விநாயகர் அனுபூதி : 46 to 50

விநாயகர் அனுபூதி : 46

“திண்தோள் சதுரும் திகழ்ஐங் கரமும்,
வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்
பண்டே வளர்கோ லமதைப் பணிவாய்க்
கண்டேன்: களித்தேன்: கவலை இலனே!”

பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“திண் தோள் சதுரும் திகழ் ஐங்கரமும்
வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்
பண்டே வளர் கோலம் அதைப் பணிவாய்
கண்டேன் களித்தேன் கவலை இலனே”

உறுதியான நான்கு தோள்களுடனும் ஐந்து கரத்துடனும் வண்டாடும் குழலைக் கொண்ட தேவியருடன் இருபுறமுமிருக்க மிகப் பழமையான ஆதிகால தோற்றத்துடன் விநாயகப் பெருமான் இருக்கும் கோலத்தைக் கண்டு பணிந்தேன், அப்படியே மகிழ்ந்தேன். இனி எனக்குக் கவலை இல்லை என்பது பாடலின் பொருள்.

விநாயகப் பெருமான் மிக வலுவான தோள்கள் நான்கினைக் கொண்டவர், ஐந்து வலிமையான கரங்களைக் கொண்டவர், அதில் ஆயுதம் தரித்திருக்கின்றார், இன்னும் அவர் இருபுறமும் தேவியர் அமர‌ வீற்றிருக்கின்றார். இப்படி மிகுந்த தைரியம் கொடுக்கும் கோலத்தில் அவர் இருக்கும் போது எனக்கென்ன பயம்? எனக்கென்ன கவலை எல்லாமே விநாயகப் பெருமான் பார்த்துக் கொள்வார், எந்த ஆபத்தும் அவரைத் தாண்டி வராது. அதனால் இனி எனக்குக் கவலை என்பதே இல்லை என்கின்றார் காசிப முனிவர்.

விநாயகப் பெருமான் தேவியரோடு காட்சித் தரும் கோலம் சில உண்டு, அவர் நீல சரஸ்வதி என ஞானம் வழங்கும் வடிவிலும், இன்னும் வல்லபையுடன் அமர்ந்திருக்கும் கோலமும் உண்டு.

இது விநாயகருக்குத் திருமணம் ஆனதா இல்லையா என்பதைத் தாண்டிய ஞான தத்துவமானது. அதற்கு முன் அவருடன் தேவியர் வரும் காட்சியினைக் காணலாம்.

வல்லபை என்பது விநாயரின் சக்தி என்றும், விநாயகருக்குச் சக்தி கொடுக்கும் மூலம் என்றும், சில செய்திகளும், அவர் விநாயகரின் மனைவி என்றும் சில குறிப்புகள் உண்டு.

இது பற்றிய புராணச் செய்தி உண்டு, அந்த வல்லபை வரலாறு அதில்தான் சொல்லப்பட்டிருக்கின்றது.

வல்லபை என்பவள் விநாயகப் பெருமானை இயக்கும் சக்தி, அவளால்தான் விநாயகப் பெருமான் சக்தி பெறுவார். மூலாதாரத்தில் கூட வல்லபையும் அவரும் சேர்ந்தேதான் இருப்பார்கள் என்பது யோக சூட்சுமம் சொல்லும் செய்தி.

அந்த வல்லபை சாபம் காரணமாக ஒரு அரக்கனின் மகளாய்ப் பிறந்தாள்.

ஆம். இரண்யபுரத்தை ஆட்சி செய்து வந்த கேசி என்னும் அரக்கனின் முன்ஜன்ம வினையின் காரணமாக, கணபதியின் சக்தியான வல்லபை அவனுக்கு மகளாகப் பிறந்தாள். வல்லபை வளரும் பருவத்திலேயே சிறந்த சிவ பக்தையாக விளங்கினாள், அதைக் காணபொறுக்காத அரக்கன் கேசி அவளைச் சிவ வழிபாடு செய்யமுடியாமல் வீட்டிலே சிறை வைத்தான்.

அவள் சிவனை நோக்கி கதற சிவன் விநாயகப் பெருமானை அனுப்பி வைத்தார்.

அதன்படி விநாயகர் அவளை மீட்க வந்தார். காஞ்சியிலே ஒரு தீர்த்தம் உருவாக்கிச் சிவனை வழிபட்டு பின் கேசியினை அழித்து வல்லபையினை மீட்டார்.

அவருடன் வல்லபை மீண்டும் கலந்து அவரின் சக்தியானாள், இதனாலே அவர் ‘ஸ்ரீ வல்லபை கணபதி’ என்று போற்றப்பட்டார்.

இன்னொரு செய்தி உண்டு, அது பண்டாசுர வதம்.

லலிதாம்பிகை பண்டாசுரனுடன் போர்புரியும் போது தேவிக்கே பெரும் சிக்கல் உண்டாகிறது. அப்போது தேவி ஈஸ்வரனை துதிக்க அங்கே பத்துக் கைகள் கொண்ட வல்லபா எனும் பெண்ணின் சக்தியுடன் கணேசர் தோன்றினார் என்பது.

இப்படி வல்லபையினைக் காட்டும் புராணம் சித்தி புத்தி என இரு தேவியர் விநாயகப் பெருமானுக்கு உண்டு எனும் செய்தியும் சொல்கின்றது .

ஒவ்வொரு யுகத்திலும் பிரம்மன் புதிய உலகை உயிர்களை சிருஷ்டிப்பான், அப்படி அவர் சிருஷ்டிக்க தொடங்கும் போது அவருக்குள் ஒரு கர்வம் வந்தது.

தான் மட்டும் இல்லையென்றால் இங்குப் படைப்புத்தொழில் எப்படி நடக்கும் எனத் தனக்குள்ளே கர்வம் பொங்க நின்றார், இந்த அகம்பாவத்தை கணபதி ஒடுக்க எண்ணினார்.

அதன்படி அவர் பிரம்மனை முறைக்க பிரம்மனின் படைப்பில் நிறைவின்மை வந்தது, படைக்கும் பொருளும் அதன் இயங்கு சக்தியும் சரியாக முழுமை அடையவில்லை.

பிரம்மனின் படைப்புகள் அலங்கோலமாய் முழுமையற்று நின்றன, அதன் இயக்கமும் சரியில்லாமல் எல்லாம் குழம்பிற்று.

பிரம்மன் அரண்டு போனான். தன் படைப்பில் இப்படி ஒரு குறைவர காரணம் என்ன எனத் தவித்துப் போனான். எங்குத் தேடினாலும் அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை, பின் தனக்குள் தேடினான்.

அப்போதுதான் விநாயகரை தன் அலட்சியத்தால் மறந்த சாபத்தின் பலன் இது என்பதைக் கண்டு கொண்டான். பின், விநாயகரிடம் மனமார மன்னிப்புக் கோரினான்.

விநாயகர் தன் பிரதான சக்தியான இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி எனும் இரு சக்திகளை அவனுக்கு அருளினார். அந்தச் சக்திகள் அவனை அடைந்து பலம் கொடுத்தன. இதனால் பிரம்மனின் படைப்புக்கள் அவன் விருப்பப்படி முழுமை அடைந்தன, அதன் இயங்கு தன்மையும் சரியாக வந்தது.

உயிர்கள் அதனதன் வடிவில் அதனதன் உருவில் பூரணமாயின‌.

பிரம்மனுக்கு இந்த இரு சக்திகளை விநாயகர் அருளினார் அல்லவா? அது சித்தி, புத்தி என இரு பெண்களாக வளர்ந்தனர்.
அவர்கள் பெரியவராக வளர்ந்தபின் யாருக்குத் திருமணம் செய்து வைப்பது எனக் குழம்பிய பிரம்மனுக்கு நாரத முனிவரே வழிகாட்டினார்.

அதன்படி பார்வதி மைந்தனான விநாயகப் பெருமானுக்கே அவர்களைத் திருமணம் செய்து கொடுப்பது என முடிவாயிற்று.
பின் ஜனக முனிவர் மந்திரம் ஓத, எல்லாத் தேவர்களும் ரிஷிகளும் அறிய அந்த சித்தி, புத்தி எனும் இரு தேவியரையும் விநாயகப் பெருமான் ஏற்றுக் கொள்கின்றார்.

இது சூத முனிவர் சொல்லும் காட்சியாகப் புராணத்தில் உண்டு.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், விநாயகர் இரு சக்திகளைப் பிரம்மனுக்கு வழங்குகின்றார், பிரம்மனின் கடமை முடிந்ததும் அந்த இரு சக்திகளும் விநாயகப் பெருமானையே அடைகின்றன‌.

இதுதான் சித்தி புத்தி விநாயகர் எனும் தத்துவமாகும்.‌ அதுதான் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி எனும் தத்துவார்த்தமாகவும் சொல்லப்படுகின்றது.

“சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த” என்பது ஆதிசங்கரர் வாக்கு.

அதாவது, ஜடம் எனும் அசையா சக்தியும், இயக்கு சக்தியும் இணையும் போது உலக இயக்கம் நடக்கின்றது என்பது பொருள்.
அதாவது, பரப்பிரம்மம் இரு சக்திகளாக அதன் துணை சக்திகளாக இயக்கத்தை நடத்துகின்றது.

அந்தப் பரப்பிரம்மம் சிவரூபமாகும் போது மாயை பார்வதியாகிறது. அந்தப் பார்வதியே இரண்டு சக்திகளாகி கங்கா, கௌரி என்று பிரிகிறார்கள்.

பரப்பிரம்மம் விஷ்ணு எனும் வடிவமாகும் போது மாயை வைஷ்ணவி என்றாகிறது. அந்த வைஷ்ணவியே இரண்டு சக்திகளாகி ஸ்ரீதேவி, பூதேவி என்று வடிவெடுக்கிறார்கள்.

பரப்பிரம்மம் முருகனாகும் போது மாயை கௌமாரி என்று பெயர் பெறுகிறாள். அந்த கௌமாரியே இரண்டு சக்திகளாகி வள்ளி, தேவசேனா என்று விளங்குகிறார்கள்.

பரப்பிரம்மம் பிரம்மா எனும் போது மாயை சரஸ்வதி, காயத்ரி என இருவடிவில் விளங்குவாள்.

அப்படியே பிரம்மம் கணபதியாக வரும்போது மாயா வல்லபா என்றும், அவளே சித்தி, புத்தி என்றும் வருகின்றார்கள்.
ஆம்.‌ பிரம்மனின் பலவீனத்தையும் விநாயகர் அதனைச் சரி செய்த அருளையும் கவனியுங்கள். அந்த இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தியின் அவசியம் புரியும்.

இச்சை என்பது எதைச் செய்யவேண்டும் எனும் ஆர்வம், கிரியா என்றால் செயல். செய்யப்படும் செயல். ஞானத்துடன் முழுமையான அறிவுடன் தெளிவுடன் செய்யப்படவேண்டும். அந்த வரம் அருள்பவர் கணபதி என்பது விளங்கும்.

ஆம், இப்படித் தேவியருடன் இருந்து விநாயகப் பெருமான் அருள் வழங்கும் கோலமெல்லாம் எண்ணிப் பார்க்கின்றார் காசிபர்.

அவர் வல்லபையுடன் இணைந்து பண்டாசுரனுக்கு எதிராகப் போரிட்டு வெற்றிப்பெற்றவர், அவர் பெரும் வல்லமையான தோளும் கரங்களும் கொண்டவர், ஐந்து கரங்களுடன் காவல் தருபவர்.

அவருக்கு இன்னும் பலமாக அவரின் இயக்கு சக்தியான தேவியரின் அருள் உண்டு, அவர்களின் அனுக்கிரகத்தில் விநாயகப்பெருமான் எல்லாக் கவலையும் தீர்த்து வைப்பார், முழுக் காவலைத் தருவார், அவரின் அந்த முழுத்திருக்கோலம் கண்டபின் அவரின் முழு வலிமை அறிந்தபின் கவலை என்பதே இராது எனப் பாடிப் போற்றுகின்றார் முனிவர்.

விநாயகர் அனுபூதி : 47

“மோன நிலையில் முழுசித் திபெறும்
ஞானம் தருவாய்! நலமார் பெரியோய்!
தீனன் எனைஆள் திருமன் கருணைத்
தேனம் எனவே திகழ்கின் றவனே”

பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“மோன நிலையில் முழுசித் திபெறும்
ஞானம் தருவாய்! நலமார் பெரியோய்!
தீனன் எனைஆள் திருமன் கருணைத்
தேனம் எனவே திகழ்கின் றவனே”

“ஞான கணபதியே! நான் ஞானம்பெறும்படி எனக்கு அருள் செய்து முழு மௌன நிலையினைத் தருவாய், அருள்கடலான பெரியவனே அறிவிலியும் மூடனுமான என்மேல் கருணை கொண்டு எனக்குப் பரஞானம் அருள்வாய்” என்பது பாடலின் பொருள்.

கணபதி ஞானத்தின் வடிவம் அவர் சிவனிடமிருந்து ஞானப்பழத்தை பெற்றார் என்பது வெறும் புராணம் அல்ல, அவர் பெரும் ஞானம் கொண்டிருப்பவர் என்பதே அதன் தத்துவ தாத்பரியம்.

இதனாலே ஜாதகத்தில் ஞானம் வழங்கும் கேது பகவானின் அதிபதியாக அவர் அம்சமாக விநாயகர் அறியப்படுகின்றார், அவரை வணங்கினால் ஞானம் பெருகும், இதனாலே ஒளவையார், நக்கீரர் முதல் திருமூலர் வரை எல்லாப் புலவர்களும் அவரைப் பாடித் தொழுதார்கள, ஞானமிகு பாடலையும் படைத்தார்கள்.

இங்கு மௌன நிலை வேண்டும், பரஞானம் வேண்டும் என ஆழ்ந்த ஞானம் வேண்டிப் பாடுகின்றார் காசிப முனி. ஆழ்ந்த மௌனம் என்பது ஞானத்தின் அடையாளம், எல்லாம் தாண்டிய பெருஞானத்தின் வடிவம், அதை விநாயகப் பெருமானே தன் முகத்தில் காட்டுகின்றார்.

எந்தத் தெய்வத்துக்கும் இல்லாமல் விநாயகரின் உருவமே ஞான தத்ரூபம், அவரின் பெரிய காது நிறைய கேட்கச் சொல்லும், அவரின் கண்கள் தொலைவில் வருவதை அவதானிக்கச் சொல்லும், அவரின் துதிக்கை மூச்சுப் பயிற்சியினைச் சொல்லும்.

அப்படியே வாயினைத் துதிக்கையால் மூடி இருக்கும் ஒரே தெய்வம் அவர்தான். அதாவது மௌன நிலையே ஞானம் எனப் போதிப்பவர் அவர்தான், தன் முகத்திலே ஞான தத்துவம் தரும் அவரிடம்தான் தனக்கு ஞான நிலை தரும்படி கெஞ்சுகின்றார் காசிபர்.

“தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந்தீர
ஆன குருவா யாட்கொண் டருளி
மோன ஞான முழுது மளித்துச்”

என இதனைத் தன் அகவலில் பாடுகின்றார் நக்கீரர்.

விநாயகர் பெரும் ஞானத்தை எல்லோருக்கும் போதித்தார், ஞானம் என்பது அகந்தை அழிப்பது, ஞானம் என்பது தான் ஏதுமில்லை என்பதை உணர்ந்து எல்லாம் இறைபதம் என்பதை உணர்ந்து சரணடைவது.

முழுக்க இறைவனை உணர்ந்து சரணடைவதே ஞானம், நான் எனும் உணர்வு அற்றுப்போவது ஞானம், அந்த மகா ஞானத்தை தருபவர் விநாயகர்.

அவர் பிரம்மனின் அகந்தையினை அழித்தார், இன்னும் அசுரர் பலரின் அகங்காரம் ஒடுக்கினார், அகந்தையும் அறியாமையும் அகலும் இடத்தில் ஞானம் பெருகும்.

அப்படியே நக்கீரர், ஒளவையார் காசிபர் என எல்லோருக்கும் ஞானம் கொடுத்தார் விநாயகர்.

இந்தச் சம்பவம் காசிபரோடு மட்டும் நின்றுவிடவில்லை. மகா முனி காசிபர் குலத்திலும் நடந்தது.

காசிபர் குலத்தில்தான் இரணியன் போன்றவர்களெல்லாம் வந்தார்கள், அவர்களும் தெய்வம் என ஒன்றுமில்லை என அகங்காரம் கொண்டு ஆடினார்கள்.

இரணியனை, இரணியாட்சனை வதைக்க வந்த விஷ்ணு விநாயகரைத் தொழுது பலம் பெற்றே அவர்களை அழித்துப் போட்டார்.

நாத்திகர்களைத் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை அகங்காரிகளை அடக்கி அவர்களுக்குத் தெய்வம் என ஒன்று உண்டு எனச் சொல்லி ஆட்கொள்பவர் விநாயகர்.

இதைத்தான் இந்தப் பாடலில் சொல்லிப் போதிக்கின்றார் காசிபர், இதன் சூட்சுமமான போதனை ஆழமானது. அதாவது, இன்னும் காசிபர் தேவர்கள் அசுரர்கள் நாகலோகங்களுக்கு மட்டுமல்ல, மானுடர்க்கும் அவரே குலமுதல்வர், அவரின் எல்லாக் குணமும் மானுடர்க்கும் உண்டு.

அவரின் வம்சத்தில் வந்த அசுரர்க்கு இருப்பது போல் மானுடர்க்குள்ளும் ஒரு அசுரகுணம் தெய்வம் இல்லை எனச் சொல்லும், அதுதான் நாத்திகவாதம்.

நாத்திகவாதம் என்பது அறியாமை அஞ்ஞானம், அந்த அறியாமையினைப் போக்கி பெரும்ஞானம் தருபவர் விநாயகப் பெருமான்.

ஞானம் என்பது என்ன என்றால் தெய்வத்தை நம்பி நமக்கு மேல் ஒரு சக்தி கடக்கமுடியா, கட்டுபபடுத்தமுடியாப் பெரும் சக்தி உண்டு என உணர்ந்து கண்டு பணிந்து நம்பத் தொடங்குவது.

இந்த ஞானத்தைத் தருவார் விநாயகர், அறியாமை இருளைப் போற்றி ஞானம் அருளி இறைவனுக்கு கட்டுப்படும் மனம், இறைவன் வாழும் மனதைத் தருவார், தெய்வ நம்பிக்கையே ஞானத்தின் தொடக்கம் என்பதைச் சொல்லிப் பாடுகின்றார் காசிப முனிவர்.
அறியாமை இருளை அகற்றி ஞான ஒளியினை தருபவர் குரு, அவ்வகையில் விநாயகப் பெருமான் ஞான குரு.

அதைத்தான் ‘குருவடிவாகி குருவடி தன்னில்” எனப் பாடினாள் ஒளவையார்.

விநாயகப் பெருமான் நல்ல குருவாக வந்து நம்மை ஆட்கொண்டு ஞானம் தருவார் என்பதைத் தன் அனுபவமாக பாடுகின்றார் காசிப முனி.

விநாயகரைக் குருவாக வரிந்து அழைக்கும் ஸ்லோகம் உண்டு. இதோ அந்த ஸ்லோகம், இதனை காலை மாலை சொல்லி துதிப்போர்க்கு அவரே குருவாக வந்து வழிநடத்துவார், அதனைச் சொல்லி விநாயகரைக் குருவாக பெறவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகின்றது.

“ஓம் கம் கணபதயே சர்வ விக்ன ஹராய‌
ஸ்ர்வாய சர்வ குருவே லம்போதராய ஹ்ரீம் கம் நம”

கணேச ஸ்தவம் என்னும் ஸ்லோகத்தில் மனிதனது தமோ குணங்களையும், அறியாமையையும் நீக்கி நல்ல ஞானத்தை அளிப்பவர் என்று கூறுகிறது.

“தமஸ்தோமஹாரம் ஜனஜ்ஞானஹாரம் த்ரயீவேதசாரம்
பரப்ரஹ்மபரம் முனிஜ்ஞானகாரம்
விதூரே விகாரம்சதா ப்ரம்மரூபம்
கணேசம் நமாமி “

அதாவது, “மனிதனின் தமோ குணங்களை நீக்கி, அவர்களது அறியாமையை நீக்கி, மூன்று வேதங்களின் சாராம்சமாகவும், பரமனின் அம்சமாகவும், முனிவர்களுடைய அறிவுக்குக் காரணமாகவும், தூரத்திலிருந்து பார்க்கும்போது வேறு வடிவிலும், நெருங்கிச் சென்றால் பரமனின் வடிவமாகவும தோன்றும் விநாயகப் பெருமானை வணங்குவோம்” என்பது பொருள்.

ஆதிசங்கரர் சுப்பிரமணிய புஜங்கம் போல கணேச புஜங்கம் என ஒன்றையும் அருளினார், ஆதிசங்கரர் மகா கணபதியினை வணங்கினார், ஞானம் பெற விநாயகர் வழிபாடு அவசியம் என்பதை அவர் போதித்துப் பாடினார்.

அந்த ஸ்லோகத்தின் தமிழாக்கம் இதோ, இதைப படிப்பவர்க்கு ஞானம் வாய்க்கும் என்பது அவர் கொடுத்த உத்திரவாதம்.

“கவினுறு கற்பகக் கணபதி களிப்பவர்
மனநிறை மதகரி இருசெவி முறமென
மகிழ்வுறு தாண்டவம் ஏற்புற நடிப்பவர்
பெருவயி றதனிடை அரவினை அணியென
பெருமையில் உரிமையில் அருமையா யணிபவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 1

ஒலியில்வலிபெறும் தெளிவுறு வீணையின்
ஒலியினை ஒடுக்கிய மலர்முகம் உடையவர்
நவமுடன் சிறிதசை துதிக்கையின் நுனியில்
உளநிறை மாதுளங் கனியினை உடையவர்
புழை செவி வழிகிற மதமழை நறுமணம்
புணர்மகிழ் வண்டினப் பெருந்தொகை உடையவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 2

இளங்கதிர் செம்மலர் இனைவுறு செம்மணி
துலங்கிய பூந்தளிர் அனைய நல் ஒளியினர்
விளங்கிய ஒருதனி தானெனத் தனித்தவர்
இலங்கிடு பெருவயிறொருபுடை சாய்ந்துபின்
வரம்தரத் தொங்கிட வளை துதிக்கையொடு
திறம்பெறு ஒருகோடுடையவர் கணபதி
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

பலபல ஒளிபெறு மணிநிறை புனைவுறு
வளமுடை மகுடமும் வளமுடன் அணிபவர்
நலமுடை மௌலியில் மதியதன் கலையினை
அழகென அணியென அழகினுக் கழகெனத்
துலங்கியே பிறவித் தொடர்பினை அழித்திட
விளங்கிய காரண விளைவெனவானவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

உயர்வுறத் தூக்கிய கொடியெனத் திகழ்வுறு
ஒளிர்துதிக் கையதன் ஆதியில் இலகுறும்
அயர்வறு புருவ அசைவினில் அழகிய
மகிர்வருள் இணைவிழி மல்கிய பெருமையர்
துயரறு தேவதைத் தோகையர் சாமரம்
துணைகொடு வழிபடும் தூயநற் கணபதி
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

பலமுறைதுடிதுடித் தசைவுறும் கண்ணினை
வலமுற சிவந்திடும் வடிவழகுடையவர்
நலமுறு தயைமுதல் மென்மையும் பெருங்குணம்
இலகிய பலவிதப் பிறவிகள் உடையவர்
உறவென அறமென உரியபல்லீலைகள்
புரிபவர் யோகியர் துதி செய்யும் கணபதி
ஓமெனும் ஓங்காரத் துட்பொருள் ஆனவர்
ஏமமாம் சிவகணத் தலைவரைத் துதிக்கின்றேன்.

ஓங்காரவடிவமே தானெனும் தூயவர்
மாறுபாடற்றவர் முக்குணம்
நீங்கிய ஆனந்த வடிவமே தன்னுரு
நேர்ந்து வேறோரு வற்றவர் யாவரும்
ஏங்கியே அடைந்திடும் சிறப்பிடம் இதுவென
எண்ணிலா வேதமும் தோற்றிய காரணர்
பாங்குடன் தொன்மையும் திறமையும் கொண்டவர்
பண்பாளார் போற்றிடும் அவரையே துதிக்கின்றேன்.

பேரறிவானந்த அமைதியும் உடையவ!
பேசறு அரன்மகன் ஆன எம் இறைவா!
வீறுகொள் லீலைகள் அளவில புரிபவா!
வேறிலை தானென விளங்கிடும் அரியவ!
நீறென உலகழித் தளித்திடும் கருணையே!
நேர்ந்த இவ்வுலகிதன் ஆணியாம் பெரியவ!
மாறிலா மனதுடன் மதகளி உன்றனை
மனமொழி மெய்கொடு வணங்கினேன்!அருளுக!

எங்கனும் நிறைந்தவர் ஈசனின் மகனிவர்
பொங்கிய கருணையர் புகழ்விழை விதனையே
மங்களக் கதிரொளி பரவிடு காலையில்
மனமொழி மெய்களால் துதிப்பவர் எவர்க்கும்
பொங்கிடும் புனலென வாக்கது வாய்க்கும்
புரிந்திடும் வினைவலம் பொலிந்திடும் உண்மை
தங்கியே அருள் தரக் கணபது இருக்கத்
தரணியில் பெறமுடியாததும் உண்டோ! “

விநாயகர் அனுபூதி : 48

“அச்சம் விடுத்தேன் அரனார் முதலோர்
மெச்சும் படியாய் மிளிர்ஐங் கர! நின்
பச்சைத் தளிராம் பதமே பலமாய்
இச்சை யுடனே பிடித்தேன் இதமே!”

அரன் எனும் சிவபெருமான் முதலானோர் உன்னைப் போற்றும்படி மிளிர்ந்து நிற்கும் எம்பெருமானே, உன் இளம் தளிர்பாதத்தை நான் விரும்பிப் பற்றிக்கொண்டேன். அதனால் நான் இனி எனக்கு அச்சமே இல்லை என்பது பாடலின் பொருள்.

இப்பாடல் புராணக் காட்சி ஒன்றோடு தொடங்குகின்றது. அது திரிபுரம் எரித்தக் காட்சி, அங்கே அதனை எரித்தவர் மும்மூர்த்திகளில் அழித்தல் தொழிலைச் செய்யும் சிவபெருமான்.

அவர் தலைமையில் தேவர்களும் விஷ்ணுவும் திரிபுரம் எனும் மூன்று பறக்கும் கோட்டைகளை அழிக்கக் கிளம்பியபோது நடந்த காட்சியில் விநாயகப்பெருமான் முக்கியமானவர்.

அந்தத் தயாரிப்பின்படி விஸ்வகர்மா, ரதம் ஒன்றைத் தயாரித்தான், மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்தது.

நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கினார்கள், சூரிய சந்திரர்கள் சக்கரமானார்கள். எட்டுத் தட்டுடன் அந்தத் தேர் வைதீகதேர் என உருவானது.

வேதங்கள் குதிரைகளாக வந்ததால் அதன் சாரதியாக பிரம்மனே அமர்ந்தார், ஓம் எனும் மந்திரம் பிரம்மனின் சாட்டையாயிற்று.

விஷ்ணுவினைச் சக்திமிக்க ஒரே அம்பாக்கி (சக்திமிக்க அம்பால்தான் அவர்களை அழிக்க முடியும்) பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான்.

யமனும் அக்னியும் அம்பின் முனையில் இருந்தார்கள், இங்கு எல்லோரும் மறந்துவிட்ட தெய்வம் விநாயகப் பெருமான்.

அவரைத் தொழாமல் சிவன் தேர் ஏறினார். தேர் கிளம்பியதும் அதன் அச்சு முறித்தது, தேரின் அச்சுதான் தேரைத் தாங்கும், தேரின் இயக்கத்துக்கு அடிப்படையாகவும் அமையும், அந்த அச்சு முறிந்துபோனதில் எல்லாத் தேவர்களும் ஆடிப்போனார்கள். இக்குறை எப்படி வந்தது எனத் தவித்துப் போய் ஆளாளுக்குக் குழம்பினார்கள்.

சிவபெருமான் கண்களை மூடினார், இந்தச் சிக்கலுக்கு காரணம் என்னவென அவர் தேடினார். அங்கே விநாயகரை வணங்காமல் இந்தப் போரைத் தொடங்கியதே தவறு என்பதைப் புரிந்து கொண்டார்.

உடனே சிவன் உள்ளிட்ட தேவர்கள் விநாயகப்பெருமானைத் துதித்து வேண்டினர், கருணையே உருவான அந்த விநாயகப் பெருமானும் தேரின் அச்சாக அமர்ந்து தாங்கினார். அதன்பின் தேர் அழகாகப் பறந்தது. சிவபெருமானும் திரிபுரத்தை எரித்துப்போட்டார்.

விநாயகப்பெருமான் இல்லை என்றால் திரிபுரம் எரித்த சம்பவமில்லை, சிவனுக்குப் பெருமையுமில்லை. அந்தப் பெரும் சிறப்பினைத் தேடித் தந்தது காவல் இருந்து வெற்றிக் கொடுத்தவர் விநாயகப் பெருமான் என்பது இங்குக் காசிப முனிவர் சொல்லும் காட்சி.

அப்படியே அவரின் தளிர்ப்போன்ற இளம் பாதங்களைப் பிடித்தேன் என்கின்றார் முனிவர், அது எக்காலமும் விநாயகப்பெருமான் இளமையானவர், காலம் அவரை மூப்பாக்க முடியாது, அவர் எக்காலமும் இதே கோலத்தில் நின்று தன்னை நம்பியவர்க்குக் காவல் தருபவர் என்பதைச் சொல்கின்றார் காசிப முனி.

இப்பாடலின் பொருள் இன்னும் ஆழமானது.

தேருக்கு அச்சு முக்கியம், தேர் என்பதுதான் ஒருவனை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் செல்லும், அவ்வகையில் வாழ்க்கை எனும் தேரில் ஏறி முக்தி எனும் நிலையினை நோக்கிச் செல்வது வாழ்வு, அந்த வாழ்வுக்கு ஆதாரம் கணபதி, அவர் நம் வாழ்வினைத் தாங்கி நம்மை முக்தி நிலைக்குச் சேர்ப்பார் என்பதைச் சொல்லிப் பாடுகின்றார்.

விநாயகப் பெருமானை ஆதாரமாகக் கொண்ட வாழ்வில் பயமில்லை, அவர் என்றோ புராணத்தில் வாழ்ந்தவர் அன்று. அவர் எக்காலமும் இளமையானவர், அவரின் இளம் பாதங்களைப் பற்றி சரணடைந்தர்க்கு எந்த ஆபத்தும் எக்காலமும் வாரா.

நான் அவரின் பாதத்தை பற்றிக்கொண்டதால் சிவனும் தேவர்களுமே பணிந்த அவரின் பாதங்களைப் பற்றிக்கொண்டதால் இனி எனக்கு அச்சம் என்பதே இல்லை. எல்லாமும் அவர் காவலில் அவர் ஆதாரத்தில் நலமாகும், பலமாகும் என நம்பிக்கை கொண்டு பாடுகின்றார் காசிப முனிவர்.

விநாயகர் சிவனுக்கே அருள் புரிந்தவர் என்பதிலே இன்னும் விஷ்ணு, உமையவள் என எல்லோருக்கும் அவர் காவல் செய்த செய்தி வந்துவிடுகின்றது.

அவர் மும்மூர்த்திகளைக் காத்தார், அபப்டியே இந்திரன் முதலான தேவர்களையும் காத்தவர்.

இராவணன் போன்றோரை அடக்கி, காவேரி போன்ற பெரும் நதிகளை உருவாக்கி மானுடர்களையும் காத்தார், இன்னும் எத்தனையோ ரிஷிகளைப் பெரிய அரக்கர்களிடம் இருந்து காத்தார்.

மும்மூர்த்திகள், தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் என எல்லோரையும் காத்து நின்ற மகா சக்தி விநாயகப் பெருமான்.

விநாயகப் பெருமானின் பெயர்களில் ஒன்று, “டுண்டி ராஜன்” அதாவது மோட்சத்துக்கு வழிகாட்டி அழைத்துச் செல்பவர் எனப் பொருள்.

அவர் “மாங்கல்யேசர்” அதாவது அழியக்கூடிய உலகில் அவர் அழியாமல் இருந்து எக்காலமும் அருள்பாலிப்பவர்.

அவர் “விக்னராஜன்” அதாவது எல்லாத் தடைகளையும் உடைத்து எல்லா வினைகளையும் உடைத்து வாழ்வினைத் தருபவர்.

அவர் “பூஜ்யர்” அதாவது அவரே எல்லாவற்றுக்கும் தொடக்கமாகின்றார், பூஜிக்கப்படுபவராக இருக்கின்றார், அவர் இருக்குமிடமெல்லாம் சிறப்பாகின்றது.

(பூஜ்யம் இல்லாமல் கணக்கோ விஞ்ஞானமோ இல்லை, இந்தியா உலகிற்கு அளித்த அந்தப் பூஜ்ஜியம் விநாயகப்பெருமான் தத்துவத்தில் இருந்தே வந்தது)

இதனாலேதான் விநாயகருக்கான ஸ்லோககள் இப்படி அவரைத் துதிக்கின்றன‌.

“பாஸாங்குஸௌ தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்”

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும், ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன். செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய திருவயிறு, ஆகியவற்றை உடையவரும், பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை (விநாயகரை) நமஸ்கரிக்கின்றேன்.

“அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம்
தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந”

ருத்ராக்ஷமாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவை தாங்கியவரும் தடைகளகற்றுபவருமான டுண்டி விநாயகரைத் துதிக்கிறேன்.

“கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்”

யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

இதைத்தான் ஒளவையார் பாடினார்.

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு”

அதையே பாரதி பாடினான்.

“காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே

கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்:
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றேங்ங்கலாம்;
அச்சந் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;1
அமரத் தன்மையும்எய்தவும்
இங்குநாம் பெறலாம்; இஃதுணர் வீரே”

இதைத்தான் இப்பாடலில் சொல்லிக் கணபதியினை வணங்கி அவரை வழிபடுவோர்க்கு ஒரு அச்சமுமில்லை, ஆபத்துமில்லை எந்நிலையிலும் அவர் தம்மை நம்புவோர்க்கு ஆதாரமாக நின்று காத்துவருவார், அவர் பாதம் பணிந்தோர்க்குப் பயமில்லை எனப் பாடி தொழுகின்றார் காசிப முனிவர்.

விநாயகர் அனுபூதி : 49

“பக்தி நெறியில் பலமாய் உறைவார்
அத்தி முகனின் அடியைப் பணிவார்;
முத்தி பெறுவார் முதன்மை உறுவார்
சித்தி அடைவார் திடமே! திடமே”

இப்பாடல் புரிந்து கொள்ள எளிமையானது, அத்தி என்றால் யானை என்றொரு பொருள் உண்டு.

விநாயகப் பெருமானைத் தொழுபவர்கள் பக்தி வழியில் அதாவது விநாயகப் பெருமான் காவலில் நிலைத்திருப்பர் அவர்களுக்கு முக்திகிடைக்கும், எல்லா இடத்திலும் முதன்மை பெறுவார்கள், அப்படியே எல்லா வகை சித்திகளும் அவர்களுக்குச் சாத்தியம், அது உறுதி என்கின்றார் காசிபமுனிவர்.

விநாயகப் பெருமானைத் தொழாத எதுவும் சிறக்காது நிலைக்காது. பக்தி நிலையிலும் விநாயகரின் அருள் முக்கியமானது அதனால் அவரைத் தொழுபவர்கள் அவரைத் தொழுது முன்னெடுப்பவர்கள் பக்தி பாதையில் எக்காலமும் நிலைப்பார்கள், வழிதவறிச் செல்லமாட்டார்கள்.

விநாயகப்பெருமான் மூலாதாரத்தின் தெய்வம். மூலாதாரம் துலங்கினால் அதுதான் ஞானவாழ்வின் தொடக்கம், யோக வாழ்வின் தொடக்கம். அந்த அருளை விநாயகபெருமான் தருவார் எனப் பாடலை துவக்குகின்றார் காசிப முனிவர், அடுத்து அந்த யானைமுகன் திருவடியினைப் பணிந்தால் எல்லா நலனும் அள்ளித்தருவார் என்கின்றார்.

“பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.”

என்பது விநாயகரின் குருபாத துதி. இது மிகப் பிரசித்தம்.

விநாயகரை வணங்கினால் ஞான முத்தி கிடைக்கும். இதனாலே ஒளவையார், நக்கீரர், கபிலர், அருணகிரிநாதர் என எல்லோரும் விநாயகர் அகவல் என அவரை வேண்டினார்கள், பாரதியாரும் இவ்வரிசையில் சேர்ந்து கொண்டார்.

முக்தி என்பது ஞானத்தால் கிடைக்கும். ஞானம் என்பது அறியாமை நீங்கினால் வரும். அந்த அறியாமையினை நீக்கி ஞானம் தந்து முக்தியும் தருவார் விநாயகப்பெருமான் என்பது இங்குப் போதிக்கப்படுகின்றது.

விநாயகரைத் தொழுதால் எல்லா இடங்களிலும் முதன்மை இடம் உறுதி, அவரைத் தொழுத எல்லோரும் பெரும் இடம் பெற்றார்கள்.

இப்படி விநாயகரை வணங்கினால் பக்தியில் உறுதி ஞான முக்தி கிடைக்கும் என்பதைப் பாடும் காசிபர் தொடர்ந்து பாடுகின்றார்.

விநாயகர் எல்லாவகை சித்திகளும் அருள்வார் என்கின்றார். அஷ்டமா சித்திகள் முதல் எல்லாச் சித்தியும் விநாயகரால் அருளப்படும் என்பதைப் பாடுகின்றார்.

ஒளவையார் அதற்கு மாபெரும் உதாரணம். தன் பக்தையான அவரை ஞானசித்தராக உயர்த்தினார் விநாயகப் பெருமான். அப்படியான விநாயகப் பெருமான் தன் அடியார்க்கு எட்டுவகை சித்துக்களையும் அருள்வார் என்கின்றார்.

“அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே”

என்பதும் திருமூலர் பாடல். எட்டுவகை சித்துக்களைத் திருமூலரே வகைப்படுத்துகின்றார். அவை இவைதான்.

அணிமா என்பது அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல், மகிமா என்பது மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா என்றால் காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

கரிமா ‍என்றால் கனமாவது, மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

பிராத்தி என்றால் எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல். பிராகாமியம் என்றால் தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்.

ஈசத்துவம் என்றால் எல்லாத் தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். வசித்துவம் என்றால் அனைத்தையும் வசப்படுத்தல்.
இப்படி எட்டுவகை சித்துக்கள் உண்டு.

அஷ்ட சித்துக்கள் என இவைகளுக்குப் பெயர், மிக மிக கடினப்பட்டு இந்தச் சித்துக்களை சில அசுரர்கள் வாங்கி அட்டகாசம் செய்த காட்சி புராணத்தில் உண்டு. அனுமன் போன்ற சிலருக்கு இது பிறப்பால் கிடைத்த வரம்.

இந்த மாபெரும் வரத்தை தவத்தின் வரங்களில் முதன்மையானதைக் கடும் சிரமபட்டும் கிடைக்காப் பெரும் சக்தியினை விநாயகர் தன் பக்தனுக்குத் தருவார். குற்றமில்லா நெஞ்சத்துடன் தேடினால் விரைந்து வந்து தருவார் என்பது காசிப முனிவர் வாக்கு.

குற்றமற்ற அதாவது ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்றும் அகன்ற குற்றமற்ற நெஞ்சத்துடன் முழு மனதுடன் முழு அர்ப்பணிப்பை செய்வோரை இறைநிலைக்கும் தேவர்கள் நிலைக்கும் உயர்த்தி எல்லையில்லாப் பெரும் ஆற்றலுடன் அவர்களைப் பெரும் இடத்துக்கு விநாயகர் உயர்த்துவார் என்பது இந்தப் பாடலில் காசிபர் போதிக்கும் உண்மை.

விநாயகரைப் பணிந்தால் முக்தி நிலை வாய்க்கும் அப்படியே எல்லாச் சித்து நிலையும் தெய்வீக பெரும் நிலையும் வாய்க்கும் எனப் பாடி பாடி போற்றுகின்றார் காசிபர்.

மானுட நிலையில் இருந்து ஆத்மாவினைத் தெய்வநிலைக்கு உயர்த்தும் மகா சக்தி கொண்ட மூல தெய்வம் அவர் எனப் போதித்து வாழ்த்திப்பாடுகின்றார்.

விநாயகர் அனுபூதி : 50

“தாதா சரணம் சரணம் தளிர்த்தாள்
நீதா சரணம் சரணம் நிகர்இல்
வேதா தரனே சரணம் மிளர்ஐம்
பூதா சரணம் புகழ்நாற் புயனே!

விநாயகப் பெருமானிடம் முழுக்கச் சரணடையும் பாடல் இது. தாதா என்றால் முதல் தலைவனே என்பது பொருள்.

முழுத்தலைவனான விநாயகரே உம் திருப்பாதத்தில் சரணடைந்தேன், நீயே சரணம், வேதங்களின் தலைவனே, ஐம்பூதங்களின் வடிவே, உன்னை சரண்டைகின்றேன் எனப் பாடுகின்றார் காசிப முனிவர்.

இனி என்னால் எதுவும் ஆகாது, எல்லாமே உன் விருப்பம் உன் முடிவு, அதனால் என்னை ஆட்கொண்ட எம்பெருமானே நான் உன்னை முழுக்கச் சரணடைகின்றேன், ஆதி அந்தம் இல்லாப் பெருமானே நீயே இனி கதி எனச் சரண்டைகின்றார் முனிவர்.

யஜுர் வேதம் சொல்கின்றது.

“தத்கராடாய வித்மஹே ஹஸ்திமுகாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத்”, அதாவது அவர் யானைமுகம் கொண்ட தனித்துவமானவர் என அது போற்றுகின்றது.

“தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத்”, வளைந்த துதிக்கையினைக் கொண்டவர் பெருமான் என அது போற்றுகின்றது.

“யோ வை ருத்ரஸ் ச பகவான் யஸ்ச விநாயகஸ் தஸ்மை வை நமோ நம” என வேதம் அவரை ருத்ரனின் அம்சமாகப் போற்றுகின்றது.

“கர்மவிக்நசித்யர்த்தம் விநியோஜித கனானாம் ஆதிபத்யே ச ருத்ரேன ப்ரஹ்மணே ததா” என்பதும் வேதம் சொல்லும் வரி.

இப்படி விநாயகரை வேதம் முழுக்கப் புகழ்ந்து கொண்டாடுகின்றது, அவர் இன்னும் பல விதங்களில் போற்றப்படுகின்றார்.

‘ஏகாக்ஷர கணபதி’ என அவர் வேதங்களின் துவக்க‌ கணபதியானார்.

‘பிரம்ம கணபதி’ என வேதங்களின் முடிவான ஞான வடிவமாகவுமானார்.

‘மகா வித்யா கணபதி’ என எல்லா வித்தைகளின் அதிபதியுமானார். எல்லா வித்தையும் வேதத்தில் இருந்தே வருபவை.

‘ப்ரணவ கணபதி’ என அவர் வேத வடிவின் தொடக்கமுமானார், முடிவுமானார். ஓம் எனும் ஓங்காரநாதனுமானார்.

இப்படி வேதங்களின் வடிவானவர் விநாயகர், வேதங்களே உலகைப் படைத்து, காத்து இயக்குபவை என்பதால் அவர் வேதகணபதி என அழியாப்பெயர் பெற்றார்.

அப்படியே அவர் பஞ்சபூத வடிவினர், அதாவது சிவனைப் போலவே அவருக்கும் அந்த ஐந்து உருவம் உண்டு.

“இரிந்த பன்னாகமு மெய்தித் தாழ்ந்தன –
புரிந்தவை தம்மையும் பரித்த வங்கதம்
புரிந்தவண் குழைபுனை யார மாதியாத்
தெரிந்துதம் முருவெலாஞ் சிவணு வித்தனர்.
தந்தையார்ச் சித்ததே தரும் மன்னதை
மைந்தரார்ச் சித்தலும் வழக்க மாதலா
லந்திவா னிறத்தவ ரணிந்த வாளரா
வெந்தையா ரணிதலு மேற்ற தாகுமே”

என்பது விநாயகர் புராணம் சொல்லும் வரி. அது சிவனும் விநாயகரும் ஒரே தன்மை கொண்டவர்கள் என்பதைச் சொல்கின்றது.

இந்தத் தத்துவம் வேதத்திலிருந்து ஐம்பூதங்களும் உருவானது என்பதைச் சொல்லி விநாயகர் அப்படியே வேத தத்துவமாகவும் ஐம்பூத வடிவாகவும் இருப்பதைச் சொல்கின்றது.

ஓம்காரத்தில் இருந்தே எல்லாம் தோன்றிற்று. முதலில் ஓங்கார ஒலி இருந்தது, அதிலிருந்து ஒளி தோன்றியது, அதிலிருந்தே காற்று, நெருப்பு, நிலம் என எல்லாமும் தோன்றி உயிர்களும் தோன்றிற்று.

இவை ஒவ்வொன்றும் கலந்தே எல்லாப் படைப்பும் பிரபஞ்சத்திலே உருவாயின. இவை எல்லாவற்றின் மூலம் விநாயகர், அவர் எல்லாப் படைப்பிலும் உண்டு, அதைத் தாண்டியும் உண்டு.

விநாயகரின் உருவமே பஞ்ச பூத அம்சம். அவரின் தலை ஆகாய அம்சம், அவரின் துதிக்கை மூச்சு எனும் காற்றின் அம்சம், அவரின் கண்கள் நெருப்பின் அம்சம், அவர் கையில் இருக்கும் அமிர்தம் நீர் அம்சம், அவரின் பாதங்கள் நிலத்தின் அம்சம் என அவரின் உருவம் நுணுக்கமாகப் பஞ்ச பூத வடிவில் அமைக்கப்பட்டவை.

அவரின் பெரும் வயிறு இந்தப் பிரபஞ்ச அம்சம்.

இந்த உலகம் மீண்டும் மீண்டும் பஞ்சபூத சுழற்சிப்படி இயங்கும் என்பதையே தோப்புக்கரணம் முதல் விநாயகருக்குரிய எல்லா வழிபாட்டு தத்துவமும் ஆழமாகச் சொல்லும்.

மானுடன் தலையில் குட்டிக் கொண்டு காதைப் பிடித்துத் தோப்புகரணமிடுதல் பிரபஞ்ச இயக்கத்தின் அங்கமாகின்றது, அந்தப் பிரபஞ்ச சுழற்சியின் வடிவமான அந்தப் பயிற்சி பிரபஞ்ச அருளைப் பெற்றும் தருகின்றது, பஞ்ச பூத அருளைத் தருகின்றது.

இப்படி நுணுக்காமான விநாயகர் வழிபாட்டு மரபை கவனித்து அதன் பொருளை மறைமுகமாகச் சொல்லி, விநாயகர் பஞ்சபூத வடிவம் அவர் அருள் பெற்றால் பிரபஞ்ச பெரும் வரம் கிடைக்கும் எனப் பாடி, தானும் பிரபஞ்சத்தில் ஒரு துளி என்பதால் விநாயகர் தன்னில் உண்டு, தனக்கு வெளியே அருள் செய்ய உண்டு, அவர் அருளில் பெருவாழ்வு வாழலாம் என வாழ்த்தி பாடலை முடிகின்றார் .

விநாயகர் வேதவடிவம், பஞ்சபூத வடிவம் எல்லாமே அவர் என்பதால் தானும் பஞ்சபூதவடிவமே, அதனால் தானும் அவரும் வேறல்ல எனும் அனுபூதி நிலையில் பாடி முடிக்கின்றார் காசிபமுனி.

“ஊழி முதல்வன் உயர்வே ழமுகன்
வாழி திருசத் திகளும் அணியாம்
வாழி கவினார் வாச மலர்த்தாள்
வாழி அடியார் வளம்வா ழியவே”

எனப் பாடி அனுபூதியினை நிறைவும் செய்கின்றார், ஊழி எனும் பிரளய காலமும் பின் தொடக்கமுமாய் இருக்கும் எம்பெருமானே, எல்லா சக்திகளும் கொண்டவனே, என் பாடல்களால் உன் மலர்தாளினைப் பற்றித் தொழுதேன், எனக்கு எல்லா வரமும் வாழ்வும் தருவாய் எனப் பாடுகின்றார்.

இந்தச் சரணாகதி நிலைதான் பின்னர் “விநாயக சரண மாலை” என உருவானது. இதைப் பாடித் தொழுவோர்க்கு விநாயகரின் எல்லா அருளும் வரமும் காவலும் கிடைத்து, அவர்கள் பெருவாழ்வு வாழ்வார்கள், தனித்து உலகில் நிற்பார்கள் என்பது சத்தியம்.

“அருளே சரணம்! அன்பே சரணம்!
அன்னை மீனாள் மகனே சரணம்!
இருளைப் போக்கி ஒளியைச் சேர்க்கும்
ஈசன் மகனே சரணம்! சரணம்!

உருகிப் பணியும் அடியார் மனதில்
ஒளிரும் ஞானச் சுடரே சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!

திருவே சரணம்! தெளிவே சரணம்! திகழும் யோக வடிவே சரணம்!
கருவாய் விளங்கிக் கவிஞர் மனதில் கவியாய்ச் சுரக்கும் தமிழே சரணம்!
அருவம் உருவம் இவைகள் கடந்த அருளே உயிரே சரணம்! சரணம்!
அருகப் புல்லைச் சூடி மகிழும்
அன்புச் செல்வா சரணம்! சரணம்!

அழகன் மருகன் முருகன் போற்றும்
ஆனை முகனே சரணம்! சரணம்!
கழல்கள் அதிரக் களித்தே ஆடும்
காளித் தாயின் சுதனே சரணம்!
திருவாம் ஈசன் பாதம் பணியும் தெய்வக் களிறே சரணம்! சரணம்!

உழலும் மனிதர் நலமாய் வாழ
உன்னத அருளைத் தருவாய் சரணம்!
மழையைப் போல கருணைப் பொழிந்து
மங்களம் அருள்வாய் சரணம்! சரணம்!
தருவாய் உந்தன் அருளை என்றுன்
தாள்கள் பணிந்தேன் சரணம்! சரணம்!

ஊழின் வினையும் உலகத் துயரும் ஒருங்கே
ஒழிய அருள்வாய் சரணம்! வாழி என்றுன் பதங்கள் பணிந்தோம்!
வந்தே நலங்கள் தருவாய் சரணம்!
தருமி போலத் திரியும் எனக்கும் தமிழைத் தருவாய் சரணம்! சரணம்!
அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம் சரணம்!

மலரே! மணமே! மனதுள் அருளே!
மலையே! மடுவே! மகிமை ஒளியே!
அலையே! கடலே! அடங்காப் புயலே!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்பே அருளே சரணம்! சரணம்!

அன்பில் தாயே! அருமைச் சேயே!
நிலையாய் விளங்கும் நீதிக் கனலே!
நெகிழும் பக்தர் விழியின் நீரே!
அருகம் புல்லைச் சூடி மகிழும்
அன்பே அருளே சரணம்! சரணம்!”

(விநாயகர் அனுபூதி முற்றிற்று)