விநாயகர் அனுபூதி : 26 to 30

விநாயகர் அனுபூதி : 26

“துட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்
பட்டே இரியப் படையை விடுவாய்!
சிட்டர் புகழும் திறமே! வளரும்
மட்டில் மதமார் மழலைக் களிறே”

பாடல் இப்படிப் பிரியும்.

“து(ஷ்)ட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்
பட்டே இரியப் படையை விடுவாய்!
சி(ஷ்)ட்டர் புகழும் திறமே வளரும்
மட்டில் மதமார் மழலைக் களிறே”

“துஷ்ட குணத்தோடுப் பொல்லாதவர்கள் வன்முறையால் தாக்க வரும்போதும், குதர்க்க வாதத்தோடு வஞ்சகர்கள் ஏமாற்றவரும் போதும், உன் கையில் இருக்கும் கோடாரியினைக் கொண்டு உன்னை நம்பும் பக்தர்களைக் காப்பவனே, மதம் வழியும் தலையினைக் கொண்ட யானை முகத்தவனே” என்பது பொருள்.

மிகக் கவித்துவமான வரிகளைக் கொண்டு விநாயகர் பெருமையினை விளக்குகின்றார் காசிபர்.

அதாவது, அமைதியாக இருக்கும் யானை, மதம் பிடித்தால் கண்ணில் படுவோரையெல்லாம் துவம்சம் செய்யும்.

அப்படி அமைதியாக இருக்கும் சாந்த சொரூபமான விநாயகப்பெருமான் அடியார்களுக்கு ஒரு இன்னல் என்றால் ஆவேசம் கொண்டு மதம்பிடித்த யானைப்போல் வந்து பகை அழித்துக் காப்பார் என்கின்றார் முனிவர்.

துஷ்ட அரக்கர்கள் எவ்வளவோ பேர்களை அப்படி அழித்தவர் விநாயகர், அது கணக்கில் அடங்காதது.

கஜாசுரன் முதல் ஏகப்பட்ட அசுரர்கள் அப்படி அழிந்து போனார்கள், அவரால் அழிக்கப் பட்டார்கள்.

அதே நேரம் வஞ்சகத்துடன் வரும் குதர்க்கர்கள், விதண்டா வாதம் பேசுபவர்களையும் விநாயகப் பெருமான் அழித்துப் பக்தர்களைக் காப்பார்.

பகையில் இருவகை உண்டு. ஒன்று துரியோதனன் போல் நேருக்கு நேர் வந்து நிற்பது; இன்னொன்று சகுனி போல் வஞ்சகம் செய்வது.

அப்படி அசுர கும்பல் நேருக்கு நேர் வரும்போதும் விநாயகர் காப்பார். வஞ்சகமாய் வரும்போதும் விநாயகர் காப்பார் என்பதைப் பாடிச் சொல்கின்றார் காசிப முனிவர்.

தேவர்கள் அப்படி எத்தனையோ முறை காக்கப்பட்டார்கள், ரிஷிகள் காக்கப்பட்டார்கள்.

எத்தனையோ போர்களைச் செய்து துஷ்டர்களை ஒழித்த விநாயகரை வஞ்சகத்தால் வீழ்த்த நினைத்தான் அனலாசுரன்.

அவன் வெப்பமிகுந்தவன். பெரும் ஆபத்தை விளைவித்து ஊரையெல்லாம் எரித்தவன், அவனை விநாயகப் பெருமான் விழுங்கி எல்லோரையும் காப்பாற்றினார்.

ஆனால், வஞ்சகமிக்க அனலாசுரன் அவரின் வயிற்றில் இருந்து அவரையே எரிக்கப்பார்த்தான். அவனை தன் வயிற்றின் மேல் அருகம்புல் மாலை கட்டி அவனை அடக்கி அவனின் வெம்மையினை அடக்கி அழித்துப் போட்டார் விநாயகர்.

வஞ்சகத்தால் வரும் எல்லா எதிர்ப்பும் அவர் அழிப்பார்.

அப்படித்தான் ஆத்மலிங்கத்தைக் கொண்டு சென்று அழியாச் சக்திபெற்று நிற்க முயன்ற இராவணணின் வஞ்சக எண்ணத்தை அவர் முறியடித்தார்.

விபீஷணன் நல்லவன். ஆனால், அவனுடன் அரங்கன் சிலை இலங்கை சென்றால் நாளை இன்னொரு வஞ்சகன் அதனால் எழும்பிவிடக் கூடாது என முக்காலமும் உணர்ந்த விநாயகர் அந்த அரங்கன் திருவரங்கத்திலே அமர வழிசெய்தார்.

அவரின் செயல்களெல்லாம் வீரமும் ஞானமும் மிக்கவை என போற்றி வணங்கி சொல்லும் காசிபர் இன்னொரு ஞானத் தத்துவமும் காட்டுகின்றார்.

விநாயகப் பெருமானின் கையில் இருக்கும் கோடாரி எனும் ஆயுதம் பகைவரை ஒழிக்கும். வஞ்சகர்களை ஒழிக்கும்.

அப்படியே அவரை அண்டியவரின் துஷ்ட குணங்களை ஒழிக்கும். ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் வஞ்சகங்களை ஒழிக்கும். அப்படியே அவனுக்கு ஞானப் பெருநிலை கொடுக்கும் எனப் போதிக்கின்றார் காசிபமுனிவர்.

‘களியானைக் கன்றைக் கணபதியைச்
செம்பொன் ஒளியானைப் பாரோர்க் குதவும் –
அளியானைக் கண்ணுவதும் கைத்தலங்கள்
கூப்புவதும் மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன்”

விநாயகர் அனுபூதி : 27

“விண்நீ உடுநீ மிளிர்வா யுவும்நீ
மண்நீ அனல்நீ புனல்நீ மதிநீ
கண்நீ மணிநீ கவினார் ஒளிநீ
எண்நீ எனைஆள் இதம்செய் பவனே”

பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“விண் நீ உடு நீ மிளிர் வாயுவும் நீ
மண் நீ அனல் நீ புனல் நீ மதி நீ
கண் நீ மணி நீ கருவினார் ஒளி நீ
எண் நீ என்னை ஆள் இதம் செய்பவனே”

விநாயகப் பெருமானே! ஆகாயம் நீ, அங்கு மின்னும் விண்மீன்களும் நீ, இந்தப் பூமியின் மண் நீ, மழை நீ, சந்திர சூரியன் நீ, கண்ணும் நீ அதன் கருமணியும் நீ , எண்ணப்படும் பொருள் எண்ணப்படாத பொருள் காண்பவை காணாதவை எல்லாமும் நீ, அப்படியான நீ என்னை ஆட்கொண்டு அருள் செய்கின்றாய். அதைவிட எனக்கு இதமானது ஏது? என்பது பாடலின் பொருள்.

விநாயகப் பெருமான், இந்தப் பிரபஞ்சமாய் அதில் உள்ள எல்லாமுமாய் இருக்கின்றார். அப்படியே பஞ்சபூத சேர்க்கையான உடல் கொண்ட என்னிலும் இருக்கின்றார். என் கண்ணும் கண்மணியுமாய் இருக்கின்றார். என்னை இயக்கும் சக்தியாய் இருக்கின்றார். சகலமும் அவரே எனப் பாடுகின்றார் காசிப முனிவர்.

விநாயகரே பிரபஞ்சம் என்றும் அவரிலே எல்லாம் தோன்றி அவரிலே ஒடுங்குகின்றன என்பதும் புராணம் சொல்லும் வரி.

பிரபஞ்சம் எனும் போது இந்த மகா பிரபஞ்சம் மட்டுமல்ல அதை இயக்கும் மும்மூர்த்திகளும் அடக்கம், எல்லாத் தேவர்களும் ரிஷிகளும் அடக்கம்.

இதனை விநாயக புராணம் சொல்கின்றது, ஒரு காட்சியில் சொல்கின்றது.

ஊழிக்காலம் ஒன்றில் இந்தப் பிரபஞ்சம் ஒடுங்க ஆரம்பித்து சுருங்கிற்று, அந்த சுருங்கியவடிவம் பரபிரம்மத்திடம் கலந்தது, அந்தப் பரபிரம்மமாக விநாயகப் பெருமானே இருந்தார்.

உரிய காலம் வரும்போது அந்த பரபிரம்மமான விநாயகரிடம் இருந்து எல்லாம் தோன்றின அவரின் ரஜஸ், தமஸ், சத்வ குணத்தின் கலவையாக மும்மூர்த்திகள் தோன்றினார்கள்.

அவர்கள் தங்களைப் படைத்த பரபிரம்மத்தை காண விரும்பி தவமிருந்தார்கள். ஆயிரம் தேவ வருடம் தவமிருந்தார்கள். அவர்கள் தவத்துக்கு இறங்கிய விநாயகர் அவர்கள் உண்மையினை அறியும் பொருட்டு தன் வயிற்றுகுள் அனுப்பினார்.

அங்கே அண்ட சாராசரம் அனைத்தும் கண்டார்கள். பிரபஞ்சமே அங்கு இருப்பதை கண்டவர்கள் விநாயகரின் பெருமையினை உணர்ந்தார்கள். பின் பிரம்மாவினை தன் துதிக்கையாலும், சிவனையும் விஷ்ணுவினையும் தான் காதுகள் வழியாகவும் வெளியே அனுப்பிய விநாயகர் அவர்கள் தங்கள் தொழிலைச் செய்யப் பணித்தார்‌.

அவர்கள் விநாயகப் பெருமானின் வயிற்றில் கண்டபடி இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து இயக்கிவந்தார்கள்.

இப்படி மும்மூர்த்திக்கும் பிரபஞ்ச வடிவத்தை தன் பரபிரம்ம வடிவத்தை விநாயகர் காட்டியதே “வக்ர துண்ட” வடிவம்.

ஆம். விநாயகர் முழுமுதல் கடவுள். இந்தப் பிரபஞ்சமே அவர்தான். அவரில் இருந்தே எல்லாமும் தொடங்கி எல்லாமும் ஒடுங்குகின்றது.

வானமும் சூரியனும் சந்திரனும் கோள்களும் எல்லாமும் மண்ணும் நீரும் நெருப்பும் உலகமும் உயிர்களும் எல்லாமே அவர் இயக்கம், அவரால் நடத்தப்படுகின்றன‌.

இதனாலேதான் எல்லா யாகங்கள் முதல் வழிபாடுகள் வரை மானிடரின் ஒவ்வொரு செயல்வரை அவருக்கே முதல் மரியாதை கொடுக்கப்படுகின்றது.

பிள்ளையார் சுழி இட்டு தொடங்குவதில் இருந்து எல்லாமும் விநாயகரைத் தொடங்கி நடப்பதும் இதனாலே.

பஞ்சபூதங்களின் சேர்க்கையால் தோன்றியது இந்தப் பிரபஞ்சம். அந்தப் பஞ்ச பூதங்களின் அதிபதியாகவும், நிர்குண பிரம்மத்தின் வடிவமாகவும், சகலத்தையும் தம்முள் அடக்கிக்கொண்ட பிரணவ மூர்த்தியாகவும் அவர் விளங்குகின்றார்.

அதனாலே ஓங்காரம் எனும் பிரணவ ஸ்வரூபியே என அவரை புராணம் போற்றுகின்றது.

கணபதியுடைய நாபி பிரம்ம ஸ்வரூபம் என்றும், முகம் விஷ்ணு ஸ்வரூபம் என்றும், நேத்ரம் சிவ ஸ்வரூபம் என்றும், இட பாகம் சக்தி ஸ்வரூபம் என்றும், வலப்பாகம் சூரியன் என்றும் கூறும் ஒரு ஸ்லோகம் உண்டு.

எல்லா தெய்வங்களும் அவரில் அடக்கம் என்பது அதன் பொருள்.

அவரின் யானை முகமும், மூன்று கண்களும், இரு செவிகளும், தும்பிக்கையைச் சேர்த்து ஐந்து கரங்களும், பெரும் வயிறும், குறுகிய இரு திருவடிகளும் கொண்ட வடிவம் அவரே பிரணவ ஸ்வரூபி என்பதைச் சொல்கின்றது.

ஐந்து கரங்களும், ஐந்தொழிலைச் சொல்பவை.

முக்கண்கள் சந்திரன், சூரியன், அக்னியை உணர்த்துகின்றன. விசாலமான இரு செவிகளும் ஆன்மாக்களை காப்பவை.

அவரின் பெருவயிறு அண்டங்கள் அனைத்தையும், உயிர்களையும் உள்ளடக்கியதைச் சொல்வது.

பாதங்களிலிருந்து கழுத்து வரை மனித ரூபமும், அதற்குமேல் யானை முகமும் கொண்டிருக்கும் கணபதி, மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ ரூபத்தில் பிரம்ம ஸ்வரூபத்தையும் இரண்டும் இணைந்த ஓர் அற்புத தத்துவத்தை விளக்குவார்.

ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தைச் சொல்வதே அவரின் தோற்றம்.

விநாயகருக்கு “ப்ரம்மணஸ்பதி” என்று அழகிய நாமமும் உண்டு. இவர் ஸ்வானந்தம், ஆனந்தம் எனும் இரு இன்ப நிலைகளுக்கு அதிதேவதையாவார். ஆதலால் இவருக்கு ஸ்வாநந்தேசர் என்றும் பெயர்.

இந்தத் தத்துவங்களை எல்லாம் சொல்லித்தான் அவரைப் போற்றிப் பாடுகின்றார் காசிபர், இந்தப் பிரபஞ்சமே அவர் என்பதைப் பாடித் துதிக்கின்றார்.

“வக்ரதுண்ட மகா காய சுர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா சர்வ கார்யஷு சர்வதா”

வக்ரதுண்டமாக கோலம் எனும் பெரும் பிரபஞ்சமாக நிற்பவரே, வளைந்த துதிக்கை கொண்டவரே, கோடி சூரியனின் பொலிவை உடையவரே, என்னுடைய அனைத்துச் செயல்களும் எந்தத் தடையுமின்றி எப்போதும் சரிவர நடந்திட எமக்கருள்வாய் என்பது பொருள்.

“பாஸாங்குஸௌ தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்”

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும், ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன்.

செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய திருவயிறு, ஆகியவற்றை உடையவரும், பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை நமஸ்கரிக்கின்றேன்.

இந்த ஸ்லோகங்களின் தழுவல்தான் இப்பாடல், அதனைப் பாடி வேண்டுவோர்க்கு விநாயகப்பெருமானின் எல்லா அருளும் நிச்சயம் கிடைக்கும்.

விநாயகர் அனுபூதி : 28

“தீய நெறிநாத் திகத்தில் திளைத்தே
ஆய நெறியை அறியா திருந்தேன்
தூய நெறியின் தொடர்காட் டினைநீ
ஆயும் நெறியும் அறிவித் தனையே”

பாடல் இப்படிப் பிரியும்.

“தீய நெறி நாத்திகத்தில் திளைத்தே
ஆய நெறியை அறியாது இருந்தேன்
தூய நெறியின் தொடர் காட்டினை நீ
ஆயும் நெறியும் அறிவித்தனையே”

அதாவது, “விதி வசத்தால் நாத்திகத்தில் உழன்றேன்; உன் அருளைப் பெறும் சன்மார்க்க வழியை அறியாமல் காலம் கழித்தேன்; தூய்மையான பக்தி வழியைக் காட்டினாய்; நான் உய்யும் நல்ல வழியை அறிவித்தாய விநாயகப் பெருமானே” என்பது பொருள்.

இந்தப் பாடல் காசிப முனிவர் தன்னைப் பற்றிப் பாடும் பாடல்.

காசிபர் பிரம்மனின் மகன், தேவர்கள், நாகம், காந்தர்வர், மானுடர் என எல்லோருக்கும் அவரே குலமுதல்வர், எல்லாம் அவரிடம் இருந்தே தோன்றிற்று.

அப்படியான காசிபர் எப்படியானவராக முதலில் இருந்தார் என்றால் தன்மேல் பெரும் நம்பிக்கை கொண்டு தன்னால் எல்லாம் முடியும் எனும் அகங்காரியாக தன் தவவலிமையால் தன் சக்தியால் எல்லாம் சாத்தியம் என இறுமாந்திருந்தார்.

தாருகாவன ரிஷிகள் போல யாகத்தால் தவத்தால் மந்திரங்களால் எல்லாம் சாத்தியம், தெய்வம் என ஒன்றுமில்லை என நாத்திக சிந்தனையில் இருந்தார்.

அவரின் கர்வத்தை அழிக்க எண்ணிய விநாயகப் பெருமான் பிரம்மனின் ஆணவத்தை அகற்றும்போது காசிப முனிவரும் சக்தியற்றுப் போகச் செய்தார்.

பின், ஏகாட்சரம் எனு “ஓம்” எனும் மந்திரத்தை ஆயிரம் வருடம் உச்சரித்துத் தவம் செய்து விநாயகப் பெருமானை வேண்டினார், விநாயகப் பெருமான் அவருக்குத் தோன்றிப் படைக்கும் சக்தியினை வழங்கினார்.

அதன்பின்பே எல்லாமும் தோன்றிற்று.

அதுவரை தன்னால் எல்லாம் முடியும் என அகங்காரம் கொண்டிருந்த காசிபர் பின் விநாயகருக்குப் பெரும் பக்தனாகிப் பாடியதுதான் விநாயக கவசம், விநாயகர் அனுபூதி, விநாயகப் புராணம் என எல்லாமும் பாடினார்.

இந்தக் காசிபரின் சமஸ்கிருத பாடல்களைக் கச்சியப்பர் தமிழில் கொடுத்தார்.

அருணகிரி நாதரை முருகன் ஆட்கொண்டது போல காசிப முனிவரை முழுக்க ஆட்கொண்டவர் விநாயகப் பெருமான், அந்த அருளை நினைந்து பாடுகின்றார் காசிபர்.

இந்தச் சம்பவம் காசிபரோடு மட்டும் நின்றுவிடவில்லை. காசிபர் குலத்திலும் நடந்தது.

காசிபர் குலத்தில்தான் இரணியன் போன்றவர்களெல்லாம் வந்தார்கள், அவர்களும் தெய்வம் என ஒன்றுமில்லை என அகங்காரம் கொண்டு ஆடினார்கள்.

இரணியனை, இரணியாட்சனை வதைக்க வந்த விஷ்ணு விநாயகரைத் தொழுது பலம் பெற்றே அவர்களை அழித்துப் போட்டார்.

நாத்திகர்களைத் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை அகங்காரிகளை அடக்கி அவர்களுக்குத் தெய்வம் என ஒன்று உண்டு எனச் சொல்லி ஆட்கொள்பவர் விநாயகர்.

இதைத்தான் இந்தப் பாடலில் சொல்லிப் போதிக்கின்றார் காசிபர், இதன் சூட்சுமமான போதனை ஆழமானது, அதாவது இன்னும் காசிபர் தேவர்கள் அசுரர்கள் நாகலோகங்களுக்கு மட்டுமல்ல, மானுடர்க்கும் அவரே குலமுதல்வர், அவரின் எல்லாக் குணமும் மானுடர்க்கும் உண்டு.

அவரின் வம்சத்தில் வந்த அசுரர்க்கு இருப்பது போல் மானுடர்க்குள்ளும் ஒரு அசுரகுணம் தெய்வம் இல்லை எனச் சொல்லும், அதுதான் நாத்திகவாதம்.

நாத்திகவாதம் என்பது அறியாமை அஞ்ஞானம், அந்த அறியாமையினைப் போக்கி பெரும்ஞானம் தருபவர் விநாயகப் பெருமான்.

ஞானம் என்பது என்ன என்றால் தெய்வத்தை நம்பி நமக்கு மேல் ஒரு சக்தி கடக்கமுடியா, கட்டுபடுத்தமுடியாப் பெரும் சக்தி உண்டு என உணர்ந்து கண்டு பணிந்து நம்பத் தொடங்குவது.

இந்த ஞானத்தை தருவார் விநாயகர், அறியாமை இருளைப் போற்றி ஞானம் அருளி இறைவனுக்கு கட்டுப்படும் மனம், இறைவன் வாழும் மனதைத் தருவார், தெய்வ நம்பிக்கையே ஞானத்தின் தொடக்கம் என்பதைச் சொல்லிப் பாடுகின்றார் காசிப முனிவர்.

விநாயகர் அனுபூதி : 29

“தொல்லைப் பிறவித் துயர்மா கடலுள்
அல்லல் வழியில் அழுந்தல் முறையோ
செல்வா பிரமச் செழுமா மணியே
நல்லாய் கரைஏற் றிடும்ஐங் கரனே”

பாடல் இப்படிப் பிரியும்.

“தொல்லைப் பிறவித் துயர் மா கடலுள்
அல்லல் வழியில் அழுந்தல் முறையோ
செல்வா பிரமச் செழுமா மணியே
நல்லாய் கரை ஏற்றிடும் ஐங்கரனே”

அதாவது, “தொல்லைகள் மிக்க இந்தப் பிறவியில் துயரங்கள் மிகுந்த கடல் போன்ற பிறப்பில் என்னை மூழ்கடிப்பது முறையோ, இந்தப் பிறவிச் சுழலில் நான் சிக்கிக்கிடப்பது முறையோ? பிரம்மனுக்கு அருள் செய்த விநாயகப் பெருமானே, இப்பிறப்பில் இருந்து என்னைக் கரை ஏற்றுவாய் ஐங்கரனே” என்பது பாடலின் பொருள்.

இந்தப் பூமி கர்மம் கழிக்குமிடம். ஒவ்வொருவரும் அவரவர் கர்மாவினைக் கழிக்க இங்கே பிறந்திருக்கின்றோம். அந்தக் கர்மவினை என்பது மகா சிரமப்பட்டு சுமக்கவேண்டிய துயர மூட்டை, பெரும் போராட்டத்துக்கு இடையே கடக்க வேண்டிய பெரும் கடல்.

மானுடப் பிறப்பு எல்லாமே சுமைகள், பெரும் அவலங்கள், அது ஏன் நிகழ்கின்றது என்றால் கர்ம வினைகளால் நிகழ்கின்றது. அந்தக் கர்மவினைகளை அகற்றிவிட்டால் அந்தப் பழம் வினைகளை நீக்கிவிட்டால் புதிய பிறப்பு இல்லை.

விநாயகப் பெருமான் கர்ம வினைகளைக் களைவதால் இப்பிறவியின் அல்லல் போகும் அப்படியே புதிய பிறப்பும் வாரா.

விநாயகப் பெருமான் கையில் ஒரு கோடரி இருப்பதைக் காணலாம். அதன் பொருள் அவர் பாசபந்தங்களை மட்டுமல்ல, பிறப்பையும் அறுத்துப் போடுவார், வெட்டிப் போடுவார் என்பதைச் சொல்லும்.

அதைத்தான் இங்கே பாடி நிற்கின்றார் காசிப முனிவர். கர்ம வினை எல்லாம் களைபவனே எனக்கு இன்னுமோர் பிறப்பு வராமல் தடுப்பாயாக எனக் கெஞ்சுகின்றார்.

இங்கே ஒரு நுணுக்கமான விஷயத்தைச் சொல்கின்றார் காசிப முனிவர். அதாவது, பிரம்மனுக்கு விநாயகர் அருள் செய்த புராணத்தைச் சொல்கின்றார்.

பிரம்மனுக்குத் தானே உலகைப் படைக்கின்றோம், எல்லா உயிர்களின் தலைவிதியினை எழுதுகின்றோம் எனும் கர்வம் இருந்தது. அதனால் பெரும் அகங்காரத்தில் அவர் யாரையும் மதிக்காமல் ஆடிக்கொண்டிருந்தார்.

விநாயகர் அவரை நோக்கிச் சிரித்தார். மறுநிமிடம் பிரம்மனின் படைப்பெல்லாம் ஒழுங்கற்றுப் போயின. அரைகுறையாக மாறின. அவன் வழக்கமாய்ப் படைக்கும் பூரணத்துவம் அங்கு இல்லை.

எல்லாமே நிலைகுலைந்தன. அவர் படைப்பு நிலைகுலையும் போது காத்தல் அழித்தல் என எல்லாத் தொழிலும் அவற்றுக்கான தெய்வங்கள் எல்லாமும் குழம்பின‌.

பிரம்மன் ஆடிப்போனான். தன் தவற்றை உணர்ந்து தன்னைக் காக்க விநாயகப் பெருமானிடமே சரணடைந்தான். அந்த இரக்கமிகுந்த விநாயகரும் அவனை அணைத்து மன்னித்தார். அதன் பின் வழமையாக படைக்கும் ஆற்றலை அவர் மீளப் பெற்றார். அவர் அகங்காரம் மட்டும் ஒழிந்திருந்தது.

அதுமுதல் பிரம்மன் விநாயகருக்குக் கட்டுப்பட்டவரானார்.

காசிப முனிவர் இதைத்தான் சொல்கின்றார். விநாயகரை வணங்கினால் அவர் அருளில் பிரம்மனே நம் தலையெழுத்தை மாற்றி இப்பிறப்பில் எழுதுவான், அடுத்தப் பிறப்பும் வாராது எனப் பாடுகின்றார்.

இந்தப் பிறவியின் பலன்களைத் தலைவிதியினை விநாயகரை வேண்டினால் மாற்றலாம். கர்ம பலன் வழி தலைவிதியினை மாற்றலாம், விநாயகர் அந்த வரத்தை தருவார் என்கின்றார் காசிபர்.

நம் ஒவ்வொருவரின் அலங்கோல தலைவிதியும் கண்ணீரும் கம்பலையுமான வாழ்வும் வினைகளின் பலன், அந்த வினைகளின் பலனே தலைவிதியாய் அமைந்தது, விநாயகரைப் பணிந்தால் அவையெல்லாம் நொடியில் மாறும்.

இதனையே எல்லா அடியார்களும் பாடினார்கள்.

“முன்னை வினையின் முதலைக் களைந்து” என்பதும், “கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே” என்பதும் விநாயகர் அகவலில் ஒளவை பாடும் வரி.

“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனைத் தொழ வினையறுமே”

என்பது நக்கீர பெருமானின் அகவலுக்கான பாடல்.

“கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதிஎன்றிடக் கருமமில்லையே”

என்பது மகா ஞானி திருமூலரின் பாடல்.

இதைத்தான் விவேக சிந்தாமணி பாடலும் சொல்கின்றது.

“அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் – நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்”

இது திருவண்ணாமலையில் உள்ள விநாயகரைப் போற்றும் பாடல், மாபெரும் சிவதலமான திருவண்ணாமலை முருகப்பெருமானும் அருளாட்சி செய்யுமிடம். அங்கே விநாயகப்பெருமானும் பெரும் அருள் பாலிக்கின்றார்.

கோவிலில் மட்டுமல்ல இன்னும் சில இடங்களிலும் அவரின் அரசாட்சி அங்கு உண்டு. அதில் முக்கியமானது கிரிவலப் பாதையில் குபேர லிங்கத்தை அடுத்து அமைந்திருக்கும் இடுக்கு பிள்ளையார் சந்நிதி.

அந்த மண்டபத்தில் மூன்று யந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார் இடைக்காட்டுச் சித்தர். அந்த சந்நிதி நாம் படுத்தநிலையில் ஊர்ந்து செல்லவேண்டும். அப்படிச் செல்லும்போது சித்தர் அமைத்த யந்திரங்கள் உடலில் பட்டு பல நல்ல அதிர்வுகளை பெற்றுக்கொள்ளலாம். அதனாலே அப்படி எற்பாடு செய்யப்பட்டது.

இந்த இடுக்குப் பிள்ளையாரை எத்தனை முறை நுழைந்து தரிசித்து வெளி வருகிறோமோ அத்தனை பிறவிகள் குறையும், ஏழு சுற்று சுற்றினால் ஏழு பிறவியும் இருக்காது.

ஆம். எதெல்லாம் கர்மம் கழிக்கும் சிவாலயங்களோ அங்கெல்லாம் பிள்ளையாரும் அமர்ந்திருப்பார். திருவண்ணாமலையில் அவர் அமர்ந்து பிறப்பற்ற பாக்கியம் தருகின்றார். பிறப்பினை அறுக்கின்றார்.

இந்தத் தத்துவ தார்பரியத்தைத்தான் ஆழமாக பாடுகின்றார் காசிப முனி.

அந்த விநாயகருக்கு ஒரு ஸ்லோகம் உண்டு, அதைச் சொல்லி வாழ்த்தி பாடிப் பிறப்பற்ற பாக்கியம் பெறலாம், கர்மவினை தீர்ந்து இந்த பிறப்பும் அல்லல் இன்றிப் போகும்.

“பாஸாங்குஸௌ தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்”

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும் ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன்.

செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய திருவயிறு, ஆகியவற்றை உடையவரும், பத்மாசன‌த்தில் அமர்ந்து, பிரம்மன் முதலான தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான விநாயகப் பெருமானை நமஸ்கரிக்கின்றேன்.

விநாயகர் அனுபூதி : 30

மாயை எனும்கார்த் திரையைத் தெரித்துஎன்
பேயை விரட்டும் பெருமான் ஒருவன்
தாயை நிகர்த்த தனிமா முதல்வன்
காயைக் கனிஆக் குவன்கண் ணியனே”

பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும்.

“மாயை எனும் கார் திரையைத் தெரித்து என்
பேயை விரட்டும் பெருமான் ஒருவன்
தாயை நிகர்த்த தனிமா முதல்வன்
காயைக் கனி ஆக்குவன் கண்ணியனே”

அதாவது, “மாயைகளை அகற்றி இருண்ட திரையினை அகற்றி என்னை ஆட்டிவைத்த பேய்குணமெல்லாம் பேய் போல என்னை மயக்கிய விஷயமெல்லாம் அகற்றிய பெருமானே, தாயை போல என்னைக் காக்கும் தனி ஒரு தெய்வமே, காயை கனி ஆக்கும் தெய்வமே என்னை ஆதரிப்பாயாக” என்பது பொருள்.

இங்கு விநாயகரின் அருளைப் பற்றி அவரின் கருணைப் பற்றி சிலாகிக்கும் முனிவர் விநாயகரின் தாய் அன்பினை சொல்லி அவரைத் தனிப்பெரும் தெய்வம் என்கின்றார்.

விநாயகப்பெருமானின் தனிச் சிறப்பு என்பது மற்ற தெய்வங்களுக்கு இல்லாத ஒன்று அதாவது அவர் தனித்து நிற்பவர்.

மற்ற தெய்வம் எல்லாவற்றுக்கும் பாதுகாவலர், தளபதிகள், ஆட்கள், ஏவலர்கள் எனப் பலர் உண்டு. ஆனால், விநாயகருக்கு அப்படி யாருமில்லை. அவர் ஒருவர்தான் எல்லா விஷயங்களிலும் எல்லா இடங்களிலும் தனித்து நிற்பார். போருக்குச் செல்லும்போதும் தனித்துச் செல்வார்.

அதாவது, யாருடைய உதவியும் தேவையற்ற பெரும் இடத்தில் தனி இடத்தில் இருக்கும் சக்திமிக்க தெய்வம் அவர்.

அப்படியான நிலையிலும் அவர் தாய்போல் அன்புமிக்கவர், அந்தத் தாய் அன்பில் நம்மைக் கருணையுடன் அணைத்துக் கொள்பவர், அவரின் கருணை உள்ளமும் அன்பும் நம்மையும் கனிவான உள்ளம் கொண்டவர்களாக்கும்.

கனிந்த உள்ளமே இறைவன் வாழும் மனம், அந்த கனிந்த உள்ளம் கொண்ட மனதில் இறைவன் எழுந்தருள்வான் என்பது ஞானியர் வாக்கு, விநாயகப் பெருமான் காய்போன்ற மனதை கனியவைத்து பக்குவமாக்கித் தருவார் மனதை தெய்வநிலைக்கு உயர்த்துவார் என்பதைச் சொல்லிப் பாடலைத் துவக்குகின்றார் காசிப முனிவர்.

“யஸ்ய சித்தம் த்ரவீபூதம் க்ருபயா சர்வஜந்துஷு |
தஸ்ய ஞானேன மோக்ஷேண கிம் ஜடா பஸ்ம லேபனைஹி”

என்பது ஸ்லோகம். எவன் மனம் எல்லா உயிர்கள் மேலும் முழு அன்பாய், கனிந்த கருணையாய் இருக்குமோ அவன் வாழும்போதே தெய்வநிலை அடைந்துவிடுகின்றான் என்பது அதன் பொருள்.

இதையே ஒளவையார் பாடுவார்.

“பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை”

அதாவது, “பழுத்தப் பழத்தை பிழிந்தால் இனிய சாறு கிடைப்பது போல கனிந்த மனதை பக்தி யோகத்தால் பிழிந்தால் ஞானசாறு ஊறும். அங்கு ஈசன் நிலையினை உணரலாம் என்பது ஒளவையார் வாக்கு.

இப்படிக் கனிந்த நிலையான தெய்வ நிலையினைத் தருபவர் விநாயகப் பெருமான், தாயினைப் போல பெரும் அன்பு கொண்டு நம்மைக் காத்து தெய்வநிலைக்கு உயர்த்துபவர் விநாயகப் பெருமான் என்பதைச் சொல்லி, அந்த நிலைக்கு செல்ல மாயைகளை கடக்க வேண்டும், அந்த மாயையினை கடக்க வைப்பவர் விநாயகப் பெருமான் என்பது அவர் சொல்லவரும் போதனை.

ஒருவனின் எல்லாத் துன்பத்துக்கும் அறியமைக்கும் மாயையே அதன் மாய ஆசைகளே காரணம். எல்லாம் மாயை என்பதை உணர்ந்தவனுக்கு அதைத் தாண்டி ஞானம் வருகின்றது, ஞானியின் மனம் பக்குமாகி கனிகின்றது அங்கே தெய்வம் எழுந்தருள்கின்றது.

இந்த மாயையினை முழுக்க அறுப்பது விநாயகப் பெருமான், அவரை அண்டியவர்களின் மாய ஆசைகளை அறுத்து அவர் நல்வழி காட்டி முழு ஞானம் அருள்கின்றார்.

ஞானம் என்பது உண்மை எது, பொய் எது, நிலையானது எது அழியக் கூடியது எது என்பதை உணர்வது. அழிய கூடியது எல்லாவற்றையும் அழியாதது போல் காட்டுவது மாயை, இந்த மாய ஆசையில்தான் மானிடர்கள் திசைமாறிச் செல்கின்றார்கள்.

இந்த மாயையினை ஒழிப்பவர் விநாயகப் பெருமான்.

இதனைத் தன் அகவலில் “மாயா பிறவி மயக்கம் அறுத்து” எனச் சொல்லிப் பாடுகின்றார் ஒளவையார், “மருவிய பிறவி மாயையை நீக்கி” எனப் பாடுகின்றார் நக்கீரர்.

“கண்டது மாயைக் கனவென காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னிணையடி யிருத்தி மனத்தே” எனப் பாடுவதும் நக்கீரரே.

விநாயகரின் பெயர்களில் “ஏக தந்தன்” என்பதும் ஒன்று, இதற்கு ஒரு கொம்பை உடையவன் எனப் பொருள் வந்தாலும் இன்னொரு வகையில் மாயைகளுக்குச் சிக்காமல் ஏகப் பரம்பொருளாய் நிற்பவன் என்பதும் பொருளாகும்.

அப்படியே “மயூரேசன்” என்றொரு பெயரும் அவருக்கு உண்டு. அதற்கு மாயைகளில் இருந்து தன் பக்தர்களைக் காப்பவர் என்பதும் பொருள்.

“விகடராஜன்” என அவருக்கோர் பெயர். அதற்கு இந்த உலகில் மாயையின் பிடியில் சிக்காதவர் என்றொரு பொருளும் உண்டு.

விநாயகரின் ஒவ்வொரு நிலையும் ஞானபோதனை. அப்படியே அவருக்குப் படைக்கப்படும் பொருள்களில் முக்கியமானதான மோதகம் எனும் கொழுக்கட்டையும் ஞானபோதனை சொல்வது.

அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையில் மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். அதன் தத்துவம் ஆழமானது.

அந்த மாவுதான் மாயை. அதாவது, ஆசை முதலான உலகப்பற்றுகள், அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம் என்பதைச் சொல்வதுதான் மோதகத் தத்துவம், விநாயகர் மோதகப் பிரியர் என்பது அதுதான்.

விநாயகர் எப்படி மாய ஆசைகளைக் களைவார் என்பதற்குக் கௌண்டிய முனிவர் வாழ்வே சாட்சி.

கௌண்டிய முனிவர் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். பெரும் விநாயக பக்தர். அவர் மனைவி ஆசிர்யா என்பவருக்குப் பொருளாசை எனும் மாய ஆசை அதிகம்.

அவர் பற்றற்ற தவவாழ்க்கையினை விநாயகரை முன்னிறுத்தி வாழ அவளுக்குள் தன் கணவன் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும் நாடி பெரும் பொருள் ஈட்டி வரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.

அதனை அறிந்த முனிவர் தன் மனைவியின் மாயையை அகற்றவும், அவளுக்கு விநாயகப் பெருமானின் மகிமையையும், உணர்த்த வேண்டி, கெளண்டிய முனிவர் அவளிடம், அருகு ஒன்றை விநாயகருக்குச் சமர்ப்பித்து விட்டு எடுத்துத் தந்தார். “இந்த அருகைத் தேவேந்திரனிடம் கொடுத்து இதன் எடைக்கு ஈடாகப் பொன் பெற்றுக் கொள்வாயாக!” என்றார்.

ஆசிர்யா திகைத்தாள், “இந்த அருகம்புல்லுக்கு என்ன கிடைக்கும்?” என அதிர்ந்தவள் கணவன் சொல்லை மீறமுடியாமல் அதை எடுத்துத் தயக்கத்துடன் தேவேந்திரனிடம் சென்றாள்.

“இந்த அருகம்புல் எடைக்குப பொன்னா? அதுவும் தேவலோகத்திலா” எனப் பரிகாசம் செய்த இந்திரன் அதனைத் தராசில் இட்டு மறுமுனையில் சிறிய பொன்னை வைத்தான்.

தராசு அருகம்புல் பக்கமே சாய்ந்தது. அதிர்ந்தவன் ஏராளமான பொன்னை வைத்தாலும் மூட்டை மூட்டையாய் வைத்தாலும் அருகு பக்கமே தராசு நின்றது, கடைசியில் தேவேந்திரன் தானே ஏறி உட்காரவே சமனாமாயிற்று தராசு.

இப்போது பொன்னும் தேவேந்திரனும் முனிவர் மனைவிக்கு அடிமை என்பதால் பெரும் பொன்னுடனும் தேவேந்திரனுடனும் ஆசிரமம் வந்தார் ஆசிர்யா, தேவேந்திரன் அவர்கள் அடிமையாய் நின்றான்.

“விநாயகரின் அருளை அறிந்து கொண்டாயா?” என முனிவர் கேட்க அவர் காலை பற்றி கதறினாள் மனைவி. முனிவர் தேவேந்திரனை போக அனுமதித்தார். அத்தோடு அவர் மனைவியின் மாயை அகன்றது. அந்தப் பொன்னை திரும்ப கொடுத்துவிட்டு விநாயகர் பாதம் அமர்ந்தாள்.

இதனாலே தூர்வா எனும் அருகம்புல் வழிபாடு முக்கியமாயிற்று

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, ‘தூர்வாஷ்டமி’ ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, ‘தூர்வாஷ்டமி ப்ராடா’ எனப் பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள். இது ஆசிர்யா வாழ்வில் இருந்து வந்த வழமை.

இப்படியான புராணச் செய்தி இன்னொரு இடத்தையும் சொல்கின்றது. அது அனலாசுரன் கதை.

அனலாசுரன் என்பவன் தன் வெப்பத்தால் எல்லாத் தேவர்களையும் இம்சிக்க விநாயகர் அவனை விழுங்னார். அதன் பின் அவர் உடலில் இருந்து வெப்பம் எகிறிற்று, அஞ்சிய தேவர்கள் அவரை பால், தயிர், சந்தனம் எனக் குளிர்வித்தாலும் வெப்பம் அடங்கவில்லை. கடைசியில் 21 அருகம்புல்லை அவர்மேல் இட்டதும் அக்னி அடங்கிற்று

இது அருகம்புல்லின் பெருமையினை சொல்வதாக அமைந்தாலும் தத்துவம் பெரிது.

அதாவது, அருகம்புல் பெரிதாக பெருகக் கூடியது, அருகாமல் வந்துகொண்டே இருப்பது. அதைப் பிடுங்கிப் போட்டாலும் ஒரு சிறிய வேர் இருந்தாலும் அதிலிருந்து பெருகும்.

காய்ந்த நிலத்தில் அது இல்லாதது போல் இருந்தாலும் மழைபட்டவுடன் நீர் பட்டவுடன் செழித்து வளரும்.

மாயை இப்படியானது. ஒரு சிறு ஆசை பெரிதாகப் பெரிதாக பல ஆசைகளாக அருகம்புல் போல் வளரும், முழுக்க ஆசை அற்றுப்போனதாக நினைந்தாலும் ஒரு சிறிய பொறியில் அது பெரிதாக வரும்.

வெட்ட வெட்ட வளரும் அருகம்புல் போல, மாபெரும் வகையில் கட்டுப்படுத்தமுடியாமல் பெருகும் அருகு போல, ஒரு சிறிய வேரில் துளிர்க்கும் அருகுபோல கட்டுப்படுத்த முடியா மாயையினை கட்டுப்படுத்துபவர் விநாயகர் என்பதே அவருக்கு அருகு சாற்றும் தத்துவம்.

முனிவர் மனைவியின் மாய ஆசையினையும், அனலாசுரன் எனும் மாய அசுரனின் ஆசை நெருப்பையும் அவர் அருகம்புல்லால் போக்கினார் என்பதும் இந்தத் தத்துவமே

அருகம்புல் மருத்துவரீதியாக நல்லது என்றாலும் ஆத்ம தத்துவமாக விநாயகருக்குச் சாற்றும் சூட்சுமம் இதுதான்.

மாயைகளை அகற்றும் விநாயகர், அருகம்புல் போன்ற மாயைகளை அகற்றி முழுவதும் களைந்து பெரும் ஞானம் தருவார் என்பதே அந்த ஞான தத்துவம்.

அதைத்தான் இந்தப் பாடலில் சொல்லி மாயைகளை அகற்றுவார், அந்த மாயை அகன்ற மனம் கனிந்த நிலையில் இறைநிலை அடையும் என்கின்றார் காசிப முனிவர்.

“போகாத தோஷவினை போகப் பிணியகன்று
தேகாதி யெல்லாஞ் செழிக்கவே ஸ்ரீ வாகாய்
அடர்தந்தை பிள்ளைக் கணியா தலாலத்
திடமாங் கணபதிபத்ரம்”

எனப் போகர் சொல்வது வெறுமனே அருகம்புல் மகிமை அல்ல, விநாயகப் பெருமான் அருகம்புல்லை போன்ற மாயைகளை அகற்றி நமக்கு நல்வழி ஞானவழி தருவார் என்பது அதன் ஆழமான போதனை.