வரலெட்சுமி நோன்பு / வ்ரதம்
இந்து பெண்களின் மிக முக்கிய நோன்புகளில் ஒன்று வரலெட்சுமி விரதம். அது இன்று அனுசரிக்கப்படுகின்றது.
உலகிலே பெண்களுக்கு உரிமை கொடுத்து, அவர்கள் தனித்துவமும் மகத்துவமும் பேண பல வழிகளை செய்த ஒரே ஒரு மதம் இந்துமதம். வேறு எங்கும் அப்படி ஒரு ஏற்பாட்டை பார்க்க முடியாது.
இந்துமதம் அந்த சிறப்பை ஞானமாக செய்தது, பெண்கள் தனியாக கூடி வழிபடவும் கொண்டாடவும் அது பல பண்டிகைகளை செய்தது, முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கொண்டாடி வழிபடும் அளவு அது சுதந்திரமும் உரிமையும் கொடுத்தது.
இது உலகில் வேறேங்கும் காணமுடியா சிறப்பு அது, எந்த அளவு இந்துமதம் பெண் சுதந்திரத்தை, பெண் மரியாதையினை கொடுத்திருந்தது என்பதற்கு இந்த பண்டிகைகளே சாட்சி.
அப்படியான ஏற்பாட்டில் ஒன்றுதான் இந்த வரலெட்சுமி நோன்பு.
வரலெட்சுமி நோன்பு என்பதன் தத்துவம் கொஞ்சம் ஆழமானது, அதன் அர்த்தம் புரிந்து கொண்டாடினால் இன்னும் சிறப்பு.
வரம் தரும் லெட்சுமியினை வரலட்சுமி என்றார்கள், அவள் வரவேண்டும் என்றார்கள்.
செல்வம் மட்டும் தருபவள் அல்ல லட்சுமி; செல்வமும் ஒரு அவசியமே தவிர, அது மட்டும் வாழ்க்கை அல்ல. அதனால் வாழ்வில் அதை விட முக்கியம் நிறைவு, ஆனந்தம், நிம்மதி, மகிழ்ச்சி என போதித்தது இந்துமதம்.
இந்த ஆனந்தத்தை, இந்த நிம்மதியினை தருபவள் வரலெட்சுமி. அதாவது முழுமையான நிறைவு, முழுமையான சந்தோஷம், உளமார்ந்த மகிழ்ச்சியினை தருவாள் என இந்துஞானியர் அவளை வழிபட சொன்னார்கள்.
இந்துமதம் மிக மிக ஞானமானது. அது மானிட மனம், சமூகம், பிரபஞ்சம், ஆன்மீகம் என எல்லாம் கலந்த ஞானக் கலவை என்பதால் அதன் ஏற்பாடுகள் ஆழ்ந்த அர்த்தமுள்ளவை.
அந்த இந்துக்கள் இந்த லட்சுமிக்கான நாளை கொண்டாட ஆவணி மாதம் வளர்பிறையில் முதல் வெள்ளியினை குறித்தார்கள்.
செல்வம் வளர்தல் வேண்டும் என்பதற்காக வளர்பிறை, சுக்கிரனுக்குரிய நாள் வெள்ளிக்கிழமை.. செல்வம் தரும் சுக்கிரனுக்குரிய நாள் என்பதால் வளர்பிறை வெள்ளிக்கிழமையினை சொன்னார்கள்.
ஆவணி என்பது ஒரு பருவகாலத்தின் தொடக்கம் என்பதால் முக்கிய மாதம் அது என்பதால் அந்த நாளில் சொன்னார்கள்.
ஆவணியில் வானியல் சாஸ்திரபடி செல்வத்தைக் குறிக்கும் சுக்கிரன் 11ம் இடத்துக்கு நகரும், சூரியன் சிம்ம ராசியில் வரும் மாதம் என்பதால், அதன் பார்வை 11ம் இடத்தில் விழும்.
அந்த 11ம் இடம் பாக்கியஸ்தானம் என்பார்கள், அது செல்வத்தை குறிப்பது.
அதனால் மிகச்சரியாக அந்த மாதத்தின் வளர்பிறை வெள்ளிகிழமையினை குறித்து கொண்டாட சொன்னார்கள்.
ஆனந்தம் தரும் விரதம் இது, வரலெட்சுமி நோன்பு என்பது சந்தோஷமும் மகிழ்வும் தரும் நாள், மகிழ்வு எப்போது வரும், அதனால் யாருக்கு என்ன பயன் ஏற்படவேண்டும் என்றெல்லாம் விதி வகுத்தார்கள்.
இந்துக்களின் பண்டிகைகள் ஒரு காலமும் சொந்த நலனுக்கானவை அல்ல, அவை ஆன்மீக போதனையோடு சமூக நோக்கையும் சொன்ன உன்னதமானவை.
பாரதம் பசியின்றி, வறுமையின்றி செல்வமான நாடாகத் திகழ, இந்த ஞானபோதனைதான் அன்றைய ஒரே காரணமாய் இருந்தது, இந்த ஞானமதத்தின் போதனையே இந்நாட்டை பிச்சைக்காரர், வறுமையுற்றோர், பசியியால் வாடுவோர் என யாரும் இல்லா வகையில் பரிபூரண சமூகமாய் வைத்தது.
அந்நியர் வரும்போது ஆச்சரியப்பட்ட விஷயம் இங்கே பிச்சைக்காரர் இல்லை, பசியுற்றோர் இல்லை என்பதே.
அந்த அளவு இது சமத்துவம் பேணிய பணக்கார நாடாக இருந்தது, அந்த செல்வத்துக்கு காரணம் இந்த சனாதான தர்மம் எனும் இந்துமதம்.
அந்த மதம் இந்த வரலெட்சுமி வ்ரத பண்டிகையிலும் போதித்தது, இந்நாளை ஆனந்தம் கொடுக்கும் நாளாக உணரச் செய்தது.
தானமும் தர்மமும் எவ்வளவு அவசியம் என்பதை அது சொன்னது, ஆனந்தம் என்பது செல்வத்தில் அல்ல; தான் மட்டும் துய்ப்பது அல்ல; தேவைப்படுவோர்க்கும் இல்லாதவர்க்கும் அள்ளி அள்ளி கொடுப்பதே ஆனந்தம் என ஞானத்தைச் சொல்லி, அந்த ஆனந்த மகிழ்ச்சியினை உணர ஏற்பாட்டை செய்தது.
பசியின் கொடுமை உணர்ந்து பிறர்க்கு பசிக்கு உணவிட அது ஊக்குவித்தது, பசியின் கொடுமை உணர, அது விரதம் இருக்கச் சொன்னது.
பசியினை தன்னில் உணரும் ஒருவரே பிறர் பசி அறிந்து உணவிட முடியும். இதனால் பசிக்கொடுமை அறிய விரதம் இருக்கச் சொன்னது.
விரதம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. அது ஆரோக்கியத்தை கொடுக்கும் அதே நேரம் பிறர் பசி அறிந்து தர்மம் செய்யும் மனதையும் கொடுக்கும்.
இந்த தர்மத்தால் உடலும் மனமும் சுத்தமாகும். தெளிவான சிந்தனை வரும். இது ஆனந்தத்தின் முதல்படி.
பெண்களே வீட்டின் ஆணிவேர். பெண்கள் நிம்மதியாக, சரியாக இருந்தால் குடும்பம் சரியாகும். குடும்பம் சரியானால் சமூகம் சரியாகும் என்பதால் பெண்களுக்கு முழு முன்னுரிமையும் போதனையும் கொடுத்த இந்துமதம் அவர்களுக்கான பயிற்சிகளையும் கொடுத்தது.
அதுதான் இம்மாதிரி விரதங்கள்.
இதனால் பெண்களுக்கு உடல்நலம் சரியாகும். இன்னும் பசியின் கொடுமை அறிந்து உடனே தேவையானதை பிறருக்குச் செய்வார்கள்.
இந்த நாளிலே பசியின் கொடுமை அறிவதை போல இல்லாதவர்க்கு புடவையோ, பணமோ, நகையோ அவரவர் சக்திக்கு ஏற்றபடி தானம் செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.
இங்கேதான் ஒளிந்திருக்கின்றது பண்டிகையின் தாத்பரியம்.
மருத்துமனைக்கு செல்லும் வரை அங்கே நோயாளிகள் படாதபாடு படுவதை காணும் வரை ஒருவனுக்கு தான் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றோம் என தெரியாது.
அப்படி பிறரின் துன்பம் அறிந்து, தேவை அறிந்து உதவாத வரை அவனுக்கு மகிழ்ச்சி நிறைவு வராது. மனம், செல்வம் போதவில்லை தன்னிடம் அது இல்லை இது இல்லை என குறைபட்டுக்கொண்டே இருக்கும்.
மனகுறை உள்ள இடத்தில் நிம்மதியோ ஆனந்தமோ வராது.
இதனால் தான் எவ்வளவு ஆசீர்வாதம் பெற்றிருக்கின்றோம், எவ்வளவுக்கு இறைவன் நம்மை நன்றாக வைத்திருக்கின்றான் என காண, தன்னைவிட கீழான நிலையில் இருப்போரை பார்த்து உதவுதல் வேண்டும்.
அப்பொழுது தான் தன்னிலை புரியும், தனக்கு எல்லாம் உண்டு எனும் நிறைவு வரும். அந்த நிறைவு ஆனந்தம் தரும்.
இதனாலே இன்று புடவைதானம், நகைதானம், மங்கல பொருட்கள் தானம் என சொல்லி வைத்தார்கள்.
பெண்களே பெண்களுக்கு தானதர்மம் செய்யும் இந்த விஷயம்தான், இருப்போர் இல்லாதவர்க்கு கொடுக்கும் இந்த உன்னத ஏற்பாடே வரலட்சுமி விரதம்.
பெண்களே சக பெண்களை கைதூக்கிவிட்டு தானும் நிறைவு கொண்டு ஆனந்தமும் மகிழ்வும் கொள்ளும் நன்னாள் இது.
பொதுவாக பெண்கள் வீட்டினுள் குறுகிய வட்டத்தில் இருப்பவர்கள். அவர்களின் வட்டம் இல்லம், கடமை, வழிபாடு, குழந்தை வளர்ப்பு என சிறியது என்றாலும் பரபரப்பானது.
அவர்களுக்கு ஓய்வுமில்லை, நேரமுமில்லை. மன அழுத்தமும் பதற்றமும், பொறுப்பும் அதிகம்.
இது மனரீதியாக அவர்களுக்கு சில பாதிப்புக்களை ஏற்படுத்தும். அது இல்லத்தில் எதிரொலிக்கும், பின் சமூகத்தில் எதிரொலிக்கும். இது குழப்பங்களை ஏற்படுத்தும்.
பெண்ணின் அமைதியும். நிறைவுமே அவளின் ஆனந்தமே வீட்டையும் நாட்டையும் வளப்படுத்தும் என்பதை பொறுப்பாக உணர்ந்த இந்துமதம் இம்மாதிரி பண்டிகைகளை ஏற்படுத்திற்று.
தெய்வத்தின் பெயரால் எல்லா பெண்களும் சந்திக்கவும், இருக்கும் பெண்கள் இல்லாதவர்க்கு கொடுத்து நிறைவும் ஆனந்தமும் அடையவும் அது வழிகாட்டிற்று.
உலகில் எப்படியான வறிய நிலையில் பலர் உள்ளார்கள், நாம் எவ்வளவு பரவாயில்லை என்பதை நினைந்து பார்த்து தெய்வத்துக்கு நன்றி சொல்லி, நிம்மதி அடைய நிறைவடையச் சொன்னார்கள் இந்துக்கள்.
அப்படி உணரும் பெண்கள் மனதால் நிறைவடைவார்கள், நாலுபேருக்கு உதவும் வகையில் நாம் இருக்கின்றோம், நமக்கு கீழே இருப்பவர் கோடி என மனதால் நிம்மதி அடைவார்கள்.
அந்நேரம் தனக்காக உழைக்கும் வீட்டு ஆண்கள் மேல் அவர்களுக்கு அன்பும், கருணையும், இரக்கமும் பொங்கும், மரியாதை பொங்கும்
தன்னை இப்படி நிறைவாய் வாழவைப்பது இவர்களே என அவர்களை கொண்டாடுவார்கள். அந்த வீடே சொர்க்கமாகும்.
அப்படியே உதவி தேவைப்படும் வறியவர்கள், தெய்வத்தால் இந்த உதவி அடையப் பெற்றோம். வரலெட்சுமி நாளில் அந்த தெய்வம் நம்மை கைவிடவில்லை என்பதை உணர்ந்து நம்பிக்கை கொள்ள இந்நாளை அறிவாக செய்தார்கள் இந்துக்கள்.
இந்த உலகில் எக்காலமும் ஏழைகள் பணக்காரர்கள் உண்டு, அதை மானிடரால் ஒரு காலமும் முழுக்க ஒழிக்க முடியாது. அவையெல்லாம் மானிடர் ஞானம் பெற அனுமதிக்கபட்ட விஷயங்கள், பணக்காரனோ, ஏழையோ, தெய்வம் உண்டென உணரவும், தெய்வத்தை அறிந்து ஞானம் அடையவும் ஏற்படுத்தப்பட்ட விஷயம் இவை.
இதனை இருதரப்பும் ஞானம் அடைந்து தெய்வத்தை உணரவே இப்படி பண்டிகைகளை ஏற்படுத்தினார்கள்.
ஆம் வரலெட்சுமி விரதம் என்பது எளிதில் கடந்து செல்லும் பண்டிகை அல்ல, விரதம் அல்ல ஆயிரமாயிரம் தத்துவங்களை பெண்களுக்கு கொடுக்கும் நாள் அது.
ஒவ்வொரு பெண்ணும் உலகை அறிதல் வேண்டும், தனக்கு கொடுக்கப்பட்டதை கொண்டு தான தர்மம் செய்து தன்னை கொடுக்குமிடத்தில் வைத்த இறைவனுக்கு நல்ல கணவனை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நாள்.
தன்னில் நிறைவடைந்து மகிழ்வடைந்து ஆனந்தமாய் நன்றி சொல்லும் நாள்.
எப்படி தான் பட்டுபுடவை, நகை, மாங்கல்யம், மஞ்சள் குங்குமம் அணிந்து மகிழ்வாய் நிறைவாய் வாழ்கின்றேனோ, அப்படி எல்லா பெண்களும் வாழட்டும் என தான தர்மம் செய்யும் நாள் இது.
இருப்போர் இல்லாதவர்க்கு அள்ளி அள்ளி கொடுக்கும் நாள் இது,
உலகின் முதல் பொதுவுடமை சொன்னது மார்க்ஸ் அல்ல, ஏங்கல்ஸ் அல்ல; முதலில் சொன்னவர்கள் இந்துக்கள்.
இந்துக்களின் பண்டிகைகளையெல்லாம் பொதுவுடமை பண்டிகைகளே. அதற்கு தெய்வப் பெயர் சூட்டினார்களே தவிர அன்றே கம்பூனிச சமூகமாக கடவுள் நம்பிக்கை கொண்ட கம்யூனிச சமூகமாக இருந்த மதம் இந்து சமூகம்.
அது வேறு எங்குமில்லை, இந்துஸ்தானத்தை தவிர எங்குமில்லை.
இந்துமதம் எனும் சனாதான தர்மம் அதை செய்து சாதித்திருந்தது, அந்த இந்தியா வளமான செல்வமான சமத்துவமான சமூகமாய் இருந்தது.
இந்த பண்டிகையில் இன்னும் பல போதனைகளை தெய்வத்தை காட்டி சொன்னார்கள் இந்து ஞானியர், அதை கடைபிடிக்கவும் வலியுறுத்தினார்கள்.
மஹாலஷ்மி அவதாரம் பல எடுத்து பெருமாளை அடைய தவமிருந்ததை சிந்திக்கச் சொன்னார்கள்.
இதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவன் முக்கியம், கணவன் மேலான பக்தி முக்கியம் என்பதை வலியுறுத்தினார்கள்.
சிவசக்தி தத்துவமும், பாற்கடலில் பரந்தாமனுக்கு சேவை செய்யும் லஷ்மியின் தத்துவமும் இல்லற வாழ்வின் போதனை என தெளிவாய் சொன்னார்கள், பெண்கள் இயக்கும் சக்தி. ஆனால் அந்த இயக்கும் சக்தி இயங்க செயல்பட ஒரு நிலையான சக்தி வேண்டும். அதுதான் கணவன் என தெளிவாய் சொன்னார்கள்.
சக்தி சிவனை விஷத்தில் இருந்து காத்த கதையும், கண்ணனை பாமா நரகாசுரனிடம் இருந்து காத்த கதையும் சொல்லி சிந்திக்க வைத்தார்கள்.
குடும்பப்பெண்ணின் முதல் கடமை கணவனை தொழுதல் என்பதையும், எல்லாம் வல்ல சக்தி கொண்ட தேவியரே கணவனை பணிந்து கடமை செய்தார்கள், ஆண் பெண் இணைந்த தாத்பரியமே இயக்கத்துக்கு அடிப்படை என்பதை போதித்தார்கள்.
உலக இயக்கத்துக்கே இறைசக்திகள் குடும்பமாய் இயங்கும் பொழுது, குடும்ப இயக்கத்துக்கு பெண்கள் கணவனுக்கு துணையாய் நிற்றல் வேண்டும் என்பதை தெளிவாகச் சொன்னார்கள்.
அன்று அம்மனுக்கு சேலையும் வளையலும் இதர மங்கல
பொருட்கள் கொடுப்பதும் இந்துக்களின் வழமை. குறிப்பாக மாங்கல்ய அடையாளம் உண்டு.
இந்த காணிக்கையில் இரு விஷயங்கள் உண்டு. ஒன்று ஆத்மார்த்தமானது. இன்னொன்று சமூகத்துக்கானது.
இந்த மங்கல பொருட்களை அன்னையின் பாதத்தில் வைத்து, இந்த மங்கலமெல்லாம் என் கணவனை குறிப்பது, இந்த மங்கல வாழ்வு உன்னால் வந்தது, காலமெல்லாம் இந்த மஞ்சள் குங்குமத்தையும் தாலியினையும் அன்னை நீ காத்து வரவேண்டும் என்பது.
அப்படியே தன் கணவனையும் அவனின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அன்னையிடம் அவனுக்காய் வேண்டி, குடும்ப வாழ்வின் எல்லா சிரமங்களையும் எதிர்கொள்ள சக்தி கேட்பது.
சேலையும், மங்கல அடையாளங்களும் குடும்ப பெண்களின் அடையாளம் மட்டுமல்ல, அவளுக்கு கணவன் உண்டு, அவனாலே இதெல்லாம் அவளுக்கு சாத்தியம் எனும் அடையாளங்கள். அவற்றை அம்மனுக்கு சாற்றும்பொழுது தன் மங்கல ஸ்தானத்தை கணவனின் அடையாளத்தையே அவள் அன்னையிடம் காணிக்கையாக்குகின்றாள்.
ஒரு பெண்ணாக அம்மனுக்கும் அதன் அவசியம் தெரியும் என்பதால், அன்னையும் அப்பெண்ணின் கோரிக்கையினை ஏற்றுக் கொள்கின்றாள்.
அன்னைக்கு சாற்றப்படும் அந்த சேலையும் வளையலும் கயிலாயத்துக்கோ பாற்கடலுக்கோ செல்லாது. மாறாக இன்னொரு ஏழை பெண்ணுக்கோ ஏழை சமூகத்துக்கோ சென்று சேரும்.
ஒரு பெண்ணுக்கு வரமருளி அவளிடம் இருந்து பெற்று, இல்லாதோருக்கு கொடுக்கும் மிகப்பெரிய சமூகநீதியினை இந்து ஆலயங்கள் அக்காலம் முதல் இக்காலம் வரை எளிதாகச் செய்கின்றன, எந்த மதத்திலும் இல்லாதவாறு இந்துமதம் அந்த சமூக சமநிலையினை தெய்வத்தின் பெயரால் காக்கின்றது.
ஆடிமாதம் அம்மனுக்குரியது எனும் நாளில் அம்மனே தன் குடும்பத்தை பேணினாள், அப்படியே ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தை கணவனை தொழுது பேணவேண்டும் என உறுதியெடுக்கும் நாளாக இதனை இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள்.
இந்நாளில் அம்மன் வழிபாடும் பெண்களுக்கு சேலையும் தாலிதானமும் வழங்குவது வழமை, தானமும் தர்மமும் ஒரு பெண்ணுக்கு மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும், இன்னொரு சுமங்கலியிடம் இருந்து சேலையும் குங்குமம் தாலியும் வாங்கும் பெண் மனமார வாழ்த்தும் வாழ்த்து பெரும் ஆசிகளை கொடுக்கும்.
அதனாலே இந்நாளில் அந்த வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
குடும்ப கடமையினை செய்யும் பெண்கள் தங்கள் வாழ்வின் பலமான கணவனுக்கு எல்லா நலமும் அருளும் வேண்டி குடும்பம் நன்முறையில் இயங்க பிரார்த்திக்கும் நாளிது.
அதே நேரம் இல்லாத பெண்களுக்கு தானமும் தர்மமும் அவசியம், ஒரு பெண்ணுக்கு எடுத்துக்கொடுக்கும் தாலியும் சேலையும் பல தலைமுறைக்கு குடும்பத்தை ஆசியாய் தாங்கும், அது சத்தியம்
அவ்வகையில் ஒவ்வொரு இந்துவும் ஒரு இந்து பெண்ணுக்காவது உதவ வேண்டிய நாள் இது, அதை ஒவ்வொரு இந்துவும் செய்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும்.
பெண்ணுக்கு தானமளிக்கும் ஒவ்வொரு விஷயமும் சாட்சாத் தேவி சக்தியினையே அடைகின்றது, பெண்களெல்லாம் அன்னையின் வடிவம் என வணங்கி தானம் செய்யவேண்டிய நாள் இது.
இந்த தர்மம்தாம் சனாதான தர்மத்தின் ஆணிவேர்.
இந்த தர்மம் எக்காலமும் இந்துக்களிடம் உண்டு, அங்கு சாதி இல்லை, அந்தஸ்து இல்லை, யாரிடம் கொடுக்கும் சக்தி உண்டோ அவர்கள் இன்னொரு இந்துவுக்கு கொடுப்பார்கள்.
வியாபார சாதிகளும், போர்செல்லும் சாதிகளும், உழைக்கும் சாதிகளும் இந்நாளில் பிராமண ஏழை பெண்களுக்கு தானம் கொடுப்பதெல்லாம் அந்நாளில் வழமையான ஒன்று.
ஆம், உலகிலே சமத்துவமும் சமூகநீதியும் பேசிய முதல் மதம் இந்துமதம், அதன் ஏற்பாடுகளெல்லாம் அவ்வளவு ஞானமான சமத்துவம் கொண்டது.
அதை முறையாக பின்பற்றும் இடத்தில் எல்லா சமத்துவமும் சமூகநீதியும் எக்காலமும் இருக்கும். அங்கு ஏழ்மை என்பதோ இல்லாமை என்பதோ இராது, பெண்களுக்கு எவ்வித குறைவும் எக்காலமும் இராது.
அம்மதம் ஒன்றேதான் அந்த அற்புதத்தை செய்யும், காரணம் முழு ஞானத்தில் உருவான மதம் அது.
இன்று வரலட்சுமி நோன்பு அனுசரிக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
உடல்நலம், மனநலம், குடும்ப நலம், சமூக நலம் காக்கும் அற்புத பண்டிகை அது.
செல்வமுடையவர்கள் கொடுக்க கொடுக்க மனம் தெளியும், ஆனந்தமும் நிறைவும் வரும் என்பதை சொல்லும் நாள் இது.
இல்லாதவர்க்கு கொடுக்க கொடுக்க ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிறைவும் வரும், இந்த நிறைவும் நிம்மதியும் கொண்ட மனதில் தெய்வம் எழுந்தருளும்.
அப்படி வரும் லட்சுமியே வரலட்சுமி.
அள்ளிக்கொடுப்பதால் ஒருவனின் செல்வம் தீருமா என்றால் தீராது, காரணம் இந்த பிரபஞ்சம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருக்கின்றது, கொடுப்பவனுக்கு அது கொடுத்துக்கொண்டே இருக்கும்.
காலகாலமாக ஓடும் ஆறுகள், இறைக்க இறைக்க ஊறும் கிணறுகள், அறுக்க அறுக்க கிடைக்கும் தானியங்கள் என இந்த பூமியும் பிரபஞ்சமும் என்றும் வற்றாதவை. அவை நிறைவுள்ளவை, இந்த பிரபஞ்சம் எக்காலமும் நிறைவுள்ளது. அள்ள அள்ள அது வந்துகொண்டே இருக்கும்.
காற்று வீசி குறைவதில்லை, நீர் ஓடி குறைவதில்லை, சூரிய ஒளி சந்திர ஒளி எவ்வளவு வீசினாலும் குறைவதில்லை, கடல் நீர் வற்றுவதுமில்லை. அதன் உப்பு சுவை குறைவதுமில்லை.
இதுதான் பிரபஞ்ச பெரும் தத்துவம். எதுவும் கொடுப்பதால் குறையாது எனும் சூட்சுமம்.
அதனால் செல்வம் என்பது கொடுக்க கொடுக்க ஒருகாலமும் குறையாது. ஏதோ ஒருவகையில் அது வந்துகொண்டே இருக்கும். ஒரு தலைமுறை தானத்தால் சரிந்தால் கூட, அடுத்த தலைமுறையினை அது பன்மடங்கு வாழவைக்கும்.
ஆம், இங்கு எதுவும் மானிட முயற்சி அல்ல, பிரபஞ்ச பெரும் ஆசீர்வாதம் அவர்கள் இயக்கம்.
எது எங்கே குறைந்தாலும் ஓடிவந்து நிரப்பும் இந்த பிரபஞ்சம், தீராமல் கொடுக்கும் பிரபஞ்சம் செல்வத்தை கொடுப்போருக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
அந்த பெரும் தத்துவத்தை போதிக்கும் நாள் இது.
அந்த பெரும் ஞானப்பண்டிகையினை இந்துக்கள் தங்கள் மரபில் சிறப்பிக்கின்றார்கள், அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இருப்போர் இல்லாதவருக்கு தெய்வத்தின் பெயரால் கொடுக்கட்டும், இல்லாதோர் இருப்போரிடமிருந்து தெய்வத்தின் பெயரால் வாங்கட்டும்,
எங்கும் நிறைவும் ஆனந்தமும் சூழட்டும்.
அந்த ஆனந்த நிறைவில் எல்லா வீடும் வாழட்டும், எல்லோரும் வாழும் போது தேசத்தில் அமைதியும் வளப்பமும் தானாக வரும்.
எல்லா வீடுகளுக்கும் வரும். அந்த வரலட்சுமி தேசத்தையும் மிக செல்வகடாட்சமாக ஆக்கிவைத்து, இந்த இந்து தேசம் எல்லா தேசங்களுக்கும் அள்ளி அள்ளி கொடுக்கும் பெரும் இடத்துக்கு இத்திருநாட்டை உயர்த்துவாள்.
தேசம் அந்த பெரும் இடம் நோக்கி உயர, தேசம் லட்சுமிகடாட்சமாய் வாழ, தேசத்தின் ஒவ்வொருவரும் நிறைவிலும் ஆனந்தத்திலும் வாழ பாற்கடலில் பரந்தாமன் பக்கமிருக்கும் அந்த தாயினை நோக்கி வேண்டுவோம்.
வரலெட்சுமி நோன்பு காலங்களில் என்னென்ன பாடல்களை பாடலாம் என்றால் நிறைய உண்டு. அவரவர் விரும்பியவற்றை பாடலாம்.
“லலிதா சஹஸ்ர நாமம்” அதில் முக்கியமானது. முடிந்தவர்கள் அதனை கூடிப் பாடுதல் நலம். இந்துக்களின் வழிபாடு தனி நபர் வழிபாடு அல்ல. தனியாக வைப்பது வேண்டுதலும், தியானமும்.
கூடி பாடி தொழுதலே இந்துக்கள் பாரம்பரியம், அதை செய்தல் நலம்.
சிலர் ஆதிசங்கரர் அருளிய “கனகதாரா ஸ்தோத்திரம்” பாடுவார்கள். அது நல்லது, அதன் தமிழாக்கத்தை தெரிந்து வைத்திருத்தல் நலம். மாறாக வழிபாட்டுக்கு அந்த சமஸ்கிருத ஸ்லோகமே சரியானது.
இன்னும் காளிதாசனின் “சியாமளா தாண்டகம்” முதல் “அபிராமி அந்தாதி” முதல் பல வகை பாடல்கள் உண்டு.
இந்துக்களின் கோவில்கள் மட்டும் பல்லாயிரம் அல்ல, அவர்களின் பாடல்களும் பல நூறு ஆயிரம். அதனைத் தேடிப்பிடித்து படித்தல் நன்று.
குறைந்தபட்சம் அபிராமி பட்டரின் பாடலையாது சிலமுறை பாடலாம்.
“தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே” எனும் பாடல் சிறப்புமிக்கது.
இன்று பாடவேண்டிய பாடல்களில் முக்கியமானது அகத்தியபெருமான் எழுதிய பாடல்.
கோலாப்பூரில் உள்ள மகாலக்ஷ்மி மிக மிக விசேஷமானவள். இந்துஸ்தானத்தின் மகா முக்கிய லக்ஷ்மி தலம் அது. அந்த கோலாப்பூர் மகாலக்ஷ்மிக்கு அகத்தியர் ஒரு பாடலை எழுதினார், இப்பாடல் மகாலட்சுமியினை வணங்கும் நாட்களில் அன்று பாடப்படும்.
பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் இப்பாடலை ஆலயங்களில் பொறித்து, பாடி வழிபட உத்தரவிட்டான். அந்த அளவு முக்கியமான பாடல்.
இப்பாடலை இன்று பாடி வரலெட்சுமியினை வணங்குதல் மிக்க நன்று, சித்தர்களில் அகத்தியபெருமான் தனித்துவமானவர். அவர் மனைவி லோபமுத்திரைதான் லலிதா சஹஸ்ரநாமம் எனும் பெரும் துதியினை நமக்கு தந்தவள், அதை இந்நாளில் பாடலாம்.
அப்படியே அகத்திய பெருமான் அருளிய இந்த ஸ்தோத்திர பாடலையும் பாடினால் கூடுதல் பலன் உண்டு, அகத்தியரின் வாக்கு ஒரு காலமும் பொய்ப்பதில்லை என்பது முக்கால உண்மை.
“மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்
உயி ரொழிய முனிவு கூர்ந்த
பூவையுறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைக்கும்
பாவை இரு தோள் தொழுது பழமறை தேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான் (1)
கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டி லுரை கொள்கை போல
மலையுறழுத் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனி தீன்ற அருட் கொம்பே
கரகமலம் முகிழ்ந்தெந் நாளும்
கழிபெருங் காதலில் தொழுவோர் வினைதீர
அருள் கொழிக்கும் கமலக் கண்ணாய் (2)
கமலை திரு மறு மார்பன் மனை கிழித்தி
செழுங் கமலக் கையாய் செய்ய
விமலை பசுங்கழை குழைக்கும் வேனிலோன்
தனை யீன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள்
அவதரித் தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட ஒளிரும் செழுஞ்சுடரே
என வணக்கம் செய்வான் மன்னோ (3)
மலர்க்கமல நறும் பொகுட்டில் அரிசிருக்கும்
செந்துவர் வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படை தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி
மதி புனைந்த பரமன் தானும்
துடைத்தனர் நின் பெரும் கீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லார் பாற்றோ (4)
மல்லல் நெடும் புவியனைத்தும் பொது நீக்கித்
தனிப் புரக்குமன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சியோடும்
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில்
வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர் பொகுட்டுறையும் அணியிழை நின்
அருள் நோக்கம் அடைந்து ளாரே (5)
செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிறும்
எழில் மேனி திருவே வேலை
அங்கன் உள்ள கிருள் துலக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங் கானில் நெருப்பில் மண்ணில்
எங்குளை நீ, அவனன்றோ மல்லல் வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா (6)
என்று தமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதி மகிழ்ந்தோம், நான்மறையோய்,
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும் போகம் நுகர்ந்திடுவோர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல் மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவன் மருவல் செய்யாள்…” (7)