விநாயகர் அனுபூதி : 21 to 25
விநாயகர் அனுபூதி : 21
“மகப்பே(று) அருள்வான் மகிழ்வாய் நிதியை
அகத்தே தருவான்: அணியன்: கரிமா
முகத்தான் அடியை முறையாய் நிறையாய்ச்
செகத்தீர் தொழுமின்! தொழுமின் தினமே”
“விநாயகன் குழந்தைப் பேற்றினை அருள்வான; இல்லங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் செல்வத்தைத் தருவான்; அவன் அருகிலேயே இருப்பான்; விநாயகனின் திருவடியை முறையாக நாள் தோறும் தொழுவீர்களாக”
இப்பாடல் விநாயகப் பெருமானைப் பணிந்தால் சந்ததி பெருகி பெருவாழ்வு வாழும் என்பதைப் போதிக்கின்றது.
விநாயகப் பெருமான் நல்ல பிள்ளைகள் அமையும் யோகத்தை அருள்பவர், பிள்ளைச் செல்வம் அருள்வதாலே அவர் பிள்ளையார்.
அரசமரத்தடி பிள்ளையாரை, கோவில் தீர்த்துக்குளத்தில் குளித்து ஈரத்துணியோடு சுற்றிவந்தால் குழந்தை பாக்கியம் உறுதி.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் சொல்லலாம்.
அரசமரம் நல்ல ஈர்ப்பினை தரும். கோவில் தீர்த்தம் என்பது கோவிலின் அபிஷேக நீர் சேருமிடம். மந்திர உச்சாடனைகள் புனிதப்பொருட்கள் மந்திர அதிர்வுகள் கொண்டு வரும் அந்த நீர் உடலில் படும்போது நல்ல சக்திகள் கிடைக்கின்றன.
நீர் என்பது விஷயங்களை உள்வாங்கும் சக்தி கொண்டது, கமண்டல நீர் என்பது அப்படியானது.
ஈர உடை என்பது இன்னும் நல்ல அதிர்வுகளை உடலோடு இழுத்துத் தரும். கோவிலை ஈரத்துணியோடு சுற்றும் தத்துவம் அதுதான.
கெட்டது கழியும், நல்ல விஷயங்கள் மென் மேலும் சேரும்.
இதுதான் அந்தத் தத்துவம்.
கோவில் சுற்றுதல் படைப்போடு இந்தப் பிரபஞ்சதோடு நாம் இணைக்கும் தத்துவம். அணுவியல் அண்டவியல் எல்லாம் இந்தத் தத்துவம் கொண்டவை. ஆலயங்களைச் சுற்றுவது இந்த வகையே.
விநாயகரை இப்படி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டு என்பதில் இந்துக்கள் ஆன்மீகம் சொன்ன விஞ்ஞான உண்மையும் உண்டு.
விநாயாகரை ஏன் இந்த பாக்கியத்துக்கு வணங்க வேண்டும் என்றால் குழந்தையின்மைக்கான காரணங்களில் ஜாதகரீதியாக முக்கிய கிரஹம் ராகு.
அந்த ராகுவினைச் சரி செய்ய அந்தப் பாதிப்பைச் சரி செய்ய கேது அவசியம். விநாயகப் பெருமான் கேதுவின் அம்சம். ராகுவும் கேதுவும் எதிரெதிர் குணமுடையவை, அது விஷம் என்றால் இது மருந்து.
குழந்தை பாக்கியம் பெற தூர்வாஷ்டமி விரதம் எனச் சிவனோடு விநாயகருக்கு விரதம் இருக்கும் வழக்கம் எக்காலமும் உண்டு.
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். இன்று அருகம் புல்லை பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.
அதிகாலையில் நீராடி விநாயகரையும், சிவபெருமானையும் சேர்த்து வணங்கி பூஜை விரதத்தை தொடங்க வேண்டும். பூஜையறையில் அவல், பொரி, பால், வாழைப்பழம் படைத்து, விநாயகர் அகவல், 108 போற்றி, சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிப்பார்கள்.
அரசமரம் பிராண சக்தி கிடைக்கும், ஈரத்துணி என்பது நல்ல அதிர்வுகளை எளிதில் உள்வாங்கும், நீர் என்பது நல்ல அதிர்வுகளை வாங்கும் சக்தி.
கோவில் தீர்த்தம் என்பது அபிஷேக குளம் சேரும் இடம், அங்கே சக்தி அதிகம், அந்த நீரில் மூழ்கி ஈரத்தோடு செல்லும் போது கெட்ட அதிர்வுகள் நீங்கி நல்ல அம்சங்கள் கூடும்.
அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை விநாயகர் சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக கருதப்படுகிறது தூர்வாஷ்டமி. அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள்.
தூர்வாஷ்டமி விரதம் இருப்போர்க்கு குழந்தை செல்வம் குறைவுபடாது , கட்டாயம் பலன் தரும் வழிபாடு அது.
பொதுவாக விநாயரின் 32 அம்சங்களில் உச்சிஷ்ட கணபதி வடிவமானது குழந்தை பாக்கியத்துக்கானது. உச்சிஷ்ட கணபதிக்கான தனிக் கோவில், விநாயகருக்கே அர்ப்பணிக்கப்பட்ட பிரமாண்டகோவில் நெல்லையில் உண்டு.
அங்குக் குழந்தைவரம் எக்காலமும் விநாயகரால் அருளப்படுகின்றது.
எட்டுவகை பெரும் செல்வங்களில் குழந்தை பாக்கியம் ஒன்று.
எட்டுவகை செல்வங்கள், குழந்தை பாக்கியம், ஆயுள் அதிகரிக்க இந்தக் கணபதி மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, நிம்மதியான வாழ்வை வாழ செல்வம், புத்திர பாக்கியம், நோயில்லா ஆயுள், கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை என்பது அவசியம்.
இதைப் பெற்றுக்கொள்ள ஆதிசங்கரர் அருளிய மஹா கணேச பஞ்ச ரத்தின ஸ்லோகத்தினைச் சொல்லலாம். விநாயகரிடம் இருந்து பெரும் அருளைப் பெற ஆதிசங்கர பெருமான் கொடுத்த இந்த மந்திரம் மகா சக்திவாய்ந்தது.
‘முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்
நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்
மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.”
காலை எழுந்தவுடன் குளித்து விட்டு தூய்மையாக பூஜை அறையில் நின்று இந்த 6 மந்திரங்களை விநாயகப்பெருமானை மனதார நினைத்துச் சொல்லுங்கள், எப்போது இதைச் சொல்ல தொடங்குவீர்களோ அப்போதே எல்லாச் செல்வமும் குழந்தை செல்வம் உள்பட பெரும் செல்வமும் விநாயகர் அருளால் உங்களைத் தேடி ஓடிவரும்.
விநாயகர் அனுபூதி : 22
“பெருமைப் பரிதி பிறை இத் தரைசேய்
அருமால், குருவே அசுரர் குரவன்
கருமை அரவு கள்இவை நலமாம்
ஒருகை முகன்பேர் உரைப்பார் அவர்க்கே”
பரிதி என்றால் சூரியன், பிறை என்றால் சந்திரன், இத்தரை சேய் என்றால் பூமியினைப் போன்றே தோன்றும் செவ்வாய், அருமால் என்றால் புதன், குருவே என்றால் வியாழ பகவான், அசுரர் குரவன் என்றால் சுக்கிரன், கருமை என்றால் சனி, அரவுகள் என்றால் ராகு கேது எனும் நாகங்கள்.
ஒரு கை முகன் என்றால் துதிக்கை உடைய விநாயகரை வணங்கினால் நவக்கிரக பாதிப்பெல்லாம் நீங்கி, அவர்களின் முழு அருளோடு எல்லா நலமும் கிடைக்கும் என்பது பாடலின் பொருள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களும், விநாயகருடைய திருப்பெயரை உச்சரித்தவர்களுக்கு எப்பொழுதும் நன்மைகளையே செய்யும் என்கின்றார் காசிப முனிவர்.
இந்தப் பாடலைப் பார்க்குமுன் நவக்கிரக தத்துவங்களையும், அது செயலாற்றும் முறையினையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
நவக்கிரகம் என்பது பரம்பொருளின் வேலையாட்கள், ஒருவனின் கர்ம வினையினைப் பொறுத்து அவனை இப்பிறவியில் அவை வழிநடத்தும்.
பிறவி எனும் வாகனத்தில் ஒருவன் அமரும் போது அவர்கள் தான் ஓட்டுனர்கள், பிறவி எனும் கர்மம் கழிக்கும் அலுவலகத்தில் அவர்கள்தான் அதிகாரிகள், அவர்களை மீறி எதுவும் நடக்காது.
ஆனால், இந்த அலுவலர்கள் பரம்பொருளுக்கு கட்டுப்பட்டவர்கள், பரம்பொருள் இவர்களுக்கு ஆணையிடும் போது இவர்களால் ஒருவன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது.
அந்த நிலை எப்போது வரும் என்றால் கர்மத்தின் பலனை, கர்மவினையினை அந்த பரம்பொருள் அகற்றும் போது அதைத் தீர்க்க வழி செய்யும் இந்த நவக்கிரகங்கள் செயலற்றுப் போகின்றன.
சிவபெருமான், விஷ்ணு, அம்பாள் என மூவரை அண்டினால் நவகிரகங்களால் பாதிப்பு இல்லை, இவர்களையும் இவர்களிடம் அபயம் தேடி நிற்பவர்களையும் நவகிரகங்கள் தொடமுடியாது.
இதனாலே அக்காலத்தில் இவர்கள் ஆலயங்களில் நவகிரகங்கள் சன்னதி இருந்திருக்காது, இப்போது இருப்பவை எல்லாம் பிற்காலத்தில் வந்தவையே.
திருநள்ளாறு, திருநாகேஸ்வரமெல்லாம் அடிப்படையில் சிவதலங்கள், இன்றும் அவை சிவதலங்கள். அந்தச் சிவனைத் தரிசித்தால் சனி பாதிப்பு, ராகு பாதிப்பு அகலும் எனும் தாத்பரியம் பின்னாளில் நவக்கிரக தலங்கள் என்றாயிற்று.
ஆக, உண்மை இதுதான். மூல தெய்வங்கள் மீதோ, அவர்களை நம்பியவர் மீதோ அவர் அருளை பெற்றவர் மீதோ நவக்கிரகங்களுக்கு அனுமதி இல்லை.
இந்த வரம் விநாயகருக்கும் உண்டு. அவர் மூலக்கடவுள் எனும் வகையில் மூத்த தெய்வம் முதல் தெய்வம் எனும் வகையில் விநாயகப் பெருமான் நவக்கிரகங்களை முழுக்கக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவர்.
விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் உண்டு. நவக்கிரகங்களைக் கொண்டு அவர் காட்சியளிப்பது நவக்கிரக கணபதி கோலம்.
இந்தக் கணபதி கோலம் நவக்கிரக கணபதி என அழைக்கப்படும். இந்தக் கணபதியினைத் தரிசிப்பவர்க்கு நவக்கிரகப் பாதிப்பு இல்லை.
சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் படாளம் அருகே அமிர்தபுரி என்ற ஊரில் நவக்கிரக விநாயகர் கோவில் உண்டு.
இங்குள்ள விநாயகர் சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டுச்சாலையில் ( திருமலைவையாவூர்,வேடந்தாங்கல் செல்லும் வழி) 4 கி.மீ. தொலைவில், அமிர்தபுரி என்ற ஊரில் நவக்கிரக விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சுமார் 8 அடி உயரமுள்ள பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார்.
இந்த விநாயகப் பெருமானின் உடலமைப்பில் நவகிரகங்களும் இடம் பெற்றுள்ளது. விநாயகப் பெருமானின் நெற்றிப் பகுதியில் சூரிய பகவான், தலைப்பகுதியில் குரு பகவான், வயிற்றுப்பகுதியில் சந்திர பகவான், வலதுமேல் கரத்தில் சனி பகவான், கீழ் கரத்தில் புத பகவான், இடது மேல் கரத்தில் ராகு பகவான், கீழ் கரத்தில் சுக்கிர பகவான், வலது காலில் செவ்வாய் பகவான், இடது காலில் கேது பகவான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
நவக்கிரகங்களைப் பூஜித்த பலன் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும்.
இந்தத் தத்துவத்தைத்தான் இங்குப் பாடுகின்றார் காசிபமுனி.
இதையேதான் விநாயகரை வழிபட்டால் எல்லா வளமும் ஆற்றலும் கிடைக்கும் என்பதைத்தான் ஒளவை தன் பிரசித்தியான பாடலில் சூசகமாகச் சொன்னாள்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு”
இந்தப் பாடல்கள் ஆழமான பொருள் கொண்டவை.
நல்ல கலைகளும் இன்னும் பல நுணுக்கமான அறிவும் தருபவர் புதன் பகவான், அவருக்குத் தேனால் அபிஷேகம் செய்வார்கள், இன்னும் இதர கிரகங்களுக்கு பாலாபிஷேகம், சர்க்கரை பாகு அபிஷேகம் எனச் செய்வார்கள், இன்னும் பருப்பு வகைகளைப் படைப்பார்கள்.
நவக்கிரகங்களின் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு அபிஷேகம் உண்டு. அவை நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
இதைத்தான் மொத்தமாக ஒருவர்க்கு விநாயகப் பெருமானுக்கே பாலும் தேனும் பாகும் பருப்பும் தந்து வணங்குவேன், நவக்கிரகங்கள் அனைத்தின் பலனையும் நீ ஒருவனே தருவாய் என்கின்றார் ஒளவையார்.
விநயாகரை வழிபட்டால் நவக்கிரக ஆசிகளுடன் புதன் கிரக பலனான் நல்ல வாக்கு, குருவின் பலமான நல்ல தெளிவு, சுக்கிரனின் பலமான செல்வம், இன்னும் சனி, ராகு போன்றோரின் பலமான, செவ்வாயின் பலமான உடல்நலம் என எல்லா பலமும் கிடைக்கும் என்கின்றார்.
புராணங்கள் பல கதைகள் மூலம் விநாயகரை நவக்கிரகங்கள் பணிந்த சம்பவத்தை சொல்கின்றன.
கணேச புராணத்தின் வக்ர துண்ட கணபதி துதி போன்றவை சொல்கின்றன.
விநாயகரை சனி பிடிக்கச் சென்றபோது அவரை விநாயகர் தந்திரமாகத் திசை திருப்பிய கதை உண்டு. விநாயகரை சனி பிடிக்கச் சென்றபோது , நாளை வந்து என்னைப் பிடித்துக்கொள் என ஒரு நாள் அவகாசம் கேட்டார் விநாயகர்.
அப்படியே விநாயகர் முதுகில், “நாளை வந்து பிடித்துக் கொள்கின்றேன்” என எழுதிவைத்தார், மறுநாள் வந்த சனி அதையே வாசித்தார்.
இப்படி ஒவ்வொரு நாளும் வாசித்து வாசித்து, நாளை வருகின்றேன் என வாசித்துவிட்டே சென்றார். கடைசி வரை விநாயகரைப் பிடிக்க முடியவில்லை.
இது பிரசித்தியான புராண காட்சி. அதாவது, விநாயகரை சனி பிடித்ததுமில்லை அவர் பக்தர்களை நெருங்குவதுமில்லை என்பதைச் சொல்லும் காட்சி.
ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்துக்கானது. ராகு கேது தவிர ஏழு நாட்களும் ஏழு கிழமைக்கானது என்றும் அந்தந்த கிழமையின் தெய்வத்தை துதித்தால் அந்த கிரகபலன்களில் இருந்து தப்பலாம் என்பதும் அவர்கள் அருளைப் பெறலாம் என்பதும் இந்துக்கள் செய்த ஞான ஏற்பாடு.
அவ்வகையில் ஏழு நாட்களுக்கும் ஏழு துதி உண்டு.
தமிழக அன்பா்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து அவா்களது அன்றாட நடவடிக்கைகளிலும் பிரிக்க முடியாத சக்தியாக விளங்குவது விநாயகப் பெருமான் வழிபாடு. தொடங்கும் செயல் தடைகளின்றி வெற்றிகரமாக நடைபெற இன்றும் பிள்ளையாா் சுழி போட்டு அச்செயலைத் தொடங்குவது நம்மில் பலருக்கு வழக்கமான ஒன்று. கோயில்களிலும் நமது இல்லங்களிலும் எந்த ஹோமம் என்றாலும் முதல் ஹோமம் கணங்களின் தலைவனான கணபதிக்குத்தான்.
“நாயகன்” என்றால் தலைவன். “விநாயகன்” என்றால் இவருக்கு மிஞ்சிய தலைவன் எவருமில்லை என்பது பொருள். முழுமுதற் கடவுளான இவரை வணங்கி பிள்ளையாா் சுழி போட்டுத் தொடங்கும் எந்த செயலும் இனிதாக முடியும். “அம்மையப்பனே உலகம்; உலகம் தான் அம்மையப்பன்,” என்று தன் சமயோசிதத்தால் மாங்கனியைப் பெற்ற இந்தக் கற்பகக் கனியை வணங்க, நமது புத்தி மேலோங்கும். வித்தைகள் சிறக்கும். புத்திர சம்பத்தும் சக்தியும் பெருகி செய்யும் செயல்கள் யாவிலும் வெற்றி கிடைக்கும். அவனது தும்பிக்கை நமக்கு நம்பிக்கையை அளிக்கும்.
மஞ்சளைப் பிள்ளையாராகப் பிடித்து திலகமிட்டு வணங்கினாலும் அதில் குடிகொண்டு அஞ்சேல் என்று அபயம் அளிக்கும் “ஆனை முகன்” குளக்கரைகளிலும், அரச மரத்தடியிலும், ஆல மரத்தடியிலும், தெரு முனைகளிலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் இந்த அண்ணல் அன்பா்களால் பல திருநாமங்களில் பக்தியுடன் வணங்கப் படுகின்றாா்.
நவக்கிரக தோஷம் நீங்க கணபதி வழிபாடு!
நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்குவதில் ஓங்கார நாயகனாகத் திகழும் கணபதி கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுகின்றாா். விநாயகரின் நெற்றியில் சூரியபகவான் இருக்கின்றாா். தலை உச்சியில் குரு பகவானும் நாபியில் (தொப்புள்) சந்திரனும், வலது மேற்கரத்தில் சனிபகவானும் வலது கீழ்க்கரத்தில் புதனும், இடது மேற்கரத்தில் ராகுவும் இடது கீழ்க்கரத்தில் சுக்கிரனும் வலது தொடையில் அங்காரகனும் (செவ்வாய்) இடது தொடையில் கேதுவும் பிள்ளையா ரிடம் குடி கொண்டிருக்கின்றனா்.
தும்பிக்கையில் “ஸ்வர்ண கலசம்” ஏந்தி பக்தர்களின் அனைத்து நவக்கிரக தோஷங்களையும் நீக்குகிறார் விநாயகர்.
முறம் போன்ற தனது திருச் செவிகளை அசைத்து பக்தர்களின் துன்பங்களை விநாயகப் பெருமான் விரட்டுகிறார் என்று உரைக்கின்றது கணேச புராணத்தின் “வக்ர துண்ட கணபதி துதி”.
கணபதியை சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துதித்திட அவரது அருள் பெற்று நலமடையலாம் என்பது புராணங்கள் மூலம் அறியப்படுகின்றது. எனினும் அந்தந்தக் கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் எல்லா நலன்களும் நம்மை நாடி வந்து சேரும்.
ஞாயிறு – சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம:
திங்கள் – சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம:
செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம:
புதன் – புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம:
வியாழன் – குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம:
வெள்ளி – சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம:
சனி – சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம”
என ஒவ்வொரு நாளைக்கும் ஒரு துதி உண்டு, இதனைக் கிழமைவாரியாக விநாயகர் முன் சொல்லலாம்.
அப்படியே ராகு கேது பலன்களுக்கும் சொல்லலாம்.
ராகு – ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம:
கேது – கேதுஸ்வரூப ஞான கணபதயே நம:
இது போக எல்லா நாள்களிலும் நவக்கிரக அருள்பெற விநாயகரிடம் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.
“நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ
ஸ்வரூபகம் கணபதயே நம”
விநாயகரை பணிந்து அவர் திருவடி விழுந்து வணங்கினால் போதும், ஒன்பது கிரகங்களின் அருளும் விநாயகர் தருவார், அப்படியே கிரகங்களின் பாதிப்பு வராமல் காத்தும் தருவார், அவரைச் சரண்டைந்தால் எல்லாமே நலமாகும். எல்லா வகையிலும் காவல் கிடைக்கும். பெரும் அருள் கிடைக்கும் எனப் போதிக்கின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அனுபூதி : 23
“ஓடித் திரிவாய் உலகுஏ ழும்மிக
வாடித் திரிவாய் மனமே தகுமோ
கூடிக் குலவா ஒருகோ டனைநீ
பாடிப் பணிவாய் பணிவாய் நலமே”
பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும்.
“ஓடித் திரிவாய் உலகு ஏழும் மிக
வாடித் திரிவாய் மனமே தகுமோ
கூடிக் குலவா ஒரு கோடனை நீ
பாடிப் பணிவாய் பணிவாய் நலமே”
அதாவது, “ஏ மனமே, அமைதி தேடி நிம்மதி தேடி ஏழு உலகமும் சுற்றித் திரிந்தாய். இது உனக்குப் பொருந்தாதது, ஒரு கொம்புடைய விநாயகனைக் கூடிப் பாடிப் பணிவாய்” என்பது பாடலின் பொருள்.
ஏழு உலகில் சுற்றித் திரிந்தாலும் ஒருவனுக்கு நிம்மதியும் அமைதியும் தருவது ஒற்றைக் கொம்புடன் வீற்றிருக்கும் விநாயகன் சந்நிதியே எனச் சுருக்கமாகப் போதிக்கின்றது இப்பாடல்.
எப்போது ஒருவனுக்கு அமைதியும் நிம்மதியும் வரும்? மிகுந்த பாதுகாப்பான சூழலில் நம்மைக் காக்க ஒரு சக்தி உண்டு எனப் பெரும் நம்பிக்கையில் ஆபத்து இல்லாச் சூழலில் அமைதி வரும்.
அப்படியே தன் செல்வாக்கு மிக்க இடத்தில் இருக்கும் போது, தன் சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்குமிடத்தில் நிம்மதி வரும்.
சுற்றி எல்லாமும் முறையாக நடக்கும் இடத்தில் நிம்மதி வரும்.
விநாயகர் என்பவர் யுகங்களைக் கடந்தவர் எனும் வகையில் அவர் ஒற்றைக் கொம்புடன் காட்சியளிக்கும் காரணம் யுகத்துக்கு ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.
அசுரகுலம் தழைத்தோங்கும் வழி தேடி அசுரகுரு சுக்கிராச்சாரியாரிடம் நின்றார்கள் அசுரர்கள், அவர் “மாகத முனிவரின் வாரிசு யானைத்தலையுடன் எழும் அது பெரும் சக்தியாய் தேவர்களை அடக்கி அரசாளும்” என வாய்மொழிந்தார்.
மாகதமுனிவரோ கடும் விரதம் கடைபிடிப்பவர் மணமாகாதவர் என்பதால் அவருக்குப் பணிவிடை செய்து மயக்க விபுதை எனும் அசுரப் பெண்ணை அவர்கள் அனுப்பினார்கள்.
அவளிடம் எளிதில் வீழாத முனிவர் ஒருமுறை யானைகள் இரண்டு மகிழ்ந்திருப்பதை கண்டு தடுமாறியபோது விபுதை அவரை வீழ்த்திவிட்டாள்.
அதன் விளைவாக யானை முகத்தோடு ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு கஜமுகாசுரன் எனப் பெயரிட்டார்கள். அசுரர், தேவர், மனிதர் என யாராலும் எந்த உலோக ஆயுதத்தாலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என அவன் ஈசனிடம் வரமும் பெற்றுக்கொண்டான்.
அதன் பின் அவன் அட்டகாசம் அதிகரித்தது. எல்லா உலகையும் கைப்பற்றியவன் தேவர்களையும் அடிமையாக்கி ஏவலாளராய் மாற்றினான். அவனுக்குத் தேவர்கள் தோப்புக்கரணம் போட்டுத் தலையில் கொட்டிக்கொள்ளும் அளவு நிலைமை மோசமானது.
எல்லா இடமும் நிம்மதி அமைதி பறிபோனது, தேவர்களின் இயக்கம் சரிந்ததால் எங்கும் குழப்பம் வந்தது.
தேவர்களின் நிலையினைக் கண்டு உலக உயிர்களின் கதறலைக் கண்ட அன்னை சக்தி தன் மகன் விநாயகரை அவனை அழிக்க அனுப்பினாள்.
கஜமுகாசுரனுடன் பெரும் போர் புரிந்தார் விநாயகர். அவனின் படை முழுக்க அழித்துப்போட்டார், அதனைக் கண்டு தானே களத்துக்கு வந்தான் கஜமுகாசுரன்.
அவனுடன் நீண்டகாலம் போர் புரிந்தார். கடைசியில் எந்த உலோக ஆயுதத்தாலும் கொல்லமுடியா அவனை தன்
கொம்பினை ஒடித்து அதனைக் கொண்டு குத்திக் கொன்றார்.
அந்த அசுரனை அவர் அழித்தபின் அந்தத் தந்தம் அவரிடமே திரும்ப வந்தது, தேவர்கள் வாழ எல்லா உலகமும் நிம்மதியாக வாழ அவர் வழி செய்தார்.
இன்னொரு யுகத்தில் வேத வியாசர் வேதங்களைத் தொகுத்தபோது, பாரதத்தை சொன்னபோது அதனை எழுத்தில் எழுதிவைக்க தன் கொம்பை அவர் பயன்படுத்தினார் என்பது.
இங்கே கொம்பு என்பது பல்லாகின்றது, பல் என்றால் உறுதி. வார்த்தைக்கு உறுதி, பல் இருக்கும் வரைதான் வார்த்தை இருக்கும்.
விநாயகர் எழுதித் தந்தவை சக்திமிக்க வார்த்தைகள் என்பதும், விநாயகர் நல்ல சொல்வாக்கை, செல்வாக்கினைத் தருவார் என்பதும் இதிலுள்ள தாத்பரியம்.
அதனாலே “வாக்குண்டாம்” எனப் பாடலைத் தொடங்கினாள் ஒளவை.
இப்படி விநாயகர் தன் ஒற்றைக் கொம்பு தத்துவத்தால் எல்லா உலகுக்கும் காவல் தந்து அமைதி தந்து நல்ல அறிவு தந்து வார்த்தை பலம் தந்து உயிர்களை நடத்துகின்றார். அப்படியானவர் நல்ல அமைதியினைக் காவலைத் தருவார். மனமே அவரை நம்பி பணிந்துகொள் என்கின்றார் முனிவர்.
இன்னுமோர் முக்கியமான தத்துவத்தை சொல்லும் பாடல் உண்டு.
“பண்ணியம் ஏந்தும் கரம் தனக்காக்கிப்
பானிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க் காக்கி அரதனக்கலச வியன்கரம்
தந்தை தாய்க் காக்கிக்
கண்ணிலாணவ வெங்கரி பிணித்தடக்கிக்
கரிசினேற் கிருகையுமாக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்சகாயனை”
இந்தத் தணிகை புராணத்து பாடல் “பானிலா மருப்பமர்” என்கின்றது.
அதாவது, ஆண்யானைக்கு தந்தம் உண்டு, பெண் யானைக்கு இல்லை. விநாயகப் பெருமான் ஆண் பெண் நிலை கடந்த சக்தி அவர் பெரும் சக்தி என்பதை இப்பாடல் சொல்கின்றது.
சிவனைப் போல விநாயகரும் உலகை இயக்கும் அர்த்த நாரீஸ்வரக் கோலம் கொண்டவர் என்பதையும் சொல்கின்றது.
ஆம். விநாயகப் பெருமான் கண்காணாப் பொருளில் இருந்து தாவரம், செடி, கொடிகள், விலங்கு, மனிதர், தேவர் என எல்லாமுமாக இருக்கின்றார். அதைக் கடந்த ஞானப்பெருநிலையில் இருக்கின்றார்.
நிலையான சக்தி அவரே. இயக்கும் சக்தியும் அவரே. சிவனின் அம்சமும் சக்தியின் அம்சமும் கூடிய மகா சக்தி அவர் என்பதை அந்தத் தோற்றம் ஒற்றைக் கொம்பு தோற்றம் சொல்கின்றது.
ஆக, விநாயகப் பெருமானின் ஒரு கொம்பு தத்துவத்தை, ஏக தந்த தத்துவத்தை சொல்கின்றார் புலவர்.
அது ஆண்யானை பெண்யானை கலந்த முகம், அதாவது ஆணும் பெண்ணும் கலந்த வடிவம். அதன் தத்துவம் அவர் ஆணுமல்லா பெண்ணுமல்லா பெரும் சக்தி என்பது.
இதைச் சில பாடல்களைக் கொண்டு விளக்கலாம்.
“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா(த) அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.”
இது நம்மாழ்வார் பாடல்.
அந்த ஆழ்வார் இறைவனின் தன்மையினை விளக்குகின்றார். இறைவன் என்பது ஒரு மகாசக்தி, அந்த மகாசக்தியினை மாந்தர்கள் புரிந்துகொள்ள அவர்களின் பலவீனமான இயலாமையின் பொருட்டு, மிகச்சிறிய புரிந்துகொள்ளும் சக்தியின் பொருட்டு புரியவைக்க ஆண், பெண் எனப் பெயரிட்டு அழைக்கின்றோம்.
உண்மையில் அந்தச் சக்தி ஆணும் அல்ல பெண்ணும் அல்ல இரண்டும் கலந்த அலியும் அல்ல, அது ஒரு மகா சக்தி என ஆழ்வார் பாடுகின்றார்.
எம்பெருமான் ஆணுமல்லன், பெண்ணுமல்லன் இவ்விரண்டுமல்லாத வகையும் அல்ல, அவன் பார்க்கவும் முடியாதவன், இருப்பவனுமல்ல இல்லாதவனுமல்ல.
அவன் தன் அடியார் விரும்பின காலத்து அவர்கள் விரும்பின வடிவை எடுப்பவனாவான் என்கின்றார். இன்னும் பல இடங்களில் இதனைக் காணமுடியும், திருமூலர் பாடுகின்றார்.
“பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே”
அந்தப் பரம்பொருள் பெண், ஆண், பேடு என்ற பாகுபாடு உடையது அல்ல. அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உள்நின்ற சோதியை ஒருவராலும் அறிய இயலாது. அது கண் ஆகிய கருவியின்றிப் பார்க்கும். காதாகிய கருவியின்றிக் கேட்கும்.
இந்தத் தத்துவத்தைத்தான் விநாயகரின் ஏகதந்த முகம் சொல்கின்றது எனப் போதிக்கின்றார் காசிப முனிவர்.
அப்படியே திருமூலர் சொல்லும் “மூடத்துள் உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்” அதாவது, அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உள்நின்ற சோதியை ஒருவராலும் அறிய இயலாது என்பதைத்தான் மோதக தத்துவம் சொல்கின்றது.
“ஏக தந்தன்” என விநாயகர் வணங்கப்படும் தாத்பரியத்தில் இப்படியான விஷயங்கள் உண்டு.
இன்னும் ஆழமாகச் சொல்வது என்றால் விநாயகர் உருவம் என்பது ஆண் தன்மையும் பெண் தன்மையும் கலந்த உருவம், இடகலை பிங்கலை எனும் இடப்பக்க வலப்பக்க மூச்சுக்களை கலந்து முறையாக பிரணாயாமம் செய்தால் ஏழு சக்கரமும் துலங்கும், அந்த யோக நிலையில் எல்லா ஞானமும் அருளும் வரும்.
விநாயகர் எனும் மகா சக்தி அந்த ஞானநிலையினைத் தருவார். அவரை அண்டி பணிந்தோர்க்கு எல்லா நலமும் நிம்மதியும் காவலும் செல்வாக்கும் பெருகும் என்பதைச் சொல்லி வாழ்த்துகின்றார் முனிவர்.
விநாயகர் அனுபூதி : 24
“ஏகாக் கரனை எழில் ஐங்கரனைப்
பூகாப் பவனைப் பொறுமைக் குணனை,
மாகா ளியவள் மகனை, மனனே!
நீகா எனவே நிதமும் பணியே”
பாடல் இப்படிப் பிரியும்.
“ஏகாக் கரனை எழில் ஐங்கரனைப்
பூ காப் பவனைப் பொறுமைக் குணனை
மா காளி அவள் மகனை மனமே!
நீ கா எனவே நிதமும் பணியே”
அதாவது, “தனக்கு நிகரில்லாதவனை தனித்தன்மை வாய்ந்தவனை, ஐந்து கரத்தினனை, இந்தப் பூமியினைக் காப்பவனை, காளியின் மைந்தனை, மனமே உன்னைக் காக்கும்படி நிதமும் பணிந்திருப்பாய்” என்பது பொருள்.
விநாயகருக்கு ஈடாக இன்னொரு தெய்வத்தைச் சொல்லமுடியாது. எல்லாத் தேவர்களும் பணியும் தெய்வம் அவர், எல்லாமே அவரைத் தொழுதுதான் தேவர்களாலே ஆரம்பிக்கப்படுகின்றது, அவரைத் தவிர்த்து எந்தக் காரியமும் செய்யமுடியாது.
அதாவது, அவர் தனித்து நின்று இயங்குவார். ஆனால், அவரின்றி இன்னொரு சக்தியால் இயங்க முடியாது. இதனாலே அவர் ஏக நிலை அதாவது ஒரே ஒரு நிலையில் இருப்பவர் எனக் கொண்டாடப்படுகின்றார்.
விநாயகருக்கு அவரின் துதிக்கையோடு சேர்த்து ஐந்து கரங்களாகின்றது, இந்த ஐந்து கரங்களும் அவரின் ஐந்து தொழிலைக் குறிக்கின்றது.
கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தல் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய திருக்கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன.
விநாயகப் பெருமான் ஐந்து தொழில்களைச் செய்வதால் அவர் ஐங்கரன் என்றானார்.
விநயாகப் பெருமான் பூமியினைக் காப்பவர், இந்தப் பூமிக்கு எந்தச் சோதனை வந்தாலும் அதைத் தீர்க்கும் முழுப்பொறுப்பும் விநாயகரைச் சார்ந்ததே, யாராலும் தீர்க்கமுடியாத காக்கமுடியாத ஆபத்துக்களை எல்லாம் அவர்தான் முடித்து பூமியினைக் காத்திருப்பார்.
அவரால் தீர்க்கமுடியா சிக்கல் என எதுவுமில்லை, அவரால் முறியடிக்கமுடியா ஆபத்து என இந்த பூமியில் எதுவுமில்லை.
எத்தனையோ கொடும் அசுரர்களை அழித்து, மாபெரும் ஆபத்துக்களில் இருந்து எல்லோரையும் காத்து, அம்மனும் இன்னும் அவதாரங்களெல்லாம் நடத்திய போர்களிலெல்லாம் எல்லோருக்கும் உதவியவர் அவர்.
தீயசக்திகளை முறியடிக்கும் எல்லாப் போர்களிலும் அவரின் பங்கு நிச்சயம் இருக்கும்.
அப்படியே பூமிக்குத் தேவையான மழை வளம் முதல் எல்லா வளங்களும் செல்வங்களும் தந்து எல்லா உயிர்களையும் காப்பதில் அவரே முதன்மையானவர்.
பச்சரிசி, தேங்காய், மோதகம், பழம், வெல்லம், அவல், மஞ்சள் என அவருக்குப் படைப்பதெல்லாம் அர்த்தமுள்ளவை, இவை எல்லாம் நீர் வளம் உள்ள இடத்தில் விளைபவை, நல்ல செழுமையின் அடையாளங்கள்.
ஆம். வாழ்வில் செழுமையினைக் கொடுப்பவர் விநாயகப் பெருமான்.
அந்த விநாயகர் சக்தியின் மகன், அன்னை பார்வதியின் மகன் விநாயகர், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த முருகன் அவர் சாயல்.
விநாயகர் அன்னை உடலில் இருந்து பிறந்ததால் அவர் சக்தியின் சாயல், பார்வதியின் எல்லா அருங்குணங்களும் அவருக்கும் உண்டு, அதே சக்தி உண்டு.
தாயின் வழியில் உலகைக் காப்பவர் விநாயகப் பெருமான், அதே பெருங்கருணையும், தாயின் தனி அன்பும் கொண்டு நிற்பவர், அவர் தாய்போல் இந்த உலக உயிர்களைக் காப்பவர்.
இப்படியான விநாயகரை மனதார வணங்கினால் தேவர்களின் பலன், பூமியில் எல்லா ஐஸ்வர்யங்கள் வரங்கள், தாயின் அன்பில் வாழும் குழந்தை போல் பாதுகாப்பான வாழ்வு என எல்லாம் பெறலாம்.
அவர் தனித்துவமானவர், அவரே ஐந்தொழிலும் செய்பவர், எல்லா ஆசிகளும் அவரிடமிருந்தே வருகின்றன, அவர் தாயுள்ளம் கொண்டவர் எனப் போதித்து தன் மனதை வழிபடச் சொல்கின்றார் காசிப முனிவர்.
இங்கே காளியின் மகன் என விநாயகரைச் சொல்ல ஒரு புராணக் கதையும் உண்டு.
அன்னை, பர்வதராஜனின் மகள் பார்வதியாய் அவதரித்தபோது அவள் தன் பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்ற முனைந்தபோது பர்வத ராஜன் அவளுக்கு ஒரு ஆலோசனைச் சொன்னான்.
விநாயகரை வணங்கி அவருக்கான விரதத்தைக் கடைபிடித்துப் பின் தவத்தை ஆர்மபிக்கச் சொன்னான், விரதம் இருக்கும் வழியினை அவனே சொன்னான்.
“மகளே… விநாயகரின் அருளே எல்லாவற்றுக்கும் மூலமானது, அந்த விரதத்தை பின்பற்றுவாய்.
ஆவணி மாதம் பூர்வ பட்சத்தில் வரும் சதுர்த்தி நாளில் ஆரம்பித்து, புரட்டாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி தினம் வரை கடைப்பிடிக்கப்பட வேண்டிய விரதம் இது.
இந்த விரதத்தினை, தொடங்கிய நாள் முதல் நிறைவு செய்யும் நாள் வரை ஆசார அனுஷ்டானங்களோடு விதிமுறைப்படி விநாயகரைப் பூஜிக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விரதத்தினை தொடங்கும் நாளில் (ஆவணி மாத பூர்வ பட்ச சதுர்த்தி தினம்) அதிகாலையில் நீராடியபின், பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். பின் பலகை ஒன்றில் கோலமிட்டு வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு தாம்பாளம் அல்லது வாழை இலை வைத்து அதில் (இலை வாடி விடும் என்பதால் தாம்பாளமே நல்லது) சிறிது அரிசியைப் பரப்பி வைக்க வேண்டும். நூல் சுற்றி அலங்கரிக்கப்பட்ட கலசத்தில் நீர் நிரப்பி அதன் மேல் வைத்து, மாவிலை சொருகி, தேங்காய் வைத்து பூரண கும்பமாக இருத்த வேண்டும்.
இப்படி வைக்கப்பட்ட கும்பத்தின் அருகே, தூய மண்ணாலான பிள்ளையார் வடிவத்தினையும், உலோகத்தாலான விநாயகர் விக்ரகம் ஒன்றினையும் வைக்க வேண்டும்.
விநாயகருக்கு அறுகு சாத்தி விட்டு, ‘ஓம் கம் கணேசாய நம;’ என்ற கணபதி மந்திரத்தை மனதிற்குள் தியானிக்க வேண்டும். நாள் முழுதும் இறை நினைவுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தவசிகள் போன்றவர்கள் விரதம் ஆரம்பிக்கும் நாள்முதல் விரதத்தை முடிக்கும் நாள் வரை உபவாசம் இருக்க வேண்டும். மற்றவர்கள் கொஞ்சம் பால், பழம் இவைகளை சாப்பிடலாம். அப்படியும் இயலாதவர்கள், விரதம் தொடங்கும் நாள் மட்டும் பிள்ளையாருக்குப் பூஜை செய்து முடிக்கும் வரை உபவாசம் இருந்தாலும் போதும்.
தினமும் பிள்ளையாருக்குப் பூஜை செய்து முடித்ததும் சுமங்கலிகளுக்குப் பூ முதலான மங்களப் பொருள்களையும், ஏழைகளுக்கு இயன்ற தானத்தையும் தர வேண்டும்.
இப்படிப் புரட்டாசி மாத சுக்ல பட்ச சதுர்த்தி நாள் வரைக்கும் விரதம் கடைப்பிடித்து, அதற்கு மறுநாள், அதுவரை பூஜித்த மண்ணாலான விநாயகரை ஆறு, குளம், சமுத்திரம் எதிலேயாவது விட்டுவிட வேண்டும்.
விரதம் முடிக்கும் நாள் உற்றார் உறவினர் ஏழைகளுடன் அன்னதானம் செய்து முடிக்க வேண்டும், இதுதான் விரதங்களில் தலை சிறந்தது”
இதனைச் சரியாகச் செய்துதான் பார்வதி சிவனை அடைந்தாள். அப்படி அன்னைக்கே வழிகாட்டி எல்லோரையும் காத்த விநாயகர் தன்னை அண்டியோர் அனைவரையும் காப்பார், அவரைப் பணிந்து நலமடைவாய் என மனதுக்குப் போதிகின்றார் காசிப முனிவர்.
“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”
எனத் திருமூலர் பாடியதன் சாயலும் இப்பாடலே.
விநாயகர் அனுபூதி : 25
“தேடிப் பணிவார் சிலபேர் சிறப்பாய்
ஆடிப் பணிவார் சிலபேர் அணியாய்ப்
பாடிப் பணிவார் சிலபேர் அவரை
நாடித் தருவான் நலமே முகனே”
அதாவது, “விநாயகப் பெருமானைத் தேடி வந்து பணிவார் சிலர் உண்டு; ஆடிப் பணிபவர் உண்டு; அவரைப் பாடி பணிபவர் உண்டு. இவர்கள் எல்லாரையும் நாடிச் சென்று வரமருளி அவர்களைக் காப்பவர் விநாயகப் பெருமான். அவர் அப்படி எல்லோரையும் தேடிச் சென்று காப்பவர் என அவரின் பெருமையினைப் பாடுகின்றார் காசிப முனிவர்.
விநாயகரின் பெருமைகளை வியாசருக்கு உரைத்தார் பிரம்ம தேவன், அதனை வியாசர் தன் சீடரான பிருகு முனிவருக்கு உரைத்தார், பிருகு முனிவர் அதை ஒரு புராணமாக எழுதினார்.
இந்தப் புராணம் அவர் பெயரால் “பார்கவ புராணம்” என அழைக்கப்படுகின்றது. சுமார் பன்னிரெண்டாயிரம் ஸ்லோகங்களுடன் அவர் அதனை இயற்றினார்.
அந்தப் புராணத்தை உபாசனா காண்டம், லீலா காண்டம் எனப் பிரித்தார் முனிவர்.
இந்த உபாசனா காண்டத்தில்தான் விநாயகரை எல்லோரும் தேடி தேடி சென்ற காட்சிகள் உண்டு. அவரை வானவர்கள் தங்கள் ஆபத்து காலமெல்லாம் தேடி வருவார்கள், ரிஷிகள் தேடுவார்கள் எல்லோரும் தேடி ஓடிச் சரணடையும் இடம் விநாயகரே.
மக்கள் அவரை நோக்கி ஆடி வருவார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று ஆடுதல் இன்று நேற்று நடப்பது அல்ல, அந்த விரதகாலம் முடியும் போது ஆடிப்பாடுவது இந்து மரபில் எக்காலமும் உண்டு.
கூட்டம் கூட்டமாய் அவரை ஆடி வந்து பணிவார்களும் உண்டு.
புலவர்கள் அவரைப் பாடிப் பணிவார்கள். தங்கள் கவிபுலமையால் அவரைப் பாடி பாடி பணிந்து நிற்பார்கள்.
இப்படித் தேவர்களாலும் விண்ணவர்களாலும் ரிஷிகளாலும் மக்களாலும் தேடி வந்து வணங்கப்படுபவர் விநாயகப் பெருமான்.
இதைத்தான் உபாசனா காண்டம் என விநாயகப் புராணம் சொல்கின்றது. அடுத்து லீலா காண்டம் என்பது தன் பக்தர்கள் நாடிச் சென்று விநாயகர் செய்யும் லீலைகள் அத்தனையும் சொல்கின்றது.
அதாவது, விநாயகரைத் தங்கள் சிக்கலான நேரத்தில் நினைத்தாலே விநாயகப் பெருமான் ஓடிச் செனறு அவர்களுக்கு அற்புதம் செய்து பெரும் நலமளித்துக் காப்பார்.
இப்படி விநாயகர் புராணம் சொல்லும் செய்தியினை மிகச் சரியாகச் சொல்லி அவரின் பெருமையினைப் போற்றுகின்றார் காசிப முனிவர்.
விநாயகர் மகா சக்திமிக்க தெய்வம், அவரைத் தொழாமல் எதுவும் சாத்தியமில்லை. அப்படியான பெரும் தெய்வம் தன்னை நாடி ஓடிவருபவர்க்கு மட்டுமல்ல, தன்னை மனதாலே நினைந்து வேண்டுபவர்க்கும் ஓடிச் சென்று உதவுவார்.
மன்மதன் கதை அதனைச் சொல்கின்றது.
சிவனின் தவத்தை கலைத்து அவருக்கு ஒரு மைந்தன் வந்து அவன் சூரமபத்மனை அழிக்கவேண்டி திட்டமிட்ட தேவர்கள் சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை அழைத்து வந்தனர்.
மன்மதன் முதலில் தயங்கினாலும் தேவர்கள் கொடுத்த உற்சாகத்தில் சிவன் மேல் அம்புகளை ஏவ சிவனோ அவனை எரித்துப்போட்டார், பின் ரதியின் கண்ணீருக்காக அவனை உயிருடன் எழுப்பினார்.
ஆனால், அவனுக்குச் சாபம் இருந்தது. அவன் பல குறை உள்ளவனாய் இருந்தான். அந்தச் சாபம் தீர அவன் விநாயரை வழிபட்டான்.
விநாயகர் அவனைத் தேடி வந்து கிருஷ்ணவதாரம் நிகழும்போது நீ அவர் மகன் பிரத்யும்னன் என்பவனாகப் பிறப்பாய் அப்போது உன் சாபம் தீரும் என வாக்களித்தார்.
அப்படியே பின்னாளில் மன்மதனின் சாபம் தீர்ந்தது.
சிவனை வணங்க வருவோரெல்லாம் தன்னையும் வணங்குவதாக சிவன் சடைமேல் நின்று கர்வத்தில் சிரித்த ஆதிசேஷனைச் சிவன் கீழே எறிந்து சபித்தார்.
சக்தியற்றுப்போன ஆதிசேஷன் விநாயகரை வணங்கி தவமிருக்க விநாயகப் பெருமான் அருளால் அவன் இழந்ததை அடைந்தான்.
அகலிகையினைத் தீண்டிய சாபத்தை பெற்ற இந்திரன் விநாயகர் அருளாலே தன் சாபம் நீங்கினான்.
இப்படி விநாயகர் புராணம் முழுக்க காணப்படும் செய்தியின் அடிப்படை இதுதான். தன் சாபத்தால் அல்லது மாயமயக்க வினைகளால் எல்லாம் இழந்தாலும், தன் விதியினால் எல்லாம் இழந்தாலும் விநாயகப் பெருமானை நினைந்து வணங்கினால் அவர் நம் சாபம் தீர்த்து இழந்தவற்றை மீண்டும் தருவார்.
அது ஆன்மீகமாக, லௌகீகமாக என இரு வழியிலும் தருவார். அதைத்தான் இந்தப் பாடல் போதிக்கின்றது.
“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை”
“அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட வரமழை
உதவி செவ்வந்து யானையின் திருவடி இணைமலர்
சென்னி சேர்த்துவோம்”