விநாயகர் அனுபூதி : 11 to 15
விநாயகர் அனுபூதி : 11
“வஞ்சப் புலன் என் வசமாய் நிசமாய்க்
கொஞ்சிக் குலவிக் குணமாய் மிளிர
எஞ்சித் தமதில் இனிதே உனது
கஞ்சக் கழல்வை கணநா யகனே”
தேவர்களுக்கெல்லாம் தலைவனே! என்னை வஞ்சித்துத் தீய வழியில் சேர்க்கும் ஐம்புலன்களும் என் அறிவுக்கு உட்பட்டு நல்ல செயல்களைச் செய்பவையாய் மாறி ஒளிவிடுவதற்கு, என் சித்தத்தில் உனது தாமரை போன்ற அடிகளை வைப்பாய் என்பது பொருள்.
ஐம்புலன்களையும் அடக்காமல் எதிலும் வெற்றி இல்லை.
அதுவும் ஆன்மீகப் படிநிலையில் இந்தப் புலனடக்கம் மிக மிக முக்கியமானது.
மானிட மனதில் இருந்தே ஆசைகள் எழுகின்றன. அவையே சிந்தைக்கு சென்று மானிடரை இயக்குகின்றது. இந்த ஆசைகளை உருவாக்குவதும் அதை அனுபவிக்க தூண்டுவதும் இந்த ஐம்புலன்களின் மயக்கமே. இதனால் இந்த ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வைக்க சொன்னார்கள் ஞானிகள்.
வழிபாடு, தவம், யோகம் என்பதெல்லாம் இந்த ஐம்புலன்களையும் அடக்கி மனதை கட்டுப்படுத்தும் முயற்சியே.
இந்த ஐம்புலன்களையும் அடக்குவதை பல வகையில் வலியுறுத்திற்று இந்துமதம். இந்துக்களின் பூஜையும், விரதம் முதலான ஏற்பாடுகளும் இன்னும் பலவும் இந்தப் புலன்களை கட்டுப்படுத்தும் பயிற்சியே.
இதனை எல்லா இந்து ஞானியரும் சொன்னார்கள். ஐம்புலன் அடக்காமல் அழிந்த இராவணனையும், துரியோதனையும், இந்திரனையும் சொல்லிச் சொன்னார்கள்.
இந்த ஐம்புலன்களே மூவகை பெரும் ஆசைகளுக்கும், அவை கொடுக்கும் மயக்கங்களே இதர வழி வீழ்ச்சிக்கும் காரணமாய் இருப்பதையும் சொன்னார்கள்.
எல்லா இந்து ஞானியர் போதனையும் ஐம்புலன்களை அடக்க சொல்வதிலேதான் இருந்தது. வள்ளுவன் அதை தெளிவாகச் சொன்னான்.
“சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு”
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”
என ஆமையினை உதாரணம் காட்டிச் சொன்னான்.
இந்த மானிடப்பிறவி கிடைத்தற்கரியதுதான். ஆனால், இதர பிராணிகளுக்கு இல்லா பலஹீனங்களும் மனித பிறவிக்கு மட்டும்தான் உண்டு. ஆம். அவை எல்லாம் ஒரு புலனை அடக்கினால் கூட பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
அதாவது விலங்குகளுக்கு கூட ஒரு புலனின் ஆசையில்தான் அழிவு, மானிடருக்கோ ஐந்து புலனின் ஆசைளையும் அடக்காவிட்டால் சிக்கல்.
இதைப் பழைய தமிழ்ப்பாடல் அழகாகச் சொல்லும்.
ஆம். விவேக சிந்தாமணி இன்னும் தெளிவாகச் சொல்லும்.
மான் எளிதில் சிக்காது. ஆனால், ஓசைக்கு மயங்கி நிற்கும். அப்பொழுதுதான் வேடன் அம்பு எறிவான். அது வீழும்.
யானை பலமானது. ஆனால், இன்பத்துக்காக பெண் யானையினை தேடிச் செல்லும் பொழுது வழிதவறி அல்லது குழியில் விழுந்து சிக்கும்.
பூச்சிகள் ஒளியினை கண்டு வந்து விழும்; வண்டுகள் ருசியான தேனை தேடி வந்து சிக்கும்; எலி போன்றவை வாசத்துக்கு மயங்கி ஓடிவந்து சிக்கும்; மீன் தூண்டில் புழுவிற்காய் பலியாகும்.
இதேப் பாடலின் வடமொழி ஸ்லோகம் ஒன்று உண்டு.
“சப்தாதி பஞ்சபிரேவ பஞ்ச பஞ்சத்வம் – ஆபு ஸ்வகுணேந பத்தா
குரங்க மாதங்க பதங்க – மீந ப்ருங்கா நர:பஞ்சபிரஞ்சித கிம்”
‘குரங்க’ என்றால் மான்.
அதாவது மானும், யானையும், விட்டில் பூச்சியும், மீனும் ஒரு புலனால் வீழ்கின்றது. ஆனால், மானிடம் ஐம்புலன் வழியாகவும் பலவீனமாகி வீழ்கின்றான் என்கின்றது ஸ்லோகம்.
அக்காலத்தில் தமிழும் வடமொழியும் இம்மாதிரி தத்துவங்களைப் பரிமாறி கொள்வது வழமையாய் இருந்தது.
ஆம். பிராணிகள் ஐம்புலன்களில் ஒரு புலனில்தான் பலவீனமானது. மானிடனோ ஐந்து புலன்களும் பலவீனமானவன். அதை அடக்காவிட்டால் அதன் வழியே அவன் மனம் சென்று கொண்டிருக்கும். அந்த மாயையில் விழும் மனம் யோகம் அடையாது.
யோகத்தில் புலனடக்கம் முக்கியம். ஐந்து புலன்களையும் அடக்கிய யோகிக்கு கண்களால் காணும் காட்சி, காதால் உணரும் இசை, நறுமணம், ருசியான உணவு, சிற்றின்பம் என எதிலும் ஆசை செல்லாது. அவன் மனம் இதெல்லாம் மாயை என்பதில் நிலைத்திருக்கும்.
இதனாலே யோகிகள் விலகி இருப்பார்கள்; மானிடரோடு ஒட்டமாட்டார்கள்; உணவை வெறுப்பார்கள்; அதை பல வழிகளில் அகோரிகள் காட்டுவார்கள்; மானிடர் சுகம் என கருதும் எதுவும் அவர்களுக்கு சுகமாயிராது; அதை எளிதாக கடந்துச் செல்வார்கள்.
இந்த ஜம்புலன்களைப் பார்த்து அடங்கு என்றால் அடங்குமா? அடங்காது. அதற்கொரு உபாயம் எனும் வழி உண்டு.
இதில் உபாயம் என்பது அந்த புலன்கள் யோகத்தால் அடங்கும் வழி. வாசி யோகம் எனும் மூச்சு பயிற்சியினாலும் கடுமையான தவத்தாலும் மனதை ஒருநிலைப்படுத்தினால், அந்த புலன் அடங்கும் என்பது.
ஆம். மூச்சு சீரானால் மனம் ஒருநிலைப்படும். ஒருநிலைப்பட்ட மனம் புலன்கள் பின்னால் அலையாது, அங்காடி நாய் போன்ற மனதை கட்டி வைக்கும் உபாயமே மூச்சு பயிற்சியுடன் கூடிய தவம்.
ஆம். ஐம்புலன்களை அடக்கினால் வரும் இன்பமே நிலையான இன்பம்; மற்ற எல்லாம் நிலையற்ற இன்பம்; அலைகழிக்க வைக்கும் இன்பம் .
இதனை இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும் என்றால் திருமூலரின் பாடலினை சொல்லிக் காணலாம்.
“முழங்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே”
இதுவும் திருமந்திரப் பாடல். இங்கு வேழம் எனும் யானையினை ஐம்புலன்களுக்கு உவமையாக கூறுகின்றார் திருமூலர்.
யானை வலுவானது. ஆனால் சாதுவானது. அதே நேரம் மதம் பிடித்துவிட்டால் யானைப் போல் அழிவினை உண்டாக்குவது எதுவுமில்லை.
மாயையால் மருண்டு மதம் கொண்ட புலன்களை அடக்க “அறிவு’ என்னும் கோட்டையைத் தான் அமைத்ததாகவும், ஆனால் அவை அந்தக் கோட்டையைத் தாண்டி ஓடி (பிழைத்தன ஓடி) பெரும் கேட்டினை விளைவித்ததாகக் கூறுகிறார் திருமூலர்.
“சொல்லக்கில்லேன் சுடர்ச் சோதியை நாடொறும்
செல்லக்கில்லேன் திருமங்கையும் அங்கு உள
வெல்லக்கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்ல நின்று ஓடும் குதிரை ஒத்தேனே”
இந்தப் பாடலிலோ ஐம்புலன்களையும், அவற்றால் இயக்கப்படும் மனதையும் “குதிரை’ என்று உருவகம் செய்கிறார். ஏன்? குதிரை என்பது வேகத்தின் அடையாளம். குதிரைகள் சுதந்திரமானவை. எளிதில் அடிபணியாது. தூங்கும்போதுகூட நின்று கொண்டே தூங்கும்.
நமது ஐம்புலன்களும் மனமும் தூக்கத்தில் கூட சற்றே விழிப்பாகவே இருக்கும். எளிதில் அடங்குவதில்லை. மனதின் வேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகம்.
ஆகவேதான் “குதிரை’ என்கிறார்.
குதிரையைப் பழக்குவது எவ்வளவு கடினமோ, அதுபோன்றே நமது புலன்களையும் மனதையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவ தும் மிக மிகக் கடினமான ஒன்று.
ஒருமுறை ஒரு குதிரையை அடக்கி சேணம் இட்டுவிட்டால், அந்தக் குதிரை தனது வாழ் நாள் முழுவதும் அந்த எஜமானனுக்கு உண்மையுள்ளதாக இருக்கும். சொற்படி நடக்கும்.
ஐம்புலன்களையும், மனதையும் தந்திர யோகப் பயிற்சிகளின் வழியே நமது கட்டுப்பாட்டிற்குள் ஒருமுறை கொண்டு வந்துவிட்டால் பின்னர் அவை எப்போதும் நமக்கு கட்டுப்பட்டே இருக்கும்.
ஆம். புலன்களை அடக்கினால் அது கொடுக்கும் பலனும் சக்தியும் அதிகம். புலன்களை அடக்காவிட்டால் அது கொடுக்கும் வீழ்ச்சி மிகப் பெரிது.
ஒளவை தன் ஞானகுறளிலும் புலனடக்கத்தை பாடுகின்றாள்,
“அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு”
ஐம்புலன்களையும் அடக்கும் வழி தெரிந்து அவற்றை அடக்கிவிட்டால் உடலானது எப்பொழுதும் விழிப்பு நிலையிலே இருக்கும். அது உறக்கத்தை மயக்கத்தை மேற்கொள்ளாது, ஆத்ம விழிப்புடன் எப்பொழுதும் ஞானநிலை விழிப்புடனே இருக்கும் என்பது பொருள்.
இதனையே கீதையில் கண்ணன் சொல்கின்றான்.
“அர்ஜூன, நீ முதலில் புலன்களை அடக்கி ஞான விஞ்ஞானத்தை அழிக்கின்ற பாப வடிவாகிய ஆசையை அறவே ஒழித்து விடு”
இதைத்தான் இந்த போதனைகளைத்தான் இங்குப்பாடி ஐம்புலன்களை அடக்கும் அவசியத்தை சொல்கின்றார்.
புலன்களை அடக்கினால் ஆசை அகலும்; ஆசை அகன்றால் ஞானம் பெருகும்; ஞானம் பெருகினால் நிம்மதியான அந்த அனுபூதி நிலை வாய்க்கும்.
இந்த அனுபூதி நிலையினைத்தான் ஒளவை விநாயகரை வேண்டித் தன் அகவலில் பாடுகின்றார்.
விநாயகப்பெருமான் கையில் ஒரு கோடரி வைத்திருப்பார், அதன் பொருள் அவர் பற்றுக்களை பாச பந்தங்களை அகற்றுவார் என்பது.
எங்கும் ஆசையும் பந்தமும் நீங்கினால் ஐம்புலன்கள் தானாக அடங்கும்.
அதையே தன் ‘விநாயகர் அகவலில் ஒளவை பாடுவார்.
“ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்” என விநாயகர் அகவலில் பாடுகின்றார்.
ஆம். யோகத்தின் முதல்படி ஐம்புலன்களையும் அடக்குவது. அது அன்றி யோகம் சாத்தியமில்லை. அதைத்தான் சொல்கின்றார் ஒளவையார்.
அந்த அருளை வேண்டி, ஐம்புலனையும் அடக்கும் வரம் வேண்டி பாடுகின்றார் காசிப முனிவர். விநாயகப் பெருமான் ஞானத்தின் அதிபதி; ஞானம் இருக்குமிடம் ஐம்புலன்களும் அடங்கும்; தேவர்களில் எந்த சோதனைக்கும் சிக்காதவர் விநாயகர் என்பது அவரின் சிறப்பு.
அந்த சிறப்பான வரம் வேண்டி பாடுகின்றார் காசிப முனிவர். ஒவ்வொருவரும் விநாயகரிடம் இருந்து பெற வேண்டிய வரமும் அதுதான்.
விநாயகர் அனுபூதி : 12
“பொல்லா வறுமை புரைசால் கொடுநோய்
எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவே
வல்லாய் வருவாய் வளமே தருவாய்
உல்லா சமிளிர் ஒருகை முகனே”
அதாவது அழகான துதிக்கையை உடையவனே! பாவங்களைச் செய்யத் தூண்டும் வறுமையையும், கொடிய நோய்கள் எல்லாவற்றையும் அழித்து என்னை ஆண்டு கொள்ள வல்லமை பெற்றவன் நீ ஒருவனே! எனக்கே வளங்களைத் தருவாய் என்பது பாடலின் பொருள்.
இங்கு வறுமை என்பது பொருள் இன்மை மட்டும் அல்ல, அதனை மூன்றாக சொன்னார்கள் ஞானியர்.
நிதியில்லா வறுமை, ஒழுக்கமில்லா வறுமை, மற்றும் ஆன்மீக வறுமை என மூன்று.
இந்த மூன்று வறுமைகளின் அடிதளம் அல்லது ஆதிமூலம் என்பது அறியாமை என்பதாகவே இருக்கும் .
ஏன் இப்படி வாடுகின்றோம்? எதனால் இப்படி சிக்கியிருக்கின்றோம், இதன் தீர்வு என்ன என்பதை அறியாமல் இருப்பதே இந்த வறுமைக்கான காரணம்.
பொருள் குவிக்க ஆயிரம் வழிகள் உலகில் இருந்தும் மானிடர் வறுமையில் வாட அவர்கள் அறியாமையே காரணம்.
இந்த வறுமையினை விட கொடுமையானது ஒழுக்கத்தில் வரும் வறுமை, அதைவிட கொடுமையானது ஆன்மீக வறுமை.
இந்த ஒழுக்கத்தால் வரும் வறுமைக்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டுக்கள் இராவணனும் துரியோதனனும்.
இராவணனிடம் மிகப்பெரும் செல்வம் இருந்தது. கல்வி, பக்தி, அரசு, எல்லா உலகையும் வெல்லும் பலம், மாபெரும் அதிகாரம், வரம் என எல்லாமும் இருந்தது.
அவனிடம் பொருள் வறுமை இல்லை. ஆனால், வறுமை ஒழுக்கத்தில் இருந்தது.
அந்த வறுமை அவனை அழித்தே போட்டது, அந்த ஒழுக்க வறுமையில் இருந்து வெளிவரும் வகை அவனுக்குத் தெரியவில்லை.
மகாபலசாலி வாலியும் இவ்வகையே.
துரியோதனனும் ஏறக்குறைய இந்த வகைதான். எல்லாம் இருந்தும் பேராசை எனும் வறுமையில் சிக்கி வீழ்ந்தான்.
இந்த ஒழுக்க வறுமைதான் பெண்ணாசை, மண்ணாசை, பொருளாசை, பதவி ஆசை என ஆசைளை பல வகையாக பெருக்கி ஒருவனை வீழவைக்கின்றது.
இந்த அறியாமைதான், அதாவது தன்னிடம் எது இல்லையோ அதனை அடைய ஏங்கி தவித்து அதனூடாகவே வீழ்ந்து போகும் அறியாமைதான் அந்த வெற்று மயக்கம்தான் வறுமையில் தலையாயது .
இந்த வறுமை வந்தால் அதாவது தன்னிடம் எது இல்லையோ அவ்வகையில் தான்வறுமைபட்டதாக உணர்ந்து இந்த உலகம் நிலையானது போலவும், தானும் தான் மயங்கிய விஷயங்களும் நிலையானதுபோலவும், அதற்காக ஏங்கி எல்லா பாவங்களையும் செய்து அழிந்து போவது ஒரு அறியாமை.
இந்த அறியாமை எனும் வறுமை வந்த இடத்தில் கல்வி, குடி, குலம், பணம், குணம், செல்வாக்கு, அதிகாரம், புகழ் என எல்லாம் வீழும்.
அறியாமை எனும் அஞ்ஞானத்தை நீக்கி வாழ்வதே அனுபூதி நிலை. அந்த அஞ்ஞான அறியாமையினை விநாயகப் பெருமான் நீக்கி தருவார், ஞானத்தை அருள்வார் என்பதே பாடலின் பொருள்.
இது இந்து ஞானத்தின் போதனையாகவே இருந்தது.
இந்திரன் கதை, சந்திரன் கதை முதல் இதிகாசங்கள் வரை இதுதான் அடிப்படை போதனையாக இருந்தது.
அறியாமை எனும் மாய வறுமை நுழைந்தால், ஒருவன் எல்லா வகை ஐஸ்வர்யங்களையும் பெற்றிருந்தாலும் மாய அறியாமை ஆசையில் வீழ்ந்தால் என்னாவான் என்பதை போதிக்க பல பாடங்களைச் சொன்னார்கள்.
அறியாமையால் பொருளீட்டும் வழி தெரியாமல் வறுமையில் சிக்கினால் கூட மீளலாம். ஆனால், எல்லாம் பெற்றிருந்தும் இவ்வகை மாய அறியாமையில் சிக்கினால் அங்கு கல்வி, செல்வம், குடிபிறப்பு என எல்லாம் நீங்கி மாபெரும் வீழ்ச்சியே கிடைக்கும் என்பதை சொன்னார்கள்.
வறுமையில் சிக்கினால் கூட கடவுளை அண்டினால் மீளலாம் என குசேலன் கதையிலும், இன்னும் பல புராணங்களிலும் சொன்ன இந்துமதம், எல்லாம் இருந்தும் மாய வறுமையில் சிக்கினால் என்னாகும் என்பதையும் பல இடங்களில் சொல்லிற்று.
தர்மன் சூதாடி தோற்றதும் ஒருவகை வறுமையே; சீதை மாய மானுக்கு மயங்கியதும் ஒருவகை வறுமையே; பாஞ்சாலி துரியனை பார்த்து சிரித்ததும் அறியாமையே.
இந்த லௌகீக அறியாமை பற்றி சொன்ன இந்துமதம் ஆன்மீக வறுமை பற்றியும் சொல்லிற்று.
ஆன்மீக வறுமை என்பது பூலோக வாழ்வின் மயக்கங்களால் இதுதான் நிரந்தரமென்றும், இந்த வாழ்வு ஒருகாலமும் முடியாதது என அறியாமையில் எண்ணி இறைவனை மறப்பது, மறுமை என ஒன்று இல்லை என எண்ணி இப்பிறவியே நிரந்தரம் என அறியாமையில் சிக்கிக் கிடப்பது.
வசிஷ்ட மகரிஷி ஸ்ரீராமருக்கு “அறியாமையே எல்லாவகையான வறுமையிலும் மிக மிக மோசமானது” என்று கூறுகிறார். அறியாமை நம் நெஞ்சில் வசிக்கிறது, அதுவே நாம் அனுபவிக்கும் அனைத்து துயரங்களுக்கும் காரணம் என்கின்றார்.
அறியாமை நோய் போல் உள்ளே ஒளிந்திருக்கும், யார் முக்தி நிலையினை அடைய விரும்பி காரியங்களை செய்வார்களோ அப்பொழுது அது அவர்களை முழுக்க ஆட்கொண்டு வீழ்த்தும்.
இராவணனும் சூரபத்மனும் அவ்வகையே.
இந்த அறியாமையினை இறைவனை பணிந்தால் அகற்றலாம்.
சேக்கிழார் தன் பெரிய புராணத்தில் அறியாமையினை அக இருள் என்கின்றார்.
“இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்”
அறியாமை நீங்க பெரியபுராணம் வழிகாட்டும் என்கின்றார்.
சம்பந்த பெருமான் அதனையே தன் பாடலில் பாடுகின்றார்.
“முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும் மொழியச்
செந்நெல் வயல் கழனித் தென்திரு ஆரூர் புக்கு
என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே”
அதாவது தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில், பெரிய அறியாமை காரணமாக, வருங்காலத்திற் பெற நினைத்த நினைவுகளும், அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு, செந்நெற்களை விளைவிக்கின்ற, நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய, அழகிய திருவாரூரினுட் சென்று, எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை, யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ என மருகி இரைந்து பாடுகின்றார்.
விநாயகப் பெருமான் ஞானத்தின் தெய்வம், ஞானம் இருக்குமிடம் அறியாமை அகலும், அந்த அறியாமை அகன்ற இடத்தில் மூவகை வறுமையும் அகலும், எல்லா வகை செல்வமும் பெருகும், நிறைவான நிலை வரும்.
அப்படியே விநாயகப் பெருமான் நோய்களையும் விரட்டுவார், பெரும்பாலும் நோய்க்கு காரணம் கவலையே. அந்தக் கவலையின் பெரும் காரணம் அறியாமை அன்றி வேறல்ல.
அறியாமை அகலுமிடம் கவலை அற்றுப்போகும், கவலை அற்றுப்போன இடத்தில் நோய்கள் வாரா.
அவரின் சிறப்பு இன்னமும் உண்டு.
இந்த விநாயகப்பெருமான் உடலுக்கு கவசமாய் நின்று காப்பவர், அதனாலே அவரைப் பற்றி ஒரு கவசமும் பாடி வைத்தார் இதே காசிப முனிவர்.
அது இதோ,
“வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க, வாய்ந்த சென்னி
அளவுபடா அதிக சவுந்தர தேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய
காசிபர் காக்க, புருவம் தம்மைத்
தளர்வில் மகோதரர் காக்க
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க (1)
கவின் வளரும் அதரம் கஜமுகர்
காக்க, தாலம் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க
அவிர் நகை துன்முகர் காக்க
வளரெழில் செஞ்செவி பாசபாணி காக்க
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க
காமுரு பூமுகம் தன்னைக் குணேசர்
நனி காக்க, களம் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு
கந்த பூர்வஜர்தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கினவிநாசர்
காக்க, இதயம் தன்னைத்
தோமகலும் கணநாதர் காக்க, அகட்டினைக்
துலங்கு ஏரம்பர் காக்க
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரர் காக்க, விளங்கி லிங்கம்
வியாளபூடணர்தாம் காக்க
தக்க குய்யம் தன்னை வக்கிரதுண்டர்
காக்க, சகனத்தை அல்லல்
உக்க கணபர் காக்க, ஊருவை
மங்கள மூர்த்தி உவந்து காக்க
தாழ் முழந்தாள் மகாபுத்தி காக்க
இருபதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்ரப்ரசாதனர் காக்க
முன் கையை வணங்குவார் நோய்
ஆழ்தரச் செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அத்தர் காக்க
கேழ் கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினில் புத்தீசர் காக்க
அக்கினியில் சித்தீசர் காக்க
உமாபுத்திரர் தென்றிசை காக்க
மிக்க நிருதியில் கணேசுரர் காக்க
விக்கின வர்த்தனர் மேற்கென்னும்
திக்கதனில் காக்க, வாயுவில்
கஜகன்னர் காக்க, திகழ் உதீசி
தக்க நிதிபர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க
ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஒகையில் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிப் பேய் இவையாதி உயிர்த்திறத்தால்
வரும் துயரும் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குர்தாம் விரைந்து காக்க
மதி, ஞானம், தவம், தானம், மானம், மொழி
புகழ், குலம், வண்சரீரம், முற்றும்
பதிவான தனம், தானியம், கிருஹம்,
மனைவி, மைந்தர் பயில் நட்பாதி
கதி யாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
வென்றி ஜீவிதம் கபிலர் காக்க
கரியாதி எனாம் விகடர் காக்க
என்று இவ்வாறு இதுதனை முக்காலமும்
ஒதிடின் நும்பால் இடையூறு ஒன்றும்
ஒன்றுறா ! முனிவராகாள் அறிமின்கள்
யாரொருவர் ஓதி னாலும்
மன்ற ஆங்கு அவர் தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும்”
ஆம். விநாயகப் பெருமான் ஞானத்தை தருவார்; அறியாமை அகற்றி வறுமையினை அகற்றிப்போடுவார்; அவராலே நோயற்ற வாழ்வும் அருளப்படும் என்பதை போதிக்கின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அனுபூதி : 13
“மகத்தாய் அணுவாய் மதியாய்க் கதிராய்
செகத்தாய் அறிவாய்த் திகழ்சாட் சியதாய்
அகத்தும் புறத்தும் அகலாப் பொருளாய்
இகத்தும் பரத்தும் இருக்கும் பரமே”
மிகப் பெரியதாகவும், மிகச் சிறிய அணுவாயும், சந்திரனாயும், சூரியனாயும், ஜெகம் எனும் இந்த உலகாகவும், நல்ல அறிவாகவும், நல்வினை தீவினைகளுக்குச் சாட்சியாயும், அகத்திலும், புறத்திலும் அகலாத பொருளாயும், இம்மைப் பயனாயும், மோட்சமாயும் திகழும் விநாயகனே என்பது பாடலின் பொருள்.
விநாயகப் பெருமானின் பெருமையினை அவரின் அளப்பரிய வடிவினை ஆற்றலை சொல்ல வருகின்றார் காசிப முனிவர்.
விநாயகப்பெருமான் எவ்வளவு பெரியவர் என்றால் எல்லாவற்றையும் விட பெரியவர். அதை சொல்ல உவமையுமில்லை. ஈடுமில்லை.
அவர் எவ்வளவு நுணுக்கமானவர் என்றால் அணுவுக்குள்ளும் அவர் ஆற்றல் உண்டு, அதன் வெளியிலும் உண்டு.
அதைத்தான் “அணுவுக்குள் அணுவாய் அணுவுக்கு அப்பாலாய்” எனச் சொன்னாள் ஒளவை மூதாட்டி.
அப்படியே விநாயகப் பெருமான் சந்திர சூரியனாகவும், இந்த உலகமாகவும், அதன் இயக்கமாகவும், எல்லா படைப்பாகவும், படைப்பினுள்ளும் அப்படியே இவ்வுலக வாழ்வின் பயனும், மறுவுலக வாழ்வின் பயனும் அவரே.
எல்லாமும் விநாயகராகவே அந்த மாபெரும் சக்தியின் வடிவமாகவே இங்கு உண்டு என்பது காசிப முனிவரின் போதனை.
விநாயகப்பெருமான் அருவ வடிவானவர், மறைந்திருக்கும் சக்தியானவர், அதே நேரம் கண்காணும் சூரிய சந்திரன் ஆகாயமெல்லாம் அவரேதான்.
இந்த உலக இயக்கமும், சூரிய சந்திர பிரபஞ்ச இயக்கமும் அவ்வளவு துல்லியமாக இருக்கின்றது. பூமியின் ஒவ்வொரு உயிரும் புல்பூண்டும் மானிட வாழ்வும் அவ்வளவு சரியாக இயக்கப்படுகின்றது. அந்த சக்தியும் அவரே.
அதே நேரம் இந்த சூரியன் மற்றும் விண்மீன் தாண்டியும் அவர் சக்தி உண்டு.
பாடலின் ஞானமான தாத்பரியம் என்னவென்றால் விநாயகப்பெருமான் இந்த உலகின் எல்லா சக்திகளாகவும் இருக்கின்றார், அதே நேரம் எல்லாவற்றையும் கடந்த சக்தியாகவும் இருக்கின்றார்.
பானைக்குள் காற்று உண்டு. பானைக்கு வெளியேயும் காற்று உண்டு என்பது போல் எல்லாமும் அவராகவே இருக்கின்றார்.
விநாயகப் பெருமான் என்பவர் மாபெரும் சக்தி, அந்த சக்தியினை நம் அறிவுக்கு உட்பட்டு உணரலாமே தவிர அதை முழுக்க அறியவோ காணவோ முடியாது. மானிட அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தி அவர்.
மானிடனின் குறுகிய அறிவும், மகா குறுகிய சிந்தையும் அவனை ஒருகாலமும் முழுக்க உணரமுடியாது. அதனால் முழு சரணாகதி மட்டுமே அனுபூதி நிலையினை கொடுக்கும் .
அதாவது எதனையுமே ஆராய்ந்து பார்த்து ஏற்பது மானிட குணம், ஒருவகை சந்தேகம் அவனின் உடன்பிறந்த ஒன்று. அதனை அறிவு என்றும், சாமார்த்தியம் என்றும் மானிட இனம் நம்புகின்றது.
இன்னும் ஆழமாக சொன்னால் தன்னை யாரும் ஏமாற்றமுடியாது என்றும், எல்லாம் ஆய்ந்து தேர்ந்து பெறுபவன் நான் என்பது ஒவ்வொரு மனதின் ஆழத்திலும் உள்ள நம்பிக்கை.
இதுதான் மானிடனுக்கு ஏற்படும் அகங்காரத்தின் முதல்படி, நான் எப்படிபட்டவன்? என் அறிவென்ன? என் ஆற்றல் என்ன? என்னால் முடியாதது? என் சக்தி? என தன்னை ஒருவன் நினைத்து கொள்வதே அகங்காரத்தின் முதல்படி.
இந்த அகங்காரமே அவனுக்கு தெரிந்த வகையில் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு புரிதலை கொடுக்கின்றது, இறைவன் விஷயத்திலும் அவன் அப்படி தன் அறிவாலே புரிந்து கொள்ள பார்க்கின்றான்.
இறைவனை பணிதல் என்பது எல்லோருக்கும் வாய்க்காது, இறை அருளில்தான் அவரைப் பணிய முடியும். ஆனால் அப்படி அருள் கிடைத்துவிட்டதால் இறைவனை தான் முழுக்க புரிந்ததாக அகங்காரத்தில் இறைவனை பற்றிய முழு அறிவும் தனக்கு இருப்பதாக ஆடக்கூடாது. அது நிம்மதியற்ற நிலையினை கொடுக்கும்.
இறைவனைச் சரணடை, இறையருள் பெற்றுவிட்டால் அமைதிகொள். மாறாக, இன்னும் இன்னும் இறைவனை முழுக்க அறியவிரும்பினால் அதற்கு முடிவே இல்லை, அது நிம்மதியினை கொடுக்காது, இறைவனை யாராலும் முழுக்க அறிய முடியாது, அவன் அருளால் உணரமட்டும் முடியும் என்பதே அனுபூதி நிலை.
இந்நிலை யோகிகளுக்கும் பெரும் அடியார்களுக்கும் வரும் மனோ நிலை. இறையருள் பெற்றுவிட்டால் அவர்களின் மனம் மேலும் மேலும் இறைவனை அறிய முயலும். அதற்காக தீரா தவம், ஆய்வு என ஒரு கணம் நிம்மதியின்றி ஓடுபவர்கள் உலகில் உண்டு.
அதைத்தான் இன்னும் முழுமையாக இறைவனை நான் காணவில்லை என நிம்மதியற்று அலையாமல் இறைவன் உணரக்கூடியவன் எனும் நிலையினை அடைவதைத்தான் பெரும் ஞானநிலை அல்லது அனுபூதி நிலை என்பார்கள்.
இதனை சில ஞானியரின் பாடல்களில் காணலாம்.
“ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிரண்டு மல்ல
நன்றல்ல தீதல்ல நாதவிந்து மல்ல
அன்றல்ல இன்றல்ல ஆதியந்த மல்ல
மன்றுள் மரகத வல்லிகொண் டாட
ஆணல்ல பெண்ணல்ல அன்றி அலியுமல்ல
காணும் உருவம் அல்ல காணா அருவுமல்ல
சேண் அல்ல வேயொரு தேவர்க்குள் ளேதேவ
வாணுதற் பச்சை மடந்தைகொண் டாட
பூதங்கள் அல்ல புறம்பல்ல உள்ளல்ல
வேதங்க ளாலே விளங்கும் பொருளல்ல
ஆதவன் போலே அசையும் வடிவல்ல
மாதுமை யாள்பச்சை வல்லிகொண் டாட”
ஆம். இறைவன் ஒன்றானவனும் இரண்டானவனும் அல்ல, எனத் தொடங்கும் பாடல் அவன் தேவரிலும் இல்லை சொர்க்கதிலுமில்லை பதங்களிலுமில்லை ஏன் வேதங்களினால் கூட அவனை முழுக்க அறியமுடியாது என்கின்றது.
“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன
பேணுங்கால்பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்த எம்பெம்மானைக்கூறுதலே”
என்பது நம்மாழ்வார் பாடல்
இறைவன் ஆண் அல்ல, பெண் அல்ல, அலி அல்ல அவன் காண்பதில் அல்ல, காணாததிலும் அல்ல, உருவமும் அல்ல, அருவமும் அல்ல எனச் சொல்கின்றார் நம்மாழ்வார்.
காரைக்கால் அம்மையாரின் பாடல் ஒன்று உண்டு.
“அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது”
அதாவது சிவனை தேடித் தேடி அலைந்தேன், அவன் அருள் பெற்றுவிட்டேன். ஆனால், அவன் எப்படி இருப்பான் என்றால் என்ன சொல்வேன் என தவித்து பாடுகின்றார் காரைக்கால் அம்மையார்.
பாரதியாரும் தான் பாடிய விநாயகர் நான்மணிமாலையில் பாடுவார்,
“இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்
தேவ தேவா, சிவனே, கண்ணா,
வேலா, சாத்தா, விநாயகா, மாடா,
இருளா, சூரியா, இந்துவே, சக்தியே,
வாணீ, காளீ, மாமக ளோயோ,
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே,
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயம்நான் கேட்டேன்”
இந்த தத்துவத்தைத்தான் சொல்லி விநாயகப் பெருமான் அளவில்லா சக்தி கொண்டவர். அவர் சக்தியின் அளவினை இவ்வளவு என சொல்லிவிட முடியாது, அவர் கண்காணும் சக்தியாகவும் கண்காணா இயக்கமாகவும் எல்லாவற்றுக்கும் ஆதி காரணமாகவும் எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் நிற்பவர்.
இந்த வாழ்க்கையின் பயன் அவரே, மறுமையில் முடிவும் அவரே.
அந்த மகா சக்தியினை எக்காலமும் பூரணமாக ஒருவனால் அறியமுடியாது என உணர்ந்து அவரிடம் சரணடைவதே அனுபூதி நிலை என்கின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அனுபூதி : 14
“கருணைக் கடலைங் கரனே கபிலர்க்கு
அருளே கொடுத்தாய் அபயம் அளித்தாய்
தருவே அனையாய் தமியன் தனைஆள்
குருவே பொறுமை குணநா யகனே”
அதாவது கருணைக் கடலாகத் திகழும் ஐந்து கரத்தானே! கபிலருக்கு அருளைக் கொடுத்து, அடைக்கலம் தந்தாய். கற்பக மரம் போன்றவனே! தனியான என்னை ஆளும் குருவே! பொறுமை மிக்க குணங்களுக்கெல்லாம் தலைவனே எனப் பொருள்.
இந்தப் பாடலில் ஒரு புராணக் காட்சியினை, விநாயகப் பெருமானின் ஆற்றல் வெளிப்பட்ட அழகான சம்பவம் ஒன்றை சொல்கின்றார் காசிப முனிவர்.
முன்பு கபில முனிவர் என்பவர் ஆசிரமம் ஒன்றைக் கானகத்தில் அமைத்திருந்தார். அவரின் இடையறாத் தவம் ஒரு பக்கம் நடந்தாலும், அப்பக்கம் வருவோர்க்கு பசியாற்றும் பெரும் கடமையும் அவர் செய்துக் கொண்டிருந்தார்.
அவரின் அந்த நல்ல மனதுக்காக தேவலோக இந்திரன் கேட்பதை எல்லாம் கொடுக்கும் “சிந்தாமணி” எனும் மணியினை கொடுத்தார். அதைக் கையில் வைத்து வேண்டினால் என்ன கேட்டாலும் அது கொடுக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது.
அதைக் கொண்டு தன்னை நாடிவருவோர் உதவிகளை முனிவர் தீர்த்து, தான் உண்டு தன் சேவை உண்டு என வாழ்ந்துக் கொண்டிருந்தார்.
அந்நேரம் அங்கே கணன் எனும் மன்னன் தன் பரிவாரங்களோடு அப்பக்கம் வேட்டையாட வந்தான். வந்தவன் முனிவர் குடிலைக் கண்டு இளைப்பாறச் சென்றான்.
முனிவரும் தன் சக்திமிக்க மணியினால் அவனுக்கு வேண்டிய எல்லாம் நொடியினில் தருவித்து அவனின் களைப்பினை போக்கினார்.
எது கேட்டாலும் நொடியில் தரும் அந்த மணியின் மீது ஆசைப்பட்ட மன்னன் “முனிவரே, காட்டில் வசிக்கும் உம்மிடம் இந்த மணி இருப்பதை விட நாடாளும் மன்னனிடம் இருந்தால்தான் எல்லா மக்களுக்கும் பலனளிக்கும்” என அதனை தரக் கோரினான்.
முனிவர் மறுத்தார்.
அவனோ அவர் மறுப்பினை அலட்சியம் செய்தபடி வலுகட்டாயமாக மணியினைப் பறித்துக் கொண்டுச் சென்றான். மனமுடைந்த கபில முனி இந்திரனை நோக்கிக் கதறினார்.
காரணம், இந்தக் கணன் சாதாரண வம்சம் அல்ல, அபிஜித் முனிவர் வழிவந்த வம்சம் என்பதால் அவனைக் வெல்லுதல் எளிதல்ல. அவன் பலம் அசாத்தியமானது.
கபில முனிவர் கலங்கிய போது ஒரு அசரீரி கேட்டது, “முனிவரே, கலங்க வேண்டா, விநாயகரை நினைந்து யாகம் ஒன்றை செய்தால் அவரே நீங்கள் இழந்ததை மீட்டுத் தருவார்” என்றது.
அப்படியே விநாயகப் பெருமானை வேண்டி பெரிய யாகம் செய்தார் கபில முனி, யாகத்தின் பலனாய் விநாயகரே வந்து அந்த மன்னனுடன் போரிட்டு, சிந்தாமணியினை மீட்டு முனிவரிடம் சேர்த்தார்.
முனிவர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து தன் கடமைகளைத் தொடர்ந்தார், தன் காலம் முடியும் போது அந்த மணியினை விநாயகருக்கே திரும்ப அளித்தார் கபில முனி.
அன்றில் இருந்து “சிந்தாமணி விநாயகர்” என விநாயகருக்கு ஒரு பெயர் உண்டாயிற்று.
உஜ்ஜைனி அருகே சிந்தாமணி விநாயகர் ஆலயம் பெரிதாக உண்டு. உஜ்ஜைனி காளி போல அதுவும் விசேஷம். ஏகப்பட்ட மன்னர்கள், ராணி அகல்யாபாய் முதனாலோர் அந்த ஆலயத்துக்கு பணி செய்தவர்கள்.
சித்திரையில் அங்கு நடக்கும் வழிபாடுகள் மகா விசேஷமானவை, அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை அந்தப் பாரம்பரியம் உண்டு.
அதே சிந்தாமணி விநாயகர் புனே பக்கம் தேவூர் ஆலயத்திலும் மகா பிரசித்தி. நாடெல்லாம் சிந்தாமணி விநாயகருக்கு தனி ஆலயமும் மிகுந்த வழிபாடுகளும் உண்டு.
ஆம். இந்த சிந்தாமணி விநாயகர் எப்போதும் விசேஷம், அதைத்தான் இங்கே பாடுகின்றார் காசிப முனிவர். அந்தச் சிந்தாமணி விநாயாகரிடம் அருள் வேண்டிப் பாடுகின்றார்.
‘சிந்தாமணி’ என்றால் தமிழ்ப்பெயர் அல்ல, அது சம்ஸ்கிருத பெயர். அந்தச் சொல்லுக்கு “மனத்துயரில் இருந்து விடுதலை” எனும் பொருளும் வரும்.
அப்படி விநாயகர் நம் மனக்கவலை எல்லாம் தீர்ப்பார். அந்தத் துயர் நீங்கினாலே ஒருவனுக்கு எல்லா நலமும், அருளும், பலமும், அறிவும் வரும் என்பதை சொல்லிப் பாடுகின்றார் காசிப முனிவர்.
ஒவ்வொருவருக்கும் மனதில் மகிழ்ச்சி எனும் ஒளி, நம்பிக்கை எனும் பெரும் சக்தி பிறப்பில் உண்டு. ஒவ்வோர் மனமும் சிந்தாமணி போல சக்தி கொண்டது.
ஆனால், மாயையில் மனம் சிக்கி லௌகீக குழப்பங்களில் வீழ்ந்துக் கிடக்கின்றது, அந்தக் கணன் எனும் மன்னன் மணியினை கவர்ந்தது போல, மாயை அந்த சூழலில் மானுடனை தள்ளிக் குழப்புகின்றது.
விநாயகரை வணங்கினால் சிந்தை தெளியும்; சிந்தையில் ஒளிவரும்; சிந்தனை மணிபோல் துலங்கும்; அந்தப் புது ஒளியில் வழியில் எல்லா முயற்சியும் சித்தியாகும். விநாயகப் பெருமான் அந்த வரத்தை தருவார் என்பது காசிபமுனி உருகிச் சொல்லும் போதனை.
காசிபமுனி இன்னும் பாடுகின்றார், அவரை “தருவே” என்கின்றார். ‘தரு’ என்றால் இங்கே கேட்டதை தரும் ‘கற்பகத்தரு’ என்றாகின்றது.
தெய்வங்களில் வேறு யாருக்கும் “கற்பகம்” எனும் அடைமொழி இல்லை, விநாயகருக்கே “கற்பக விநாயகர்” எனும் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அதன் அர்த்தம் அவர் ஒருவரே. என்ன வேண்டினாலும் கேட்டவுடன் கற்பக மரம் தருவது போல் அள்ளித் தருவார் என்பது.
இப்படி சிந்தாமணி என இழந்த மகிழ்ச்சியினை தருபவரும், இன்னும் கேட்டதை எல்லாம் தரும் அந்த விநாயகரிடம் காசிபமுனி என்ன கோருகின்றார் என்றால் தனக்கு அவரே குருவாக வந்து வழிநடத்த வேண்டும் எனக் கோருகின்றார்.
தனக்கு நல்ல குருவாக ஏன் விநாயகர் வரவேண்டும் என்பதை கடைசி வரிகளில் சொல்கின்றார். அதனை “பொறுமை குணநா யகனே” என்கின்றார்.
விநாயகப் பெருமான் மகா சக்தியுள்ளவர். ஆனால், நீண்ட பொறுமைசாலி. அப்படியான குணமுள்ள விநாயகப்பெருமான் தனக்கு குருவாக வந்தால் தனக்கும் நீடிய பொறுமை வாய்க்கும்; நல்ல குணம் வாய்க்கும்; அவரால் தரப்படும் பெரும் வரமெல்லாம் நல்லோர்க்கு நல்லவழியில் பயன்படுத்தும் சக்தி வாய்க்கும் என சொல்லி அவரிடம் வேண்டி நிற்கின்றார் காசிப முனிவர்.
ஆம். விநாயகரை குருவாக வேண்டிப் பாடும் காசிபமுனி அவரின் அருமை பெருமைகளைச் சொல்கின்றார். கபில முனி எல்லாம் இழந்து நின்றபோது அவருக்கு சிந்தாமணியினை மீட்டு கொடுத்தவரே, கற்பகத் தரு போல கேட்டதை எல்லாம் உடனே தருபவரே, அப்படியான விநாயகரே, கபிலரை போல் எனக்கும் குருவாக அமர்ந்து நல்வழியில் போதிப்பாய், எம்மையும் ஒரு அடியானாக கைப்பிடித்து நல்வழி போதித்து நல்ல குணங்களை தந்து நல்ல காரியம் செய்ய வைத்து, பயனுற வாழவைத்து முக்தியும் அருள்வாய் என்கின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அருளால் நன்மைகளைப் பெற்று, நல்ல வகையில் பயன்படுத்தி, நல் வாழ்வு வாழ்ந்து, அந்த விநாயகரிடமே சரணடைந்து முக்தி அடைதல் அனுபூதி நிலை என்பது பாடலின் மறைமுக தத்துவம்.
விநாயகப்பெருமானிடம் இப்படி காசிபமுனி வேண்டுவதைத்தான் “குருவடிவாகி குவலயம் தன்னில்” என வேண்டினாள் ஒளவையார்.
“காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனமெனும் நாட்டில் நிறுத்தல் குறியெனக்கே”
எனப் பாடினான் மகாகவி சித்தன் பாரதி.
இந்தப் பாடல் சிந்தாமணி விநாயகர் என உஜ்ஜைனி பக்கம், புனே பக்கம் இன்னும் நாடெங்கும் பெரும் கோவில் கொண்ட சிந்தாமணி விநாயகருக்கான பாடல், கூடவே பிள்ளையார்பட்டி போன்ற இடங்களில் குடியிருந்து அருள் பாலிக்கும் அந்தக் கற்பக விநாயகரையும் வணங்கி பாடப்படும் பாடல்.
இந்தப் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரும், உஜ்ஜைனி அருகே இருக்கும் சிந்தாமணி பிள்ளையாரும் கிட்டதட்ட ஒரே சாயல். இருவருக்கும் சித்திரையில்தான் பெரும் கொண்டாட்டம் என ஒற்றுமைகள் அதிகம்.
அந்தச் சிந்தாமணி விநாயகரை கபில முனியின் வரிகளிலே தொழுது அவரால் மனமகிழ்வும், அறிவும், தெளிவும், எல்லா வரமும் பெற்றுக்கொள்வோம். அந்தச் சிந்தாமணி விநாயகர் கற்பக தருபோல யாருக்கு என்ன தேவையோ அதனை உடனே அருளட்டும்.
“அமிழ்தைநிகர்தரு மொழியிலாளட பிசித்தரசனான்றத வமகவினுக்கா
யயர்வனத்தயன் விந்துவளை தடப்புலுண்டவர சியீன்றிடுகணன்வளர்ந்
துமைபதிவரத்தின் முவ்வுலகாளுநா டன்னிலுழை வேட்டமாடிமீண்டங்
குறுகானில் கபிலமுனி தெய்வமணி யாலமைத்திடுவிருந்துண்வ னதைக்
கமவலிமையாற் கவர்ந்தேகமுனி நொந்துசெய்கனன் மகந்தோன்றியடரக்
கணனை மழுவாற்செற்று கபிலரார்ச்சனை யடுங்கண்டத்தமணி யேற்றதாற்
றிமிரபந்தந்த விர்த்திடு கபிலநாமமொடு செல்வமெல்லாமளிக்குஞ்
சீர்கொள்சிந்தாமணி விநாயகருமாயுல கிறிகழ் பிரணவச்சோதியே”
விநாயகர் அனுபூதி : 15
“கற்பார் இதயக் கமலத்(து) உறையும்
அற்பார் ஒளியே அழகுஆனை முகா
பொற்பாய் உனது பொலந்தாள் மலர்க்கே
நற்பா கொடுத்தேன் நனிஏற்(று) அருளே”
“நல்ல அறிவினால் நிரம்பிய, தாமரை போல் மலர்ந்த நெஞ்சத்தில் உறையும் அற்புதமான ஒளியே, அழகான யானை முகத்தவனே. உனது பொற்பாதங்களை சரணடைந்து இந்தப் பாடல்களை சமர்பித்தேன், இதனை நல்லவிதமாக ஏற்று எனக்கு அருள் புரிவாயாக எம்பெருமானே” என்பது பாடலின் பொருள்.
தாமரை என்பது ஞானத்தின் அடையாளம் , அறிவில் ஞானத்தில் நிறைந்த மனதில் விநாயகப் பெருமான் எழுந்தருள்வார் என்பதை, ஞானத்தின் அதிபதியான அந்த விநாயகப் பெருமான் ஞானமான மனமான செந்தாமரையில் வீற்றிருக்கின்றார், ஞானமான மனம் விநாயகர் வாழும் மனம் என பாடலைத் தொடங்குகின்றார்
அந்த விநாயகருக்கு என் பாடலை வைத்தேன், அவர் காலடியில் இந்தப் பாடலை வைத்தேன், அவர் அதை ஏற்றுக்கொண்டு தனக்கு அருள்பாலிக்க வேண்டும் என்கின்றார் காசிப முனிவர்.
இங்கே காசிப முனி சொல்லும் வடிவம் விநாயகப்பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றான சங்கடஹர சதுர்த்தி வடிவம்.
விநாயகப்பெருமானுக்குரிய சிறப்புநாட்களில் இந்த சங்கடஹர சதுர்த்தியும் ஒன்று, செந்தாமரையில் இருந்து வரமருளும் விநாயகராக அவரே அறியப்படுகின்றார்.
சங்கடஹர சதுர்த்தி என்பது சங்கடங்களை அறுக்கும் சதுர்த்தி, தேய்பிறையில் வரும் அந்தச் சதுர்த்தியில் விநாயகரை வழிபடுதல் மகா சிறப்பு, அந்நாளில் வழிபட்டால் எல்லாச் சங்கடங்களும் தீரும், அந்நாளில் அவர்பாதம் சரணடைந்தால் ஞானம் பெருகும், பெருகிவிட்ட ஞானத்தால் சங்கடங்கள் தீரும் என்பதால் அந்நாள் விசேஷமானது.
இந்த நாளில்தான் சந்திரன் தன் சாபம் தீர்த்தான்.
சந்திரன் ஒருமுறை விநாயகரை அவர் உருவத்தின் பொருட்டு அவமரியாதை செய்தான், விநாயகர் அவனை தண்டிக்க அவன் கலை இழந்து தேய ஆரம்பித்தான், பின் அவன் விநாயகரின் சக்தி உணர்ந்து மண்டியிட்டு மன்னிப்புக் கோரினான்.
தேய்பிறை சதுர்த்தியில் அவனை மன்னித்து அவன் இழந்ததை மீளக் கொடுத்தார், அப்போது அந்த தேய்பிறை சதுர்த்தியில் தன்னை வேண்டுவோர்க்கு எல்லா நலமும் அருளப்படும் எனத் திருவுளம் பற்றினார் விநாயகர்.
அதன்படி அந்நாள் விசேஷம்.
சந்திரன் மனம் சம்பந்தபட்ட கிரகம், கேது ஞானம் சம்பந்தமான கிரஹம். விநாயகரை வழிபட்டால் மனம் தெளிவடையும்; சிந்தை தெளியும்; அங்கே ஞானம் குடியேறும்.
தெளிந்த மனதில் ஞானம் மிகுந்து சுடர்விடும்போது அங்கு எல்லா மாயைகளும் அறுபட்டு முழு ஞானத்தெளிவு ஏற்பட்டு அங்கே சங்கடங்கள் அற்றுப்போகின்றன. எல்லாச் சங்கடத் துயரங்களும் களையப்பட்டு மகிழ்ச்சியும் ஆனந்தமும் உருவாகின்றது.
அந்த அருளை விநாயகர் அருள்வார் எனச் சங்கடஹர சதுர்த்தியின் பெருமையினை இங்கே பாடும் காசிபமுனிவர் அப்படியே விநாயகரிடம் தனக்கான தீட்சையினை கேட்கின்றார்.
திருவடி தீட்சையினை கேட்கின்றார்.
தெய்வம் அல்லது குருவாக வணங்கும் நாதன் காலை தன் தலையால் தாங்கி தீட்சை அடைதல் என்பது ஒரு ஞானமரபு.
அதாவது தன் காலால் ஒரு குரு ஞானம் கொடுத்தால், அதன் பொருள், தானும் தன் காலால் நாடு, காடு, மலைகளெல்லாம் அலைந்து தன் குருவின் புகழைப் பாடுவேன், பரப்புவேன் என்பது.
இது தீட்சை பெறுதலில் ஒரு வடிவம்.
காலில் விழுதல், ஒருவர் பாதத்தை தலையில் வைத்தல் என்பது முழு சரணாகதியினைச் சொல்வது.
ஒருவரிடம் முழுவதும் சரணடைந்து அவரின் அடிமை என அறிவிப்பது என்பது லௌகீக நடைமுறை.
ஆன்மீகத்தில் குருவிடம் முழுக்க சரணடைந்து அவரின் பணியாளனாக மாறும் நிலைக்கு தன்னையே அர்ப்பணிக்கும் அடையாளமாக இப்படி குருவின் பாதத்தை சீடனின் தலையில் வைத்துச் சொல்வார்கள்.
இதனை அப்பர் சுவாமிகளின் வாழ்வில் காணமுடியும். அப்பர் சுவாமிகள் இப்படி திருவடி தீட்சை வேண்டிப் பாடுவார். சிவனே வந்து தன் தலையில் கால் வைக்கும்படி மன்றாடுவார்.
திருசந்திமுற்றந்துறை சிவனிடம் வேண்டுவார்.
“கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.”
அதாவது “ஒலிக்கும் தீயினைக் கையில் ஏந்திய சிவனே, திருச்சத்திமுற்றத்தில் உகந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தே! தலைமை உடையவனாய் விரைந்து வந்து உயிரைப் போக்கும் திறமையை உடைய கூற்றுவன் என்னைத் துன்புறுத்துவதன் முன்னம், தாமரைப் பூப்போன்ற திருவடிகளின் அடையாளத்தை என்மேல் பொறித்து வைப்பாயாக. அங்ஙனம் பொறிக்காது வாளா விட்டு விட்டால் அழியாத பழி முழுதும் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்பதனை நீ உணர்வாயாக “
சிவபெருமானே என் பாதத்தின் சுவடை என்மேல் பதியவை என மன்றாடுகின்றார்.
இன்னொரு பாடலில் சொல்கின்றார்.
“நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்துவானோர்
இனந்துருவி மணிமகுடத்தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்
நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே” என்கின்றார்.
அதாவது சிவன் தன் திருவடிளைத் தன் தலையில் வைத்துத் தனக்கு தீட்சை கொடுத்தார் என்பதைப் பாடலில் சொல்கின்றார் அப்பர் சுவாமிகள்.
அப்படியே மாணிக்கவாசகரும் சொல்கின்றார்.
‘இடைமரு ததனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்”
எனச் சிவன் தன் தலையில் பாதம் வைத்து தீட்சைபெற்ற நிகழ்வைச் சொல்கின்றார். அப்படியே சுந்தரப்பெருமானும் தான் தீட்சை பெற்ற புண்ணியத்தைச் சொல்கின்றார்.
“தம்மானை யறியாத சாதியா ருளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட
லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே”
அபிராமி பட்டர் தன் அந்தாதியில் பாடுகின்றார்.
“ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே”
அன்னையின் பாதங்களை தன் தலையில் வைத்து அவர் சரணடைந்து தீட்சை பெற்றதைச் சொல்லிப் பாடுகின்றார்.
இதனையே இராமலிங்க அடிகளாரும் பின்னாளில் பாடுகின்றார்.
“நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
நேர்காண வந்தனம்என் றென்முடிமேல் மலர்க்கால்
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே’
விநாயகப் பெருமான் தனக்கு தீட்சை தந்ததை “குருவடி வாகிக் குவலயந் தன்னில். திருவடி வைத்துத் திறமிது பொருளென” என்கின்றார் ஒளவையார்.
பாத தீட்சை பெறுவதால் என்னாகும் என்றால் ஒருவனின் கர்மா அழியும், எமன் அவனிடம் வர மாட்டான். சொர்க்கம் அவனுக்கு வசமாகும்.
தீட்சைப் பெற்று, அப்படியே இறைவனில், தன் ஆத்மாவினால் கலந்து விடுபவனுக்கு பெரும் ஞானம் வாய்க்கும். அந்த ஞானத்தில் அவன் ஒரு உண்மையினை உணர்வான்.
அந்நிலையில் தான் வேறு அல்ல, இறைவன் வேறு அல்ல. தான் வேறு, இறைவன் வேறு, இந்த உலகின் படைப்புக்கள் உயிர்கள் வேறு அல்ல. எல்லா உயிரும் எல்லா பொருளும் இறைவனே. தானும் அவனே எனும் மாபெரும் தத்துவம் தானாக உணரும்.
அப்போது அதாவது அந்தப் பெரும் தீட்சை பெற்ற நிலையில், பெரும் ஞானம் வாய்த்த நிலையில், அவனுக்கு காண்பவை காணாதவை, அசைபவை அசையாதவை, இயங்குபவை இயங்காதவை என எல்லாமே இறை வடிவமாகும்.
எல்லா படைப்பிலும் அவன் இறைவனைக் காண்பான். தான் வேறு, இறைவன் வேறு, உலகம் வேறு என்பது அல்ல; எல்லாமே ஒரே பரமாத்மா என்பது அவனுக்கு விளங்கும்.
திருவடியினைத் தலையில் சூடுதல் என்பது ஜீவாத்மா பரமாத்மாவில் கலந்து விட்ட நிலையினைச் சொல்வது. உச்ச சகஸ்ர சக்கரம் துலங்கி அங்கே பிரபஞ்சப் பெரும் சக்தி வந்து நிற்கும் பெரும் தத்துவத்தைச் சொல்வது.
அந்த பரிபூரண நிலையில் எல்லாமே இறை வடிவமாகத் தெரியும்.
ஒரு அனுபூதி பெருநிலை வாய்க்கும்.
இந்த ஞானம் வாய்த்தால் வெறுப்பு வராது; அன்பு வரும்; சண்டை வராது; சமாதானம் ஒன்றே வரும். எல்லாம் ஒன்றே என அறிந்தபின் அங்கு வாதமோ, சத்தமோ, ஆரவாரமோ, எதையும் நிரூபிக்கும் அவசியமோ எதுவுமில்லை.
எல்லாம் பரப்பிரம்ம வடிவம், எல்லாமே ஒரே சக்தி இயக்கம், எல்லாம் ஒரே மூல வடிவம், ஒரே நதியின் நீர்தான் ஒவ்வொரு பாத்திரத்திலும் இருக்கின்றது என்பதை அறிந்து, எல்லாம் உணர்ந்து அமைதியாக இந்த உலகையும் அதன் உயிர்களையும் உணர்ந்து, எங்கும் எதிலும் பெரும் பற்றுக் கொள்ளாமல், எதன் மேலும் பற்று இல்லாமல், எந்த பந்தபாச வலையிலும் உணர்விலும் சிக்காமல், எதன் மேலும் பற்றோ வெறுப்போ இல்லாமல், எல்லாம் கடந்த ஞான நிலையில், விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருப்பதே அநுபூதி நிலை.
அந்த அனுபூதி நிலை வாய்க்கும்.
விநாயகப் பெருமானின் உருவங்களில் சிறந்தது செந்தாமரையில் இருந்து அவர் அருளும் கோலம், சங்கடஹர சதுர்த்தி விநாயகராக அவர் அருளும் பெரும் கோலம்.
அந்தச் சங்கடஹர சதுர்த்தி விரதம் பெரும் பலன்களைத் தரும், விநாயகப் பெருமானின் தீட்சையினை தரும், அந்தத் தீட்சை பெரும் அனுபூதி நிலையினைத் தரும் எனப் பாடி தொழுகின்றார் காசிப முனிவர்.