விநாயகர் அனுபூதி : 41 to 45
விநாயகர் அனுபூதி : 41
“மங்கை வலபை மணவா ளன்அருள்
பொங்கும் புனல்போல் பொழிந்தே புவனம்
எங்கும் நிறைந்தே இருக்கின் றதுகண்!
துங்கக் குணத்தீர்! புசிமின் தொழுதே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“மங்கை வலபை மணவாளன் அருள்
பொங்கும் புனல் போல் பொழிந்தே புவனம்
எங்கும் நிறைந்தே இருக்கின்றது கண்
துங்க குணத்தீர் புசிமின் தொழுதே”
“விநாயகப் பெருமான் வல்லபை தேவியின் கணவர், அவரின் அருளிலே இந்த உலகம் செழித்து நிற்கின்றது. எங்கும் அவரின் கருணை வெள்ளமே நிரம்பியிருக்கின்றது. மாந்தர்களே! அவரின் அருளை அனுபவித்து உணர்ந்து தொழுங்கள்” என்பது பாடலின் பொருள்.
ஆம். இப்பாடல் வல்லபையின் மணவாளன் விநாயகர் என்பதைச் சொல்கின்றது. வல்லபை தேவி விநாயகரின் சக்தி என்பதைப் பல பாடல்களில் பல புலவர்கள் அடியார்கள் பாடித் தொழுதிருக்கின்றார்கள்.
“வல்லபையின் கணவா” என்பது அடிக்கடி விநாயகரைப் பற்றி வரும் வரி.
வல்லபை என்பது விநாயரின் சக்தி என்றும், விநாயகருக்குச் சக்தி கொடுக்கும் மூலம் என்றும், சில செய்திகளும், அவர் விநாயகரின் மனைவி என்றும் சில குறிப்புகள் உண்டு.
இது பற்றிய புராணச் செய்தி உண்டு, அந்த வல்லபை வரலாறு அதில்தான் சொல்லப்பட்டிருக்கின்றது.
வல்லபை என்பவள் விநாயகப் பெருமானை இயக்கும் சக்தி, அவளால்தான் விநாயகப் பெருமான் சக்தி பெறுவார். மூலாதாரத்தில் கூட வல்லபையும் அவரும் சேர்ந்தேதான் இருப்பார்கள் என்பது யோக சூட்சுமம் சொல்லும் செய்தி.
அந்த வல்லபை சாபம் காரணமாக ஒரு அரக்கனின் மகளாய்ப் பிறந்தாள்.
ஆம். இரண்யபுரத்தை ஆட்சி செய்து வந்த கேசி என்னும் அரக்கனின் முன்ஜன்ம வினையின் காரணமாக, கணபதியின் சக்தியான வல்லபை அவனுக்கு மகளாகப் பிறந்தாள். வல்லபை வளரும் பருவத்திலேயே சிறந்த சிவ பக்தையாக விளங்கினாள், அதைக் காணபொறுக்காத அரக்கன் கேசி அவளைச் சிவ வழிபாடு செய்யமுடியாமல் வீட்டிலே சிறை வைத்தான்.
அவள் சிவனை நோக்கி கதற சிவன் விநாயகப் பெருமானை அனுப்பி வைத்தார்.
அதன்படி விநாயகர் அவளை மீட்க வந்தார். காஞ்சியிலே ஒரு தீர்த்தம் உருவாக்கிச் சிவனை வழிபட்டு பின் கேசியினை அழித்து வல்லபையினை மீட்டார்.
அவருடன் வல்லபை மீண்டும் கலந்து அவரின் சக்தியானாள், இதனாலே அவர் ‘ஸ்ரீ வல்லபை கணபதி’ என்று போற்றப்பட்டார்.
வல்லபையினை மீட்க விநாயகர் உருவாக்கிய தீர்த்தம் இன்றும் காஞ்சியில் உண்டு.
‘அனேகபம்’ என்றால் யானை என்று பொருள். யானைமுகத்தோன் இங்கே சிவபெருமானை பூஜித்த காரணத்தால் இத்தலம், ‘அனேகதங்காபதம்’ என இன்றும் காஞ்சியில் அந்த ஆலயம் உண்டு.
“கச்சி அனேகதங்காபதம்” என அது உண்டு. இப்போது அது ‘பிள்ளையார்பாளையம்’ என்றாயிற்று.
இதெல்லாம் காஞ்சிப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பிள்ளையார் பாளைய விநாயகரைத்தான் பாடுகின்றார் காசிப முனிவர்.
காஞ்சி மாநகரின் பிள்ளையார்பாளையத்தில் கயிலாசநாதர் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ அனேகதங்காபதேஸ்வரர் ஆலயம். இங்குக் குடிகொண்டிருக்கும் வல்லபை கணபதியினைப் போற்றி பாடுகின்றார் புலவர்.
இங்கு வழிபடுவோரது திருமணத் தடைகள் அகலும். வாழ்வின் சிக்கலெல்லாம் தீரும், யார் எந்தச் சூழலில் அகப்பட்டு வெளிவரமுடியா இக்கட்டான நிலையில் இருந்தாலும் இந்த வல்லபை விநாயகரை அழைத்தால் அவர் வந்து சிக்கலை உடைத்துக் கட்டுக்களை உடைத்து அவர்களைக் காப்பார்.
இதுதான் வல்லபை விநாயகரின் சக்தி, இதனை இன்னும் ஆழமாகக் கண்டால் நல்லது. அப்போதுதான் விநாயகர் வல்லபையினை மணந்தாரா? எனும் குழப்பத்துக்குப் பதில் கிடைக்கும்.
இந்துமதம் மானிடர் புரிந்து கொள்ள சிரமமான, சூட்சுமமான பிரபஞ்சப் பெரும் சக்திகளை விளக்க மானுடர்க்கு புரியும்படி அதன் உறவுகளைச் சொல்லி விளக்கிற்று.
அசையாத பெரும் சக்தி, அதை இயக்கும் மகாசக்தி எனும் அசையும் சக்தியினைப் பாமரன் புரிந்து கொள்ள ஏதுவாக அதனைக் கணவன் மனைவி அதாவது சிவன் சக்தி, விஷ்ணு லட்சுமி, பிரம்மா சரஸ்வதி எனப் போதித்தது.
அந்த இயக்கும் சக்திகள் இன்னும் ஆழமாகப் பிரிந்த போது இரு மனைவியரென மானிடர் புரிந்துகொள்ள சொன்னது.
பரம்பொருளுக்கு உருவவுமில்லை, உறவுமில்லை. அது ஆண், பெண் எனும் நிலையிலுமில்லை என்பதை என்றோ அறிந்திருந்தும், மானுடர் புரிந்துகொள்ள அது உறவுநிலைகளைச் சொல்லி விளக்கிற்று.
அப்படி விநாயகரின் துணைவி வல்லபை என்றது, அதாவது விநாயகரின் ஆதார சக்தியினை அப்படிச் சொன்னது.
வல்லபை பற்றி மூன்று கதைகள் உண்டெனினும் கணேச புராணமானது கணபதியாவது சிவமே, சக்தியாவது வல்லபையே என்கின்றது.
வல்லபை கதை மேற்சொன்னது போக இன்னும் உண்டு. லலிதாம்பிகை பண்டாசுரனுடன் போர்புரியும் போது தேவிக்கே பெரும் சிக்கல் உண்டாகிறது. அப்போது தேவி ஈஸ்வரனை துதிக்க அங்கே பத்துக் கைகள் கொண்ட வல்லபா எனும் சக்தியுடன் கணேசர் தோன்றினார் என்பது.
ஆக, எவ்வகையில் நோக்கினாலும் வல்லபை என்பவள் விநாயகரின் சக்தி என்றாகின்றது, இதன் தத்துவம் இன்னும் ஆழமானது.
“சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த” என்பது ஆதிசங்கரர் வாக்கு. அதாவது, ஜடம் எனும் அசையாச் சக்தியும், இயக்கு சக்தியும் இணையும் போது உலக இயக்கம் நடக்கின்றது என்பது பொருள்.
அதாவது, பரப்பிரம்மம் இரு சக்திகளாக அதன் துணை சக்திகளாக இயக்கத்தை நடத்துகின்றது.
அந்தப் பரப்பிரம்மம் சிவரூபமாகும் போது மாயை பார்வதியாகிறது. அந்தப் பார்வதியே இரண்டு சக்திகளாகி கங்கா, கௌரி என்று பிரிகிறார்கள்.
பரப்பிரம்மம் விஷ்ணு எனும் வடிவமாகும் போது மாயை வைஷ்ணவி என்றாகிறது. அந்த வைஷ்ணவியே இரண்டு சக்திகளாகி ஸ்ரீதேவி, பூதேவி என்று வடிவெடுக்கிறார்கள்.
பரப்பிரம்மம் முருகனாகும் போது மாயை கௌமாரி என்று பெயர் பெறுகிறாள். அந்த கௌமாரியே இரண்டு சக்திகளாகி வள்ளி, தேவசேனா என்று விளங்குகிறார்கள்.
பரப்பிரம்மம் பிரம்மா எனும் போது மாயை சரஸ்வதி, காயத்ரி என இருவடிவில் விளங்குவாள்.
அப்படியே பிரம்மம் கணபதியாக வரும்போது மாயா வல்லபா என்றும், அவளே சித்தி புத்தி என்றும் வருகின்றார்கள்.
வல்லபை எனும் தத்துவ வடிவம் இப்படி வருவதே.
ஒரு ஸ்லோகம் உண்டு.
“பீஜாபூர கதேக்ஷ கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல:
வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ:
த்யேயோ வல்லபயா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா
விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த”
மாதுளை, கதை, கரும்பு, வில், ஒளிதரும் சக்கரம், தாமரை மலர்,கயிறு, நெய்தல், நெற்கதிர், தமது கொம்பு ஆகியவற்றை முறையே தமது பத்துத் திருக் கரங்களிலும், பதினோராவது துதிக்கையில் ரத்தினகலசத்தைத் தரித்துக் கொண்டுள்ளவரும், தமது மடியில் கையில் தாமரை மலருடன் அமர்ந்துள்ள அன்புக்குரிய நாயகியினால் தழுவப் பெற்றவரும், அகிலம் அனைத்தையும் படைத்து, அழித்து, காப்பவருமான மகா கணபதியை நான் சேவிக்கிறேன் என்பது பொருள்.
ஆம். விநாயகரின் சக்தி வல்லபை என்கின்றது ஸ்லோகம். அதுவே விநாயகர் முழு முதல் கடவுள் என்பதையும் சொல்கின்றது.
இப்படியான வல்லபை எனும் மகா சக்தி கொண்ட விநாயகப் பெருமானை வணங்கினால் அவருடைய பாதத்தை வணங்கினால் பிறவித் துன்பம் தீரும் என்பது, ஊழ்வினை கழியும் என்பது காசிப முனிவரின் போதனை.
இதனை ஒளவை தன் விநாயகர் அகவலில் சொல்கின்றாள்.
“சீதக் களபச் செந்தா மரைப்பூம்” எனப் பாடலை தொடங்கும் அவள் தன் அகவலில் “முன்னை வினையின் முதலைக் களைந்து” என விநாயகப்பெருமான் ஊழ்வினை அகற்றுவார் என்பதைச் தெளிவாகச் சொல்கின்றாள்.
“தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலா யிரத்து நானூற்று நாற்பத்தெட்டு
மேலாம் வினையை மெலியக் களைந்து”
என்பது நக்கீர தேவர் வாக்கு.
இந்தப பாடல் விநாயகப் புராணத்தில் வரும் ஒரு காட்சியினைச் சொல்கின்றது. முன்பு சௌராஷ்ட்ராவில் சோமகாந்தன் எனும் மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு பெரும் நோய் வந்தது.
தன் முன் ஜென்ம வினையால் வந்த நோயினால் தன் மகன் ஏமகண்டனிடம் ஆட்சியினைக் கொடுத்து அவன் கானகம் புகுந்தான்.
அங்கே பிருகு முனிவர் இருந்தார். அவர் மன்னனின் இந்நிலைக்கு முன் ஜென்ம வினையே காரணம், முன் ஜென்ம பிரம்மஹத்தியே காரணம் என அறிந்து விநாயகரை தொழச் சொன்னார்.
அப்படிச் சொல்லும் போதே வியாசர் விநாயகரை மறந்ததால் தவித்த நிலையினையும், பின் விநாயகரை வணங்கி 18 புராணங்களையும் எழுதிய கதையும் அவருக்கு விநாயகரே வழிகாட்டியதையும் சொல்லி அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார்.
“ஓம்சுமுகாய நம
ஓம் கபிலாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் பால சந்திராய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் கணாதிபதயே நம
ஓம் கணாத்யட்சாய நம
ஓம் கஜானனாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம”
எனப் பதினாறு பெயர்களை, வியாசர் சொன்ன விநாயகர் பெயர்களைப் பிருகு முனி சோமகாந்தனுக்கு சொன்னார். அவன் அதைச் சொல்ல சொல்ல முன்வினை அகன்றது.
ஆம். விநாயகர் நாமம் சொல்லி வழிபட்டால் அவர் பாதம் பணிந்தால் முன் ஜென்ம வினை அகலும் என்பது விநாயகர் புராணத்தில் வரும் காட்சி.
கணேச புராணத்தில் உள்ள கணேச ஸ்தவம் என்ற ஸ்லோகத்தின் 11 மற்றும் 12ஆம் பக்கம் இன்னும் அதனைத் தெளிவாகச் சொல்கின்றது.
“த்வதீயே மன꞉ ஸ்தாபயே தங்க்ரியுக்மே
ஜனோ விக்னஸங்காத பீடாம் லபேத ।
லஸத்ஸூர்யபிம்பே விஶாலே ஸ்திதோ(அ)யம்
ஜனோ த்வாந்தபீடாம் கதம் வா லபேத ॥ 11 ॥ “
அதாவது, கணேசா! உனது பாதத்தைச் சரணடைந்து விட்டவர்களுக்கு ஊழ்வினைப் பயனால் தடையாக இருக்கும் அனைத்தையும் கலைந்து விடுகிறாய். சூர்யன் போன்ற பிரகாசத்தைக் கொண்டிருக்கும் உன்னைத் துதிப்பவர்களுக்கு ஊழ்வினை எனும் இருள் நீங்கி விடுகிறது.
இன்னொரு ஸ்லோகம் உண்டு.
“வயம் ப்ராமிதா꞉ ஸர்வதா(அ)ஜ்ஞானயோகா
தலப்தாஸ்தவாங்க்ரிம் பஹூன்வர்ஷபூகான் ।
இதானீமவாப்தாஸ்தவைவ ப்ரஸாதா
த்ப்ரபன்னான்ஸதா பாஹி விஶ்வம்பராத்ய ॥ 12 ॥
அதாவது, மாயையின் உருவமான நாங்கள் எப்போதும் அறியாமையால் நிறைந்திருக்கிறோம். பிரபஞ்சத்தினைப் பிரதிபலிப்பவனே! உன்னருளால்தான் உனது பாதங்களைப் பற்றிக் கொண்டு இந்த மாயையிலிருந்து விடுபடும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. எங்களைக் காப்பாயாக
கணபதி.
மங்கள மாலிகா ஸ்தோத்திரத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு
“ஆதிபூஜ்யாய தேவாய தந்த மோதக தாரிணே
வல்லபா பிராணகாந்தாய ஸ்ரீ கணேசாய மங்களம்”
வல்லபை கணபதி மாலை என்றொரு நூல் உண்டு, 11 பாடல்கள் கொண்ட இதனை வள்ளலார் சுவாமிகள் வழங்கினார், இதைப் பாட பாட முன்வினை தாக்கம் கழியும்; எல்லாத் தடையும் உடையும்; பெரும் நலமும் அருளும் அமைதியும் நிம்மதியும் பெருகும்.
இதோ அந்த வல்லப கணபதி மாலை பாடல்.
“திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான்
பெருநெடு மேனி தனிற்படப் பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
கருநெடுங் கடலைக் கடத்து நற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே.
நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.
சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.
விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே.
நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே.
அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.
முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய
இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே
மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே.
துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே.
தடக்கைமா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப்புயங் களும்கை
இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும் இறைப்பொழு தேனும்யான் மறவேன்
விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிகமகிழ்ந் திடஅருட் பேறே
மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே”
விநாயகர் அனுபூதி : 42
“மூல மலவா தனைதீர் முதல்வா!
சீல செழும்செம் சடையன் சிவனார்
பால! உயர்தற் பரனே அருள்தா!
கோலம் மிளிரும் குணமார் பொருளே!”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“மூல மலவா அதனை தீர் முதல்வா!
சீல செழும் செம் சடையன் சிவனார்
பால! உயர் தற்பரனே அருள்தா!
கோலம் மிளிரும் குணமார் பொருளே!”
“மூல பாவமாகிய ஆணவ மலத்தை அழிக்கும் முதல்வனே; அற வடிவான சிவனின் மைந்தனே; மிக உயர்ந்த பரம்பொருளே; அழகொளி வீசும் குணங்களால் நிறைந்தவனே; எமக்கு அருள் தருவாயாக” என்பது பாடலின் பொருள்.
விநாயகப் பெருமான் ஆணவங்களை அழிப்பவர், மும்மலங்களில் ஒன்றான ஆணவமே எல்லாப் பாவத்துக்கும், சாபத்துக்கும் அடிப்படை. இது முக்குணங்களில் ஒன்றான ரஜோ குணத்தில் ஒன்று.
விநாயகப் பெருமான் மும்மலங்களையும் அழிப்பவர் என்றாலும் எல்லாவற்றின் அடிப்படையான இந்த ஆணவக் குணத்தை அழிப்பதில் தன்னிகரற்றவர்.
அவர் பிரம்மனின் ஆணவத்தை அடக்கிய காட்சி விநாயகப் புராணத்தில் உண்டு. தானே உலகை, உலக உயிர்களை எல்லாம் படைக்கின்றோம் எனக் கர்வம், ஆணவம் கொண்டிருந்த பிரம்மனை அடக்கி அவனின் படைபாற்றலான இச்சா சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றைப் பறித்து அவனைச் செயலற்றவனாக்கி அவன் கர்வத்தை அடக்கினார்.
தான் மிக அழகானவன் என்ற ஆணவத்தில் விநாயகரைப் பழித்த சந்திரனுக்கு சாபம் தந்து அவன் அழகு அழியும்படி, தேயும்படி சபித்து அவர் கர்வத்தை அடக்கினார்.
இன்னும் அவர் எத்தனையோ பேரின் ஆணவத்தை அடக்கியது அவர் புராணத்தில் உண்டு.
திரிபுரம் எரிக்கும் போது எல்லாத் தேவர்களும் சிவன் உள்பட முப்பெரும் தெய்வமும் கூடி நின்று தங்களுக்கே வெற்றி என நின்றபோது தேரின் அச்சுபாகம் முறியச் செய்து, பின் தானே எல்லாவற்றுக்கும் ஆதாரம் எனத் தேரின் அச்சாக வந்து அவர்கள் கர்வம் அடக்கினார்.
சிவனின் கழுத்தில் இருக்கும் நாகமான வாசுகியின் ஆணவத்தை அடக்கியவரும் அவரே, ராவணனின் ஆணவத்தை அடக்கி ஆத்மலிங்கத்தை ஸ்தாபனம் செய்தவரும் அவரே.
மனிதராலும் தெய்வத்தாலும் எந்த ஆயுதத்தாலும் கொல்லப்பட முடியாது என வரம்பெற்ற கஜாசுரன் என்பவனைத் தன் தந்தத்தால் கொன்று, அவன் ஆணவம் அடக்கியவர் விநாயகர்.
வாதாபி உள்ளிட்ட அரக்கர்கள் ஆணவத்தை அகற்றியவரும் அவரே.
நவக்கிரகங்கள் முதல் எல்லோரின் ஆணவமும் அவர் முன் அடங்கின. தேவர்களின் ரதத்தை முடக்கி இந்திரனின் ஆணவத்தை அடக்கியவர் அவரே.
கிரவுஞ்சன் என்பவன் ஆணவத்தை அடக்கி அவனை மூஷிகமாகத் தன் வாகனமாக மாற்றிக்கொண்டவரும் அவரே.
அப்படியான விநாயகர் தன் திருவிளையாடலால் குபேரனின் கர்வத்தையும் அடக்கினார், அதைத்தான் இப்பாடல் சொல்கின்றது.
குபேரனுக்கு தான் பெரிய செல்வந்தன், தன்னைப் போல பெரும் தனவான் வரம்பெற்றவன் உலகில் இல்லை எனும் கர்வம் வந்தது, அந்தக் கர்வத்தில் கயிலாயம் சென்று சிவனையும் பார்வதியினையும் தன் அளகாபுரி எனும் செல்வமிக்க ஊரின் மாளிகைக்கு விருந்துக்கு அழைத்தான்.
தான் பெற்றிருக்கும் பெரும் செல்வம், தன் செல்வாக்கு, தன் ஊரின் பிரமாண்டம் என எல்லாம் காட்டி, தன் செல்வத்தால் எப்படிப்பட்ட விருந்தையும் யாருக்கும் கொடுக்கமுடியும், பரமசிவன் காணாத விருந்தையும் கொடுக்கமுடியும் எனும் கர்வத்தில் அவரை அழைத்தான்.
அவனின் உள்நோக்கம் அறிந்த சிவன், “குபேரா, நானும் பார்வதியும் இன்னொரு நாள் வருகின்றோம். நீ கணபதியினை அழைத்துச் செல்” எனச் சொல்லிவிட்டார். அப்படியே கணபதியினைத் தன் ஆணவத்தால் அழைத்துச் சென்றான் குபேரன்.
அவன் மாளிகையில் அவருக்கு விருந்தளிக்கப்பட்டது, அவன் வைத்த எல்லாவற்றையும் ஒரே நொடியில் விழுங்கிய விநாயகர் மேற்கொண்டு பசிப்பதாகச் சொன்னார், அவன் தன் ஆணவத்தில் அரண்மனையில் இருந்த அனைத்து உணவினையும் பரிமாறிக் கொண்டே இருந்தான். விநாயகர் விழுங்கிக் கொண்டே இருந்தார்.
முதலில் சிரித்தபடியே பரிமாறிய குபேரன் பின் அதிர்ந்தான். ஆனாலும், அவன் ஆணவம் அடங்கவில்லை, அவன் அரண்மனையின் மொத்த உணவு களஞ்சியத்தையும் கொண்டு உணவு படைத்து, பரிமாறிக் கொண்டே இருந்தான், விநாயகரின் பசியோ அடங்கவில்லை.
ஆனாலும், சளைக்காத குபேரன் தன் நாட்டிலுள்ள எல்லா யட்சர்கள் வீட்டில் இருந்த உணவையும் கொண்டு பரிமாறினான். அதையும் நொடியில் விழுங்கிய விநாயகர் மேற்கொண்டு கடும் பசியில் அவன் மாளிகையின் தூண்கள், ரத்தினக் குவியல்கள் என எல்லாம் பிய்த்து உண்ண ஆரம்பித்தார், குபேரன் அலறினான்.
“என்ன செய்வது குபேரா, என்னை விருந்துக்கு அழைத்தவன் நீ, ஆனால் என் பசியினைப் போக்க உன்னால் முடியவில்லை, அதனால் உன் அரண்மனையில் கிடைத்த எல்லாவற்றையும் உண்கின்றேன்” எனச் சொல்லி துவம்சம் செய்து விழுங்க ஆரம்பித்தார்.
அலறிய குபேரன் சிவபெருமானிடம் ஓடினான். கருணையே உருவான அவர் சொன்னார், “கணபதிக்குத் தேவை ஆணவமில்லா மனம் குபேரா, ஆணவம் நீங்கி அவன் அடிபணிந்து கொடுக்கப்டும் ஒரு பிடி பச்சரிசி அவனுக்குப் போதும்”
அதன்படி தான் தோற்றுவிட்டதைச் சொல்லி, தன் ஆணவம் அகற்றி, பிடி பச்சரிசியினை அவன் விநாயகருக்குப் படைக்க அவர் திருப்தியுற்று அவனை ஆசீர்வதித்துக் கிளம்பினார்.
இந்தக் காட்சியினைத்தான் பாடுகின்றார் காசிப முனிவர். ஒரு மனிதன் உண்மை உணர்ந்து முக்தி அடைய முதல் அவசியம் அவன் ஆணவம் நீங்குதல்.
அப்படியே எதிரிகளின் தொல்லை அகல முதல் அவசியம் அவர்களின் ஆணவம் அகற்றல்.
விநாயகப் பெருமான் எதிரிகளின் ஆணவம் அகற்றி, அவர்களை அடக்கித் தருவார். அப்படியே நம்மிடம் உள்ள ஆணவம் அகற்றி மெய்பொருளை உணர்த்துவார் என்பதே இப்பாடலின் போதனை.
அறியாமை, ஆணவ இருள் நீங்கிய இடத்தில் இறைவன் ஜோதிவடிவமாய் வெளிப்படுவார்.
ஓளவையார் அகவலில் “மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே” என விநாயகரை பாடுகின்றார்.
விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்தல் கூட நான் எனும் ஆணவம் களையும் தாத்பரியமன்றி வேறல்ல.
விநாயகருக்கு முக்கனி சமர்பிப்பதிலே மும்மலம் எனும் தத்துவம் சூசகமாக உண்டு. வாழை என்பது பந்த பாச அடையாளம் ரஜோ குணம் என்பதும், மாங்கனி சத்வ குணம் என்பதும், பலா என்பது தாம்ஸ குணம் என்பதும் சூசகமான ஞான அடையாளங்கள்.
வாழைமரம் கன்றுடன் வளரும், அடிப்பாகத்தின் சிறிய பாகம் கூட வளரும், அந்த அளவு அது பந்தபாசமிக்கது. ஆனால், குலை தள்ளியவுடன் சரிந்துவிடும் என்பது ரஜோ குணத்தின் வெளிப்பாடு.
மாம்பழம் என்பது எல்லாப் பறவைகளுக்கும் பிராணிகளுக்கும் பிடித்தமானது, சுவையானது என்றாலும் தன் விதையில் இருந்து மீண்டெழும் சக்தி கொண்டது, அது அடைய எளிதானது, ஆனால் மறுபடி மறுபடி பெருகுவது.
பலாப்பழம் சுவையானது, ஆனால் அதை உண்பது சிக்கல் நிறைந்தது. சோம்பல் நிறைந்தவர்க்கு அது கடினமானது.
இப்படி மூவகை கனிக்கும் மூன்று குணங்களுக்கும் தொடர்பு உண்டு, விநாயகர் அவற்றை அகற்றுவார் என்பதும் ஞான தாத்பரியம்.
அவர் கையில் இருக்கும் பாசாங்குசமும் கோடரியும் அவர் ஆணவத்தை அகற்றுவார், மும்மலங்களை அகற்றுவார் என்பதன் அர்த்தமன்றி வேறல்ல.
நடராஜர் கோலத்தில் ஆடும் சிவனின் காலடியில் கிடக்கும் முயலகன் போல, விநாயகர் காலடியில் கிடக்கும் மூஷிகமே அவர் ஆணவத்தை அடக்குவார் என்பதே அந்தத் தத்துவம். இதனால் அவரின் பெயர் “ஆகுவாகன” என்றும் உண்டு.
இதனை மருதடி விநாயகர் புராணம் போதிக்கின்றது.
“வந்தவினை யோடிடும் விக்கினம் வீடிடும்
வருகின்ற வினைகள் விலகும்
மாறாத நோய்கெடும் பொல்லாத வறுமையும்
வஞ்சனைகளும் போய்விடும்
வெந்துய ரகன்றிடும் தீயநாள் கோளறும்
வெம்பகை யழிந்துபோகும்
மேலான செல்வமும் கல்வியும் ஞானமும்
வீடுமெளிதிற் கைகூடும்
புந்திமகிழ் மணமுண்டு குணமுண்டு கணமுண்டு
புகழுமுண்டு புதல்வருண்டாம்
பூலோக முடிமன்னர் வாழ்வுண்டு மும்மதப்
போதகக் களிறேயுனைக்
கந்தமலர் சிந்தி வழிபடு மடியவர்கென்பர்
கணபதி யெமக்கு மருள்வாய்
கருதடியர் வினைகடிய மருதடியில் நடனமிடு
கற்பகப் பிள்ளையாரே”
இதைத்தான் இப்பாடலில் பாடிப் போதிக்கின்றார் காசிப முனிவர். அந்த விநாயகப் பெருமானின் பெரும் அருளில் எல்லா ஆத்மாவும் ஆணவம் நீங்கி இறைவனை உணர்ந்து முக்தி அடையட்டும் என்பதே இங்கு அவர் சொல்லும் ஞானபோதனை.
விநாயகர் அனுபூதி : 43
“சித்தி தரும்சத் திநிபா தமதே
எத்தி னமதில் எனைவந்(து) உறுமோ?
அத்தி முகவா! அருமைத் தலைவா!
சத்தி தனையா! தமியற்கு உரையே”
பாடல் இப்படி பிரிந்து வரும்
“சித்தி தரும் சத்தி நி(ன்) பாதம் அதே
எத்தினம் அதில் என்னை வந்து உறுமோ?
அத்தி முகவா அருமை தலைவா
சத்தி தனையா தமியற்கு உரையே”
அத்தி என்றால் யானை , யானை முகமுடைய விநாயக பெருமானே, என் அருமை தலைவனே, யாருமே இல்லாத எனக்கு (தமியன்) நீ உரைப்பாயாக, எப்போது உன் பாதம் நான் அடைவேன், அந்நாள் எந்நாளோ, சித்தி தரும் கணபதியே சொல் என்பது பாடலின் பொருள்
இந்த பாடல் சித்தி எனும் வெற்றியினை தருபவர் விநாயகர் அந்த வெற்றிக்கு ஆதாரபான புத்தியினையும் அவரே தருவார், அவரை அண்டினால் சித்தி புத்தி என இரண்டும் சரியாக அமையும், அதனால் முக்தி நிலையும் சாத்தியமாகும் என்பதை சொல்ல்லும் பாடல்
சித்தி விநாயகர் என விநாயகபெருமான் தனித்து வணங்கபடுகின்றார் சித்தி என்றால் காரிய சித்தி எனபொருள், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்பது விநாயகபெருமான் அருளும் வரங்களில் முக்கியமானது, இதனை சரியாக செய்ய புத்தி அவசியம்
விநாயகரை வழிபட்டால் புத்தி வந்து அதனால் சித்தி வந்து பெரும் இடம் அடையலாம் என்பதை பாடுகின்றார் காசிப முனிவர், அவர் இங்கு சூசகமாக ஒரு வார்த்தையினை சொல்கின்றார் அது தமியன் என்பது
“தமியன்” என்றால் தனித்திருப்பவன் என பொருள், யார் தனித்திருப்பவர் என்றால் எல்லாவகையிலும் இல்லாதவனாக எதுவுமே இல்லாதவனாக தனித்துவிடபடும் போது அவன் தமியனாக தவிப்பான்
அப்படி இருக்கும் தன்னை எல்லோரும் மதிக்கும்படி நல்வாழ்வு வேண்டி பாடுகின்றார் காசிபமுனிவர் அந்த வரத்தை விநாயக பெருமானே தருவார் என சொல்லி பாடுகின்றார்
இந்தப் பாடலின் பொருளை விநாயகப் புராணத்தின் காட்சியினை கொண்டே விளக்கலாம்.
ஒவ்வொரு யுகத்திலும் பிரம்மன் புதிய உலகை உயிர்களை சிருஷ்டிப்பான், அப்படி அவர் சிருஷ்டிக்க தொடங்கும் போது அவருக்குள் ஒரு கர்வம் வந்தது.
தான் மட்டும் இல்லையென்றால் இங்கு படைப்புதொழில் எப்படி நடக்கும் என தனக்குள்ளே கர்வம் பொங்க நின்றார், இந்த அகம்பாவத்தை கணபதி ஒடுக்க எண்ணினார்.
அதன்படி அவர் பிரம்மனை முறைக்க பிரம்மனின் படைப்பில் நிறைவின்மை வந்தது, படைக்கும் பொருளும் அதன் இயங்கு சக்தியும் சரியாக முழுமை அடையவில்லை.
எல்லாமே அலங்கோலமானது பதறிய பிரம்மன் தன் முயற்சிகளில் தோற்று கடைசியில் விநாயகரை மறந்ததே காரணம் என அறிந்து மன்னிப்பு கோரினான்
விநாயகர் தன் பிரதான சக்தியான இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி எனும் இரு சக்திகளை அவனுக்கு அருளினார். அந்த சக்திகள் அவனை அடைந்து பலம் கொடுத்தன. இதனால் பிரம்மனின் படைப்புக்கள் அவன் விருப்பப்படி முழுமை அடைந்தன, அதன் இயங்கு தன்மையும் சரியாக வந்தது.
உயிர்கள் அதனதன் வடிவில் அதனதன் உருவில் பூரணமாயின.
பிரம்மனுக்கு இந்த இரு சக்திகளை விநாயகர் அருளினார் அல்லவா? அது சித்தி, புத்தி என இரு பெண்களாக வளர்ந்தனர்.
அவர்கள் பெரியவராக வளர்ந்தபின் யாருக்கு திருமணம் செய்து வைப்பது என குழம்பிய பிரம்மனுக்கு நாரத முனிவரே வழிகாட்டினார்.
அதன்படி பார்வதி மைந்தனான விநாயகப் பெருமானுக்கே அவர்களை திருமணம் செய்து கொடுப்பது என முடிவாயிற்று.
பின் ஜனக முனிவர் மந்திரம் ஓத, எல்லா தேவர்களும் ரிஷிகளும் அறிய அந்த சித்தி, புத்தி எனும் இரு தேவியரையும் விநாயகப் பெருமான் ஏற்றுக் கொள்கின்றார்.
இது சூத முனிவர் சொல்லும் காட்சியாக புராணத்தில் உண்டு.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், விநாயகர் இரு சக்திகளை பிரம்மனுக்கு வழங்குகின்றார், பிரம்மனின் கடமை முடிந்ததும் அந்த இரு சக்திகளும் விநாயகப் பெருமானையே அடைகின்றன.
இதுதான் சித்தி புத்தி விநாயகர் எனும் தத்துவமாகும்.அதுதான் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி எனும் தத்துவார்த்தமாகவும் சொல்லப்படுகின்றது.
“சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த” என்பது ஆதிசங்கரர் வாக்கு.
அதாவது, ஜடம் எனும் அசையா சக்தியும், இயக்கு சக்தியும் இணையும் போது உலக இயக்கம் நடக்கின்றது என்பது பொருள்.
அதாவது, பரப்பிரம்மம் இரு சக்திகளாக அதன் துணை சக்திகளாக இயக்கத்தை நடத்துகின்றது. விநாயகருக்கு அது சித்தி புத்தியாக வந்தது
ஆம். பிரம்மனின் பலவீனத்தையும் விநாயகர் அதனை சரி செய்த அருளையும் கவனியுங்கள். அந்த இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தியின் அவசியம் புரியும்.
இச்சை என்பது எதை செய்யவேண்டும் எனும் ஆர்வம், கிரியா என்றால் செயல். செய்யப்படும் செயல் ஞானத்துடன் முழுமையான அறிவுடன் தெளிவுடன் செய்யப்படவேண்டும். அந்த வரம் அருள்பவர் கணபதி என்பது விளங்கும்.
ஒரு செயல் பூரணமடைய செய்யபடும் செயல் சரியாக அமைய பலன் அடைய விநாயக பெருமானின் அருள் அவசியம் அதைத்தான் காசிப முனிவர் போதிக்கின்றார்
புத்தி வந்தால் சித்தி வரும், சித்தி சரியாக அமைந்தால் முக்தி நிலை தானே வரும், சித்தி புத்தி கணபதி முக்தி நிலை தருவார் என போதித்து பாடுகின்றார் காசிப முனிவர்
இது விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றான சித்தி புத்தி விநாயகர் கோலத்தினை சொல்லும் பாடல், அந்த கோலத்தில் இரு பெரும் வரங்களை அருள்வார். அது ஒவ்வொரு மானுடர்க்கும் தேவை என்பதை போதிக்கும் பாடல்.
ஸ்ரீ மஹாகணபதி மங்களமாலிகா ஸ்தோத்திரம் சொல்கின்றது
“ப்ருஸ்னி ஸ்ருங்காயா ஜிதாய
க்ஷிப்ர பீஷ்டார்த்ததாயினே
சித்தி புத்தி ப்ரமோதாய ஸ்ரீ கணேசாய மங்களம் “
ப்ருஸ்னிஸ்ருங்காய என்றால் ஒளி பெற்ற தந்தத்தை கொண்டவரும்
ஜிதாய என்றால் யாராலும் வெல்ல முடியாதவரும்
க்ஷிப்ரபீஷ்டார்த்த தாயினே என்றால் பிரார்த்தித்தால் வேண்டியதைத் தருபவரும்
சித்தி புத்தி ப்ரமோதாய என்றால் சித்தி புத்தி என்ற இரே மனைவியரை மணந்து சந்தோஷத்தை அருளியவருமான
ஸ்ரீ கணேசாய மங்களம் என்றால் கணேசருக்கு மங்களம் உண்டாகட்டும்.
ஆம் , ஒளிபொருந்திய தந்தம் கொண்டவர் , யாராலும் வெல்லமுடியாதவர், கேட்கும் வரத்தை தருபவர, சித்தி புத்தி என இரு மனைவியரை கொண்ட விநாயக பெருமான் மங்களம் அருளட்டும் என பொருள்
எல்லாவற்றிலும் ஒரு முழுமை வேண்டும், முழுமை இல்லா இடமே அலங்கோலமும் அரைகுறையுமாகும். காரியம் தடைபட்டு, எடுக்கும் முயற்சிகள் தடைபட்டு நிற்பதும் அப்படியான நிலையே.
அதனை போக்க ஒரு ஸ்லோகம் உண்டு. விநாயகப் பெருமானை நோக்கி அதைப் பாடி துதிக்க காரிய தடை எல்லாம் அகலும்.
“ஓம் சித்தி புத்தி லக்ஷ்ய லாப சஹித ஸ்ரீ கஜானனாய நமஹ”
ஆம். எல்லா தடையும் நீங்கி ஒருவனை எல்லா வகையிலும் முழுமை அடையச் செய்பவர் கணபதி, அந்த கோலமே சித்தி புத்தி கணபதி கோலம்.
தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர் என உரக்க சொல்லி, பாடி அவ்வரத்தை நமக்கும் தர உருகுகின்றார் காசிப முனிவர்
எடுத்த காரியம் யாவிலும் சித்தி தரும் விநாயக பெருமானை நோக்கி காரிய சித்திமாலை என ஒன்றை இதே காசிப முனிவர் பாடினார், அந்த மந்திர மாலையினை சொல்லி வர வர விநாயக பெருமானின் அருளால் காரிய சித்தி நல்ல அறிவுடன் கிடைக்கும்
அதனை ஒவ்வொருவரும் ஞாயிற்று கிழமைகளில் பாடுதல் நலம், விநாயகருக்கான சதுர்த்தி , சங்கடாஹர சதுர்த்தியில் பாடுதல் இன்னும் நலம்
இன்னும். சில வேண்டுதல்களுக்காக இதனை பலவகையில் வழிபாடாக பாடலாம்
3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் முழு வெற்றி கிட்டும். இதனை தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதி வரும்,
சதுர்த்தியில் 8 முறை படித்து வர நல்ல மாற்றம் வரும், இதனை தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர பெரும் செல்வாக்கு உண்டாகும், இந்த பாடலை தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம், கல்வி செல்வம் என எல்லாமும் கிட்டும்
இதோ அந்த காரிய சித்தி மாலை
” பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம்.
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.”
விநாயகர் அனுபூதி : 44
“முதல்வா படவே முடியா(து) இனிதோ
இதமே அருளா(து) இருத்தல் எனை? பொற்
பதமே உடையாய்! பணிந்தேன்! பரையின்
புதல்வா அருளாய்! புரைதீர்ப் பவனே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“முதல்வா படவே முடியாது இனிதோ
இதமே அருளாது இருத்தல் என்ன? பொற்
பதமே உடையாய் பணிந்தேன் பரையின்
புதல்வா அருளாய் புரை தீர்ப்பவனே”
“மூல முலவனே! இனியும் என்னால் கஷ்டங்களைத் தாங்கமுடியாது எனும் நிலையில் உன் பொற்பாதம் பணிந்தேன். இன்னும் எனக்கு வரம் தராமல் இருப்பது ஏனோ? எல்லாருடைய கஷ்டங்களுக்கான கடைசி நம்பிக்கையே, பொய்யா நம்பிக்கையே, என் வேண்டுதலைக் கேட்டு, எனையும் காத்து மீட்டு அருள்புரிவாயாக” என்பது பாடலின் பொருள்.
விநாயகப் பெருமான் முழுமுதல் கடவுள் எல்லா பெரிய விக்னங்களுக்கும் யாராலும் தீர்கமுடியாத பெரும் பெரும் சிக்கலுக்கும் அவரே கடைசி தீர்வு. அவரால் முடியாதது எதுவுமில்லை.
இதனாலே எல்லா வகையிலும் முயன்று போன தேவர்களும், முப்பெரும் தேவர்களும் அவரைப் பணிந்தே பல இடங்களில் தங்களையும் இந்த உலகத்தையும் தற்காத்தார்கள்.
எங்கே தேவர்களின் முப்பெரும் தெய்வங்களின் சக்தி வெல்லமுடியாதோ அவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பவர் பிள்ளையார்.
விநாயகப் புராணம் அதனைத் தெளிவாகச் சொல்கின்றது. சிவபெருமான், விஷ்ணு, பிரம்மன் என எல்லோரும் முடியாத கட்டத்தில் அவரிடம் வேண்டியிருக்கின்றார்கள். அம்பாள் வேண்டியிருக்கின்றாள். இன்னும் ரிஷிகளும், வியாசர் போன்ற மாமேதைகளும் அவரிடமே கடைசி அடைக்கலமானார்கள்.
இந்திரன் முதலான தேவர்கள் அப்படிச் சரணடைந்தார்கள். நவக்கிரகங்கள் சரணடைந்தார்கள்.
அப்படித் தன்னை நம்பி ஒருவன் அடைக்கலமாகும்போது முழுக்கக் காத்து அருள்தருபவர் விநாயகர். யார் என்ன வரம் கேட்டாலும் அதனைத் தவறாமல் தருபவர் அவர். அப்படியான விநாயகப் பெருமானிடம் எல்லோருக்கும் பொய்யா வரமருளும் எம்பெருமானே என்னை ஏன் இன்னும் காக்க வரவில்லை என்கின்றார் காசிப முனிவர்.
இங்கு அவர் சுட்டிக்காட்டுவது எட்டு அவதாரம் எடுத்து உலகைக் காக்கும் பெருமானே என்னையும் வந்து காத்துக்கொள் என்பது. அதாவது, விநாயகப் பெருமான் ஏதோ ஒரு உருவில் வந்து நம்மை காப்பார் அவர் கடைசி நம்பிக்கை, அசையாத, பொய்யாத நம்பிக்கை என்பதைச் சொல்கின்றார்.
விநாயகப் பெருமான் எவ்வளவோ இடங்களில் அதிசயங்களைச் செய்தார். அடைக்கலமாக வந்த அடியார்கள், தேவர்கள் என எல்லோரையும் காத்தார். எல்லாமே கைவிட்டு போன நிலையில் கடைசி ஆதாரமாக அவரே வந்து எல்லாவற்றையும் மீட்டுக் கொடுத்தார்.
புராணத்தின் பல இடங்களில் அவர் பெருமை இருந்தாலும் அவர் எட்டு அவதாரமாய் வந்து அசுரர்களை ஒழித்து உலகைக் காத்தார். விநாயகப் பெருமான் யுகங்களைக் கடந்தவர் என்பதால் இந்த எட்டு அவதாரங்களும் மிகத் தொன்மையானவை.
அவரின் முதல் அவதாரம் வக்ரதுண்டர், இந்த அவதாரத்தில் மட்சராசுரன் என்பவனைச் சிங்கத்தின் மேல் வந்து அவர் வீழ்த்தினார்.
இரண்டாம் அவதாரமான ஏகதந்த அவதாரத்தில் மாதாசுரன் என்பவனை வதம் செய்தார்.
மூன்றாம் அவதாரமான மகோதரா அவதாரத்தில் மோகாசுரன் எனும் அசுரனிடமிருந்து உலகைக் காத்தார். இந்த அசுரன் மாய மோக ஆசைகளைத் தூண்டி விட்டு உலகை மயக்கிப் பிடிக்கும் வரம்பெற்றிருந்தவன்.
நான்காம் அவதாரம் லோபாசுரன் என்பவனை அழிக்க விநாயகர் கஜான அவதாரமாக வந்தார் விநாயகர், பெரும் பேராசைக்காரனான அவனை அவர் வீழ்த்தி உலகைக் காத்தார்.
குரோதாசுரன் என்பவனை அவர் வந்து அழித்த கோலம் லம்போதரன் அவதாரம், அப்போது அவர் மயில்மேல் வந்து அவனை வதம் செய்தார்.
காமசுரன் எனும் கொடியவனை அழிக்க அவர் விகடன் வடிவில் வந்தார்.
மாமாசுரன் என்பவன் விஷத்தன்மை மிக்க அசுரன், அவனை அழிக்க நாகத்தின் மேல் வந்து அவனை அழித்துப் போட்டார். அது விக்னராஜ அவதாரமாகும்.
அகங்காரமிக்க தூம்ரவர்ணன் எனும் அசுரனை விநாயகப் பெருமான் அழித்துபோட்ட அவதாரமே தூம்ரவர்ண அவதாரமாம்.
இப்படி எட்டு அவதாரம் எடுத்து இன்னும் பல பல அதிசயிக்க தக்க வகையில் தன்னை நம்பியவர்களைக் காத்து அருள்பவர் விநாயகப் பெருமான். அவர்மேல் வைக்கும் நம்பிக்கை பொய்ப்பதில்லை.
இதனாலே, பொய்யாமொழி பிள்ளையார், தவறாமல் தன் அடியார்களைக் காக்கும் பிள்ளையார் என அவருக்குப் பெயர் உண்டு, அப்படிப் பொய்யாமொழி பிள்ளையார் ஆலயம் இந்திய தமிழகத்திலும் உண்டு.
திண்டிவனம் அருகே தீவனூர் எனும் ஊரில் அந்தத் தலம் அமைந்திருக்கின்றது. இங்கு விநாயகர் லிங்க வடிவில் அமர்ந்திருக்கின்றார், இதற்குக் கணபதி லிங்கம் எனப் பெயர்.
இந்த லிங்கம் மிக நுணுக்கமானது, அதற்குப் பாலாபிஷேகம் செய்யும்போது மட்டும் விநாயகப் பெருமானின் உருவத்தைக் காணமுடியும்.
இந்த விநாயகருக்கு மூன்று வாகனமும் உண்டு. நந்தி, யானை, மூஞ்சுறு என மூன்று வாகனங்கள் அவருக்கு உண்டு. இது எங்குமில்லாச் சிறப்பு.
விநாயகப் பெருமான் முழுமுதற் கடவுள். எல்லாமும் அவருள் அடக்கம் என்பதை இந்த லிங்கக் கணபதி கோலம் சொல்கின்றது, அவரிடம் கேட்டுக் கிடைக்காதது எதுவுமில்லை. அவரால் முடியாதது எதுவுமில்லை என்பதால் அவர் பொய்யாமொழி பிள்ளையார் என்றானார்.
இந்த ஆலயம் அதிசயம் பல கொண்டது, இங்கு மூன்று ஆலமரங்கள் உண்டு, ஆனால் விழுது கிடையாது.
இதன் பொருள் விநாயகப் பெருமான் முப்பெரும் மூர்த்திகளின் வடிவமானவர் அவர் தன்னைத் தாங்க யாரும் அவசியமில்லாதபடி தனித்து நிற்பவர், தனித்துவமானவர் என்பதையும் சொல்கின்றது.
இந்த ஆலயத்தின் அற்புதங்களும் ஏராளம், இங்குத் தேங்காய் உடைக்க வேண்டி அருகிருந்த தோப்பில் தேங்காய்க்கு ஏங்கி நின்றான் பக்தன். ஆனால், தோப்பின் சொந்தக்காரனோ அவனைப் பரிகாசம் செய்து “தேங்காய் உடைக்காவிட்டால் பிள்ளையாருக்கு என்ன கொம்பா முளைத்துவிடும்” எனச் சொல்லி அவமானம் செய்து அனுப்பினான்.
அந்த நொடியே தோப்பில் எல்லா தேங்காய்க்கும் கொம்பு முளைத்தது. அந்தக் குடியானவன் அஞ்சி ஓடி வந்து விநாயகரைப் பணிந்தான். கொம்பு முளைத்த தேங்காயோடு பணிந்தான். அவனை மன்னித்தார் விநாயகப் பெருமான். அந்த அதிசயத்தின் சாட்சியாக கொம்பு முளைத்த அந்தத் தேங்காய் இன்றும் அந்த ஆலயத்தில் காப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றது.
அப்படியே இங்கு விநாயகருக்கு நைவேத்தியம் செய்ய பொங்கலுக்குக் கொஞ்சம் மிளகு கேட்டபோது ஒரு வியாபாரி கொடுக்க மனமின்றி என்னிடம் இருப்பது உளுந்து எனச் சொல்லிச் சென்றுவிட்டான், பின் அவன் மிளகெல்லாம் உளுந்தாய் மாறிப்போனது கண்டு கலங்கி அழுது விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டு தன் மிளகை மீட்டுக் கொண்டான்.
இப்படிப் பெரும் பெரும் அதிசயங்களைச் செய்பவர் அந்தப் பொய்யாமொழி பிள்ளையார்.
அங்கு நீங்கள் எதை உறுதியாக கேட்டாலும் அவர் தருவார். அவரிடம் வைக்கும் வேண்டுதல் பொய்த்ததில்லை. அவர்முன் மொழியும் மொழிகள் பொய்யாகமல் அவரே மாற்றித் தருவார்.
இப்படியான விநாயகரின் இயல்பினைத்தான் அவர் பொய்க்காத வரம் தரும் மகோன்னதர் என்பதைத்தான் இப்பாடலில் பாடி, எந்த இடத்தில் பக்தன் இனித் தாங்கமுடியாது எனக் கதறிவானோ, எந்த எல்லையில் அவன் இனி எதுவுமில்லை என முடங்குவானோ அங்கு வந்து அவனைக் காப்பார் விநாயகர் எனப் பாடிப் புகழ்ந்து துதிக்கின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அனுபூதி : 45
“சீலன் துதிக்கைச் சிரனை அனவே
ஞாலத் தினிலே நலம்ஈ வர்எவர்?
கோலச் சிகிவா கனனாம் குகனும்
சாலப் புகழும் தனிமன் அவனே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“சீலன் துதிக்கை சிரனை அனவே
ஞாலத்தினில் நலம் ஈர்வார் எவர்?
கோலச் சிகி வாகனனாம் குகனும்
சாலப் புகழும் தனிமன் அவனே”
துதிக்கை கொண்ட சீலனான விநாயகப் பெருமனை போல் அவனியில் நன்மை செய்வார் எவர் உண்டு? அழகான கோலமயில் மேல் வரும் குகனும் புகழும் தனிப்பெரும் தெய்வமானவர் விநாயகப் பெருமான் என்பது பாடலின் பொருள்.
அதாவது, விநாயகப் பெருமான் தனித்து நிற்பவர், அவர் யாரும் உதவிக்கு இன்றி தனியே நின்று சாதிப்பவர் காப்பவர். அப்படிப்பட்ட விநாயாகரின் உதவி பல இடங்களில் கிடைத்ததால் முருகப்பெருமானே அவரை வணங்குகின்றார் எனில் விநாயகரின் சக்தி என்ன? எனப் பாடுகின்றார் காசிப முனிவர்.
முருகப்பெருமான் சிவவடிவம். அவர் பிரம்மனுக்கே பிரணவம் போதித்தவ்ர், சிவனுக்கே வேதத்தின் பொருள் சொன்னவர், யாரும் அடக்கமுடியாச் சூரபத்மனை அழித்துப்போட்ட சேனைத் தலைவன்.
அப்படியான முருகப்பெருமானே விநாயகரைப் பணிகின்றார் என்றால் விநாயகரின் சக்தி என்ன என்பதை வியந்து பாடிப் பணிகின்றார் காசிப முனிவர்.
புராணத்தின் படி முருகப்பெருமானுக்கு விநாயகர் பல இடங்களில் வழிகாட்டி, அவரே முருகப்பெருமானை தோற்கடித்து ஞானப்பழம் பெற்றார், அங்கே விநாயகருக்கு வெற்றி என்றாலும் பழனியில் ஞானப்பண்டிதனாக முழு ஞானவடிவமாக முருகன் நிற்க அதுதான் காரணம்.
முருகப்பெருமானுக்கு முழுஞானம் வழங்கியவர் விநாயகர் என்பதே அந்தத் திருவிளையாடலின் தாத்பரியம்.
அப்படியே முருகனுக்கு மயில் வழங்கியதும் விநாயகரே. முருகப்பெருமானுக்கு ஆட்டுக்கிடாதான் வாகனமாக இருந்தது, மயில் விநாயகருக்கே வாகனமானது , பின்னர் முருகனுக்கான மயிலை விநாயகர்தான் வழங்கினார்.
இது விநாயாகர் எடுத்த எட்டு அவதாரங்களில் ஒன்றிலிருந்து வருகின்றது, அந்த எட்டு அவதாரங்கள் எது என்றால் இவைதான்.
முதல் அவதாரம் வக்கிரதுண்டர், இந்த அவதாரத்தில் விநாயகப் பெருமான் சிங்க வாகனத்தில் வந்து மட்சராசுரனுடன் போரிட்டு அவனை அழித்தார்.
இரண்டாம் அவதாரம் ஏகதந்தம் இங்கு மாதாசுரன் என்ற அசுரனை அவர் அழித்தார்.
மூன்றாம் அவதாரம் மகோதரா, மோகாசுரன் என்ற அசுரனிடம் இருந்து உலகத்தைக் காப்பதற்காக விநாயகப் பெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
நான்காம் அவதாரம் கஜானனம் , இங்கு லோபாசுரன் என்ற அசுரன் விநாயகரால் ஒழிந்தான்.
ஐந்தாம் அவதாரம் லம்போதரா, குரோதாசுரன் என்பவனை அவர் அழித்துப் போட்டார், ஆறாம் அவதாரம் விகடா, காமசுரனை அவர் அழித்துபோட்ட இடம் இதுதான்.
ஏழாம் அவதாரம் விக்னராஜ அவதாரம், மமதாசுரனை அழிப்பதற்காக கொடிய விஷத்தன்மை கொண்ட சேஷநாகத்தின் மீது விநாயகப் பெருமான் வந்தார்.
எட்டாம் அவதாரம் தூம்ரவர்ணன் , அகங்காசுரனை அழிப்பதற்காக விநாயகர் எடுத்த அவதாரம் தூம்ரவர்ண அவதாரம்.
ஆக இந்த எட்டு அவதாரங்களில் விகடா அவதாரத்தில் அவர் வந்த வாகனம் மயில், அப்படியே அந்தப் புராணம் இன்னொரு சம்பவத்தைச் சொல்கின்றது .அந்தப் புராணம் சிந்து எனும் அசுரனுடையது.
கண்டகி எனும் தேசத்தை சக்ரபாணி என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி உக்ரா, அசுர குலமான இவனுக்குக் குழந்தைகள் இல்லை, சௌனக் எனும் முனிவர் அவர்களுக்கு ஒரு உபாயம் சொன்னார்.
அதன்படி உத்ரா சூரியனை நோக்கி தவமிருக்க அவளுக்குக் கரு வாய்த்தது. ஆனால், சூரியனின் அம்ச குழந்தை என்பதால் அது மிகவும் வெம்மையாக இருந்தது.
அந்த வெப்பத்தைத் தாங்கமுடியாத உக்ரா அந்தக் கருவினைக் கடலில் இட்டாள். கடலரசன் அதைக் காத்துக்கொண்டான். அக்கரு கடலிலே வளர்ந்தது, உரிய காலத்தில் அது குழந்தையானபோது கடலசரன் அதனை உக்ராவிடம் கொடுத்தான்.
கடல் எனப் பொருள்படும் “சிந்து” எனும் பெயரை அந்த அசுரனுக்கு இட்டார்கள், அவன் சக்தி பல படைத்து வளர்ந்தான், அவனை அசுரகுரு சுக்கிராச்சாரி இன்னும் பலமாக்கினார்.
அவனைச் சூரியனை நோக்கி தவமிருக்க சொன்னார். சூரியன் அவனுக்கு அமுதக்குடத்தை கொடுத்து இது உன் வயிற்றில் இருக்கும் வரை உன்னை யாராலும் வெல்லமுடியாது என வரமருளினான். அதை வயிற்றில் கட்டி மறைத்துக் கொண்ட சிந்து பெரும் ஆட்டம் ஆடினான்.
தேவர் உலகினைக் கைப்பற்றினான். அண்ட சராசரத்தை ஆட்டிவைத்தான். கடைசியில் தேவர்கள் கயிலாயம் செல்ல அவன் கயிலாயத்தையே கைப்பற்றபோவதாக மிரட்டினான்.
சிவபெருமான் எல்லாத் தேவரையும் விநாயகப் பெருமானிடம் அனுப்பினார். விநாயகர் தேவர்களைக் காக்க திருவுளம் கொண்டார். அப்போது சிந்துவின் நண்பன் கமலாசுரன் என்பவன் படையோடு வந்தான்.
அவனை ஒழிக்க விநாயகர் கிளம்பும் நேரம் கார்க்கிய முனிவர் ஒரு யாகம் செய்து வேதத்தை மயிலாக வடித்துக் கொடுத்தார். அந்த வேதமயிலில் விநாயகர் கமலாசுரனுடன் யுத்தம் செய்தார்.
கமலாசுரனுக்கு ஒரு வரம் இருந்தது, அவன் இரத்தத் துளிகளெல்லாம் அசுரக் கூட்டமாக பெருகும், இதனால் அவனைக் கொல்லுதல் கடினமானது.
விநாயகர் அந்நேரம் சித்தி புத்தி எனும் பிரம்மனின் மகள்களை அழைத்துக் கமலாசுரனின் இரத்தம் தரையில் விழாமல் பார்த்துக்கொள்ள செய்து அவனை சம்ஹாரம் செய்தார்.
கமலாசுரன் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் அந்த சிந்து அசுரன் வந்தான், வந்தவனுக்கும் விநாயகருக்கும் கடும் சண்டை உண்டாயிற்று.
விநாயகருக்குத் துணையாக முருகப்பெருமானும் வீரபாகுவும் வந்தார்கள். கடைசியில் சிந்து அசுரனின் வயிற்றில் இருந்த அமுதக்குடத்தை விநாயகர் உடைக்க அவன் வீழ்ந்தான்.
மயில்மேல் அமர்ந்து அசுரனை வீழ்த்தியதால் விநாயகர் “மயூரேசர்” எனப் பெயர் பெற்றார், இன்றும் அந்த ஆலயம் மராட்டியத்தில் உண்டு. அங்கு மயில்மேல் விநாயகர் அமர்ந்திருப்பார்.
இந்தப் போரில் தனக்கு உதவ வந்த முருகப்பெருமானுக்குத் தன் வேத மயிலையே கொடுத்து அவர் உயரப் பறப்பதைக் கண்டு மகிழ்ந்தார் விநாயகப்பெருமான். முருகப்பெருமானின் மயில் இப்படித்தான் கிடைத்தது.
இன்னும் சூரனுடனான போரில் விநாயகர் அவருக்கு உதவினார், சில இடங்களில் சூரனின் பலம் மேலோங்கியபோது விநாயகப் பெருமானே வந்து அவருக்குத் துணையாக நின்றார் என்பதும் புராணம் சொல்வது.
இதனாலே இலங்கையில் இன்றும் கதிர்காமம் அருகே “செல்ல கதிர்காமம்” என்றொரு இடத்தில் விநாயகருக்கு ஆலயம் உண்டு, முருகப்பெருமானுக்குத் துணையாக அவர் வந்தார் என்பதன் அடையாளம் அது.
முருகபெருமானின் அவதார நோக்கத்தை நிறைவேற்ற அவருக்குத் துணை வந்த விநாயகரே முருகனின் கர்மமான வள்ளியினை அடையவும் வழிகட்டினார், வள்ளி திருமணம் விநாயகப் பெருமானின்றி இல்லை.
இப்படி எல்லா வகையிலும் முருகனுக்குத் துணையாக வந்தவர் விநாயகர், முருகப்பெருமான் மகா சக்திவாய்ந்தவர் எனினும் பல இடங்களில் அவருக்கே துணை செய்தவர் விநாயகர், அந்த ஞானசீலன் தன் தம்பிக்கு மயில் கொடுத்து உயரவைத்தது போல், போரில் காத்தது போல் இன்னும் வள்ளிதிருமணத்துக்கு உதவி கர்மத்தை முடிக்க துணை வந்தது போல் அவரை வணங்கும் எல்லோருக்கும் துணைவருவார், மகா சக்திவாய்ந்த முருகப் பெருமானே அவர் பாதம் வணங்கியபோது நாமெல்லாம் வணங்க என்ன தயக்கம் மனமே எனப் பாடுகின்றார் காசிப முனிவர்.