விஜயநாராயணம் சிவாலயம்
நெல்லை மாவட்டத்தில் சிவராத்திரிக்கு செல்லுமிடங்கள் ஏராளம் உண்டு, தாமிரபரணி நதிக்கரை முழுக்க சிவாலயங்கள் உண்டு.
நெல்லையப்பர் ஆலயம் முதல் திருப்புடை மருதூர் என ஏகப்பட்ட சிவாலயங்கள் உண்டு, அங்கெல்லாம் நாள் முழுக்க இரவு முழுக்க சென்று வழிபடலாம்.
நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சிவாலயம் விஜயநாராயணம் சிவாலயம்.
அந்த ஊர் மகாபாரத்தோடு தொடர்புடையது. அர்ஜூனன் வந்து தவமிருந்து வழிபட்ட இடம் என்பதால் விஜயநாராயணம் என்றாயிற்று.
பெருமாளுக்கும் சிவனுக்கும் மிக மிக மூத்த ஆலயங்கள் அங்குதான் உண்டு, அங்கிருக்கும் விஷ்ணு ஆலயம் விசுவாமித்திரர் காலத்தையது. விஜயாபதிக்கு அவர் வந்த காலங்களை விடத் தொன்மையானது.
அந்த ஊரில் இருக்கும் சிவன் மகா விசேஷம், அவர் பெயர் மனோன்மணீஸ்வரர்.
மனோன்மணி என்றால் மனதில் ஒளிவிடும் சுடர் எனப் பொருள், சிரோன்மணி என்றால் தலையில் ஒளிவிடும் ஞானமெனப் பொருள்.
மனோன்மணி என்றால் ஒரு நாடகக்கதை என மாற்றி விட்டதெல்லாம் திராவிட சோகம்.
மனோன்மணி என்றால் மனதில் ஒளிவிடும் ஆத்ம ஒளியான சிவ வடிவம், அவருக்குத் தான் இங்கே பெரும் ஆலயம் உண்டு.
இதனால் இவ்வூருக்கு மனோன்மணீஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இது போன்று ஐந்து அமைப்புகள் உள்ள காரணத்தினால் இவ்வூர் பஞ்ச மனோன்மணீஸ்வரம் என்றழைக்கப் படுகிறது.
ஐந்து நிலைகளில் சிவன் அருள்பாலிக்கும் தலமிது.
மகாபாரத காலத்தில் வியாசரின் ஆலோசனைப்படிஅர்ச்சுனன் இங்குள்ள நாராயணனை தியானித்தான். போரிலும் வெற்றி பெற்றான். அதன் பின்னர் இங்கு வந்து நாராயணனுக்கு கோயில் கட்டி 1008 பிராமணர்களை குடி அமர்த்தினான். அர்ச்சுனனாகிய விஜயன் நாராயணருக்கு கோயில் அமைத்ததால் இவ்வூர் விஜய நாராயணம் என்று அழைக்கப்படுகிறது.
விஜயநாராயணம் தோன்றும் முன்பே வில்வ மரங்களும், மருதாணி மரங்களும் நிறைந்த காடாக இருந்தது.
நடுவிலுள்ள பொய்கைக் கரையில் தோன்றிய சிவலிங்கத்தை சப்தரிஷிகள் பூஜித்து அருள் பெற்றனர். இன்றும் பௌர்ணமிதோறும் அவர்கள் இரவில் இங்கு பூஜிக்கின்றனர். அங்கு பவுர்ணமி பூஜை மஹா விசேஷம்.
அந்த தலம் உருவானதன் தலப்புராணம் முக்கியமானது.
விஜயநாரயணம் மனோன்மணீஸ்வர் ஆலயம் பஞ்ச கயிலாயத்தில் கடைசி க்ஷேத்ரமாகப் போற்றப்படுகிறது. கயிலையில் பார்வதி தேவி உலக நலத்திற்காகச் சிவபெருமானைத் தியானித்தார். தனது கையில் வைத்திருந்த 1008 தாமரைப் புஷ்பங்களை பூமியில் தூவினாள். அந்த புஷ்பங்களைச் சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி ஏற்றுக்கொண்டு அங்கேயே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அந்த இடங்களெல்லாம் 1008 சிவக்ஷேத்ரங்களாக போற்றப்படுகின்றன. இதில் 74வது க்ஷேத்ரமாக மனோன்மணி என்னும் லிங்கம் அமைந்த விஜயநாராயணம் போற்றப்படுகிறது. மனோன்மணி என்றால் மனதில் நினைத்ததை அருள்கின்றவர் என்றும் பொருள்.
இன்னொரு கதையும் இங்கு உண்டு. அக்கால வேடன் ஒருவன் இந்த வனத்திற்கு வேட்டையாட வந்தான். பகலில் எதுவும் கிடைக்கவில்லை. இரவில் ஏதாவது கிடைக்காதா என்று பொய்கைக் கரையிலுள்ள வில்வ மரத்தடியில் அமர்ந்தான். அவனுக்கு நேரமும் போகவில்லை. வேட்டைக்கு எதுவும் கிடைக்கவும் இல்லை. எனவே வில்வத் தலங்களைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்டுக் கொண்டே இருந்தான்.
அது அங்கிருந்த லிங்கம் மீது விழுந்தது. விடிந்தே விட்டது, கண் விழித்து பார்த்தபோது பார்வதி தேவியுடன் சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். வேடன் ஆச்சரியத்துடன் அவர்களை வணங்கினான்.
“அய்யனே நான் ஒரு பாவி. தேவர்களுக்கும் கிடைக்காத தரிசனம் எனக்கு கிடைத்து விட்டது.” என சந்தோஷப் பட்டான். “வேடனே இன்று சிவராத்திரி. இரவு முழுவதும் பசியுடன் விழித்திருந்து வில்வத்தலங்களால் என்னை அர்ச்சித்தாய். உனக்கு மோட்சம் அளிக்கவே வந்தேன்”. என்றார்.
“அய்யனே, எனக்கு அருளியது போலவே சிவராத்திரியில் இங்கு வந்து பூஜை செய்பவருக்கும் மோட்சம் அளிக்க வேண்டும்” என்றான் வேடன்.
சிவ பெருமானும் “திருக்கயிலையில் அருள் புரிவது போலவே சிவராத்திரி, பௌர்ணமி நாட்களில் இங்கு வந்து வணங்குபவர்களின் துன்பங்களைத் துடைப்பேன் என்றார்.
அன்றிலிருந்து இத்தலம் சிவராத்திரிக்கு மகா சிறப்பான இடத்தைப் பெற்றது.
இதனால் இந்த தலத்தில் சிவனை வணங்குபவர்கள் கயிலாயத்திற்குச் சென்று சிவனை வணங்குவதற்கு சமமாகும். தற்போதும் பௌர்ணமி அன்று பல ஆயிரம் மக்கள் இங்கு வந்து வலம் வருகிறார்கள்.
கோயில் முன்பு சிவகங்கைத் தீர்த்தம் என்ற மனோன்மணி தீர்த்தம் உள்ளது. கங்கையின் நேரடி ஊற்று இங்கு உள்ளது என்பது புராண நூல்களின் கூற்று.
இதனாலே வல்லநாடு சித்தரும் சிதம்பர் சுவாமிகளும் பலரும் இந்த தலத்துக்கு வந்து இந்த தீர்த்தம் மூலம் பலர் நோயினை நீக்கினார்கள்.
பௌர்ணமி அன்று இங்குள்ள சிவபெருமானை, பார்வதிதேவி முதலில் வலம் வர, தொடர்ந்து சப்த ரிஷிகளும், 21 சித்தர்களும் வலம் வந்தனர். தற்போதும் பௌர்ணமி தோறும் இவர்கள் வலம் வந்து சிவனை வணங்குகிறார்கள் என்பது கண்கூடு.
இப்படியான இந்த தலம் சிவராத்திரி வழிபாட்டுக்கு மிக மிக பெயர் பெற்றது, வேடன் வடிவத்தில் சிவனே வந்து சிவராத்திரிக்கு வழிபட மக்களை அழைத்த தலம் இது.
“மனதால் என்ன கேட்பாயோ அதை நான் தருவேன்” என மனோன்மணீஸ்வரர் அங்கு வீற்றிருக்கின்றார், அவரைச் சென்று பணிந்து சிவராத்திரியில் எல்லா நலன்களும் பெறுங்கள்.
தென்முனை என்பது பழங்கால தொடர்ச்சி, இன்றிருக்கும் இயமமலை கூட அன்று கடலாய் இருந்தது. தெற்கே இருந்துதான் நிலம் வடக்கு நோக்கி நகர்ந்தது என்பது விஞ்ஞான முடிவு.
அப்படி பன்னெடுங்காலத்துக்கு முன்பே சிவவழிபாடு இருந்த தலங்கள் தெற்கே நிரம்ப உண்டு, அதுவும் நெல்லை, குமரி பக்கம் அதிகம் உண்டு.
இவை யுகங்களைத் தாண்டியவை, இவை ராமாயண மகாபாரத காலத்துக்கும் முந்தையவை.
அப்படி வந்த இடங்களில் விசுவாமித்திரர் வந்த இடம், குமரி ஆலயம் இன்னும் வெகு சில இடங்கள் உண்டு, அனுமன் வந்த மஹேந்திரகிரி மலையும் உண்டு.
இந்த தலம் அந்த காலத்துக்கும் மூத்த தலம்.
உலகின் பழமையான சிவாலயம் என்றும், மிகப் பழமையான விஷ்ணு ஆலயம் என்று இந்த ஊரைத்தான் காட்ட முடியும்.
சிவனும் பெருமாளும் ஒரு சேர அருளும் தலம் அது.
இன்று சிவராத்திரி, அங்கே இருக்கும் சிவனைத் தேடி அன்னை வருவாள், சப்த ரிஷிகள் வருவார்கள், சிவகணங்கள் வரும், தேவர்கள் ரிஷிகள் மகான்கள் அகத்திய முனி என எல்லோரும் வருவார்கள்.
அந்த வரிசையில் நீங்களும் நில்லுங்கள், ஒரு துளி அருள் உங்களுக்கும் கிடைக்கும்.
பானை உண்ணும்போது எறும்புக்கு கிடைக்கும் ஒரு பருக்கை சோறு அதற்கு பெரும் பொருள் அல்லவா?? அப்படி உங்களுக்கும் அருள் கிடைக்கும். உங்கள் வாழ்வே மாறும்.
இது சத்தியம், மகா சத்தியம்.