர வேண்டும்.
அவர் இயற்பெயர் சுப்பிரமணி, மார்ச் மாத 3ம் தேதி 1941ல் பிறந்தார். அவர் பிறக்கும் காலத்திலே அப்பக்கம் மதமாற்றம் அதிகம் இருந்தது.
அது நாயக்கர்கள் வீழ்ந்து சுல்தான்கள் கால்வைத்த 15ம் நூற்றாண்டில் கூட அதிகமில்லை. பின் போர்ச்சுகீசியர் சென்னை பக்கம் கால் வைத்தது முதல் அது மிக அதிகமாக இருந்தது. சென்னையில் சாந்தோம், ஜார்ஜ்கோட்டை கட்டபட்டபின், பழவேற்காடு பக்கம் டச்சுகோட்டை இன்னும் பல கடலோர கோட்டைகள் வந்தபின், இது இன்னும் வேகமானது.
இதனாலேயே 1677ல் வீரசிவாஜி அதனை வந்து மீட்டெடுத்து இந்துபூமியாக மாற்ற அஸ்திபாரமிட்டான். ஆனால் 1700ல் அவுரங்கசீப்பின் கைக்கு இந்த பிரதேசம் சென்றபின் இந்த சென்னை , செஞ்சி, காஞ்சிபுரம் போன்ற பக்கமெல்லாம் மதமாற்றங்கள் அதிகரித்தன.
அதே நேரம் மொகலாயருக்கு ஆயுத உதவி எனும் வகையில் ஐரோப்பியரும் பலம் பெற்று அதே மதமாற்றத்தை தொடங்கினார்கள்.
இந்துக்களுக்கு எதுவுமில்லை, எந்த அரசனுமில்லை தலைவனுமில்லை என்பதால் இந்துமதமே தனக்குரிய ஞானிகளை உருவாக்கி தன்னை முடிந்தவரை காத்துக்கொண்டது.
1940கள் இந்திய வரலாற்றின் முக்கிய தருணங்கள். பாகிஸ்தான் உருவாகவேண்டும் எனும் குரல்கள், இன்னும் சிலகாலத்தில் பிரிட்டன் அகன்றுவிடும், அதற்குள் பெரும் மதமாற்றம் செய்து தங்கள் இருப்பை தக்கவைக்க முயன்ற ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் கடும் வேகம் எடுத்த நேரம் அது. அவர்களின் துணையாக திராவிட நாத்திக குரல்களும் வந்தன.
இன்னொரு ஆபத்தாக கம்யூனிசம் எனும் நாத்திக கொள்கையும் எழுந்தது.
இப்படி இந்துமதத்தை பெரும் ஆபத்து சூழ்ந்திருந்த காலத்தில் ரமணர், காஞ்சி மகாபெரியவர் போன்ற வெகு சிலரே ஜோதியாய் எழுந்து வெளிச்சம் கொடுத்தார்கள்.
காங்கிரஸ் இந்து பற்று கொண்டிருக்கவில்லை. அதுதான் அன்று பிரதான கட்சி என்பதால் இந்துக்களுக்கென எதுவும் அன்று இல்லை.
இந்த கொடியகாலகட்டத்தில், இனி இந்துமதத்தை ஒழித்துவிட வேண்டும் எனும் வேகத்தில் பெரும் மதமாற்றத்தை அக்கூட்டம் செய்ய முயன்ற காலத்தில்தான் அவர் பிறந்தார்.
அப்போது இரண்டாம் உலகமகா யுத்தம் வந்தததால் மதமாற்றிகள் கொஞ்சம் அடங்கினார்கள். சென்னை தாக்கப்படும் வாய்ப்பு இருந்ததால் அஞ்சினார்கள். காரணம் இந்த பிரதேசத்தில் மதம் மாற்ற ஒரே காரணம் அது சென்னை துறைமுகம் மற்றும் வியாபார வாய்ப்புள்ள இடங்கள்.
வியாபார கேந்திரத்தில் தங்களுக்கோர் அடிமை இனம் உருவாக வேண்டும், அது தங்களை தேவதூதர்கள் எனக் கொண்டாடவேண்டும், தங்கள் காலை சுற்றி அவர்கள் கிடக்க வேண்டும். அப்போதுதான் இங்கு தங்கள் வியாபாரமும் ஆளுமையும் செழிக்கும். இவர்களை சுரண்டிக் கொண்டே இருக்கலாம் எனும் தந்திரம் இருந்தது.
இந்த தந்திரம்தான் மதமாற்ற சக்திகளுகு காசும் பணமும் கொடுத்து செயல்பட வைத்தது. இதன் பின்னால் இருந்ததெல்லாம் ஆன்மீகம் அல்ல வியாபார தந்திரம்.
இதைத் தாண்டி 1947ல் தேசம் சுதந்திரம் பெற்றபோது இனி இந்த மதமாற்றிகள் அட்டகாசம் ஒழியும் என எல்லா இந்துக்களும் எதிர்பார்த்த நிலையில், மதமாற்றிகளுக்கு மறுவாழ்வை நேரு வழங்கினார்.
நேரு கொடுத்த ஆதரவே மறுபடி மதமாற்றம் கடுமையாக நிகழ ஆரம்பித்தது.
அது உலகெல்லாம் வறுமை மிகுந்திருந்த காலம், கொடும் போர் முடிந்து தேசம் இரண்டாக பிரிந்து கிடந்த காலம், உடைந்த மண்சட்டியாக தேசம் வறண்டிருந்த காலம். அந்த வறுமை எல்லா நாட்டிலும் எல்லா இடத்திலும் இருந்தது. ஆனால் இந்த பிரதேச வறுமைக்கு இந்துமதமே காரணம் என ஒரு கும்பல் மதமாற்றம் செய்தது.
இதையெல்லாம் பார்த்தபடிதான் அந்த சுப்பிரமணி வளர்ந்து கொண்டிருந்தார். அவர் எளிய குடும்ப பிறப்பு, பால்ய வயதில் கல்வி கற்கும்போதே இதெல்லாம் கவனித்தார்.
மதமாற்றிகளின் பிரதானம் கல்வி, மருத்துவம் எனும் இரண்டுமாக இருந்தது. வறுமையான தேசத்தில் அதை காட்டியே மதமாற்றம் நிகழ்ந்தது, அதை கவனித்தபடியே வளர்ந்தார் அந்த சுப்பிரமணி.
1960களில் 20 வயது வாலிபனாக அவர் நின்றபோது திராவிட அட்டகாசம் இந்து எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என உச்சத்தில் இருந்தது. அவர்களின் பெரும் நாடகமும் போலி போராட்டமும் மதமாற்றிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது
இந்துமதத்தை கொச்சைபடுத்துதல், அதை பற்றிய மட்டமான தோற்றத்தை உருவாக்குதல், பார்ப்பனர்களை வைதீக முறைகளை சொல்லி அவமானபடுத்தி இந்துமதத்தை இழிவாகவும் வழிபாடுகளை மோசமகாவும் காட்டி காட்டி அவர்கள் ஆட ஆட அதனை மதமாற்றிகள் பயன்படுத்தினார்கள்.
இதையெல்லாம் கவனித்தபடிதான் சுப்பிரமணி வளர்ந்தார், அடிப்படையில் அவர் அம்மன் பக்தர் என்பதால் அம்மனோடு அடிக்கடி இதையெல்லாம் மனதால் பேசினார், இக்காலகட்டத்தில் அவர் பள்ளி ஆசிரியர். மணமும் முடிந்திருந்தது.
திராவிட கூப்பாடு வளர வளர, அதை ஒட்டி மதமாற்றம் வளர வளர சுப்பிரமணியும் அம்பாளின் ஆசியில் மெல்ல வளரத் தொடங்கினார்.
அவருக்கு அம்பாளின் அனுக்கிரகம் கிடைத்தது 1965ல் என்கின்றார்கள், இந்தி எதிர்ப்பு போர் என பெரும் கலவரம் நிகழ்த்தி திராவிடம் தன்னை நிறுத்திய காலத்தில் மெல்ல தன்னை வெளிகாட்ட தொடங்கினார் சுப்பிரமணி.
அவரை அன்னை உருவாக்கிய விதம் இன்றளவும் ஆச்சரியமானது, மாபெரும் திருவிளையாடல் அது. இந்துமதம் காலத்துக்கேற்ற ஞானியரை அவதாரங்களை உருவாக்கும். அது வாதங்கள் மிகுந்த காலத்தில், பவுத்தம் காலத்தில், ஆதிசங்கரரை உருவாக்கிற்று.
மொகலாயர் காலத்தில் வீரசிவாஜியினை உருவாக்கிற்று, பிரிட்டிசாரால் பெரும் அவமானங்களை இந்துமதம் சுமந்த காலத்தில் அது விவேகானந்தரை உருவாக்கிற்று.
ரமணரையும், காஞ்சி மகாபெரியவரையும் அது அப்படித்தான் உருவாக்கிற்று.
அந்த ஞானமதம் தாய் போன்றது, குரு போன்றது. ஒரு குருவைப் போல தன் மாணவன் அறிவும் தகுதியும் அறிந்து அவனுக்கு எடுத்து சொல்லும்.
அது கடைநிலை மாணவனுக்கு பள்ளி முதல் மாணவனுக்குரிய வகையில் பாடம் நடத்தும், கொஞ்சம் அறிவுள்ளவனுக்கு இடைநிலை மாணவன் அளவு சொல்லிக் கொடுக்கும். சிந்திக்க தெரிந்தவனுக்கு பல்கலை கழகம் அளவு பாடம் நடத்தும். ஞானம் இருப்பவன் ஞானத்தை மிக பிரம்மாண்டமாக பிரகாசிக்கச் செய்யும்.
யாருக்கு எப்படி பாடம் சொல்லவேண்டுமோ அப்படி அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து சொல்லிக்கொடுக்கும்.
ஒரு தாய் தன் பிள்ளைகளின் உடல் நலம் அறிந்து இயல்பறிந்து இவனுக்கு இதைத்தான் கொடுக்கவேண்டும் என்பதை அறிந்து கொடுப்பது போல, மானிடரின் இயல்பறிந்து இவர்களுக்கு இப்படி சொல்லிக் கொடுத்தால்தான் புரியும் என்பதை உணர்ந்து சிலரை அனுப்பும்.
ஆதிசங்கரரை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது, ரமணரின் போதனைகள் எல்லோருக்கும் விளங்காது.
பாமரர்கள் பராசக்தியினை புரிந்து கொள்ள பாமர குரு அவசியம், அரசனற்ற தலைவனற்ற காலத்தில் இந்துக்களுக்கென எதுவுமே, யாருமே இல்லாததால் அறியாமையில் சிக்கிய, தங்கள் வரலாறும் பெருமையும் பெரும் ஞானமும் சக்தியும் கொண்ட மதம் பற்றி தெளிவு இன்றி அந்நிய மோகத்தில் எளிதில் ஏமாறும் அப்பாவிகளுக்கு பாமர தோற்றத்தில் ஒரு குரு முக்கியம்.
அந்த குரு தூரத்தில் இருக்க கூடாது, பெரும் நியதியும் கட்டுப்பாடும் கொண்டவனாக இருத்தல் கூடாது. அவனுக்கென கட்டுப்பாடும் விதிகளும் கடும் இறுக்கமும் கொண்டிருக்க கூடாது. மாறாக சாமானியனாக தங்களில் ஒருவன் என மக்கள் அறியும்படி அவர்களில் ஒருவனாக இருந்து வரவேண்டும்.
அதுதான் நிலைக்கும், பெரும் உதாரணம் மகாபாரத கண்ணன். அவன் இன்றளவும் என்றும் வரலாற்றில் நிற்க காரணம், அவன் சமானியனாய் வளர்ந்தான், மக்களுக்குள் இருந்து உருவாகி வந்தான், அப்படித்தான் விவேகானந்தரும் வந்தார்.
இந்த வழியில்தான் அந்த சுப்பிரமணியினை பிரபஞ்சம் தேர்ந்தெடுத்து கொண்டது.
அவரை அறிந்தோர் சொல்வதெல்லாம் கொஞ்சம் ஆச்சரியமானது, ஆனால் மகா உண்மையும் கூட.
இந்துஸ்தானம் சித்தர்கள் பூமி, இந்த சித்தர்கள்தான் இந்துமதம் காக்கின்றார்கள், அப்படியான சித்தர்கள் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் உண்டு, அவர்கள் பிரிட்டிசார் காலம் ஆப்கானியர் காலத்திலும் இருந்தார்கள்.
மதமாற்ற கொடுமைகளை கண்டார்கள், இந்துமதம் சந்திக்கும் அவலங்களை கண்டார்கள், பலகோடி வருடமாக இத்தேசம் காத்துவரும் ஞானமார்க்கத்துக்கான சவாலை உணர்ந்தார்கள், தியானத்திலே அமர்ந்தார்கள் இறைசித்தம் எதுவென புரிந்து கொண்டார்கள், எதிர்காலம் சந்திக்போகும் பேரும் அதிர்ச்சியான காலங்களையும், அப்போது தாங்கள் எப்படியெல்லாம் நின்று தாங்கள் உரிய நேரத்தில் சக்தியாய் எழவேண்டும் என காலம் பார்த்து அமர்ந்திருந்தார்கள்.
அப்படியான சித்தர்களின் அருள், நாக வடிவிலான அம்மன் மூலம் அவருக்கு கிடைத்தது, நாக வடிவ அம்மனும் சித்தர்களும் அவரை எழ வைத்தார்கள்.
மேல்மருவத்தூரில் 21 சித்தர்களின் ஜீவசமாதி உண்டு, அந்த அருள்தான் அவரை எழவைத்து ஒளிவீசிற்று.
1965களில் அவர் வேப்பமரத்து அடியில் அமர்ந்து, அந்த வேப்பமரத்து பால் இனிக்கும் படி துளி தீர்த்தம் கொடுத்து நாகத்தின் ஒரு அசைவுடன் அமர்ந்திருந்தபோது சாதாரணமான சாமியாராக அறியப்பட்டார்.
ஆனால் அந்த சுப்பிரமணி என்னென்ன காரியங்களை சாதிக்கப் பிறந்தவன் என்பதை காலமே அறிந்தது.
சுப்பிரமணி சாமியார் அம்மன் பக்தனாக வளர்ந்த காலத்தில் திராவிடம் ஆட்சிக்கு வந்தது, மதமாற்றிகள் பெரும் உற்சாகத்தோடு அடுத்த சுற்று ஆட்டத்துக்கு வந்தார்கள்.
திராவிட முகமூடியில் பெரும் திட்டத்தோடு கல்வி, மருத்துவம், இந்து அவதூறு என மும்முனை திட்டத்தோடு அவர்கள் வந்தபோது சரியான சவாலாக எழுந்தார் சுப்பிரமணி.
அவருக்கு கூட்டம் பெருகிற்று. அலை அலையாக பக்தர்கள் வந்தார்கள், அவரை தங்கம் அதாவது அம்மன் கழுத்தில் இருக்கும் தங்கம் என கொண்டாடினார்கள்.
தங்கம் என்பதற்கு தெலுங்கில் “பங்காரு” எனப் பெயர்
தெலுங்கு மொழி பக்தர்கள் “பங்காரு, பங்காரு”, அதாவது தங்கத்தை கண்டோம், தங்கத்தை கண்டோம் என சொன்ன அந்த ஆரவாரமே அவருக்கு பெயராயிற்று.
1969ல் இருந்து பங்கார் அடிகளார் யுகம் தொடங்கிற்று, அன்னை தன் சக்தியினை காட்ட ஆரம்பித்தாள், சித்தர்களும் அவருக்கு துணையாக வந்தனர்.
நாகலோக சக்திகளும் அவருக்கு வாய்த்தன, நாகவழிபாடுதான் நோய்கள் தீர்க்கும் பல புதையல்களை கொடுக்கும், அது அவருக்கும் வாய்த்தது.
1970முதல் அந்த சக்தி வெள்ளம் பிரவாகமெடுத்தது, அப்போதுதான் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை தொடங்கி அம்மனுக்கான ஆடிப்பூர விழாவினை பெரிதாக கொண்டாடினார்.
அந்த சித்தர் பீடம் முதலில் கொண்டாடிய விழா அதுதான், அந்த ஆசீர்வாதமே பின்னாளில் அடைமழைபோல் கொட்டியது.
சித்தர் பீட வளாகத்திலே சப்தகன்னியர் சந்நிதியை அமைத்து பக்தர்கள் வழிபட ஏற்பாடுகளைச் செய்தார். மூவேந்தர் காலத்துக்கு பின் சப்தகன்னியர் வழிபாட்டினை தொடங்கியவர் அவர்தான்.
மதமாற்ற கும்பலின் எளிய இலக்காக அப்பாவி பெண்களே இருந்தார்கள், அறியாமையில் இருந்த பெண்களைத்தான் அவர்களால் எளிதில் வளைக்கமுடியும்.
பெண்கள் மனம் அம்மன் சாயல், அந்த மனம் எப்போதும் ஆன்மீகத்தையே தேடும், எப்போதும் பாதுகாப்பை தேடும், பெண்கள் மனம் பக்தியில் அதை உணரும்.
இதனாலே அக்காலத்தில் பெண்களுக்கு தனி இடம் கொடுத்து தெய்வமாக பெண்களைக் கொண்டாடியது இந்துமதம். பெண்களுக்கு எல்லா உரிமையும் அது கொடுத்தது. ஆனால் அந்நிய ஆட்சியிலும் படையெடுப்பிலும் இந்து தர்மம் நெருக்குதலுக்குள்ளாகி அது பெண்களை காக்க போராடியது.
பெண்களை காக்க அது செய்த ஏற்பாடே, அதனை பெண் அடிமைமதம் என மதமாற்றிகளால் சொல்லவைத்தது.
ஒருமதத்துக்கு அரசன் வேண்டும், காவல் அமைப்பு வேண்டும், சட்டதிட்டம் கொண்ட மதசமூகம் வேண்டும். ஆனால் இந்துக்களுக்கு அப்படி இல்லை என்பதால் அங்கே குழப்பம் கூடிற்று. அந்நியர் இதனை வாய்ப்பாக்கி மதமாற்றம் செய்தனர்.
பங்காரு அடிகள் இதனை கவனித்து பெண்கள்தான் இந்துமதக் கண்கள், அந்த பெண்களை இந்துபெண்களாக நிறுத்த அம்மன் வழிபாடு சரியானது என்பதால் அதனை ஊக்குவித்தார்.
அவருக்கு அம்மன் கொடுத்த சக்தியும் சித்தர் அருளும் நாகலோக வரமும் அதை செய்யவைத்தன.
ஐந்தே ஆண்டுகளில் அவர் அம்மனின் மகனாக கொண்டாடப்பட்டார், ஒரு கட்டத்தில் அம்மனின் வடிவமாக அவரை கண்டவர்கள் “அம்மா’ என்றே அழைத்தனர்.
பாரத நாட்டின் அரசன் பாரத மன்னன் என்பது போல, பொன்னிநதி மகன் பொன்னியின் செல்வன் என்பது போல, அன்னையின் மகன் என்பது அம்மா என்றே மாறி நிலைத்துவிட்டது.
1975ல் இருந்து அவர் இன்னும் வேகமெடுத்தார்.
1977ல் ஓலை கொட்டைகையாக இருந்த சித்தர் பீடத்தை, பெரும் பீடமாக மாற்றி சித்தர் பீட வளாகம் அமைய நடவடிக்கை எடுத்தார்.
அவரின் முதல் பெரும் சாதனை பல இடங்களில் அம்மன் ஆலயங்களை ஸ்தாபித்தது. இந்துமதம் வாழ ஆலயங்கள் அவசியம், சிலை அவசியம் அந்த வழிபாடு அவசியம்.
இதனால் அவரே அம்மன் சிலை ஏந்தி சென்று ஸ்தாபிக்கும் காரியங்களை செய்தார், ஊர் ஊராகச் சென்று செய்தார். கற்சிலை ஏந்தி ஊர்வலமாக சென்று ஸ்தாபித்தார். இதுதான் அவருக்கு பெரும் கவனம் கொடுத்தது.
1978-இல் சித்தர் பீட வளாகத்தில் அதர்வண பத்ரகாளி சிலையை கொண்ட சன்னதி ஸ்தாபித்து, பில்லி, சூனியம், பேய் போன்ற தொல்லைகளில் இருந்து மக்களை விடுவிக்கும் பெரும் பணியினை செய்தார்.
இந்துக்களின் மரபான பவுர்ணமியில் அம்மனுக்கு பூஜை செய்யும் மரபை அவரே மீளக் கொண்டு வந்தார்.
1978ல் காஞ்சியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்று 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களுமாக அது வளர்ந்து நிற்கின்றது.
1978லே ஆதிபராசக்தி கல்வி மருத்துவப் பண்பாட்டு அறநிலையம் தொடங்கப்பட்டது. எதெல்லாம் இந்துக்களின் பலவீனமோ அதையெல்லாம் பலமாக்கி மதமாற்றம் தடுக்கபட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர் பங்காரு அடிகளார்.
அதுதான் இன்று பெரும் கல்வி நிலையமாக, இந்துக்களின் கல்வி நிலையமாக வளர்ந்து நிற்கின்றது.
அன்னைக்கான கொடி “ஓம் சக்தி” கொடி 1980ல் அறிமுகமானது.
அவரின் பிரசித்தியான காலம் எம்ஜிஆர் ஆட்சியில் தொடங்கிற்று, எம்ஜிஆர் மிக மதித்த ஆன்மீகவாதி என்பதால் அவரின் ஆட்சியில் பல சலுகைகள் பங்காரு அடிகளாருக்கு வழங்கபட்டன.
மேல்மருவத்தூர் பகுதி தாண்டி அவர் வளரத் தொடங்கியது அப்போதுதான்.
அதனால் 1982ல் முதல் ஆன்மிக மாநாட்டையும், 1982ல் மகளிர் ஆன்மிக மாநாட்டையும் நடத்தினார்.
பின்னும் 1988-இல் இளைஞர் நலன் மேம்பாடு அடைய வேண்டி ஆன்மிக மாநாட்டையும் நடத்தி அதில் திரளான செவ்வாடை பக்தர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் கலந்து கொள்ளச் செய்தார்.
1982ல் கோபிசெட்டிப்பாளையத்தில் ஆன்மிக மாநாட்டை அடிகளார் நடத்தினார். 1983ல் சென்னையில் மகளிர் ஆன்மிக நாட்டை நடத்தினார்.
இந்து மகளிருக்கான குறிப்பிடதக்க முயற்சியாக அதுதான் அமைந்தது.
காஞ்சி காமாட்சி இருக்கும் பகுதியில் பெண்களுக்கான மாநாடு நடத்தியவர், 1984ல் மதுரையில், மீனாட்சி குடியிருக்கும் மதுரையில் இந்து பெண்களுக்கான மாநாட்டை நடத்தினார்.
1988-இல் உலக அமைதி ஆன்மிக மாநாட்டையும், இயற்கை வளம் மேம்பாடு அடைய ஆன்மிக மாநாட்டையும் நடத்தினார்.
இப்படி உலக இந்துக்கள் பெருமையுடன் பார்க்கும் பெரும் இடத்துக்கு சென்றார்.
இதன்பின் அவருக்கு கூட்டமும் காணிக்கையும் குவிந்தன, ஒரு காலமும் தனியாக அவர் காணிக்கையினை தொட்டதில்லை, கோடிகணக்கான பணம் குவிந்தாலும் தன் குழு மூலமே அதனை நிர்வகித்தார்.
பக்தர்கள் கொட்டிக் கொடுத்த பணத்தை அப்படியே இந்துமத வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இருபங்காக பிரித்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.
1990களில் பெரும் கல்விபுரட்சி செய்தார், அது இன்றளவும் தொடர்கின்றது.
பங்காரு அடிகளாரின் மாபெரும் ஆன்மீக புரட்சிதான் இந்துக்களிடையே அவருக்கு தனிபெரும் இடத்தையும் பெரும் மக்கள் கூட்டத்தையும் கொடுத்தது.
இந்துமதம் சொன்ன தத்துவத்தை எளிமையாக பின்பற்ற சொன்னார் அடிகளார், பெண்கள் கருவறையில் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையினை, பெண்களே கருவறையில் பூஜை செய்யும் வழிகளை அவரே திறந்து வைத்தார்.
இந்துமரபில் இது புதிதல்ல, இன்றும் காசியில் எல்லோரும் சிவலிங்கத்துக்கு அர்ச்சனை செய்யலாம், கயாவில் பெண்கள் திதி கொடுக்கவே உரிமை உண்டு.
இன்னும் பல காளி ஆலயங்களில் பெண்கள்தான் பூசாரிகள், பெண்கள் மட்டுமே வழிபடும் ஆலயமெல்லாம் கேரளாவில் உண்டு.
இந்துமரபில் ஆகமவிதிக்கு உட்பட்ட சில பாரம்பரிய ஆலயங்கள் உண்டு. அங்கேதான் சில விதிகளே தவிர மற்றபடி பெண்கள் எக்காலமும் கொண்டாடப் பட்டார்கள். எல்லா உரிமைகளும் வழங்கபட்டன.
அதைத்தான் அடிகளார் மீட்டெடுத்தார், பெண்ணின் அம்சமான அன்னையினை பெண்களே உரிமையுடன் பூஜை செய்ய வழிசெய்தார்.
இதுதான் பெண்களிடையே பெரும் வரவேற்பை கொடுத்தது, தாய் தன் மகளை அழைப்பது போல உரிமையுடன் அன்னை ஆலயத்தில் நுழைந்து வழிபட செய்யச் சொன்னபோது இந்துமத மரபில் பெண்கள் தனி அங்கீகாரம் பெற்றனர்.
அலை அலையாக அவருக்கு பெரும் கூட்டம் பெருகிற்று.
தன் பக்தர்களை “ஒரே தாய் ஒரே குலம்” என அடைமொழியில் அவர் அழைத்தார், சுமார் 52 சக்தி பீடங்களுக்கு கும்பாபிஷேகம் செய்தார், இன்னும் செய்தபணிகள் ஏராளம்.
அவர் எப்படியான நம்பிக்கையினை பெற்றிருந்தார் என்பது வரலாறு முழுக்க தெரிந்தாலும் இரு இடங்கள் முக்கியமானவை.
எம்ஜிஆர் ஒரு அசாத்திய மனிதர், அவர் யாரையும் எளிதில் நம்பமாட்டார், மிகச் சரியான நபர்களை மட்டும் அடையாளம் கண்டு மனதால் உணர்ந்து நம்பிக்கை கொள்வார்.
அவரின் மாபெரும் வெற்றிக்கு அந்த உள்ளுணர்வுதான் காரணம்.
அந்த எம்ஜிஆர் மூகாம்பிகை பக்தர், மூகாம்பிகை மேல் அவருக்கு அலாதி பக்தி, அந்த அன்னையினை தொழச் செல்பவர், அவளை அடுத்து தானே தேடிச் சென்றது இருவரைத்தான்.
ஒருவர் காஞ்சி மகா பெரியவர், இன்னொருவர் இந்த பங்காரு அடிகளார். (கிருபானந்தவாரியாரை அவர் சந்நித்த வகைகள் வேறு, அது முன் அறிவிப்புடன் செய்யபட்டது).
எம்ஜிஆர் தேடிச்சென்று ஆசிபெற்ற முக்கியமான ஆன்மிகவாதியில் இவரும் ஒருவர், அந்த அளவு அவரை எம்ஜிஆர் அம்மன் வடிவாகவே நம்பினார்.
1986, மே 10ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் அன்றைய குடியரசுதலைவர் ஜெயில்சிங்கை வரவழைத்து பங்காரு அடிகளார் செய்த இந்துமாநாடும், அதை தொடர்ந்த யாகமும் பிரசித்தியானவை.
அந்த யாகத்தை பங்காரு அடிகளார் செய்தபோது நேரில் சென்று வாழ்த்தியவர் எம்ஜிஆர்.
எந்த முகத்தை காட்டி திராவிடம் எனும் நாத்திக இந்து துவேஷ கட்சி தமிழகத்தில் இந்து ஒழிப்பை செய்ய நினைத்ததோ, அதே எம்ஜிஆர் எனும் சனாதனவாதியினை கொண்டே மெரீனாவில் யாகம் நடத்தினார் பங்காரு அடிகளார்.
ஆம், நாத்திக பிதாமகன் அண்ணாதுரையின் சமாதி இருக்கும் அதே மெரீனாவில் அந்த இந்து நிகழ்வை செய்து, இந்துமதம் எப்படியான சக்திவாய்ந்தது என்பதை அன்னை சக்தி பங்காரு அடிகள் மூலமே உலகுக்கு உணர்த்தினாள்.
காஞ்சி மகாபெரியவர் பங்காரு அடிகளார் மேல் தனி அன்பு கொண்டிருந்தார் “பங்காரு அடிகள் ஒரு அவதாரம், அம்பாள் தங்கி இருக்கும் உடல்” என அவர் சொன்ன வார்த்தை முக்கால உண்மை.
இந்துக்களின் பெரும் காவலாக, மதமாற்றம் தடுத்து, பெண் உரிமைகாத்து, இந்து வழிபாட்டை பாரம்பரியத்தை காத்து பெரும் பக்தர்களை கொண்ட இந்துசாம்ராஜ்யத்தை அவர் அமைத்திருந்தார்.
இன்று உலகெல்லாம் அவருக்கு பக்தர்கள் உண்டு, ஏகப்பட்ட கிளைகளும் பீடங்களும் அம்மன் வழிபாடுகளும் அவரால் உலகெல்லாம் பரவியிருக்கின்றன.
அன்னை சூடும் குங்குமத்தின் வடிவான சிகப்பு ஆடையில் தன் பக்தி இயக்கத்தை அவர் கட்டியெழுப்பினார். இன்று செவ்வாடை இயக்கம் இந்துஸ்தானின் வலுவான இந்து அமைப்புக்களில் ஒன்று.
உணவு, கல்வி, மருத்துவம், பெண் உரிமை, முழு ஆன்மீகம், சரியான தலமை, சக்திமிக்க வழிபாடு என எதெல்லாம் இல்லாமல் இந்துக்கள் தவித்தார்களோ அதையெல்லாம் செய்து இந்துக்களை இந்துக்களாக வாழவைத்தவர் அவர்.
82 வயதில் அவர் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவர் அமைத்து வைத்த இந்த சக்தி பக்தி சாம்ராஜ்யம் காலம் காலமாக இந்துமதத்தை காக்கும் என்பது நிஜம்.
அந்த ஒரு விளக்கு ஏகப்பட்ட விளக்குகளை ஏற்றி வைத்ததாலேயே இந்துக்களுக்கு இனி அங்கு ஆபத்தில்லை, மதமாற்றத்தை தன் மகனால் முழுக்க தடைசெய்து பெரும் அரண் அமைத்து கொடுத்துவிட்டாள் அன்னை.
பங்காரு அடிகளார் கட்சிக்கு அப்பாற்பட்டவர், அவரின் பல நிகழ்ச்சிகளுக்கு கருணாநிதியும் வந்திருந்த காலமும் உண்டு. எல்லா தலைவர்களோடும் அவர் இணக்கமாகத்தான் இருந்தார். ஆனால் காஞ்சி சங்காராச்சாரியாரை கைது செய்து பெரும் பழி சுமத்தபட்டது போல, பங்காரு அடிகளாரையும் சிக்கவைக்க சதி நடந்தது, 2010ல் பெரும் வருமானவரி சோதனை இதர சோதனையெல்லாம் நடந்து அவரை முடக்க முயற்சிகள் நடந்தன.
இந்து மடங்களை ஒழித்தால் மதமாற்றம் எளிது, இந்து மடாதிபதிகளை முடக்கினால் இந்துமதம் சரியும், ஒரு மோசமான தோற்றத்தை மடாதிபதிகள் மேல் சுமத்தினால் அந்த மடம் முடங்கும் என்பதெல்லாம் யார் கணக்கு என்பதைப் பற்றி சொல்ல அவசியமே இல்லை.
அப்படியான சதியில் பங்காரு அடிகள் குறிவைக்கபட்டாலும் எளிதில் மீண்டார், அவர்மேல் ஒரு குற்றமும் சுமத்த முடியவில்லை.
சுமார் 60 ஆண்டுகாலம் அம்மன் பக்தனாக வாழ்ந்து, ஒரு சர்ச்சையிலும் சிக்காமல், பெண், பொன், சொத்து என எந்த சர்ச்சையிலும் சிக்காமல் அவர் வாழ்ந்து மறைந்துவிட்டார்.
இனி இப்படியான அவதாரங்கள் எப்போது வருவார்களோ தெரியாது, காலமேதான் அவர்களை உருவாக்கும், அவ்வகையில் கண்முன் ஒரு அவதாரத்தை தமிழகம் காத்து கொண்டது.
வடகிழக்கு மற்றும் வடதமிழகம் பெருமளவில் மதமாற்றம் இல்லா பூமியாக இருக்கிறது என்றால், ஓரளவு அங்கு இந்துமதம் மீட்கப்பட்டு உறுதியாக நிற்கின்றது என்றால் அதற்கு அவர் மூலகாரணம்.
சாமானியராக சாமான்ய மக்களிடம் அவர் ஆன்மீகம் பேசினார்.
அவருக்கும் அவரை சார்ந்த மக்களுக்கும் வேதம் தெரியாது, யாகம் தெரியாது, சமஸ்கிருத ஸ்லோகம், தேவாரம் என எதுவுமே தெரியாது.
மந்திரங்கள் பூஜைகள் என எதுவுமே அவருக்கு தெரியாது, அவரை சார்ந்தோருக்கும் தெரியாது.
தெரிந்ததெல்லாம் அதோ அம்மன் கருவறை அங்கே சென்று வணங்குங்கள், அதோ நாகத்தின் புற்று அங்கே பால் ஊற்றுங்கள், அதோ சித்தர் சமாதி அதை வணங்குங்கள். அவ்வளவுதான், அதை நம்பிக்கையொடு செய்தார்கள், இந்துக்களின் மரபுபடி குங்குமம் சூடி செவ்வாடை உடுத்தி செய்தார்கள்.
அம்பாள் தன் மக்களை தன் பக்தன் மூலம் காத்துக் கொண்டாள், மாபெரும் இயக்கம் எழும்பி ஒளிவீசிற்று.
பங்காரு அடிகளாரின் வாழ்வினை நோக்கும் போது அம்பாள் அவர் வாழ்வெல்லாம் இருந்து அவரோடு பயணித்துவழி நடத்தியதை அறியலாம்.
அந்த மகாசக்தியின் அனுகிரகம் இல்லாமல் சுமார் 60 ஆண்டுகள் பக்தர்களின் பெரும் ஆதரவினை பெற்று இப்படியான பெரும் இடத்தை அவர் பெற்று நிலைத்திருக்க முடியாது.
அவரின் பூர்வஜென்மத்தில் அவர் மாபெரும் தொடர்பில் அம்மனோடு ஒரு சித்தராக, ஒரு யோகியாக வாழ்திருக்கவேண்டும்.
மிகச் சரியான காலத்துக்காக அம்பாள் அவரை திரும்ப அனுப்பினாள், அதுவும் 21 சித்தர்கள் சமாதி கொண்ட மேல்மருவத்தூருக்கே அனுப்பினாள்.
அதுவும் சித்தரும் நாகமும் அருள் கொடுக்க அனுப்பினாள், அதனாலே அவருக்குள் எல்லா சக்தியும் குடிகொண்டது.
அவரின் சில அசைவுகளில் நாகத்தின் பாவனைகளும் உண்டு, வாயால் விளக்கேற்றுவது அதில் முக்கியமானது.
அவர் சாதாரண ஆத்மா அல்ல, ஒரு பெரும் சக்திவாய்ந்த ஆத்மா, நாகங்களோடும் சித்தர்களோடும் அன்னையோடும் தொடர்பு கொண்ட பெரும் ஆத்மா ஒன்று மதமாற்றத்திலும் அறியாமையிலும் வீழ்ந்திருந்த இந்துமக்களை காக்க அவதரித்திருந்தது.
இப்போது அவதாரம் முடித்து சென்றுவிட்டது, தேவை ஏற்படின் அது மறுபடி வரும்.
அவர் திரும்ப வரும்வரை அவர் கட்டிய மாபெரும் சாம்ராஜ்யமும் அந்த இயக்கமும் ஆயிரமாயிரம் அடிகளாரை தந்து இந்துமதம் காத்து கொண்டே இருக்கும்.
அவரும் தன் அந்திம காலத்தை குறித்து அறிந்திருந்தார்,
இருவருடத்துக்கு முன்பே அவர் தனக்கான சமாதியினை கட்டி வைத்திருந்தார்.
இந்த நாளில் அவர் அந்த சமாதிக்குள் குடியேற சென்றுவிட்டார், அதாவது 22வது சித்தராக அங்கே அமர்ந்துவிட்டார்.
நிரந்தரமாக அமர்ந்துவிட்டார், இனி அழியா அரூபியாக பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்து இந்துமதத்தை காத்து நிற்பார்.
கொஞ்ச நாட்களாகவே தன் அவதார காலம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது என அவர் தெரிவித்தபடிதான் இருந்தார்.
அதாவது நல்ல இந்துவாக ஆத்மா உடலை உதறுவதை அச்சப்படாமல் எதிர்கொள்ள தயாரான யோக நிலையில்தான் இருந்தார்.
அவர் இனி ஸ்தூல உடலாக உருவமாக இல்லை என்றாலும், செவ்வாடை கட்டிவரும் ஒவ்வொரு பக்தரின் உருவிலும் அவர் வாழ்வார், அவர் தொடங்கிய இந்துமத எழுச்சியும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
அவரின் இந்துமத எழுச்சி, அவர் கொடுத்த அந்த விளக்கு அந்த செவ்வாடை இயக்கத்தாலும் அவர்களின் இந்து பணிகளாலும் ஒளி வீசிக்கொண்டே இருக்கும்.
பரமசிவன் தன் பாதியில் சக்தியினை வைத்தான், ஆனால் அவரோ தன் உடல் முழுக்க அன்னையினை சுமந்து “அம்மா” எனும் வடிவில் நின்றார்.
அந்த பங்காரு அடிகளாரை நோக்கி, இதுவரை இருமுடி சுமந்து சென்ற பக்தர்களெல்லாம் மனம் நிறைய கவலையும் கண் நிறைய நீரும் மதி நிறைய கலக்கமும் கொண்டு செல்கின்றார்கள். லட்சகணக்கான பக்தர்கள் “அம்மா, அம்மா” என அழுது கொண்டிருக்கின்றார்கள்.
அவர் வாழும்போது அவருக்கு அங்கீகாரம் கொடுத்த மிகப்பெரும் பிம்பம் எம்ஜிஆருக்கு அடுத்து மோடிதான்.
மோடி அரசுதான் 2019ல் அவருக்கு “பத்மஸ்ரீ” பட்டம் கொடுத்து அகிலமெங்கும அறிய வைத்தது.
சென்னைக்கு வரும்போது மோடி அவரை நேரில் சந்தித்து அவரை உலகுக்கே அறிவிக்கும்படி கவுரவபடுத்தினார்.
அவ்வகையில் தேசம் அவருக்கு பெரும் அஞ்சலி செலுத்துகின்றது.
தேசம் விடுதலைபெற்றதை கண்டு, இந்து எழுச்சி ஏற்பட்டதையும் கண்டு, ராமர்கோவில் கட்டப்படுவதை, காசி துலங்குவதைக் கண்டு அப்படியே அன்னை அருளில் இங்கே மதமாற்றம் தடுத்து பெரும் இந்துசேனை உருவாக்கிய நிறைவில் அவர் விடை பெற்றுவிட்டார்.
நவராத்திரி அன்று தன் பக்தனை தனக்குரிய பஞ்சமி நாளில் தன்னோடு சேர்த்துக்கொண்டாள் அன்னை.
சிகப்பு ஆடை இருக்கும் வரை அவர் பெயரும் அவர் சேவையும் இருக்கும், குங்குமத்தை தவிர எதையும் அறியா தன் மகனுக்கு அன்னை செய்த பெரும் அங்கீகாரம் அது.
ஒவ்வொரு இந்துவும் பெரும் நன்றி சொல்லி, தாயாய், குருவாய் நின்று அவர் ஒவ்வொரு இந்துவுக்கும் செய்த அற்புதங்களைச் சொல்லி, இந்துக்களுக்கு தனிபெரும் கவுரவம் தந்த கடமைக்கு நன்றி சொல்லி, கரங்கள் கூப்பி, கண்ணீர் பெருகி அன்னை தங்கியிருந்த அந்த பூத உடலுக்கு விடைகொடுக்கின்றது பெரும் இந்து சமூகம்.
கண்களை திறந்து வைத்து, ஞானப்பால் ஊட்டி இந்துக்களை வளர்த்த அந்த பெருமகனுக்கு தாயாய் நின்று தான் எழுதருளிய ஞானமகனுக்கு இந்துமக்களின் தேசம் தீபமேற்றி அஞ்சலி செலுத்துகின்றது.
நவராத்திரி மாலை வைக்கும் ஒரு விளக்கு அவருக்காய் இருக்கட்டும், அன்னையின் அருள் எல்லா வீட்டிலும் வந்து நிறையட்டும், அன்னைக்காக வாழ்ந்த ஆன்மா சாந்தி அடையட்டும். அவள் பாதம் அடையட்டும்.