ரம்பை திரிதியை

இந்துக்களின் பண்டிகையும் விரதகாலங்களும் ஆயிரமாயிரம் பொருள் கொண்டவை, ஒவ்வொரு மானிடருக்கும் ஏகப்பட்ட போதனைகளை தருபவை.

மாந்தர்க்கு போதனைகள் நிரம்ப தரும் அம்மதம், வாழ்வின் ஆதாரமும் உலகை இயக்குபவர்களுமான பெண்களுக்கு ஏகப்பட்ட போதனைகளைத் தந்தது.

சாவித்திரி விரதம் போன்ற ஏகப்பட்ட விரதம் மூலம் போதனைகளை சொன்ன அம்மதம், சீதா, திரவுபதி எனப் பலர் மூலமாக பல பாடங்களைச் சொன்ன மதம், பெண்களுக்கு ஏகப்பட்ட படிப்பினைகளை தந்தது.

புராணங்களில் நடந்ததும் அவதாரங்களில் நடந்ததும் மானிடருக்கு வழிகாட்டவே என்பதை மிக இயல்பாகச் சொன்னமதம் இந்துமதம்.

பெண்களுக்கு அது ஒவ்வொரு புராணத்தையும் சொல்லி பாடம் கற்று கொடுத்து அதன்படி வாழ வழி பல சொன்னது.

ஆயிரம் ஆசிரியர்கள் நடத்தவேண்டிய பாடத்தை புராணம், இதிகாசம் என சொல்லிக் கொடுத்தது.

அதன் ஒவ்வொரு புராண பாத்திரங்களும் ஒவ்வொரு வகை பேராசிரியர்கள், அனுபவ ஆசிரியர்கள்.

அப்படி இந்துக்கள் சொன்ன ஒரு பாடம்தான் ரம்பை திரிதியை. ஒரு பெண் எப்படியான குணங்களை கொண்டிருக்க வேண்டும் எனும் போதனை அது.

ரம்பை என்பவள் அழகும் வனப்பும் செல்வாக்குமிக்க அப்சரஸ் கூட்டங்களின் தலைவி, பாற்கடலை கடையும் போது அப்சரஸ் பெண்கள் தோன்றினார்கள் என்பது புராணம்.

இவர்கள் அப்சரஸ்கள் என்பது வடமொழி சமஸ்கிருதம் சொல்வது, அரம்பையர் என தமிழ் மொழி சொல்லும்.

அப்ஜம் என்றால் தாமரை, சரஸ் என்றால் தடாகம், தடாக தாமரை போல அழகானவர்கள் என்பது அப்பொருள்.

இவர்கள் மிக மிக அழகானவர்கள், வசீகரமானவர்கள், யாரும் மயங்கும் அளவு பெரும் அழகிகள், ஆடல் பாடலில் வல்லவர்கள்.

ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி என பலர் அங்கு உண்டு.

இவர்களின் தலைவியான ரம்பைக்கு தானே அழகி தானே பெரியவள் எனும் கர்வம் வந்தது, காரணம் அவள் தேவேந்திரனான இந்திரனையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள்.

அப்படிபட்டவள் கர்வத்தை அடக்க சிவன் சித்தம் கொண்டார். அதன்படி காட்சிகள் நடந்தன‌.

ஒரு நடனப்போட்டியில் மிக கர்வமாக அவள் ஆட, அவளின் அனிகலன்கள் விழுந்தன. அதனால் அவள் ஆட்டத்தை நிறுத்தினாள், அது அவமானமாய் போனது. எல்லோரும் சிரித்தார்கள்.

தான் எனும் அகந்தையில் ஆடியவள் அவமானமடைந்தாள், அந்தப் போட்டியில் அவள் தோற்றதாக சொல்லப்பட்டு அவள் தலைமை பதவி பறிபோனது.

அவள் அழகும் வனப்பும் நீங்கிற்று. அவளின் விசேஷ அழகுகளும் அணிகலன்களும் பறிக்கப்பட்டன‌.

தன் கர்வத்தால், தன் அதீத ஆட்டத்தால் எல்லாம் இழந்ததை நினைத்து வருந்திய அவள் சிவனை வேண்டினாள், சிவனோ சக்தியினை வழிபடச் சொன்னார்.

அப்போது கௌரி தேவியாக அவதரித்திருந்த அன்னைக்கு பணிவிடை செய்ய பூமிக்கு வந்தாள் ரம்பை. ஒரு வேலைக்காரியாக நின்று அவள் பணிவிடை செய்ததில் உரிய காலத்தில் அவள் சாபம் தீர்ந்தது.

இதுதான் ரம்பை திரிதியை வரலாறு.

இது வைகாசி மற்றும் கார்த்திகை அன்று வளர்பிறை திருதியை ‘ரம்பா திருதியை’ என கொண்டாடப்படும், அவ்வகையில் இன்று கார்த்திகை வளர்பிறை திருதியை.

இது வெறும் புராணம் அல்ல, வெறும் கதை அல்ல, என்றோ எங்கோ நடந்த விஷயம் அல்ல, இது பாடம். பெண்களுக்கான பெரும் பாடம்.

அழகு, செல்வாக்கு என பெரும் தலைகணத்தோடு கர்வத்தோடு இருத்தல் தவறு, அந்த நினைப்பில் தானே பெரியவள் என ஆடித் தீர்த்தல் தவறு.

அந்த அகங்காரம் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும், அது பெரும் வீழ்ச்சியினை கொடுக்கும்.

ஆனால் அந்நிலையில் தன் கர்வம் உணர்ந்து, தன் தவறை உணர்ந்து, அன்னையிடம் வேண்டினால் அந்த மகாசக்தியிடம் வேண்டினால் இழந்ததை பெறலாம் எனும் பெரும் பாடம் அந்த ரம்பையின் வாழ்வு.

எல்லா மானிடரும் பலவீனம் நிறைந்தவர்கள், தவறும் அறியாமையும் எல்லோரிடமும் உண்டு, அந்நிலையில் கர்வமும் அகங்காரமும் கொண்டு தவறு செய்தல் இயல்பு.

ஆனால் அதன்பின் தன்னை உணர்தல் வேண்டும், தன் தவறை உணர்ந்து எல்லா அழகும் வரமும் வாழ்வும் தெய்வ அனுகிரகம். தெய்வத்தால் மட்டும் வாழ்ந்தோம். நம்மால் ஏதுமில்லை எனும் அந்த ஞானம் வரவேண்டும்.

நமக்கு வரும் எல்லா சோதனைகளும் நாம் தெளிவடைய, நம் அகங்காரம் நீக்க எனும் அந்த உண்மை தெளிய வேண்டும்.

அப்படி தெளிந்த மனதோடு அன்னையினை அண்டினால் இழந்ததை எல்லாம் பெறலாம், பன்மடங்கு திரும்பப் பெறலாம். ஆனால் அதன்பின் மிகப் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த ரம்பை திரிதையின் பொருள்.

இந்நாளில் வாழை மரம் நடுவே ரம்பையினை ஆவாஹனம் செய்து வழிபடுதல் மரபு, வாழை என்பது வம்சம் வம்சமாக கன்றுகளைத் தந்து வாழவைப்பது, வாழும்போது பல பலன்களை கொடுத்து கடைசியாக வளைந்து ஒரு தார் கொடுத்து ஏகப்பட்ட கன்றுகளை விட்டுவிட்டு மறையக் கூடியது.

ஒரு குலை தள்ளும் வாழை போல, ஒரு பெண் பணிவு கொண்டிருக்க வேண்டும், பலவகையான நற்பண்புகளுடன் தன் குலத்தை தரணியில் நல்லவிதமாக விட்டுச்செல்ல வேண்டும், பெண்ணும் வாழையும் ஒன்று.

அவள் வாழ குலம் வாழும், அவள் ஆடிச் சரிந்தால் குலம் சரியும், பெண் என்பவள் அகங்காரம் நீக்கி தன் குலத்துக்காக பல சிரமம் தாங்கி வாழவேண்டும். அதற்கான சக்தியினை தெய்வம் கொடுக்கும்.

ஆற்றங்கரை வாழை செழித்து வளர்வது போல, தெய்வத்தை நம்பிய பெண் செழித்து வாழ்ந்து தன் குலத்தையும் வாழவைப்பாள் என்பதே அந்த ரம்பை திரிதியையின் போதனை.

இன்று இந்துமரபில் குடும்பப்பெண்கள் விரதமிருந்து வேண்டுவார்கள், தங்கள் குலம் வாழவும் இழந்ததையெல்லாம் பெறவும் விரதம் இருந்து, தானம் செய்து வழிபடுவார்கள்.

அந்த மரபு இந்துக்களிடம் உண்டு. ஆனால் அட்சய திரிதியை பிரசித்தியான அளவு ரம்பை திரிதியை பலருக்குத் தெரியாது.

இந்துக்களின் பெரிய பலவீனம் தங்கள் மரபை அறியாமல் இருப்பது. தாங்கள் யாரென புரியாமல் இருப்பது.

அவர்கள் தங்களை அறிந்துகொள்ள, இம்மாதிரி நாட்களின் தாத்பரியத்தையும் அதன் உட்பொருளையும் அறிந்து உரிய அவதானங்களுடன் அந்த நாட்களை சிறப்பிக்க வேண்டும், அது அவர்களை இந்துவாக உணரச் செய்யும். பெரும் காவலும் பலமும் கொடுக்கும், எந்நிலையிலும் அவர்கள் இந்துக்களாய் இருப்பார்கள், தேசம் அவர்களால் பலமும் நலமும் பெறும்.

குலம், குடும்பம் மட்டுமல்ல, கலாச்சாரம் மதம் பண்பாடு தேசம் என எல்லாமும் காக்கும் பெரும் கடமை பெண்களுக்கு உண்டு. அவர்களால்தான் சரியான சமூகத்தை உருவாக்க முடியும், அதனாலே இந்துமதம் ஏகப்பட்ட சம்பிரதாயங்களை, வழிபாடுகளை, போதனைகளை பெண்களுக்கே கொடுத்தது.

பெண்கள் சிறந்தால் அச்சமூகம் சிறக்கும்.

அதன்படி இந்து பெண்கள் தங்கள் மதம் சொன்ன எல்லா மரபுகளையும், நல்ல போதனைகளையும், விரத வழிபாடுகளையும், அதனுடனான போதனைகளுடன் பாடங்களுடன் மீட்டெடுத்து பின்பற்றுதல் நலம், அதுதான் சரியான தேசப்பணி.