வராக துவாதசி / வராஹ ஜயந்தி
இன்று இந்துக்களின் வராக துவாதசி, இந்நாள் வராஹ அவதாரத்துக்குரியது.
இந்துக்களின் 12ம் புராணம் வராஹ புராணம். அது இந்த அவதாரத்தின் பெரும் சிறப்பினைச் சொல்கின்றது. மூன்றாம் அவதாரமாக வந்த அந்த அவதாரமே பூமியினை மீட்டெடுத்தது. இரணியாக்ஷன் எனும் அரக்கனை அழித்து பகவான் பூமியினை மீட்டெடுத்த புராணம் அது.
அர்ஜூனக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல் போல பூமாதேவிக்கும் வராக கோல பகவானுக்கும் நடந்த உரையாடலும் தத்வார்த்தமானது ஆழமான ஞானமானது.
இன்று அந்த அவதாரத்தை இந்துக்கள் நோன்பிருந்து வழிபடுவார்கள். இந்துக்களின் ஒவ்வொரு அவதாரக் குறியீடும் ஆழ்ந்த தத்துவம் கொண்டவை, அவ்வகையில் வராஹத்தின் ஆழமான தத்துவமும் கவனிக்க வேண்டியது.
ஏன் அந்த உருவம் கொடுத்தார்கள்?
பன்றி என்பது வேறு, வராஹம் என்பது வேறு. பன்றி அசுத்தமானது ஊர்களில் மக்களை அண்டி வாழும் இயல்புடையது. கண்டதையும் தின்னும் வழமை உடையது.
வராஹம் மலைகளிலும் காடுகளிலும் வாழும் பலமான மிருகம், பன்றியின் சாயலில் யானை போல கொம்பு தந்தங்களோடு நிற்கும், சுத்தமான தாவரபட்சி. யானைப் போல பலமானது.
வராகத்துக்கு எந்த விலங்குக்கும் இல்லா சிறப்பு ஒன்று உண்டு அது அகழ்ந்தெடுப்பது.
பூமியினைத் தோண்டிச் சென்று கிழங்கும் இதர வேர்களையும் கண்டறியும் சக்தி வராகத்துக்கு மட்டும்தான் உண்டு. காட்டில் பலமானதும் வெல்ல முடியாததுமான அந்த வராஹம் ஒன்றே பூமியினை அகழும்.
இதை கவனித்த ரிஷிகள் மனதின் ஆழம் வரைச் சென்று ஆசை, அகங்காரம், வன்மம், கோபம், காமம் என எல்லாவற்றையும் வேறோடு கிள்ளி எறியும் என்பதை அறிந்தே அந்த வராஹத்தை பெரும் குறியீடாக்கினார்கள்.
அருகம்புல்லை வெட்ட வெட்ட வளரும். ஆனால் அதன் கிழங்கை தோண்டி எடுத்துவிட்டால் வளராது, அப்படி மனதின் அடியாழத்துக்குச் சென்று எது ஆசையின் வேரோ, எது துன்பத்துக்குக் காரணமோ அதை வராக பகவான் அகற்றுவார் என வணங்கினார்கள்.
வராஹத்தின் மூச்சு கிட்டதட்ட பிரணவ மந்திரம் போன்ற ஒலியுடையது.
இதை எல்லாம் குறியீடாக வைத்துத்தான் ஓம் என மந்திரத்தில் லயித்து மனம் தியானத்தில் இருந்தால் அகத்தின் அடியில் இருக்கும் எல்லா தீய குணங்களையும் இறைசக்தி வராகம் பூமியினை கிளறி எடுப்பது போல் எடுக்கும் என உணர்த்த வராஹத்தை தெய்வ உருவமாக்கினார்கள்.
அந்த உருவுக்கு இந்த தெய்வம் எதிரியினை அடிவேர் வரைச் சென்று அகற்றும், எதிரி மீண்டும் தளைக்க முடியாதபடி ஒழிக்கும் எனச் சொல்லி வழிபடச் சொன்னார்கள்.
இந்துக்களின் தெய்வங்கெளெல்லாம் விலங்கு முகங்கள் என ஒதுக்க முடியாதவை, ஏதோ ஒரு காலத்தில் செய்த மூடநம்பிக்கை எனத் தள்ள முடியாதவை.
அவை எல்லாம் தத்துவரூபங்கள், ஒரு காலத்தில் மானிடருக்கு புரியும் வகையில் பெரும் சக்தியினை உதாரணமாக வடித்து வைத்த பிரபஞ்ச ரகசியங்கள், இறை சக்தியின் வல்லமையினை சொல்லும் வடிவங்கள்.
அந்த இறைசக்தி தியானத்தில் வராஹர் என வரச்சொன்னால் அது அகத்தில் வந்து பொல்லா குணங்களின் கிழங்குவரை வேர் வரை அகழுகின்றது.
அதை ஆபத்தில் அழைத்தால் அது எதிரியின் மூலவேர் வரை சென்று ஒழித்து நிர்மூலமாக்கி பக்தனைக் காக்கின்றது.
எது மூழ்கிவிட்டதோ, எது புதைந்துவிட்டதோ அதைத் திரும்ப மீட்டுக் கொடுப்பது வராஹ தெய்வம், விஷ்ணு வராகமாக வந்து பூமியினை மீட்டது அப்படித்தான்.
வராக புராணம் தத்வார்த்தமானது, கீதையினைப் போல பெரும் ஞானம் போதிப்பது.
மிகப்பெரும் தத்துவசாரத்தை அந்த புராணம் கொடுக்கின்றது, மறைந்திருக்கும் ரகசியங்களை தோண்டி எடுத்து தருவது போல வராஹமாக வந்து ரகசியங்களை தோண்டித் தோண்டித் தருகின்றார் பெருமான்.
எங்கெல்லாம் வெற்றி வேண்டுமோ, எதை எல்லாம் அவசியம் அகற்ற வேண்டுமோ அங்கெல்லாம் வராகத்தை அழைப்பது இந்துக்கள் வழமை.
பாரத கண்டம் ஆப்கானிய இஸ்லாமியரிடம் சிக்கி தென்னகம் இந்து ஆலயங்களின் அழிவில் இருந்த நேரம் அவரே விஜயநகர அரசை எழுப்பினார், அவர்களின் கொடியாக அமர்ந்தார்.
வராஹக் கொடியே தென்னகத்தில் சுல்தான் ஆட்சியினை ஒழித்து இந்து ஆட்சியினை நிறுத்தி பறந்தது.
வராஹம் இழந்ததை தரும், மறைந்ததை புதைந்ததை மீள எடுத்துத் தரும், அதனால் எதை இழந்தீர்களோ அதை பெற வராஹ வழிபாடு அவசியம்.
இன்று அந்த வராக துவாதசி, இந்த மந்திரங்களைச் சொல்லி அந்த பகவானை வழிபடலாம்.
“ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் ஓம் வராஹ மூர்த்தயே நமஹ”
முடிந்தவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.
“ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்”
“சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை ஒத்தவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.” எனப் பொருள்.
வராஹ வழிபாடு பகை அழிக்கும், இழந்ததை தரும், அவமானம் வராமல் காக்கும், நோயினைத் தீர்க்கும்.
எதையெல்லாம் இழந்தீர்களோ அதனை எல்லாம் மீட்டு தரும், அந்த வராக துவாதசியில் இந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு பயனடைதல் நன்று.
இந்த நாடும் எதையெல்லாம் இழந்ததோ, பண்பாடு கலாச்சாரம் மதம் ஆலயம் இலக்கியம் தாத்பரியம் அதன் அமைதி வளம் என என்னெல்லாம் இழந்ததோ அதையெல்லாம் வராஹ பகவான் மீட்டுக் கொடுக்கட்டும்.
தேசம் வாழட்டும், தேசம் வாழட்டும்.