விநாயகர் அனுபூதி : 06 to 10

விநாயகர் அனுபூதி : 06

“ஒருகொம் புடையான் உயர்மோ தகமே
விரும்பும் பெருமான் விடையோன் குமரன்
சுரும்பார் தொடையன் சுகமா குமெலாம்
அருள்வான் அருள்வான் அடியார் அவர்க்கே”

பாடல் புரிந்துகொள்ள எளிதானது.

“ஒரு கொம்பு உடையான் உயர்மோதகமே
விரும்பும் பெருமான் விடையோன் குமரன்
சுரும்பார் தொடையன் சுகமாகும் எல்லாம்
அருள்வான் அருள்வான் அடியார் அவர்க்கே”

அவன் ஒரு தந்தம் உடையவன், மோதகத்தை விரும்புபவன், விடை எனும் காளைமேல் ஏறிவரும் சிவனின் குமரன், வண்டுகள் மொய்க்கும் மாலையினை அணிந்திருப்பான், அடியார்கள் சுகமாக நிம்மதியாக வாழ எல்லா வரத்தையும் அருள்வான் அந்த விநாயகன் என்பது பொருள்.

விநாயகப் பெருமானுக்கு ஏக தந்தன் அதாவது ஒரு கொம்பை உடையவன் எனப் பொருள், அவர் ஒற்றைக் கொம்பை உடையவர் என்பது அவர் தோற்றத்திலே உண்டு.

ஏன் அக்கோலத்தில் வீற்றிருக்கின்றார் விநாயகப் பெருமான்? அது ஆழ்ந்த தத்துவார்த்தமானது.

எல்லாமும் இறைவடிவம் என்பதை சொல்லும் தத்துவம் அவர் உருவம்.

அவர் யானை தலை, மனித உடல், பூத வயிறு, எலி வாகனம், தாமரை மேல் பாதங்கள் என அமர்ந்திருப்பார்.

அதாவது, இங்கு எல்லாமே அவர் வடிவம், அதுவும் சக்திமிக்க வடிவம் , ஓரறிவு முதல் விலங்கு, மனிதர் தேவர் என எல்லாமும் அந்த மகா சக்தி வடிவம் என்பதைச் சொல்லும் தத்துவம் அவர்.

அவர் ஏன் ஒரு கொம்போடு இருக்கின்றார் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலாவது அவர் தன் ஒரு கொம்பை உடைத்து மகாபாரதம் எழுதினார் என்பது, இரண்டாவது ஒரு கொம்பை கொண்டு அசுரனை அழித்தார் என்பது, மூன்றாவது நிலவினை குத்தினார் என்பது.

இந்த மூன்றையும் கண்டால் ஒரு விஷயம் துலங்கும். அதாவது, அவர் தன் முக்கிய கொம்பை இழந்தே நல்ல விஷயங்களை மானிடருக்கு கொடுத்திருக்கின்றார் என்பது.

ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் எனும் தத்துவத்தை போதிக்கின்றார்.

ஆனாலும் மகா முக்கியமான தத்துவத்தைச் சொல்லும் பாடல் உண்டு.

“பண்ணியம் ஏந்தும் கரம் தனக்காக்கிப்
பானிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க் காக்கி அரதனக்கலச வியன்கரம்
தந்தை தாய்க் காக்கிக்
கண்ணிலாணவ வெங்கரி பிணித்தடக்கிக்
கரிசினேற் கிருகையுமாக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்சகாயனை”

என்பது அது.

இந்த தணிகை புராணத்து பாடல் , “பானிலா மருப்பமர்” என்கின்றது.

அதாவது, ஆண்யானைக்கு தந்தம் உண்டு, பெண் யானைக்கு இல்லை. விநாயகப் பெருமான் ஆண் பெண் நிலை கடந்த சக்தி அவர் பெரும் சக்தி என்பதை இப்பாடல் சொல்கின்றது.

சிவனைப் போல விநாயகரும் உலகை இயக்கும் அர்த்த நாரீஸ்வர கோலம் கொண்டவர் என்பதையும் சொல்கின்றது.

ஆம், விநாயகப் பெருமான் கண்காணாப் பொருளில் இருந்து தாவரம், செடி கொடிகள், விலங்கு, மனிதர், தேவர் என எல்லாமுமாக இருக்கின்றார் அதைக் கடந்த ஞானப்பெருநிலையில் இருக்கின்றார்.

நிலையான சக்தி அவரே. இயக்கும் சக்தியும் அவரே. சிவனின் அம்சமும் சக்தியின் அம்சமும் கூடிய மகா சக்திஅவர் என்பதை அந்தத் தோற்றம் ஒற்றைக் கொம்பு தோற்றம் சொல்கின்றது.

அடுத்து அவரை மோதகம் விரும்பும் பிரியர் என்கின்றது பாடல்.

மோதகம் என்பது விநாயகர் வரலாற்றில் வசிஷ்ட முனிவர் மனைவி அருந்ததி மூலம் வருகின்றது , அந்த அருந்ததிதான், அழியாப் புகழ்பெற்று இன்றும் நட்சத்திரமாக மின்னும் அவள்தான் விநாயகருக்கு மோதகம் படைத்து நைவேத்தியம் செய்தாள்.

அவள் கொடுத்ததால் அது மரபாயிற்று.

அந்த வெளிப்புற வெண்மாவு பிரபஞ்சத்தையும் அந்தப் பூரணம் பிரம்மத்தையும் குறிப்பதாக வேதாந்த தத்துவம் சொல்கின்றது. பிரபஞ்சத்தில் பிரம்மம் இருப்பதைச் சொல்லும் தத்துவம் அது.

அதே நேரம் அந்த வெண்மாவு என்பது லௌகீக ஆசை கொண்ட மனதையும், அந்த மாய மனதுக்குள்ளே பூரணமாக தெய்வம் உள்ளது, மாயையினை கடந்தால் பூரணத்தை அடையலாம் என்பதையும் சொல்கின்றது.

“மோத்” என்றால் ஆனந்தம். “அஹம்” என்றால் உள்ளே. “மோதகம்” என்றால் “உள்ளே ஆனந்தம்” என்று பொருள்.

ஆக, உன்னுள்ளே ஆனந்தம் உண்டு, தெய்வம் உன்னில் உன் மனதில் இருக்கின்றது. மாயைகளைத் தாண்டி உள்ளே தேடு என்பதைச் சொல்லும் தத்துவம் அது.

இதனைச் சொல்லும் காசிப முனிவர் அவரை “விடையோன் குமரன்” என்கின்றார்.

அதாவது சிவனின் மகன் என்கின்றார். சிவனுக்கு முருகப்பெருமான், விநாயகர் என இரு மகன்கள் உண்டு, வீரபத்திரரும் சிவ அம்சமாக அறியப்படுவார்.

அப்படியான பெருமையினைக் கொண்டவர் விநாயகர், அவர் முக்கண்ணன் குடும்பம் என்பதைச் சொல்கின்றார்.

அடுத்து அவர் வண்டாடும் மாலையினை அணிந்திருக்கின்றார் என்கின்றார், வண்டுகள் தேன் இருக்கும் மலரைத்தான் சுற்றும், அப்படி அடியார்கள் அவரைச் சுற்றி சுற்றி வணங்குகின்றார்கள்.

அப்படி அடியார்கள் சுற்றி சுற்றி வந்து வணங்குபவர் விநாயகப் பெருமான் என்பவர் அடுத்து அவரை வணங்கும் அடியார்க்கெல்லாம் சுகவாழ்வினை விநாயகர் அளிப்பார் என்கின்றார்.

எந்தக் காரியமானாலும் விநாயகப்பெருமானைத் தொழுதே தொடங்குவார்கள், யாகம் என்றாலும் அவர்தான் பூஜை என்றாலும் அவர்தான்.

எழுத்து என்றாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குதலே மரபு.

அப்படித் தன்னை எண்ணி தொடங்கும் எல்லாக் காரியத்தையும் அவர் ஜெயமாக்குகின்றார், தன்னை நம்பி வணங்கும் அடியார்க்கு எல்லா விக்கினங்களையும் நீக்கி, எல்லாப் பிணிகள் தடைகளெல்லாம் நீக்கி அவர்களுக்கு சுகமான நலமான வாழ்வினை அருள்வார் என்பது புலவர் சொல்லவரும் போதனை.

ஆக, விநாயகப் பெருமானின் ஒரு கொம்பு தத்துவத்தை, ஏக தந்த தத்துவத்தை சொல்கின்றார் புலவர்.

அது ஆண்யானை பெண்யானை கலந்த முகம், அதாவது ஆணும் பெண்ணும் கலந்த வடிவம் அதன் தத்துவம் அவர் ஆணுமல்லா, பெண்ணுமல்லா பெரும் சக்தி என்பது.

இதை சில பாடல்களைக் கொண்டு விளக்கலாம்.

“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா(த) அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.”

இது நம்மாழ்வார் பாடல்.

அந்த ஆழ்வார் இறைவனின் தன்மையினை விளக்குகின்றார். இறைவன் என்பது ஒரு மகாசக்தி, அந்த மகாசக்தியினை மாந்தர்கள் புரிந்துகொள்ள அவர்களின் பலவீனமான இயலாமையின் பொருட்டு, மிகச்சிறிய புரிந்துகொள்ளும் சக்தியின் பொருட்டு புரியவைக்க ஆண்,பெண் எனப் பெயரிட்டு அழைக்கின்றோம்.
உண்மையில் அந்தச் சக்தி ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல இரண்டும் கலந்த அலியும் அல்ல, அது ஒரு மகா சக்தி என ஆழ்வார் பாடுகின்றார்.

எம்பெருமானன் ஆணுமல்லன், பெண்ணுமல்லன் இவ்விரண்டுமல்லாத வகையும் அல்ல, அவன் பார்க்கவும் முடியாதவன், இருப்பவனுமல்ல இல்லாதவனுமல்ல‌.

அவன் தன் அடியார் விரும்பின காலத்து அவர்கள் விரும்பின வடிவை எடுப்பவனாவான் என்கின்றார்.
இன்னும் பல இடங்களில் இதனைக் காணமுடியும்.

திருமூலர் பாடுகின்றார்.

“பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே”

அந்தப் பரம்பொருள் பெண், ஆண், பேடு என்ற பாகுபாடு உடையது அல்ல. அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உள்நின்ற சோதியை ஒருவராலும் அறிய இயலாது. அது கண் ஆகிய கருவியின்றிப் பார்க்கும். காதாகிய கருவியின்றிக் கேட்கும்.

இந்த தத்துவத்தைத்தான் விநாயகரின் ஏகதந்த முகம் சொல்கின்றது எனப் போதிக்கின்றார் காசிப முனிவர்.

அப்படியே திருமூலர் சொல்லும் “மூடத்துள் உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்” அதாவது, அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உள்நின்ற சோதியை ஒருவராலும் அறிய இயலாது என்பதைத்தான் மோதக தத்துவம் சொல்கின்றது

ஒரு ஸ்லோகம் உண்டு “ஸ்ரீகண்ட பிரேம புத்ராய, கௌரி வாமாங்க வாசினே”

அதன் பொருள் இதுதான்.

“சிவபெருமானின் பிரியமான புத்திரனும் பார்வதியின் இடது பக்கம் வாழ்பவருமான கணேசனுக்கு மங்களம்”

இன்னுமோர் ஸ்லோகம் உண்டு

“ஆதி பூஜ்ய தேவாய தந்த மோதக தாரிணே
வல்லப பிராண காந்தாயா ஸ்ரீ கணேசாய மங்களம்”

“முதலில் வழிபடப் படும் கடவுளும், தந்தம் மற்றும் மோதகத்தை அணிந்தவருமான கணேசருக்கு மங்களம் “

இன்னும் உண்டு.

“கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜய தாயினே
விநாயகாய விபவே ஸ்ரீ கணேசாய மங்களம்”

துன்பங்களை அழிப்பவனும், இரு உடல்களை உடையவரும் பக்தர்கள் இஷ்டப்படுபவற்றை ஜெயமாக்கித் தருபவரும், தடைகளை நீக்குபவருமான கணேசருக்கு மங்களம் உண்டாகட்டும்.

ஆதி சங்கரர் அருளிய கணேச பஞ்சரத்னம் சொல்கின்ரது

“முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்”

கையில் மோதகம் ஏந்தி, எப்போதும் மோட்சம் அளிக்கும் விநாயகரே உம்மை வணங்குகிறேன்.

“நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்.”

வணங்கியவர் குறை தீர்த்துக் காப்பவருமான விநாயகரே உம்மை வணங்குகிறேன்.

“அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்”

புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்

எளியவர்களின் துன்பத்தைப் போக்கி, புனித நூல்கள் போற்ற நிற்பவர். ஈசனின் மூத்த பிள்ளையாய், அசுரர்களின் கர்வத்தை அடக்கியவரே உம்மை வணங்குகின்றேன்.

ஆக, அந்த ஸ்லோகங்களைப் போல இப்பாடலில் காசிப முனிவர் சொல்வது இதுதான்.

விநாயகப்பெருமான் எல்லாப் படைப்பிலும் இருப்பவர், அவர் ஆண்பெண் நிலை கடந்த சக்தி , அவர் சிவபெருமானின் மகன், அவரைச் சுற்றி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வை தருவார், நல்ல சுகங்களைத் தருவார், அப்படியே அவர்கள் மனதில் இருக்கும் ஜோதியினை, ஆத்மவடிவில் இருக்கும் பரம்பொருளின் அம்சத்தை உணரவைப்பார், அவனுள் இருக்கும் ஆனந்தத்தை மாயைகளைத் தாண்டி உணரவைத்து மாபெரும் ஆனந்த, பேரானந்த நிலை தருவார், உள்ளே இருக்கும் இறைவனை உணரவைத்து பெரும் நித்திய பேரானந்தம் தருவார் என்பது காசிப முனிவரின் போதனை.

விநாயகர் அனுபூதி : 07

“பேழ்வாய்ப் பெரியோன் பெரும்பூங் கழலைச்
சூழ்வார் பணிவார் துதிப்பார் அவர்க்கே
ஊழ்வே தனைதீர்த்(து) உளமே மகிழ
வாழ்வே தரும்வல் லபைநா தனரே”

பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“பேழ்வாய்ப் பெரியோர் பெரும் பூங்கழலைச்
சூழ்வார் பணிவார் துதிப்பார் அவர்க்கே
ஊழ் வேதனை தீர்த்து உளமே மகிழ‌
வாழ்வே தரும் வல்லபை நாதனரே”

பேழை வாயினை கொண்ட பெரியவனின் அகன்ற பூ போன்ற பாதங்களை பணிந்து துதிப்பவர்களுக்கு அவர்களின் ஊழ் எனும் முன்வினை தீர்த்து உள்ளம் மகிழ நல் வாழ்வு தருவான் வல்லபை நாதன் என்பது பாடலின் பொருள்.

விநாயகப் பெருமானின் பாதம் பணிந்தால் ஊழ்வினை தீரும் என்பதை சொல்லும் இந்த வரிகளில் “வல்லபை நாதனர்” எனும் வார்த்தை கவனிக்கத்தக்கது.

இது பல இடங்களில் வரும் வரி.

“திருநெடு மால்அன் றால்இடை நினது
சேவடித் துணைமலர்த் துகளான்
பெருநெடு மேனி தனிற்படப் பாம்பின்
பேர்உரு அகன்றமை மறவேன்
கருநெடுங் கடலைக் கடத்து நற் றுணையே
கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே
வல்லபைக் கணேசமா மணியே”

என்பது விநாயகப்பெருமானை பற்றி வரும் வரி.

வல்லபை என்பது விநாயரின் சக்தி என்றும், விநாயகருக்கு சக்தி கொடுக்கும் மூலம் என்றும், சில செய்திகளும், அவர் விநாயகரின் மனைவி என்றும் சில குறிப்புகள் உண்டு.

இதனை கொஞ்சம் ஆழமாக காணவேண்டும்.

இந்துமதம் மானிடர் புரிந்து கொள்ள சிரமமான, சூட்சுமமான பிரபஞ்ச பெரும் சக்திகளை விளக்க மானுடர்க்கு புரியும்படி அதன் உறவுகளை சொல்லி விளக்கிற்று.

அசையாத பெரும் சக்தி, அதை இயக்கும் மகாசக்தி எனும் அசையும் சக்தியினை பாமரன் புரிந்து கொள்ள ஏதுவாக அதனை கணவன் மனைவி அதாவது சிவன் சக்தி, விஷ்ணு லட்சுமி, பிரம்மா சரஸ்வதி எனப் போதித்தது.

அந்த இயக்கும் சக்திகள் இன்னும் ஆழமாக பிரிந்த போது இரு மனைவியரென மானிடர் புரிந்துகொள்ள சொன்னது.

பரம்பொருளுக்கு உருவவுமில்லை, உறவுமில்லை. அது ஆண், பெண் எனும் நிலையிலுமில்லை என்பதை என்றோ அறிந்திருந்தும் மானுடர் புரிந்துகொள்ள அது உறவுநிலைகளை சொல்லி விளக்கிற்று.

அப்படி விநாயகரின் துணைவி வல்லபை என்றது, அதாவது விநாயகரின் ஆதார சக்தியினை அப்படி சொன்னது.

வல்லபை பற்றி மூன்று கதைகள் உண்டெனினும் கணேச புராணமானது கணபதியாவது சிவமே, சக்தியாவது வல்லபையே என்கின்றது.

இன்னொரு புராணம் சொல்கின்றது பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் குழந்தையைக் கண்டெடுத்து “வல்லபை’ எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையான அவளை அசுரன் கேசி கடத்திச் சென்றான், முனிவரின் கோரிக்கையினை ஏற்ற சிவனின் உத்தரவுப்படி விநாயகப் பெருமான் அசுரர்களை அழித்து வல்லபையை மணமுடித்தார் என்பது.

இன்னொரு புராணம் இப்படிச் சொல்கின்றது. லலிதாம்பிகை பண்டாசுரனுடன் போர்புரியும் போது தேவிக்கே பெரும் சிக்கல் உண்டாகிறது. அப்போது தேவி ஈஸ்வரனை துதிக்க அங்கே பத்து கைகள் கொண்ட வல்லபா எனும் சக்தியுடன் கணேசர் தோன்றினார் என்பது.

ஆக, எவ்வகையில் நோக்கினாலும் வல்லபை என்பவள் விநாயகரின் சக்தி என்றாகின்றது, இதன் தத்துவம் இன்னும் ஆழமானது.

“சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த” என்பது ஆதிசங்கரர் வாக்கு. அதாவது, ஜடம் எனும் அசையா சக்தியும், இயக்கு சக்தியும் இணையும் போது உலக இயக்கம் நடக்கின்றது என்பது பொருள்.

அதாவது, பரப்பிரம்மம் இரு சக்திகளாக அதன் துணை சக்திகளாக இயக்கத்தை நடத்துகின்றது.

அந்தப் பரப்பிரம்மம் சிவரூபமாகும் போது மாயை பார்வதியாகிறது. அந்த பார்வதியே இரண்டு சக்திகளாகி கங்கா, கௌரி என்று பிரிகிறார்கள்.

பரப்பிரம்மம் விஷ்ணு எனும் வடிவமாகும் போது மாயை வைஷ்ணவி என்றாகிறது. அந்த வைஷ்ணவியே இரண்டு சக்திகளாகி ஸ்ரீதேவி, பூதேவி என்று வடிவெடுக்கிறார்கள்.

பரப்பிரம்மம் முருகனாகும் போது மாயை கௌமாரி என்று பெயர் பெறுகிறாள். அந்த கௌமாரியே இரண்டு சக்திகளாகி வள்ளி, தேவசேனா என்று விளங்குகிறார்கள்.

பரப்பிரம்மம் பிரம்மா எனும் போது மாயை சரஸ்வதி, காயத்ரி என இருவடிவில் விளங்குவாள்.

அப்படியே பிரம்மம் கணபதியாக வரும்போது மாயா வல்லபா என்றும், அவளே சித்தி புத்தி என்றும் வருகின்றார்கள்.

வல்லபை எனும் தத்துவ வடிவம் இப்படி வருவதே.

ஒரு ஸ்லோகம் உண்டு.

“பீஜாபூர கதேக்ஷ கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல:
வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ:
த்யேயோ வல்லபயா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா
விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த”

மாதுளை, கதை, கரும்பு, வில், ஒளிதரும் சக்கரம், தாமரை மலர்,கயிறு, நெய்தல், நெற்கதிர், தமது கொம்பு ஆகியவற்றை முறையே தமது பத்துத் திருக் கரங்களிலும், பதினோராவது துதிக்கையில் ரத்தினகலசத்தைத் தரித்துக் கொண்டுள்ளவரும், தமது மடியில் கையில் தாமரை மலருடன் அமர்ந்துள்ள அன்புக்குரிய நாயகியினால் தழுவப் பெற்றவரும், அகிலம் அனைத்தையும் படைத்து, அழித்து, காப்பவருமான மகா கணபதியை நான் சேவிக்கிறேன் என்பது பொருள்.

ஆம். விநாயகரின் சக்தி வல்லபை என்கின்றது ஸ்லோகம். அதுவே விநாயகர் முழு முதல் கடவுள் என்பதையும் சொல்கின்றது.

இப்படியான வல்லபை எனும் மகா சக்தி கொண்ட விநாயகப் பெருமானை வணங்கினால் அவருடைய பாதத்தை வணங்கினால் பிறவி துன்பம் தீரும் என்பது, ஊழ்வினை கழியும் என்பது காசியப்பரின் போதனை.

இதனை ஒளவை தன் விநாயகர் அகவலில் சொல்கின்றாள்.

“சீதக் களபச் செந்தா மரைப்பூம்” எனப் பாடலை தொடங்கும் அவள் தன் அகவலில் “முன்னை வினையின் முதலைக் களைந்து” என விநாயகப்பெருமான் ஊழ்வினை அகற்றுவார் என்பதை தெளிவாகச் சொல்கின்றாள்.

அவளே தன் பாடலில் விநாயகப்பெருமான் பாதங்களை பணிவதனால் வரும் பலன்களை சொல்கின்றாள்.

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது-
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு”

என்கின்றாள். அதைத்தான் இங்கே காசியப்ப முனிவரும் பாடுகின்றார்.

“தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலா யிரத்து நானூற்று நாற்பத்தெட்டு
மேலாம் வினையை மெலியக் களைந்து”

என்பது நக்கீர தேவர் வாக்கு.

இந்தப பாடல் விநாயக புராணத்தில் வரும் ஒரு காட்சியினை சொல்கின்றது. முன்பு சௌராஷ்ட்ராவில் சோமகாந்தன் எனும் மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு பெரும் நோய் வந்தது.

தன் முன் ஜென்ம வினையால் வந்த நோயினால் தன் மகன் ஏமகண்டனிடம் ஆட்சியினை கொடுத்து அவன் கானகம் புகுந்தான்.

அங்கே பிருகு முனிவர் இருந்தார். அவர் மன்னனின் இந்நிலைக்கு முன் ஜென்ம வினையே காரணம், முன் ஜென்ம பிரம்மகத்தியே காரணம் என அறிந்து விநாயகரை தொழச் சொன்னார்.

அப்படி சொல்லும் போதே வியாசர் விநாயகரை மறந்ததால் தவித்த நிலையினையும், பின் விநாயகரை வணங்கி 18 புராணங்களையும் எழுதிய கதையும் அவருக்கு விநாயகரே வழிகாட்டியதையும் சொல்லி அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார்.

“ஓம்சுமுகாய நம
ஓம் கபிலாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் பால சந்திராய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் கணாதிபதயே நம
ஓம் கணாத்யட்சாய நம
ஓம் கஜானனாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம”

என பதினாறு பெயர்களை , வியாசர் சொன்ன விநாயகர் பெயர்களை பிருகு முனி சோமகாந்தனுக்கு சொன்னார். அவன் அதை சொல்லச் சொல்ல முன்வினை அகன்றது.

ஆம். விநாயகர் நாமம் சொல்லி வழிபட்டால் அவர் பாதம் பணிந்தால் முன் ஜென்ம வினை அகலும் என்பது விநாயகர் புராணத்தில் வரும் காட்சி.

அதைத்தான் இங்குச் சொல்லிப் பாடுகின்றார் காசிப முனிவர்.

விநாயகர் அனுபூதி : 08

“பேய்பூ தமொடு பிலிசூ னியமும்,
பாய்வேங் கையதும் பரையின் அருமைச்
சேய்வா ரணனார் திருப்பேர் புகலப்
போய்மாய்ந் திடுமே புனிதம் வருமே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“பேய் பூதமொடு பிலி சூனியமும்
பாய் வேங்கையதும் பரையின் அருமைச்
சேய் வாரணனார் திருப்பேர் புகல‌ப்
போய் மாய்ந்திடுமே புனிதம் வருமே”

சிவசக்தியின் புதல்வனாகிய யானைமுகத்தையுடைய விநாயகனது பெயரைச் சொல்பவருக்குப் பேய், பூதம், பில்லி, சூனியம் போன்றவற்றாலும், வேங்கை முதலிய விலங்குகளாலும், விளையும் தீமைகள் போகும்.அ தூய்மையும் வந்தடையும் என்பது பாடலின் பொருள்.

இந்த பாடல் மிக ஆழ்ந்த ஒரு தத்துவத்தை சொல்கின்றது.

அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் கர்மவினை என ஒன்று உண்டு. அப்படியே அவரவர் வாழ்வில் சோதனையான காலம் என ஒன்றும் உண்டு.

இந்த சோதனையான காலத்தில் நிறைய தொல்லைகள் அரூபமாக வரும், இன்னும் சூட்சுமமாக வரும், இவையெல்லாம் கொண்டதுதான் இந்த பில்லி, சூனிய, பேய், பூத தொல்லைகள்.

இதனை இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டும் என்றால் சோதனைகாலம்தான் ஒருவன் இறைவனை தேடவேண்டிய நேரம், அப்படி இறைவனை தேட இவை அனுமதிக்கப்படுகின்றன‌.

ஒருவனின் பூர்வ ஜென்ம கர்மவினைப்படிதான் இவை செயல்படும், விதி இல்லாதவன் தனக்கு அனுமதி இல்லாதவன் மேல் இது செயலாற்றாது.

இவற்றின் சக்திகள் பெரிது என்றாலும் பூர்வ ஜென்மப்படி அந்த சாபப்படிதான் இவை ஒருவனை ஆட்டிப் படைக்கும்.

ஆம். இந்த ஏவல்கள், பிரேத பூத பிசாசுகள், மந்திர தந்திரமெல்லாம் யாருக்கு பலிக்கும், எப்படியானவர்களிடம் வேலைகாட்டும் என்பது இந்துக்களின் வேதங்களிலே உண்டு.

வேறு எந்த மதமும் அதை அவ்வளவு தெளிவாக கூறவில்லை, அந்த சூட்சுமத்தை கொண்டு பயமுறுத்தியதே தவிர இந்துமதம் அளவு அது ஆழமாகச் சொல்லவில்லை.

என்ன சொல்கின்றது அதர்வண வேதத்தின் முதல் விளக்கம்?

இந்த மந்திரங்களின் படி எவன் தன் கடமையினை சரியாக செய்வானோ, எவன் தர்மத்துக்கு கட்டுப்பட்டு நிற்பானோ, எவன் தர்மப்படி நடப்பானோ, எவன் உண்மையான துறவியோ, எவன் இறைவனில் கலந்திருப்பானோ, எவன் தன்னை உணர்ந்து தன் கர்மத்தை செய்பவனோ, எவன் இறைசித்தப்படி நடப்பவனோ , எவன் தன் பிறப்பின் கடமையினை துளி தவறாமல் செய்வானோ அவனை இதனால் கட்டுப்படுத்தமுடியாது.

யார் அதர்மம் செய்வானோ, எவன் கர்மாவினை விட்டு நகர்வானோ, எவன் மாய மயக்கத்தில் பந்தபாச மயக்கத்தில் பாதை தவறுவானோ, எவன் மனதில் ஆசை உண்டோ, எவனிடம் பெரிய உறுதியும் வைராக்கியமில்லா பலவீனமும் அதனால் அவர் கர்மத்தை செய்யாமல் தடம் மாறுவானோ குழம்பி நிற்பானோ அவனிடம் இது பலிக்கும்”

அதாவது ஒருவன் கர்மத்தை நோக்கி அவனை இறைசக்தி நோக்கி இழுத்துச் செல்வதுதான் இந்த ஏவல் பில்லி சூன்யத்தின் வேலைகள்.

சமூகத்தில் காவலர்கள் எப்படி கடமை செய்கின்றார்களோ அப்படி சூட்சும உலகில் இவர்கள் கடமையினை செய்வார்கள்.

எல்லோரையும் நல்வழிப்படுத்தி கர்மத்தை செய்யவைத்து, பிறப்பின் கடமையினை செய்யவைத்து, இறைவன் நோக்கி இழுத்துவருவார்கள்.

கர்மவினைப்படி இவர்கள் வேலை செய்வார்கள், அந்த வேலையும் இறை உத்தரவுப்படி நடக்கும்.

இன்றும் எல்லா மத ஆலயத்தையும் பாருங்கள், இதர ஏவல் பரிகார நிலையங்களை பாருங்கள் அங்கெல்லாம் ஒரு சிந்தனை எழும்.

இந்த ஏவல்களும் சோதனைகளும் இல்லையென்றால் இவர்கள் இறைவனை நாடுவார்களா? தேடி வருவார்களா? இல்லை. நிச்சயம் இல்லை, அப்படி அவர்களை தேடி இழுத்துவரும் சக்திதான் இந்த ஏவல்கள்.

இது எல்லோரிடமும் பலிக்கா ரகசியம் இதுதான், அது சக்திவாய்ந்தது. தனித்துசெயலாற்றுவது என்றால் இன்று உலகை ஆள்வது மந்திரவாதியாக இருப்பான்.

பெரும் பணக்காரனாக மந்திரவாதிதான் இருப்பான், ஆக மாந்த்ரீகம், ஏவல் எல்லாம் இறைசக்திக்கு உட்பட்ட கருவிகள்.

இந்தப் பிணிகள், தொல்லைகள் நமக்கு முன் ஜென்மம் பற்றி, கர்மா பற்றி அறியாததால் இருக்கலாம். அதை அறிந்தவர் மூலசக்தியான விநாயகர் என்பதால் அவரை அண்டினால் அந்தச் சாபம் நீங்கினால் எல்லாம் சரியாகும்.

இதையே விநாயக கவசம் பாடுகின்றது.

“இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க;
இராக்கதர் பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி

உயிர்திறத்தால் வருந்துயரும் முடிவில்லாத வேகமுறு பிணிபலவும்
விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க”

என்கின்றது அது.

விநாயகர் பிசாசுகள், பேய்கள், பைசாசங்கள் என எல்லாமும் அழிப்பவர் கட்டுப்படுத்துபவர் என்பதை விநாயகப் புராணம் முழுக்க காணலாம்.

பேய், பிசாசுகள் எப்படி உருவாகின்றன. அதை விநாயகப் பெருமான் எப்படி கட்டுப்படுத்துகின்றார் என்பதை புராணத்தின் இரு இடங்களில் தெளிவாக காணலாம்.

முதலில் பிரம்மன் கதை ஒன்றை பார்க்கலாம்.

விநாயகரை வணங்க மறந்த பிரம்மன் படைத்த சிருஷ்டிகள் அனைத்தும் சரியான உருவம் பெறாமல், இஷ்டத்துக்கு பேய், பிசாசுகள் போல் அலைய ஆரம்பிக்க தன் தவறை உணர்ந்த பிரம்மா விநாயரை வணங்கிப் பின்னர் சிருஷ்டி சக்தியைப் பிரயோகம் செய்ய ஆரம்பிக்கின்றார்.

அதாவது ஒவ்வொருவரின் தலைவிதிகளை நிர்ணயிப்பவர் பிரம்மன், அந்த தலைவிதியினை விநாயகரை வணங்கி அவன் எழுதும்போது எல்லாம் சரியாகின்றது, அதை அவன் மறக்கும் போது பேய் பிசாசுகளாக திரிகின்றன, விநாயகரை சரண்டைந்தால் எல்லாம் மாறுகின்றது.

ஆக, விநாயகரை சரணடையும் போது ஒருவன் விதி பிரம்மனால் சரிசெய்யப்படுகின்றது, அவன் கர்மவினை மாறுகின்றது, அதனால் அவன் வாழ்வே பேய், பிசாசுகள் தொல்லையின்றி எல்லாம் சரியாகின்றது.

இரண்டாவது, விநாயகப் பெருமான் ஒருவரே சனியால் பிடிக்கப்படாமல் இருந்தார் என்பது, அதாவது ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால் சனி சோதிக்க வருவார், அந்த சோதனை காலத்தில்தான் பேய், பிசாசுகள், தொல்லைகளெல்லாம் ஏற்படும்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்தக் காலகட்டத்தில் ஒருவனுக்கு அறிவு மங்கும், புத்தி செயலிழக்கும், எதை செய்கின்றொம் எனத் தெரியாமல் குழம்பி பெரும் வீழ்ச்சியில் வீழ்வார்கள்.

நளனும், தர்மனும் சூதாடியது அப்படியே. சீதை பொன்மானுக்கு ஆசைபட்டதும் அப்படியே.

இப்படியான புத்தி தடுமாற்றங்கள் விநாயகரை வழிபட்டால் வராது, சிந்தையில் அசுர சிந்தனைகள், குழப்பமான சிந்தனைகள் மாய ஆசைகள் வராது.

பில்லி, சூனியம், ஏவல் , செய்வினை என்பதெல்லாம் பெரிதாக ஒன்றுமல்ல. சில சூட்சும சக்திகளை பயன்படுத்தி ஒருவன் சிந்தனையினை குழப்புவது மனதில் இருளை ஏற்படுத்துவது.

சிந்தையில் குழப்பமும் இருளும் கொண்டவன் முடங்குவான். இதுதான் செய்வினை கோளாறுகளின் பாதிப்பு.

ஒரு மனிதனை ஆசை, அச்சம் எனும் இருவகையான மாய பேய்கள்தான் ஆட்டுவிக்கும். விநாயகரை சரணடைந்தால் இந்த இரு விஷயங்களில் ஞானமும் தெளிவும் பக்குவமும் வரும். அப்படியான மனிதன் எந்த சிக்கலிலும் சிக்கமாட்டான் என்பது விநாயகர் வழிபாட்டின் தாத்பரியம்.

கர்மவினையோ, ஜாதக பாதகமோ, மிக கேடான காலங்களில் வரும் சிந்தனைகளோ, அந்த சிந்தனைகள் வழி பற்றிக்கொண்ட பேய் பிசாசுகளோ பூதமோ எது என்றாலும் விநாயகர் எனும் மூலசக்தியினை சரணடைந்தால் விலகும், அவரே எல்லாவற்றுக்கும் மூலம் என்பதால் அந்த விக்னேஸ்வரர் எல்லாவற்றையும் காத்துதருவார், விக்கினங்களை விலக்கி தருவார் எனப் பாடுகின்றார் காசிப முனிவர்.

மது, கைடபர் எனும் இரு அசுரர்களை, பேய் குணம் கொண்ட அசுரர்களை ஒழிக்க விஷ்ணு போரில் சண்டையிடுகிறார். ஆனால், அவர்களை தோற்கடிக்க முடியவில்லை போர் நீள்கின்றது.

இதற்கான காரணத்தை அவர் தேடும் போது விநாயகரை மறந்துவிட்டதை அறிகின்றார் “ஓம் ஸ்ரீ கணேஷாய நம” என விநாயகரை நோக்கி தவம் செய்து வரம் வாங்கி அந்த அசுரர்களை ஒழித்து அவனோடு வந்த பேய்களையும் ஒழிக்கின்றார்.

இன்னும் தேவி மகாத்மியத்தில் அன்னை அசுரடருடானன சண்டையில் சோர்வுற்று வீழும்போது விநாயகர் வந்து சக்திகொடுத்து பேய்களை அழித்த காட்சி உண்டு

இதையெல்லாம் சொல்லி இந்த பாடலை பாடுகின்றார் காசிப முனிவர்.

விநாயகர் அனுபூதி : 09

“பல்காப் பியங்கள் பகரும் திறமும்
ஒல்காப் புகழும் உயிர்செல் வமதும்
நல்காய் நலமாய் நளின மலர்த்தாள்
செல்வா திகழ்சித் திவிநா யகனே”

இப்பாடல் இப்படி பிரிந்து வரும்.

பல்காப்பியங்கள் பகரும் திறமும்
ஒல்காப் புகழும் உயிர்செல்வம் அதும்
நல்காய் நலமாய் நளின மலர்த்தாள்
செல்வா திகழ் சித்தி விநாயகனே”

அழகான மலர் போன்ற அடிகளை உடைய செல்வனே சித்தி விநாயகனே! நான் பல்வகைக் காப்பியங்கள் இயற்றும் திறமையையும், அழியாத புகழையும், சிறந்த செல்வத்தையும் பெற அருள்வாய் என்பது பாடலின் பொருள்.

“சீத களப செந்தாமரைப் பூ பாத சிலம்பு பலவிசைபாட” என விநாயகர் அகவலில் விநாயகப் பெருமானின் பாதத்தை ஒளவை சொல்கின்றார், காசிப முனிவரும் அதனை இப்பாடலில் சொல்கின்றார்.

விநாயகப் பெருமான் ஞானம் அருள்பவர்; எல்லா ஞானமும் அறிவும் தெளிவும் அவரிடமிருந்தே வருகின்றன; அதனாலே எல்லா காரியத்தின் முன்னாலும் அவரை தொழச் சொன்னார்கள்.

எந்த காரியம் என்றாலும் எந்த யாகம் என்றாலும் விநாயகரை வணங்கி தொழுதல் மரபு.

காரணம், எல்லாச் செயலும் செய்துமுடிக்க அறிவும் தெளிவும் நிதானமான மனமும் தெளிந்த சிந்தனையும் ஞானமும் அவசியம். விநாயகப்பெருமான் அதனை தந்து எடுத்த காரியம் யாவும் வெற்றியடையச் செய்வார் என்பதை இந்தப் பாடல் சொல்கின்றது.

விநாயகப்பெருமான் கல்விக்கும் கலைகளுக்கும் அதிபதி, விநாயகர் சதுர்த்தி அன்று பாடப்புத்தகம் கலைஞர்களின் கருவிகளையெல்லாம் அவர்முன் வைத்து வணங்கும் மரபு என்றும் உண்டு.

விநாயகரின் அருள் ஏன் அவசியம் என்பதற்கு வியாசபெருமான் வாழ்விலே பதில் இருக்கின்றது.

வியாசர் வேதங்களை தொகுக்க விஷ்ணுவின் சாயலாக அவதரித்தவர், அவர் நால்வகை வேதங்களையும் தொகுக்க வந்தவர், அதனை அடுத்த புராணங்கள் இன்னும் பலவற்றினை எழுதி வைக்க அவதரித்தவர்.

ஆனால், தன் வேலையினை தொடங்கும் போது அவருக்கு குழப்பம் வந்தது; பல விஷயங்கள் வந்து குழப்பின; அவரால் எங்கே தொடங்கி எப்படி முடிக்க எனத் தெரியவில்லை; பல விஷயங்கள் நினைவுக்கு வராமல் தப்பின‌.

இந்தக் குழப்பத்தை போக்க என்ன செய்வது என அவர் பிரம்மனிடமே ஆலோசனைக் கேட்டார். பிரம்மதேவன் அவரிடம் விநாயாகரை வணங்கினால் மட்டுமே இதனிலிருந்து தெளிவுவரும் என அறிவுறுத்தினார்.

அதன்பின் அந்த முழுமுதல் கடவுளைத் தொழுது அவர் அருளுடனே 18 புராணங்களையும் எழுதினார் வியாசர்.

அந்த வியாசருக்கு துணையாக விநாயகப் பெருமானே வந்து மகாபாரதத்தை தன் ஒற்றை தந்தத்தால் எழுதி கொடுத்தது எல்லோரும் அறிந்தது.

இதன் தாத்பரிய போதனை என்னவென்றால் விநாயகரை தொழுது ஒன்றை படைத்தால் அது காலம் தாண்டி நிற்கும் என்பது.

எது காலம் தாண்டி நிற்கும்? எந்த படைப்பில் ஞானமும் முழு தத்துவமும் உண்டோ எது மானிடர்க்கு காலமெல்லாம் வழிகாட்டுமோ அதுதான் காலத்துக்கும் நிற்கும்.

அந்த ஞானத்தை, ஞானமுடன் கூடிய அறிவினை தருபவர் விநாயகப் பெருமான்.

அவர்தான் வியாசர் எனும் மகா முனிக்கு அந்த வரத்தை தந்தார். இன்னும் ஒளவையார், கபிலர், நக்கீரர், காசிப முனிவர், நம்பியாண்டார் நம்பி என எல்லோருக்கும் அந்த ஞானத்தை அருளினார்.

அருணகிரி நாதர் விநாயகர் திருப்புகழ் பாடித்தான் தன் பெரும் ஞானத்தை பெற்றுக் கொண்டார்.

ஜாதகப் பிரகாரம் அவர் கேதுவுக்கு அதிபதி, அதாவது முழு ஞானமும் முழு அறிவும் வழங்குபவர்.

ஞானம் இருக்குமிடம் அறியாமை எனும் இருள் அகலும், அறியாமை நீங்கிய மனம் செய்வதெல்லாம் காலத்துக்கும் வாய்க்கும்.

விநாயகர் நல்ல குருவாக வந்து ஞானம் அருள்பவர், அந்த ஞானமிக்கவர் அருளில் செய்வதெல்லாம் காவியமாய், செல்வமாக நிலைத்து நிற்கும்.

“குருவடிவாகி குவலயம் தன்னில்” என ஒளவையார் வணங்குவது அப்படியே.

நக்கீரர் தன் அகவலில் வணங்குகின்றார்.

“நல்வினை தீவினைநாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே ஈசனும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அரியும் நீயே அயனும் நீயே
திரிபுர தகனஞ் செய்தவன் நீயே
சக்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே பராந்தகன் நீயே
பக்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேகியும் நீயே”

பாரதி பாடுகின்றான்.

“பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக்
கல்வி பலதேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைகட் டெல்லாம் துறந்து.”

விநாயகர் அருள் என்னென்ன தரும் என்பதை ஒளவை சொல்கின்றாள்.

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு”

விநாயகரை வணங்கினால் அவரின் திருப்பாதம் அண்டினால் நல்ல செல்வாக்கு வாய்க்கும்; நல்ல சிந்தனை வரும்; ஆரோக்கியம் வரும்; எல்லாச் செல்வமும் புகழும் தேடி வரும் என்பது ஒளவை சொல்லும் போதனை.

அதனையே பாடுகின்றார் காசிப முனிவர்.

கல்விச் செல்வம் மட்டுமல்ல, பொருள் செல்வத்துக்கும் தெளிந்த சிந்தனை குழப்பமில்லா மனம், ஒருமுகப்பட்ட சிந்தனை அவசியம்.

நாட்டுக்கோட்டை செட்டியார்களின் தெய்வமாக பிள்ளையார்பட்டி விநாயகப்பெருமான் இருப்பதும், காலம் காலமாக அச்சமூகம் வியாபாரத்தில் கோலோச்சுவதும் விநாயகப் பெருமானின் அருளன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

கல்வியும் செல்வமும் காவலும் ஒருசேர தரும் தெய்வமாக மூல தெய்வமாக அவர் போற்றப்படுகின்றார். எல்லா செயலையும் வெற்றிகரமாக முடித்து தரும் காவல் தெய்வமாகவும் அவரே அறியப்படுகின்றார்.

அவர் இந்த பிரபஞ்சத்தின் தத்துவம். அவரின் பெரும் வயிறு அந்த பிரபஞ்சத்தை குறிப்பது. எல்லாக் கலைகளும் அறிவும் கல்வியும் இந்த பிரபஞ்சத்தில்தான் மறைந்திருக்கின்றன, விநாயகப் பெருமான் அந்த ரகசியங்களை தன் அடியார்க்கு தருவார் என்பதும் இந்தப் பாடலின் சூட்சுமம்.

விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மூன்று ஆற்றல்களைப் பொழிகின்றார்.

திருநாரையூர் சௌந்தர்யேஸ்வரர் ஆலயத்தின் இடப்பக்கம் உள்ள சந்நிதியில் அருளும் பிள்ளையார், உளி கொண்டு செதுக்கப்படாதவர் என்பதால், பொள்ளா பிள்ளையார் என்று போற்றி வணங்கப் பெறுகிறார். நம்பியாண்டார்நம்பி மூலம் ராஜராஜ சோழனுக்கு தேவாரத் திருமுறைகள் கிடைக்கச் செய்தவர் இந்த பிள்ளையார்தான். இவரை வணங்கிட, கல்வியும் ஞானமும் மேம்படும் என்பது ஐதிகம்.

எல்லா காரியங்களும், யாகங்களும், எல்லா பிராத்தனைகளும் இந்த ஸ்லோகத்தை சொல்லித்தான் விநாயகரை வணங்கி தொடங்கப்படும்.

“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே”

அதாவது “குறுக்கிடும் எல்லா இடையூறுகளையும் போக்குவதற்காக, வெண்ணிற உடை அணிந்தவரும், நான்கு கைகளைப் பெற்றவரும், எங்கும் நிறைந்திருப்பவரும், நிலவைப் போல குளிர்ச்சி மிக்கவரும், எப்போதும் முகத்தில் மகிழ்ச்சி கொண்டவருமான விநாயகரைத் தியானிப்போம்’ என்பது பொருள்.

அந்த விநாயகரை வணங்கினால் ஞானம் பெருகும், ஞானத்தினால் முழு அறிவினால் செய்யும் எல்லா காரியமும் வியாசர் படைத்த காவியம் போல், ஒளவையின் மொழிகள் போல் நிலைக்கும், அதற்கு விநாயகர் அருள் அவசியம், அவர் திருப்பாதம் சரணடைதல் அவசியம் என்பதை சொல்கின்றார் காசிப முனிவர்.

விநாயகர் அனுபூதி : 10

“பூந்தார் குழல் வில் புருவம், தளிர்போல்
ஆந்தே கம்மிளிர் அணியார் இருவர்
சார்ந்தே விளங்கும் தனிமா முதலே!
தேர்ந்தே தொழுதேன் சிறியேற்(கு) அருளே”

மாலையாக கட்டிய பூக்களை அணிந்தவர்களும், வில் போன்ற புருவம் கொண்டவர்களும் இளம்தளிர் மேனியினையும் கொண்ட சித்தி புத்தி எனும் இரு மனைவியரை பெற்றிருக்கும் எம்பெருமானே! மூலவரான கணபதியே, இந்த சிறியேனுக்கும் அருள் செய்வாயாக என்பது பாடலின் பொருள்.

இந்தப் பாடலின் பொருளை விநாயகப் புராணத்தின் காட்சியினை கொண்டே விளக்கலாம்.

ஒவ்வொரு யுகத்திலும் பிரம்மன் புதிய உலகை உயிர்களை சிருஷ்டிப்பான், அப்படி அவர் சிருஷ்டிக்க தொடங்கும் போது அவருக்குள் ஒரு கர்வம் வந்தது.

தான் மட்டும் இல்லையென்றால் இங்கு படைப்புதொழில் எப்படி நடக்கும் என தனக்குள்ளே கர்வம் பொங்க நின்றார், இந்த அகம்பாவத்தை கணபதி ஒடுக்க எண்ணினார்.

அதன்படி அவர் பிரம்மனை முறைக்க பிரம்மனின் படைப்பில் நிறைவின்மை வந்தது, படைக்கும் பொருளும் அதன் இயங்கு சக்தியும் சரியாக முழுமை அடையவில்லை.

பிரம்மனின் படைப்புகள் அலங்கோலமாய் முழுமையற்று நின்றன, அதன் இயக்கமும் சரியில்லாமல் எல்லாம் குழம்பிற்று.

பிரம்மன் அரண்டு போனான். தன் படைப்பில் இப்படி ஒரு குறைவர காரணம் என்ன எனத் தவித்துப் போனான். எங்கு தேடினாலும் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை, பின் தனக்குள் தேடினான்.

அப்போதுதான் விநாயகரை தன் அலட்சியத்தால் மறந்த சாபத்தின் பலன் இது என்பதை கண்டு கொண்டான். பின், விநாயகரிடம் மனமார மன்னிப்பு கோரினான்.

விநாயகர் தன் பிரதான சக்தியான இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி எனும் இரு சக்திகளை அவனுக்கு அருளினார். அந்த சக்திகள் அவனை அடைந்து பலம் கொடுத்தன. இதனால் பிரம்மனின் படைப்புக்கள் அவன் விருப்பப்படி முழுமை அடைந்தன, அதன் இயங்கு தன்மையும் சரியாக வந்தது.

உயிர்கள் அதனதன் வடிவில் அதனதன் உருவில் பூரணமாயின‌.

பிரம்மனுக்கு இந்த இரு சக்திகளை விநாயகர் அருளினார் அல்லவா? அது சித்தி, புத்தி என இரு பெண்களாக வளர்ந்தனர்.

அவர்கள் பெரியவராக வளர்ந்தபின் யாருக்கு திருமணம் செய்து வைப்பது என குழம்பிய பிரம்மனுக்கு நாரத முனிவரே வழிகாட்டினார்.

அதன்படி பார்வதி மைந்தனான விநாயகப் பெருமானுக்கே அவர்களை திருமணம் செய்து கொடுப்பது என முடிவாயிற்று.

பின் ஜனக முனிவர் மந்திரம் ஓத, எல்லா தேவர்களும் ரிஷிகளும் அறிய அந்த சித்தி, புத்தி எனும் இரு தேவியரையும் விநாயகப் பெருமான் ஏற்றுக் கொள்கின்றார்.

இது சூத முனிவர் சொல்லும் காட்சியாக புராணத்தில் உண்டு.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், விநாயகர் இரு சக்திகளை பிரம்மனுக்கு வழங்குகின்றார், பிரம்மனின் கடமை முடிந்ததும் அந்த இரு சக்திகளும் விநாயகப் பெருமானையே அடைகின்றன‌.

இதுதான் சித்தி புத்தி விநாயகர் எனும் தத்துவமாகும்.‌அதுதான் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி எனும் தத்துவார்த்தமாகவும் சொல்லப்படுகின்றது.

“சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த” என்பது ஆதிசங்கரர் வாக்கு.

அதாவது, ஜடம் எனும் அசையா சக்தியும், இயக்கு சக்தியும் இணையும் போது உலக இயக்கம் நடக்கின்றது என்பது பொருள்.

அதாவது, பரப்பிரம்மம் இரு சக்திகளாக அதன் துணை சக்திகளாக இயக்கத்தை நடத்துகின்றது.

அந்தப் பரப்பிரம்மம் சிவரூபமாகும் போது மாயை பார்வதியாகிறது. அந்த பார்வதியே இரண்டு சக்திகளாகி கங்கா, கௌரி என்று பிரிகிறார்கள்.

பரப்பிரம்மம் விஷ்ணு எனும் வடிவமாகும் போது மாயை வைஷ்ணவி என்றாகிறது. அந்த வைஷ்ணவியே இரண்டு சக்திகளாகி ஸ்ரீதேவி, பூதேவி என்று வடிவெடுக்கிறார்கள்.

பரப்பிரம்மம் முருகனாகும் போது மாயை கௌமாரி என்று பெயர் பெறுகிறாள். அந்த கௌமாரியே இரண்டு சக்திகளாகி வள்ளி, தேவசேனா என்று விளங்குகிறார்கள்.

பரப்பிரம்மம் பிரம்மா எனும் போது மாயை சரஸ்வதி, காயத்ரி என இருவடிவில் விளங்குவாள்.

அப்படியே பிரம்மம் கணபதியாக வரும்போது மாயா வல்லபா என்றும், அவளே சித்தி, புத்தி என்றும் வருகின்றார்கள்.

ஆம்.‌ பிரம்மனின் பலவீனத்தையும் விநாயகர் அதனை சரி செய்த அருளையும் கவனியுங்கள். அந்த இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தியின் அவசியம் புரியும்.

இச்சை என்பது எதை செய்யவேண்டும் எனும் ஆர்வம், கிரியா என்றால் செயல். செய்யப்படும் செயல் ஞானத்துடன் முழுமையான அறிவுடன் தெளிவுடன் செய்யப்படவேண்டும். அந்த வரம் அருள்பவர் கணபதி என்பது விளங்கும்.

பிரம்மனின் படைப்பினை பார்த்தால் அங்கே ஒரு பூரணத்துவம் தெரியும். அது விலங்கோ, பூச்சி, புழு, பறவையோ, மரமோ, செடிகொடியோ, மனிதனோ எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கான வடிவம் இருக்கும்.

அவை அதனதன் கடமையினை நுணுக்கமாக செய்யும். எறும்பு, தேனீ, குருவி முதல் மழை வரை எல்லாமே அதனதன் இயல்பினை சரியாகச் செய்யும்.

இந்தப் படைப்பின் தத்துவத்தைத்தான், நிறைவின் முழுமையின் தத்துவத்தைத்தான் விநாயகப் பெருமானின் சித்தி புத்தி கோலம் விளக்குகின்றது.

விநாயகப்பெருமான் அருள் இருந்தால் எந்த படைப்பையும் முழுமையாக செய்யமுடியும், அதனையே சரியான இயங்கு நிலைக்கு கொண்டுவரமுடியும், அதனை ஞானமாக நிலைக்க வைக்கவும் முடியும் என்பது அந்தத் தத்துவம்.

சித்தி என்றால் அது இச்சா சக்தியும், புத்தி என்றால் கிரியா சக்தியுமாக அமைந்து இந்த இரண்டும் ஞானம் எனும் விநாயகபகவான் அருளால் சரியாக பொருந்தி அது சரியான படைப்பாக வரும், அந்த அருளை எனக்கு தரவேண்டும் எனப் பாடி கேட்கின்றார் காசிப முனிவர்.

தேனீயின் சக்தி ஒரு சிங்கத்துக்கு வந்தால் சரியல்ல, சிங்கம் மலரை முகர்ந்து கொண்டிருந்தால் சரியல்ல‌.

தூக்கணாங்குருவின் சக்தி ஒரு யானைக்கு வருவதோ, குயிலின் சக்தி காண்டாமிருகத்துக்குள் வருவதோ, கிளியின் சக்தி கழுகின் உடலிலோ பொருந்துவது சரியல்ல‌.

அதனதன் இயல்பில், அதனதன் படைப்பில், அதனதன் சக்தி சரியாக பொருந்தி வந்தால்தான் சிறப்பு.

அப்படி தான் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரியான வடிவமும், சரியான பொருளும் அல்லது இயக்கமும் கொண்டு ஞானமாக அமைய வேண்டும் எனவும், அந்த வரத்தை விநாயகப்பெருமானே அருளமுடியும். அவனே பிரம்மனுக்கு அதை வழங்கினான், அவனிடம் அந்த சக்தி மீண்டும் வந்தடைந்தது.

அந்த சித்தி, புத்தி எனும் சக்திகளை தனக்கும் வழங்கினால் தான் செய்யும் காரியமெல்லாம் வாய்க்கும், அது ஆன்மீகம் லௌகீகம், இம்மை மறுமை, செய்யும் படைப்பு அது பயனளிக்கும் விதம் என எல்லாவற்றிலும் நிலைத்து ஞானத்தோடு நிற்கும் என உணர்ந்து அந்த வரத்தை வேண்டி பாடுகின்றார் காசிப முனிவர்.

இது விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றான சித்தி புத்தி விநாயகர் கோலத்தினை சொல்லும் பாடல், அந்த கோலத்தில் இரு பெரும் வரங்களை அருள்வார். அது ஒவ்வொரு மானுடர்க்கும் தேவை என்பதை போதிக்கும் பாடல்.

ஆன்மீகம், லௌகீகம் என இரு வாழ்வுக்கும் இந்த வரம் அவசியம். எதை தேடி போகின்றோம், எப்படி அதை அடையபோகின்றோம், ஞானமாக எப்படி இலக்கை அடையபோகின்றோம் என்பதை ஆன்மீகத்தில் அருளும் வகை முதலாவது.

ஒரு தொழிலை எப்படி செய்கின்றோம், எவ்வளவு நேர்த்தியாக செய்கின்றோம் அது எப்படி பலனளிக்கின்றது, எவ்வளவு ஈர்ப்பினை பெற்று அது லாபம் கொடுக்கின்றது, நல்ல பலனை தருகின்றது என செய்ய வைப்பது இரண்டாம் வகை.

மானிடனுக்கு வாழ்வில் தொழில் அவசியம், எவ்வகை தொழில் என்றாலும் அங்கே முழுமையான தொழில் அறிவும், அதை சரியாக செய்யும் ஆற்றலும், ஞானமாக அதில் நிலைத்திருப்பதும் மகா முக்கியம்.

ஒரு தொழில் அல்லது காரியத்தை சரியாக உருவமாக வடிவமிடுவதும், அதை சரியாக இயக்குவதும் எல்லோருக்கும் வாய்க்காது.

சிலருக்கு அறிவிருக்கும், ஆனால் வாய்ப்பிருக்காது, வாய்ப்பு உள்ளோர்க்கு அதை பயன்படுத்த தெரியாது, எல்லாம் இருந்தும் சிலருக்கு எதை எப்படி செய்யவேண்டும் எனத் தெரியாது.

ஒரு தொழிலை எப்படி செய்யவேண்டும் எனத் தெரிந்தவருக்கு அதை தொடங்கவோ செய்யவோ வழி இருக்காது.

யாருக்கு ஞானம், அறிவு, தெளிவு எல்லாம் கலந்து சரியாக திட்டமிட்டு சரியான இடத்தில் சரியான படைப்பினை அதன் பொருத்தமான இயக்கத்துடன் தருவார்களோ அவர்கள் வெற்றிபெறுவார்கள்.

அந்த வரத்தை விநாயகப் பெருமானே தருவார் என்பதால் அவரை அப்படி பாடி வணங்குகின்றார் காசிப முனிவர். ஒவ்வொருவரும் அப்படி வணங்கி அந்த வரங்களை பெற்றுக் கொள்ள இந்தப் பாடலை தருகின்றார்.

அனுபூதி என்றால் முழுமை எனப் பொருள். பிரம்மனின் படைப்பின் குறை முழுமை அடைந்ததை போல மனதாலும் வாழ்வாலும் செயலாலும் மனிதன் முழுமை அடைய இந்த வரங்கள் அவசியம். அதை விநாயகப் பெருமான் எல்லோருக்கும் அருளட்டும்.

எல்லாவற்றிலும் ஒரு முழுமை வேண்டும், முழுமை இல்லா இடமே அலங்கோலமும் அரைகுறையுமாகும். காரியம் தடைபட்டு, எடுக்கும் முயற்சிகள் தடைபட்டு நிற்பதும் அப்படியான நிலையே.

அதனை போக்க ஒரு ஸ்லோகம் உண்டு. விநாயகப் பெருமானை நோக்கி அதைப் பாடி துதிக்க காரிய தடை எல்லாம் அகலும்.

“ஓம் சித்தி புத்தி லக்ஷ்ய லாப சஹித ஸ்ரீ கஜானனாய நமஹ”

ஆம். எல்லா தடையும் நீங்கி ஒருவனை எல்லா வகையிலும் முழுமை அடையச் செய்பவர் கணபதி, அந்த கோலமே சித்தி புத்தி கணபதி கோலம்.

தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர் என உரக்க சொல்லி, பாடி அவ்வரத்தை நமக்கும் தர உருகுகின்றார் காசிப முனிவர்.