ரகுவம்ச மஹாகாவியம்
கம்பனின் வரிகள் பலரும் அறிந்தது, அதே நேரம் காளிதாசன் ராமனைப் பற்றி சொன்ன வரிகளும் சாதாரணம் அல்ல, ராமனுக்கான இந்நாளில் மகாகவி காளிதாசன் தன் அழகான உவமைகளால் வர்ணனைகளால் ராமன் வாழ்வின் பல காட்சிகளை எப்படி சொன்னான் எனக் காணலாம்.
அவை எல்லாம் அழகு, தெய்வீக அழகு, அதை படிப்போர் மனதில் ராமனை தெய்வீகமாய் எழ வைக்கும் பெரும் அற்புதமான அழகு.
ராமன் ஆட்சி பற்றிச் சொல்கின்றான் காளிதாசன்.
“காற்று! இரவும் பகலும் இயங்குகிறது அதனின் இயக்கம் எப்போதேனும் நிற்பதுண்டோ?
காற்று வீசுவதில் வேறுபாடு காண்பதில்லை. யாவருக்கும் ஒரே வகையில் வீசுகிறது “
ராமனின் ஆட்சி அத்தகையதே எனும் காளிதாசன் அவனை ஏன் சூரியவம்சத்தவன், ரகு வம்சத்தவன் என கொண்டாடுகின்றார்கள் என்பதை அழகாகச் சொல்கின்றான்.
“ஆறில் ஒரு பங்குப் பொருளை வரியாகப் பெறும் அரசனுடைய அறமும் அவ்வாறே அரசினை ஏற்றபின் அவன் கடமையில் சோர்வதில்லை, கைவிடுவதில்லை அனைவருக்கும் ஒப்பப் பயன்படுகிறான்.
அவன் உள்ளவரை உலகத்தைக் காப்பதற்குத் தன் கடமையைச் செய்கிறான்.
ஞாயிறு தன் ஆயிரம் கதிர்களால் பல இடங்களிலிருந்து நீரை கொள்கிறான் நீரை எடுக்கையில் நீர்நிலைக்கு ஊறுசெய்வதில்லை. எடுத்த நீரை தூய மழையாக, வாழ உலகில் பெய்கிறான். நாடு செழித்து வளம் பெறுகிறது.
பெற்ற வரிகளிலிருத்து அரசனோ, எடுத்த நீரினின்று ஞாயிரோ, தனக்கென எள்ளளவும் பயன்கொள்வதில்லை:
வரி கொண்ட இடமும், நீர் மொண்ட இடமும் மட்டும் அன்றி, எல்லா மக்களுமே ஒருசேரப் பயன் துய்க்கின்றனர், ஞாயிறு வாழ்வும் அரசன் வாழ்வும் மக்களுக்காகவே”
ராமன் ஏன் ரகுவம்சம் என்பதை இன்னும் தொடர்கின்றான் காளிதாசன்.
“செங்கதிர் ஒளியால் இருள் அகல்கிறது; மக்கள் தத்தம் தொழிலைச் செய்யவும், நெறியை அறியவும் ஒளி உதவுகிறது, ராமனும் அப்படிப்பட்டவன்.
ஆனால் ஞாயிறோ மக்களை “இன்ன செய்” என்றோ, “இவ்வழியில் போ” என்று ஆணை இடுவதில்லை. ராமனும் அவ்வாறே.
அரசனாக அவன் மக்களுக்கு அறிவு புகட்டினான், அவர்களிடம் உண்மையையே சொன்னான்.
அவர்களுடைய ௮க இருள்அகன்றது; பாவங்கள் அழிந்தன. அரசனது ஒழுக்கத்தை மக்கள்அனைவரும் கண்டனர், அதைப் பின்பற்றி உயர்ந்தனர்”
ராமனை பற்றிச் சொல்லும் போது அவனின் பெரும் கீர்த்தி அவன் முன்னோரால் வந்து அவனிடம் பூர்த்தி அடைந்தது என்பதையும் காளிதாசன் சொல்லத் தவறவில்லை.
அதை அழகாகச் சொல்கின்றான்.
“வேனிற் காலத்தில் மாமரம் பூக்கிறது. பூ மணம் உடையது, அந்த மாமரத்து பூ காமன் அம்புகளில் ஒன்றாகும்.
அந்த பூ மறைந்து பிஞ்சு தோன்றுகிறது. காயாகிப் பழமாகிறது, மணம், சுவை கொள்கிறது. பழம் வந்தபிறகு எவரே பூவைப்பற்றி எண்ணுவர்?
பூவே பழம் ஆயிற்று என்று கூட யாரும் எண்ணுவதில்லை.
அப்படி ராமன் கிடைத்ததும் தசரதன் முதலான அவன் முன்னோர்களை எல்லோரும் மறந்தே விட்டனர்”
ராமனின் குருவான விசுவாமித்திரரை பற்றி காளிதாசன் அபாரமாகச் சொல்கின்றான்.
“விசுவாமித்திரன் சூரிய காந்தக்கல், அவனிடம் படைக்கலங்கள் இருந்தன. எனினும், அவற்றை இயக்க அவனால் இயலாது.
இராமன் சூரியக் கதிர், படைக்கலங்களை அவனிடம் அருளியதால் அவை இராமன் ஏவின படி செய்து நின்றன; அறந்தலை நிறுத்தவும் அரக்கரை அழிக்கவும் ஆற்றல் பெற்றன.
ராமன் இல்லாமல் விசுவாமித்திரருக்கு கீர்த்தி இல்லை என்பதை அழகான உவமையுடன் பாடுகின்றான் காளிதாசன்.
அடுத்து ராமன் சீதைக்கு அயோத்தியினை காட்டும் காட்சியினைச் சொல்கின்றான்.
புஷ்பக விமானத்தில் சீதையுடன் இலங்கையிலிருந்து திரும்பும் இராமன் தூரத்தில் விமானம் வரும்போது சொல்கின்றான்.
“அதோ சரயூ நதி, அவளே என் தாய், என் தந்தையால் கைவிடப்பட்டாள், துணை அற்றிருந்தாள்; இன்று, குளிர்ந்த காற்றுடன் கூடிய தன் அலைகள் என்னும் கைகளை நீட்டி என் தாய் என்னை அணைக்க விரும்புகிறாள்.”
ராமன் அவதாரக் காட்சியினை அழகுறச் சொல்கின்றான் காளிதாசன்.
“கருவுற்ற பெண்ணுக்கு மண்ணைத்தின்ன மசக்கை எழுவதுண்டு. அரசிக்குப் பலவகை உணவுகள் கிடைக்குமெனினும், அவள் (கோசலை) மண்ணை உண்ண விரும்பினாள். ஏன்? தன் கருவில் வளரும் குழந்தை ஒரு காலத்தில் இந்த மண்ணுலகம் முழுவதும் ஆளப்போகிறான்; கருவிலேயே மண்ணுலகின் சுவையையும் அவன் அறியட்டுமே, என்பதனாலே.
செல்வங்களுக்கு உறைவிடம் நிலம். உழைப்பால், நிலத்தின் செல்வங்கள் உணவுப் பொருள்களாகவும், கனிப்பொருள்களாகவும் வெளிப்படும். அவ்வாறே தீயில் வீரமும், நீரில் தூய்மையும் உள்ளன.
நிலம், நீர், தீ ஆகிய மூன்றிலும் பொதிந்துள்ள ஆற்றல்களைப் பாதுகாத்து, உரிய காலத்தில் வெளிக்கொணர்ந்து குடி உயருவதற்கு இயக்க வேண்டும்.
வளத்தையும் வீரத்தையும் தூய்மையையும் தாங்கி இருப்பவள் அரசி கோசலை.
அவள் கர்ப்பமுற்று இருந்தபோது உடல் வனப்பு புலப்பட வில்லை. தற்போது மெல்லிய வயிற்றை உடைய கோசலை வெண்மையான விரிப்புள்ள அகன்ற படுக்கையில் கிடக்கிறாள்.
அவள் இராமன் தாமரை மலர் போல அப்பாயலில் காணப்படுகிறான்”
நிலம் நீர் செய்யும் யாகம் பொறுத்து ஒரு நாடு வளமாக இருக்கும், அப்படி வளமான நாட்டின் சிறந்த அரசி பெற்ற மகனாக ஞானமகனாக ராமன் அவதரித்ததை உருவகமாகச் சொல்கின்றான் காளிதாசன்.
ராமன் சென்ற பின்னும் அவன் திரும்ப வரும்போதும் இருக்கும் அயோத்தி நிலை பற்றிச் சொல்கின்றான்.
“அரசனாகிய தன் மாமனார் இல்லாவிடினும் மருமகள் அது தன் மாமனாரின் நாடு என வழிபடுவார்கள். அப்படி ராமன் இல்லை என்றாலும் மக்கள் அவன் நினைவாக அந்த நாட்டை அர்ச்சித்து வந்தார்கள்.
தலைவனைப் பிரிந்த நங்கை அயோத்தி மாநகரம், இராமன் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் திரும்பியபோது அந் நகர மாந்தர் நகரை அணி செய்கின்றனர்; அகில்புகை கமழுகிறது.
அப்புகை மாளிகைகளின் கூந்தலைப்போல ௧ரு நிறத்ததாக மேலே எழுகிறது.
மேடையிலே வீசுகின்ற பூங்காற்றில் அப் புகை சுருண்டு அயோத்தி நங்கையின் வகிர்ந்த, அறல் துன்னிய, குழல்போல விளங்குகிறது”
சீதையின் வாழ்வு துயரம் மிகுந்தது, அந்த வலியினை சீதை சொல்வது போலே அழகாகச் சொல்கின்றான் காளிதாசன்.
“சீதையின் அழகு வனத்திற்குச் சென்றதால் வாடவில்லை அநுசுயை அளித்த மாலை, அணிகலன்கள், ஆடை, சந்தனம், முதலியவற்றால் அவள் முன்னிலும் பொலிவுற விளங்கினாள்.
அரசியாக இருக்கவேண்டிய சீதையைப் போலவே காட்டில் இருந்த சீதையும் காணப்பட்டதால், மக்கள் அவளை இராமன் குணங்களில் ஈடுபட்டு அவனுடன் காட்டுக்குச் சென்ற அரசத் திருமகள் என்றே கருதினார்கள்.
ஆனால் சீதை என்ன சொன்னாள்?
அரச திருமகள் நான் அல்ல, அவள் அயோத்தியிலேயே இருந்தாள். இராமன் தன்னைப் புறக்கணித்துச் என்னோடு காட்டுக்குச் சென்றதற்காக கறுவிக்கொண்டு இருந்தாள்.
பதினான்கு ஆண்டுகள் கழிந்தன,இராமன் அயோத்திக்குத் திரும்பி என்னோடு பட்டாபிஷேகம் செய்துகொண்டான். அரசத் திருமகளுக்கு இது பொறுக்கவில்லை.
தன்னை பதினான்கு ஆண்டுகள் இராமனை ஏகபோகமாக அநுபவித்ததுபோல தான் இனியேனும் இராமனை ஏக போகமாக அனுபவிக்க வேண்டுமென எண்ணி உலக அபவாதத்தைக் காரணமாகக் காட்டி, தன்னை காட்டுக்குத் துரத்திவிட்டாள் அரச திருமகள் எனும் ராஜலட்சுமி”
அனுமன் கடலை தாண்டியதை அழகுற சொல்கின்றான் காளிதாசன், அனுமன் ஒரு பிரம்மசாரி சன்னியாசி என்பதை கலந்தே சொல்கின்றான்.
” “தான்” “எனது” என்னும் பற்றைத் தவிர்த்தவன் வாழ்க்கை என்னும் கடலைத்தாண்டுவதுபோல அனுமன் கடலைக் கடக்கப் பாய்ந்தான்.
ராமன் ராவணன் யுத்தத்தை சான்றோர்கள் செய்யும் வாதமாகவே பொருந்திச் சொல்கின்றான் காளிதாசன்.
அதாவது ராமனும் அறம் அறிந்தவன், ராவணனும் சிவபக்தன் இருவரும் மோதிக்கொண்ட யுத்தம் இரு சாஸ்திரிகள் செய்த தர்க்கம் போலவே இருந்தது என்கின்றான்.
உண்மையை அறியத் தர்க்க முறை இன்றியமையாதது. பல முரண் கருத்துகள் உதிக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை கருத்தின் அகத்துள் பொதிந்துள்ள முரண்பாட்டால் தகர்ந்து போகும். சிலவே தெளிவுள்ளதாக வலியுள்ளனவாக, நிற்கும்.
அத்தகைய கருத்தை எடுத்துரைப்போர். தம் நிலை, அதற்கு எதிர்நிலை, குறிக்கோளை அடையும் வழி ஆகிய யாவற்றையும் தொகுத்து உரைப்பர். எதிர்க்கருத்தை வலியுறுத்துவோர் தம் நிலை, முற்கூறினோர் நிலை, தம் குறிக்கோளின் சிறப்பு, தம் நெறி ஆகிய யாவற்றையும் தொகுத்துக் கூறுவர்.
இருவரும் உண்மை காண விழைபவரே. இவ்விரு தொகுப்புகளிலிருந்தும் ஏற்க வேண்டியதை ஏற்று, நீக்கவேண்டியதை நீக்கினால், புதிதாக இணைப்புக் கருத்துத் தோன்றும்.
இராம – இராவண யுத்தம் அத்தகையது. இருவரும் இவ்வாத முறையைக் கையாண்டனர். ஒருவருடைய படைகளை மற்றவர் வென்றார். வஞ்சனைப்போரில் இறங்கவில்லை. ஒரு படை அழிந்தால் வேறு உயர்ந்த படைகளைக்கொண்டு சாடினார்.
இருவரும் காலத்தை வீணாக்கவில்லை, பயனில செய்யவில்லை; எண்ணாது துணியவுமில்லை. தம் பகைமைக்கு விரைவில் முடிவு காண்பதிலேயே ஊக்கம் செலுத்தினர்”
இப்படி ராமன் அறவழிப் போரை நடத்தினான் எனச் சொல்லும் காளிதாசன் ஒரு இடத்தில் வியக்க வைக்கின்றான்.
இன்றைய மருத்துவம் சொல்லும் உண்மைகளை அன்றே தன் ஞானத்தால் அறிந்து ராமனை ஒரு அறுவை சிகிச்சை வைத்தியனாக பாவித்துச் சொல்கின்றான்.
“உடலுக்கு ஒவ்வாததொன்று புகுந்து விட்டது, அதை அகற்ற உடலின் மற்ற உறுப்புகளினின்று வெண் குருதிக் கணங்கள் படையெடுக்கின்றன. அவற்றால் அகற்ற முடியாவிட்டால், சீழ் உண்டாகிப் புரை ஓடி, நாளடைவில் உடல் முழுவதும் அழிகிறது.
சீதையின் துன்பத்திற்கு மூலம் இராவணன் நெஞ்சில் இருந்தது. இராமனுடைய அம்பு என்னும் மருந்து இராவணனுடைய உடலில் புகுந்து, அவனுடைய நெஞ்சிலிருந்த தகாத ஆசை என்னும் அம்முனையை வெளியேற்றியது”
கைகேயி பற்றி சொல்லும் உவமையில் அதிசயிக்க வைக்கின்றான் காளிதாசன்.
“நிலத் தாய் நமக்கு உணவு தந்து வளர்ப்பவள், எல்லையற்ற கருணையும் பொறுமையும் உடையவள், அவள் அகம் குளிர, மேனி குளிர, மழையும் பெய்தது. மழைநீர் புற்றுக்களில் புகுந்து அங்கிருந்த பாம்புகளை வெளியேற்றி விட்டது. அவை சீறி வருகின்றன.
பாம்பின் சீற்றத்துக்கு நிலம் காரணம் என சொல்லமுடியுமா?
அப்படி கைகேயி இயற்கையாகத் தூயவள், அருளுள்ளம் கொண்டவள்; இராமன் வளர்ந்தது அவள் மேல் தசரதன் ௮ன்பு மழை பொழிந்தனன்.
ஆனால், கைகேயியிடமிருந்தே இரு நச்சுப்பாம்புகள் புறப்பட்டன, அவை கொடியன, ௮வை தசரதனைக் கடித்தன, அவற்றின் நஞ்சு அவன் மாயக் காரணமானது.
அச் செயலுக்குக் கையேயியா காரணம்? இல்லை, எது விதியோ அது நடந்தது”
அயோத்திக்கு ராமன் வரும்போது அவனுக்கு யுத்தத்தில் உதவிய வானரங்களும் வந்தன, அந்தக் காட்சியினை சொல்கின்றான் காளிதாசன்.
“குரங்குப் படைகள், இராமனுடன் இலங்கையிலிருந்து அயோத்திக்கு வந்தன. இராமன் அவற்றிற்கு நகரமாந்தர்க்கு உரிய ஆடை, அணிகளைத் தந்து அலங்காரம் செய்வித்தான்.
முடிசூட்டும் ஊர்வலத்தில் குரங்குகள் யானைகளின் மேல் நகரத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டன.
குரங்குகள் யானை ஏறி அறியா, எனினும், மலைகளில் ஏறிப் பழகியன. ஆகையால் தாம் மலைகளின் மேல் செல்வதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தன.
ஏன் என்றால் “யானைகளின் உயரமும் பருமனும் மலைகளை ஒத்தன; அவை பொழியும் மதநீர் மலை வீழ் அருவிகளை ஒத்தது. குரங்குகள் தம் இயற்கைச் சூழ்நிலையில் இருப்பனவாக எண்ணின”
ராமன் ஏன் ராவணன் மேல் போர் தொடுத்தான் என்பதை அழகான உவமை மூலம் சொல்கின்றான் காளிதாசன்.
அது ராவணனின் நாட்டை அபகரிக்க நடந்த போர் அல்ல, தன் மனைவியினை மீட்டு தன்னை நிரூபிக்க வேண்டிய போர், தன் மக்களை காக்க தான் தகுதியானவன் என்பதை காட்டவேண்டிய போர்.
ஆக ராமன் ராவணன் நாட்டை பிடிக்க போர் செய்யவில்லை, தன்னை மிதித்தவனை பாம்பு திருப்பி கடித்துவிட்டு நகர்வது போல் அவனை அழித்துவிட்டு அவன் போக்கில் சென்றான் என்பதை வெகு அழகாகச் சொல்கின்றான்.
“ஒருவன் பாம்பை மிதித்து விடுகிறான்; உடனே பாம்பு அவனைக் கடிக்கிறது. அது அவன் குருதியைக் குடித்துத் தன் பசியையோ தாகத்தையோ தீர்த்துக்கொள்ளுவதற்காக அன்று. மாறாக அவனால் பட்ட தாக்கத்தைப் பொறுக்காது தன் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே.
அவ்வாறே இராவணன் சீதையை வஞ்சனையால் கவர்ந்தான், அது இராமன் வில்லிற்கு இழுக்கு, அவன் அரச குலத்துக்கு இழுக்கு, இதை இராமன் தான் பட்ட அவமானமாகவே கருதினான். தனக்கு உண்டான பழியை மீட்கும் பொருட்டுப். படைகளைக் கூட்டி, கடலைத் தூர்த்து, இராவணனைச் குலத்தோடும் களைந்தானே அன்றி அவன் நாட்டை பிடிப்பதற்காக அல்ல.
அதனாலே அவனை அழித்துவிட்டு தன் போக்கில் அயோத்தி திரும்பினான்”
எவ்வளவு அழகான் உவமை.
இன்னும் சீதையினை மீள அயோத்திக்கு அழைத்து வரும்போது ஒரு அழகான காட்சியினை காட்டி தங்கள் திருமண கால நினைவுகளை சொல்கின்றான் ராமன். அதை காளிதாசன் சொல்கின்றான்.
“காட்டில் கோடையால் நிலம் வெந்து பிளந்திருக்கிறது. அதில் முதல் மழைத்துளிகள் வீழ்தலால் மண்ணின் மணத்துடன் கூடிய ஆவி எழும்புகிறது. அவ் ஆவி செங்காந்தள் முகையின் மேல் படுகிறது.
அந்த ஸ்பரிசத்தில் பூ விரிகிறது”
நீருக்கு காத்திருக்கும் நிலம் போல ராமனுக்காக சீதை காத்திருக்கின்றாள், அவன் மழையாக வந்தான் என்பதை இன்னும் லாவகமாக சொல்கின்றான் காளிதாசன்.
அந்த வில் நிலம் பிளப்பதை போல் இரண்டாக உடைந்து விழுகின்றது, எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் எழுகின்றது, அந்த ஆரவாரம் சீதையினை தொட்டபோது அவளுக்குள் ராமன்பால் பெரும்காதல் எழுகின்றது, அவள் மனம் அவன்பால் மலர்கின்றது”
அயோத்திக்கு ராமன் திரும்பும் காட்சியினை சொல்கின்றான் காளிதாசன்.
“இராம இலக்குமணரைக்கண்ட அவர் தாய்மார்கள் கோசலையும் சுமித்ரையும், பதினான்கு ஆண்டுகள் அவர்களைப் பிரிந்ததால் உகுத்த சோகக் கண்ணீர் வெம்மையானது.
இராம இலக்குமணரைக் கண்ட மகிழ்ச்சியால் உண்டான கண்ணீர் தண்மையானது. இமயத்திலிருந்து வந்த பனிநீர் வெந்நீரைத் தண்ணீர் ஆக மாற்றுவது போல, தாய்மாரின் ஆனந்தக் கண்ணீர் சோகக் கண்ணீரைக் குளிர்வித்தது”
கம்பனின் ராமாயணம் போல் காளிதாசனின் ரகுவம்ச உவமைகளும் வர்ணனைகளும் அசாத்தியமானவை.
செந்தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்கள் போன்றவை, அந்த கண்களுக்கு அழகானவை இனியவை ராமனைப் பற்றி கம்பனும் காளிதாசனும் பாடிய அற்புத வரிகள்.
அயோத்தி துலங்குவது போல் கம்பனும் காளிதாசனும் துலங்கட்டும், அதில் ராமபிரான் விஸ்வரூபமாக எழுந்து நிற்கட்டும்.