விநாயகர் அனுபூதி : 31 to 35
விநாயகர் அனுபூதி : 31
“அயில்கை உளநம் அறுமா முகற்கே
மயிலூர் திதனை மகிழ்ந்தே அளித்தான்
செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில்
ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்
“அயில் கை உள நம் அறுமா முகற்கே
மயில் ஊர்தி தனை மகிழ்ந்தே அளித்தான்
செயிர் தீர் அடியார் சிறப்பாம் வகையில்
ஒயிலாய் நலம் தந்து உயர்த்தும் அவனே”
அயில் என்றால் வேல் எனப் பொருள்.
வேல் ஏந்திய முருகனுக்கு தன் மயில் வாகனத்தைக் கொடுத்து மகிழ்ந்தவர் விநாயகப் பெருமான். அப்படியான விநாயகர் தன்னை அண்டிவருவோரெல்லாம் நலம் பெறும் வகையில் அவர்களைப் பெரும் இடத்துக்கு உயர்த்துவார் என்பது பாடலின் பொருள்.
இந்தப் பாடல் புராண காட்சி ஒன்றைக் காட்டுகின்றது. அங்குதான் முருகப்பெருமானுக்கு மயில் வாகனமானது. அதுவரை ஆட்டுக்கிடாதான் முருகனுக்கு வாகனமாய் இருந்தது. அந்தப் புராணத்தில்தான் முருகனுக்கு மயிலே விநாயகரிடம் இருந்து கிடைத்தது.
அந்தப் புராணம் சிந்து எனும் அசுரனுடையது.
கண்டகி எனும் தேசத்தை சக்ரபாணி என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி உக்ரா, அசுர குலமான இவனுக்கு குழந்தைகள் இல்லை, சௌனக் எனும் முனிவர் அவர்களுக்கு ஒரு உபாயம் சொன்னார்.
அதன்படி உத்ரா சூரியனை நோக்கி தவமிருக்க அவளுக்கு கரு வாய்த்தது. ஆனால், சூரியனின் அம்ச குழந்தை என்பதால் அது மிகவும் வெம்மையாக இருந்தது.
அந்த வெப்பத்தைத் தாங்கமுடியாத உக்ரா அந்தக் கருவினைக் கடலில் இட்டாள். கடலரசன் அதைக் காத்துக்கொண்டான். அக்கரு கடலிலே வளர்ந்தது, உரிய காலத்தில் அது குழந்தையானபோது கடலசரன் அதனை உக்ராவிடம் கொடுத்தான்.
கடல் எனப் பொருள்படும் “சிந்து” எனும் பெயரை அந்த அசுரனுக்கு இட்டார்கள், அவன் சக்தி பல படைத்து வளர்ந்தான், அவனை அசுரகுரு சுக்கிராச்சாரி இன்னும் பலமாக்கினார்.
அவனைச் சூரியனை நோக்கி தவமிருக்க சொன்னார். சூரியன் அவனுக்கு அமுதக்குடத்தை கொடுத்து இது உன் வயிற்றில் இருக்கும் வரை உன்னை யாராலும் வெல்லமுடியாது என வரமருளினான். அதை வயிற்றில் கட்டி மறைத்துக் கொண்ட சிந்து பெரும் ஆட்டம் ஆடினான்.
தேவர் உலகினைக் கைப்பற்றினான். அண்ட சராசரத்தை ஆட்டிவைத்தான். கடைசியில் தேவர்கள் கயிலாயம் செல்ல அவன் கயிலாயத்தையே கைப்பற்றபோவதாக மிரட்டினான்.
சிவபெருமான் எல்லாத் தேவரையும் விநாயகப் பெருமானிடம் அனுப்பினார். விநாயகர் தேவர்களைக் காக்க திருவுளம் கொண்டார். அப்போது சிந்துவின் நண்பன் கமலாசுரன் என்பவன் படையோடு வந்தான்.
அவனை ஒழிக்க விநாயகர் கிளம்பும் நேரம் கார்க்கிய முனிவர் ஒரு யாகம் செய்து வேதத்தை மயிலாக வடித்துக் கொடுத்தார். அந்த வேதமயிலில் விநாயகர் கமலாசுரனுடன் யுத்தம் செய்தார்.
கமலாசுரனுக்கு ஒரு வரம் இருந்தது, அவன் இரத்த துளிகளெல்லாம் அசுர கூட்டமாக பெருகும், இதனால் அவனைக் கொல்லுதல் கடினமானது.
விநாயகர் அந்நேரம் சித்தி புத்தி எனும் பிரம்மனின் மகள்களை அழைத்துக் கமலாசுரனின் இரத்தம் தரையில் விழாமல் பார்த்துக்கொள்ள செய்து அவனை சம்ஹாரம் செய்தார்.
கமலாசுரன் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் அந்த சிந்து அசுரன் வந்தான், வந்தவனுக்கும் விநாயகருக்கும் கடும் சண்டை உண்டாயிற்று.
விநாயகருக்கு துணையாக முருகப்பெருமானும் வீரபாகுவும் வந்தார்கள். கடைசியில் சிந்து அசுரனின் வயிற்றில் இருந்த அமுதக்குடத்தை விநாயகர் உடைக்க அவன் வீழ்ந்தான்.
இந்தப் போரில் தனக்கு உதவ வந்த முருகப்பெருமானுக்கு தன் வேத மயிலையே கொடுத்து அவர் உயரப் பறப்பதைக் கண்டு மகிழ்ந்தார் விநாயகப்பெருமான். முருகப்பெருமானின் மயில் இப்படித்தான் கிடைத்தது.
இந்தப் புராணக் காட்சியினைச் சொல்லி விநாயகப்பெருமான் தன்னைத் தேடி வருபவர்களுக்குப் பெரும் உதவி செய்து தன்னிடம் இருப்பதில் மிகச் சிறந்த பொருளைக் கொடுத்து மகிழ்பவர், தன்னைத் தேடி வருபவர்க்கு இருப்பதிலே பெரிய விஷயத்தைத் தந்து மகிழ்பவர் என்கின்றார் காசிப முனிவர்.
முருகப்பெருமானை மயில்மேல் ஏற்றிப் பறக்கவைத்த விநாயகப் பெருமான் அவரை அண்டியவர்களை வான் அளவு உயர்த்துவார் என்பது பாடலின் போதனை.
விநாயகப் பெருமான் சக்தி தேவியின் சாயல். அதாவது தாயிடம் இருந்து உருவானவர். இதனால் அவருக்குத் தாயினைப் போன்ற கருணையும் அன்பும் பாசமும் அதிகம்.
எந்தத் தாயும் தன் பிள்ளையினைத் தான் வளர்க்கும் பிள்ளையினை உயரத்தில் வைத்து பார்க்க விரும்புவாள். விநாயகப்பெருமான் அப்படித் தன்னை நம்பிவரும் அடியார்களை வெகு உயரத்தில் வைத்து மேலான இடத்தில் வைத்து அழகு பார்ப்பார் என்பது காசிப முனிவரின். போதனை.
சக்தி கணபதி எனத் தன்னை அண்டிவரும் பக்தர்க்கெல்லாம் பெரும் சக்தி கொடுக்கும் விநாயகப் பெருமானின் கருணையினைச் சொல்லும் பாடல் இது. முருகபபெருமானுக்கே அவரின் சக்தியான மயிலைக் கொடுத்தவர் விநாயகர் எனும்போது இவரின் பெரும் இடம் தெரியும்.
அந்தச் சக்தி கணபதியினை வணங்கினால் நலமெல்லாம் வந்து சேரும் என்பதும், நம்மைப் பெரிய இடத்தில் உயர வைத்து விநாயகர் மகிழ்ந்து காப்பார் என்பதும் பாடல் சொல்லும் விநாயகர் புகழ்.
“ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே”
பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ச்க்தி கணபதியை வணங்குகிறேன்.
விநாயகர் அனுபூதி : 32
கரிமா முகனின் கருணை அறியார்
எரிவாய் நரகில் இடரே படுவார்
விரிமா தவரும் விரும்பும் பெரியோன்
அரிதா அருச்சித்(து) அவனைப் புகழே”
” யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானின் கருணையினை அறியாதவர்கள் அக்னிவாய் கொண்ட நரகில் இடர் படுவார்கள்; பெரிய தவம் செய்யும் முனிவர்களால் விரும்பப்படும் பெரிதான தெய்வமான விநாயகரை அர்சித்து அவரை வணங்குங்கள்; அவர் புகழ் பாடுங்கள்” என்பது பாடலின் பொருள்.
விநாயகப் பெருமான் தன்னை அண்டியவர்களை எல்லா இன்னலில் இருந்தும் காப்பவர். தன் சக்தி அறியாமல் தன்னிடம் எதிர்த்து நின்ற பொல்லாதவரை எரிநரகில் தள்ளி அழித்தார்.
தன்னைச் சதா காலமும் நினைந்த முனிவர்களுக்கு எல்லாப் பெரும் வரமும் அளித்தார். அதற்குப் பெரும் உதாரணம் வியாச மாமுனி. விநாயகரின் அருளாலே அது ஒன்றினாலேதான் அவர் வேதங்களைத் தொகுத்து மகாபாரதமும் எழுதினார்.
இவ்வாறு தன்னைச் சதாகாலமும் நினைக்கும் தவசிகளுக்குப் பெரும் வரம் தரும் விநாயகப் பெருமான் தன் அடியார்கள் மேல் கொடுமை செய்யும் பொல்லாதவர்களை அழித்துக் கொடும் தணடனையும் தருவார்.
இதனை அவர் எடுத்த எட்டு அவதார வடிவங்கள் உறுதியாகச் சொல்கின்றன.
அவரின் முதல் அவதாரம் ஏக்தந்த் அவதாரம் என்பது. மதசுரன் என்ற பொல்லாத அரக்கனை ஒழிக்க அவர் இந்த அவதாரம் எடுத்து எல்லா உலகையும் காத்தார். ஏக தந்தர் எனும் ஒற்றைக் கொம்பனாக வந்து மதசுரனை அழித்துப் போட்டார்.
உலகில் எந்த ஜீவராசியாலும் வெல்லப்படமுடியா வரம் ஒன்றை சிவனிடம் வாங்கினான் மத்ஸராசுரன். அவனை வக்ரதுண்ட வடிவில் வந்து அழித்துப் போட்டார் விநாயகப் பெருமான். இதனால் வக்ரதுண்டர் எனும் பெயரும் பெற்றார்.
லோபாசுரன் என்ற அரக்கனைத் தோற்கடிக்க விநாயகப் பெருமான் கஜானனா என யானை உருவில் வந்தார். அவர் சக்தியினைப் பார்த்த லோபாசுரன் அவரிடம் சரணடைந்தான். அவனைத் தன்னோடு ஏற்றுக்கொண்டார்.
குரோதாசுரன் எனும் அசுரனை ஒழிக்க லம்போதக அவதாரம் எடுத்து வந்தார் விநாயகப் பெருமான். லம்போதரரராகி அசுரரை அழித்துத் தேவர்களைக் காத்தார்.
முருகப்பெருமான் தாராசுரனை வதம் செய்யும் போது அசுரகுரு சுக்கிராச்சாரியார் மோகாசுரன் எனும் அசுரனை உருவாக்கினார். அவனை அழித்து முருகப்பெருமானின் யுத்தம் தடையின்றி நடக்க வழிசெய்தார் விநாயகர். இதனால் அவர் மஹோதர் என்றானார்.
காமசுரன் எனும் கொடியவனை அழிக்க அவர் விகடன் வடிவில் வந்தார்.
மாமாசுரன் எனும் பொல்லா அசுரனை அழிக்க, அவனை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரம் இது. இதனால் விக்னராஜா என்றானார்.
அஹம்காரசுரன் என்ற அரக்கனைத் தோற்கடிக்க வந்து வென்றவர் தும்ரவர்ணா எனும் பெயரைப் பெற்றார்.
விநாயகரின் இந்த எட்டு அவதாரமும் வெகு சிறப்பானவை. அந்தப் பெரும் ஆற்றலைச் சொல்லி அவரைப் புகழ்கின்றார் காசிப முனிவர்.
எட்டு அசுரன் எனச் சொன்னாலும் இங்கே இது எட்டு துர்குணம் எனவும் பொருளாகும். ஒரு மனிதனை அசுர மிருகமாக்கும் எட்டு குணங்களை ஞானத்தால் அகற்றுபவர் விநாயகப் பெருமான்.
காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம், மமதை, மோகம், அகந்தை எனும் எட்டு குணங்களையும் ஒழிப்பவர் விநாயகர்.
மனிதனின் அசுரக் குணத்தை ஒழித்து அவனுக்குத் தெய்வ நிலையினைத் தருபவர் விநாயகர். அவரை அண்டினால் எல்லாத் துர்குணமும் ஒழிந்து மனிதன் தெய்வநிலையினை அடைவான். இதனாலே மானிடரான ரிஷிகளும் தவசிகளும் அவரை வணங்கி அவர் அருளால் தெய்வநிலை அடைகின்றனர் எனப் பாடுகின்றார் காசிப முனிவர்.
கர்க மகரிஷி ஓதிய கணேச ஸ்தவம் என்னும் ஸ்லோகத்தில் முதல் ஸ்லோகத்தில் பாடுகின்றார்
“ஸர்வகம் ஞான காம்யம் ।
முனித்யேயம் ஆகாசரூபம்”
அதாவது எங்கும் ஞானமாக நிறைந்திருக்கும் கணபதி, முனிவர்களால் தியானிக்கப் படக் கூடியவர்
அவரை “முனிஜ்ஞானகாரம்” என்கின்றார் அதாவது முனிவர்களில் அறிவுக்குக் காரணமானவர் என்பதும் அவர் வாக்கு
ஆம் விநாயக பெருமான் அறுவகை துர்குணங்களையும் ஒழித்து பெரும் ஞானம் தந்து முக்தி அளிப்பவர், அதைத்தான் இந்த பாடலில் பாடி சொல்கின்றார் காசிப முனிவர்
விநாயகர் அனுபூதி : 33
“இருநான்(கு) அவதா னம்எண்சித் திகளும்
பெருமான் உமையின் பெரும்பிள் ளையவன்
தருவான் தருவான் தரவே விரைவாய்
வருவான் வருவான் வழுத்தாய் மனனே”
பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும்.
“இருநான்கு அவதானம் எண் சித்திகளும்
பெருமான் உமையின் பெரும் பிள்ளை அவன்
தருவான் தருவான் தரவே விரைவாய்
வருவான் வருவான் வழுத்தாய் மனனே”
உமையாளின் மகனான விநாயகப் பெருமான் எட்டு அவதானங்களையும், எட்டுச் சித்திகளையும் விரைந்து வந்து தன் அடியார்க்குத் தருவான். குற்றமில்லா மனதுடன் தன்னை அண்டிய அடியார்க்கு அவன் இவை அனைத்தையும் விரைந்து வந்து தருவான் என்பது பாடலின் பொருள்.
அவதானம் என்பது செயல் அல்லது குணம் எனும் பொருளில் வரும். இந்தப் பாடலில் இறைவனுக்குரிய எட்டுக் குணங்களைப் பாடுகின்றார் காசிப முனிவர்.
“கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”
என வள்ளுவன் சொன்ன குணங்கள் அவை.
அப்பர் பெருமான் பாடுவார்.
“எட்டு கொலாமவர் ஈறில் பெருங்குணம்
குணங்கள்தோள் எட்டு மூர்த்தி
கலை ஞானிகள் காதல் எண் குணவன்காண்
எட்டு வான்குணத் தீசனெம்மான்”
இந்த உன்னதமான இறைவனின் எட்டுக் குணங்களைத் தருவார் விநாயகர் என்கின்றார் காசிப முனிவர்.
தன்வயத்தனாதல் (யாரும் ஈடு இணையில்லை எனும் ஏக நிலை), பரிசுத்த உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றறிவுடைமை, வரம்பில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத அருள் உடைமை, வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல் என எட்டுக் குணங்கள் உண்டு.
தன்னை நாடிவந்து பணிவோர்க்கு இந்த எட்டுக் குணங்களையும் விநாயகர் அருள்வார் என்றால் அதன் பொருள் தன் அடியாரைத் தெய்வநிலைக்கு, இறைஞான நிலைக்கு விநாயகப்பெருமான் உயர்த்துவார். மாபெரும் தெய்வ ஞானத்தை அருள்வார் என்பது பொருள்.
ஒளவையார் அதற்கு மாபெரும் உதாரணம், தன் பக்தையான அவரை ஞானசித்தராக உயர்த்தினார் விநாயகப் பெருமான்.
அப்படியான விநாயகப் பெருமான் தன் அடியார்க்கு எட்டுவகை சித்துக்களையும் அருள்வார் என்கின்றார்.
“அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே”
என்பதும் திருமூலர் பாடல். எட்டுவகை சித்துக்களைத் திருமூலரே வகைபடுத்துகின்றார். அவை இவைதான்.
அணிமா என்பது அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல், மகிமா என்பது மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா என்றால் காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா என்றால் கனமாவது, மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராத்தி என்றால் எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல். பிராகாமியம் என்றால் தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்.
ஈசத்துவம் என்றால் எல்லாத் தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். வசித்துவம் என்றால் அனைத்தையும் வசப்படுத்தல்.
இப்படி எட்டுவகை சித்துக்கள் உண்டு. அஷ்ட சித்துக்கள் என இவைகளுக்குப் பெயர், மிக மிக கடினப்பட்டு இந்தச் சித்துக்களை சில அசுரர்கள் வாங்கி அட்டகாசம் செய்த காட்சி புராணத்தில் உண்டு. அனுமன் போன்ற சிலருக்கு இது பிறப்பால் கிடைத்த வரம்.
இந்த மாபெரும் வரத்தை தவத்தின் வரங்களில் முதன்மையானதைக் கடும் சிரமபட்டும் கிடைக்காப் பெரும் சக்தியினை விநாயகர் தன் பக்தனுக்குத் தருவார். குற்றமில்லா நெஞ்சத்துடன் தேடினால் விரைந்து வந்து தருவார் என்பது காசிப முனிவர் வாக்கு.
குற்றமற்ற அதாவது ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்றும் அகன்ற குற்றமற்ற நெஞ்சத்துடன் முழு மனதுடன் முழு அர்ப்பணிப்பை செய்வோரை இறைநிலைக்கும் தேவர்கள் நிலைக்கும் உயர்த்தி எல்லையில்லாப் பெரும் ஆற்றலுடன் அவர்களை பெரும் இடத்துக்கு விநாயகர் உயர்த்துவார் என்பது இந்தப் பாடலில் காசிபர் போதிக்கும் உண்மை.
” சீத நாள்மலர்ச் செல்வனும் மாமலர்ச்
செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
பாதம் நாடொறும் பற்றறப் பற்றுவோர்
பாதம் நாடப் பரிந்தருள் பாலிப்பாய்
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும்மெய்ஞ்
ஞான நாடக நாயக நான்கெனும்
வேதம் நாடிய மெய்ப்பொரு ளேஅருள்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே”
இந்த எட்டு வரங்களை வழங்கும் கணபதி அஷ்ட கணபதி என அழைக்கப்படுவார். இந்தியாவின் மராட்டிய மாகாணத்தில் இந்த எட்டுக் கணபதிக்குமான கோவில்கள் உண்டு.
மோரேஷ்வர்ஆலயம், மோர்கான்;
ஸ்ரீசிந்தாமணி விநாயகர் ஆலயம், தேயூர்; ஸ்ரீஸித்தி விநாயகர் ஆலயம், சித்த டேக்; ஸ்ரீ மஹா கணபதி ஆலயம், ராஞ்சன் கான்;
ஸ்ரீகிரிஜாத்மஜ விநாயகர் ஆலயம், லென்யாத்ரி; ஸ்ரீவிக்னேஸ்வரர் ஆலயம், ஓஜார்; பல்லாலேஷ்வர விநாயகர் ஆலயம், பாலி; ஸ்ரீவரத விநாயகர் ஆலயம், மஹத் என எட்டு ஆலயங்கள் மகா பிரசித்தி. இங்குச் சென்று வணங்கினால் எட்டுத் திக்குக் காவலுடன் பெரிய திருப்பங்கள் வாழ்வில் வரும்.
இதன் தொடக்க ஆலயம் மோர்கானில் அமைந்திருக்கும் விநாயகர் ஆலயம், இங்கு ஆவணி சங்கடஹர சதுர்த்தி முதல் விநாயகர் சதுர்த்திவரை மிக விசேஷம்.
இந்த மோர்கான் விநாயகர்தான் மோர்காம்காரர், இவர்தான் சுருக்கமக மோரியார்.
இந்த மோரியார்தான் விநாயக சதுர்த்தி காலங்கள் மராட்டியமெங்கும் பாடப்படும் “மோரியாரே” பாடலின் நாயகன்.
“கணபதி பப்பா மோரியா
புட்ச்யா வர்ஷி லங்கர்யா
மோரியாரே பப்பா மோரியாரே
ச்சைன் படேலா அம்பாலா
மோரியாரே பப்பா மோரியாரே”
என அம்மக்கள் ஆடிப்பாடுவது அஷ்ட விநாயகர்களின் தொடக்கமான மோர்காம் விநாயகர் எனும் மோரியாரையே. அந்த அளவு அஷ்ட விநாயகர் பிரசித்தியானவர்.
விநாயகரைப் பணிந்தால் எல்லா இறைகுணங்களும் அஷ்டமா சித்துக்களும் கைக்கூடும் எனப் பாடி தொழுகின்றார் காசிப முனிவர். விநாயகர் அருள் இருந்தால் அனைத்தும் சாத்தியமே.
விநாயகர் அனுபூதி : 34
“கருமால் வினையைக் களைந்தே அருளும்
திருவைந் தெழுத்தும் திகழா றெழுத்தும்
இருநான் கெழுத்தும் எமதுஐங் கரனார்
ஒருபேர் எழுத்தே உணர்வாய் மனனே”
பாடல் இப்படிப் பிரியும்.
“கருமால் வினையைக் களைந்தே அருளும்
திரு ஐந்து எழுத்தும் திகழ் ஆறு எழுத்தும்
இருநான்கு எழுத்தும் எமது ஐங்கரனார்
ஒரு பேர் எழுத்தே உணர்வாய் மனனே”
” கர்ம வினைகளை, நல்வினைத் தீவினை எனும் இரு கர்ம வினைகளைக் களைந்து போடும் ஐந்து எழுத்து எனும் நமசிவாய மந்திரமும், சரவணபவ எனும் ஆறேழுத்து மந்திரமும், ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரமும் ஐங்கரன் எனும் விநாயகரின் பெயர் ஒன்றுக்கு ஈடாகும் என்பதை உணர்வாய் மனமே” என்பது பாடலின் பொருள்.
அதாவது, நமசிவாய எனும் பஞ்சாட்சரம், ஓம் நமோ நாராயணாய எனும் விஷ்ணு மந்திரம், சரவணபவ எனும் முருகப்பெருமானின் மந்திரங்களெல்லாம் கர்ம வினைகளை அழிக்கக் கூடியவை, கருமை எனும் கடும் கர்மாவினையும் அழிப்பவை.
அந்த மந்திரங்களைச் சொல்ல எண் முறை உண்டு, உரிய உச்சாடனம் உண்டு. ஆனால் அதெல்லாம் தாண்டி விநாயகப் பெருமானின் பெயரை ஒருமுறை சொல்லி அழைத்தாலே கர்மவினை எல்லாம் தீரும் என்கின்றார் காசிப முனிவர்.
“இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து” என்பது ஒளவையார் விநாயகர் அகவலில் பாடிய வரி.
கணபதி உபநிடதம், கேரம்ப உபநிடதம், சுப்ரபேத ஆகமம், விநாயகர் கவசம், விநாயகர் அகவல், கணேச பஞ்சரத்தினம், கணேச புராணம், முத்கலபுராணம், மகா நிர்வாண தந்திரம், வெற்றி வேட்கை, பிள்ளையார் கதை, மூத்த விநாயகர் திருவிரட்டை மணிமாலை முதலிய நூல்களெல்லாம் சொல்வது விநாயகரை வழிபட்டால் கர்ம வினை அகலும் என்பது.
அதாவது, அவர் தனித்துவமானவர் என்பது.
இதனாலே அவர் எல்லாத் தெய்வ வழிபாட்டிலும் முன்னால் முதலில் வணங்கப்படுவார். ஆனால், மற்ற தெய்வம் இல்லாமலே அவரின் வழிபாடு தனித்து நிறைவடையும், அந்த அளவு வல்லமையான மூத்த தெய்வம் விநாயகர்.
அந்த விநாயகப்பெருமான் 16 சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகின்றார். அந்தப் பெயர்களைச் சொல்லி அவரை வணங்கினால் எல்லாக் கர்மவினையும் கழியும்.
பாலகணபதி, தருண கணபதி, பக்தகணபதி, வீரகணபதி, சக்தி கணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, ஷிப்ர கணபதி, ஹேரம்பகணபதி, லட்சுமி கணபதி, மகாகணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்வ கணபதி என அந்தப் 16 நாமங்களைச் சொன்னாலே கர்ம வினை எல்லாம் கழிந்தோடும்.
விரதங்களில் சிறந்தது விநாயகருக்கான சங்கடஹர சதுர்த்தி விரதம் என்கின்றது வேதம். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அறுத்தல். அதாவது, விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை நிச்சயம் உண்டு.
காரணம், விநாயகப் பெருமான் கர்மவினையினை அகற்றி விதியினை மாற்றுவதால் எல்லாத் துன்பமும் மாறும்.
ஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி, அந்த நாளின் விரதம் மிகவும் சிறந்தது.
இன்னும் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தி.
விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சக்தியான பலனைத் தரும்.
இந்த விரதத்தைக் கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவியை பெற்றான். இதனால் செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என வணங்கப்படும்.
சிவனைப் பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரததத்தின் பலனே.
பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் ஒரு மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.
விநாயகர் உலகை வலம் வந்தபோது, தனது அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்துச் சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, ‘நீ தேய்ந்து மறையக் கடவது’ என்று சபித்தார்.
பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார்.
அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி அது விநாயகருக்கு உகந்ததாயிற்று.
இந்தச் சங்கடஹர சதுர்த்தி விரதம் கிருஷ்ணர் வாழ்விலும் உண்டு.
இன்னொரு ஆச்சரியமான காட்சி உண்டு. புருகண்டி முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்து அதனால் நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார்.
இதன் பொருள் சுயநலமில்லாமல் பகவானுக்காகச் செய்யப்படும் விரதத்தை விநாயகப் பெருமான் உடனே ஏற்றுக்கொள்கின்றார்.
இந்த விரதபலனாக இந்திரன் விமானம் சிக்கிக் கொண்டபோது அதனை மீட்டெடுத்துத் கொடுத்தவரும் புருகண்டி முனிவரே.
விநாயகப் பெருமான் மஹா சக்தி வாய்ந்தவர். விதியினை மாற்றி எழுதக்கூடியவர். அவருடைய மந்திரங்களில் ஒன்று ‘‘ஓம் அனீஸ்வராய நம: அதாவது ஈஸ்வரன் முன்னால் ‘‘அ’’ எழுத்து சேர்த்ததால், தனக்கு மேலாக ஒரு ஈஸ்வரன் இல்லை என்று பொருள்.
அவர் தனக்கு நிகர் இல்லாத் தனக்கு மேல் யாருமில்லாப் பெரும் தெய்வம், அவரைப் பற்றி ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள் பாடுகின்றன.
“முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம்
னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம்
னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம்
னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம்
ஸுரேஶ்வரம் னிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம்
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம்
ஸமஸ்த லோக ஶங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்
க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம்
மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம்
அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச னாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம்
னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம்
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம்
ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம்
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம்
மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோஉன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஶ்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோஉசிராத்”
மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்பொழுதும் மோட்சம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக் காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்றவர். வணங்கியவரை குறைதீர்த்துக் காப்பவர். அவரை வணங்குகிறேன்.
வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும், கஜாஸுரனுக்கும், கணங்களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.
கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் க்ஷேமத்தைச் செய்தவர் விநாயகர். மேலும் அவர் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நல் மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.
ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர். பரமசிவனின் மூத்த மகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். பாம்பை ஆபரணமாகக் கொண்டவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.
மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.
இந்துக்களிடையே ஒரு பேச்சுவழக்கு உண்டு அது “கம் என்றிரு” என்பார்கள். இந்த “கம்” எனும் வார்த்தையே விநாயகருக்குரியது, விநாயகர் மந்திரத்குரியது.
அந்த மந்திரத்தைச் சொல்லி வணங்க வணங்க விநாயரின் எல்லா அருளும் கிடைக்கும். இந்த ஒரே ஒரு மந்திரம் எல்லாக் கர்மவினையும் அழித்து பெரும் காவலை வலிமையினைத் தரும்.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வர வரத சர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா”
விநாயகர் அனுபூதி : 35
“அளவைக் கடந்தான் அகிலம் கடந்தான்
உளதத் துவத்தின் உயர்வைக் கடந்தான்
வளமாம் நிலைமேல் வசிப்பான் பெரியோன்
உளமே அறிந்துஇன் புறவே வருவாய்”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“அளவை கடந்தான் அகிலம் கடந்தான்
உள தத்துவத்தின் உயர்வைக் கடந்தான்
வளமாம் நிலைமேல் வசிப்பான் பெரியோன்
உளமே அறிந்து இன்புறவே வருவாய்”
விநாயகப் புராணம் ஒரு தெளிவான முதல் காட்சியினைக் காட்டுகின்றது. அதன்படி இந்த மகா பிரபஞ்சம் ஊழிக் காலத்தில் ஒரு பிரளய காலத்தில் ஒரு உருவத்தில் ஒடுங்கியது. முப்பெரும் தெய்வங்கள் இன்னும் எல்லாமும் அந்த உயர்ந்த இடத்தின் பரம்பொருளுக்குள் ஒடுங்கின. அந்தப் பரம்பொருள் பிரளய காலத்தில் அசையாமல் நின்றது.
அந்த பரம்பொருளே விநாயகப் பெருமான் என்றானது.
மீண்டும் இந்த உலகை அவர் படைக்க விரும்பியபோது விநாயகப் பெருமானில் இருந்தே எல்லாம் தோன்றின. அவர் வக்ரதுண்டராக இரஜஸ், தமஸ், சத்வ குணத்தைக் கொண்டு முப்பெரும் தெய்வங்களைப் படைத்தார். அவற்றில் இருந்தே எல்லாம் தோன்றின. இந்தப் பிரபஞ்சம் மீண்டும் உருவானது.
அப்படியான விநாயகர் ஒரு அளவுக்குக் கட்டுப்படுபவர் அல்ல. ஒரு எல்லைக்குள் அவரை அடக்கவும் முடியாது, அவர் எந்த அளவுக்கும் கட்டுப்படுவதில்லை.
உயரம், அகலம், ஆழம், அறிவு, ஆற்றல், சக்தி என மானிடரின் அளவையால் அவரை அளக்கமுடியாது. அவர் காலநேரங்களுக்கும் அப்பாற்பட்டவர். முடிவற்றவர்.
அவர் இந்த உலகக்கு மட்டுமானவர் அல்ல, அகிலத்துக்குமானவரும் அல்ல, அதைத் தாண்டிய பெரும் சக்தி அவர், இந்த மகா பிரபஞ்சமே அவரில் அடக்கம்.
அவரின் பெருவயிறு இந்த அண்டம் அவரில் அடக்கம் என்பதைச் சொல்கின்றது. இப்படி எதிலுமே அடங்காத விநாயகரின் பெருமை இத்தோடு உண்டா என்றால் அவர் தத்துவங்களிலும் அடங்குவார் இல்லை அதையும் தாண்டிய நிலையில் இருப்பவர்.
அதாவது மானிட, தேவ உலக அளவைகள் தத்துவமெல்லாம் தாண்டிய பெரும் நிலையில் இருப்பவர். தனக்கு நிகராக யாருமின்றி தனித்து நின்று உலகை இயக்குபவர் அந்த விநாயகர்.
அவர் உள தத்துவம் அனைத்தும் கடந்தவர் என்கின்றார் காசிப முனிவர்.
இது ஒரு ஆழ்ந்த தத்துவம். ஞானியரும் ரிஷிகளும் வகுத்த தத்துவ செயல் நிலை பிரிவுகள், இதனைக் கொஞ்சம் ஆழமாக காணுதல் நன்று.
மாயை என்பது ஒன்றுமில்லாதது. ஆனால், பரப்பிரம்மத்துக்கும் மானிட ஆத்மாவுக்கும் இடையே அது ஒரு பனிமூட்டம் போல நின்று மறைக்கின்றது. அது சிறிய விதைக்கு ஒப்பானது. சிறிய ஆலமரத்து விதை பெரிய மரத்தினை உருவாக்குவது போல, சிறிய மீன் முட்டை பெரிய மீனை உருவாக்குவது போல, ஒரு துளி இரத்தம் ஆறடி மனிதனையும் அவனின் மனதையும் உருவாக்குவது போல, ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கை ஏற்றுவது போல அது பல்கி விரியும் சக்திக் கொண்டது.
அது பரம்பொருளில் தோன்றுகின்றது, அங்கேயே ஒடுங்குகின்றது. இந்தப் பெரும் அண்டம் அந்த மாயையில் தொடங்கி மாயையில் ஒடுங்கி பரம்பொருள் முன் சரணடைகின்றது என அதன் இயல்பை விளக்குகிறது சைவசித்தாந்தம்.
இல்லாத ஒன்று இருப்பதாகத் தோன்றி கடைசியில் இல்லாமல் போவதுதான் மாயை.
அந்த மாயையினை மூன்று வகையாக பிரித்ததும் இந்துமதமே.
தூய மாயை (சுத்த மாயை), தூய்மையில் மாயை (அசுத்த மாயை), பகுதி மாயை (பிரகிருதி மாயை) என மூன்று வகையாக அது பிரித்தது.
நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்தை என அது சுத்த மாயையினைக் குறித்தது. இந்தச் சுத்த மாயைதான் எல்லா மூலங்களின் மூலமாக நிற்பது.
இங்கு நாதம் என்பது சிவதத்துவம், விந்து என்பது சக்தி தத்துவம். சிவசக்தி இணைவால் அண்டமும் உலகமும் உண்டாயிற்று என்பது இதுதான்.
சதாக்கியம் என்பது சதாசிவ தத்துவம், அதாவது படைத்தது இன்னும் விரிவடையும் நிலை.
ஈஸ்வரம் என்பது சதாசிவத்தின் அடுத்த நிலை, அதாவது விரிந்த அண்டத்தில் இருந்து ஒவ்வொன்றாக தோன்றும் அந்தப் படிநிலை.
சுத்த வித்தை என்பது முத்தொழிலும் நடக்கத் தொடங்கும் நிலை. படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று இயக்கங்களும் மாறி மாறி நடக்கும் நிலை.
அடுத்து அசுத்த மாயையினைக் காணலாம்.
காலம், நியதி, கலை, வித்தை, ராகம், புருஷன் (புருடன்), மாயை, என அது ஏழு வகைப்படும்.
காலம் என்பது எல்லாப் படைப்புக்கும் ஒரு காலம் மட்டுமே செயலாற்றும் வரையறை உண்டு, அந்தக் கால அளவில் செய்யும் வினைகளுக்கும் அளவு உண்டு.
நியதி தத்துவம் என்பது அந்தக் காலத்தில் செய்த வினையின் பயனைக் குறிப்பது.
கலை என்பது கிரியா சக்தி, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் விதிக்கப்பட்ட பணி அல்லது கடமை. இதனாலே ஒவ்வொரு மனிதனும் தனித் தனி சிந்தையும் திறமையும் பெற்று விளங்குகின்றான். கலை என்பது அந்த கிரியா சக்தி.
வித்தை என்பது கலையின் அடுத்தப் பரிணாமம். கலை எனும் அந்த மூலத்தின் வெளிப்பாடு வித்தை என்றாகும்.
இராகம் என்பது வித்தைக்கேற்றபடி இழுத்துச் செல்லும் ஒரு சக்தி அல்லது வழி.
புருடன் என்றால் இவை அனைத்தும் கலந்த ஆன்மா.
மாயை என்பது இங்கு இவைகளெல்லாம் இறைவனில் இருந்து வந்தது என மறைக்கும் அந்த அறியாமை, ஆன்மா அறியாமையில் சிக்கிக் கிடக்கும்.
அடுத்துப் பிரகிருதி மாயையினைக் காணலாம், இது 24 வகையாகப் பிரிக்கப்படும்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு.
ஸப்தம் (ஓசை), ஸ்பர்சம் (தொடு உணர்ச்சி), ரூபம் (உருவம் அறிதல்), ரஸம் (ருசி), கந்தம் (வாசனை) ஆகியன தன்மாத்திரைகள் ஐந்து.
மெய் (உடல்), நாக்கு, கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து ஞானேந்த்ரியங்கள்.
கை, கால், வாய், குறி, மலவாய் ஆகியன ஐந்து கர்மேந்த்ரியங்கள்.
ஆகாயம், காற்று, நெருப்பு (அக்னி), நீர், நிலம்(மண்) ஆகியன ஐந்து பூதங்கள்.
ஆக, மொத்தம் பிரகிருதி மாயைகள் 24.
சுத்தமாயை ஐந்து; அசுத்தமாயை ஏழு; பிரகிருதி மாயை 24; ஆக, 36 தத்துவங்கள்.
மொத்தம் 36 வகை தத்துவங்களைக் கொண்டதுதான் இந்த அண்டமும், மானிடமும். 36 வகை தத்துவம் எனும் மாயைகள் மானிட உடலாகவும், ஆத்மாவாகவும் உண்டு.
இப்படித் தத்துவங்கள் மொத்தம் மூன்று பிரிவுகளாக 36, இந்த அடிப்படையில்தான் மாயை அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த 36 தத்துவங்களையும் தாண்டிய ஞானப்பெருநிலையில் இருப்பவர் விநாயகர். இந்த மாயைகளுக்கு அப்பாற்பட்ட பெரும் தெய்வம் விநாயகர். அவரைத் தியானித்து அவரோடு மனதால் கலந்தால், இவை எல்லாம் கடந்து அவரோடு கலந்தால் அந்தப் பேரின்ப நிலைதான் அனுபூதி நிலை என்கின்றார் காசிப முனி.
இதன் இன்னொரு போதனை விநாயகரை வழிபட்டால் இந்த லௌகீக மாயை, பூலோக மாயைகள், கால நேரம் எல்லாம் கடந்து, முப்பத்தாறு தத்துவ மாயைகளையும் கடந்து இறைவனை அடையமுடியும் என்பது.
அதைத்தான் காசிப முனிவர் போதிக்கின்றார்.
“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா
அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அஹர்நிஷம்
அநேக தந்தம் பக்தானாம்
ஏக தந்தம் உபாஸ்மஹே
கஜானனம் பூத கனாதி செய்விதும்
கவித்த ஜம்பு பலசார பக்ஷிதும்
உமாசுதம் சோக வினாசகாரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் “